மணிக் கற்கள் மாற்கு சுவிசேஷத்திலிருந்து
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விறுவிறுப்பான ஒரு பதிவை எழுதும்படியாக யெகோவாவின் ஆவி மாற்குவை ஏவியது. மாற்குதான் இந்த சுவிசேஷத்தின் எழுத்தாளன் என்று இது குறிப்பிடாவிட்டாலும், இதற்கான ஆதாரம் பப்பையாஸ், ஜஸ்டின் மார்ட்டர், டெர்ட்டூலியன், ஆரிகன், இயுசிபியஸ், ஜெரோம் போன்றவர்களின் எழுத்துக்களில் காணப்படுகின்றன; இவர்களுடைய எழுத்துக்கள் நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நான்கு நூற்றாண்டுகளுக்கு உட்பட்டதாயிருக்கிறது.
வழிவழியாக வந்த கருத்துப்படி, அப்போஸ்தலனாகிய பேதுரு இந்தச் சுவிசேஷத்திற்கு வேண்டிய அடிப்படைத் தகவலைக் கொடுத்தான். இதை மாற்கு, “பேதுரு சொன்னதற்கு இசைவாக எழுதினான்,” என்று ஆரிகன் கூறினார். ஆனால் மாற்கு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மற்ற வழிகளும் இருந்தன, காரணம் சீஷர்கள் அவனுடைய தாயின் வீட்டில் கூடினார்கள். உண்மையில், இயேசுவைக் கைது செய்தவர்களின் கைகளிலிருந்து தப்பித்துக்கொண்ட “வாலிபன்” மாற்குவாக இருக்கக்கூடுமாதலால் அவன் கிறிஸ்துவுடன் தனிப்பட்ட தொடர்புடையவனாயிருந்திருக்கக்கூடும்.—மாற்கு 14:51, 52; அப்போஸ்தலர் 12:12.
யாருக்காக எழுதப்பட்டது?
மாற்கு புறஜாதிகளாயிருந்த வாசகர்களை மனதில் வைத்துத்தான் எழுதினான் என்பது தெளிவாகிறது. உதாரணமாக, காரியங்களைச் சுருங்க சொல்லும் அவனுடைய நடை ரோமரின் இயல்புக்கு ஒத்ததாயிருந்தது. “கொர்பான்” என்பது “காணிக்கை” அல்லது “கடவுளுக்கு அற்பணிக்கப்பட்ட ஒரு பரிசு” என்று விளக்கினான். (7:11) மேலும் தேவாலயத்தை ஒலிவ மலையிலிருந்து பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டான். (13:3) பரிசேயர்கள் “உபவாசமிருக்கிறார்கள்”, சதுசேயர்கள் “உயிர்த்தெழுதல் இல்லை என்கிறார்கள்” என்றும் மாற்கு விளக்குகிறான். (2:18; 12:18) இப்படிப்பட்ட குறிப்புகள் யூதர்களாயிருக்கும் வாசகர்களுக்குத் தேவையற்றதாயிருக்கும்.
உண்மைதான், மாற்கு சுவிசேஷத்தை வாசிப்பது எவருக்குமே நன்மையாயிருக்கும். ஆனால் என்ன பிண்ணனிக் குறிப்புகள் அதன் சில மணிக்கற்களைப் போற்றும்படிச் செய்யும்?
கடவுளுடைய குமாரன் அற்புதங்களை நடப்பிப்பவர்
கடவுளுடைய வல்லமையால் கிறிஸ்து நடத்திய அற்புதங்களை மாற்கு நினைவுபடுத்துகிறான். உதாரணமாக, ஒரு சமயம் ஒரு வீட்டில் அவ்வளவு கூட்டம் இருந்ததால் திமிர்வாதக்காரன் ஒருவன் குணமடைவதற்காக வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி அதன் வழியாய் அவனை இயேசு இருந்த இடத்திற்கு அருகாமையில் இறக்கவேண்டியதாயிருந்தது. (2:4) வீடு அதிகக் கூட்டமாக இருந்ததால், அந்த மனிதன் ஓர் ஏணியின் மூலமாகவோ அல்லது வெளியே அமைக்கப்பட்ட மாடிப்படிக்கட்டின் மூலமாகவோ கொண்டுபோகப்பட்டிருப்பான். ஆனால் கூரையில் ஏன் திறப்பு உண்டாக்க வேண்டும்? மதில்களின் குறுக்கே சென்ற தூலங்களின் மீது தட்டைக் கூரை அமைந்த வீடுகளாகவே அநேக வீடுகள் இருந்தன. தூலங்களின் உத்தரங்களும் அவற்றின் குறுக்கே மரக்கிளைகளும் நாணற்புல் போன்றவையும் இருந்தன. அதற்கு மேலே அடர்த்தியாக மண்ணும் அது களிமண்ணால் அல்லது களியும் சுண்ணாம்பும் கலந்த ஒரு சாந்தும் பூசப்பட்டதாயிருந்தது. எனவே அந்தத் திமிர்வாதக்காரனை இயேசுவின் பிரசன்னத்திற்குக் கொண்டுவர, ஆட்கள் அந்த மண்கூரையை ஏத்தி எடுக்கவேண்டியதாயிருந்தது. ஆனால் அவர்கள் அவ்விதம் செய்தது எவ்வளவு ஆசீர்வாதமாயிருந்தது! கிறிஸ்து அந்த மனிதனைக் குணப்படுத்த, அங்கிருந்த அனைவரும் கடவுளை மகிமைப்படுத்தினர். (2:1-12) புதிய உலகில் யெகோவாவின் மகன் மகத்தான அற்புதங்களை நடப்பிப்பார் என்பதற்கு இதில் என்னே உறுதி!
இயேசு கலிலேயா கடலில் படவில் பயணம் செய்துகொண்டிருந்தபோது “தலையணையை” வைத்து நித்திரையாயிருந்தார். அப்பொழுது பலத்த சுழல் காற்று வீச அவர் எழுந்து ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார். (4:35–41) அந்தத் “தலையணை” இப்பொழுதெல்லாம் படுக்கையில் பயன்படுத்தப்படும் மென்மையான தலையணையைக் குறிக்கவில்லை. அது அநேகமாக படகு ஓட்டுபவர்கள் உட்கார பயன்படுத்திய கம்பளித் திண்டாக அல்லது மெத்தையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், “இரையாதே, அமைதலாயிரு!” என்று இயேசு சொன்ன போது, அங்கிருந்தவர்கள் விசுவாசம் செயலில் இருப்பதைக் கண்டார்கள், ஏனென்றால் “காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.”
தெக்கப்போலியில் ஊழியம்
கலிலேயா கடலைக் கடந்து இயேசு தெக்கப்போலியை அல்லது பத்துநகர் பகுதிக்குள் பிரவேசித்தார். இந்தப் பட்டணங்கள் ஏராளமான யூத மக்களைக்கொண்டிருந்தபோதிலும், அவை கிரேக்க அல்லது ஹெலனிக் கலாச்சாரத்தின் பெரிய மையங்களாக இருந்தன. கதரேனருடைய நாட்டில் “குடியிருப்பு கல்லறையிலே இருந்த” அசுத்த ஆவியுள்ள ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தினார்.—5:1–20.
சில சமயங்களில் பாறையிலே வெட்டப்பட்டிருந்த கல்லறைகள் பைத்தியம் பிடித்தவர்களின் குடியிருப்பும், குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களின் மறைவிடங்களும் அல்லது ஏழைகளின் இல்லங்களுமாயிருந்தன. (ஏசாயா 22:16; 65:2-4-ஐ ஒப்பிடவும்.) ஒரு 19-வது நூற்றாண்டு நூல் பிரகாரம், அசுத்த ஆவியுள்ள இந்த மனிதனை இயேசு சந்தித்த இடத்துக்குச் சென்ற ஒருவர் இப்படிப்பட்ட குடியிருப்புப் பகுதியைக் குறிப்பிட்டு எழுதினார். “கல்லறை உள் அளவில் எட்டு அடி உயரமாய் இருந்தது. கல்லறையின் வாயில் பகுதியிலிருந்து உள்ளே தரைக்கு செங்குத்தான ஒரு படி இருந்தது. அதன் அளவு 12 சதுரடியாக இருந்தது, ஆனால் வெளிச்சம் கதவுப் பகுதி வழியில் மட்டுமே உள்ளே செல்ல வேண்டுமாதலால் மற்றவற்றில் இருந்தது போல இதில் ஓர் உள் அறை இருந்ததா என்பதை நாங்கள் பார்க்க முடியவில்லை. அதில் இன்னும் ஒரு முழுமையான கல் சவப்பெட்டி இருந்தது, இது அங்கு தங்கிய குடும்பத்தால் தானியம் போன்ற பொருட்களை வைப்பதற்கான பெட்டியாக பயன்படுத்தப்பட்டது. இப்படியாக மரித்தவரின் கெடுக்கப்பட்ட கல்லறை உயிரோடிருப்பவருக்கு ஒரு பாதுகாப்பான, குளுமையான வசதியான இடமாயிற்று.”
இயேசுவும் பாரம்பரியமும்
ஒரு சமயம் பரிசேயர்களும் வேதபாரகரும் இயேசுவின் சீஷர்கள் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று முறையிட்டார்கள். புறஜாதிகளான வாசகரின் பிரயோஜனத்துக்காக, பரிசேயர்களும் மற்ற யூதர்களும் ‘தங்கள் முழங்கைவரை கழுவாமல் சாப்பிடமாட்டார்கள்’ என்று மாற்கு விளக்கினான். கடையிலிருந்து வரும்போது, தண்ணீரைத் தெளித்து தங்களைச் சுத்திகரித்துக்கொண்ட பிறகுதான் சாப்பிட்டார்கள் மற்றும் அவர்களுடைய பாரம்பரியம் செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் நீரில் முழுக்குவதையும்” உட்படுத்தியது.—7:1–4, NW.
ஆச்சாரத்தின்படி தங்கள் மீது தண்ணீர் தெளித்துக்கொள்வதோடுகூட, இந்த யூதர்கள் உணவுக்காக தாங்கள் பயன்படுத்திய செம்புகளையும், கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் தண்ணீரில் முழுக்கியெடுத்தனர். அவர்கள் எந்தளவுக்குப் பாரம்பரியத்துக் கட்டுப்பட்டிருந்தனர் என்பது அறிஞர் ஜான் லைட்ஃபுட் என்பவரால் விளக்கப்பட்டது. தண்ணீரின் அளவு, அதைப் பயன்படுத்தும் முறை, திருப்திகரமாகக் கழுவுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் போன்ற காரியங்களுக்கும் நுண்ணிய கவனம் செலுத்தப்பட்டது என்று ரபிக்களின் நூல்களை மேற்கோளிட்டுக் காண்பிக்கிறார். ஷிப்டாவால், “இரவு நேரத்தில் ஆண்களின் கைகளில் அமரும் ஒரு பொல்லாத ஆவியால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, எவராவது தன்னுடைய உணவைக் கை கழுவாமல் தொட்டால், அந்த ஆவி உணவில் அமரும், அதனால் ஆபத்து ஏற்படும் என்பதற்காக” சில யூதர்கள் சாப்பாட்டுக்கு முன்பு மிகக் கவனமாகக் கழுவினார்கள் என்பதைக் குறிப்பிட்ட ஒரு புத்தகத்திலிருந்து லைட்ஃபுட் மேற்கோள் கூறினார். ‘தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொள்ளுவதற்காக’ இயேசு வேதபாரகரையும் பரிசேயர்களையும் கண்டனம் செய்ததில் ஆச்சரியமில்லை!—7:5–8.
இயேசு வெளியரங்கமாக செய்த கடைசி ஊழியம்
இயேசு கலிலேயாவில் செய்த பிற்கால ஊழியத்தைக் குறித்தும் பெரேயாவில் அவருடைய வேலையைப்பற்றியும் அறிக்கை செய்த பின்பு, மாற்கு எருசலேமிலும் அதைச் சுற்றிலும் நடந்த சம்பவங்களுக்குக் கவனத்தைத் திருப்பினான். உதாரணமாக, மக்கள் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுவதைக் கவனித்துக்கொண்டிருந்த அந்தச் சமயத்தைக் குறித்து பேசினான். ஏழை விதவை ஒருத்தி ‘மிகக் குறைந்த மதிப்புடைய இரண்டு காசுகள்’ போட்டதைக் கண்டார். இருந்தாலும், மற்றெல்லாரைப் பார்க்கிலும் இவளே அதிகமாய்ப் போட்டாள், ஏனென்றால் அவர்களெல்லாரும் தங்களுக்கிருந்த அதிகத்திலிருந்து கொடுத்தார்கள், இவளோ ‘தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.’ (12:41–44) கிரேக்கு மொழியிலிருக்கும் வசனத்தின்படி, அவள் இரண்டு லெப்டா கொடுத்தாள். லெப்டன் காசுதான் யூதரின் செம்பு அல்லது பித்தளைக் காசுகளில் மிகக் குறைந்த மதிப்புடைய காசு, இன்று அந்தப் பணத்தின் மதிப்பு மிக மிகக் குறைவு. ஆனால் அந்த ஏழைப் பெண் தன்னாலானதைக் கொடுத்ததன் மூலம், உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக அமைகிறாள்.—2 கொரிந்தியர் 9:6, 7.
இயேசுவின் ஊழியம் முடிவை நோக்கி வருகையில், அவர் பொந்தியு பிலாத்தினால் விசாரிக்கப்பட்டார். அவனுடைய பெயரும் “அதிபதி” என்ற அவனுடைய பட்டமும் 1961-ல் செசரியாவில் ஒரு கல்வெட்டில் காணப்பட்டது. யூதேயா போன்ற பிராந்தியங்களைக் குறிப்பிடும்போது, ஆளுனர் (அதிபதி) இராணுவ அதிகாரம் பெற்றவராயும், நிதி நிர்வாகத்துக்குப் பொறுப்பானவரும், விசாரணை நடத்தக்கூடிய ஒரு நீதிபதியாகவும் இருந்தார். பிலாத்து கிறிஸ்துவை விடுவிப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றிருந்தான், ஆனால் இயேசுவின் எதிரிகள் சார்பாகச் சாய்ந்துவிட்டான்; மற்றும் கழுமரத்தில் அறையப்படுவதற்காக அவரை ஒப்புக்கொடுத்து, கலகக்காரனும் கொலைக்காரனுமாகிய பரபாசை விடுதலைசெய்து அந்தக் கூட்டத்தைத் திருப்தி செய்யமுனைந்தான்.—15:1–15.
பிலாத்துவின் பிற்கால வாழ்க்கையைக் குறித்தும் அவனுடைய மரணத்தைக் குறித்தும் பரம்பரையான கருத்துக்கள் பல இருக்கின்றன. உதாரணமாக, சரித்திராசிரியனாகிய இயுசிபியஸ் பின்வருமாறு எழுதினான்: “நம்முடைய இரட்சகரின் காலத்திய தேசாதிபதி பிலாத்துதானே அப்படிப்பட்ட இடுக்கண்களுக்குள்ளானான். அதனால் தனக்குத்தானே பாதகமாகத் தீர்ப்பளித்துக்கொள்ளவேண்டியவனாகவும், தன்னுடைய சொந்த கைகளால் தனக்குத் தண்டனை கொடுத்துக்கொள்ள வேண்டியவனாகவும் இருக்க வற்புறுத்தப்பட்டான்; தெய்வீக நீதி அவனை மேற்கொள்ள தாமதிக்கவில்லைபோல்.” என்றபோதிலும், அது எப்படியிருப்பினும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த காரியம் இயேசுவின் மரணமாகும். கிறிஸ்துவின் மரணத்தையும் அதைச் சூழ்ந்த அசாதாரணமான சம்பவங்களையும் பார்த்த ரோம சேனையின் அதிகாரி (நூற்றுக்கதிபதி) பின்வருமாறு சொன்னதில் உண்மை பேசினான்: “மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்.”—15:33–39. (w89 10⁄15)