அதிகாரம் பதினைந்து
‘மனம் உருகினார்’
1-3. (அ) பார்வையிழந்த இரண்டு பிச்சைக்காரர்கள் உதவிக்காகக் கெஞ்சுகிறபோது இயேசு என்ன செய்கிறார்? (ஆ) “மனம் உருகி” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
எரிகோவுக்கு அருகே பார்வையற்ற இருவர் பாதையோரமாக அமர்ந்திருக்கிறார்கள். அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டு தினமும் பிச்சையெடுப்பது அவர்களுடைய வழக்கம். ஆனால், இன்று அவர்களுடைய வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுகிறது.
2 திடீரென அங்கே கூட்டமாக மக்கள் போகும் சத்தம் அவர்கள் காதில் விழுகிறது. ஒன்றும் புரியாமல், என்ன நடக்கிறதென அவர்களில் ஒருவன் விசாரிக்கிறான். அதற்கு, “நாசரேத்தூர் இயேசு போய்க்கொண்டிருக்கிறார்!” என்று யாரோ அவனுக்கு பதில் சொல்கிறார். இப்போது இயேசு கடைசி தடவையாக எருசலேமுக்குப் போய்க் கொண்டிருக்கிறார், தனியாக அல்ல, திரளான மக்களுடன். இயேசு போவதை அந்தப் பிச்சைக்காரர்கள் கேள்விப்பட்டவுடன், “எஜமானே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று சத்தமாக குரல் எழுப்புகிறார்கள். அந்தக் கூட்டத்தார் ஆத்திரமடைந்து, அமைதியாக இருக்கும்படி அந்தப் பிச்சைக்காரர்களை அதட்டுகிறார்கள்; ஆனால், அவர்களுடைய தவிப்பு அவர்களுக்குத்தான் தெரியும். அதனால், யாராலும் அவர்களுடைய வாயை அடைக்க முடியவில்லை.
3 மக்களுடைய ஆரவாரத்தின் மத்தியிலும் அந்தப் பிச்சைக்காரர்களுடைய கூச்சல் இயேசுவின் காதில் விழுகிறது. அவர் என்ன செய்வார்? அநேக விஷயங்கள் அவருடைய மனதை அழுத்திக் கொண்டிருக்கின்றன. அவருடைய பூமிக்குரிய வாழ்வுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியிருக்கிறது. துன்பமும் கொடூர மரணமும் அவருக்கு எருசலேமில் காத்துக்கொண்டிருப்பதை அவர் அறிந்திருக்கிறார். இருந்தாலும், அந்தப் பிச்சைக்காரர்கள் விடாமல் எழுப்புகிற சத்தத்தை அவர் அலட்சியம் செய்யவில்லை. இயேசு உடனே நின்று, அவர்களை அழைத்து வரும்படி சொல்கிறார். “எஜமானே, தயவுசெய்து எங்களுக்குக் கண்பார்வை கொடுங்கள்” என்று அவர்கள் கெஞ்ச, இயேசு “மனம் உருகி”a அவர்களுடைய கண்களைத் தொடுகிறார், அப்போது அவர்கள் பார்வை அடைகிறார்கள். உடனே அவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்.—லூக்கா 18:35-43; மத்தேயு 20:29-34.
4. “ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார்” என்ற தீர்க்கதரிசனத்தை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?
4 இயேசு இப்படிக் கரிசனை காட்டியது முதல் முறை அல்ல, அநேக சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் அவர் மனம் உருகி கரிசனை காட்டினார். “ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார்” என்று பைபிள் முன்னறிவித்திருந்தது. (சங்கீதம் 72:13) அதன்படியே, இயேசு மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடந்தார். அவரே முன்வந்து மக்களுக்கு உதவினார். அவருக்குள் இருந்த கரிசனைதான் பிரசங்கிக்க அவருக்குத் தூண்டுகோலாய் இருந்தது. இயேசுவின் சொல்லிலும் செயலிலும் எவ்வாறு கனிவும் கரிசனையும் ததும்பின, அவரைப் போலவே நாமும் எவ்வாறு கனிவையும் கரிசனையையும் காட்டலாம் என்பதைப் பார்க்கலாம்.
பிறர் உணர்ச்சிகளை மதித்தல்
5, 6. இயேசு அனுதாபமிக்கவராக இருந்ததை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
5 இயேசு ஆழ்ந்த அனுதாபமுள்ள மனிதராக விளங்கினார். துன்பத்தில் துவண்டிருந்தவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டார், அவர்களுடைய துன்பத்தைத் தம்முடைய துன்பமாகவே பாவித்தார். அவர்கள் அனுபவித்த எல்லா பிரச்சினைகளையும் அவர் அனுபவிக்காதபோதிலும், அவர்களுடைய வேதனையை தம் உள்ளத்தில் உணர்ந்தார். (எபிரெயர் 4:15) 12 வருடங்களாக இரத்தப்போக்கினால் கஷ்டப்பட்டுவந்த ஒரு பெண்ணை அவர் குணப்படுத்தியபோது, ‘உன்னைப் பாடாய்ப் படுத்திய நோய்’ என்று அவளுடைய வியாதியைக் குறித்து சொன்னார்; அந்த நோய் அவளை எந்தளவு வாட்டி வதைத்திருக்கும் என்பதை அவர் புரிந்திருந்தார் என இதிலிருந்து தெரிகிறது. (மாற்கு 5:25-34) லாசருவின் இறப்பை நினைத்து மரியாளும் அவளுடன் இருந்தவர்களும் அழுதுகொண்டிருந்ததை அவர் பார்த்தபோது, நெஞ்சுருகினார், உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார். லாசருவை தாம் உயிர்த்தெழுப்பப்போவதை இயேசு அறிந்திருந்தும் அவர்களுடைய சோகத்தைக் கண்டபோது அவருடைய உள்ளம் உருகியது, கண்கள் குளமாயின.—யோவான் 11:33, 35.
6 இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு தொழுநோயாளி இயேசுவிடம் வந்து, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொல்லி கெஞ்சினான். வாழ்வில் ஒருபோதும் நோயினால் அவதிப்படாத பரிபூரண மனிதரான இயேசு எப்படி உணர்ந்தார்? அந்தத் தொழுநோயாளியைக் கண்டு அவருடைய நெஞ்சம் கரைந்தது. அவர் ‘மனம் உருகினார்.’ (மாற்கு 1:40-42) அதனால், வழக்கத்திற்கு மாறான ஒன்றைச் செய்தார். திருச்சட்டத்தின்படி, தொழுநோயாளிகள் அசுத்தமானவர்கள் என்றும் அவர்கள் மற்றவர்களுடன் சேரக்கூடாது என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார். (லேவியராகமம் 13:45, 46) அந்தத் தொழுநோயாளியைத் தொடாமலேயே குணப்படுத்தும் சக்தியும் இயேசுவுக்கு இருந்தது. (மத்தேயு 8:5-13) என்றாலும், அவர் தம் கையை நீட்டி, அந்தத் தொழுநோயாளியைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்றார். உடனடியாக தொழுநோய் மறைந்தது. இயேசுவுக்கு எவ்வளவு அனுதாபம்!
7. அனுதாபத்தை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும், அதை நாம் எப்படித் தெரிவிக்கலாம்?
7 கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவைப் போல் அனுதாபமிக்கவர்களாய் இருக்க வேண்டும். ஆம், ‘அனுதாபம்’ காட்ட வேண்டுமென பைபிளும் நம்மை உந்துவிக்கிறது.b (1 பேதுரு 3:8) தீராத வியாதியினாலோ மனச்சோர்வினாலோ அவதிப்படுவோரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது சுலபமல்ல; அதுவும் அப்படிப்பட்ட வேதனைகளை நாம் அனுபவித்ததே இல்லையென்றால் அது சுலபமே அல்ல. இருந்தாலும், மற்றவர்களுக்கு வரும் கஷ்டங்கள் நமக்கும் வந்தால்தான் அனுதாபம் காட்ட முடியும் என்றில்லை. இயேசுவுக்கு ஒருபோதும் வியாதியே வந்ததில்லை, என்றாலும் வியாதிப்பட்டவர்கள்மீது அவர் அனுதாபம் காட்டினார். அப்படியென்றால், நாம் எவ்வாறு அனுதாபத்தை வளர்த்துக்கொள்ளலாம்? அவதிப்படுவோர் மனந்திறந்து தங்கள் உள்ளத்தின் உணர்ச்சிகளையெல்லாம் கொட்டும்போது பொறுமையோடு காதுகொடுத்துக் கேட்கலாம். ‘நான் அவர்களுடைய நிலைமையில் இருந்தால் எனக்கு எப்படி இருக்கும்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம். (1 கொரிந்தியர் 12:26) மற்றவர்களுடைய உணர்ச்சிகளைச் சட்டென புரிந்துகொள்ளும் திறனை நாம் வளர்த்துக்கொண்டால், “மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேச” முடியும். (1 தெசலோனிக்கேயர் 5:14) சிலசமயங்களில், அனுதாபத்தை வார்த்தைகளினால் மட்டுமல்லாமல் கண்ணீரினாலும் தெரிவிக்கலாம். “அழுகிறவர்களோடு அழுங்கள்” என்று ரோமர் 12:15 சொல்கிறது.
8, 9. இயேசு எவ்வாறு மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தார்?
8 இயேசு மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்து பரிவுடன் நடந்தார், அவர்கள் தர்மசங்கடம் அடையாதபடி பார்த்துக்கொண்டார். காது கேட்காத, பேச்சுக் குறைபாடு உள்ள ஒருவன் இயேசுவிடம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அவன் தர்மசங்கடமாக உணர்வதை இயேசு புரிந்துகொண்டு, பொதுவாக மற்றவர்களைக் குணப்படுத்தியபோது செய்யாத ஒன்றைச் செய்தார்; அதாவது, “கூட்டத்தாரைவிட்டு அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய்” அவர்களுடைய பார்வையில் படாதவாறு அவனைக் குணப்படுத்தினார்.—மாற்கு 7:31-35.
9 இன்னொரு சந்தர்ப்பத்தில், பார்வையற்ற ஒருவனை மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்து அவனைக் குணப்படுத்தும்படி கேட்டபோதும் அவர் பரிவுடன் நடந்துகொண்டார். “அவர் அந்த மனிதனுடைய கையைப் பிடித்து கிராமத்துக்கு வெளியே கூட்டிக்கொண்டு போனார்.” பின்பு, படிப்படியாக அவனைக் குணப்படுத்தினார். அப்படிச் செய்தது, கண்களைக் கூசவைக்கும் கதிரொளியையும் அதில் பிரகாசிக்கும் இந்த உலகையும் பார்க்க அவனுடைய மூளையையும் கண்களையும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தயார்படுத்த உதவியிருக்கும். (மாற்கு 8:22-26) இயேசு காட்டிய பரிவை என்னவென்று சொல்ல!
10. மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு நாம் எவ்விதங்களில் மதிப்பு காட்டலாம்?
10 இயேசுவைப் பின்பற்றுகிற நாமும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பது அவசியம். ஆகவே, யோசிக்காமல் பேசிவிடுவது மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தும் என்பதை உணர்ந்து, கவனமாகப் பேசுகிறோம். (நீதிமொழிகள் 12:18; 18:21) மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் கடுகடுப்பான... தரக்குறைவான... குத்தலான... நக்கலான... பேச்சுகளுக்கு இடமே இல்லை. (எபேசியர் 4:31) மூப்பர்களே, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு நீங்கள் எவ்வாறு மதிப்பு கொடுக்கலாம்? அறிவுரை கொடுக்கும்போது, கேட்பவரின் கண்ணியம் குறையாதபடி அன்பாகவும் கனிவாகவும் மனதுக்கு இதமாகவும் பேசுங்கள். (கலாத்தியர் 6:1) பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடைய உணர்ச்சிகளுக்கு நீங்கள் எப்படி மதிப்புக் கொடுக்கலாம்? கண்டிக்கும்போது, அவர்கள் தர்மசங்கடம் அடையாதபடி கவனமாய் இருங்கள்.—கொலோசெயர் 3:21.
முன்வந்து உதவுதல்
11, 12. கரிசனை காட்டும்படி மக்கள் வந்து கேட்கும்வரை இயேசு காத்திருக்கவில்லை என்று எந்த பைபிள் பதிவுகள் காட்டுகின்றன?
11 கரிசனை காட்டும்படி எப்போதும் மற்றவர்கள் வந்து கேட்கும்வரை இயேசு காத்திருக்கவில்லை. பார்க்கப்போனால், கரிசனை என்பது மனதில் மட்டுமே இருக்கும் ஓர் உணர்ச்சி அல்ல, செயலில் வெளிப்படும் ஒரு பண்பு, உதவிசெய்யத் தூண்டுகிற ஒரு குணம். ஆகவே, இயேசுவுக்குக் கனிவும் கரிசனையும் இருந்ததால்தான் தாமாகவே முன்வந்து மற்றவர்களுக்கு உதவினார். உதாரணத்திற்கு, திரளான மக்கள் மூன்று நாட்களாக அவரோடு தங்கியிருந்தபோது, சாப்பிட அவர்களிடம் ஒன்றும் இருக்கவில்லை; அப்போது, மக்கள் பசியாக இருக்கிறார்கள் என்றோ, அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றோ யாரும் இயேசுவிடம் வந்து சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “இயேசு தன்னுடைய சீஷர்களைக் கூப்பிட்டு, ‘இந்த மக்களைப் பார்க்கும்போது என் மனம் உருகுகிறது; இவர்கள் மூன்று நாட்களாக என்னோடு இருக்கிறார்கள், சாப்பிடுவதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை. இவர்களைப் பட்டினியாக அனுப்ப எனக்கு விருப்பமில்லை; அப்படி அனுப்பினால் அவர்கள் ஒருவேளை வழியிலேயே மயங்கி விழுந்துவிடலாம்’ என்று சொன்னார்.” பின்பு, யாரும் சொல்லாமல் அவராகவே அந்தக் கூட்டத்தாருக்கு அற்புதமாய் உணவளித்தார்.—மத்தேயு 15:32-38.
12 இன்னொரு பதிவைச் சிந்தித்துப் பாருங்கள். கி.பி. 31-ல், நாயீன் என்ற நகரத்திற்கு அருகே இயேசு சென்று கொண்டிருந்தபோது, ஒரு சோகக் காட்சியைக் கண்டார். ஒரு ‘விதவையின் ஒரே மகனை’ பக்கத்திலிருந்த மலையோர கல்லறையில் அடக்கம் செய்வதற்காக நகரைவிட்டு ஜனங்கள் எல்லாரும் ஊர்வலமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். அந்தத் தாயின் மனம் எந்தளவு வேதனையால் துடித்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? தன்னுடைய ஒரே மகனை அடக்கம் செய்ய அவள் போய்க் கொண்டிருந்தாள்; அவளுடைய மனவேதனையைப் பகிர்ந்துகொள்ள கணவனும் இல்லை. ஊர்வலமாகப் போய்க்கொண்டிருந்த ஜனக்கூட்டத்தின் மத்தியிலும், பிள்ளையைப் பறிகொடுத்த அந்த விதவையை இயேசு ‘பார்த்தார்.’ அவர் கண்ட காட்சி அவரது நெஞ்சைப் பிழிந்தது; அவர் ‘அவள்மீது மனம் உருகினார்.’ உதவி செய்யுமாறு யாரும் அவரிடம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவரது உள்ளத்தில் கரிசனை பொங்கியதால் அவராகவே முன்வந்து உதவி செய்தார். “பாடைக்குப் பக்கத்தில் போய் அதைத் தொட்டார்.” பின்பு, இறந்துபோயிருந்த அந்த இளைஞனை உயிர்த்தெழுப்பினார். அதற்குப்பின் என்ன நடந்தது? தம்மைப் பின்தொடரும் திரளான மக்களுடன் சேர்ந்துகொள்ளும்படி இயேசு அந்த இளைஞனிடம் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, ‘அவனை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைத்து’ மறுபடியும் ஒரு குடும்பமாக அவர்களைச் சேர்த்துவைத்தார்; விதவையாக இருந்த தன் தாய்க்குத் துணையாக இருக்கும்படி அவனை அனுப்பிவைத்தார்.—லூக்கா 7:11-15.
13. கஷ்டத்தில் இருப்போருக்கு நாமே முன்வந்து உதவுவதில் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?
13 இயேசுவின் முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? உண்மைதான், நம்மால் அற்புதமாக மற்றவர்களுக்கு உணவளிக்கவும் முடியாது, இறந்தவர்களை உயிர்த்தெழுப்பவும் முடியாது. என்றாலும், கஷ்டத்தில் இருப்போருக்கு இயேசுவைப் போல் நாமே முன்வந்து உதவி செய்யலாம். சக விசுவாசி ஒருவருக்குத் திடீரென பணக்கஷ்டம் வரலாம் அல்லது அவருடைய வேலை பறிபோகலாம். (1 யோவான் 3:17) விதவையாக இருக்கும் ஒரு சகோதரியின் வீட்டை அவசரமாகப் பழுதுபார்க்க வேண்டியிருக்கலாம். (யாக்கோபு 1:27) அன்பானவரை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலோ வேறெதாவது உதவியோ தேவைப்படலாம். (1 தெசலோனிக்கேயர் 5:11) உண்மையிலேயே கஷ்டத்தில் இருப்போருக்கு நாம் உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும், அவர்கள் வந்து கேட்கும்வரை காத்திருக்கக் கூடாது. (நீதிமொழிகள் 3:27) நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேவையான உதவியை அளிக்க முன்வருவதற்கு கரிசனை நம்மைத் தூண்டும். அன்பாகச் சின்ன சின்ன உதவிகளைச் செய்வது அல்லது மனதிலிருந்து ஆறுதலான சில வார்த்தைகளைச் சொல்வது கரிசனை காட்டுவதற்குச் சிறந்த வழிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.—கொலோசெயர் 3:12.
பிரசங்கிக்க தூண்டியது கரிசனையே
14. பிரசங்க வேலைக்கு இயேசு ஏன் முதலிடம் கொடுத்தார்?
14 இந்தப் புத்தகத்தின் 2-ஆம் பாகத்தில் நாம் பார்த்தபடி, நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதில் இயேசு தலைசிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். (லூக்கா 4:43) இந்த வேலைக்கு அவர் ஏன் முதலிடம் கொடுத்தார்? கடவுள்மீது அவர் வைத்திருந்த அன்பே முக்கிய காரணம். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது: அவருடைய உள்ளத்தில் ஊற்றெடுத்த கரிசனை மற்றவர்களுடைய ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய அவரைத் தூண்டியது. அவர் பல வழிகளில் கரிசனை காட்டியபோதிலும், மக்களின் ஆன்மீகப் பசியை ஆற்றுவதன் மூலம் அவர்களுக்குக் கரிசனை காட்டுவதையே முக்கியமாகக் கருதினார். தாம் கற்பித்த மக்களை இயேசு எப்படிக் கருதினாரெனத் தெரிந்துகொள்வதற்கு இரண்டு சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கலாம். ஊழியம் செய்வதற்கான நம்முடைய உள்நோக்கத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இது உதவும்.
15, 16. மக்களைப் பார்த்து இயேசு எப்படி உணர்ந்தார், அதற்கு இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுங்கள்.
15 இயேசு இரண்டு வருடங்களுக்கு ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபட்ட பின்பு, கி.பி. 31-ல், இன்னும் விரிவாக ஊழியம் செய்வதற்காகக் கலிலேயாவிலிருந்த ‘எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போனார்.’ அப்போது அவர் கண்ட காட்சி அவருடைய மனதை உருக்கியது. “மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது; ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்” என்று அப்போஸ்தலன் மத்தேயு எழுதினார். (மத்தேயு 9:35, 36) பாமர மக்களைப் பார்த்து இயேசு அனுதாபம் கொண்டார். ஆன்மீக ரீதியில் அவர்கள் பரிதாபமான நிலையில் இருந்ததை அவர் உணர்ந்திருந்தார். அவர்களைப் பாதுகாத்து வழிநடத்த வேண்டிய மதத் தலைவர்களே அவர்களைக் கொடூரமாக நடத்தியதையும் துச்சமாக மதித்ததையும் அவர் உணர்ந்திருந்தார். மக்கள்மீது அவருக்கு மிகுந்த கரிசனை இருந்ததால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை சொல்ல இயேசு பாடுபட்டார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்திதான் அவர்களுக்கு மிக மிக முக்கியமாகத் தேவைப்பட்டது.
16 பல மாதங்களுக்குப் பிற்பாடு, அதாவது கி.பி. 32-ல் பஸ்கா பண்டிகை சமயத்தில், அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் ஓய்வெடுப்பதற்காக ஓர் இடத்தைத் தேடி கலிலேயாக் கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். ஆனால், திரளான மக்கள் கடற்கரையோரமாக ஓடி, படகு போய்ச் சேருவதற்கு முன்பாகவே அக்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது, இயேசு எப்படி உணர்ந்தார்? “அவர் படகிலிருந்து இறங்கியபோது, ஏராளமான மக்கள் அங்கே திரண்டு வந்திருந்ததைப் பார்த்தார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் இருந்ததால் அவர் மனம் உருகினார். அதனால், அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.” (மாற்கு 6:31-34) மக்கள் ஆன்மீகப் பஞ்சத்தில் வாடிப்போயிருந்ததைக் கண்டு இந்தச் சந்தர்ப்பத்திலும் இயேசு “மனம் உருகினார்.” “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல்” அவர்கள் ஆன்மீக ரீதியில் பட்டினியாய் இருந்தார்கள்; அவர்களே தங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இயேசு வெறுமனே கடமைக்காக அல்லாமல் மக்கள்மீது கொண்ட கரிசனையினால் அவர்களுக்குப் பிரசங்கித்தார்.
17, 18. (அ) ஊழியத்தில் பங்குகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது? (ஆ) நாம் எப்படிக் கரிசனையை வளர்த்துக்கொள்ளலாம்?
17 இயேசுவைப் பின்பற்றுகிற நாம் ஊழியத்தில் ஈடுபட எது நம்மைத் தூண்டுகிறது? இந்தப் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, பிரசங்கித்துச் சீஷராக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. (மத்தேயு 28:19, 20; 1 கொரிந்தியர் 9:16) என்றாலும், கடமைக்காக மட்டுமே நாம் இந்த வேலையைச் செய்யக் கூடாது. யெகோவாவின் மீதுள்ள அன்பே அவரது அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்க நம்மைத் தூண்டுகிறது. பிற மதத்தினர்மீது நமக்கு இருக்கும் கரிசனையும் அவர்களுக்குப் பிரசங்கிக்க நம்மைத் தூண்டுகிறது. (மாற்கு 12:28-31) அப்படியென்றால், நாம் எவ்வாறு கரிசனையை வளர்த்துக்கொள்ளலாம்?
18 மக்களை நாம் இயேசுவின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்; ஆம், “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல்,” ‘கொடுமைப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட’ ஆடுகளைப் போல் பார்க்க வேண்டும். காணாமல்போன ஓர் ஆட்டுக்குட்டியை நீங்கள் பார்ப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். புல்வெளிகளுக்கும் நீர்நிலைகளுக்கும் அழைத்துச் செல்ல மேய்ப்பன் இல்லாததால் அந்தப் பாவப்பட்ட ஜீவன் பசியிலும் தாகத்திலும் தவித்துக்கொண்டிருக்கிறது. அந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட மாட்டீர்களா? அதற்கு எப்படியாவது தீனியும் தண்ணீரும் கொண்டுவந்து கொடுக்க மாட்டீர்களா? நல்ல செய்தியைக் கேள்விப்படாத எத்தனையோ பேர் அந்த ஆட்டுக்குட்டியைப் போலத்தான் இருக்கிறார்கள். பொய்மத மேய்ப்பர்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதால் ஆன்மீக ரீதியில் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள், எதிர்கால நம்பிக்கை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவைப்படுவது நம்மிடம் இருக்கிறது; அதுதான், கடவுளுடைய வார்த்தையிலுள்ள போஷாக்குமிக்க ஆன்மீக உணவும் புத்துணர்ச்சியூட்டுகிற சத்திய தண்ணீரும். (ஏசாயா 55:1, 2) ஆன்மீக ரீதியில் அவர்களுடைய பரிதாப நிலைமையைச் சிந்தித்துப் பார்க்கும்போது அவர்களுக்காக நம் மனம் இளகுகிறது அல்லவா? இயேசுவைப் போலவே மக்களுக்காக நாமும் மனம் உருகினால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நம்பிக்கையான செய்தியை எப்படியாவது அவர்களுக்குத் தெரிவிப்போம்.
19. பிரசங்க வேலையில் ஈடுபடத் தகுதிபெற்ற ஒரு பைபிள் மாணவரை உற்சாகப்படுத்த நாம் என்ன செய்யலாம்?
19 இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? பிரசங்க வேலையில் ஈடுபடத் தகுதிபெற்ற ஒரு பைபிள் மாணவரை நாம் உற்சாகப்படுத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது, செயலற்ற பிரஸ்தாபி ஒருவர் மறுபடியும் ஊழியத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு உதவி செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? நாம் அவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் பேச வேண்டும். முதலில் மக்களைக் கண்டு இயேசு “மனம் உருகினார்,” அதன் பின்பே அவர்களுக்குக் கற்பித்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். (மாற்கு 6:34) ஆகவே, கரிசனையை வளர்த்துக்கொள்ள ஒரு பைபிள் மாணவருக்கோ ஒரு செயலற்ற பிரஸ்தாபிக்கோ நாம் உதவினால், இயேசுவைப் பின்பற்றவும் நல்ல செய்தியை அறிவிக்கவும் அவர்களுடைய உள்ளம் அவர்களை உந்துவிக்கும். நாம் அவர்களிடம் இப்படிக் கேட்கலாம்: “சத்தியத்தைத் தெரிந்துகொண்ட பின்பு உங்கள் வாழ்க்கை எப்படி முன்னேறியிருக்கிறது? இன்னும் சத்தியத்தை அறியாத மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்களும் அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா? உங்களால் எப்படி அவர்களுக்கு உதவி செய்ய முடியுமென நினைக்கிறீர்கள்?” சொல்லப்போனால், கடவுள் மீதுள்ள அன்பும் அவரைச் சேவிக்க வேண்டுமென்ற ஆசையும்தான் ஊழியத்தில் ஈடுபடுவதற்கான மிகப் பெரிய தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
20. (அ) இயேசுவின் சீஷராக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைக் குறித்து சிந்திப்போம்?
20 இயேசுவின் சீஷராக இருப்பதற்கு வெறுமனே அவர் சொன்ன வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொன்னாலோ அவரைப் போலவே நடந்துகொண்டாலோ போதாது; அவருடைய ‘மனப்பான்மையை’ வளர்த்துக்கொள்வதும் அவசியம். (பிலிப்பியர் 2:5) ஆகவே, இயேசுவின் சொல்லிலும் செயலிலும் மறைந்திருந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பைபிள் நமக்கு வெளிப்படுத்துவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நன்கு அறிந்துகொள்வதன் மூலம் அனுதாபத்தையும் கரிசனையையும் நாம் அதிகதிகமாய் வளர்த்துக்கொள்ள முடியும்; அப்போது, மக்களை இயேசு நடத்திய விதமாக நாமும் நடத்துவோம். (1 கொரிந்தியர் 2:16) அடுத்த அதிகாரத்தில், இயேசு எவ்விதங்களில் அன்பு காட்டினார்—குறிப்பாக தம் சீஷர்கள்மீது—என்பதைச் சிந்திப்போம்.
a “மனம் உருகி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, கரிசனையைக் குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலேயே மிக வலிமைமிக்க வார்த்தையென சொல்லப்படுகிறது. “பிறருடைய துன்பத்தைக் கண்டு வேதனைப்படுவதோடு, அந்தத் துன்பத்தைப் போக்கத் துடிப்பதையும்” இந்த வார்த்தை குறிப்பதாக ஒரு புத்தகம் விளக்குகிறது.
b ‘அனுதாபம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கப் பெயரெச்சத்தின் நேரடி அர்த்தம், மற்றவர்களோடு “சேர்ந்து துன்பப்படுவது.”