கடவுள் உங்கள்மீது அக்கறை உள்ளவர்
மேரி என்ற 50-க்கு சற்றுக்குறைவான வயதில் இருக்கிற ஒரு கிறிஸ்தவப் பெண்மணி, தன்னுடைய வாழ்க்கையில் அதிக துன்பத்தை அனுபவித்திருக்கிறாள். பத்துக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னால், அவளுடைய கணவனின் விபசாரம் விவாகரத்திற்கு வழிநடத்தியது. அதன்பிறகு, தன் நான்கு பிள்ளைகளுக்கும் ஒரு ஒற்றைப் பெற்றோராக இருக்க வேண்டிய தன்னுடைய பங்கை நிறைவேற்ற மேரி போராடினாள். ஆயினும், அவள் இன்னும் தனியாகவே இருக்கிறாள். தனிமை, சில சமயங்களில் தாங்கமுடியாததாக தோன்றுகிறது. ‘என்னைப் பற்றியோ அல்லது என் தகப்பனில்லாத பிள்ளைகளைப் பற்றியோ கடவுளுக்கு அக்கறை இல்லை என்று இது அர்த்தப்படுத்துகிறதா?’ என்று மேரி யோசிக்கிறாள்.
அதேபோன்ற துயரத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயமாக மேரியின் உணர்ச்சிகளுடன் நீங்கள் அனுதாபப்படலாம். நாம் அனைவரும் கடுஞ்சோதனையான சூழ்நிலைமைகளை சகித்திருக்கிறோம். நம் சார்பாக யெகோவா சரியாகவே எப்பொழுது, எவ்வாறு செயல்படுவார் என்று யோசித்திருக்கலாம். இந்த அனுபவங்களில் சில, கடவுளுடைய சட்டங்களை நாம் கடைப்பிடிப்பதால் வரும் நேரடியான பலனாக இருக்கிறது. (மத்தேயு 10:16-18; அப்போஸ்தலர் 5:29) மற்றவை, சாத்தான் ஆட்சி செய்கிற ஒரு உலகத்தில் வாழும் அபூரண மனிதர்களாக நாம் இருப்பதன் பலனாக நிகழ்கிறது. (1 யோவான் 5:19) “சர்வ சிருஷ்டியும் ஏகமாய் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்.—ரோமர் 8:22.
ஆயினும், நீங்கள் ஒரு கடுமையான சோதனையை சந்திக்கிறீர்கள் என்ற உண்மை, யெகோவா உங்களை கைவிட்டுவிட்டார் என்றோ அல்லது உங்கள் நலனில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்றோ அர்த்தப்படுத்தாது. இதைக் குறித்து நீங்கள் எப்படி நிச்சயமாக இருக்கலாம்? கடவுள் உங்கள்மீது அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்று எது காட்டுகிறது?
ஒரு பண்டைய உதாரணம்
தனிப்பட்ட மனிதர்கள் மீதான யெகோவாவின் அக்கறையைப்பற்றி பைபிள் தெளிவான ஆதாரத்தை கொடுக்கிறது. தாவீதை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இளம் மேய்ப்பன்மேல், யெகோவாவிற்கு ஒரு தனிப்பட்ட சிரத்தை இருந்தது. ‘தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனாக’ அவரைக் கண்டார். (1 சாமுவேல் 13:14) பின்பு, தாவீது அரசராக ஆண்டபோது, ‘நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருப்பேன்,’ என்று யெகோவா அவருக்கு வாக்களித்தார்.—2 சாமுவேல் 7:9.
தாவீது, கடவுளின் விசேஷ பாதுகாப்போடு பிரச்சினைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்தியதாக இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, தாவீது தன்னுடைய ஆட்சியின்போதும், அதற்கு முன்பும் கடுமையான சோதனைகளைச் சந்தித்தார். அரசராவதற்கு பல வருடங்களுக்கு முன்பாக, கொலைவெறியுடன் இருந்த சவுல் ராஜாவினால் இரக்கமில்லாமல் பின்தொடரப்பட்டார். தன்னுடைய வாழ்க்கையின் அந்தச் சமயத்தில், ‘என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; . . . மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாக இருக்கின்றன,’ என்று தாவீது எழுதினார்.—சங்கீதம் 57:4.
இருந்தாலும், யெகோவாவின் தனிப்பட்ட அக்கறையைக் குறித்து தாவீது அந்த சோதனைக்காலம் முழுவதுமாக திடநம்பிக்கையோடு இருந்தார். “என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்,” என்று யெகோவாவிடம் ஜெபத்தில் அறிவித்தார். ஆம், யெகோவா அந்தக் கடுமையான முழு சோதனையையும் பதிவு செய்துவிட்டதுபோல் தாவீது உணர்ந்தார். பின்பு தாவீது மேலும் இவ்வாறு கூறினார்: “என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவை உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?”a (சங்கீதம் 56:8) யெகோவா சூழ்நிலைமையைக் குறித்து மாத்திரம் அல்ல, அதனால் மனதில் உண்டாகும் பாதிப்பையும் அறிந்துள்ளார் என்ற நம்பிக்கையை இந்த ஒப்புமைமூலம் தாவீது வெளிப்படுத்தினார்.
தன்னுடைய வாழ்க்கையின் முடிவுப்பகுதியில், சொந்த அனுபவத்தை வைத்து தாவீதால் இவ்வாறு எழுதமுடிந்தது: “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.” (சங்கீதம் 37:23, 24) உங்களுடைய சோதனைகள் விடாப்பிடியானவையாயும், தொடர்ந்து இருப்பனவாயும் இருந்தால், யெகோவா உங்களுடைய சகிப்புத்தன்மையை கவனித்து, அதை உயர்வாக கருதுகிறார் என்று நீங்களும் நம்பிக்கையாக இருக்கலாம். “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே,” என்று பவுல் எழுதினார்.—எபிரெயர் 6:10.
மேலுமாக, உங்கள் பாதையில் என்ன இடையூறு வைக்கப்பட்டிருந்தாலும் அதை சகித்துக் கொள்ளும் சக்தியை உங்களுக்குக் கொடுப்பதன்மூலம், யெகோவா உங்கள் சார்பாக செயல்பட முடியும். “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19) மெய்யாகவே, “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது,” என்று பைபிள் கூறுகிறது.—2 நாளாகமம் 16:9.
யெகோவா உங்களை இழுத்திருக்கிறார்
இயேசுவின் வார்த்தைகளில் யெகோவாவின் தனிப்பட்ட அக்கறையைக் குறித்து கூடுதலான அத்தாட்சியைக் காணமுடியும். “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்,” என்று அவர் கூறினார். (யோவான் 6:44) ஆம், கிறிஸ்துவுடைய பலியின் பயன்களை அனுகூலமாக பயன்படுத்த யெகோவா ஜனங்களுக்கு தனிப்பட்டமுறையில் உதவுகிறார். எப்படி? மிகப் பெரிய அளவில், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் மூலமாக இதைச் செய்கிறார். “சகல தேசத்தாருக்கும் ஒரு சாட்சியாக,” இந்த வேலை செய்யப்படுவது உண்மையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இது மக்களை சென்றெட்டுகிறது. இந்த நற்செய்திக்கு நீங்கள் செவிசாய்த்து, பிரதிபலிக்கிற இந்த உண்மைதானே, யெகோவா உங்களிடம் காட்டுகிற தனிப்பட்ட அக்கறையை தெளிவாக்குகிறது.—மத்தேயு 24:14, NW.
பரிசுத்த ஆவியின் மூலமாக, தம்முடைய குமாரனிடமும் நித்திய ஜீவனென்னும் நம்பிக்கையினிடமும் யெகோவா நபர்களை இழுக்கிறார். ஒவ்வொருவருக்கும், இயல்பான குறைபாடுகளும், அபூரணங்களும் இருந்தாலும், ஆவிக்குரிய சத்தியங்களை புரிந்துகொள்ளவும், பொருத்தவும் இது சாத்தியமாக்குகிறது. உண்மையாகவே, கடவுளுடைய ஆவியின் உதவி இல்லாமல் அவருடைய நோக்கங்களை ஒருவர் புரிந்துகொள்ள முடியாது. (1 கொரிந்தியர் 2:11, 12) பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின பிரகாரம், “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.” (2 தெசலோனிக்கேயர் 3:2) அவரால் ஈர்க்கப்படுவதற்கு மனவிருப்பத்தை காட்டுபவர்களுக்குத்தான் யெகோவா தம் ஆவியைத் தருகிறார்.
யெகோவா தனிப்பட்ட மக்கள்மீது அன்புகூர்ந்து, அவர்கள் இரட்சிக்கப்பட விரும்புவதால்தான், அவர்களைத் தம்மிடத்தில் இழுக்கிறார். யெகோவாவின் தனிப்பட்ட கவனிப்பிற்கு என்னே ஒரு ஆணித்தரமான அத்தாட்சி! “இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல,” என்று இயேசு கூறினார். (மத்தேயு 18:14) ஆம், கடவுளுடைய பார்வையில் ஒவ்வொருவரும் ஒரு வித்தியாசமான, முக்கியம் வாய்ந்த நபர்களாக உள்ளனர். அதனால்தான், “தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்,” என்று பவுலால் எழுத முடிந்தது. (ரோமர் 2:6) அப்போஸ்தலன் பேதுருவும் இவ்வாறு கூறினார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ [எந்தத் தனிப்பட்ட நபரோ] அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
இயேசுவின் அற்புதங்கள்
தேவனுடைய குமாரனான இயேசு செய்த அற்புதங்கள், மனிதர்கள்மேல் கடவுளுக்கு இருக்கும் தனிப்பட்ட அக்கறையை மனதைத்தொடும் விதத்தில் காட்டினது. இந்த சுகப்படுத்துதல்கள் ஆழமான உணர்ச்சியுடன் இணைந்திருந்தன. (மாற்கு 1:40, 41) “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்,” என்பதனால் இயேசுவின் இரக்கம் தம்முடைய ஒவ்வொரு ஊழியரின் மேலும் யெகோவாவிற்கு இருக்கும் அன்பான அக்கறையை மனதைத்தொடும் விதத்தில் சித்தரிக்கிறது.—யோவான் 5:19.
மாற்கு 7:31-37-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும், இயேசு செய்த அற்புதத்தின் விவரத்தை கவனியுங்கள். இதில், இயேசு கொன்னைவாயுடைய ஒரு செவிடனை சுகப்படுத்தினார். பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், . . . வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்கு திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.”
இயேசு, கூட்டத்தைவிட்டு இந்த மனிதனை ஏன் தனியே அழைத்துக்கொண்டு போனார்? பேசுவதற்கு கஷ்டப்படுகிற ஒருவர், அநேகமாக பார்வையாளர்களுக்கு முன்னால் கூச்சமாக உணரக்கூடும். இயேசு இந்த ஆளின் சங்கடத்தை கவனித்திருக்கலாம், அதனால்தான், அவனை சுகப்படுத்த தனியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். ஒரு பைபிள் வல்லுனர் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்: “இயேசு அந்த மனிதனை வெறும் ஒரு நோயாளியாக மாத்திரம் பார்க்கவில்லை, ஒரு தனிப்பட்ட நபராக கருதினார் என்று அந்த முழு நிகழ்ச்சியும் மிகத் தெளிவாக காட்டுகிறது. அந்த மனிதனுக்கு ஒரு விசேஷத் தேவையும், பிரத்தியேகமான ஒரு பிரச்சினையும் இருந்தது. இயேசு, அவனுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தாத விதத்திலும், அவன் புரிந்துகொள்ளும் விதத்திலும், அவனிடம் மிகக் கனிவான இரக்கத்துடன் நடந்து கொண்டார்.”
இந்த விவரம், இயேசு ஜனங்களுக்காக ஒரு தனிப்பட்ட அக்கறை உடையவராய் இருந்தார் என்று காட்டுகிறது. உங்களைப்பற்றியும் அவர் அதே விதமாக அக்கறையோடு இருக்கிறார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். மெய்யாகவே, மீட்டுக்கொள்ளப்படத்தக்க முழு மனிதவர்க்கத்திற்கும் அவருடைய பலிக்குரிய மரணம் அன்பின் ஒரு வெளிக்காட்டாக இருந்தது. ஆயினும், ‘என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன் . . . ,’ என்று எழுதின பவுலைப் போல நீங்களும் அந்தச் செயலை உங்களுக்கே சொந்தமாகப் பொருத்த முடியும். (கலாத்தியர் 2:20) மேலும், ‘தம்மைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,’ என்று இயேசு குறிப்பிட்டதனால், யெகோவா தம்முடைய ஒவ்வொரு ஊழியரின்மீதும் அதே விதமான அக்கறை உடையவராய் உள்ளார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.—யோவான் 14:9.
யெகோவா ஒரு பரிசளிப்பாளராகிறார்
கடவுளைப்பற்றிய அறிவை எடுத்துக்கொள்வது, பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறபடி, அவருடைய ஆளுமையின் ஒவ்வொரு பாகத்தையும் பற்றி தெரிய வருவதை உட்படுத்துகிறது. யெகோவா என்ற பெயர்தானே “ஆகும்படி செய்கிறவர்,” என்று அர்த்தப்படுத்துகிறது. யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற, தம் விருப்பப்படி அவரால் என்னவாயினும் ஆகமுடியும் என்று இது உணர்த்துகிறது. சரித்திரம் முழுவதுமாக, சிருஷ்டிகர், பிதா, ஈடற்ற பேரரசர், மேய்ப்பர், சேனைகளின் யெகோவா, ஜெபத்தை கேட்பவர், நியாயாதிபதி, மகத்தான போதகர் மற்றும் மீட்பர் போன்ற பல்வேறுபட்ட பாகங்களை அவர் வகித்திருக்கிறார்.b
கடவுளுடைய பெயரின் முழு அர்த்தத்தையும் உணர்ந்துகொள்ள, பரிசளிப்பாளராக இருக்கும் யெகோவாவின் பாகத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்,” என்று பவுல் எழுதினார்.—எபிரெயர் 11:6.
முழு இருதயத்தோடும் அவருக்கு சேவை செய்வதை இன்று தேர்ந்தெடுப்பவர்களுக்கு யெகோவா நித்திய ஜீவனை வாக்களித்திருக்கிறார். அந்தப் பிரமாண்டமான வாக்குறுதியின் நிறைவேற்றத்தை எதிர்நோக்கியிருப்பது சுயநலமுமல்ல, அங்கே வாழ்வதைப் பற்றி கற்பனை செய்வது தகாத தன்னம்பிக்கையுமல்ல. மோசே ‘இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தார்.’ (எபிரெயர் 11:26) அதேபோல பவுலும், உத்தமமுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான கடவுளுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்கு, கூர்ந்த எதிர்பார்ப்புடன் இருந்தார். “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்,” என்று அவர் எழுதினார்.—பிலிப்பியர் 3:14.
சகித்திருப்பவர்களுக்கு யெகோவா வாக்களித்திருக்கிற பரிசை, நீங்களும்கூட எதிர்நோக்கியிருக்கலாம். அந்தப் பரிசை எதிர்பார்த்திருப்பது, கடவுளைப் பற்றிய உங்கள் அறிவின் மற்றும் அவருடைய சேவையில் உங்கள் சகிப்புத்தன்மையின் முழுமையான பாகமாக இருக்கிறது. ஆகையால், யெகோவா உங்களுக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை தினந்தோறும் தியானியுங்கள். தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட மேரி, இதைச் செய்வதற்கு ஒரு விசேஷ முயற்சியை எடுத்திருந்தாள். “வாழ்க்கையில் முதல் தடவையாக, இயேசுவின் மீட்கும் பலி எனக்கு பொருந்துகிறது என்று சமீபத்தில்தான் ஏற்றுக்கொண்டேன். யெகோவா, ஒரு நபராக என்மீது அக்கறைகாட்டுகிறார் என்று நான் உணரத் தொடங்கியுள்ளேன். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, நான் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருந்திருந்தாலும், சமீபத்தில்தான் இதை நம்பத் தொடங்கினேன்,” என்று அவள் கூறுகிறாள்.
பைபிளைப் பற்றிய படிப்பின்மூலமாகவும், இருதயப்பூர்வமான தியானிப்பின் மூலமாகவும், மேரி மற்ற இலட்சக்கணக்கானவர்களுடன் சேர்ந்து, யெகோவா தம்முடைய ஜனங்களை, ஒரு தொகுதியாக மாத்திரம் அல்ல, தனிப்பட்ட நபர்களாகவும் கருதி அவர்கள்மீது அக்கறையோடு இருக்கிறார் என்று தெரிந்துகொண்டு வருகிறாள். இதைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு அவ்வளவு நம்பிக்கையாயிருந்தபடியால் இவ்வாறு எழுதினார்: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) ஆம், கடவுள் உங்கள்மீது அக்கறை உள்ளவராக இருக்கிறார்.
[அடிக்குறிப்புகள்]
a துருத்தி என்பது, தண்ணீர், எண்ணை, பால், திராட்சைரசம், வெண்ணெய், அல்லது பாலாடைக்கட்டி போன்றவற்றை வைத்துக்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு மிருகத்தோல் பை. பண்டைய துருத்திகள் உருவளவிலும், வடிவளவிலும் மிக வேறுபட்டு இருந்தன. அவற்றில் சில, தோல் பைகளாயும் மற்றவை மூடியுடன்கூடிய குறுகிய கழுத்துடைய பைகளாயும் இருந்தன.
b காண்க: நியாயாதிபதிகள் 11:27; சங்கீதம் 23:1; 65:2; 73:28, NW; 89:26; ஏசாயா 8:13, NW; 30:20, NW; 40:28; 41:14; மேலும், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன், பிற்சேர்க்கை 1J, பக்கம் 1568, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியினால் பிரசுரிக்கப்பட்டதையும் காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி]
உயிர்த்தெழுதல்—கடவுள் அக்கறை உள்ளவராக இருப்பதற்கான ஆதாரம்
ஒவ்வொரு நபரின்மீதும் கடவுளுக்கு ஆர்வம் உள்ளது என்ற நம்பத்தக்க ஆதாரத்தை பைபிளில் யோவான் 5:28, 29-ல் (NW) காணலாம்: ‘ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள அனைவரும் [இயேசுவின்] சத்தத்தைக் கேட்டு, வெளியே வரும் காலம் வரும்.’
ஆர்வமளிக்கும் விதமாக, டாஃபோஸ் (பிரேதக்குழி) என்ற வார்த்தைக்கு பதிலாக நிமியோன் (ஞாபகார்த்த கல்லறை) என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. டாஃபோஸ் என்ற வார்த்தை வெறுமனே ஒரு புதைக்கிற எண்ணத்தை அளிக்கிறது. ஆனால், நிமியோன், இறந்த நபரின் வாழ்க்கைப்பதிவு நினைவில் வைக்கப்படுவதை தெரிவிக்கிறது.
இதைக் கருத்தில்கொண்டு, யெகோவா தேவனிடத்தில் உயிர்த்தெழுதல் என்ன தேவைப்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒருவருக்கு திரும்ப வாழ்க்கை கொடுப்பதற்கு, அவன் அல்லது அவளுடைய சுதந்தரிக்கப்பட்ட குணாதிசயங்கள், முழு ஞாபகசக்தி போன்றவை உட்படுத்துகிற, அந்த நபரைப் பற்றிய எல்லாவற்றையும் அவர் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், அந்த நபரை அதே அடையாளத்துடன் முந்திய நிலைக்கு கொண்டுவர முடியும்.
இயல்பாகவே, ஒரு மனித நிலைநிற்கையிலிருந்து இது முடியாத காரியம், ஆனால், “தேவனால் எல்லாம் கூடும்.” (மாற்கு 10:27) ஒருவருடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதைக்கூட அவர் கண்டுபிடிக்க முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு நபர் இறந்திருந்தாலும், அவரைப் பற்றிய கடவுளின் ஞாபகசக்தி தோல்வியடைவது இல்லை; அது மறைந்து போகாது. (யோபு 14:13-15) ஆக, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை குறிப்பிடும்போது, அவர்கள் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட யெகோவா ‘மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே,’ என்று இயேசுவினால் கூற முடிந்தது.—லூக்கா 20:38.
ஆகையால், இறந்த கோடிக்கணக்கானவர்கள் யெகோவா தேவனின் ஞாபகத்தில் முழு விளக்கங்களோடு உள்ளார்கள். தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவரின்மீதும் கடவுள் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதற்கு என்னே ஒரு பிரமிக்கவைக்கிற ஆதாரம்!
[பக்கம் 7-ன் படம்]
இயேசு, தாம் சுகப்படுத்தினவர்கள்மேல் ஒரு தனிப்பட்ட அக்கறையைக் காண்பித்தார்