யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
மாற்கு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
நான்கு சுவிசேஷ புத்தகங்களில் மிகச் சிறியது மாற்குவின் சுவிசேஷம். இயேசு மரித்து, உயிர்த்தெழுந்து சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு இது எழுதப்பட்டது. இதை எழுதியவர் மாற்கு; இவருக்கு யோவான் என்ற பெயரும் உள்ளது. இயேசுவின் மூன்றரை வருட ஊழியக் காலத்தில் நிகழ்ந்த விறுவிறுப்பூட்டும் சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சுவிசேஷம் யூதரல்லாதவர்களுக்காக, அதிலும் குறிப்பாய் ரோமர்களுக்காக எழுதப்பட்டதாய்த் தெரிகிறது. இப்புத்தகம், இயேசுவை கடவுளுடைய குமாரனாகச் சித்தரிப்பதோடு அற்புதங்களைச் செய்கிறவராகவும் முழுமூச்சுடன் பிரசங்க வேலையில் ஈடுபடுகிறவராகவும் விவரிக்கிறது. அவர் கற்பித்த காரியங்களைக் காட்டிலும், அவர் செய்த காரியங்களுக்கே இப்புத்தகம் அதிக முக்கியத்துவம் தருகிறது. மாற்குவின் சுவிசேஷத்திற்கு கவனம் செலுத்துவது மேசியாவின் மீதுள்ள நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்; அத்துடன், ஊழியத்தில் கடவுளுடைய செய்தியை பக்திவைராக்கியத்துடன் அறிவிப்பதற்கும் நம்மைத் தூண்டும்.—எபி. 4:12.
கலிலேயாவில் தனிச்சிறப்பு வாய்ந்த ஊழியம்
முழுக்காட்டுபவரான யோவான் செய்த காரியங்களைப் பற்றியும் 40 நாட்கள் இயேசு வனாந்தரத்தில் இருந்ததைப் பற்றியும் வெறும் 14 வசனங்களிலேயே மாற்கு விவரித்துவிடுகிறார். அதன் பிறகு, கலிலேயாவில் இயேசு செய்த ஊழியத்தைப் பற்றிய விறுவிறுப்பூட்டும் தகவலை அளிக்கத் தொடங்குகிறார். ‘உடனே’ என்ற வார்த்தை இப்பதிவில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருப்பது, இதை வாசிப்போரின் மனதில் அவசர உணர்வை ஏற்படுத்துகிறது.—மாற்கு 1:10, 12.
மூன்று வருடத்திற்குள், இயேசு கலிலேயாவில் மூன்று முறை பிரசங்க வேலையைச் செய்து முடிக்கிறார். பெரும்பாலும், காலவரிசைக் கிரமத்திலேயே மாற்கு தகவல்களைத் தருகிறார். இயேசுவின் மலைப்பிரசங்கமும் அவர் ஆற்றிய பல சொற்பொழிவுகளும் மாற்குவின் சுவிசேஷத்தில் இல்லை.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:15—எதற்குரிய “[குறிக்கப்பட்ட] காலம்” நிறைவேறியிருந்தது? தம்முடைய ஊழியத்தைத் துவங்குவதற்குரிய குறிக்கப்பட்ட காலம் நிறைவேறியிருந்தது என்றே இயேசு சொன்னார். ஏனெனில், யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசரான அவர் அங்கே இருந்ததால் கடவுளுடைய ராஜ்யம் சமீபமாயிருந்தது. ஆகவே, நல்மனமுள்ள ஆட்கள் அவர் பிரசங்கிப்பதைக் கேட்டு, கடவுளுடைய ஆதரவைப் பெறுவதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு இதனால் தூண்டப்படலாம்.
1:43, 44; 3:12; 7:36—இயேசு தாம் செய்த அற்புதங்களை ஏன் விளம்பரப்படுத்த விரும்பவில்லை? மக்கள் உணர்ச்சிவசப்பட்டோ மிகைப்படுத்திக் கூறப்பட்டதன் அடிப்படையிலோ முடிவெடுக்காமல், அவர்தான் கிறிஸ்து என்பதற்கான அத்தாட்சியை அவர்களே நேரில் பார்த்து அதன் அடிப்படையில் முடிவெடுக்க இயேசு விரும்பினார். (ஏசா. 42:1-4; மத். 8:4; 9:30; 12:15-21; 16:20; லூக். 5:14) ஆனால், கதரேனா ஊரில் பிசாசு பிடித்திருந்த ஒருவனை அற்புதமாய்ச் சுகப்படுத்தியது மட்டும் இதற்கு விதிவிலக்கு. அச்சமயத்தில், அவனைத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போய் நடந்ததை தன் உறவினர்களுக்கு அறிவிக்கும்படி இயேசு சொன்னார். அந்த இடத்தைவிட்டுப் போகும்படி ஊர்மக்கள் சொன்னதால், அங்குள்ள வெகு சிலரையே இயேசுவால் சந்திக்க முடிந்திருக்கலாம் அல்லது யாரையுமே சந்திக்க முடியாமல் போயிருந்திருக்கலாம். இயேசு யாருக்கு தயவு காட்டினாரோ, அந்த மனிதன் அங்கே அவர்கள் மத்தியில் இருந்ததும், அவனே அதைப் பற்றிச் சொன்னதும் பன்றிகளை இழந்தவர்கள் பரப்பிய அவதூறான பேச்சுகள் எடுபடாமல் போக உதவியிருக்கும்.—மாற். 5:1-20; லூக். 8:26-39.
2:28—இயேசு ‘ஓய்வு நாளுக்கும் ஆண்டவர்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? ‘நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் நிழலாய் இருக்கிறது’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 10:1) நியாயப்பிரமாணத்தின்படி, இஸ்ரவேலர் ஆறு வேலைநாட்களுக்குப் பிறகு வந்த ஏழாம் நாளை ஓய்வுநாளாகக் கடைப்பிடித்தார்கள்; அந்த ஓய்வுநாளிலே இயேசு அநேகரைச் சுகப்படுத்தினார். இது, சாத்தானுடைய கொடூரமான ஆட்சியின் முடிவுக்குப் பிறகு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் மனிதகுலம் அனுபவிக்கப்போகும் நிம்மதியான ஓய்வுக்கும் மற்ற பல ஆசீர்வாதங்களுக்கும் முன்நிழலாக இருந்தது. ஆகவேதான் அந்த ராஜ்யத்தின் அரசர் ‘ஓய்வு நாளுக்கும் ஆண்டவர்’ என அழைக்கப்படுகிறார்.—மத். 12:8; லூக். 6:5.
3:5; 7:34; 8:12—இயேசுவின் உணர்ச்சிகளை மாற்கு எப்படி அறிந்திருப்பார்? மாற்கு, 12 அப்போஸ்தலரில் ஒருவரும் அல்ல, இயேசுவின் நெருங்கிய தோழரும் அல்ல. அவரோடு நெருங்கிப் பழகிய அப்போஸ்தலன் பேதுருவிடமிருந்தே இயேசுவைப் பற்றிய பெரும்பாலான தகவலை அவர் பெற்றிருக்கலாம் என பண்டைய பாரம்பரியம் கூறுகிறது.—1 பே. 5:13.
6:51, 52—சீஷர்கள் என்ன கருத்தில் ‘அப்பங்களைக் குறித்து உணராமற்போனார்கள்’? சில மணிநேரங்களுக்கு முன்புதான், வெறும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து பெண்களையும் பிள்ளைகளையும் சேர்க்காமல், ஆண்கள் மட்டுமே 5,000 பேராக இருந்த ஒரு கூட்டத்திற்கு இயேசு உணவளித்திருந்தார். ஆகவே, அற்புதங்களைச் செய்வதற்கான வல்லமையை யெகோவா தேவனிடமிருந்து இயேசு பெற்றிருந்தார் என்பதுதான், ‘அப்பங்களைக் குறித்த’ அந்தச் சம்பவத்திலிருந்து அவர்கள் புரிந்திருக்க வேண்டிய விஷயமாக இருந்தது. (மாற். 6:41-44) இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வல்லமையின் மகத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தால், அவர் தண்ணீரில் அற்புதமாய் நடந்ததைக் குறித்து மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள்.
8:22-26—ஒரு குருடனை இயேசு ஏன் இரண்டு கட்டமாகச் சுகப்படுத்தினார்? அந்த மனிதனின் மீதிருந்த இரக்கத்தால் இயேசு அப்படிச் செய்திருக்கலாம். வெகு காலமாக இருளிலேயே பழக்கப்பட்டிருந்த அந்த மனிதனுக்கு திடீரென சூரிய ஒளியைக் காண்பது அசௌகரியமாக இருக்கும் என்பதால் இயேசு படிப்படியாக அவனுக்குப் பார்வை அளித்திருக்கலாம்.
நமக்குப் பாடம்:
2:18; 7:11; 12:18; 13:3. யூதரல்லாத வாசகர்களுக்குப் பரிச்சயமற்ற பழக்கவழக்கங்கள், வார்த்தைகள், நம்பிக்கைகள், இடங்கள் ஆகியவற்றை மாற்கு விளக்குகிறார். பரிசேயர் “உபவாசம் பண்ணிவந்தார்கள்,” கொர்பான் என்பது கடவுளுக்குக் கொடுக்கும் “காணிக்கை,” சதுசேயர் ‘உயிர்த்தெழுதல் இல்லையென்று சொல்கிறார்கள்,’ தேவாலயத்திற்கு ‘எதிராக ஒலிவமலை’ இருக்கிறது, அதாவது ஒலிவமலையிலிருந்து பார்த்தால் தேவாலயத்தைக் காணமுடிகிறது என்பதையெல்லாம் அவர் விளக்கி எழுதுகிறார். மேசியாவைப் பற்றிய வம்சாவளிப் பட்டியல் முக்கியமாக யூதர்களுக்கு மட்டுமே ஆர்வத்திற்குரியதாய் இருந்ததால், அதை அவர் குறிப்பிடவில்லை. இதன்மூலம் மாற்கு ஒரு சிறந்த முன்மாதிரியை நமக்கு வைக்கிறார். ஊழியத்தில் ஈடுபடும்போதோ சபை கூட்டங்களில் பேச்சுகள் கொடுக்கும்போதோ கேட்போரின் பின்னணியை நாம் மனதில் கொள்வது அவசியம்.
3:21. இயேசுவின் உறவினர்கள் அவிசுவாசிகளாய் இருந்தார்கள். ஆகவே, சத்தியத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களிடமிருந்து விசுவாசத்தின் நிமித்தம் எதிர்ப்பையோ கேலியையோ சந்திப்பவர்களின் உணர்ச்சிகளை அவர் நன்கு புரிந்துகொள்கிறார்.
3:31-35. இயேசு தம்முடைய முழுக்காட்டுதலின்போது கடவுளுடைய ஆவிக்குரிய குமாரனாக ஆனார், “மேலான எருசலேமோ” அவருடைய தாயாக ஆனது. (கலா. 4:26) அது முதற்கொண்டு, சொந்தபந்தங்களைவிட அவருடைய சீஷர்களே அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாயும் பாசத்துக்குரியவர்களாயும் இருந்தார்கள். இது உண்மை வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கும்படி நமக்குக் கற்பிக்கிறது.—மத். 12:46-50; லூக். 8:19-21.
8:32-34. ‘சுயதியாக வாழ்க்கை எல்லாம் வேண்டாம், எல்லாரையும்போல இயல்பாக வாழுங்கள்’ என்பதுபோல் நம்மிடம் தயவு காட்டும் தோரணையில் யாரேனும் சொன்னால் அதை நாம் சட்டென இனங்கண்டு மறுத்துவிட வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒருவர் ‘தன்னைத்தான் வெறுப்பதற்குத்’ தயாராய் இருக்க வேண்டும்; அதாவது, தன்னலம் துறப்பதற்கும் தன்னல ஆசைகளையும் இலட்சியங்களையும் ஒதுக்கித்தள்ளுவதற்கும் தயாராய் இருக்க வேண்டும். அவர் ‘தன் சிலுவையை எடுத்துக்கொள்வதற்கு,’ அதாவது தேவைப்பட்டால், கிறிஸ்தவராக இருப்பதால் வருகிற அவமானத்தைச் சகிப்பதற்கு, துன்பத்தை அனுபவிப்பதற்கு, அல்லது மரணத்தைச் சந்திப்பதற்குக்கூட தயாராய் இருக்க வேண்டும். அதோடு, வாழ்க்கையில் இயேசு வைத்த மாதிரியைத் ‘தொடர்ந்து பின்பற்றி’ வர வேண்டும். கிறிஸ்து இயேசுவின் சீஷராக வாழ்வதற்கு, அவரைப் போலவே சுயதியாக மனப்பான்மையை வளர்த்து அதைக் காத்துவர வேண்டும்.—மத். 16:21-25; லூக். 9:22, 23.
9:24. நம்முடைய விசுவாசத்தைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்கோ அந்த விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உதவும்படி ஜெபிப்பதற்கோ நாம் வெட்கப்படக்கூடாது.—லூக். 17:5
கடைசி மாதம்
பொ.ச. 32-ன் இறுதியில், ‘யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளுக்கு’ இயேசு வருகிறார்; ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவருகிறார்கள். (மாற். 10:1) அங்கே அவர்களுக்குப் பிரசங்கித்த பிறகு, அவர் எருசலேமுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
நிசான் 8 அன்று, இயேசு பெத்தானியாவில் இருக்கிறார். அவர் பந்தியிருக்கையில், ஒரு பெண்மணி வந்து, அவருடைய தலையில் பரிமள தைலத்தை ஊற்றுகிறாள். இயேசு எருசலேமுக்கு வெற்றி பவனி வருவதுமுதல் அவருடைய உயிர்த்தெழுதல் வரையான சம்பவங்கள் காலவரிசைக் கிரமத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
10:17, 18—“நல்ல போதகரே” என அழைத்த மனிதனை இயேசு ஏன் கண்டித்தார்? அந்த மனிதன் முகஸ்துதிக்காக அந்தப் பட்டப்பெயரில் அழைத்ததை ஏற்றுக்கொள்ள மறுத்ததன்மூலம் யெகோவாவுக்கே அவர் மகிமை சேர்த்தார்; அத்துடன், உண்மைக் கடவுளே எல்லா நல்ல காரியங்களுக்கும் ஊற்றுமூலர் என்பதையும் காட்டினார். அதுமட்டுமல்ல, எது நல்லது எது கெட்டது என்பதற்கான நியதிகளை வகுப்பதற்கு எல்லாவற்றையும் படைத்தவரான யெகோவா தேவனுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்தினார்.—மத். 19:16, 17; லூக். 18:18, 19.
14:25—“நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள் வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை” என்று உண்மையுள்ள தம் அப்போஸ்தலரிடம் இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? பரலோகத்தில் நிஜமாகவே திராட்சரசம் இருக்கிறதென இயேசு அர்த்தப்படுத்தவில்லை. சில சமயங்களில், திராட்சரசம் மனமகிழ்ச்சிக்கு அடையாளமாகக் குறிப்பிடப்படுவதால், பரலோக ராஜ்யத்தில் உயிர்த்தெழுப்பப்பட்ட தமது அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களோடு ஒன்றுசேரும் சந்தோஷத்தையே இயேசு இங்கு அர்த்தப்படுத்தினார்.—சங். 104:15; மத். 26:29.
14:51, 52—‘நிர்வாணமாய் ஓடிப்போன’ இளைஞன் யார்? இந்தச் சம்பவத்தை மாற்கு மட்டுமே குறிப்பிடுவதால், அவர் தன்னைப் பற்றியே பேசியிருக்கிறார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.
15:34—“என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று இயேசு சொன்னது அவருடைய விசுவாசம் குறைந்துபோனதைக் காட்டியதா? இல்லவே இல்லை. அவர் எதற்காக அப்படிச் சொன்னாரென்று நமக்குச் சரியாகத் தெரியாது. இருந்தாலும், தம்முடைய உத்தமத்தன்மை முழுமையாகச் சோதிக்கப்படுவதற்காக அதுவரை தமக்குத் தந்திருந்த பாதுகாப்பை யெகோவா தேவன் விலக்கிக் கொண்டார் என்பதாக இயேசு ஒருவேளை உணர்ந்திருக்கலாம். அதோடு, தம்மைப்பற்றி சங்கீதம் 22:1-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளதை நிறைவேற்றுவதற்காகவும் இயேசு அப்படிச் சொல்லியிருக்கலாம்.—மத். 27:46.
நமக்குப் பாடம்:
10:6-9. கணவனும் மனைவியும் ஒன்றாக வாழவேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம். ஆகவே, அவசரப்பட்டு விவாகரத்து செய்வதற்குப் பதிலாக, மணவாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை பைபிள் நியமங்களைக்கொண்டு சரிசெய்ய கணவர்களும் மனைவிகளும் முயல வேண்டும்.—மத். 19:4-6.
12:41-44. ஏழை விதவையின் உதாரணம், உண்மை வழிபாட்டிற்காக பண உதவி அளிப்பதில் நாம் தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.
[பக்கம் 29-ன் படம்]
தனக்குச் சம்பவித்த எல்லாவற்றையும்பற்றி தன் உறவினருக்குத் தெரிவிக்கும்படி இந்த மனிதனிடம் இயேசு ஏன் சொன்னார்?