நித்திய ஜீவனைப் பெற என்ன தியாகம் செய்வீர்கள்?
“மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”—மத். 16:26.
1. பேதுருவை இயேசு ஏன் திட்டினார்?
அப்போஸ்தலன் பேதுருவால் தன் காதையே நம்ப முடியவில்லை! பாசத்துக்குரிய தலைவரான இயேசு கிறிஸ்து, தாம் சீக்கிரத்தில் பாடுபட்டு மரிக்கப்போவதை “வெளிப்படையாக” சொன்னதைக் கேட்டு அவர் ஸ்தம்பித்துப்போனார். இயேசுவின்மேல் அவருக்கு இருந்த அக்கறையினால், ‘இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம், இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது!’ என்று ஆவேசத்துடன் கூறினார். அதைக் கேட்ட இயேசு, சீஷர்களைத் திரும்பிப் பார்த்தார்; அவர்களும் பேதுருவைப் போலவே தவறாக உணர்ந்திருப்பார்களெனத் தெரிகிறது. அப்போது பேதுருவிடம், “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்று திட்டினார்.—மாற். 8:32, 33, பொது மொழிபெயர்ப்பு; மத். 16:21–23; NW.
2. உண்மைச் சீஷருக்கான தகுதியைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
2 இயேசு மேற்கொண்டு சொன்னதை வைத்து, அவர் தன்னைத் திட்டியதற்கான காரணத்தை பேதுரு புரிந்திருப்பார். இயேசு “ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் . . . அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” என்றார். (மாற். 8:34, 35) இயேசு தம் ஜீவனைத் தியாகம் செய்யத் தயாராய் இருந்தார்; அவ்வாறே, தம்மைப் பின்பற்றியவர்களும் கடவுளுடைய சேவைக்காகத் தங்கள் ஜீவனைத் தியாகம் செய்யத் தயாராய் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார் என்பது இந்த வசனங்களிலிருந்து தெளிவாகிறது. அவர்கள் அவ்வாறு தியாகம் செய்தால், மிகுந்த பலனைப் பெறுவார்கள்.—மத்தேயு 16:27-ஐ வாசியுங்கள்.
3. (அ) ஜனங்களிடம் இயேசு என்ன கேள்விகளைக் கேட்டார்? (ஆ) அவருடைய இரண்டாவது கேள்வி அவர்களுக்கு எதை ஞாபகப்படுத்தியிருக்கலாம்?
3 அதே சந்தர்ப்பத்தில், சிந்தனையைத் தூண்டும் இரண்டு கேள்விகளை இயேசு கேட்டார். “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” என்றும், “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்றும் கேட்டார். (மாற். 8:36, 37) முதல் கேள்விக்கான பதில் நன்றாகத் தெரிந்ததே. மனிதன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை இழந்துவிட்டால் அவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவன் உயிரோடிருந்தால்தான் சொத்துசுகங்களை அனுபவிக்க முடியும். “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என இயேசு கேட்ட இரண்டாவது கேள்வி, யோபுவின் காலத்தில் சாத்தான் சுமத்திய குற்றச்சாட்டை அங்கிருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கலாம். ‘தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்’ என்று சாத்தான் சொன்னான். (யோபு 2:4) யெகோவாவை வணங்காத சிலருக்கு, சாத்தான் சொன்னது சரியெனப் படலாம். அநேகர், தங்கள் ஜீவனைக் காப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள்; தங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடவும் துணிவார்கள். ஆனால், கிறிஸ்தவர்களின் கண்ணோட்டமே வேறு.
4. இயேசுவின் கேள்விகள் கிறிஸ்தவர்களுக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
4 மனிதருக்கு இவ்வுலகில் நோயில்லா வாழ்வையும், வசதி வாய்ப்புகளையும், நீண்ட ஆயுளையும் அருளுவதற்காக இயேசு பூமிக்கு வரவில்லை என்பது நமக்குத் தெரியும். மாறாக, புதிய உலகில் என்றென்றும் வாழும் வாய்ப்பை அருளுவதற்காகவே அவர் வந்தார்; இந்த வாழ்க்கையை நாம் பொக்கிஷமாகக் கருதுகிறோம். (யோவா. 3:16) இயேசுவின் முதல் கேள்வியை ஒரு கிறிஸ்தவர் இவ்வாறுதான் புரிந்துகொள்வார்: ‘மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையை இழந்துவிட்டால் அவனுக்கு லாபம் என்ன?’ ஒரு லாபமும் இல்லை என்பதே அதற்கான பதில். (1 யோ. 2:15–17) இயேசுவின் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்க நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘புதிய உலகில் வாழும் என்னுடைய நம்பிக்கை நிறைவேறுவதற்கு இன்று என்ன தியாகங்களைச் செய்ய நான் தயாராய் இருக்கிறேன்?’ இந்தக் கேள்விக்கு, நாம் வாழும் விதமே பதிலளிக்கும்; நம் இருதயத்தில் அந்த நம்பிக்கை எந்தளவு வேரூன்றி இருக்கிறது என்பதை அது காட்டும்.—யோவான் 12:25-ஐ ஒப்பிடுங்கள்.
5. நித்திய ஜீவன் என்ற பரிசைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
5 நித்திய ஜீவனை நாம் சம்பாதிக்க முடியுமென்று இயேசு சொல்லவில்லை. ஜீவன் என்பது ஒரு பரிசு; ஏன், இந்த உலகில் நமக்கிருக்கிற அற்ப ஆயுளும்கூட ஒரு பரிசுதான். பணத்தைக் கொடுத்து அதை வாங்கவும் முடியாது, எதையாவது செய்து அதைச் சம்பாதிக்கவும் முடியாது. நித்திய ஜீவன் என்ற பரிசைப் பெறுவதற்கு ஒரே வழி, ‘கிறிஸ்து இயேசுமீது விசுவாசம் வைப்பதும்,’ ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரான’ யெகோவாமீது விசுவாசம் வைப்பதுமே. (கலா. 2:15; எபி. 11:6) இருந்தாலும், அந்த விசுவாசத்தைச் செயல்கள் மூலமாய்க் காட்ட வேண்டும், ஏனெனில் ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.’ (யாக். 2:26) ஆகவே, இயேசுவின் கேள்விகளை இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திக்கும்போது, இந்த உலகில் எந்தளவு தியாகங்கள் செய்யத் தயாராய் இருக்கிறோம், நம் விசுவாசம் உயிருள்ளது என்பதைக் காட்டுவதற்காக அவருடைய சேவையில் என்னவெல்லாம் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்று தீவிரமாய் யோசித்துப்பார்ப்பது நல்லது.
‘கிறிஸ்து தமக்குப் பிரியமாய் நடக்கவில்லை’
6. இயேசு எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்?
6 இயேசு பூமியில் இருந்தபோது, உலகப் பொருள்கள்மீது குறியாய் இருக்கவில்லை; மாறாக, முக்கியமானவற்றின்மீதே தம் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்; அதோடு, வசதி வாய்ப்புகளுடன் சொகுசாக வாழ்வதற்கான தூண்டுதலை அவர் உதறித்தள்ளினார். வாழ்நாள் முழுவதும் பல தியாகங்களைச் செய்தார், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். ஒருபோதும் தமக்குப் பிரியமாய் நடக்கவில்லை; மாறாக, ‘[கடவுளுக்கு] பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்றார். (யோவா. 8:29) கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக இயேசு என்னவெல்லாம் செய்யத் தயாராய் இருந்தார்?
7, 8. (அ) இயேசு செய்த தியாகம் என்ன, அதனால் அவருக்கு என்ன பலன் கிடைத்தது? (ஆ) என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
7 ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு தம் சீஷர்களிடம், ‘மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்’ என்றார். (மத். 20:28) நாம் ஏற்கெனவே சிந்தித்தபடி, சீக்கிரத்தில் ‘தம்முடைய ஜீவனைக் கொடுக்க’ வேண்டியிருக்குமென்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னபோது, ‘இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்’ என்று பேதுரு கூறினார். என்றாலும், இயேசு தம் மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை. மனிதருக்காகத் தம் உயிரையே, தம் பரிபூரண மனித உயிரையே மனமுவந்து கொடுத்தார். இவ்வாறு, சுயநலமின்றி செயல்பட்டதால், இயேசுவுக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்திருந்தது. அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு, ‘கடவுளின் வலது பக்கத்திற்கு உயர்த்தப்பட்டார்.’ (அப். 2:32, 33; பொ.மொ.) இவ்வாறு, நமக்கு ஓர் அருமையான முன்மாதிரி வைத்தார்.
8 ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, தங்களுக்குப் “பிரியமாய் நடவாமல்” இருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினார். அதோடு, ‘கிறிஸ்துவும் தமக்குப் பிரியமாய் நடக்கவில்லை’ என அவர்களுக்கு நினைப்பூட்டினார். (ரோ. 15:1–3) அப்படியானால், அவர் கொடுத்த ஆலோசனையை நாம் எந்தளவு கடைப்பிடிப்போம்? கிறிஸ்துவைப் பின்பற்றி எந்தளவு தியாகம் செய்வோம்?
மிகச் சிறந்ததைக் கொடுக்கும்படி யெகோவா விரும்புகிறார்
9. ஒரு கிறிஸ்தவர் கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது உண்மையில் என்ன செய்கிறார்?
9 பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணச் சட்டத்தின்படி, எபிரெய அடிமைகள், அவர்களுடைய அடிமைத்தனத்தின் ஏழாம் வருடத்தில் அல்லது யூபிலி வருடத்தில் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது. என்றாலும், அவர்கள் மற்றொரு தெரிவையும் செய்ய முடிந்தது. ஓர் அடிமை, தன் எஜமான்மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தால், காலமெல்லாம் அவருக்கே அடிமையாய் இருக்கத் தீர்மானிக்கலாம். (உபாகமம் 15:12, 16, 17-ஐ வாசியுங்கள்.) அதுபோன்ற ஒரு தெரிவையே நாம் கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது செய்கிறோம். நம் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கே மனமுவந்து ஒப்புக்கொள்கிறோம். அப்படிச் செய்கையில், யெகோவாமீது நாம் அளவற்ற அன்பு வைத்திருப்பதையும், காலமெல்லாம் அவருக்குச் சேவை செய்ய ஆசைப்படுவதையும் வெளிக்காட்டுகிறோம்.
10. எந்த விதத்தில் நாம் கடவுளின் உடமையாக இருக்கிறோம், அது நம் சிந்தையையும் செயலையும் எவ்வாறு பாதிக்க வேண்டும்?
10 நீங்கள் தற்போது யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து, ஊழியத்தில் ஈடுபட்டு, கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றால், நீங்கள் எங்களுடைய பாராட்டுக்குரியவர்கள். சீக்கிரத்தில், யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுக்கத் தூண்டப்பட்டு, பிலிப்புவிடம் எத்தியோப்பிய மந்திரி கேட்ட அதே கேள்வியைக் கேட்பீர்களென்று நாங்கள் நம்புகிறோம்; “நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன” என்று அவர் கேட்டார். (அப். 8:35, 36) கடவுளுக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும்போது அவரிடம் உங்களுடைய உறவு, கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு இருந்ததைப் போலவே இருக்கும்; அவர்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்று அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே.’ (1 கொ. 6:19, 20) நம்முடைய எதிர்காலம் பரலோகத்தில் இருந்தாலும் சரி பூமியில் இருந்தாலும் சரி, யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருந்தால், அவரே நமக்கு எஜமானர். அப்படியானால், ‘மனுஷருக்கு அடிமைகளாகாமல்,’ நம்முடைய சுயநல ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம்! (1 கொ. 7:23) யெகோவா தம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் ஓர் உண்மை ஊழியராய் இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
11. என்ன பலியைச் செலுத்தும்படி கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்ட பலிகளைப் போலவே, அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
11 ‘உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள்’ என்று சக விசுவாசிகளை பவுல் அறிவுறுத்தினார். (ரோ. 12:1) இவ்வார்த்தைகள், இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியதற்கு முன் தாங்கள் செலுத்திவந்த பலிகளை யூத கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டியிருக்கலாம்; அவர்களுடைய வணக்கத்தின் ஓர் அம்சமாக அவை இருந்தன. நியாயப்பிரமாணத்தின்படி, யெகோவாவுக்குப் பலியாகச் செலுத்தப்பட்ட மிருகங்கள் மிகச் சிறந்தவையாய் இருக்க வேண்டியிருந்ததை அவர்கள் அறிந்திருப்பார்கள். ஊனமானவற்றை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. (மல். 1:8, 13) நம் உடல்களை ‘ஜீவபலியாக’ அளிக்கிற விஷயத்திலும் அதுவே உண்மை. நம் ஆசாபாசங்களைத் திருப்திசெய்ததுபோக மீதமானவற்றை யெகோவாவுக்கு அளிக்காமல், மிகச் சிறந்ததையே அவருக்கு அளிக்கிறோம். கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கையில், எந்த நிபந்தனையுமின்றி, நம் ‘ஜீவனையே’ அவருக்கு அளிக்கிறோம்; அதாவது, நம்முடைய பலம், பணம், பொருள்கள், திறமைகள் என எல்லாவற்றையும் அவருக்கு அளிக்கிறோம். (கொலோ. 3:24) நடைமுறையில் இதை நாம் எவ்வாறு அளிக்கலாம்?
நேரத்தை ஞானமாகச் செலவிடுங்கள்
12, 13. யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுப்பதற்கு ஒரு வழி என்ன?
12 யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுப்பதற்கு ஒரு வழி, நம்முடைய நேரத்தை ஞானமாகச் செலவிடுவதாகும். (எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.) அதற்கு, சுயகட்டுப்பாடு தேவை. ஆதாமிடமிருந்து நமக்குக் கடத்தப்பட்டிருக்கும் அபூரணத்தோடுகூட, இவ்வுலகின் செல்வாக்கும் சேர்ந்து, நேரத்தை முழுக்க முழுக்க நம்முடைய சந்தோஷத்திற்காகவும் நன்மைக்காகவுமே செலவிடத் தூண்டுகின்றன. “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்பதற்கேற்ப, நம் கிறிஸ்தவக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகச் செய்துவரும் வேலைக்கும், இன்பப் பொழுதுபோக்கிற்கும் நேரம் செலவிட வேண்டியது உண்மைதான். (பிர. 3:1) என்றாலும், இந்த விஷயத்தில் ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவர் சமநிலை காத்து, தனது நேரத்தை ஞானமாகச் செலவிட வேண்டும்.
13 பவுல் அத்தேனே பட்டணத்திற்குச் சென்றிருந்தபோது, அந்த “பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை” என்று அவர் கவனித்தார். (அப். 17:21) இன்றும்கூட அநேகர் அவ்வாறே நேரத்தை வீணடிக்கிறார்கள். டிவி, வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் போன்றவற்றில் ஈடுபடும்போது, நம் நேரமெல்லாம் வீணாகிவிடுகிறது. அதுபோக இன்னும் என்னென்னவோ காரியங்கள் நம் நேரத்தைப் பறித்துக்கொள்கின்றன. இதுபோன்ற காரியங்களில் மூழ்கிவிட்டால், ஆன்மீகக் காரியங்களை நாம் ஒதுக்கிவிட நேரிடலாம். மிக முக்கியமான காரியங்களை, அதாவது, யெகோவாவுக்குச் சேவை செய்வது சம்பந்தப்பட்ட காரியங்களைச் செய்வதற்கும்கூட நமக்கு நேரம் இல்லை என்று நினைக்குமளவுக்குப் போய்விடலாம்.—பிலி. 1:9, 10, NW.
14. என்ன கேள்விகளை நாம் தீவிரமாய் யோசிக்க வேண்டும்?
14 ஆகவே, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் ஓர் ஊழியராக இருக்கிற நீங்கள், பின்வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தினந்தோறும் பைபிள் வாசிக்கவும் தியானிக்கவும் ஜெபிக்கவும் நேரம் ஒதுக்குகிறேனா?’ (சங். 77:12; 119:97; 1 தெ. 5:17) ‘கூட்டங்களுக்குத் தயாரிக்க நேரம் ஒதுக்குகிறேனா? கூட்டங்களில் குறிப்புகளைச் சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறேனா?’ (சங். 122:1; எபி. 2:12) பவுலும் பர்னபாவும் ‘யெகோவா தந்த அதிகாரத்தில் பல வாரங்களாக . . . தைரியமாய்ப் பேசிவந்தார்கள்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (அப். 14:3, NW) அவ்வாறே, நீங்களும் பிரசங்க வேலையில் அதிக நேரத்தைச் செலவிடுவதற்காக, ஒருவேளை ஒரு பயனியராகச் சேவை செய்வதற்காக, உங்களுடைய சூழ்நிலைகளில் மாற்றங்களைச் செய்ய முடியுமா?—எபிரெயர் 13:15-ஐ வாசியுங்கள்.
15. மூப்பர்கள் தங்களுடைய நேரத்தை எவ்வாறு ஞானமாகச் செலவிடுகிறார்கள்?
15 அப்போஸ்தலன் பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலிருந்த சபைக்குச் சென்றிருந்தபோது, சீஷர்களை உற்சாகப்படுத்துவதற்காக ‘அங்கே . . . அநேகநாள் சஞ்சரித்தார்கள்.’ (அப். 14:28) அதுபோல இன்றும்கூட அன்பான மூப்பர்கள் மற்றவர்களைப் பலப்படுத்துவதற்காக அதிகமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதோடு, மந்தையை மேய்ப்பதிலும், காணாமற்போன ஆடுகளைத் தேடுவதிலும், சபையில் நோயுற்றவர்களைக் கவனிப்பதிலும், இன்னும் பல பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் கடினமாக உழைக்கிறார்கள். நீங்கள் முழுக்காட்டப்பட்ட ஒரு சகோதரர் என்றால், இப்படிப்பட்ட கூடுதல் பொறுப்புகளுக்கான தகுதிகளை வளர்ப்பதற்கு உங்கள் சூழ்நிலை இடங்கொடுக்கிறதா?
16. நாம் என்னென்ன வழிகளில் ‘விசுவாச குடும்பத்தார்களுக்கு நன்மைசெய்யலாம்’?
16 மனிதராலோ இயற்கையாலோ ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியில் ஈடுபட்டு அநேகர் மகிழ்ச்சி கண்டிருக்கிறார்கள். உதாரணமாக, பெத்தேலில் சேவை செய்கிற, சுமார் 65 வயதுள்ள ஒரு சகோதரி பல முறை நீண்ட தூரம் பயணித்து நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் தன்னுடைய விடுப்பு நாட்களை ஏன் அவ்வாறு செலவிட்டார்? அவர் கூறுகிறார்: “எனக்கு விசேஷத் திறமை எதுவும் இல்லையென்றாலும், தேவைப்பட்ட உதவிகள் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக நினைத்தேன். ஏராளமான பொருள் நஷ்டத்தைச் சந்தித்த சகோதர சகோதரிகளின் உறுதியான விசுவாசத்தைப் பார்த்து மிகவும் உற்சாகமடைந்தேன்.” ராஜ்ய மன்றங்கள் மற்றும் மாநாட்டு மன்றங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணியிலும்கூட உலகெங்கும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் உதவுகிறார்கள். நாம் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதன் மூலம், சுயநலமின்றி ‘விசுவாச குடும்பத்தார்களுக்கு நன்மைசெய்கிறோம்.’—கலா. 6:10.
“நான் உங்களுடனேகூட இருக்கிறேன்”
17. நித்திய ஜீவனைப் பெறுவதற்காக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்?
17 கடவுளிடமிருந்து விலகியிருக்கும் மனித சமுதாயத்தினர் சீக்கிரத்தில் அழியப்போகிறார்கள். அது எப்போது என்று நமக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. என்றாலும், ‘இனிவரும் காலம் குறுகினது’ என்றும், ‘இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறது’ என்றும் நமக்கு நன்றாகவே தெரியும். (1 கொரிந்தியர் 7:29-31-ஐ வாசியுங்கள்.) இது, “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்று இயேசு கேட்ட கேள்வியை இன்னுமதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது. “நித்திய ஜீவனை” பெறுவதற்காக, யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிற எல்லாத் தியாகங்களையும் நாம் நிச்சயமாகச் செய்வோம். (1 தீ. 6:19) ஆகவே, தொடர்ந்து ‘தம்மைப் பின்பற்றும்படியாக’ இயேசு கொடுத்த கட்டளைக்கு நாம் செவிகொடுத்து, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவது’ மிக மிக முக்கியமானது.—மத். 6:31–33; 24:13.
18. நாம் எதில் நம்பிக்கை வைக்கிறோம், ஏன்?
18 இயேசுவைப் பின்பற்றுவது எப்போதும் எளிதல்ல என்பது உண்மைதான்; அவர் சொல்லியிருந்தபடியே அதற்காகச் சிலர் இந்த உலகில் தங்கள் ஜீவனையே கொடுத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், ‘இந்தக் கஷ்டங்கள் நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கத் தோன்றும் தூண்டுதலை இயேசுவைப் போலவே நாமும் தவிர்க்கிறோம். முதல் நூற்றாண்டில், பரலோக நம்பிக்கையுள்ள தம்முடைய சீஷர்களிடம், “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று அவர் கொடுத்த வாக்குறுதியில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். (மத். 28:20) ஆகவே, எந்தளவு அதிகமாய் நம்முடைய நேரத்தையும் திறமைகளையும் பரிசுத்த சேவைக்குப் பயன்படுத்த முடியுமோ, அந்தளவு பயன்படுத்துவோமாக. அவ்வாறு செய்கையில், மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவா நம்மைக் காப்பாற்றுவார் அல்லது புதிய உலகில் நம்மை உயிரோடு எழுப்புவார் என நாம் நம்புவதை வெளிக்காட்டுகிறோம். (எபி. 6:9–11) இவ்வாறு, நித்திய ஜீவன் என்ற பரிசை நாம் பொக்கிஷமாய்க் கருதுகிறோம் என்பதை நிரூபித்திருப்போம்.
உங்கள் பதில்?
• கடவுளுக்கும் மனிதருக்கும் மனமுவந்து சேவை செய்வதில் இயேசு எவ்வாறு ஒப்பற்று விளங்கினார்?
• ஒருவர் ஏன் தனக்குப் பிரியமாய் நடக்கக் கூடாது, இதை எப்படிச் செய்வது?
• பூர்வ இஸ்ரவேலில், எப்படிப்பட்ட பலிகளை மாத்திரமே யெகோவா ஏற்றுக்கொண்டார், இதிலிருந்து நமக்கு என்ன பாடம்?
• எவ்வழிகளில் நம்முடைய நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தலாம்?
[பக்கம் 26-ன் படங்கள்]
கடவுளுக்குப் பிரியமான காரியங்களையே இயேசு எப்போதும் செய்தார்
[பக்கம் 28-ன் படம்]
நன்றியுள்ளம் படைத்த இஸ்ரவேலர் உண்மை வணக்கத்தை ஆதரிக்க மிகச் சிறந்தவற்றை அளித்தார்கள்
[பக்கம் 29-ன் படங்கள்]
நம்முடைய நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவதன் மூலம் யெகோவாவின் உள்ளத்தைக் குளிர்விக்கிறோம்