அதிகாரம் 25
தொழுநோயாளியைக் கரிசனையோடு குணமாக்குகிறார்
மத்தேயு 8:1-4 மாற்கு 1:40-45 லூக்கா 5:12-16
ஒரு தொழுநோயாளியை இயேசு குணமாக்குகிறார்
இயேசு தன்னுடைய நான்கு சீஷர்களோடு “கலிலேயா முழுவதும் இருந்த ஜெபக்கூடங்களுக்கு” போய்ப் பிரசங்கிக்கிறார். (மாற்கு 1:39) இயேசு செய்கிற அற்புதங்களைப் பற்றிய செய்தி பல இடங்களுக்குப் பரவுகிறது. தொழுநோயாளி ஒருவனும் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகிறான். அவனுடைய ‘உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக’ லூக்கா சொல்கிறார். (லூக்கா 5:12) இது ஒரு பயங்கரமான நோய். இது முற்றும்போது, நோயாளியின் உடல் உறுப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைத்துவிடும்.
அந்தத் தொழுநோயாளி வேதனையில் துடிக்கிறான். ஊரைவிட்டு ஒதுங்கி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். யாராவது கொஞ்ச தூரத்தில் வருவது தெரிந்தாலே, “தீட்டு, தீட்டு” என்று அவன் கத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவன் பக்கத்தில் வர மாட்டார்கள், நோயும் பரவாது. (லேவியராகமம் 13:45, 46) இயேசு வருகிறார் என்று தெரிந்ததும் அந்தத் தொழுநோயாளி என்ன செய்கிறான்? அவன் இயேசுவிடம் வந்து அவர் முன்னால் மண்டிபோட்டு, “ஐயா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொல்லிக் கெஞ்சுகிறான்.—மத்தேயு 8:2.
அவனுக்கு இயேசுமேல் எவ்வளவு விசுவாசம்! அவனைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. இப்போது, இயேசு என்ன செய்வார்? நீங்கள் அங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? இயேசு கரிசனையோடு தன் கையை நீட்டி, அவனைத் தொடுகிறார். “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொல்கிறார். (மத்தேயு 8:3) உடனே தொழுநோய் மறைகிறது. சுற்றியிருக்கிற மக்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை!
இயேசுவைப் போலக் கரிசனையுள்ள, திறமையுள்ள ஒரு ராஜா வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இயேசு அந்தத் தொழுநோயாளியிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்கிறோம். அவர் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது, “ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்” என்ற தீர்க்கதரிசனம் கண்டிப்பாக நிறைவேறும் என்று புரிந்துகொள்கிறோம். (சங்கீதம் 72:13) கஷ்டப்படுகிற எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று இயேசு ரொம்ப ஆசைப்படுகிறார். அவருடைய ஆட்சியில் இதை நிறைவேற்றுவார்.
இந்தத் தொழுநோயாளியைக் குணமாக்குவதற்கு முன்பே, இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் கேட்டு மக்கள் மலைத்துப்போயிருந்தார்கள். இப்போது, இயேசு செய்த இந்த அற்புதத்தைப் பற்றியும் மக்கள் கேள்விப்படுவார்கள். ஆனால், வெறுமனே இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டு மக்கள் தன்மேல் விசுவாசம் வைப்பதை இயேசு விரும்பவில்லை. அவர் ‘தெருவில் எல்லாரும் கேட்கும்படி கத்திப் பேச மாட்டார்,’ அதாவது தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள மாட்டார், என்று ஒரு தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருந்தது. இயேசுவுக்கு இது நன்றாகத் தெரியும். (ஏசாயா 42:1, 2) அதனால், அவர் அந்தத் தொழுநோயாளியிடம், “இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே; ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டி, மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு” என்று கண்டிப்புடன் சொல்கிறார்.—மத்தேயு 8:4.
கொடூரமான நோயிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டதால் அந்தத் தொழுநோயாளிக்கு ஒரே சந்தோஷம்! இந்த விஷயத்தை அவனால் மனதுக்குள் பூட்டி வைக்க முடியவில்லை. அதனால், எல்லாரிடமும் போய்ச் சொல்கிறான். அதைக் கேட்ட எல்லாருக்கும் ஆர்வமும் ஆச்சரியமும் அதிகமாகிறது. கடைசியில், இயேசு எந்த ஊருக்கும் வெளிப்படையாகப் போக முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், யாரும் இல்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் கொஞ்சக் காலம் தங்குகிறார். இருந்தாலும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்காகவும் குணமாவதற்காகவும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரைத் தேடி வருகிறார்கள்.