இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
பிசாசு பிடித்த வாலிபன் குணமாக்கப்படுகிறான்
இயேசுவும், பேதுருவும், யாக்கோபும், யோவானும் ஒருவேளை எர்மோன் மலையுச்சியின் மேல் தொலைவில் இருக்கையில், மற்ற சீஷர்கள் தற்செயலாக ஒரு பிரச்னையை எதிர்ப்படுகிறார்கள். திரும்பி வந்த போது இயேசு, ஏதோ தவறு ஏற்பட்டிருப்பதை உடனடியாகக் காண்கிறார். அவருடைய சீஷர்களைச் சுற்றி திரளான ஜனங்கள் நிற்கிறார்கள். வேதபாரகர் அவர்களோடே தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவைக் கண்டபோது, ஜனங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு அவருக்கு வந்தனஞ் செய்ய ஓடி வருகிறார்கள். “நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம் பண்ணுகிறீர்கள்?” என்று அவர் கேட்கிறார்.
ஜனக்கூட்டத்திலிருந்து முன்னால் வந்த ஒரு மனிதன், இயேசுவுக்கு முன்னால் முழங்கால்படியிட்டு விளக்குகிறான்: “போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டு வந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைத்தள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந்து போகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற் போயிற்று.”
வாலிபனை குணப்படுத்த முடியாது போன சீஷர்களின் தோல்வியை வேதபாரகர் பெரிதுபடுத்தி, ஒருவேளை அவர்களுடைய முயற்சிகளை பரிகாசம் செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது. சரியாக இந்த இக்கட்டான கட்டத்தில் இயேசு வந்து சேருகிறார். “விசுவாசமில்லாத சந்ததியே,” என்று அவர் சொல்கிறார். “எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்?”
இயேசு தம்முடைய குறிப்புகளை, அனைவரிடமும் பேசுகிறார், ஆனால் அவை குறிப்பாக தம்முடைய சீஷர்களுக்கு தொந்தரவை உண்டுபண்ணிக் கொண்டிருந்த வேதபாரகரை நோக்கி கூறப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அடுத்து, இயேசு வாலிபனைக் குறிப்பிட்டு சொல்கிறார்: “அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்.” ஆனால் வாலிபன் இயேசுவிடம் வரும் போது, அவனை பிடித்த ஆவி அவனைத் தரையிலே தள்ளி, அலைக்கழிக்கிறது. அவன் தரையிலே விழுந்து நுரைத்தள்ளி புரளுகிறான்.
“இது இவனுக்கு உண்டாகி, எவ்வளவு காலமாயிற்று?” என்று இயேசு கேட்கிறார்.
“சிறு வயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது” என்பதாக தகப்பன் பதிலளிக்கிறான். “இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று.” பின்னர் தகப்பன் மன்றாடுகிறான்: “நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.”
ஒருவேளை பல ஆண்டுகளாக தகப்பன் உதவியை நாடிக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, இயேசுவின் சீஷர்களால் இதை செய்யக்கூடாமற் போனபோது, அவனுடைய மனக்கசப்பு அதிகமாகிவிடுகிறது. உதவியற்ற நிலையிலிருந்த அந்த மனிதனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இயேசு உற்சாகமூட்டும் வகையில் சொல்லுகிறார்: “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.”
“விசுவாசிக்கிறேன்” என்று தகப்பன் உடனடியாக சத்தமிட்டுச் சொல்கிறான், ஆனால் “என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” என்று மன்றாடுகிறான்.
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதைக் கண்டு இயேசு அந்தப் பிசாசை அதட்டுகிறார்: “ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டு போ, இனி இவனுக்குள் போகாதே.” பிசாசு புறப்பட்டு போகையில், அவனை சத்தமிடச் செய்து அவனை மிகவும் அலைக்கழிக்கிறது. பின்னர் வாலிபன் “செத்துப் போனான்” என்று அநேகர் சொல்ல ஆரம்பிக்கும் வண்ணமாக அவன் அசையாது தரையில் கிடக்கிறான். ஆனால் இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்குகிறார்; உடனே அவன் எழுந்திருக்கிறான்.
முன்னர், சீஷர்கள் பிரசங்கிப்பதற்காக அனுப்பப்பட்ட சமயத்தில் அவர்கள் பிசாசுகளைத் துரத்தியிருந்தார்கள். ஆகவே, இப்பொழுது ஒரு வீட்டில் அவர்கள் பிரவேசித்த போது இயேசுவிடம் அவர்கள் தனித்து, “அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற் போயிற்று” என்று கேட்கிறார்கள்.
விசுவாசக்குறைவே அதற்கு காரணம் என்பதைச் சுட்டிக்காட்டுபவராக இயேசு இவ்விதமாக பதிலளிக்கிறார்: ‘இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலன்றி, மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது.’ இந்த விஷயத்தில் உட்பட்டிருக்கும், விசேஷமான வல்லமை வாய்ந்த பிசாசை துரத்துவதற்கு தயாரிப்பு அவசியமாயிருந்தது தெளிவாக இருக்கிறது. கடவுளுடைய அதிகாரமளிக்கும் உதவிக்காக மன்றாடும் ஜெபத்தோடுகூட பலமான விசுவாசம் தேவையாக இருந்தது.
பின்னர் இயேசு கூடுதலாகச் சொல்கிறார்: “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
விசுவாசம் எவ்வளவு வல்லமையுள்ளதாக இருக்கக்கூடும்! யெகோவாவின் சேவையில் முன்னேற்றத்தை தடைசெய்யும் இடையூறுகளும் பிரச்னைகளும், சொல்லர்த்தமான பெரிய ஒரு மலையைப் போன்று கடந்து மேற் செல்லமுடியாததாகவும் விலக்கமுடியாததாகவும் இருப்பதாகத் தோன்றக்கூடும். என்றபோதிலும், நாம் நம்முடைய இருதயங்களில் விசுவாசத்தை வளர்த்து, அதற்கு தண்ணீர் பாய்ச்சி வளர உற்சாகப்படுத்துவோமேயானால், அது முதிர்ச்சிக்கு விரிவடைந்து இப்பேர்ப்பட்ட மலைப்போன்ற இடையூறுகளையும் பிரச்னைகளையும் மேற்கொள்ள நமக்கு உதவி செய்யும். மாற்கு 9:14–29; மத்தேயு 17:19, 20; லூக்கா 9:37–43.
◆ எர்மோன் மலையிலிருந்து திரும்பி வருகையில் இயேசு என்ன நிலையைக் காண்கிறார்?
◆ இயேசு பிசாசு பிடித்திருந்த வாலிபனின் தகப்பனுக்கு என்ன ஊக்குவிப்பைக் கொடுத்தார்?
◆ சீஷர்களால் ஏன் பிசாசைத் துரத்தக் கூடாமற் போனது?
◆ விசுவாசம் எந்தளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கக்கூடும் என்று இயேசு காண்பிக்கிறார்? (w88 1/15)