பிள்ளைகளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
யாரேனும் நம்மிடம் “நீ சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறாய்!” என்று சொன்னால் பெரும்பாலும் நாம் சங்கடப்படலாம். சிறு பிள்ளைகள் நம்மைக் கவருகிறவர்களாக இருந்தாலும் பொதுவாக பெரியவர்களுக்கு இருக்கும் முதிர்ச்சி, அனுபவம், ஞானம் ஆகியவற்றில் அவர்கள் குறைவுபடுவது உண்மையே.—யோபு 12:12.
என்றபோதிலும், ஒரு சமயத்தில் இயேசு தம்முடைய சீஷர்களிடம், “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். (மத்தேயு 18:3) இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய என்ன குணங்களைச் சிறு பிள்ளைகள் கொண்டிருக்கிறார்கள்?
சிறு பிள்ளையின் மனத்தாழ்மையை வளர்த்தல்
அப்படிச் சொல்வதற்கு இயேசுவைத் தூண்டிய ஒரு சூழ்நிலையைக் கவனிக்கலாம். நீண்ட பயணத்திற்குப் பிறகு கப்பர்நகூமுக்கு வந்ததும், இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள்?” சீஷர்கள் அவமானப்பட்டு அமைதியாக இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம் செய்துகொண்டு வந்தார்கள். கடைசியாக, அவர்கள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இயேசுவிடம் “பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்?” என்று கேட்டார்கள்.—மாற்கு 9:33, 34; மத்தேயு 18:1.
இயேசுவுடன் ஏறத்தாழ மூன்று வருடங்கள் இருந்த பின்பும், அந்தஸ்துபற்றி சீஷர்கள் வாக்குவாதம் செய்தது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுபோன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட யூத மதத்தில் அவர்கள் வளர்க்கப்பட்டிருந்தார்கள். தெளிவாகவே, சீஷர்களின் மதப்பின்னணியும் அபூரணமும் சேர்ந்து அவர்களுடைய சிந்தனையைப் பாதித்தன.
இயேசு உட்கார்ந்து, சீஷர்களை அழைத்து இவ்வாறு சொன்னார்: “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்.” (மாற்கு 9:35) இந்த வார்த்தைகள் அவர்களை வாயடைத்துப்போகச் செய்திருக்கலாம். இயேசுவின் நியாயவிவாதம் அந்தஸ்து பற்றிய யூதர்களின் கருத்துகளை நேரடியாகவே தாக்கியது! இயேசு ஒரு சிறு பிள்ளையை தம்மிடத்தில் அழைத்தார். அப்பிள்ளையை அன்பாக அணைத்துக்கொண்டு அவருடைய கருத்தை வலியுறுத்தி இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.”—மத்தேயு 18:3, 4.
மனத்தாழ்மைக்கு, என்னவொரு நடைமுறையான பாடம்! இந்தக் காட்சியை உங்கள் மனத்திரையில் கொண்டுவாருங்கள். ஒரு சிறு பிள்ளையை பெருமிதம்கொண்ட பெரியபெரிய ஆட்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தப் பிள்ளையை வைத்தகண் வாங்காமல் வெறித்துப் பார்க்கிறார்கள். அந்தப் பிள்ளை எவ்வளவு சங்கோஜப்பட்டிருப்பான், அதேசமயம் நம்பிக்கையோடும் இருந்திருப்பான்! போட்டிமனப்பான்மையோ பகைமையோ அவனிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை! தற்பெருமையின்றி எவ்வளவு பணிவோடு இருந்திருப்பான்! ஆம், அந்தப் பிள்ளை மனத்தாழ்மை என்னும் தெய்வீக குணத்திற்கு அருமையான உதாரணம்.
இயேசுவின் கருத்து தெளிவாக இருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தில் இருக்க வேண்டுமானால் நாமனைவருமே சிறு பிள்ளையின் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உண்மைக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் அன்பான உறவில் போட்டிக்கோ கர்வத்திற்கோ இடமில்லை. (கலாத்தியர் 5:26) உண்மையில், இந்தக் குணங்களே பிசாசாகிய சாத்தான் கடவுளுக்கெதிராக கலகம் செய்வதற்குக் காரணமாக இருந்தன. யெகோவா அவற்றை வெறுப்பதில் ஆச்சரியமேதுமில்லையே!—நீதிமொழிகள் 8:13.
உண்மைக் கிறிஸ்தவர்கள் சேவை செய்யவே நாடவேண்டும், அதிகாரம் செலுத்த நாடக்கூடாது. வேலை எவ்வளவு பிடிக்காததாக இருந்தாலும் சரி அல்லது நாம் சேவை செய்யும் ஆள் எவ்வளவு தாழ்வானவராக இருந்தாலும் சரி அது ஒரு விஷயமே இல்லை, உண்மையான மனத்தாழ்மை மற்றவர்களுக்குச் சேவை செய்ய நம்மைத் தூண்டுகிறது. இப்படி மனத்தாழ்மையுடன் சேவை செய்வது திருப்தியான பலன்களைத் தருகிறது. இயேசு இவ்விதமாகக் கூறுகிறார்: “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.” (மாற்கு 9:37) சிறு பிள்ளையிடமுள்ள தாராள குணம், பணிவு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்வது, இந்தப் பிரபஞ்சத்திலே மிக உன்னதமானவரிடத்திலும் அவருடைய குமாரனிடத்திலும் நம்மை ஒன்றுபடுத்துகிறது. (யோவான் 17:20, 21; 1 பேதுரு 5:5) கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை நாம் அறுவடை செய்வோம். (அப்போஸ்தலர் 20:35) அதோடு, கடவுளுடைய மக்கள் மத்தியில் நிலவும் சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் நாம் பங்களித்திருக்கிறோம் என்ற திருப்தியையும் பெறுவோம்.—எபேசியர் 4:1-3.
கற்றுக்கொள்ளும் மனமும் நம்பிக்கை வைப்பதும்
பெரியவர்கள் சிறு பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்த பாடத்தை இயேசு குறிப்பிடுகிறார்: “எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை.” (மாற்கு 10:15) பிள்ளைகள் மனத்தாழ்மையாக மட்டுமல்ல கற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். “அவர்கள் பஞ்சைப்போல தகவல்களை உறிஞ்சிக்கொள்கிறார்கள்” என்று ஒரு தாய் சொல்கிறார்.
எனவே, கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ள, ராஜ்ய செய்தியை நாம் மனமார ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படியவேண்டும். (1 தெசலோனிக்கேயர் 2:13) புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, ‘இரட்சிப்புக்கென்று வளரும்படி . . . களங்கமில்லாத ஆத்மிகப்பாலின்மேல் வாஞ்சையாயிருப்போம்.’ (1 பேதுரு 2:3, திருத்திய மொழிபெயர்ப்பு) பைபிளின் ஒரு போதனை புரிந்துகொள்வதற்குக் கடினமாகத் தோன்றினால் என்ன செய்வது? “சிறு பிள்ளைகள் தங்களுடைய கேள்விகளுக்குத் திருப்தியான பதில்கள் கிடைக்கும்வரை ‘ஏன்?’ என்று ஓயாமல் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்” என்று குழந்தை நலச் சேவகர் ஒருவர் கூறுகிறார். அவர்களைப் போலவே நாமும் செய்யலாம். அதனால் தொடர்ந்து படியுங்கள். அனுபவம் வாய்ந்த கிறிஸ்தவர்களோடு பேசுங்கள். ஞானத்துக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (யாக்கோபு 1:5) ஜெபத்தில் நீங்கள் தொடர்ந்து கேட்டால் சரியான நேரத்தில் பலனடைவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.—மத்தேயு 7:7-11.
என்றாலும், ‘கற்றுக்கொள்ளும் மனமுள்ளவர்கள் சுலபமாக ஏமாற்றப்படமாட்டார்களா?’ என்று சிலர் கேட்கலாம். நம்பகமான வழிநடத்துதலைப் பெறுபவர்கள் ஏமாற்றப்படமாட்டார்கள். உதாரணமாக, வழிநடத்துதலுக்காக குழந்தைகள் இயல்பாகவே தங்களுடைய பெற்றோரைச் சார்ந்திருக்கிறார்கள். “பெற்றோர் அன்றாடம் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும் அவர்களைப் பாதுகாப்பதன் மூலமும் தங்கள்மேல் நம்பிக்கை வைக்கலாமெனக் காட்டுகிறார்கள்” என்று ஒரு தகப்பன் கூறுகிறார். நிச்சயமாகவே, நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பதற்கு இதுபோன்ற காரணங்கள் நமக்கிருக்கின்றன. (யாக்கோபு 1:17; 1 யோவான் 4:9, 10) யெகோவா தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையின்மூலம் நிலையான வழிநடத்துதலைத் தருகிறார். அவருடைய பரிசுத்த ஆவியும் அமைப்பும் நமக்கு ஆறுதலும் ஆதரவும் தருகின்றன. (மத்தேயு 24:45-47; யோவான் 14:26) இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்வது ஆன்மீகத் தீங்கிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.—சங்கீதம் 91:1-16.
சிறு பிள்ளையைப்போல கடவுளில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது நமக்கு மனச் சமாதானத்தையும் தருகிறது. “நாம் சிறு பிள்ளைகளாக இருக்கிறபோது பயணம் செய்கையில் பயணக் கட்டணத்தைக் கட்டுவதற்கும் முடியாது, சேருமிடத்தை எப்படிச் சென்றடைவோம் என்பதும் தெரியாது. என்றாலும், நம் பெற்றோர் நம்மைப் பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்களா என்ற சந்தேகம் எட்டிப்பார்ப்பதே இல்லை” என்று ஒரு பைபிள் அறிஞர் சொல்கிறார். நம்முடைய வாழ்க்கைப் பயணத்திலும் யெகோவாவில் இதேபோன்ற நம்பிக்கையை நாம் வைத்திருக்கிறோமா?—ஏசாயா 41:10.
கடவுளிடம் முழு நம்பிக்கை வைத்திருந்தால் நம் ஆன்மீகத்திற்குத் தீங்கிழைக்கும் செயல்களையும் மனப்பான்மைகளையும் தவிர்ப்போம். மாறாக, இயேசுவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை வைப்போம்: அதாவது நம்முடைய பரலோகத் தகப்பன் நம்முடைய செயல்களையெல்லாம் அறிந்திருக்கிறார்; முதலாவது ராஜ்யத்தையும் கடவுளுடைய நீதியையும் தேடும்போது, அவர் நம்மைக் கவனித்துக்கொள்வார் என்பதில் நம்பிக்கை வைப்போம். இப்படிக் கடவுள்மீது முழு நம்பிக்கை வைப்பது, ஆன்மீகப் பொறுப்புகளைத் தள்ளிவிட்டு பொருளாதாரக் காரியங்களைத் தேடும் தூண்டுதலை எதிர்த்து போராட நமக்கு உதவும்.—மத்தேயு 6:19-34.
‘துர்க்குணத்திலே குழந்தைகளாக’
அபூரணமாகப் பிறந்தாலும், சிறு பிள்ளைகள் இருதயத்திலும் மனதிலும் தூய்மையுள்ளவர்களாக இருப்பது நமக்கு இதமளிக்கிறது. இதன் காரணமாகவே பைபிள், ‘துர்க்குணத்திலே குழந்தைகளாயிருங்கள்’ என்று கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது.—1 கொரிந்தியர் 14:20.
ஐந்து வயது நிரம்பிய மோனீக் தன்னுடைய அம்மாவிடம் சந்தோஷமாய் இப்படிச் சொன்னதைக் கவனியுங்கள்: “அம்மா என்னோட புது சிநேகிதி, சாராவுக்கு என்னுடையதைப் போலவே சுருட்டை முடி இருக்குதுமா!” சாராவுடைய வித்தியாசமான தோல் நிறத்தையோ இனத்தையோபற்றி அவள் சொல்லவில்லை. ஒரு தாய் இவ்வாறு சொல்கிறார்: “சிறு பிள்ளைகளுக்கு நிற வேறுபாடெல்லாம் கிடையாது. இனம் பற்றியோ பாரபட்சம் பற்றியோ அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.” இந்த விஷயங்களில், சிறு பிள்ளைகள், எல்லா தேசத்து மக்களையும் நேசிக்கும் பாரபட்சமற்ற நம்முடைய தேவனின் கண்ணோட்டத்தை எவ்வளவு அழகாய்ப் பிரதிபலிக்கின்றார்கள்.—அப்போஸ்தலர் 10:34, 35.
மேலும் சிறு பிள்ளைகள் தாராளமாக ஒருவரையொருவர் மன்னிக்கிறார்கள். ஒரு தகப்பன் இவ்வாறு கூறுகிறார்: “இளம் ஜாக்கும் லெவியும் சண்டைபோட்டுக் கொள்ளும்போது மன்னிப்பு கேட்கும்படி அவர்களிடம் சொல்வோம். உடனே அவர்கள் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் சிடுசிடுப்பதுமில்லை, பழைய விஷயங்களை கிளறுவதுமில்லை, மன்னிப்பதற்காக கோரிக்கைகள் வைப்பதுமில்லை. மீண்டும் நண்பர்களாகிவிடுவார்கள்.” பெரியவர்கள் பின்பற்ற என்னவோர் அருமையான முன்மாதிரி!—கொலோசெயர் 3:13.
கூடுதலாக, சிறு பிள்ளைகள் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறார்கள். (எபிரெயர் 11:6) இயல்பான அவர்களுடைய வெள்ளையுள்ளம் மற்றவர்களுக்குத் தைரியமாகச் சாட்சிகொடுக்கத் தூண்டுகிறது. (2 இராஜாக்கள் 5:2, 3) அவர்களுடைய எளிமையான இருதயப்பூர்வ ஜெபம் கல் நெஞ்சங்களையும் நெகிழ வைக்க முடியும். மேலும் சோதனை வரும்போது அவர்களால் அசாத்திய மனவுறுதியுடன் இருக்க முடியும். சிறு பிள்ளைகள் எவ்வளவு மதிப்புமிக்க பரிசுகள்!—சங்கீதம் 127:4, 5.
அழகை மீண்டும் பெறலாம்
‘சிறு பிள்ளைகளிடம் இருக்கும் அருமையான குணங்களைப் பெரியவர்கள் திரும்பவும் பெறுவது சாத்தியமா?’ என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம். எளிமையான, உறுதியான பதில் ‘ஆம்’ என்பதே! ‘பிள்ளைகளைப்போல் ஆகுங்கள்’ என்ற இயேசுவின் கட்டளை அது நிச்சயமாகவே சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது.—மத்தேயு 18:3.
இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: கலை வேலைப்பாட்டைச் சீரமைக்கும் குழு ஒன்று பெருமதிப்புள்ள அதிமுக்கியமான ஓர் ஓவியத்தைச் சரிசெய்யும் வேலையைச் செய்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குழுவினர் அதில் படிந்திருக்கும் அழுக்கை நீக்குகிறார்கள். அதோடு முன்னால் ஏனோதானோவென்று செய்யப்பட்ட பழுதுபார்த்தலைச் சரிசெய்கிறார்கள். அந்தச் சீரமைப்புக் குழுவினர் மிகப் பொறுமையுடன் முயற்சி செய்த பிறகு, ஓவியத்தின் பளிச்சிடும் வண்ணங்களையும் இயல்பான அழகையும் எல்லாரும் காணமுடிகிறது. அதுபோலவே, யெகோவாவுடைய பரிசுத்த ஆவியின் உதவியுடனும், கிறிஸ்தவ சபையின் அன்பான ஆதரவுடனும் நாம் தொடர்ந்து முயற்சி செய்யும்போது, பிள்ளைகளாக இருக்கையில் நம்மிடம் இயல்பாகவே மலர்ந்த அந்த அருமையான குணங்கள் மீண்டும் துளிர்க்கும்.—எபேசியர் 5:1.
[பக்கம் 9-ன் படம்]
சிறு பிள்ளைகள் இயல்பாகவே மனத்தாழ்மையாக இருக்கிறார்கள்
[பக்கம் 10-ன் படம்]
இளம் பிள்ளைகளுக்குப் பாரபட்சம் கிடையாது, அவர்கள் சீக்கிரமாகவே மன்னித்து மறந்துவிடுகிறார்கள்