யெகோவாவில் நம்பிக்கை வைப்பது ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டப்படுதலுக்கும் வழிநடத்துகிறது
“யெகோவாவில் நம்பிக்கை வைத்து நன்மை செய்; பூமியில் குடியிருந்து, உண்மையைக் கடைப்பிடி.”—சங்கீதம் 37:3, NW.
நாம் யாரில் நம்பிக்கை வைக்கலாம்? மனிதத் தலைவர்களிலா? அபூரண மனிதரில் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமென அவர்களுடைய பதிவு காட்டுகிறது. உலகப்பிரகாரமான ஞானிகளும் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளுகிறார்கள்! “அதிலிருந்து வெளியேற ஒருவரும் வழிகாண முடியாதிருப்பதே தற்போதைய நிலைமையைப் பற்றிய மிக மோசமான நிலை,” என்று ஐரோப்பிய வாணிக பத்திரிகை விஷன் என்பதில் ஒருமுறை சொல்லப்பட்டது. பொருளியல் சரித்திராசிரியர் ராபர்ட் ஹீல்பிரோனர் குறிப்பிட்டதாவது: “வேறு ஒன்றும் நம்மை அரித்துக்கொண்டிருக்கிறது. அது, ஒருவரும் பொறுப்பில் இல்லை என்ற, மற்றும் நம்மை நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் பிரச்னைகளைக் கையாள ஒருவரும் தகுதிபெற்றில்லை என்ற அவநம்பிக்கையாகும்.”
2 மெய்யே, விஞ்ஞானத்தின் பற்பல துறைகளில் அவை எல்லாமே நன்மை பயக்குபவையா? இல்லை, அவ்வாறில்லை. நூலாசிரியர் லூயிஸ் மம்ஃபர்ட் குறிப்பிட்டுக் காட்டினபடி: “இயந்திர நுட்ப மற்றும் விஞ்ஞான முன்னேற்றம் மனிதருக்கு இணையொத்த நன்மைகளை உறுதி தந்தனவென்ற கருத்து . . . இப்பொழுது முற்றிலும் ஏற்கத்தகாததாய்விட்டது. இதை நிரூபிக்கும் ஓர் உதாரணம் அமில மழையாகும், இது ஏரிகளையும் நதிகளையும் மாசுபடுத்துகிறது, இலட்சக்கணக்காய் மரங்களை அழிப்பதற்கேதுவாயிருக்கிறது. மேலும், உலகத்தின் வருந்தத்தக்க நிலை—குற்றச்செயல், வன்முறை, திகிலாட்சி, போதை பொருட்கள், சாராய துர்ப்பழக்கம் ஆகியவற்றிலும் பாலுறவு மூலமாய்க் கடத்தப்பட்ட நோய்களிலும் பெருக்கம், மற்றும் நிலையுறுதியற்ற பொருளாதார நிலை—எல்லாம், மனித தலைவர்களில் நாம் நம்பிக்கை வைப்பது பயனற்றதென சாட்சி பகருகின்றன.
3 கடவுளுடைய வார்த்தை வெகு பொருத்தமாய் நமக்குப் பின்வருமாறு அறிவுரை கொடுக்கிறது: “பிரபுக்களிலும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனிலும் நம்பிக்கை வையாதேயுங்கள். அவன் ஆவி பிரிந்துபோம், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழியும்.” (சங்கீதம் 146:3, 4, தி.மொ.) மனிதரில் அல்லவென்றால், பின் யாரில் நாம் நம்பிக்கை வைப்பது? பின்வருமாறு வாசிக்கிற பிரகாரம், வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சிருஷ்டிகரில் நாம் நம்பிக்கை வைக்கலாம்: “யெகோவாவில் நம்பிக்கை வைத்து, யெகோவாவையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷனோ பாக்கியவான் [ஆசீர்வதிக்கப்பட்டவன், NW]”—எரேமியா 17:7, தி.மொ.
ஏன் யெகோவாவில் நம்பிக்கை வைக்க வேண்டும்?
4 நல்லக் காரணங்களுக்காக நாம் யெகோவாவில் நம்பிக்கை வைக்கலாம். முதலாவதாக, அவருடைய முதன்மையான இயல்புக்குணங்களாகிய அன்பு, ஞானம், நீதி, வல்லமை ஆகியவற்றின் காரணமாகவும் மற்ற அதிசயமான பண்புகளின் காரணமாகவும் நாம் அவரில் நம்பிக்கை வைக்கலாம். அவர் சர்வல்லமையுள்ளவர் என்று அவருடைய வார்த்தை நமக்கு உறுதிகூறுகிறது. அவருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று “சர்வவல்லமையுள்ள தேவன்” என்பதாகும். (ஆதியாகமம் 28:3) நம்பிக்கைக்கு எப்பேர்ப்பட்ட ஆதாரம் இது! ஒருவரும் யெகோவாவை வெற்றிகரமாய் எதிர்க்க முடியாது, ஒருவரும் அவருடைய நோக்கங்களைக் குலைக்க முடியாது. மேலும் அவர் எல்லாம் அறிகிறவர். எதிர்காலம் அவருக்குத் திறந்த புத்தகமாயிருக்க, தொடக்கத்திலிருந்தே முடிவையும் அவர் அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவருடைய அதிசயமான படைப்பு வேலைகளில் காணப்படுகிறபடி சர்வ அறிவும் ஞானமுங்கூட அவரில் நிலைகொண்டிருக்கிறது. அவருடைய நடவடிக்கைகள் எதிலும் அவர் ஒருபோதும் ஒரு தனி பிழையும் செய்ததில்லை. (ஏசாயா 46:10; ரோமர் 11:33-35) இதற்கும் மேலாக, யெகோவா பரிபூரணமாய் நம்பத்தக்கவர், நீதியும் நேர்மையுமுள்ள கடவுள். அவர் பொய்ச் சொல்ல முடியாது. (உபாகமம் 32:4, தி.மொ.; தீத்து 1:2; எபிரெயர் 6:18) எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னலமற்ற அன்பு அவருடைய தலைசிறந்த பண்பாதலால், வெகு பொருத்தமாகவே: “கடவுள் அன்பே,” என்று சொல்லியிருக்கிறது.—1 யோவான் 4:8, 16, தி.மொ.
5 யெகோவா மனிதவர்க்கத்தைக் கையாண்டு நடத்தின முறைகள், அவர் சர்வவல்லமையும், ஞானமும், நீதியும் அன்புமுள்ள நம்பத்தக்கக் கடவுள் என்பதற்கு மேலும் சாட்சி பகருகின்றன. தம்மை நேசித்துத் தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களோடு யெகோவா உடன்படிக்கையையும் அன்புள்ள இரக்கத்தையும் காத்துக்கொள்ளுகிறார் என்று மோசே இஸ்ரவேலருக்கு உறுதிகூறினான். (உபாகமம் 7:9) அதற்கு முன்னால், கடவுள்-பயமுள்ள நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் பெரிய ஜலப்பிரளயத்தினூடே யெகோவா பாதுகாத்து வைத்தார். சோதோம் கொமோரா அக்கினியால் அழிக்கப்பட்டபோது நீதியுள்ள லோத்தையும் அவனுடைய இரண்டு குமாரத்திகளையும் அதிலிருந்து கடவுள் தப்புவித்தார். பின்னால், கடவுள் ஆபிரகாமுக்குத் தாம் வாக்குக்கொடுத்தபடியே இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டுவந்து கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 7:23; 17:8; 19:15-26) மேலும் எரிகிற அக்கினிச் சூளைக்குள் எறியப்பட்ட அந்த மூன்று எபிரெயரையும், அதோடுகூட சிங்கங்களின் கெபிக்குள்ளிருந்து தானியேலையும் யெகோவா விடுவித்தார் அல்லவா?—தானியேல் 3:27; 6:23.
6 யெகோவாவில் நாம் நம்பிக்கை வைக்கலாமென்பது அவருடைய தற்கால சாட்சிகளின் அனுபவங்களாலும் நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கிறது. உதாரணமாக, அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனியில் யெகோவாவின் “இனத்தொகுதியைத்” தான் அடியோடு அழித்துப்போடுவானென செருக்குடன் பேசினான். ஆனால் அதற்குப் பதிலாக ஹிட்லரும் அவனுடைய நாஜி கட்சியும் அடியோடழிக்கப்பட்டனர், சாட்சிகளின் அந்தச் சிறு தொகுதி பல தடவைகள் பெருகி இன்று 1,19,000-த்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையாகியிருக்கிறது. மேலும், காவற்கோபுரத்திலும் அதோடு சேர்ந்த விழித்தெழு! பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்ட சொல்லர்த்தமாய் நூற்றுக்கணக்கான வாழ்க்கை வரலாறுகள், யெகோவா நிச்சயமாகவே நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய கடவுள் என்ற உண்மைக்கு அழுத்தந்திருத்தமான சாட்சி பகருகின்றன.
சிலர் ஏன் யெகோவாவில் நம்பிக்கை வைக்கிறதில்லை
7 எனினும், எவ்வளவு சொற்பப்பேர் இன்று யெகோவாவில் நம்பிக்கை வைக்கின்றனர்! அவருடைய பண்புகளையும் அருஞ்செயல்களையும் பற்றிக் கற்றறிந்திருக்கும் பலருங்கூட அவரில் நம்பிக்கை வைக்கத் தவறுகின்றனர். U.S. கத்தோலிக் (ஜனவரி 1979-ன்) பத்திரிகையில் தோன்றின ஒரு கட்டுரையில் இத்தகைய ஓர் ஆளைப் பற்றிப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பவன் ஓர் ஆளை, அவன் தெரிந்துகொண்ட மதம் என்னவென்று கேட்டபோது, அவன், ‘நான் யெகோவாவின் சார்பில் நின்று பார்ப்பவன் என்று நினைக்கிறேன்,’ என்று பதிலளித்தான். அதை விளக்கமாகச் சொல்லும்படி கேட்டபோது அவன், ‘யெகோவாவின் சாட்சிகள் நம்புவதை .நான் பெரும்பாலும் நம்புகிறேன்—ஆனால் அதில் என்னை உட்படுத்திக்கொள்ள நான் விரும்புகிறதில்லை,’ என்று விளக்கினான்.” அந்தப் பத்திரிகை குறிப்பிட்டதாவது: “யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஒரு சாட்சிக்கு அதில் ஆழ்ந்து உட்படுவதேயல்லாமல் வேறு எந்தத் தெரிவுங் கிடையாது.”
8 ஏன் சிலர் தங்களை உட்படுத்திக்கொள்ள விரும்புகிறதில்லை? ஏனென்றால் அவர்களுக்குச் சரியான இருதய நிலை இல்லை. ஒருவன் “நித்திய ஜீவனடைய சரியானபடி மனம்சாய்ந்”திருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 13:48, NW) விதைக்கிறவனைப் பற்றிய தம்முடைய உவமையில் இயேசு குறிப்பிட்டபடி, பலன் தருகிறவர்கள் சத்திய வசனத்தைச் “செம்மையான நல் இருதயத்துக்”குள் ஏற்கிறார்கள். (லூக்கா 8:15) ஆம், சத்தியம் உண்மையற்ற இருதயமுள்ளோருக்குக் கவர்ச்சிகரமாயில்லை. நேர்மையுள்ள இருதயம் அடிப்படை தேவையாகும். பெருமையுள்ளோருக்கும் கடவுளுடைய வார்த்தையின் சத்தியம் கவர்ச்சியூட்டுவதில்லை. தாழ்மையான மனப்பான்மை வேண்டும். (யாக்கோபு 4:6) மேலும், சுய திருப்தியுள்ளோருக்கும் சுய நீதியுள்ளோருக்கும் சத்தியம் கவர்ச்சியூட்டுவதில்லை. ஆனால் தங்கள் ஆவிக்குரிய தேவையைப் பற்றி உணர்வுடன் இருப்போருக்கும், நீதிக்காகப் பசிதாகங் கொண்டிருப்போருக்கும், இன்று உலகத்தில் நடக்கிற தாங்கள் காணும் எல்லா அருவருப்பான காரியங்களினிமித்தம் பெருமூச்சுவிட்டு அலறுகிறவர்களுக்கும் அது நிச்சயமாகவே கவர்ச்சியூட்டுகிறது.—மத்தேயு 5:3, 6; எசேக்கியேல் 9:4, தி.மொ.
யெகோவாவில் நம்பிக்கை வைப்பது ஒப்புக்கொடுத்தலுக்கு வழிநடத்துகிறது
9 ஒருவன் யெகோவாவில் நம்பிக்கை வைக்கக்கூடியதற்கு முன்னால் அவன் அவரைப் பற்றிக் கேள்விப்பட வேண்டும். ஆனால் “தாங்கள் விசுவாசியாதவரை எப்படித் தொழுதுகொள்ளுவார்கள்? தாங்கள் கேள்விப்படாதவரில் எப்படி விசுவாசம் வைப்பார்கள்? பிரசங்கிக்கிறவனில்லாமல் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” (ரோமர் 10:14, தி.மொ.) யெகோவாவின் ஊழியர்கள் பிரசங்கிக்கையில், நேர்மையான இருதய நிலையுள்ளோர், பூர்வ தெசலோனிக்காவிலிருந்த பலரைப்போல் ஆதரவாய்ப் பிரதிபலிக்கின்றனர். அவர்களைக் குறித்து, பவுல் பின்வருமாறு எழுதினான்: “நீங்கள் தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்[டீர்கள்] . . . அது மெய்யாகவே தேவ வசனந்தான் விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.”—1 தெசலோனிக்கேயர் 2:13.
10 யெகோவாவைப் பற்றிக் கற்றறிந்து, இத்தகைய நல்ல இருதயமுள்ளோர் அவரில் விசுவாசங் காட்டுகிறார்கள். இது இன்றியமையாதது, ஏனெனில் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) மேலும் கடவுளுடைய குமாரனில் விசுவாசங் காட்டுவதும் இன்றியமையாதது. “அவராலேயன்றி வேறொருவராலும் ரட்சிப்பு இல்லை; நாம் ரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.”—ஆம், இயேசு கிறிஸ்துவின், பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.—அப்போஸ்தலர் 4:12.
11 கடவுளுடைய வார்த்தையிலும், யெகோவாவிலும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிலும் நம்பிக்கை வைப்பது, அப்போஸ்தலனாகிய பேதுரு தன் நாளிலிருந்த யூதருக்குக் கொடுத்தப் பின்வரும் அறிவுரைக்குச் செவிகொடுக்க ஒருவனைத் தூண்டும்: “உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். அப்பொழுது ஆண்டவருடைய [யெகோவாவுடைய, NW] சமுகத்திலிருந்து இளைப்பாறுங் காலம் வரும்படி . . . ” (அப்போஸ்தலர் 3:19) யெகோவாவையும் அவர் கட்டளையிடும் தகுதிகளையும் பற்றி அறிவைப் பெற்று வருவதன் மூலம், ஒருவன், தான் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோனாக வேண்டியதே கடவுளுடைய சித்தமென கற்றுக்கொள்கிறான். பேதுரு சொன்னபடி: “இதற்கென்றே அழைக்கப்பட்டீர்கள்; கிறிஸ்துவும் உங்கள் பொருட்டுப் பாடுபட்டு நீங்கள் தமது அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனாரே.” (1 பேதுரு 2:21, தி.மொ.) இதில் உட்பட்டதை இயேசு பின்வருமாறு கூறினபோது விளக்கிக் காட்டினார்: “எவனாவது என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு தன் வாதனைக்குரிய கழுமரத்தை எடுத்துக்கொண்டு என்னைத் தொடர்ந்து பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24, NW) இது, யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பதற்கும் ஒருவன் தன்னைத்தான் ஒப்புக்கொடுத்தலைக் குறிக்கிறது.
ஒப்புக்கொடுத்தல் வெறும் மற்றொரு பொறுப்பேற்றல் அல்ல
12 கிறிஸ்தவ மண்டலத்தில் “பொறுப்பேற்றல்” என்ற இந்தப் பதம் கிறிஸ்தவனாவதைக் குறித்து அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, ஐக்கிய மாகாணங்களின் சுவிசேஷகர்கள் “இயேசுவுக்குத் தனிப்பட்ட பொறுப்பேற்றலை அறிவுறுத்து”வதாக நமக்குச் சொல்லப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கக் குரு “கத்தோலிக்க மதப் பொறுப்பேற்றலைப்” பற்றிப் பேசினார். தான் அரசியலில் தலையிட்டதற்கு எதிர் விளக்கமளித்து வாதாடி, ஒரு கத்தோலிக்கக் குரு ஒருமுறை பின்வருமாறு கூறினார்: “அரசியலுக்குள் சென்றது என்னுடைய (குருத்துவ) கடமைப் பொறுப்பை விரிவுபடுத்தினதாகும்.” வியாபார நிலையங்களும் “எங்கள் வாடிக்கைகாரர்களுக்கு எங்கள் கடமைப்பொறுப்பு” என்று விளம்பரப்படுத்துகின்றன. அப்படியானால் உண்மையில் ஒருவன் ஒரே சமயத்தில் எத்தனையோ பல கடமைப் பொறுப்புகளைக் கொண்டிருக்கக்கூடும்: வியாபார பொறுப்புகள், சமுதாய பொறுப்புகள், அரசியல் பொறுப்புகள், மத பொறுப்புகள் ஆகியவற்றை.
13 எனினும், யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தல் வெறுமென மற்றொரு பொறுப்பேற்றல் அல்ல. ஒரு பொறுப்பேற்றலானது வெறுமென, “எதிர் காலத்தில் ஏதோவொன்றைச் செய்வதற்கு ஏற்கும் ஒப்பந்தம் அல்லது வாக்குறுதியாகும்.” ஆனால் ஒப்புக்கொடுத்தல் “கடவுளுடைய சேவைக்கு அல்லது வணக்கத்துக்கு அல்லது பரிசுத்த உபயோகங்களுக்குத் தன்னைத் தனிப்பட முழுமையாய் ஒப்படைத்துவிடுதலைக்“ குறிக்கிறது. பெரும்பான்மையர், ஒப்புக்கொடுத்தலைப் பார்க்கிலும் பொறுப்பேற்றலைச் செய்வதில் திருப்தியடைகிறார்கள். இது, அவர்களுடைய மதம் வெறுமென ஒரு பின்னணி இசையைப்போல் உண்மையில் இருப்பதற்குக் காரணமாயிருக்கிறது. அது கேட்பதற்கு இன்பமாயிருக்கிறது ஆனால் ஒருவன் உண்மையில் செய்ய விரும்புகிற எதிலும் இடையிட்டுத் தடுக்கிறதில்லை.
14 கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல், அவருடைய சித்தத்தைச் செய்வதை வாழ்க்கையில் எல்லாவற்றையும்விட மிக முக்கிய காரியமாக்குகிறது. இயேசு பின்வருமாறு சொன்னபோது எடுத்துக் குறிப்பிட்ட முதல் மற்றும் எல்லாவற்றிலும் மிகப் பெரிய கட்டளையை ஒருவன் கைக்கொள்வதை இது தேவைப்படுத்துகிறது. “நீ உன் கடவுளாகிய யெகோவாவை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும்.” கடவுளைச் சேவிப்பதன் தனிப்பட்ட இயல்பை இயேசு பின்வருமாறு சொன்னபோது அறிவுறுத்தினார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டை பண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” (மாற்கு 12:30; மத்தேயு 6:24) அப்படியானால் தெளிவாகவே, வெறும் பொறுப்பேற்றல் யெகோவாவுக்கு ஏற்கத்தக்கதாயில்லை.
தண்ணீர் முழுக்காட்டு ஏன்?
15 கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை முழுக்காட்டப்படுவதனால் ஏன் அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும்? யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாயிருக்க ஓர் ஆள் விரும்பினால் இந்த ஓர் அடையாளமே இருக்கிறது. தான் கிறிஸ்தவனாக, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோனாக அறியப்பட அவன் விரும்பினால் இதையே செய்ய வேண்டும். யெகோவாவின் “உண்மையுள்ள சாட்சியான,” இயேசு, இதற்கு மாதிரியை வைத்தார், எப்படியெனில் அவர் யோர்தான் நதியில் முழுக்காட்டப்பட்டார். மனத்திரும்பின பாவிகளையே யோவான் முழுக்காட்டிக் கொண்டிருந்ததால் இயேசு முழுக்காட்டப்பட விரும்பின காரணத்தை அவன் விளங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனால் இயேசு அவனிடம்: “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது,” என்று சொன்னார். (வெளிப்படுத்துதல் 1:5; மத்தேயு 3:13-17) இவ்வாறு கடவுளுடைய குமாரன் யெகோவாவுக்குத் தம்மை முன்வந்து அளிப்பதனால் தம்முடைய விசுவாசத்தை யாவரறிய தெரிவித்தார், தெய்வீகச் சித்தத்தைச் செய்ய விரும்பும் யாவருக்கும் முன்மாதிரியை வைத்தார்.
16 இதற்கும் மேலாக, பரலோகங்களிலிருக்கும் தம்முடைய தகப்பனிடம் திரும்பிச் செல்வதற்குச் சற்று முன்பு, இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குப் பின்வருமாறு கட்டளையிட்டார்: “ஆகையால் போய் சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்குங்கள், பிதாவின் குமாரனின் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.” (மத்தேயு 28:19, 20, NW) இயேசுவின் சீஷர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்களென்று அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்திலுள்ள பதிவு காட்டுகிறது.—அப்போஸ்தலர் 2:40, 41; 8:12; 9:17, 18; 19:5.
17 இவர்கள் எவ்வாறு பாப்டிஸம் கொடுக்கப்பட்டார்கள்? கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகள் பெரும் பான்மையானவற்றில் வழக்கமாயிருப்பதுபோல் வெறுமென அவர்கள்மேல் தண்ணீர் தெளிப்பதன் மூலமா? இல்லவே இல்லை! இயேசு பாப்டிஸம் கொடுக்கப்பட்ட பின்பு ‘ஜலத்திலிருந்து கரையேறினார்.’ இது அவர் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டாரென தெளிவாய்க் காட்டுகிறது. (மாற்கு 1:9, 10) உண்மையில், வேறு எதுவும் பாப்டிஸமாக இருக்க முடியாது, ஏனெனில் “பாப்டைஸ்” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல் “முழுக்கு, அமிழ்த்து” என்று அர்த்தங்கொள்கிறது.—அப்போஸ்தலர் 8:36-39.
18 இத்தகைய முழுக்காட்டு ஒப்புக்கொடுத்தலின் மிகப் பொருத்தமான அடையாளமாகும். தண்ணீருக்குள் செல்வது ஒருவன் தன் முந்தின நடத்தைப் போக்குக்கு மரிப்பதை நன்றாய்ச் சித்தரித்துக் காட்டுகிறது. அவனைத் தண்ணீரிலிருந்து வெளியே தூக்கிவிடுவது அவன் புதிய வாழ்க்கை முறைக்கு எழுப்பப்படுவதைப் படமாகக் குறிக்கிறது. திருமண சடங்குமுறை தாங்கள் மணமாகியுள்ள நிலையை மணமகளிலும் மணமகனிலும் அறிவுறுத்த உதவிசெய்வது போலவே, சாட்சிகளுக்கு முன்னிலையில் செய்யப்படும் தண்ணீர் முழுக்காட்டும் முழுக்காட்டப்படுகிறவர்களில் நிலையான பதிவை மனதில் உண்டுபண்ணலாம். இதைக் குறித்துச் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவன் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பது முழுக்காட்டப்படும் இந்தச் செயலால், அவனுடைய வாழ்க்கையில் மிக அதிக முக்கியமான நிகழ்ச்சியாக, அவனுடைய மனதிலும் நினைவிலும் மறக்கமுடியாதபடி நிலையாய் ஊன்றவைக்கப்பட்டிருக்க வேண்டும். இது, தன்னைத்தான் சேவிப்பதை விட்டு யெகோவா தேவனைச் சேவிக்கத் தொடங்கும் திரும்புகட்டத்தைக் குறிக்கிறது.
19 தண்ணீர் முழுக்காட்டு, யெகோவாவிடம் நல் மனச்சாட்சியைப் பெறுவதற்கு முன்வரும் தேவையாயிருக்கிற இந்த உண்மையை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இது 1 பேதுரு 3:21-ல் தெளிவாக்கப்பட்டிருக்கிறது, அதில் சொல்லியிருப்பதாவது: “அது ஒப்பனையாகக் குறிக்கும் ஞானஸ்நானமானது [முழுக்காட்டுதல்] இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் உங்களையும் இரட்சிக்கிறது. அது மாம்ச அழுக்கை நீக்குவதல்ல, நல் மனசசாட்சியைக் கடவுளிடம் நாடி வேண்டிக்கொள்வதேயாகும்.”—தி.மொ.
எந்த வயதில் முழுக்காட்டப்படுவது?
20 தம்முடைய சீஷராக்கப்பட்டவர்களே முழுக்காட்டப்பட வேண்டுமென மத்தேயு 28:19, 20-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. ஆகவே, குழந்தையோ சிறு பிள்ளையோ பாப்டிஸம் கொடுக்கப்படுவதற்குரிய வேதப்பூர்வ தகுதிகளைப் பெற்றிருக்க முடியாதென்பது தெளிவாயிருக்கிறது. ஒரு குழந்தை கடவுளுடைய வார்த்தையிலும், சிருஷ்டிகராகிய கடவுளிலும், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவிலும் விசுவாசங் காட்ட முடியாது. பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி என்று குழந்தை விளங்கிக்கொள்ள முடியாது; கடந்த கால பாவங்களை விட்டு மனந்திரும்பி கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி பக்தியுள்ள பொருத்தனை செய்யவும் முடியாது.
21 ஆனால் யெகோவாவின் ஜனங்களுக்குள் சிலர் அடுத்த மீறிய நிலைக்குச் சென்றிருப்பதுபோல் தோன்றுகிறது. கிறிஸ்தவ பெற்றோர் பலர், முழுக்காட்டுதலைப் பற்றிய பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாகத் தங்கள் பிள்ளைகள் 18, 19 வயதாகும் வரையில் காத்திருக்க விடுகின்றனர். இளைஞர் தாங்களே தங்கள் சொந்தமாய் முயற்சியெடுத்து முன்வந்து தகுதிவாய்ந்த ஒப்புக்கொடுத்தலைச் செய்வதைக் குறித்து நாம் பல தடவைகள் கேள்விப்படுகிறோம். உதாரணமாக, ஒரு மூப்பரின் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட மகன் தான் முழுக்காட்டப்படும்படி உள்ளப்பூர்வமாய் விரும்பினான். ஆகவே அவனுடைய தகப்பன், வேறு மூன்று மூப்பர்கள் அந்த இளைஞனுடன் முழுக்காட்டப்படுவதற்கு எண்ணமிட்டுக்கொண்டிருப்போருக்காகத் திட்டமிடப்பட்ட கேள்விகளைக் கலந்தாலோசிக்கும்படி செய்தார்.a அவன் வெகு இளைஞனாக இருந்தபோதிலும், யெகோவாவின் நியமிக்கப்பட்ட ஊழியனாக முழுக்காட்டப்பட தகுதிபெற்றிருந்தான் என்பதே அவர்கள் செய்த முடிவு. ஏன், சமீபத்தில் பஹாமாஸில், முழுநேர ஊழியர்களின் மகளான முழுக்காட்டுதல் பெற்றிருந்த பத்து வயது சிறுமி பயனியர் சேவைப் பள்ளிக்கு வந்திருந்தாள்!
22 இதன் சம்பந்தமாகப் பெற்றோர் சிலர் தங்கள் கடமையில் ஓரளவு குறைபடுவதாகத் தோன்றுகிறது. தங்கள் பிள்ளைகளில் கிறிஸ்தவ பண்பியல்புகளைக் கட்டியமைக்க எந்த அளவுக்கு அவர்கள் ‘நெருப்பினால் பாதிக்கப்படாதப் பொருட்களைப்’ பயன்படுத்துகிறார்கள்? (1 கொரிந்தியர் 3:10-15, NW) இப்படிச் செய்வதற்கு, முதலாவது, யெகோவாவின் தூய்மையான வணக்கம் பெற்றோரின் வாழ்க்கையில் எல்லாவற்றையும்விட மிக முக்கிய காரியமாக இருக்க வேண்டும். அதோடுகூட, உபாகமம் 6:6, 7-லும் எபேசியர் 6:4-லும் கொடுக்கப்பட்ட சிறந்த அறிவுரைக்குப் பெற்றோர் செவிகொடுக்க வேண்டும். இதன் பயன், தங்கள் பிள்ளைகள் மீறிய மிக இளமையிலேயே முழுக்காட்டப்படுவதை பெற்றோர் தடுத்து வைக்க ஒருவேளை அவசியம் ஏற்படுமே தவிர, பின்னால் வளர்ந்த பின்பு கற்பிக்கத் தேவைப்படுத்துவதாயிராது.
23 ஒருவன், ஒப்புக்கொடுத்தலின் மூலமும் தண்ணீர் முழுக்காட்டின் மூலமும் யெகோவாவில் தன் நம்பிக்கையை ஒருமுறை மெய்பித்துக் காட்டினபின், அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதில் உட்படுவதை மதித்துணர, “யெகோவாவின் நம்பிக்கையுள்ள உடன் வேலையாட்களாகச் சேவித்தல்” என்ற பின்தொடரும் கட்டுரை நமக்கு உதவி செய்யும். (w88 3/15)
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட விரும்பும் எல்லாரும் விடை கொடுக்க வேண்டிய கேள்விகளின் தொகுதி நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன. முழுக்காட்டுதலுக்கு ஆயத்தம் செய்வோருக்கு அது கிடைக்கச் செய்யப்படும்.
நீங்கள் எவ்வாறு விடையளிப்பீர்கள்?
◻ மனிதரில் நம் நம்பிக்கை வைக்கும் முட்டாள்தனத்தை என்ன உண்மை நிகழ்ச்சிகள் விளக்கமாகச் தெரியச் செய்கின்றன?
◻ யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு அவருடைய பண்பியல்புகளும் மனிதரை நடத்தின முறைகளும் ஏன் நமக்கு நல்லக் காரணங்களை அளிக்கின்றன?
◻ யெகோவாவில் நம்பிக்கை வைப்பது ஏன் வெறும் பொறுப்பேற்றலை அல்ல ஒப்புக்கொடுத்தலைத் தேவைப்படுத்துகிறது?
◻ இளம் வயதில் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க நாடும் ஆவலைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் எவ்வாறு படிப்படியாய்ப் புகட்டலாம்?
[கேள்விகள்]
1. மனிதத் தலைவர்களில் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமென உலகப்பிரகாரமான ஞானிகளின் என்ன சாட்சியம் காட்டுகிறது?
2. நவீன விஞ்ஞானத்தின் நன்மைகளைப் பற்றி என்ன சொல்லலாம்?
3. நாம் எங்கே நம் நம்பிக்கையை வைக்க வேண்டும் என்பதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை என்ன அறிவுரை கொடுக்கிறது?
4. யெகோவாவின் முதன்மையான இயல்புக் குணங்கள் யாவை? இவை அவரில் நாம் நம்பிக்கை வைப்பதற்கு நல்லக் காரணங்களை நமக்கு எவ்வாறு கொடுக்கின்றன?
5. யெகோவா நம்பத்தக்கவரென சாட்சி பகரும் என்ன பதிவு கடவுளுடைய வார்த்தையில் அடங்கியிருக்கிறது?
6. யெகோவாவில் நம்பிக்கை வைப்பது தவறான இடத்தில் வைக்கப்பட்டில்லையென தற்கால என்ன அத்தாட்சி நமக்கு இருக்கிறது?
7. தான் ‘யெகோவாவின் சார்பில் நின்று பார்ப்பவன்’ என ஓர் ஆள் ஏன் சொன்னான்?
8. என்ன அடிப்படையான பண்புகள் ஒருவனை யெகோவாவின் சேவையில் தன்னை உட்படுத்திக்கொள்ள விரும்பும்படி செய்கின்றன?
9, 10. (எ) ஒருவன் யெகோவாவில் நம்பிக்கை வைக்கக்கூடியதற்கு முன்னால் என்ன வேண்டியதாயிருக்கிறது? நேர்மையான இருதய நிலையுள்ளோர் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்? (பி) இத்தகைய ஆட்கள் யாரில் விசுவாசங் காட்டுகிறார்கள்?
11. யெகோவாவில் நம்பிக்கை வைப்பது அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த எந்த அறிவுரையைப் பின்பற்றும்படி ஓர் ஆளைச் செய்விக்கும்?
12. “பொறுப்பேற்றல்” என்று பதம் கிறிஸ்தவ மண்டலத்தில் அடிக்கடி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
13. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
14. வெறும் பொறுப்பேற்றல் யெகோவா தேவனுக்கு ஏன் ஏற்கத்தக்கதாயில்லை?
15. கடவுளில் கொண்டுள்ள விசுவாசத்தை யாவரறிய தெரிவிப்பதைக் குறித்ததில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
16. முழுக்காட்டுதலைக் குறித்து இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு என்ன கட்டளை கொடுத்தார்? அவருடைய சீஷர்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்களென எது காட்டுகிறது?
17. வெறுமென நீரைத் தெளிப்பது ஏன் ஒப்புக்கொள்ளத் தக்க பாப்டிஸமாக இருக்க முடியாது?
18. முழுக்காட்டுதல் ஏன் ஒருவன் தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலின் மிகப் பொருத்தமான அடையாளம்?
19. முழுக்காட்டப்படுவதற்கு இன்னுமொரு காரணம் என்ன?
20. பாப்டிஸமுக்குக் குழந்தைகள் ஏன் தகுதிபெற முடியாது?
21. இளைஞர் முழுக்காட்டப்படுவது ஏற்றதா?
22. பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் கிறிஸ்தவ பண்பியல்புகளைக் கட்டியமைக்கையில், தங்கள் இளைஞர் என்ன செய்வதை அவர்கள் எதிர்பார்க்கலாம்?
23. ஒருவன் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட நிலையை ஒருமுறை அடைந்தபின், வேறு என்ன தேவைப்படுகிறது?
[பக்கம் 16ன் படம்]
மேன்மையான விடுவிப்பவராக யெகோவாவில் நாம் நம்பிக்கை வைக்கலாம்