கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை மதியுங்கள்
“கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்.”—மாற். 10:9.
1, 2. என்ன செய்யும்படி எபிரெயர் 13:4 நம்மை உற்சாகப்படுத்துகிறது?
நாம் எல்லாருமே யெகோவாவுக்கு மதிப்பு மரியாதை கொடுக்க ஆசைப்படுகிறோம். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது! நாம் அவரை மதிக்கும்போது பதிலுக்கு அவரும் நம்மை மதிப்பதாக வாக்குக் கொடுக்கிறார். (1 சா. 2:30; நீதி. 3:9; வெளி. 4:11) அரசாங்க அதிகாரிகள் உட்பட, மற்ற எல்லா மக்களையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (ரோ. 12:10; 13:7) ஆனால், இன்னொரு ஏற்பாட்டுக்கும் நாம் கண்டிப்பாக மதிப்புக் கொடுக்க வேண்டும். அதுதான் திருமணம் என்ற ஏற்பாடு!
2 “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 13:4) திருமணத்தைப் பற்றிய பொதுவான ஒரு கருத்தை பவுல் சொல்லவில்லை. திருமண ஏற்பாட்டை மதிக்க வேண்டும், அதாவது அதை பொக்கிஷமாக நினைக்க வேண்டும், என்ற அறிவுரையை அவர் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஏற்பாட்டை நீங்களும் பொக்கிஷமாக நினைக்கிறீர்களா? அதுவும், நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண பந்தத்தைப் பொக்கிஷமாக நினைக்கிறீர்களா?
3. திருமணத்தைப் பற்றிய என்ன முக்கியமான ஆலோசனையை இயேசு கொடுத்தார்? (ஆரம்பப் படம்)
3 திருமண ஏற்பாட்டை பொக்கிஷமாக நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியைப் பின்பற்றுகிறீர்கள்! அதாவது, இயேசுவைப் பின்பற்றுகிறீர்கள்! ஏனென்றால், அவர் திருமண ஏற்பாட்டை மதித்தார். விவாகரத்தைப் பற்றிப் பரிசேயர்கள் அவரிடம் கேட்டபோது, முதன்முதலில் நடந்த திருமணத்தைப் பற்றிக் கடவுள் என்ன சொன்னாரோ அதை அவர்களிடம் சொன்னார். “இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுப் பிரிந்திருப்பான்; அவனும் அவன் மனைவியும் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று சொன்னார். அதோடு, “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்றும் சொன்னார்.—மாற்கு 10:2-12-ஐ வாசியுங்கள்; ஆதி. 2:24.
4. திருமண பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்பட்டார்?
4 திருமண ஏற்பாட்டை யெகோவாதான் ஆரம்பித்து வைத்தார் என்பதையும், அது ஒரு நிரந்தர பந்தம் என்பதையும் இயேசு ஒத்துக்கொண்டது இதிலிருந்து தெரிகிறது. முதல் கல்யாணத்தைக் கடவுள் செய்துவைத்தபோது, விரும்பினால் விவாகரத்து செய்துகொள்ளும்படி ஆதாம் ஏவாளிடம் அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் ‘இரண்டு பேருமே’ திருமண பந்தத்தில் என்றென்றும் இணைந்திருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்.
திருமண பந்தத்தில் தற்காலிக மாற்றங்களை ஏற்படுத்துபவை
5. திருமண பந்தத்தை மரணம் எப்படிப் பாதிக்கிறது?
5 ஆதாம் பாவம் செய்தபோது நிறைய விஷயங்கள் மாறின; அதில் ஒன்றுதான் மனிதர்களுக்கு ஏற்படுகிற மரணம். இது திருமண பந்தத்தைப் பாதிக்கிறது. மரணம், திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது என்றும், உயிரோடு இருக்கும் துணைக்கு மறுமணம் செய்துகொள்ளும் சுதந்திரம் இருக்கிறது என்றும் அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களிடம் சொன்னார்.—ரோ. 7:1-3.
6. திருமண ஏற்பாட்டைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது?
6 இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டத்தில் திருமணத்தைப் பற்றிய விவரங்கள் இருந்தன. உதாரணத்துக்கு, ஒன்றுக்கும் அதிகமான பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள ஓர் ஆணுக்கு அனுமதி இருந்தது. இஸ்ரவேலர்களுக்கு இந்தச் சட்டம் கொடுக்கப்பட்டதற்கு முன்பாகவே இந்த வழக்கம் இருந்துவந்தது. அதேசமயத்தில், பெண்களும் பிள்ளைகளும் தவறாக நடத்தப்படாதபடி இந்தச் சட்டம் அவர்களைப் பாதுகாத்தது. எப்படி? ஓர் இஸ்ரவேல ஆண், அடிமையாக இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்த பிறகு, இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்தால், தன் முதல் மனைவியை முன்பு கவனித்துக்கொண்டது போலவே இப்போதும் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. தன் முதல் மனைவியை அவர் தொடர்ந்து பாதுகாக்கவும், அவள் மீது அக்கறை காட்டவும் வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்தார். (யாத். 21:9, 10) இப்போது நாம் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது இல்லை. இருந்தாலும், திருமண ஏற்பாட்டை கடவுள் பொக்கிஷமாக நினைக்கிறார் என்பதை அது நமக்குச் சொல்லித்தருகிறது. திருமண ஏற்பாட்டை மதிக்க இது நமக்கு உதவுகிறது.
7, 8. (அ) உபாகமம் 24:1-ன்படி விவாகரத்தைப் பற்றித் திருச்சட்டம் என்ன சொன்னது? (ஆ) விவாகரத்தை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?
7 விவாகரத்தைப் பற்றித் திருச்சட்டம் என்ன சொன்னது? கணவனும் மனைவியும் விவாகரத்து செய்துகொள்ள வேண்டும் என்று யெகோவா ஒருபோதும் விரும்பவில்லை என்றாலும், தன் மனைவி “செய்கிற ஏதோவொரு கேவலமான காரியத்தை” ஒரு கணவர் பார்த்தால், அவளை விவாகரத்து செய்ய திருச்சட்டம் அனுமதி கொடுத்தது. (உபாகமம் 24:1-ஐ வாசியுங்கள்.) ‘கேவலமான காரியத்தில்’ எவையெல்லாம் அடங்குகின்றன என்று திருச்சட்டம் விலாவாரியாகச் சொல்லவில்லை. ஆனால், அது ஒரு சாதாரண தவறாக இருந்திருக்காது; கண்டிப்பாக ஒரு பெரிய பாவமாகவோ வெட்கக்கேடான காரியமாகவோதான் இருந்திருக்க வேண்டும். (உபா. 23:14) ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், இயேசுவின் காலத்தில் இருந்த யூதர்களில் நிறைய பேர் தங்களுடைய மனைவிகளை ‘எந்தக் காரணத்துக்கு வேண்டுமானாலும் விவாகரத்து செய்வது’ வழக்கமாக இருந்தது. (மத். 19:3) இப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள நாம் நிச்சயம் விரும்ப மாட்டோம்.
8 மல்கியா தீர்க்கதரிசியின் காலத்தில், முதல் மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாகவே ஆகியிருந்தது. ஒருவேளை, யெகோவாவை வணங்காத இளம் பெண்ணை கல்யாணம் செய்வதற்காக அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், விவாகரத்தைப் பற்றிய தன்னுடைய எண்ணத்தை மல்கியாவின் மூலம் யெகோவா தெளிவாகச் சொன்னார். “விவாகரத்தை நான் வெறுக்கிறேன்” என்று அவர் சொன்னார். (மல். 2:14-16) “மனிதன் . . . தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று யெகோவா என்றைக்குச் சொன்னாரோ, அன்று முதல் திருமணத்தைப் பற்றிய அவருடைய கண்ணோட்டம் மாறவே இல்லை. (ஆதி. 2:24) “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று சொன்னதன் மூலம் திருமணத்தைப் பற்றிய தன்னுடைய அப்பாவின் கண்ணோட்டத்தை இயேசுவும் ஆதரித்தார்.—மத். 19:6.
விவாகரத்து செய்வதற்கு ஒரே நியாயமான காரணம்
9. மாற்கு 10:11, 12-ல் சொல்லப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?
9 ‘அப்படினா, கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்றதுக்கோ மறுமணம் செய்றதுக்கோ ஏதாவது நியாயமான காரணம் இருக்கா?’ என்று ஒருவர் யோசிக்கலாம். இயேசு என்ன சொன்னார் என்று பாருங்கள்: “மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்; இப்படி, தன் மனைவிக்குத் துரோகம் செய்கிறான். கணவனை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொள்கிறவள் முறைகேடான உறவுகொள்கிறாள்.” (மாற். 10:11, 12; லூக். 16:18) திருமண ஏற்பாட்டை இயேசு மதித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது; மற்றவர்களும் அதை மதிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தனக்கு உண்மையாக இருக்கிற மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்ளும் ஒரு நபர் முறைகேடான உறவுகொள்கிறான். தனக்கு உண்மையாக இருக்கிற கணவனை விவாகரத்து செய்கிற பெண்ணுடைய விஷயத்திலும் இதுதான் உண்மை. ஏனென்றால், விவாகரத்து மட்டுமே விவாகத்தை ‘ரத்து’ செய்துவிடாது! இன்னமும் அவர்களை ‘ஒரே உடலாகத்தான்’ கடவுள் பார்க்கிறார். தவறு செய்யாத தன் மனைவியை ஒரு கணவன் விவாகரத்து செய்துவிட்டால், அவள் முறைகேடான உறவில் விழுந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்று இயேசு சொன்னார். எப்படி? அன்றெல்லாம், விவாகரத்தான ஒரு பெண், தன்னுடைய பொருளாதாரத் தேவைகளுக்காக மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் செய்யப்படும் மறுமணம், முறைகேடான உறவுகொள்வதற்குச் சமம்!
10. தன்னுடைய துணையை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்ள ஒரு கிறிஸ்தவருக்கு இருக்கும் ஒரே காரணம் என்ன?
10 விவாகரத்து செய்வதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருப்பதாக இயேசு சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டை தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்” என்று அவர் சொன்னார். (மத். 19:9) இதே விஷயத்தை மலைப் பிரசங்கத்திலும் சொன்னார். (மத். 5:31, 32) இரண்டு சமயங்களிலும் ‘பாலியல் முறைகேட்டைத்தான்’ குறிப்பிட்டார். பாலியல் முறைகேட்டில், முறைகேடான உறவு... விபச்சாரம்... கல்யாணமாகாத இரண்டு பேர் வைத்துக்கொள்ளும் பாலியல் உறவு... ஓரினச்சேர்க்கை... மிருகப்புணர்ச்சி... போன்ற பாவங்கள் அடங்கும். தன்னுடைய கணவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால், அவரை விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என்று மனைவி முடிவெடுக்கலாம். அப்படி அவள் விவாகரத்து செய்துவிட்டால், இனிமேலும் அவர்களைத் தம்பதிகளாகக் கடவுள் பார்க்க மாட்டார்.
11. பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட தன்னுடைய துணையை விவாகரத்து செய்யாமல் இருக்க ஒரு கிறிஸ்தவர் ஏன் முடிவெடுக்கலாம்?
11 கல்யாணமான ஒருவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால், தவறு செய்யாத அவருடைய துணை, கண்டிப்பாக விவாகரத்து செய்ய வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. உதாரணத்துக்கு, தன் கணவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும், அவரோடு சேர்ந்து வாழ ஒரு மனைவி விரும்பலாம். ஏன்? அவள் தன் கணவரை இன்னமும் நேசிக்கலாம்; மன்னிக்கவும் அவளுக்கு மனம் இருக்கலாம். அதோடு, திருமண உறவில் ஏற்பட்ட விரிசலை தன் கணவரோடு சேர்ந்து சரிசெய்ய அவள் ஆசைப்படலாம். அதேசமயத்தில், அவள் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்யாமல் இருந்தால், சில கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, அவளுடைய பொருளாதார மற்றும் பாலியல் தேவைகளை அவள் எப்படிப் பூர்த்தி செய்துகொள்வாள்? தனிமை உணர்வு அவளை வாட்டுமா? விவாகரத்து அவளுடைய பிள்ளைகளை எப்படிப் பாதிக்கும்? அவர்களைச் சத்தியத்தில் வளர்ப்பது கஷ்டமாக இருக்குமா? (1 கொ. 7:14) விவாகரத்து செய்ய நினைக்கும் ஒருவர் பல கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
12, 13. (அ) ஓசியாவின் கல்யாண வாழ்க்கை என்ன ஆனது? (ஆ) கோமரை ஓசியா ஏன் மறுபடியும் ஏற்றுக்கொண்டார், அவருடைய கல்யாண வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 ஓசியா தீர்க்கதரிசியின் உதாரணம், திருமணத்தைக் கடவுள் எப்படிப் பார்க்கிறார் என்று சொல்லித்தருகிறது. “விபச்சாரம் செய்யப்போகிற ஒரு பெண்ணை” கல்யாணம் செய்யும்படி ஓசியாவிடம் யெகோவா சொன்னார். ‘விபச்சாரத்தின் மூலம் அவளுக்குப் பிள்ளைகளும் பிறக்கவிருந்தார்கள்.’ அந்தப் பெண்ணின் பெயர் கோமர். ஓசியாவுக்கு ஒரு மகனை அவள் பெற்றுக்கொடுத்தாள். (ஓசி. 1:2, 3) பிற்பாடு, இன்னொரு நபரின் மூலம் ஒரு மகளையும் மகனையும் பெற்றெடுத்தாள். ஒன்றுக்கும் அதிகமான தடவை அவள் முறைகேடான உறவில் ஈடுபட்டிருக்கிறாள்! இருந்தாலும், அவளை விவாகரத்து செய்யாமல் ஓசியா அவளோடு சேர்ந்து வாழ்ந்தார். காலப்போக்கில், அவள் ஓசியாவை விட்டுவிட்டு இன்னொருவருக்கு அடிமையானாள். அப்படியிருந்தும், ஓசியா அவளைக் கூட்டிக்கொண்டு வந்தார். (ஓசி. 3:1, 2) இஸ்ரவேல் தேசம் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் மற்ற தெய்வங்களைக் கும்பிட்டபோது, அவர்களை யெகோவா எப்படித் திரும்பத் திரும்ப மன்னித்தார் என்பதைப் புரியவைக்க அவர் ஓசியாவைப் பயன்படுத்தினார். ஓசியாவின் கல்யாண வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
13 கல்யாணமான ஒரு கிறிஸ்தவர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டால், தவறு செய்யாத அவருடைய துணை ஒரு முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. தவறு செய்த துணையை விவாகரத்து செய்ய நியாயமான காரணம் இருப்பதாகவும், மறுமணம் செய்ய அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவும் இயேசு சொன்னார். அதேசமயத்தில், ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட தன்னுடைய துணையை மன்னிக்க விரும்பினால், அதில் எந்தத் தவறும் இல்லை. ஏன் அப்படிச் சொல்கிறோம்? கோமரோடு ஓசியா மறுபடியும் சேர்ந்து வாழ்ந்தாரே! அவள் திரும்பிவந்த பிறகு, இன்னொரு ஆணோடு பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது என்று ஓசியா அவளிடம் சொன்னார். கொஞ்சக் காலத்துக்கு, கோமரோடு அவர் பாலியல் ‘உறவு வைத்துக்கொள்ளவில்லை.’ (ஓசி. 3:3) ஆனால் காலப்போக்கில், அவளோடு ஓசியா பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பார். இது, இஸ்ரவேலர்களை யெகோவா மறுபடியும் ஏற்றுக்கொண்டு அவர்களோடு தொடர்ந்து ஒரு பந்தத்தைக் காத்துக்கொள்ள விரும்பியதைக் காட்டியது. (ஓசி. 1:11; 3:3-5) திருமண பந்தத்தைப் பற்றி இது நமக்கு என்ன பாடத்தைச் சொல்லித்தருகிறது? தவறு செய்யாத துணை, தனக்குத் துரோகம் செய்த துணையோடு உடலுறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தால், அவரை அவர் மன்னித்துவிட்டார் என்று அர்த்தம். (1 கொ. 7:3, 5) அதற்குப் பிறகு, விவாகரத்து செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. திருமண பந்தத்தைக் கடவுள் எப்படிப் பார்க்கிறாரோ, அதேபோல் பார்க்க ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும்.
பெரிய பெரிய பிரச்சினைகள் மத்தியிலும் திருமண பந்தத்துக்கு மதிப்புக் கொடுங்கள்
14. ஒன்று கொரிந்தியர் 7:10, 11 சொல்கிறபடி கல்யாண வாழ்க்கையில் என்ன நடக்கலாம்?
14 யெகோவாவும் இயேசுவும் திருமண ஏற்பாட்டை எப்படி உயர்வாக நினைக்கிறார்களோ, அதேபோல் எல்லா கிறிஸ்தவர்களும் நினைக்க வேண்டும். நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், நம்மில் சிலர் அப்படிச் செய்யத் தவறலாம். (ரோ. 7:18-23) முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலருடைய கல்யாண வாழ்க்கையிலும் பெரிய பெரிய பிரச்சினைகள் வந்தன. “மனைவி தன்னுடைய கணவனைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது” என்று பவுல் எழுதினார். இருந்தாலும், சிலசமயங்களில் அப்படி நடந்தது.—1 கொரிந்தியர் 7:10, 11-ஐ வாசியுங்கள்.
15, 16. (அ) கல்யாண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது தம்பதிகளுக்கு என்ன குறிக்கோள் இருக்க வேண்டும், ஏன்? (ஆ) சத்தியத்தில் இல்லாத துணையோடு வாழும் ஒரு கிறிஸ்தவருக்கு, இந்த அறிவுரை எப்படிப் பொருந்துகிறது?
15 என்னென்ன காரணங்களால் தம்பதிகள் பிரிந்துபோனார்கள் என்று பவுல் சொல்லவில்லை. ஆனால், பாலியல் முறைகேடு நடந்ததால் அவர்கள் பிரிந்துபோகவில்லை என்று நமக்குத் தெரியும். ஏனென்றால், அப்படிப்பட்ட தவறை ஒரு கணவர் செய்திருந்தால், அவரை விவாகரத்து செய்வதற்கும் மறுமணம் செய்வதற்கும் அவருடைய மனைவிக்கு நியாயமான காரணம் இருந்திருக்கும். ஆனால் பவுல் என்ன எழுதினார்? ஒரு மனைவி “பிரிந்துபோனாலும், அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும் அல்லது மறுபடியும் தன்னுடைய கணவனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும்” என்றுதான் எழுதினார். ஏனென்றால், அவர்களை இன்னும் தம்பதிகளாகத்தான் கடவுள் பார்க்கிறார். ஒரு தம்பதிக்கு இடையே எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சரி, பாலியல் முறைகேடு நடக்காதவரைக்கும், அவர்கள் இரண்டு பேரும் சமரசம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, பிரச்சினையைச் சரி செய்துகொண்டு சேர்ந்து வாழ முயற்சி செய்ய வேண்டும் என்றுதான் பவுல் சொன்னார். ஒருவேளை, அவர்கள் மூப்பர்களிடம் உதவி கேட்கலாம். மூப்பர்கள் ஒருபக்கமாக சாய மாட்டார்கள்; பைபிளிலிருந்து நடைமுறையான அறிவுரையைக் கொடுப்பார்கள்.
16 சத்தியத்தில் இல்லாத துணையோடு வாழ்பவருக்கு நிறைய பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதற்காக, அவர்கள் பிரிந்துபோகலாமா? நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், விவாகரத்து செய்வதற்கான ஒரே நியாயமான காரணம் பாலியல் முறைகேடு மட்டும்தான் என்று பைபிள் சொல்கிறது. அதேசமயத்தில், என்னென்ன காரணங்களுக்காக ஒரு தம்பதி பிரிந்துபோகலாம் என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், “ஒரு சகோதரியின் கணவன் விசுவாசியாக இல்லாவிட்டாலும் அவன் அவளோடு வாழச் சம்மதித்தால், அவள் அவனைவிட்டுப் பிரியக் கூடாது” என்று பவுல் எழுதினார். (1 கொ. 7:12, 13) அவர் சொன்னது இன்றும் பொருந்துகிறது.
17, 18. மோசமான பிரச்சினைகள் வந்தபோதிலும் தங்கள் துணையோடு சேர்ந்து வாழ சில கிறிஸ்தவர்கள் ஏன் முடிவெடுத்திருக்கிறார்கள்?
17 “விசுவாசியாக இல்லாத கணவர்” தன் மனைவியோடு “சேர்ந்து வாழ” தனக்குச் சம்மதமில்லை என்பதை பல வழிகளில் காட்டலாம். உதாரணத்துக்கு, தன் உடல்நலமும் உயிரும் ஆபத்தில் இருப்பதாக ஒரு மனைவி நினைக்குமளவுக்கு அந்தக் கணவர் அவளைப் பயங்கரமாக அடித்து உதைக்கலாம். பொருளாதார ரீதியில் அவர் தன் மனைவியை கவனிக்காமல் போகலாம்; அதோடு, கடவுளை வணங்க முடியாதபடி செய்யலாம். தன் கணவர் என்ன சொன்னாலும் சரி, அவர் இப்படியெல்லாம் செய்வதால், தன்னோடு “சேர்ந்து வாழ” அவருக்குச் சம்மதம் இல்லை என்ற முடிவுக்கு கிறிஸ்தவ மனைவி வரலாம். அதனால், அவரை விட்டுப் பிரிந்துபோக தீர்மானிக்கலாம். ஆனால், வேறுசில கிறிஸ்தவர்கள், இதுபோன்ற சூழ்நிலையிலும் பிரிந்துபோகாமல் இருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் சகித்திருக்கிறார்கள்; தங்களுடைய திருமண பந்தத்தை இன்னும் பலப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஏன் அந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறார்கள்?
18 இப்படிப்பட்ட சூழ்நிலையால் ஒரு தம்பதி பிரிந்து வாழ்ந்தாலும், அவர்கள் இன்னமும் தம்பதிகள்தான்! நாம் முன்பு பார்த்த அதே பிரச்சினைகளை இவர்களும் சமாளிக்க வேண்டியிருக்கும். இன்னொரு காரணத்துக்காகவும் தம்பதிகள் சேர்ந்து வாழ்வது நல்லது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். “விசுவாசியாக இல்லாத கணவன் விசுவாசியாக இருக்கிற தன்னுடைய மனைவியின் மூலம் பரிசுத்தமாக்கப்படுகிறான். அதேபோல், விசுவாசியாக இல்லாத மனைவியும் விசுவாசியாக இருக்கிற தன்னுடைய கணவனின் மூலம் பரிசுத்தமாக்கப்படுகிறாள்; இல்லையென்றால், உங்கள் பிள்ளைகள் அசுத்தமானவர்களாக இருப்பார்களே; இப்போதோ அவர்கள் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள்” என்று அவர் எழுதினார். (1 கொ. 7:14) ரொம்பவே கஷ்டமான சூழ்நிலைகளைச் சந்தித்தாலும், யெகோவாவை வணங்காத தன்னுடைய துணையோடு சேர்ந்து வாழ கிறிஸ்தவர்கள் நிறைய பேர் முடிவெடுத்திருக்கிறார்கள். தங்களுடைய துணை பிற்பாடு ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகும்போது, அவர்கள் செய்த தியாகத்தை நினைத்து ரொம்பவே சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 7:16-ஐ வாசியுங்கள்; 1 பே. 3:1, 2.
19. கிறிஸ்தவ சபையிலிருக்கும் தம்பதிகளால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடிகிறது?
19 விவாகரத்தைப் பற்றி இயேசுவும், பிரிந்து வாழ்வதைப் பற்றி அப்போஸ்தலன் பவுலும் ஆலோசனை கொடுத்தார்கள். கடவுளுடைய ஊழியர்கள் திருமண ஏற்பாட்டை மதிக்க வேண்டும் என்றுதான் இவர்கள் எதிர்பார்த்தார்கள். இன்று, கல்யாண வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்கிற தம்பதிகளை உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவ சபைகளில் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட தம்பதிகள் உங்கள் சபையிலும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. உண்மையுள்ள அந்தக் கணவர்கள், தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்கள்; அன்புள்ள அந்த மனைவிகள் தங்கள் கணவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துகிறார்கள். திருமண ஏற்பாட்டை மதிக்க முடியும் என்பதை இவர்களுடைய வாழ்க்கை காட்டுகிறது. “இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்” என்ற கடவுளுடைய வார்த்தை எவ்வளவு உண்மை என்பதை லட்சக்கணக்கான கணவர்களும் மனைவிகளும் காட்டுகிறார்கள். இதைப் பார்ப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!—எபே. 5:31, 33.