அதிகாரம் 95
விவாகரத்தையும் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதையும் பற்றிக் கற்பிக்கிறார்
மத்தேயு 19:1-15 மாற்கு 10:1-16 லூக்கா 18:15-17
விவாகரத்தைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்று இயேசு சொல்கிறார்
திருமணம் செய்யாமல் இருப்பது ஒரு வரம்
சின்னப் பிள்ளைகளைப் போல் இருப்பது முக்கியம்
கலிலேயாவிலிருந்து புறப்பட்டு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் யோர்தான் ஆற்றைக் கடக்கிறார்கள். பெரேயா வழியாகத் தெற்கு நோக்கிப் பயணம் செய்கிறார்கள். இயேசு இதற்கு முன்பு, பெரேயாவுக்கு வந்திருந்தபோது, விவாகரத்தைப் பற்றிய கடவுளின் தராதரம் என்னவென்பதைப் பரிசேயர்களிடம் சொல்லியிருந்தார். (லூக்கா 16:18) இயேசுவைச் சோதிப்பதற்காக அவர்கள் மறுபடியும் அதே விஷயத்தைப் பற்றிக் கேட்கிறார்கள்.
ஒரு பெண் “ஏதோவொரு கேவலமான காரியத்தை” செய்தால், அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே எழுதியிருந்தார். (உபாகமம் 24:1) எந்தெந்த காரணங்களுக்காக விவாகரத்து செய்யலாம் என்பது பற்றி மக்களுக்கு வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. சின்னச் சின்ன விஷயங்களுக்காகக்கூட விவாகரத்து செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அதனால் பரிசேயர்கள், “ஒருவன் தன்னுடைய மனைவியை எந்தக் காரணத்துக்கு வேண்டுமானாலும் விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 19:3.
இந்தக் கேள்விக்கு, மனிதக் கருத்துகளின் அடிப்படையில் இயேசு பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, கடவுள் ஆரம்பித்து வைத்த திருமண ஏற்பாட்டைப் பற்றி இயேசு பேசுகிறார். “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று சொல்கிறார். (மத்தேயு 19:4-6) ஆதாமையும் ஏவாளையும் தம்பதிகளாக கடவுள் இணைத்தபோது, அந்தப் பந்தத்தை முறிப்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
இயேசு சொன்னதைக் கேட்டு பரிசேயர்கள் கோபப்படுகிறார்கள். “அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் சொன்னார்?” என்று கேட்கிறார்கள். (மத்தேயு 19:7) அதற்கு இயேசு, “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார். ஆனால், ஆரம்பத்திலிருந்து அப்படி இல்லை” என்று சொல்கிறார். (மத்தேயு 19:8) இங்கே ‘ஆரம்பம்’ என்பது மோசேயின் காலத்தைக் குறிக்கவில்லை; கடவுள் ஏதேன் தோட்டத்தில் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த சமயத்தை அது குறிக்கிறது.
பிறகு ஒரு முக்கியமான உண்மையை இயேசு சொல்கிறார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டை [கிரேக்கில், போர்னியா] தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்” என்று சொல்கிறார். (மத்தேயு 19:9) பாலியல் முறைகேடு மட்டும்தான் விவாகரத்து செய்வதற்கான ஒரே வேதப்பூர்வ காரணம்.
சீஷர்கள் இதைக் கேட்டதும், “திருமண பந்தம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 19:10) திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அது ஒரு நிரந்தர பந்தம் என்பதை மனதில் வைக்க வேண்டும்.
திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதைப் பற்றியும் இயேசு சொல்கிறார். சிலர் அண்ணகர்களாகப் பிறப்பதால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனுஷர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் அதிகமாக ஈடுபடுவதற்காக, பாலியல் ஆசையை அடக்கிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். “[திருமணம் செய்யாமல்] இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” என்று இயேசு அங்கிருக்கிறவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 19:12.
இப்போது, மக்கள் தங்களுடைய பிள்ளைகளை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வர ஆரம்பிக்கிறார்கள். ஆனால், சீஷர்கள் அவர்களைத் திட்டுகிறார்கள். ஒருவேளை, இயேசுவை அவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்திருக்கலாம். இயேசு இதைப் பார்த்து கோபப்பட்டு, “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே கடவுளுடைய அரசாங்கம் சொந்தமாகும். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு சின்னப் பிள்ளையைப் போலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும் அதில் அனுமதிக்கப்படவே மாட்டான்” என்று தன் சீஷர்களிடம் சொல்கிறார்.—மாற்கு 10:14, 15; லூக்கா 18:15.
எவ்வளவு அருமையான பாடம்! கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள, நாம் சின்னப் பிள்ளைகளைப் போலத் தாழ்மையாக இருக்க வேண்டும்; கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். பிறகு, இயேசு அந்தக் குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு அவர்களை ஆசீர்வதிக்கிறார். ‘ஒரு சின்னப் பிள்ளையைப் போலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்கிற’ எல்லார்மேலும் இயேசு அன்பு வைத்திருக்கிறார்.—லூக்கா 18:17.