இயேசு கிறிஸ்து
சொற்பொருள் விளக்கம்: கடவுளுடைய ஒரே-பேறான குமாரன், யெகோவாதாமே தனிமையில் உண்டாக்கின ஒரே குமாரன். இந்தக் குமாரன் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறானவர். இவரைக் கருவியாகக் கொண்டே வானத்திலும் பூமியிலுமுள்ள மற்ற எல்லாக் காரியங்களும் சிருஷ்டிக்கப்பட்டன. அவர் சர்வலோகத்தில் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய உயர்நிலையினர். இந்தக் குமாரனையே, மனிதவர்க்கத்தை மீட்கும் பொருளாகத் தம்முடைய உயிரைச் செலுத்தும்படி, யெகோவா பூமிக்கு அனுப்பினார், இவ்வாறு, விசுவாசம் காட்டும் ஆதாமின் சந்ததியாருக்கு நித்திய ஜீவனுக்குச் செல்லும் வழியைத் திறந்துவைத்தார். இதே குமாரன், பரலோக மகிமைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டு, இப்பொழுது அரசராக ஆட்சி செய்கிறார், பொல்லாதவர்கள் யாவரையும் அழிக்கவும் பூமிக்குரிய தம்முடைய பிதாவின் முதல் நோக்கத்தை நிறைவேற்றவும் அதிகாரங்கொண்டிருக்கிறார். இயேசு என்ற இந்தப் பெயரின் எபிரெய உருவமைப்பு “யெகோவா இரட்சிப்பானவர்” என்று பொருள் கொள்கிறது; கிறிஸ்து என்பது எபிரெய மஷியாக் (மேசியா) என்பதற்குச் சமமானது, “அபிஷேகஞ்செய்யப்பட்டவர்,” என்று பொருள்கொள்கிறது.
இயேசு கிறிஸ்து மெய்யான, சரித்திரப்பூர்வ ஆளா?
இயேசு கிறிஸ்து சரித்திரப்பூர்வ ஆள் என்பதற்கு பைபிள்தானே முதன்மையான அத்தாட்சி. சுவிசேஷங்களிலுள்ள பதிவு, திட்டமாய்க் குறிக்கப்படாத ஏதோவொரு காலத்திலும் பெயர் குறிக்கப்படாத இடத்திலும் நடந்த நிகழ்ச்சிகளின் உறுதியற்ற கதைவிவரிப்பு அல்ல. காலத்தையும் இடத்தையும் அது மிக நுட்பவிவரமாய்த் தெளிவாய்க் கூறுகிறது. உதாரணமாக, லூக்கா 3:1, 2, 21-23-ஐப் பாருங்கள்.
முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியன் ஜொஸிஃபஸ், “கிறிஸ்து எனப்பட்ட இயேசுவின் சகோதரனான, யாக்கோபு” கல்லெறியப்பட்டதைக் குறிப்பிட்டான். (யூதப் பண்டையக்கால நிகழ்ச்சிகள், (ஆங்கிலம்) ஜொஸிஃபஸ், புத்தகம் XX, பிரிவு 200) புத்தகம் XVIII, பிரிவுகள் 63, 64-ல் காணப்படுகிற, இயேசுவைக் குறிக்கும் நேர்முகமான மற்றும் மிக நல்லாதரவான ஒரு குறிப்பை, சிலர், கிறிஸ்தவர்களால் பின்னால் சேர்க்கப்பட்டோ அல்லது சுவைப்பெருக்கப்பட்டோ இருக்கவேண்டுமென விவாதித்து, எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்; ஆனால் சொல்லமைப்பும் எழுத்துநடையும் அடிப்படையாய் ஜொஸிஃபஸ் பயன்படுத்துபவையே என ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது, மேலும் இந்தப் பகுதி கிடைக்கக்கூடிய எல்லாக் கையெழுத்துப்பிரதிகளிலும் காணப்படுகிறது.
பொ.ச. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது வாழ்ந்த ரோம சரித்திராசிரியன் டாசிட்டஸ், பின்வருமாறு எழுதினான்: “அவரிலிருந்தே [கிறிஸ்தவம் என்ற] இந்தப் பெயர் தொடங்கின கிறிஸ்டஸ் [“கிறிஸ்து” என்பதற்கு லத்தீன்], திபேரியு ஆட்சிசெய்தக் காலத்தின்போது நம்முடைய ரோம மாகாண அதிகாரிகளில் ஒருவனாகிய, பொந்தியு பிலாத்துவின் கைகளில் உச்ச அளவான தண்டனையை அனுபவித்தார்.”—(ஆங்கிலத்தில்) டாசிட்டஸின் முழு வேலைகள் (நியு யார்க், 1942), “ஆண்டுவரிசைப் பதிவேடு,” புத்தகம் 15, பத்தி 44.
இயேசுவைக் குறிப்பிடும் தொடக்கக்கால கிறிஸ்தவரல்லாதவரின் சரித்திரப்பூர்வ குறிப்புகளைப் பற்றி, தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு கூறுகிறது: “பூர்வ காலங்களில் கிறிஸ்தவத்தின் எதிரிகளுங்கூட இயேசுவின் சரித்திரப்பூர்வ உறுதியுடைய நிலையை ஒருபோதும் சந்தேகிக்கவில்லையென இந்தத் தற்சார்பான விவரப்பதிவுகள் நிரூபிக்கின்றன, இது முதல்தடவையாகவும் போதிய ஆதாரமில்லாத காரணங்களின்பேரிலும், 18-வது நூற்றாண்டின் முடிவிலும், 19-வது நூற்றாண்டினூடேயும், 20-வது நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல நூலாசிரியர்களால் வாக்குவாதம் செய்யப்பட்டது.”—(1976), மக்ரோபீடியா, புத். 10, பக். 145.
இயேசு கிறிஸ்து வெறும் ஒரு நல்ல ஆள் மட்டுமேதானா?
“நல்ல போதகரே,” என்றச் சிறப்புப் பெயரால் தம்மை அழைத்த ஒரு மனிதனை இயேசு கண்டித்தது நம் கவனத்தைக் கவருகிறது, ஏனெனில், தாம் அல்ல தம்முடைய பிதாவே நற்குணத்துக்குத் தராதரமானவரென இயேசு மதித்துணர்ந்தார். (மாற்கு 10:17, 18) எனினும், ஒருவரை நல்லவரென்று தாங்கள் சொல்கையில், ஆட்கள் பொதுவாய்க் கருதும் உயர்நிலையிலிருக்க, இயேசு நிச்சயமாய் உண்மையுள்ளவராயிருந்திருக்க வேண்டும். நிச்சயமாகவே, அவருடைய சத்துருக்களுங்கூட அவர் அவ்வாறிருந்தாரென ஒப்புக்கொண்டார்கள். (மாற்கு 12:14) மனித வாழ்க்கைக்கு முந்திய வாழ்க்கை தமக்கு இருந்ததெனவும், தாம் கடவுளுடைய தனிப்பட்ட குமாரனெனவும், எபிரெயு வேத எழுத்துக்கள் முழுவதிலும் அவருடைய வருகை முன்னறிவிக்கப்பட்டுள்ள அந்த மேசியா தாமே எனவும், அவர்தாமே சொன்னார். தாம் இன்னாரென்று சொன்னபடி அவர் இருந்திருக்கவேண்டும் அல்லது அவர் மோசக்காரராய் இருந்திருக்கவேண்டும், ஆனால் இந்த இரண்டில் எதுவும் அவர் வெறுமென ஒரு நல்ல மனிதன் என்றக் கருத்தை அனுமதிக்கிறதில்லை.—யோவான் 3:13; 10:36; 4:25, 26; லூக்கா 24:44-48.
இயேசு, மோச, புத்தர், முகமது, மற்றும் வேறு மதத் தலைவர்களுக்கொப்பான அதிகாரமுடைய வெறும் ஒரு தீர்க்கதரிசியா?
தாம் கடவுளுடைய தனிப்பட்ட குமாரன் எனவும் (யோவான் 10:36; மத். 16:15-17), முன்னறிவிக்கப்பட்ட மேசியா எனவும் (மாற்கு 14:61, 62), மனிதவாழ்க்கைக்கு முந்திய வாழ்க்கை தமக்குப் பரலோகத்தில் இருந்ததெனவும் (யோவான் 6:38; 8:23, 58), தாம் கொல்லப்படுவாரெனவும் பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்படுவாரெனவும் அதன்பின் பரலோகங்களுக்குத் திரும்பிச்செல்வாரெனவும் இயேசுதாமே கற்பித்தார். (மத். 16:21; யோவன் 14:2, 3) இந்த உரிமைபாராட்டல்கள் உண்மையாயிருந்தனவா? இவ்வாறு அவர் கடவுளுடைய மெய்யான மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளிலிருந்தும் உண்மையில் வேறுபட்டாரா? மேலும் பெயரளவான போலித் தீர்க்கதரிசிகளாகிய எல்லா மதத் தலைவர்களுக்கும் நேர் மாறாக இருந்தாரா? அவருடைய மரணத்திலிருந்து மூன்றாம் நாளில் இந்தக் காரியத்தின் உண்மை தெளிவாய்த் தெரியும். அப்பொழுது கடவுள் அவரை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினாரா, இவ்வாறு இயேசு கிறிஸ்து சத்தியத்தையே பேசினாரென்றும் அவர் நிச்சயமாகவே கடவுளுடைய தனிப்பட்ட குமாரன் என்றும் உறுதிப்படுத்தினாரா? (ரோமர் 1:3, 4) அவருடைய உயிர்த்தெழுதலைப் பின்தொடர்ந்து, 500-க்கு மேற்பட்ட சாட்சிகள் இயேசுவை உண்மையில் உயிரோடிருக்கக் கண்டார்கள், மேலும் அவர் திரும்பப் பரலோகத்துக்கு ஏறிச் செல்லத் தொடங்கி தங்கள் பார்வையிலிருந்து மேகத்தில் மறைந்துபோவதை அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் கண்கூடாய்க் கண்டு சாட்சிகளாயிருந்தார்கள். (1 கொரி. 15:3-8; அப். 1:2, 3, 9) அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டாரென அவர்கள் முற்றுமுழுக்க அவ்வளவு உறுதியாய் நம்பினதால், அவர்களில் பலர் தங்கள் உயிரை இழக்கும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல், அதைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லத் துணிந்தனர்.—அப்போஸ்தலர் 4:18-33.
பொதுவில் யூதர் ஏன் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை?
தி என்ஸைக்ளோபீடியா ஜூடேய்க்கா பின்வருமாறு சொல்கிறது: “[மேசியா] புறமதத்தினரின் மேலாட்சி நுகத்தை முறித்து திரும்பக் கொண்டுவரப்பட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின்மேல் ஆட்சி செய்யும்படி கடவுள் [மேசியாவை] எழுப்புவாரென ரோம காலத்தின் யூதர்கள் நம்பினர்.” (எருசலேம், 1971, புத். II, பத்தி 1407) ரோம மேலாட்சி நுகத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை வேண்டியதாயிருந்தது. தானியேல் 9:24-27-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த மேசியானிய தீர்க்கதரிசனத்தின் ஆதாரத்தின்பேரில் பொ.ச. முதல் நூற்றாண்டின்போது மேசியாவை எதிர்பார்த்த யூதர்கள் இருந்தார்கள். (லூக்கா 3:15) ஆனால் இந்தத் தீர்க்கதரிசனம் அவருடைய வருகையைப் ‘பாவங்களைத் தொலைப்பதோடும்’ இணைத்தது, மேலும் இதைச் சாத்தியமாக்க மேசியாதாமே மரிப்பாரென ஏசாயா 53-ம் அதிகாரம் குறிப்பிட்டுக் காட்டினது. எனினும், பொதுவில் யூதர்கள் தங்கள் பாவங்களுக்காக எவராவது மரிப்பதற்குத் தேவையில்லையென உணர்ந்தார்கள். ஆபிரகாமின் சந்ததியாராகத் தாங்கள் இருந்ததன் ஆதாரத்தின்பேரில் கடவுளுடன் தங்களுக்கு நீதியுள்ள நிலைநிற்கை இருந்ததென அவர்கள் நம்பினர். ஒரு ரபீனிய நூற்கோவை சொல்வதாவது, “ஆபிரகாமின் [மதிப்பு] அவ்வளவு மிகுந்ததாயிருப்பதால், இந்த உலகத்தில் இஸ்ரவேல் செய்த எல்லாத் தற்பெருமைகளையும் சொன்ன பொய்களையும் அவன் ஈடுசெய்து தீர்க்க முடியும்.” (லண்டன், 1938, C. மான்டிஃபையோரும் H. லோவியும், பக். 676) இயேசுவை மேசியாவாக வேண்டாமென அவர்கள் தள்ளிவிட்டதால், தங்களைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பின்வரும் தீர்க்கதரிசனத்தை யூதர்கள் நிறைவேற்றினார்கள்: “அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; நாம் அவரை மதிக்கவில்லை.”—ஏசாயா 53:3, தி.மொ.
இந்த ஜனம் உண்மையான வணக்கத்தைவிட்டு விலகிப்போகுமென்றும், அதன் விளைவாகப் பெரும் இடுக்கண் அவர்களுக்கு நேரிடுமென்றும் மோச தன் மரணத்துக்கு முன்னால் முன்னறிவித்தான். (உபாகமம் 31:27-29-ஐ வாசியுங்கள்.) இது திரும்பத்திரும்ப நேரிட்டதென நியாயாதிபதிகளின் புத்தகம் சாட்சிபகருகிறது. தீர்க்கதரிசி எரேமியாவின் நாட்களில், முழு ஜனமாக அவர்கள் உண்மையற்றுப்போனது அந்த ஜனம் பாபிலோனுக்கு நாடுகடத்திக் கொண்டுபோதலுக்கு வழிநடத்தினது. பொ.ச. 70-ல் ரோமரும் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிப்பதற்குக் கடவுள் ஏன் அனுமதித்தார்? அவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கடவுளில் வைத்தபோது அவர் அவர்களைப் பாதுகாத்ததுபோல் இப்பொழுது செய்யாமல் விட்டதற்கு அந்த ஜனம் உண்மையற்றுப்போன என்ன குற்றத்துக்காளாகியிருந்தார்கள்? இதற்குச் சற்று முன்புதானே அவர்கள் இயேசுவை மேசியாவாக வேண்டாமெனத் தள்ளிவிட்டிருந்தார்கள்.
இயேசு கிறிஸ்து உண்மையில் கடவுளா?
யோவான் 17:3, RS: “[இயேசு தம்முடைய பிதாவிடம் ஜெபித்து சொன்னது:] ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும் [“நீர் ஒருவரே உண்மையில் கடவுள்,” NE], நீர் அனுப்பினவரான இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிவதே நித்திய ஜீவன்.” (இயேசு தம்மையல்ல பரலோகத்திலுள்ள தம்முடைய பிதாவையே “ஒரே உண்மையுள்ள கடவுள்,” எனக் குறிப்பிட்டதைக் கவனியுங்கள்.)
யோவான் 20:17: “இயேசு அவளை [மகதலேனா மரியாளை] நோக்கி: என்னைத் தொடதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.” (ஆகையால் மகதலேனா மரியாளுக்குப் பிதா கடவுளாயிருந்ததுபோல், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவுக்கும், பிதா கடவுளாயிருந்தார். கவனத்தைக் கவருவதாய், வேத எழுத்துக்களில் ஒரு தடவையுங்கூட பிதா குமாரனை “என் தேவன்,” என அழைப்பதை நாம் காண்கிறதில்லை.)
மேலும் பக்கங்கள் 411, 416, 417-ல், “திரித்துவம்,” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.
இயேசு கடவுள் என்று யோவன் 1:1 நிரூபிக்கிறதா?
யோவான் 1:1, UV: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. [KJ, JB, Dy, Kx, NAB-லும்].” NE-ல் “கடவுள் என்னவாயிருந்தாரோ, அந்த வார்த்தையும் அவ்வாறிருந்தது,” என்றிருக்கிறது. MO சொல்வதாவது: “அந்த லோகாஸ் தெய்வீகமாயிருந்தது.” AT-யும் SD-யும் நமக்குச் சொல்வதாவது, “அந்த வார்த்தை தெய்வீகமாயிருந்தது.” ED-ன் வரிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பில் “ஒரு கடவுளாக அந்த வார்த்தை இருந்தது,” என்றிருக்கிறது. NW-இல் “அந்த வார்த்தை ஒரு கடவுளாயிருந்தது” என்றிருக்கிறது; NTIV இதே சொற்களைப் பயன்படுத்துகிறது.
“அந்த வார்த்தை தேவனாயிருந்தது,” என்று சொல்வதை தங்களில் சிலர் தவிர்க்கும்படி, கிரேக்க மூலவாக்கியத்தில் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்ன காண்கிறார்கள்? உறுதிநிலைச் சுட்டு (அந்த) முதல் வரும் தியாஸ்-க்கு முன் தோன்றுகிறது ஆனால் இரண்டாவது வருவதற்கு முன் இல்லை. (இந்தச் சுட்டிடைச் சொல் தோன்றுகையில்) அந்தப் பெயர்ச்சொல்லின் இலக்கணத்தொடர்பு ஒரு தனித்தவரை, ஓர் ஆளைச் சுட்டிக் காட்டுகிறது, அப்படியிருக்க, வினைச்சொல்லுக்கு முன்னுள்ள ஒருமை சார்படையற்ற (சுட்டிடைச்சொல் இல்லாத) பயனிலைப் பெயர்ச்சொல் (கிரேக்கில் வாக்கியம் அமைக்கப்பட்டிருக்கிறபடி) ஒருவரைப்பற்றிய தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது. ஆகையால் இந்த மூலவாக்கியம், அந்த வார்த்தை (இயேசு) தாம் அவரோடிருந்த அந்தக் கடவுளாகவே இருந்தார் என்று சொல்கிறதில்லை, ஆனால், அதற்கு மாறாக, அந்த வார்த்தை கடவுளைப்போல், தெய்வத்தன்மை வாய்ந்தவராக, ஒரு கடவுளாக இருந்தார் என்றே சொல்கிறது. (குறிப்புரை கொண்ட NW பைபிளின் 1984-ன் பதிப்பு, பக். 1579-ஐ பாருங்கள்.)
யோவான் 1:1-ஐ தான் எழுதினபோது அப்போஸ்தலன் யோவன் பொருள்கொண்டதென்ன? இயேசுதாமே கடவுள் என்று அல்லது ஒருவேளை இயேசு பிதாவுடன் ஒரே கடவுளாக இருந்தாரென பொருள்கொண்டானா? அதே அதிகாரத்தில், 18-ம் வசனத்தில் யோவன் பின்வருமாறு எழுதினான்: “தேவனை ஒருவனும் [“ஒரு மனிதனும்,” KJ, Dy] ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே [“ஒரேபேறான கடவுளே (god),” NW] அவரை வெளிப்படுத்தினார்.” குமாரனான இயேசு கிறிஸ்துவை எந்த மனிதனாவது கண்டானா? நிச்சயமாகவே கண்டான்! அப்படியானால், இயேசு கடவுள் என்று யோவன் சொன்னானா? இல்லையென தெளிவாயிருக்கிறது! தன் சுவிசேஷத்தின் முடிவுப் பகுதியில், யோவன் காரியங்களைச் சுருக்கமாகத் தொகுத்து, பின்வருமாறு கூறினான்: “இயேசு [தேவன் என்றல்ல, ஆனால்] தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படி . . . இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.”—யோவான் 20:31.
யோவான் 20:28-ல் தோம வியந்து கூறினது இயேசு உண்மையில் கடவுளென நிரூபிக்கிறதா?
யோவான் 20:28-ல் நாம் வாசிப்பதாவது: “தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.”
தோமாவின் மனதில் இதுவே இருந்திருந்தால் இயேசுவை “தேவன்,” எனக் குறிப்பிடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது சங்கீதத்திலிருந்து இயேசுதாமே எடுத்துக் குறிப்பிட்டதற்குப் பொருந்த இருந்திருக்கும், அதில் வல்லமவாய்ந்த மனிதரான நியாயாதிபதிகள் “தேவர்கள்,” எனக் குறிப்பிட்டுப் பேசப்படுகின்றனர். (யோவான் 10:34, 35; சங். 82:1-6) நிச்சயமாகவே, கிறிஸ்து அத்தகைய மனிதரைப் பார்க்கிலும் மிக அதிக உயர்ந்தப் பதவியை வகிக்கிறார். யெகோவா சம்பந்தப்பட்டதில் அவர் வகிக்கும் பதவியின் தனிச்சிறப்பின் காரணமாக, யோவன் 1:18-இல் (NW) இயேசு “ஒரே பேறான கடவுள் [god]” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். (RO, By-லும் பாருங்கள்.) ஏசாயா 9:6-லும் இயேசுவை “வல்லமையுள்ள தேவன்,” என தீர்க்கதரிசனமாய் விவரித்திருக்கிறது, ஆனால் சர்வவல்லமையுள்ள தேவன் என விவரித்தில்லை. இதெல்லாம் யோவன் 1:1-ல் (NW, AT) இயேசுவை “ஒரு கடவுள், [a god]” அல்லது “தெய்வத்தன்மை வாய்ந்தவர்,” என விவரித்திருப்பதற்குப் பொருந்த இருக்கிறது.
இதிலிருந்து சரியான முடிவுக்கு வர சூழமைவு நமக்கு உதவிசெய்கிறது. இயேசு தாம் மரணமடைவதற்கு முன்பு செய்த ஜெபத்தைத் தோம கேட்டிருந்தான், அதில் அவர் தம்முடைய பிதாவை “ஒரே மெய்யான கடவுள்” என்று அழைத்தார். (யோவான் 17:3, RS) தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப்பின் இயேசு, தோம உட்பட, தம்முடைய அப்போஸ்தலருக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அதில் அவர்: “நான் . . . என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்,” என்று சொல்லியிருந்தார். (யோவான் 20:17) உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்துவை தோம உண்மையில் கண்டு தொட்டபோது அவன் சொன்னதைப் பதிவுசெய்தப் பின்பு, அப்போஸ்தலன் யோவன் பின்வருமாறு கூறினான்: “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.” (யோவான் 20:31) ஆகையால், தோம வியந்து கூறினதிலிருந்து இயேசுதாமே “ஒரே மெய்த் தேவன்” என அல்லது இயேசு ஒரு திரித்துவ “குமாரனாகிய தேவன்,” என எவராவது முடிவுசெய்திருந்தால், அவர் (வச. 17-ல்) இயேசுதாமே சொன்னதற்கும் (வச. 31-ல்) அப்போஸ்தலன் யோவன் தெளிவாகச் சொல்லியிருக்கும் முடிவுக்கும் திரும்பப் பார்வை செலுத்தவேண்டும்.
இயேசு பூமியிலிருந்தபோது கடவுளாயிருந்தாரென மத்தேயு 1:23 குறிப்பாய்க் காட்டுகிறதா?
மத். 1:23: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் . . . இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.”
வரவிருந்த இயேசுவின் பிறப்பை அறிவிக்கையில், கடவுள்தாமே அந்தப் பிள்ளையாக இருப்பாரென யெகோவாவின் தூதன் சொன்னானா? இல்லை, அந்த அறிவிப்பு என்னவெனில்: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்,” என்பதே. (லூக்கா 1:32, 35; தடித்த அச்சு சேர்க்கப்பட்டது.) இயேசுதாமே தாம் கடவுளாயிருந்ததாக ஒருபோதும் உரிமைபாரட்டவில்லை, அதற்கு மாறாக, “தேவனுடைய குமாரன்,” என்றே கூறினார். (யோவான் 10:36; தடித்த அச்சு சேர்க்கப்பட்டது.) இயேசுவைக் கடவுள் உலகத்துக்குள் அனுப்பினார்; ஆகையால் இந்த ஒரே பேறான குமாரனின் மூலம் கடவுள் மனிதவர்க்கத்துடன் இருந்தார்.—யோவான் 3:17; 17:8.
எபிரெயு பெயர்கள் கடவுள் என்பதற்கான சொல்லை அல்லது கடவுளுடைய சொந்தப் பெயரின் சுருக்கக் குறியீட்டையும் தங்களுக்குள் உள்ளடங்கலாகக் கொண்டிருப்பது அசாதாரணமாயில்லை. உதாரணமாக, எலியாத்தா என்பது “கடவுள் வந்துவிட்டார்” என பொருள்கொள்கிறது; யெகூ என்பதன் பொருள் “யெகோவாவே அவர்”; எலியா என்பதன் பொருள் “என் கடவுள் யெகோவாவே,” என்பதாகும். ஆனால் இந்தப் பெயர்களில் எதுவும் அந்தப் பெயரையுடையவன்தானே கடவுள் என மறைமுகமாய்க் குறிப்பிடவில்லை.
யோவான் 5:18-ன் பொருள் என்ன?
யோவான் 5:18: “அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.”
இயேசு கடவுளைத் தம்முடைய பிதா என உரிமைபாரட்டினதால் தம்மைக் கடவுளோடு சமமாக்க முயற்சி செய்தாரென விவாதித்தவர்கள், விசுவாசியாத அந்த யூதர்களே. இயேசு சரியாகவே கடவுளைத் தம்முடைய பிதாவெனக் குறிப்பிட்டபோதிலும் கடவுளோடு சமநிலையை அவர் ஒருபோதும் உரிமைபாரட்டவில்லை. அவர் பின்வருமாறு யூதருக்கு நேர்முகமாய்ப் பதிலளித்தார்: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதா செய்யக் காண்பதெதுவோ அதையேயன்றிக் குமாரன் தாமாகவே எதையுஞ் செய்ய முடியாது.” (யோவான் 5:19, தி.மொ.; மேலும் யோவன் 14:28; யோவன் 10:36-ஐயும் பாருங்கள்.) இயேசு ஓய்வுநாளை மீறினாரென விவாதித்ததும், விசுவாசியாத இந்த யூதர்களே, ஆனால் அதிலும் அவர்கள் தவறிலிருந்தார்கள். இயேசு நியாயப்பிரமாணத்தைப் பரிபூரணமாய்க் கைக்கொண்டார், “ஓய்வு நாளிலே நன்மைசெய்வது நியாயந்தான்,” என்று அவர் உறுதியாய்க் கூறினார்.—மத். 12:10-12.
இயேசுவுக்கு வணக்கத்தைக் கொடுப்பது அவர் கடவுளென நிரூபிக்கிறதா?
எபிரெயர் 1:6-ல், யூ.மொ., தி.மொ., RS, TEV, KJ, JB, மற்றும் NAB ஆகிய மொழிபெயர்ப்புகளின்படி, இயேசுவைத் “தொழுதுகொள்”ளும்படி தூதர்கள் கட்டளையிடப்படுகிறார்கள். NW மொழிபெயர்ப்பில் “பணிவு தெரிவிக்கும்படி” சொல்லியிருக்கிறது. மத்தேயு 14:33-ல், RS, TEV, KJ ஆகியவற்றில் இயேசுவின் சீஷர்கள் அவரைத் “தொழுதுகொண்டார்கள்,” என்று சொல்லியிருக்கிறது; மற்ற மொழிபெயர்ப்புகளில் “அவருக்கு மரியாதைக் காட்டினார்கள்,” (NAB) என்று சொல்லியிருக்கிறது, “அவருக்கு முன்பாகப் பணிந்தார்கள்” (JB), “அவருடைய பாதத்தில் விழுந்தார்கள்” (NE), “அவருக்குப் பணிவு தெரிவித்தார்கள்” (NW).
“தொழுதுகொள்ளுதல்” என்று மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல் புரோஸ்கினியோ என்பதாகும்; இது, “ஓர் ஆளுக்கு முன் முகங்குப்புற விழுந்து அவனுடைய பாதங்களை, அவனுடைய மேலங்கியின் ஓர மடிப்பை, தரையை முத்தமிடும் வழக்கத்தைக் குறிப்பிட[வும்] பயன்படுத்தப்பட்ட”தென புதிய ஏற்பாட்டின் மற்றும் வேறு பூர்வ கிறிஸ்தவ இலக்கியங்களின் கிரேக்க-ஆங்கில அகராதியில் சொல்லியிருக்கிறது. (சிக்காகோ, 1979, பாவர், அரன்டட், கிங்க்ரிச், டான்கர்; இரண்டாவது ஆங்கில பதிப்பு; பக். 716) இந்தப் பதமே, சீஷர்கள் இயேசுவுக்குச் செய்ததைத் தெரிவிக்க மத்தேயு 14:33-லும்; தேவதூதர்கள் இயேசுவினிடமாகச் செய்யவேண்டியதைத் தெரிவிக்க எபிரெயர் 1:6-லும்; ஆபிரகாம் யெகோவாவினிடமாகச் செய்ததை விவரிக்க கிரேக்க செப்டுவஜின்ட்-ல் ஆதியாகமம் 22:5-லும் ஆபிரகாம், தான் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஜனத்துக்கு, அந்தக் காலத்தின் வழக்கத்துக்கு ஒத்தப்படி செய்ததை விவரிக்க ஆதியாகமம் 23:7-லும்; அரசனான தாவீதை அணுகினபோது தீர்க்கதரிசி நாத்தான் செய்ததை விவரிக்க செப்டுவஜின்ட்-ல் 1 இராஜாக்கள் 1:23-லும் பயன்படுத்தியுள்ளது.
மத்தேயு 4:10-ல் (RS), இயேசு பின்வருமாறு சொன்னார்: “நீ கர்த்தராகிய உன் கடவுளையே தொழுதுகொண்டு [புரோஸ்கினியோ என்பதிலிருந்து] அவர் ஒருவரையே நீ சேவிக்கவேண்டும்.” (இயேசு அங்கிருந்தே எடுத்துக் குறிப்பிட்டதாகத் தெரிகிற உபாகமம் 6:13-ல், எபிரெயு நான்கெழுத்தான கடவுளுடைய சொந்தப் பெயர் தோன்றுகிறது.) இதற்கு ஒத்திசைய, புரோஸ்கினியோ குறிப்பதையே தனிப்பட்ட இருதய மற்றும் மனப்பான்மையுடன் கடவுளுக்கு மாத்திரமே செலுத்தவேண்டுமென நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இயேசு நடப்பித்த அற்புதங்கள் அவரைக் கடவுளென நிரூபிக்கின்றனவா?
அப். 10:34, 38: “அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: . . . இயேசுவை, தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார். . . . என்றான்.” (ஆகையால் பேதுரு, தான் கவனித்துப்பார்த்த அந்த அற்புதங்களிலிருந்து இயேசு கடவுளென்று முடிவுசெய்யவில்லை, அதைப்பார்க்கிலும், கடவுள் இயேசுவுடன் இருந்தார் என்றே முடிவுசெய்தான். மத்தேயு 16:16, 17-ஐ ஒத்துப்பாருங்கள்.)
யோவான் 20:30, 31: “இந்தப் புத்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.” (ஆகையால், இந்த அற்புதங்களிலிருந்து நாம் வரவேண்டிய சரியான முடிவு, இயேசுவே “கிறிஸ்து,” மேசியா, “தேவனுடைய குமாரன்,” என்பதே. “தேவனுடைய குமாரன்” என்ற இந்தச் சொற்றொடர் “குமாரனாகிய தேவன்” என்பதிலிருந்து மிகவும் வேறுபடுகிறது.)
கிறிஸ்தவக் காலத்துக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளான எலியாவும் எலிசாவும் போன்றவர்கள் இயேசு நடப்பித்தவற்றிற்கு ஒப்பான அற்புதங்களை நடப்பித்தார்கள். எனினும் அவை அவர்கள் கடவுளாக இருந்தார்களென நிச்சயமாகவே நிரூபிக்கவில்லை.
இயேசு “பழைய ஏற்பாட்டில்” குறிப்பிட்டுள்ள யெகோவாவேதானா?
பக்கங்கள் 197, 198-ல் முக்கிய தலைப்பு “யெகோவா” என்பதன்கீழ்ப் பாருங்கள்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதே இரட்சிக்கப்படுவதற்குத் தேவைப்பட்ட எல்லாமா?
அப்போஸ்தலர் 16:30-32: “ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள் [பவுலும் சீலாவும்]: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய [“கடவுளுடைய,” NAB, மேலும் JB-யிலும் NE-லும் அடிக்குறிப்புகள்; “கடவுளுடைய செய்தியை,” AT] வசனத்தைப் போதித்தார்கள்.” (அந்த மனிதன் ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தது’ தான் விசுவாசித்தான் என அவன் உள்ளப்பூர்வமாய் சொல்லும் வெறும் காரியமாயிருந்ததா? அதைவிட அதிகம் தேவைப்பட்டதென பவுல் காட்டினான்—அதாவது, பவுலும் சீலாவும் கடவுளுடைய வார்த்தையை அந்தச் சிறைச்சாலைக்காரனுக்குத் தொடர்ந்து பிரசங்கித்தப்படி, அறிவும் கடவுளுடைய வார்த்தையை ஏற்பதும் தேவைப்பட்டது. ஒருவன், இயேசு வணங்கின கடவுளை வணங்காவிடில், தம்முடைய சீஷர்கள் என்ன வகையான ஆட்களாயிருக்க வேண்டுமென இயேசு கற்பித்ததை அவன் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தாவிடில், அல்லது செய்யும்படி தம்மைப் பின்பற்றுவோருக்கு இயேசு கட்டளையிட்ட வேலையை அவன் செய்யாவிடில், இயேசுவில் அவனுடைய நம்பிக்கை உண்மையானதாயிருக்குமா? நாம் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாது; அது, இயேசுவின் மனித உயிர்ப் பலியின் விலைமதிப்பில் விசுவாசம் வைக்கும் ஆதாரத்தின்பேரிலேயே கூடியதாயிருக்கிறது. ஆனால் நம்முடைய வாழ்க்கை நாம் கொண்டிருப்பதாகப் பாராட்டும் விசுவாசத்துடன் ஒத்திருக்கவேண்டும், அது ஒருவேளைத் துன்பத்தை உட்படுத்தினாலும் அவ்வாறிருக்கவேண்டும். மத்தேயு 10:22-ல் இயேசு: “முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்,” எனக் கூறினார்.)
இயேசு மனிதனாவதற்கு முன்னால் பரலோக வாழ்க்கையைக் கொண்டிருந்தாரா?
கொலோ. 1:15-17: “அவர் [இயேசு] அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். . . . சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்.”
யோவான் 17:5: “[ஜெபத்தில் இயேசு கூறினதாவது:] பிதாவே, உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.” (மேலும் யோவன் 8:23)
இயேசு பரலோகத்தில் தம்முடைய மாம்ச உடலைக் கொண்டிருக்கிறாரா?
1 கொரி. 15:42-50: “மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; . . . ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; . . . அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். . . . சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.” (தடித்த அச்சு சேர்க்கப்பட்டது.)
1 பேதுரு 3: 18, தி.மொ.: “கிறிஸ்துவும் . . . பாவங்களினிமித்தம் ஒருதரம் மரித்தார்; . . . அவர் மாம்சத்தில் கொல்லப்பட்டார்; ஆவியிலோ உயிர்ப்பிக்கப்பட்டார். [“ஆவியில்,” யூ.மொ.; NE, AT, JB, Dy].” (பக்கம் 334-ஐ பாருங்கள்.)
உதாரணம்: ஒருவன் ஒரு நண்பனுக்காகக் கடனைச் செலுத்துகிறான் ஆனால் பின்பு, தான் செலுத்தினதை உடனடியாகத் திரும்ப எடுத்துக்கொள்வானானால், அந்தக் கடன் இன்னும் தொடர்ந்திருப்பது தெளிவாயிருக்கிறது. இவ்வாறே, இயேசு தாம் உயிர்த்தெழுப்பப்பட்டபோது, மீட்பின் கிரயத்தைச் செலுத்தும்படி பலியாகக் கொடுத்திருந்த மாம்சமும் இரத்தமுமான தம்முடைய மனித உடலைத் திரும்ப எடுத்துக்கொண்டிருந்தால், பாவக் கடனிலிருந்து உண்மையுள்ள ஆட்களை விடுதலைசெய்யும்படி அவர் செய்துகொண்டிருந்த அந்த ஏற்பாட்டின்பேரில் அது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கும்?
தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இயேசு மாம்ச உடல் உருவில் தம்முடைய சீஷருக்குத் தோற்றமளித்தார் என்பது மெய்யே. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஏன் அவரை முதல் அடையாளங்கண்டுகொள்ளவில்லை? (லூக்கா 24:15-32; யோவன் 20:14-16) ஒரு சந்தர்ப்பத்தில், தோமவின் நன்மைக்காக, தம்முடைய கைகளில் ஆணியடித்த தடங்களையும் தம்முடைய விலாப் பக்கத்தில் ஈட்டியால் குத்தின காயத்தையும் கொண்ட மாம்ச உடல் அத்தாட்சியுடன் தோன்றினார். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் கதவுகள் பூட்டியிருந்தபோதிலும் அவர்கள் மத்தியில் அவர் திடீரென்று தோன்ற எவ்வாறு முடிந்தது? (யோவான் 20:26, 27) இந்தச் சந்தர்ப்பங்களில் இயேசு, கடந்த காலங்களில் தூதர்கள் மனிதருக்குத் தோன்றினபோது செய்ததுபோல், மாம்ச உருவான உடல்களை எடுத்தாரெனத் தோன்றுகிறது. இயேசுவை உயிர்த்தெழுப்பினபோது அவருடைய மாம்ச உடலை முடிவுசெய்வது கடவுளுக்கு எத்தகைய பிரச்னையும் இல்லை. கவனத்தைக் கவருவதாய், (இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற சீஷர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தப் பெரும்பாலும்) அந்த மாம்ச உடலைக் கடவுள் அந்தக் கல்லறைக்குள் விட்டுவைக்காதபோதிலும், அது சுற்றப்பட்டிருந்த துணிகள் அங்கே விட்டுவைக்கப்பட்டிருந்தன; எனினும், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு முழுமையாய் உடையணிந்தவராகவே எப்பொழுதும் தோன்றினார்.—யோவான் 20:6, 7.
பிரதான தூதன் மிகாவேலும் இயேசு கிறிஸ்துவும் ஒருவரேதானா?
இந்த மிகாவேலின் பெயர் பைபிளில் ஐந்து தடவைகள் மாத்திரமே காணப்படுகிறது. இந்தப் பெயரைக் கொண்டுள்ள அந்த மகிமையான ஆவி ஆள், “பிரதான அதிபதிகளில் ஒருவன்,” “உன் [தானியேலின்] ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி” எனவும் “பிரதான தூதன்” எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறார். (தானி. 10:13; 12:1; யூதா 9) மிகாவேல் என்பதன் பொருள் “கடவுளைப்போன்றவர் யார்?” என்பதாகும். இவ்வாறு இந்தப் பெயர் மிகாவேலே யெகோவாவின் ஈடற்றப் பேரரசை உறுதியாய்க் கடைப்பிடித்துநிற்பதிலும் கடவுளுடைய சத்துருக்களை அழிப்பதிலும் தலைமைத்தாங்குகிறவரென சந்தேகமில்லாமல் குறித்துக்காட்டுகிறது.
1 தெசலோனிக்கேயர் 4:16-ல், உயிர்த்தெழுதலைத் தொடங்குவதற்கு இயேசு கிறிஸ்து கொடுக்கும் கட்டளை “பிரதான தூதனுடைய சத்தம்,” என விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் யூதா 9-ல் இந்தப் பிரதான தூதன் மிகாவேல் எனச் சொல்லியிருக்கிறது. இயேசுவின் கட்டளைக்குரிய சத்தத்தை அதிகாரத்தில் குறைந்தவரான ஒருவருடைய சத்தத்துக்கு ஒப்பிடுவது தகுதியாயிருக்குமா? அப்படியானால், நியாயமாகவே, அந்தப் பிரதான தூதனான மிகாவேல் இயேசு கிறிஸ்துவே. (கவனத்தைக் கவருவதாய், “பிரதான தூதன்” என்ற சொற்றொடர் வேத எழுத்துக்களில் பன்மையில் ஒருபோதும் காணப்படுகிறதில்லை, இவ்வாறு ஒரேஒருவரே அவ்வாறிருக்கிறார் எனக் குறிப்பாய் உணர்த்துகிறது.)
வெளிப்படுத்துதல் 12:7-12-ல், கிறிஸ்துவுக்கு அரசாதிகாரம் அளிப்பதன் சம்பந்தமாக, மிகாவேலும் அவனுடைய தூதர்களும் சாத்தானுக்கு எதிராகப் போர்செய்து அவனையும் அவனுடைய பொல்லாதத் தூதர்களையும் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளிப்போடுவார்களெனச் சொல்லியிருக்கிறது. பின்னால் இயேசு, பரலோக சேனைகளை இவ்வுலக ராஜ்யங்களுக்கெதிராகப் போர்செய்வதில் தலைமை வகித்து நடத்துவதாகச் சித்தரித்துக் காட்டியிருக்கிறது. (வெளி. 19:11-16) அப்படியானால், “உலகத்தின் அதிபதி” என்று தாம் விவரித்த பிசாசான சாத்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவரும் இயேசுவே என்பது நியாயமாயிருக்கிறதல்லவா? (யோவான் 12:31) தானியேல் 12:1-ல் அதிகாரத்துடன் செயல்படும்படி ‘மிகாவேல் எழும்பி நிற்பது’ “யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலத்”தோடு சம்பந்தப்படுத்தியிருக்கிறது. இது, கிறிஸ்து, பரலோகத் தண்டனைத்தீர்ப்பை நிறைவேற்றுபவராக ராஜ்யங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கையில் அவற்றின் அனுபவத்துக்கு நிச்சயமாகவே பொருந்தும். ஆகையால், கடவுளுடைய குமாரன் தாம் பூமிக்கு வருவதற்கு முன்னால் மிகாவேல் என அறியப்பட்டார் எனவும் மேலும் அவர் கடவுளுடைய மகிமைப்படுத்தப்பட்ட ஆவிக் குமாரனாக இப்பொழுது வாசம்செய்கிற பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றதுமுதற்கொண்டும் அவ்வாறு அறியப்படுகிறாரெனவும் அத்தாட்சி குறித்துக் காட்டுகிறது.
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘நீங்கள் இயேசுவை விசுவாசிப்பதில்லை’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘நீங்கள் இயசுவை விசுவாசிப்பவராகத் தெரிகிறது. நானும் அவ்வாறே விசுவாசிக்கிறேன்; மற்றப்படி நான் இன்று உங்கள் வாசல்முன் இருக்கமாட்டேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘உண்மையில், இயேசுவில் விசுவாசம் வைப்பதன் முக்கியத்துவம் எங்கள் பிரசுரங்களில் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. (நீங்கள் அளிக்கும் புத்தகம் எதுவாயினும் அதில் பொருத்தமான அதிகாரத்துக்குத் திருப்பி இதைக் கலந்துபேசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தி, அரசராக அவர் வகிக்கும் பாகத்தை விளக்கமாகத் தெரியக் காட்டுங்கள். அல்லது காவற்கோபுரத்தின் 2-ம் பக்கத்தில், அந்தப் பத்திரிகையின் நோக்கத்தைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளதை வாசியுங்கள்.)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘நீங்கள் ஏன் அவ்வாறு உணருகிறீர்களென நான் கேட்பதில் தடையேதும் உண்டா?’
பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை: ‘இவ்வாறு எவராவது உங்களுக்குச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அவ்வாறில்லையென நான் சொல்ல விரும்புகிறேன், ஏனெனில் எங்களுக்கு இயேசு கிறிஸ்துவில் மிக உறுதியான விசுவாசம் இருக்கிறது.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘ஆனால் இயேசுவைப்பற்றி ஆட்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாங்கள் நம்புவதில்லை. உதாரணமாக, அவர் வெறும் ஒரு நல்ல மனிதன், கடவுளுடைய குமாரன் அல்ல என சிலர் சொல்கின்றனர். நாங்கள் இதை நம்புகிறதில்லை, நீங்கள் இதை நம்புகிறீர்களா? . . . பைபிள் இவ்வாறு கற்பிக்கிறதில்லை.’ (2) ‘மேலும் தம்முடைய பிதாவுடன் தமக்கு இருக்கும் உறவைப்பற்றி இயேசுதாமே சொல்வதற்கு முரணாகக் கற்பிக்கும் தொகுதிகளின் போதகங்களை நாங்கள் நம்புகிறதில்லை. (யோவான் 14:28) இன்று நம் எல்லாருடைய வாழ்க்கைகளையும் பாதிக்கிற ஆளும் அதிகாரத்தை அவருடைய பிதா அவருக்குக் கொடுத்திருக்கிறார். (தானி. 7:13, 14)’
‘இயேசுவை உங்கள் சொந்த மீட்பராக ஏற்கிறீர்களா?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘பைபிளில் இவ்வாறு கூறியிருக்கிறது . . . (அப்போஸ்தலர் 4:12-ஐ எடுத்துக் குறிப்பிடுங்கள்). நான் இதை நம்புகிறேன். ஆனால் இதோடு கருத்துடன் கவனிக்கவேண்டிய பொறுப்பும் செல்கிறதென நான் கற்றிருக்கிறேன். இது எவ்வாறு? நான் உண்மையில் இயேசுவை விசுவாசித்தால், எனக்கு வசதியாகத் தோன்றுமளவுக்கு மாத்திரமே நான் அவரில் விசுவாசம் வைக்க முடியாது.’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘பலியாகச் செலுத்தப்பட்ட அவருடைய பரிபூரண உயிர் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதை நமக்குச் சாத்தியமாக்குகிறது. ஆனால் கிறிஸ்தவர்களாக நம்முடைய பொறுப்புகளைக் குறித்த அவருடைய கட்டளைகளுக்கும் கவனம் செலுத்துவது இன்றியமையாததென நான் அறிந்திருக்கிறேன். (அப். 1:8; மத். 28:19, 20)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘(உங்களைமட்டுமல்லாமல், அவரில் விசுவாசம் வைக்கும் எல்லாரையும் மீட்பவரென இயேசுவில் நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கும் இந்த உண்மையை உறுதிசெய்தப்பின், . . . ) சென்ற காலத்தில் அவர் செய்ததற்கு மாத்திரமேயல்லாமல் இப்பொழுது அவர் செய்துகொண்டிருப்பவற்றிற்கும் நாம் நன்றியுடன் பிரதிபலிப்பது முக்கியம். (மத். 25:31-33)’
‘நான் இயேசுவை என் சொந்த மீட்பராக ஏற்றிருக்கிறேன்’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘நீங்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டிருப்பதைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, ஏனெனில், இயேசு நமக்காகச் செய்தவற்றிற்கு எவ்வித சிந்தனையும் செலுத்தாத மிகப் பலர் இன்று இருக்கின்றனர். யோவன் 3:16-ல் உள்ள வேதவசனத்தை நீங்கள் சந்தேகமில்லாமல் அறிந்திருப்பீர்கள் அல்லவா? . . . ஆனால் இத்தகைய ஆட்கள் எங்கே என்றென்றும் வாழ்வர்? சிலர் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் இருப்பார்கள். ஆனால் நல்லவர்கள் எல்லாரும் அங்கே செல்கின்றனரென பைபிள் காட்டுகிறதா? (மத். 6:10; 5:5)’