இது கூடாத காரியம்!
“ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.” (மத்தேயு 19:24) இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக இதை சொன்னார். ஒரு செல்வந்தனான வாலிப ஆட்சியாளன், இயேசுவைப் பின்பற்றி அநேக ஆச்சரியமான ஆவிக்குரிய வாய்ப்புகளைப் பெறும் அழைப்பை, சற்றுமுன்புதான் வேண்டாமென தள்ளிவிட்டுச் சென்றிருந்தான். மேசியாவைப் பின்பற்றுவதைக் காட்டிலும் தன்னுடைய செல்வங்களைப் பற்றிக்கொள்வதை அந்த மனிதன் தெரிந்துகொண்டான்.
ஓர் ஐசுவரியவான், ராஜ்ய ஏற்பாட்டில் நித்திய ஜீவனைப் பெறுவது முழுமையாக கூடாத காரியம் என்று இயேசு சொல்லிக்கொண்டில்லை, ஏனென்றால் ஒருசில செல்வச்சிறப்புடைய நபர்கள் அவரைப் பின்பற்றினார்கள். (மத்தேயு 27:57; லூக்கா 19:2, 9) எனினும், ஆவிக்குரிய காரியங்களைவிட தன்னுடைய ஆஸ்திகள்மேல் அதிக அன்பை வைத்திருக்கும் எந்த ஐசுவரியவானுக்கும் இது கூடாத காரியமாக இருக்கும். தன்னுடைய ஆவிக்குரிய தேவைகளைக்குறித்து உணர்வுள்ளவனாகி, தெய்வீக உதவியை நாடுவதன்மூலமே அத்தகைய ஓர் ஆள் கடவுளால் கொடுக்கப்படும் இரட்சிப்பைப் பெறமுடியும்.—மத்தேயு 5:3; 19:16-26.
ஒட்டகமும் ஊசியின் காதும்பற்றிய இந்த உவமை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. ஓர் ஐசுவரியமான, பொருளாசையுடைய வாழ்க்கை பாணியையும் காத்துக்கொண்டு, கடவுளை பிரியப்படுத்த முயற்சிசெய்யும் செல்வந்தர்கள் எதிர்ப்படும் கஷ்டத்தை அழுத்திக்காண்பிப்பதற்காக இயேசு உயர்வுநவிற்சியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.—1 தீமோத்தேயு 6:17-19.
ஊசியின் காது என்பது, ஓர் ஒட்டகம் அதன் சுமைகளின்றி இருந்தால், கஷ்டத்துடன் நுழைந்து செல்லக்கூடிய நகர் சுவரிலுள்ள ஒரு சிறிய வாயில் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் மத்தேயு 19:24 மற்றும் மாற்கு 10:25-ல் “ஊசி” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையாகிய ராஃபிஸ், “தைத்தல்” என்று பொருள்படும் வினைச்சொல்லிலிருந்து வருகிறது. லூக்கா 18:25-ல் பெலோனே என்ற பதம் தைக்கும் ஊசியைக் குறிப்பிடுகிறது; அங்கு புதிய உலக மொழிபெயர்ப்பு வாசிக்கிறது: ‘ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், உண்மையில் ஒட்டகமானது தைக்கும் ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.’ பல அதிகாரங்கள் இந்த மொழிபெயர்ப்பை ஆதரிக்கின்றன. W. E. வைன் கூறுகிறார்: “சிறிய வாயில்களுக்கு ‘ஊசியின் காதை’ பொருத்திக்கூறும் கருத்து நவீனமானதாகத் தோன்றுகிறது; அதை குறித்து பண்டைய தடயங்கள் எதுவும் இல்லை.”—அன் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷனரி ஆப் நியூ டெஸ்டமென்ட் வர்ட்ஸ்.
ஒரு பெரிய ஒட்டகத்தை ஒரு சிறிய தையல் ஊசியின் காதில் பொருத்த முயற்சிசெய்வது, “கிழக்கத்திய மிகைப்படுத்தலின் சுவைநயம்” என்பதாக ஒரு குறிப்பாய்வு கூறுகிறது. மேலும், கூடாத காரியத்தைச் செய்வதாகத் தோன்றும் சில கூரிய அறிவுள்ளவர்களைப்பற்றி, தி பாபிலோனியன் தல்மூட் சொல்கிறது: “அவர்கள் ஒரு யானையை ஓர் ஊசியின் காது வழியாக இழுத்துவிடுகிறார்கள்.” இயேசு உயிர்வு நவிற்சியையே பயன்படுத்தினார்; ஒரு கூடாத காரியத்தை அழுத்திக் காண்பிப்பதற்காக தெளிவான வேறுபாட்டையும் பயன்படுத்தினார். ஓர் ஒட்டகம் அல்லது ஒரு யானை ஓர் ஊசியின் காதினுள் செல்வது கூடாத காரியமாக இருக்கிறது. இருப்பினும், தெய்வீக உதவியுடன், ஓர் ஐசுவரியவான், பொருளாசையுள்ள நோக்குநிலையைத் தவிர்த்துவிட்டு உண்மையிலே நித்திய ஜீவனைத் தேடமுடியும். அவ்வாறே, மகா உன்னத கடவுளாகிய யெகோவாவைப்பற்றி கற்றுக்கொள்ளவும் அவருடைய சித்தத்தைச் செய்யவும் இருதயப்பூர்வ விருப்பத்தைக் கொண்டிருக்கும் எவரும் செய்ய முடியும்.