அதிகாரம் 98
அப்போஸ்தலர்கள் பதவிக்காக ஆசைப்படுகிறார்கள்
மத்தேயு 20:17-28 மாற்கு 10:32-45 லூக்கா 18:31-34
இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி மறுபடியும் சொல்கிறார்
பதவிக்காக வாக்குவாதம் செய்கிற அப்போஸ்தலர்களை இயேசு திருத்துகிறார்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் பெரேயாவிலிருந்து புறப்பட்டு, எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தான் ஆற்றைக் கடந்து, தெற்கே எருசலேமை நோக்கிப் பயணம் செய்கிறார்கள். கி.பி. 33-ஆம் வருஷத்தின் பஸ்காவைக் கொண்டாடுவதற்காக மற்றவர்களும் அவர்களோடு பயணம் செய்கிறார்கள்.
இயேசு தன் சீஷர்களுக்கு முன்னால் நடந்துபோகிறார். பஸ்கா பண்டிகை ஆரம்பிக்கும்போது எருசலேமில் இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானமாக இருக்கிறார். ஆனால், அவருடைய சீஷர்கள் அங்கே போவதற்குப் பயப்படுகிறார்கள். ஏனென்றால், எருசலேமில் ஆபத்து காத்திருக்கிறது. இதற்கு முன்பு, லாசரு இறந்த சமயத்தில் இயேசு பெரேயாவிலிருந்து யூதேயாவுக்குப் புறப்பட்டபோது, “நாம் அவரோடு சேர்ந்து சாக வேண்டியிருந்தாலும் சரி, அவரோடு போகலாம், வாருங்கள்” என்று தோமா மற்ற சீஷர்களிடம் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். (யோவான் 11:16, 47-53) எருசலேமுக்குப் போவதை நினைத்து சீஷர்கள் பயப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
அங்கே போவதற்குமுன் சீஷர்களின் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று இயேசு நினைக்கிறார். அதனால், அவர்களைத் தனியாகக் கூப்பிட்டு, “நாம் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்; மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார், அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து, மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள்; அவர்கள் அவரைக் கேலி செய்து, முள்சாட்டையால் அடித்து, மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள். ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 20:18, 19.
இயேசு தன்னுடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி மூன்றாவது தடவையாகத் தன் சீஷர்களிடம் சொல்கிறார். (மத்தேயு 16:21; 17:22, 23) அவர் மரக் கம்பத்தில் அறையப்பட்டு கொலை செய்யப்படுவார் என்று இப்போது அவர்களிடம் சொல்கிறார். அவர் சொல்வதைக் கேட்டாலும், அதற்கு என்ன அர்த்தம் என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஒருவேளை, இஸ்ரவேல் ராஜ்யம் மறுபடியும் இந்தப் பூமியில் நிலைநாட்டப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். கிறிஸ்து இந்தப் பூமியில் ஆட்சி செய்வார் என்றும், அப்போது தங்களுக்கு மகிமையும் மரியாதையும் கிடைக்கும் என்றும் நினைத்திருக்கலாம்.
அப்போஸ்தலர்களான யாக்கோபு மற்றும் யோவானின் அம்மாவும் இயேசுவுடன் பயணம் செய்கிறாள். அநேகமாக, அவளுடைய பெயர் சலோமேயாக இருக்கலாம். இந்த அப்போஸ்தலர்கள் இரண்டு பேரும் பயங்கர கோபக்காரர்களாக இருப்பதால், இயேசு இவர்களுக்கு “இடிமுழக்க மகன்கள்” என்ற அர்த்தத்தைத் தருகிற ஒரு பெயரை வைத்திருந்தார். (மாற்கு 3:17; லூக்கா 9:54) கிறிஸ்துவின் ஆட்சியில் தங்களுக்கு முக்கியப் பதவி வேண்டும் என்ற ஆசை கொஞ்ச நாளாகவே இவர்கள் மனதில் இருக்கிறது. இவர்களுடைய அம்மாவுக்கும் இது தெரியும். அதனால், இவர்களுடைய சார்பாகப் பேச அவள் இயேசுவிடம் போகிறாள். அவர் முன்னால் தலைவணங்கி, தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறாள். அவர் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார். அதற்கு அவள், “நீங்கள் ராஜாவாகும்போது, என்னுடைய மகன்களில் ஒருவனை உங்களுடைய வலது பக்கத்திலும் இன்னொருவனை இடது பக்கத்திலும் உட்கார வைப்பதாக வாக்குக் கொடுங்கள்” என்று கேட்கிறாள்.—மத்தேயு 20:20, 21.
உண்மையில் யாக்கோபும் யோவானும்தான் இதைக் கேட்கும்படி தங்கள் அம்மாவிடம் சொல்லியிருந்தார்கள். தான் அனுபவிக்கப்போகிற அவமானத்தைப் பற்றி அப்போதுதான் இயேசு அவர்களிடம் சொல்லியிருந்தார். அதனால் இயேசு அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “முடியும்” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 20:22) அநேகமாக, இயேசு கேட்டதற்கு என்ன அர்த்தம் என்று முழுமையாகப் புரிந்துகொள்ளாமலேயே அவர்கள் பதில் சொல்லியிருக்கலாம்.
ஆனாலும் இயேசு அவர்களிடம், “உண்மைதான், நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்; ஆனால், என்னுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை. என் தகப்பன் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள்தான் அங்கே உட்கார முடியும்” என்று சொல்கிறார்.—மத்தேயு 20:23.
யாக்கோபும் யோவானும் செய்ததைக் கேள்விப்பட்டபோது, மற்ற அப்போஸ்தலர்கள் ரொம்பக் கோபப்படுகிறார்கள். இதற்கு முன்பு, தங்களில் யார் உயர்ந்தவர் என்று அப்போஸ்தலர்களுக்குள் பிரச்சினை வந்தபோது யாக்கோபும் யோவானும் மும்முரமாக வாக்குவாதம் செய்திருப்பார்களோ? (லூக்கா 9:46-48) மொத்தத்தில், தன்னைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று இயேசு கொடுத்த அறிவுரையை இந்தப் பன்னிரண்டு பேரும் கடைப்பிடிக்கவில்லை என்பது இந்தச் சம்பவத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. முக்கியப் பதவி வேண்டும் என்ற ஆசை அவர்கள் மனதிலிருந்து இன்னமும் போகவில்லை.
இந்தப் பிரச்சினையையும் அதனால் ஏற்பட்ட மனக்கசப்பையும் சரிசெய்ய வேண்டும் என்று இயேசு நினைக்கிறார். அதனால் பன்னிரண்டு பேரையும் கூப்பிட்டு, “மற்ற தேசத்து ஆட்சியாளர்கள் மக்களை அடக்கி ஆளுவதும், உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும். உங்களில் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் எல்லாருக்கும் அடிமையாக இருக்க வேண்டும்” என்று அன்பாக ஆலோசனை கொடுக்கிறார்.—மாற்கு 10:42-44.
அவர்கள் தன்னுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு சொல்கிறார். “மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே வந்தார்” என்று விளக்குகிறார். (மத்தேயு 20:28) கிட்டத்தட்ட மூன்று வருஷங்களாக, இயேசு மற்றவர்களுக்குச் சேவை செய்துவருகிறார். கடைசியில், மனிதர்களுக்காகத் தன்னுடைய உயிரையே கொடுப்பார். கிறிஸ்துவுக்கு இருக்கிற அதே மனப்பான்மை அவருடைய சீஷர்களுக்கும் இருக்க வேண்டும். மற்றவர்கள் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படாமல், அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். பதவி, அந்தஸ்து என ஆசைப்படாமல், தங்களைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்.