சபை பக்திவிருத்தி அடைவதாக
‘சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்தன.’—அப்போஸ்தலர் 9:31.
1. “தேவனுடைய சபை”யைக் குறித்து என்ன கேள்விகள் எழலாம்?
கிறிஸ்துவின் சீஷர்கள் அடங்கிய ஒரு தொகுதியை பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று, ஒரு புதிய தேசமாக, ‘தேவனுடைய இஸ்ரவேலராக’ யெகோவா ஏற்றுக்கொண்டார். (கலாத்தியர் 6:16) ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள், பைபிள் அழைக்கும் விதமாக, ‘தேவனுடைய சபையாகவும்’ ஆனார்கள். (1 கொரிந்தியர் 11:22) தேவனுடைய சபையாக ஆவதில் என்ன உட்பட்டுள்ளது? “தேவனுடைய சபை” எவ்வாறு ஒழுங்கமைக்கப்படும்? பூமியில் அதன் அங்கத்தினர்கள் எங்கு வாழ்ந்தாலும், அது எவ்வாறு பூமியில் செயல்படும்? நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியும் எவ்வாறு அதன்மீது சார்ந்திருக்கிறது?
2, 3. ஒழுங்கமைப்புடன் சபை செயல்படும் என்பதை இயேசு எவ்வாறு சுட்டிக்காட்டினார்?
2 முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி, அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களைக் கொண்ட சபை ஒன்று உருவாகும் என்று இயேசு முன்னுரைத்திருந்தார். அதைக் குறித்து அப்போஸ்தலன் பேதுருவிடம் இவ்வாறு கூறினார்: “இந்தக் கல்லின்மேல் [இயேசு கிறிஸ்துவின் மேல்] என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” (மத்தேயு 16:18) அதுமட்டுமின்றி, விரைவில் உருவாகவிருந்த அந்தச் சபையின் செயல்பாடுகளையும் அது ஒழுங்கமைக்கப்படும் விதத்தையும் குறித்து பூமியில் தம் அப்போஸ்தலர்களுடன் இருக்கையிலேயே இயேசு தகவல்களை அளித்தார்.
3 சபையில் உள்ள சிலர் முன்னின்று நடத்துவார்கள் என்பதை இயேசு தம் சொல்லின் மூலமாகவும் செயலின் மூலமாகவும் தெரிவித்தார். அவர்கள் தங்கள் சபையில் இருக்கும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் முன்னின்று நடத்துவார்கள். கிறிஸ்து இவ்வாறு கூறினார்: “புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” (மாற்கு 10:42-44) இதிலிருந்து, “தேவனுடைய சபை” அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியிருக்கிற அங்கத்தினர்களைக் கொண்டதாக, ஒழுங்கமைப்பின்றி இருக்காது என்பது தெளிவாகிறது. மாறாக, ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்பாடு இருக்கும்; அதிலிருக்கும் நபர்கள் ஒன்றுசேர்ந்து உழைப்பார்கள்.
4, 5. சபைக்கு ஆன்மீக போதனை தேவைப்படும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
4 “தேவனுடைய சபை”க்கு கிறிஸ்துவே தலைவராய் ஆகவிருந்தார். தம்மிடமிருந்து கற்றுக்கொண்ட அப்போஸ்தலர்களும் மற்றவர்களும், சபையிலுள்ள பிற ஆட்களைக் கவனித்துக்கொள்ளும் குறிப்பிட்ட பொறுப்புகளைக் கொண்டிருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். அவர்கள் என்ன செய்வார்கள்? சபையாருக்கு யெகோவாவைப்பற்றி கற்றுக்கொடுப்பதே அவர்களுடைய மிக முக்கியப் பணியாக இருக்கும். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, மற்ற சீஷர்களின் முன்னிலையில் பேதுருவிடம் பின்வருமாறு சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, . . . நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா”? அதற்கு பேதுரு, “ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்று பதிலளித்தார். அவரிடம் இயேசு பின்வருமாறு கூறினார்: “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக . . . என் ஆடுகளை மேய்ப்பாயாக . . . என் ஆடுகளை மேய்ப்பாயாக.” (யோவான் 21:15-17) அது மிக முக்கியமான பொறுப்பு, அல்லவா?
5 சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்படும் ஆட்கள், தொழுவத்தில் உள்ள ஆடுகளுக்கு ஒப்பிடப்படுவதை இயேசுவின் வார்த்தைகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. கிறிஸ்தவ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரே இந்த ஆடுகள். இவர்களுக்கு ஆன்மீக உணவளித்து, இவர்களைச் சரியாக வழிநடத்த வேண்டியுள்ளது. அதோடு, இயேசு தம்மைப் பின்பற்றுவோர் அனைவரும் மற்றவர்களுக்குக் கற்பித்து, அவர்களைச் சீஷராக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதால், அவருடைய மந்தைக்குள் வருகிற புதியவர்கள் இந்தத் தெய்வீக நியமிப்பை நிறைவேற்றுவதற்குப் பயிற்சியளிக்கப்பட வேண்டும்.—மத்தேயு 28:19, 20.
6. புதிதாக உருவான ‘தேவனுடைய சபையில்’ என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன?
6 “தேவனுடைய சபை” உருவானபோது, அதன் அங்கத்தினர்கள் போதனையைப் பெறுவதற்காகவும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்காகவும் தவறாமல் ஒன்றுகூடி வந்தார்கள். “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” (அப்போஸ்தலர் 2:42, 46, 47) தகுதிபெற்ற ஆண்கள் சிலர் நடைமுறையான சில காரியங்களைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டார்கள் என்பது சரித்திரப் பதிவில் காணப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். உயர் கல்வியின் அடிப்படையிலோ தொழில் திறமைகளின் அடிப்படையிலோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர்கள் ‘பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்தவர்களாய்’ இருந்தார்கள். அவர்களில் ஸ்தேவானும் ஒருவர். அவர் ‘விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவராய்’ இருந்ததாக பதிவு சொல்கிறது. இவ்விதமாக சபைகள் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்ததன் பலனாக, “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று.”—அப்போஸ்தலர் 6:1-7.
தேவனால் பயன்படுத்தப்படும் மனிதர்கள்
7, 8. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் என்னவாக சேவை செய்தார்கள்? (ஆ) சபைகளின் மூலமாக ஆலோசனைகள் கொடுக்கப்பட்டபோது என்ன பலன் ஏற்பட்டது?
7 ஆரம்பகால சபை ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் முன்னின்று செயல்பட்டார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அவர்கள் மட்டுமே முன்னின்று நடத்தவில்லை. ஒருசமயம், பவுலும் அவருடைய தோழர்களும் சிரியாவின் அந்தியோகியா பட்டணத்திற்குத் திரும்பினார்கள். அப்போஸ்தலர் 14:27 இவ்வாறு விவரிக்கிறது: ‘அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவற்றை . . . அறிவித்தார்கள்.’ அவர்கள் அந்தச் சபையில் இருந்தபோதே, புறஜாதிகளைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பவுலும் பர்னபாவும் “எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும்” அனுப்பப்பட்டார்கள்; ஏனெனில், அவர்கள்தான் ஆளும் குழுவாகச் செயல்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 15:1-3.
8 “அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடி” வந்தபோது, யாக்கோபு தலைமைதாங்கினார்; இவர் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர், கிறிஸ்தவ மூப்பர், ஆனால் அப்போஸ்தலன் அல்ல. (அப்போஸ்தலர் 15:6) அவர்கள் காரியங்களைக் கலந்தாலோசித்து, கவனமாக ஆராய்ந்த பிறகு, பரிசுத்த ஆவியின் துணையோடு வேதவாக்கியங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தார்கள். இந்தத் தீர்மானத்தை கடிதத்தின் மூலமாக சபைகளுக்கு எழுதி அனுப்பினார்கள். (அப்போஸ்தலர் 15:22-32) சபையார் இதை ஏற்றுக்கொண்டு, கடைப்பிடித்தார்கள். இதன் பலன்? சகோதர சகோதரிகள் பக்திவிருத்தியடைந்து, ஊக்கம் பெற்றார்கள். “அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின” என்று பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 16:5.
9. தகுதிவாய்ந்த கிறிஸ்தவ ஆண்களுக்கு என்ன பொறுப்புகள் இருப்பதாக பைபிள் கூறுகிறது?
9 சபைகள் எவ்வாறு ஒவ்வொரு நாளும் செயல்பட்டன? உதாரணமாக, கிரேத்தா தீவில் இருந்த சபைகளைக் கவனியுங்கள். அந்த இடத்தைச் சேர்ந்த அநேகர் கெட்ட பழக்கவழக்கங்களுக்குப் பேர்போனவர்களாய் இருந்தாலும், அவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு, உண்மைக் கிறிஸ்தவர்களாக ஆனார்கள். (தீத்து 1:10-12; 2:2, 3) அவர்கள் வெவ்வேறு பட்டணங்களில் வாழ்ந்து வந்தார்கள். அவை எருசலேமில் இருந்த ஆளும் குழுவிற்கு வெகு தூரத்தில் இருந்தன. என்றாலும், அது ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கவில்லை. காரணம், ஆன்மீக முதிர்ச்சியுள்ள ‘மூப்பர்கள்’ மற்ற இடங்களில் இருந்த சபைகளில் சேவை செய்ததைப் போன்றே கிரேத்தாவில் இருந்த சபைகளுக்கும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் மூப்பர்களாக, அதாவது கண்காணிகளாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள், “ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும்” வேண்டியிருந்தது. (தீத்து 1:5-9; 1 தீமோத்தேயு 3:1-7) பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட மற்றவர்கள், சபைக்கு உதவுவதற்காக உதவி ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்கள்.—1 தீமோத்தேயு 3:8-10, 12, 13.
10. மத்தேயு 18:15-17-ன்படி, மோசமான பிரச்சினைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும்?
10 இப்படிப்பட்ட ஓர் ஏற்பாடு இருக்கும் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். மத்தேயு 18:15-17-ல் உள்ள பதிவை நினைவுபடுத்திப் பாருங்கள். சில சமயங்களில் கடவுளுடைய ஜனங்களில் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக ஏதோவொரு விதத்தில் தவறிழைக்கும்போது அவர்களுக்கிடையே பிரச்சினைகள் எழலாம் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட நபர் தனக்கு எதிராகத் தவறிழைத்தவரை அணுகி, அவர்கள் இருவர் மட்டும் இருக்கையில் ‘அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்த’ வேண்டும். இதனால் எந்தப் பிரயோஜனமும் ஏற்படவில்லை என்றால், இந்தப் பிரச்சினையைக் குறித்து நன்கறிந்த ஓரிரண்டு பேரை வைத்துப் பேசலாம். அப்போதும் பிரச்சினை தீரவில்லை என்றால்? இயேசு இவ்வாறு பதிலளித்தார்: ‘அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.’ இயேசு அதைச் சொன்ன சமயத்தில், யூதர்கள் “தேவனுடைய சபை”யாக இருந்தார்கள். ஆகவே அவருடைய வார்த்தைகள் முதலில் அவர்களுக்குப் பொருந்தின.a என்றாலும், கிறிஸ்தவ சபை உருவான பிறகு, இயேசுவின் வார்த்தைகள் அந்தச் சபைக்கே பொருந்தின. இந்தப் பதிவும்கூட, கடவுளுடைய ஜனங்கள் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சபையைக் கொண்டிருப்பார்கள் என்பதையும், அந்தச் சபையின் மூலம் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் பலத்தையும் வழிநடத்துதலையும் பெறுவார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
11. பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மூப்பர்கள் என்ன பங்கை வகித்தார்கள்?
11 இதன்படி மூப்பர்கள், அதாவது, கண்காணிகள் மோசமான பிரச்சினைகளைக் கையாளுகையிலோ அவற்றைத் தீர்த்து வைக்கையிலோ சபையின் சார்பாகச் செயல்படுகிறார்கள். இது, தீத்து 1:9-ல் சொல்லப்பட்டுள்ள மூப்பர்களுக்கான தகுதிகளோடு ஒத்திருக்கிறது. “குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கு” தீத்துவை சபைகளுக்கு பவுல் அனுப்பினார்; தீத்துவும் சரி அவரைப் போலவே சபைகளில் இருந்த மற்ற மூப்பர்களும் சரி, அனைவரும் அபூரணரே. (தீத்து 1:4, 5) இன்று, மூப்பர்களாக சிபாரிசு செய்யப்படுகிறவர்கள், அவ்வாறு நியமிக்கப்படுவதற்கு முன்னரே தங்களுடைய விசுவாசத்தையும் தேவபக்தியையும் நிரூபித்திருக்க வேண்டும். இப்படிச் செய்கையில், சபையிலுள்ள மற்றவர்கள் இந்த ஏற்பாட்டின் மூலமாக அளிக்கப்படும் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளவும் தலைமையேற்று நடத்துபவர்களை நம்பவும் முடிகிறது.
12. சபையில் மூப்பர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
12 எபேசு சபையின் மூப்பர்களிடம் பவுல் பின்வருமாறு கூறினார்: “உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய [“குமாரனுடைய,” NW] சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) அன்று போலவே, இன்றும் கண்காணிகள் ‘தேவனுடைய சபையைக் கண்காணிப்பதற்கே’ நியமிக்கப்பட்டுள்ளார்கள். கண்காணிக்கும் பொறுப்பை அவர்கள் அன்பாகச் செய்ய வேண்டும். மந்தையின் மீது அதிகாரம் செலுத்தக்கூடாது. (1 பேதுரு 5:2, 3) “மந்தை முழுவதையும்” பலப்படுத்தவும் அவர்களுக்கு உதவவும் கண்காணிகள் முயல வேண்டும்.
சபையோடு நெருங்கியிருத்தல்
13. சில சமயங்களில், சபையில் என்ன நேரிடலாம், ஏன்?
13 மூப்பர்களும் சரி சபையிலுள்ள மற்றவர்களும் சரி, அனைவரும் அபூரணரே. ஆகையால் அவ்வப்போது கருத்துவேறுபாடுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகள் முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலர்கள் சிலர் இருந்த சமயத்திலேயே எழுந்தன. (பிலிப்பியர் 4:2, 3) கண்காணியோ வேறொருவரோ கடுகடுப்பாகவோ, கனிவற்ற விதத்திலோ பேசலாம், அல்லது முற்றிலும் உண்மையல்லாத ஒன்றைச் சொல்லலாம். இல்லையெனில், பைபிளுக்கு முரணான ஏதோவொன்று நடப்பதாகவும், சபை மூப்பர்களுக்குத் தெரிந்திருந்தும் அதை அவர்கள் சரிசெய்யாமல் இருக்கிறார்கள் என்றும் நமக்குத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அந்தப் பிரச்சினை பைபிள் அடிப்படையில் கையாளப்பட்டிருக்கலாம் அல்லது கையாளப்பட்டு வரலாம். அதோடு, நமக்குத் தெரியாத உண்மைகள் அதில் உட்பட்டிருக்கலாம். ஒருவேளை நாம் நினைப்பதுபோல் பைபிளுக்கு முரணாக ஏதோவொன்று நடந்துகொண்டிருந்தாலும் பின்வரும் விஷயத்தை மனதில் வைக்கலாம்: கொஞ்ச காலத்திற்கு, கொரிந்து சபையில் மோசமான பிரச்சினை ஒன்று நடந்துகொண்டிருந்தது. அந்தச் சபையும் யெகோவாவின் கவனிப்பின்கீழ்தான் இருந்தது. தக்க சமயத்தில், அந்தப் பிரச்சினை சரியாகவும் உறுதியாகவும் கையாளப்பட யெகோவா நடவடிக்கை எடுத்தார். (1 கொரிந்தியர் 5:1, 5, 9-11) ‘அந்தச் சமயத்தில் நான் கொரிந்துவில் இருந்திருந்தால், அந்தப் பிரச்சினை கையாளப்படும்வரையில் என்ன செய்திருப்பேன்’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்.
14, 15. இயேசுவைப் பின்பற்றுவதை சிலர் நிறுத்தியது ஏன், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
14 சபையில் ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சினையைக் கவனியுங்கள். பைபிள் போதனை ஒன்றைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் கடினமாய் இருப்பதாக ஒருவர் உணருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் பைபிளையும் சபையின் மூலமாய் கிடைக்கும் பிரசுரங்களையும் வைத்து ஆராய்ச்சி செய்திருக்கலாம்; முதிர்ச்சிவாய்ந்த சக கிறிஸ்தவர்களிடம், ஏன் மூப்பர்களிடம்கூட உதவி கேட்டிருக்கலாம். இருப்பினும், அவரால் ஒரு கருத்தைப் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அவர் என்ன செய்யலாம்? அதுபோன்ற ஒன்று, இயேசு மரிப்பதற்கு ஓராண்டுக்கு முன் நடைபெற்றது. தான் “ஜீவ அப்பம்” எனவும், என்றென்றும் வாழ்வதற்கு ஒரு நபர் ‘மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ண வேண்டும்’ எனவும் அவர் கூறினார். அதைக் கேட்டு அவருடைய சீஷர்களில் சிலர் அதிர்ச்சியடைந்தார்கள். அதற்கான விளக்கத்தைக் கேட்கவோ, விசுவாசத்தோடு காத்திருக்கவோ மனதில்லாமல் அநேக சீஷர்கள் “[இயேசுவுடனே]கூட நடவாமல் போனார்கள்.” (யோவான் 6:35, 41-66) நாம் அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்பதையும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்.
15 இந்தக் காலத்திலும், சபையோடு கூடிவருவதை சிலர் நிறுத்தியிருக்கிறார்கள்; தாங்கள் தனியாகவே கடவுளுக்குச் சேவை செய்துகொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் புண்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம் என்று அவர்கள் கூறலாம், அல்லது ஏதோவொரு தவறு சரிசெய்யப்படவில்லை என்று அவர்கள் நினைக்கலாம், அல்லது சில போதனைகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கலாம். இதற்காக சபைக்கு வருவதை நிறுத்துவது ஞானமானதா? ஒவ்வொரு கிறிஸ்தவனும் கடவுளுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பது உண்மையே. இருந்தாலும், அப்போஸ்தலர்களுடைய நாட்களில் இருந்ததைப் போலவே இன்றும் கடவுள் உலகளாவிய சபையைப் பயன்படுத்தி வருகிறார் என்பதை நம்மால் மறுக்க முடியாது. கூடுதலாக, முதல் நூற்றாண்டில் இருந்த சபைகளை யெகோவா பயன்படுத்தினார், அவற்றை ஆசீர்வதித்தார். சபைகளைப் பலப்படுத்துவதற்காக தகுதிவாய்ந்த மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் ஏற்படுத்தினார். இன்றும் அவ்வாறே செய்கிறார்.
16. சபையை விட்டு விலக ஒருவர் தூண்டப்பட்டால், அவர் எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்?
16 கடவுளுடைய ஜனங்களின் உலகளாவிய சபையும் உள்ளூர் சபைகளும் அவர் செய்த ஏற்பாடாகும். ஒரு கிறிஸ்தவர் கடவுளுடன் தனக்கு இருக்கும் உறவே போதும் என்று நினைத்தால், கடவுள் செய்திருக்கும் இந்த ஏற்பாட்டை அவர் ஒதுக்கித் தள்ளுகிறார் என்றே அர்த்தம். அவர் தனியாக கடவுளை வணங்கலாம் அல்லது ஒரு சிலரோடு கூடிவரலாம். ஆனால், சபை மூப்பர்கள், உதவி ஊழியர்கள் போன்ற ஏற்பாடெல்லாம் அங்கு இருக்காதே! கொலோசே சபைக்கு பவுல் கடிதம் எழுதி, அதை லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கும்படி சொன்னபோது, ‘[கிறிஸ்துவுக்குள்] வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும்,’ இருக்கும்படி கூறினார் என்பதைக் கவனிக்க வேண்டும். சபையில் இருப்பவர்கள்தான் இந்த ஏற்பாட்டில் இருந்து பயனடைவார்களே தவிர, சபையில் இருந்து தங்களைப் பிரித்துக்கொள்பவர்கள் அல்ல.—கொலோசெயர் 2:6, 7; 4:16.
சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமும்
17. சபையைக் குறித்து 1 தீமோத்தேயு 3:15 என்ன காட்டுகிறது?
17 கிறிஸ்தவ மூப்பரான தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், சபையில் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்வோருக்கான தகுதிகளை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அதற்குப் பின் உடனடியாக, “ஜீவனுள்ள தேவனுடைய சபை” பற்றி குறிப்பிட்டு, அது “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது” என்றும் சொன்னார். (1 தீமோத்தேயு 3:15) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்ட சபை முழுவதும், முதல் நூற்றாண்டில் நிச்சயமாகவே அப்படிப்பட்ட தூணாக விளங்கியது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் அந்தச் சத்தியத்தை சபையின் மூலமாக மட்டுமே பெற முடியும் என்பது உறுதி. அங்குதான் பைபிள் சத்தியம் போதிக்கப்படுகிறது, ஆதரிக்கப்படுகிறது. அங்குதான் அவர்கள் பலப்படுத்தப்படுவார்கள்.
18. சபை கூட்டங்கள் ஏன் முக்கியம்?
18 அவ்வாறே, உலகளாவிய கிறிஸ்தவ சபை கடவுளுடைய வீடாகவும் “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.” சபை கூட்டங்களில் தவறாமல் கூடிவந்து, அதில் கலந்துகொள்வது, கடவுளுடன் நாம் வைத்திருக்கும் உறவில் பலப்படுத்தப்படுவதற்கும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்குத் தயாராக இருப்பதற்கும் உதவுகிற முக்கிய வழியாக இருக்கிறது. கொரிந்து சபைக்கு எழுதுகையில், கூட்டங்களில் சொல்லப்படும் விஷயங்களுக்கு பவுல் கவனம் செலுத்தினார். கூட்டங்களில் சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாகவும் புரிந்துகொள்ளும் விதத்திலும் இருக்க வேண்டுமென்று தான் விரும்புவதாகக் கூறினார். அப்போதுதான் அதில் கலந்துகொள்பவர்கள் ‘பக்திவிருத்தி’ [“வளர்ச்சி,” பொ.மொ.] அடைய முடியும் என்று அவர் எழுதினார். (1 கொரிந்தியர் 14:12, 17-19) சபை ஏற்பாட்டை யெகோவா நிறுவியிருக்கிறார், ஆதரிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டால் நாமும் அவ்விதமாக பக்திவிருத்தி அடைய முடியும்.
19. உங்களது சபைக்கு நன்றியுள்ளவர்களாய் ஏன் உணருகிறீர்கள்?
19 உண்மையில், நாம் கிறிஸ்தவர்களாக பக்திவிருத்தியடைய விரும்பினால், சபையில் நிலைத்திருக்க வேண்டும். காலங்காலமாக, அது பொய்ப் போதனைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாக இருந்திருக்கிறது. மேசியானிய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பூமியெங்கும் அறிவிக்கப்படுவதற்கு இதையே கடவுள் பயன்படுத்தி வருகிறார். கிறிஸ்தவ சபையின் மூலமாக கடவுள் பல காரியங்களை நிறைவேற்றி வருகிறார் என்பதில் சந்தேகமேயில்லை.—எபேசியர் 3:9, 10.
[அடிக்குறிப்பு]
a “சபைக்குத் தெரியப்படுத்து” என்ற இயேசுவின் வார்த்தைகள் “இப்படிப்பட்ட பிரச்சினைகளை விசாரிக்க அதிகாரம் பெற்றவர்களை, அதாவது சர்ச் பிரதிநிதிகளை” அர்த்தப்படுத்தலாம் என்று பைபிள் அறிஞர் ஆல்பர்ட் பார்ன்ஸ் கூறுகிறார். “யூத உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாகச் சேவை செய்த மூப்பர்களின் கவனத்திற்கு இதுபோன்ற பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டன.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுள் பூமியில் சபைகளைப் பயன்படுத்துவார் என நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
• அபூரணர்களாய் இருந்தாலும், மூப்பர்கள் சபைகளுக்கு என்ன செய்கிறார்கள்?
• உங்களுடைய வளர்ச்சிக்கு உங்கள் சபை எப்படி உதவியிருப்பதாக நினைக்கிறீர்கள்?
[பக்கம் 26-ன் படம்]
அப்போஸ்தலர்களும் எருசலேமிலிருந்த மூப்பர்களும் ஆளும் குழுவாகச் செயல்பட்டார்கள்
[பக்கம் 28-ன் படம்]
சபையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் போதனை அளிக்கப்படுகிறது