இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
மத்தேயு அழைக்கப்படுகிறான்
அந்தத் திமிர்வாதக்காரனை சுகப்படுத்தியதற்குப் பின்பு இயேசு கப்பர்நகூமைவிட்டு கலிலேயா கடலுக்குச் செல்கிறார். மக்கள் கூட்டம் மறுபடியும் அந்த இடத்திற்கு வர, இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் துவங்குகிறார். அவர் நடந்து செல்லும்போது மத்தேயுவைப் பார்க்கிறார். இவன் லேவி என்றும் அழைக்கப்படுகிறான். இவன் வரி வசூலிக்கப்படும் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். “எனக்குப் பின்சென்றுவா” என்பது இயேசுவின் அழைப்பு.
பேதுரு அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியவர்கள் போல் மத்தேயுவும் அழைக்கப்பட்ட சமயத்தில் இயேசுவின் போதனைகளை ஏற்கெனவே அறிந்தவனாயிருக்கிறான். அவர்களைப் போலவே மத்தேயுவும் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அவன் எழுந்து, வரி வசூலிப்பவனாகத் தன் உத்தரவாதங்களைப் பின்னால் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகிறான்.
அதற்குப் பின்பு மத்தேயு தன் வீட்டில் ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்துகிறான். ஒருவேளை, தான் அழைப்பைப் பெற்றது குறித்து களிகூருவதற்காக இந்த ஓர் ஏற்பாட்டை செய்திருக்கக்கூடும். இயேசுவும் அவருடைய சீஷர்களும் அழைக்கப்பட்டது மட்டுமல்லாமல், மத்தேயுவின் முன் கூட்டாளிகளுங்கூட அந்த விருந்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மனிதர்கள் தங்களால் பகைக்கப்பட்ட ரோம அதிகாரிகளுக்கு வரி வசூலித்ததற்காக உடன் யூதரால் வெறுக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் அடிக்கடி ஒழுங்காக வசூலிக்கும் குறிப்பிடப்பட்ட தொகையைவிட கூடுதலான தொகையை நேர்மையற்ற விதத்தில் வசூலித்து வருகிறார்கள்.
அந்த விருந்தில் அப்படிப்பட்ட ஆட்களுடன் இயேசுவும் இருப்பதைக் கண்டு பரிசேயர்கள் அவருடைய சீஷர்களிடம் “உங்களுடைய போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன?” என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்வி இவருடைய செவிகளுக்கு எட்டுகிறது, இயேசு பின்வருமாறு பதிலளிக்கிறார்: “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; ‘பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள், நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்.”
அந்த ஆயக்காரரும் இயேசுவுக்குச் செவிகொடுத்து ஆவிக்குரிய சுகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மத்தேயு அவர்களைத் தன் வீட்டிற்கு வரவழைத்திருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் கடவுளோடு ஓர் ஆரோக்கியமான உறவைப் பெற்றுக்கொள்ள உதவும் நோக்கத்துடன் இயேசு அவர்களோடு கூட்டுறவு கொள்கிறார். இந்தச் சுய நீதி நாடும் பரிசேயரைப் போல இயேசு அப்படிப்பட்டவர்களை வெறுக்கவில்லை. மாறாக, அவர் தயை பொருந்தியவராக இவர்களுக்கு ஓர் ஆவிக்குரிய மருத்துவராக சேவிக்கிறார்.
இப்படியாக இயேசு பாவிகளிடம் இரக்கம் காண்பிப்பது அவர்களுடைய பாவங்களை ஆதரிப்பதாயிருக்கவில்லை, ஆனால் சரீர சுகவீனமுள்ளவர்களிடமாகக் காண்பிக்கப்பட்ட அதே விதமான உருக்கமான உணர்ச்சிகளின் வெளிக்காட்டாக இருக்கிறது. உதாரணமாக அவர் மனமிரங்கி அந்தக் குஷ்டரோகியைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்று சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள். அதுபோன்று, தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், விசேஷமாக அவர்களுக்கு ஆவிக்குரிய உதவி அளிப்பதன் மூலம் நாமும் இரக்கம் காட்டுவோமாக. மத்தேயு 8:3; 9:9-13; மாற்கு 2:13-17; லூக்கா 5:27-32.
◆ இயேசு மத்தேயுவைப் பார்க்கும் சமயத்தில் எங்கு இருக்கிறார்?
◆ மத்தேயுவின் தொழில் என்ன? அப்படிப்பட்ட ஆட்கள் ஏன் யூதரால் வெறுக்கப்படுகிறார்கள்?
◆ இயேசுவுக்கு எதிராக என்ன குறை கூறப்பட்டது? அதற்கு அவர் எப்படிப் பதிலளிக்கிறார்?
◆ இயேசு ஏன் பாவிகளோடு கூட்டுறவு கொள்கிறார்?
(w86 5/15)