அதிகாரம் 105
அத்தி மரத்தை வைத்து ஒரு பாடம்
மத்தேயு 21:19-27 மாற்கு 11:19-33 லூக்கா 20:1-8
பட்டுப்போன அத்தி மரம்—விசுவாசத்தைப் பற்றிய பாடம்
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிய கேள்வி
இயேசு திங்கள்கிழமை மத்தியானம் எருசலேமிலிருந்து புறப்பட்டு, ஒலிவ மலையின் கிழக்கு மலைச்சரிவில் இருக்கிற பெத்தானியாவுக்குப் போகிறார். அநேகமாக, அன்று ராத்திரி அவர் தன்னுடைய நண்பர்களான லாசரு, மரியாள் மற்றும் மார்த்தாளின் வீட்டில் தங்கியிருக்கலாம்.
இப்போது நிசான் 11, காலை நேரம். இயேசுவும் அவருடைய சீஷர்களும் மறுபடியும் எருசலேமுக்குப் பயணம் செய்கிறார்கள். அவர் ஆலயத்துக்குப் போகிற கடைசி தடவை இதுதான். அவருடைய ஊழியத்தின் கடைசி நாளும் இதுதான். இதற்குப் பிறகு அவர் பஸ்காவைக் கொண்டாடிவிட்டு, தன்னுடைய மரண நினைவுநாள் அனுசரிப்பை ஆரம்பித்துவைப்பார். பிறகு, அவர் விசாரணை செய்யப்பட்டு, கொல்லப்படுவார்.
ஒலிவ மலையில் இருக்கிற பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்குப் போகும் வழியில், முந்தின நாள் காலையில் இயேசு சபித்த அத்தி மரத்தை பேதுரு பார்க்கிறார். உடனே, “ரபீ, இதோ! நீங்கள் சபித்த அத்தி மரம் பட்டுப்போய்விட்டது” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறார்.—மாற்கு 11:21.
இயேசு ஏன் அந்த அத்தி மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார்? அவர் சொல்கிற பதிலிலிருந்து அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருந்தால், நான் இந்த அத்தி மரத்துக்குச் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய்க் கடலில் விழு’ என்று சொன்னாலும் அது அப்படியே நடக்கும். விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் சொல்கிறார். (மத்தேயு 21:21, 22) விசுவாசத்தால் மலையையும் பெயர்க்க முடியும் என்று இதற்கு முன்பு சொன்ன அதே விஷயத்தைத்தான் இயேசு இப்போது திரும்பவும் சொல்கிறார்.—மத்தேயு 17:20.
கடவுள்மேல் விசுவாசம் வைப்பது அவசியம் என்பதைப் புரிய வைப்பதற்காகத்தான் இயேசு அந்த மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார். “நீங்கள் கடவுளிடம் எதையெல்லாம் கேட்கிறீர்களோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டதாகவே விசுவாசியுங்கள், அப்போது அதையெல்லாம் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்” என்று சொல்கிறார். (மாற்கு 11:24) இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே இது ஒரு முக்கியமான பாடம். குறிப்பாக, இது அப்போஸ்தலர்களுக்குச் சரியான சமயத்தில் கொடுக்கப்படுகிற ஆலோசனை. ஏனென்றால், சீக்கிரத்திலேயே அவர்கள் பயங்கரமான சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டுப்போன அத்தி மரத்துக்கும் விசுவாசத்துக்கும் இன்னொரு சம்பந்தமும் இருக்கிறது.
இஸ்ரவேல் தேசத்து மக்கள் அந்த அத்தி மரத்தைப் போல ஏமாற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் ஒரு ஒப்பந்தத்துக்குள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களைப் போலத் தெரியலாம். ஆனால் ஒரு தேசமாக அவர்கள் விசுவாசத்தையும் காட்டுவதில்லை, நல்ல கனிகளையும் கொடுப்பதில்லை. அவர்கள் கடவுளுடைய சொந்த மகனையே ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அதனால், கனி கொடுக்காத அத்தி மரத்தைப் பட்டுப்போக வைப்பதன் மூலம், விசுவாசமில்லாத, கனி தராத இந்தத் தேசத்துக்கு என்ன கதி ஏற்படப்போகிறது என்பதை இயேசு காட்டுகிறார்.
சீக்கிரத்திலேயே, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குள் நுழைகிறார்கள். வழக்கம்போல, இயேசு ஆலயத்துக்குப் போய்க் கற்பிக்க ஆரம்பிக்கிறார். முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அங்கே வந்து, “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? இதையெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்று கேட்கிறார்கள். (மாற்கு 11:28) முந்தின நாள், ஆலயத்திலிருந்த காசு மாற்றுபவர்களை இயேசு துரத்தியதை மனதில் வைத்து அவர்கள் இப்படிக் கேட்டிருக்கலாம்.
அப்போது இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்; அப்போது, எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக் கொடுத்தது கடவுளா மனுஷர்களா? பதில் சொல்லுங்கள்” என்கிறார். அவரை எதிர்க்கிறவர்கள் இப்போது சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’ என்று கேட்பான். ‘மனுஷர்கள்’ என்று சொன்னால் நம் கதி என்னவாகும்?” என்று குருமார்களும் பெரியோர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். ‘யோவான் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் எல்லாரும் நம்புவதால்’ அப்படிச் சொல்ல பயப்படுகிறார்கள்.—மாற்கு 11:29-32.
இயேசுவை எதிர்க்கிறவர்கள், அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறுகிறார்கள். அதனால், “எங்களுக்குத் தெரியாது” என்று சொல்கிறார்கள். அப்போது அவர், “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்கிறார்.—மாற்கு 11:33.