நீங்கள் வரி செலுத்த வேண்டுமா?
நிறைய பேருக்கு வரி செலுத்த பிடிப்பதில்லை. அவர்களுடைய வரிப் பணத்தை அரசாங்கம் வீணடிப்பதாக நினைக்கிறார்கள். இல்லையென்றால், அரசாங்க அதிகாரிகள் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஏப்பம் விட்டுவிடுவதாக நினைக்கிறார்கள். இன்னும் சிலர், அரசாங்கம் தங்கள் வரிப்பணத்தை சரியான விஷயங்களுக்குப் பயன்படுத்துவது இல்லை என்று நினைக்கிறார்கள். உதாரணமாக, மத்தியக் கிழக்கில் இருக்கும் ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள், “அரசாங்கத்துக்கு நாங்க எதுக்கு பணம் கொடுக்கணும்? அவங்க குண்டுகள வாங்கி எங்க குழந்தைகள சாகடிக்கிறதுக்கா?!” என்று சொல்லி வரி செலுத்த மறுக்கிறார்கள்.
மக்கள் இது போல நினைப்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் பெரிய அரசியல் தலைவராக இருந்த மோஹன்தாஸ் கே. காந்தி, வரி செலுத்த தன் மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று சொன்னார். “ராணுவப் படையை வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு காட்டுகிறவர்கள் அந்த நாடு செய்யும் பாவத்துக்கு உடந்தையாகிவிடுகிறார்கள். வயதானவர்களாக இருந்தாலும் சரி, இளைஞர்களாக இருந்தாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டுக்கு வரி செலுத்தினால் அந்தப் பாவத்தில் அவர்களும் பங்கெடுக்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.
அதேபோல், 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானியான ஹென்றி டேவிட் தோரோவும், வரி செலுத்த மறுத்துவிட்டார். ஏனென்றால், வரி செலுத்தினால் போரை ஆதரிப்பதுபோல் ஆகிவிடும் என்று நினைத்தார். ‘மக்கள் தங்களுடைய மனசாட்சியின்படி முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை அரசாங்கமே முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட முடியுமா? பிறகு மனசாட்சி என்ற ஒன்று எதற்கு?’ என்று அவர் கேட்டார்.
அவர் கேட்ட விஷயம் கிறிஸ்தவர்களுக்கு ரொம்ப முக்கியமானது. ஏனென்றால், எல்லாவற்றையுமே சுத்தமான மனசாட்சியோடு செய்ய வேண்டும் என்றுதான் பைபிளும் சொல்கிறது. (2 தீமோத்தேயு 1:3) அதேசமயத்தில், மக்களிடம் வரி வசூலிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருப்பதாகவும் பைபிள் சொல்கிறது. அதைக் கவனியுங்கள்: “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு [மனித அரசாங்கங்களுக்கு] எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை. தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார். அதனால், தண்டனை கிடைக்கும் என்பதற்காக மட்டுமல்ல, உங்களுடைய மனசாட்சியின் காரணமாகவும் நீங்கள் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாக இருக்கிறது. அதனால்தான், நீங்கள் வரியும் கட்டுகிறீர்கள். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கடவுளுடைய தொண்டர்களாக எப்போதும் சேவை செய்துவருகிறார்கள். அதனால், அவர்கள் எல்லாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுங்கள்: யாருக்கு வரி கொடுக்க வேண்டுமோ அவருக்கு வரி கொடுங்கள்.”—ரோமர் 13:1, 5-7.
இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வரி செலுத்தினார்கள். அந்தப் பணத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்குப் போய் சேர்ந்தபோதிலும் அவர்கள் வரி செலுத்தினார்கள். இன்று யெகோவாவின் சாட்சிகளும் அப்படித்தான் செய்கிறார்கள்.a அவர்கள் போரை ஆதரிப்பதில்லை என்றாலும் ஏன் வரி செலுத்துகிறார்கள்? அப்படியென்றால், வரி செலுத்தும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய மனசாட்சியை ஓரங்கட்டிவிட வேண்டுமா?
வரியும் மனசாட்சியும்
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் செலுத்திய வரியில் பெரும் பகுதி ராணுவத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. அப்படி வரிப்பணம் ராணுவத்துக்காகப் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டித்தான், வரி செலுத்த தங்கள் மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று காந்தியும் தோரோவும் சொன்னார்கள்.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள், தண்டனை கிடைக்கும் என்பதற்காக மட்டுமல்ல, “மனசாட்சியின் காரணமாகவும்” வரி செலுத்தினார்கள். (ரோமர் 13:5) அப்படியென்றால், ஒரு கிறிஸ்தவரின் வரிப்பணம் அவருடைய மனசாட்சிக்கு விரோதமான விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், அவர் வரி செலுத்த வேண்டும் என்றுதான் அவருடைய மனசாட்சி சொல்கிறது. இதில் ஏதோ முரண்பாடு இருப்பதுபோல் தெரிகிறதா? அப்படியென்றால், நம் மனசாட்சியைப் பற்றி ஒரு முக்கியமான உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தோரோ சொன்னதுபோல், நம் எல்லாருக்குமே மனசாட்சி இருக்கிறது. நாம் செய்வது சரியா தவறா என்று அது சொல்லும்தான். ஆனால், அது எப்போதுமே நம்பகமானது என்று சொல்ல முடியாது. கடவுளுக்குப் பிரியமாக நடக்க வேண்டுமென்றால், கடவுளுடைய விருப்புவெறுப்புகளுக்கு ஏற்றபடி நம் மனசாட்சியைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் யோசிக்கும் விதத்தை அவர் யோசிக்கும் விதத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுள்தான் நம்மைவிட ஞானம் உள்ளவர். (சங்கீதம் 19:7) அதனால், மனித அரசாங்கங்களைப் பற்றிக் கடவுள் என்ன யோசிக்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.
மனித அரசாங்கங்களை ‘கடவுளுடைய தொண்டர்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோமர் 13:6) அதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் சமுதாயத்தில் ஒழுங்கைக் கட்டிக்காத்து, மக்களுக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்கிறார்கள். ஊழல் நிறைந்த அரசாங்கங்கள்கூட தபால் சேவை, கல்வி சேவை, தீயணைப்பு சேவை போன்ற சேவைகளைச் செய்கிறார்கள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறார்கள். இந்த அரசாங்கங்கள் சிலசமயம் கெட்ட விஷயங்களைச் செய்வது கடவுளுக்குத் தெரியும்தான். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இந்த அரசாங்கங்கள் செயல்படுவதற்கு அவர் அனுமதித்திருக்கிறார். அவர் செய்திருக்கும் இந்த ஏற்பாட்டுக்கு நாம் மதிப்புக் கொடுத்து வரி கட்ட வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
கொஞ்சக் காலத்துக்குத்தான் மனித அரசாங்கங்கள் செயல்படுவதற்குக் கடவுள் அனுமதித்திருக்கிறார். சீக்கிரத்தில் இந்த எல்லா அரசாங்கங்களையும் ஒழித்துக்கட்டிவிட்டு, தன்னுடைய ஆட்சியைக் கொண்டுவருவார். மனித ஆட்சியால் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் அவர் சரிசெய்துவிடுவார். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) அதுவரை, நாம் அரசாங்கங்களுக்குக் கீழ்ப்படிந்து வரி கட்ட வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
ஆனால் காந்தி நினைத்தது போலவே, வரி செலுத்துவது பாவம் என்றுதான் இன்னமும் நினைக்கிறீர்களா? ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைக்க வேண்டும். நம்மைவிடக் கடவுளுக்குத்தான் நிறைய அறிவும் ஞானமும் இருக்கிறது. அதனால், நாம் யோசிக்கும் விதத்தைக் கடவுள் யோசிக்கும் விதத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள வேண்டும். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கடவுள் இப்படிச் சொன்னார்: “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும், உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன.”—ஏசாயா 55:8, 9.
அரசாங்கங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிந்து வரி கட்ட வேண்டுமென்று பைபிள் சொல்கிறதுதான். ஆனால், மக்கள் எல்லா விஷயங்களிலும் தங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று அரசாங்கங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அரசாங்கங்களுக்குக் கடவுள் ஓரளவு அதிகாரத்தைத்தான் கொடுத்திருக்கிறார் என்று இயேசு சொன்னார். அன்றிருந்த ரோம அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டுமா என்று ஒருவர் கேட்டபோது இயேசு இப்படிச் சொன்னார்: “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்.”—மாற்கு 12:13-17.
அரசாங்கங்கள்தான் பணத்தை அச்சடிக்கின்றன. அதனால், வரி என்ற பெயரில் அந்தப் பணத்தை அவர்கள் திருப்பிக் கேட்பது நியாயம்தான் என்று கடவுள் நினைக்கிறார். ஆனால் ‘கடவுளுடையதை,’ அதாவது நம் உயிரையும் வணக்கத்தையும், நாம் கடவுளுக்குத்தான் கொடுக்க வேண்டுமென்று இயேசு சொன்னார். எந்த மனித அரசாங்கமும் இதை நம்மிடம் கேட்க முடியாது. அதனால், கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராக மனித அரசாங்கங்கள் சட்டங்கள் போடும்போது, “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் [நாம்] கீழ்ப்படிய வேண்டும்.”—அப்போஸ்தலர் 5:29.
இன்று, வரிப்பணத்தை அரசாங்கம் பயன்படுத்தும் விதம் கிறிஸ்தவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக, அவர்கள் அரசாங்கத்தை எதிர்ப்பதும் இல்லை, வரி கட்ட மறுப்பதும் இல்லை. அப்படிச் செய்தால், மனிதர்களுடைய பிரச்சினைகளைக் கடவுள் தீர்ப்பார் என்பதில் அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும். அதனால், அவர்கள் கடவுளுக்காகவும் அவருடைய மகனின் அரசாங்கத்துக்காகவும் பொறுமையோடு காத்திருக்கிறார்கள். அந்த அரசாங்கம் “இந்த உலகத்தின் பாகமல்ல” என்று இயேசு சொன்னார்.—யோவான் 18:36.
பைபிள் சொல்கிறபடி நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பைபிள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நாம் வரி செலுத்தும்போது நிறைய நன்மைகள் கிடைக்கும். உதாரணத்துக்கு, சட்டத்தை மீறுகிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை நமக்குக் கிடைக்காது. அதோடு, என்றாவது ஒருநாள் அதிகாரிகளின் கையில் சிக்கிவிடுவோமோ என்ற பயம் நமக்கு இருக்காது. (ரோமர் 13:3-5) எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளுக்கு முன் ஒரு நல்ல மனசாட்சியோடு இருப்போம், அவருடைய பெயருக்குப் புகழும் சேர்ப்போம். வரி கட்டாதவர்களோடு அல்லது பொய்க் கணக்கு காட்டி ஏமாற்றுகிறவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்குப் பண நஷ்டம் ஏற்படுவதுபோல் தெரியலாம். ஆனால், கடவுள் தனக்கு உண்மையாக இருப்பவர்களைக் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய வாக்குறுதியை நாம் நம்பலாம். பைபிள் எழுத்தாளரான தாவீது இப்படிச் சொன்னார்: “நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன். ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ, அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோ இதுவரை நான் பார்த்ததில்லை.”—சங்கீதம் 37:25.
கடைசியாக, வரி செலுத்த வேண்டுமென்ற பைபிள் கட்டளையைப் புரிந்துகொண்டு, அதற்குக் கீழ்ப்படியும்போது நமக்கு மன நிம்மதி கிடைக்கும். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் கட்டும் வாடகைப் பணத்தை உங்களுடைய வீட்டு ஓனர் தவறாகப் பயன்படுத்தினால், அதற்காக சட்டம் உங்களைத் தண்டிக்குமா? கண்டிப்பாகத் தண்டிக்காது. அதேபோல், உங்கள் வரிப்பணத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்காகக் கடவுள் உங்களைத் தண்டிக்க மாட்டார். தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்டெல்வியோ என்ற ஒருவர், தன் நாட்டில் நடந்த அநியாயங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருந்தார். ஆனால், பைபிள் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொண்ட பிறகு அந்தப் போராட்டத்தையெல்லாம் விட்டுவிட்டார். ஏன்? “மனிதனால் இந்த உலகத்தில் நீதியையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவரவே முடியாது என்று எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் இந்த உலகத்தை நல்லபடியாக மாற்ற முடியும்” என்று அவர் நம்பிக்கையோடு சொல்கிறார்.
ஸ்டெல்வியோவைப் போல் நீங்களும் ‘கடவுளுடையதைக் கடவுளுக்குக் கொடுத்தால்,’ ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நீங்களும் நம்பிக்கையோடு இருக்கலாம். சீக்கிரத்தில் இந்த உலகத்தில் கடவுளுடைய நீதியான ஆட்சி நடக்கும். மனித ஆட்சியால் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் அநியாயங்களையும் அது சரிசெய்துவிடும். அப்படிப்பட்ட உலகத்தில் வாழும் வாய்ப்பு உங்களுக்கும் காத்திருக்கிறது!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகள், தவறாமல் வரி செலுத்துகிறவர்கள் என்ற பெயரை எடுத்திருக்கிறார்கள். இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள காவற்கோபுரம், நவம்பர் 1, 2002, பக்கம் 12, பாரா 15-யும், மே 1, 1996, பக்கம் 17, பாரா 7-ஐயும் பாருங்கள்.
[சிறுக்குறிப்பு]
நம்மைவிடக் கடவுளுக்குத்தான் நிறைய அறிவும் ஞானமும் இருக்கிறது. அதனால், நாம் யோசிக்கும் விதத்தைக் கடவுள் யோசிக்கும் விதத்துக்கு ஏற்றபடி நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்
[சிறுக்குறிப்பு]
கிறிஸ்தவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வரி செலுத்தும்போது, தங்களுக்குத் தேவையானதை அவர் கொடுப்பார் என்று நம்புவதைக் காட்டுகிறார்கள். அதோடு, கடவுளுக்குமுன் அவர்களுக்கு சுத்தமான மனசாட்சியும் கிடைக்கிறது
[சிறுக்குறிப்பு]
“அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்”
[படத்திற்கான நன்றி]
Copyright British Museum