பாடம் 46
அர்ப்பணமும் ஞானஸ்நானமும் ஏன் முக்கியம்?
யெகோவாவை மட்டுமே வணங்கப்போவதாகவும், அவருடைய விருப்பத்தைச் செய்யவே வாழ்க்கையில் முதலிடம் தரப்போவதாகவும் ஜெபத்தில் அவரிடம் வாக்குறுதி கொடுக்கும்போது உங்களையே அவருக்கு அர்ப்பணிப்பீர்கள். (சங்கீதம் 40:8) அதன் பிறகு, உங்களை அர்ப்பணித்திருப்பதை எல்லாருக்கும் காட்டுவதற்காக ஞானஸ்நானம் எடுப்பீர்கள். யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பதுதான் நாம் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானம். அது நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதற்கு எது உங்களைத் தூண்ட வேண்டும்?
1. அர்ப்பணம் செய்ய எது ஒருவரைத் தூண்டுகிறது?
யெகோவாமேல் இருக்கும் அன்புதான் அவருக்கு நம்மை அர்ப்பணிக்கத் தூண்டுகிறது. (1 யோவான் 4:10, 19) “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (மாற்கு 12:30) யெகோவாமேல் இருக்கும் அன்பை நம்முடைய சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் காட்ட வேண்டும். ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உண்மையிலேயே நேசிக்கும்போது கல்யாணம் செய்துகொள்வார்கள். அதேபோல், நாம் யெகோவாமேல் உண்மையான அன்பு வைக்கும்போது அவருக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்போம்.
2. ஞானஸ்நானம் எடுப்பவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிக்கிறார்?
ஞானஸ்நானம் எடுக்கும்போது, யெகோவாவின் சந்தோஷமான குடும்பத்தில் நீங்களும் ஒருவராக ஆவீர்கள். அதன் பிறகு, யெகோவா உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பை நிறைய விதங்களில் ருசிப்பீர்கள், இன்னும் அதிகமாக அவரிடம் நெருங்கிப்போவீர்கள். (மல்கியா 3:16-18-ஐ வாசியுங்கள்.) யெகோவா உங்கள் அன்பான அப்பாவாக இருப்பார். அதோடு, அவரையும் உங்களையும் நேசிக்கிற ஒரு உலகளாவிய குடும்பம் உங்களுக்குக் கிடைக்கும். (மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.) ஆனால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்மேல் அன்பு காட்டவும் அவருடைய மகன்மேல் விசுவாசம் வைக்கவும் வேண்டும். கடைசியாக, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும். இதையெல்லாம் செய்துவிட்டு நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது இன்றும் என்றும் சந்தோஷமாக வாழும் வாய்ப்புக் கிடைக்கும். “ஞானஸ்நானம் . . . இப்போது உங்களைக் காப்பாற்றுகிறது” என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 3:21.
ஆராய்ந்து பார்க்கலாம்!
யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணம் செய்து ஞானஸ்நானம் எடுப்பது ஏன் முக்கியம் என்று பார்க்கலாம்.
3. யாரை வணங்குவோம் என்று முடிவெடுக்க வேண்டும்
இஸ்ரவேலர்களில் சிலர், யெகோவாவையும் வணங்கிக்கொண்டு பொய்க் கடவுளான பாகாலையும் வணங்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களைத் திருத்துவதற்காக எலியா தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். 1 ராஜாக்கள் 18:21-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இஸ்ரவேலர்கள் என்ன முடிவெடுக்க வேண்டியிருந்தது?
இஸ்ரவேலர்களைப் போலவே நாமும் யாரை வணங்குவதென்று முடிவெடுக்க வேண்டும். லூக்கா 16:13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நாம் ஏன் யெகோவாவைத் தவிர வேறு யாரையுமே அல்லது எதையுமே வணங்கக் கூடாது?
நாம் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம் என்பதை அவருக்கு எப்படிக் காட்டலாம்?
4. யெகோவா உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள்
யெகோவா நமக்கு அருமையான பல பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். நாம் அவருக்கு என்ன கொடுக்கலாம்? வீடியோவைப் பாருங்கள்.
யெகோவா என்னென்ன விதங்களில் உங்கள்மேல் அன்பு காட்டியிருக்கிறார்? சங்கீதம் 104:14, 15-ஐயும் 1 யோவான் 4:9, 10-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
முக்கியமாக எந்தெந்தப் பரிசுகளுக்காக நீங்கள் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறீர்கள்?
அதையெல்லாம் தந்த அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நமக்கு ரொம்பப் பிடித்த ஒரு பரிசு கிடைக்கும்போது, அதைக் கொடுத்தவருக்கு நாம் நன்றி காட்ட நினைப்போம். உபாகமம் 16:17-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவா உங்களுக்காக செய்ததையெல்லாம் யோசிக்கும்போது அவருக்கு எதைக் கொடுக்க விரும்புகிறீர்கள்?
5. அர்ப்பணம் அள்ளித்தரும் ஆசீர்வாதங்கள்
பேர் புகழ், நல்ல வேலை, அல்லது கைநிறைய பணம் இருந்தால் சந்தோஷம் கிடைக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது உண்மையா? வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
வீடியோவில் வந்தவருக்கு ஃபுட்பால் விளையாட ரொம்பப் பிடித்திருந்தாலும் அவர் ஏன் அதை விட்டுவிட்டார்?
அவர் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார், ஃபுட்பாலுக்கு அல்ல! அது சரியான முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏன்?
பவுல் ஒரு பிரபலமான போதகரிடம் யூத சட்டங்களைப் படித்துவிட்டு, பேர்புகழைத் தேடி ஓடிக்கொண்டிருந்தார். ஆனால், அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஒரு கிறிஸ்தவராக மாறினார். அதை நினைத்து அவர் எப்போதாவது வருத்தப்பட்டாரா? பிலிப்பியர் 3:8-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
தான் கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு செய்த எல்லாமே “வெறும் குப்பை” என்று பவுல் ஏன் சொன்னார்?
அதையெல்லாம் தூக்கி எறிந்ததால் அவருக்கு என்ன லாபம் கிடைத்தது?
உங்கள் வாழ்க்கையை எது சந்தோஷமாக்கும்? யெகோவாவுக்குச் சேவை செய்வதா, வேறு லட்சியங்களைத் தேடிப்போவதா?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நாம நமக்காக வாழணும், கடவுளுக்காக வாழணுங்கற அவசியம் இல்ல.”
யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதுதான் சரியான முடிவு என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
சுருக்கம்
யெகோவாமேல் இருக்கும் அன்புதான் அவருக்கு நம்மை அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும் நம்மைத் தூண்டுகிறது.
ஞாபகம் வருகிறதா?
நாம் ஏன் யெகோவாவை மனதார நேசித்து அவரை மட்டும் வணங்க வேண்டும்?
ஞானஸ்நானம் எடுக்கிறவர்களுக்கு யெகோவா என்ன ஆசீர்வாதங்களைத் தருகிறார்?
யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க ஆசைப்படுகிறீர்களா?
அலசிப் பாருங்கள்
ஒரு இசைக் கலைஞரும் ஒரு விளையாட்டு வீரரும் ஏன் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள் என்று பாருங்கள்.
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—வாழ்க்கையில் என் லட்சியம் என்ன?—கடந்து வந்த பாதை (6:52)
யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேறென்ன காரணங்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“ஏன் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?” (காவற்கோபுரம், ஜனவரி 15, 2010)
யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்கிறவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று இந்த இசை வீடியோவில் பாருங்கள்.
வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம் என்று யோசித்துப் பார்க்க ஒரு பெண்ணை எது தூண்டியது என்று “‘நாம் ஏன் பிறந்தோம்?’ என்று பல வருஷங்களாக யோசித்தேன்” என்ற அனுபவத்தில் பாருங்கள்.