அதிகாரம் 34
பன்னிரண்டு அப்போஸ்தலர்களை இயேசு தேர்ந்தெடுக்கிறார்
12 அப்போஸ்தலர்கள்
கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி என்று இயேசுவை யோவான் ஸ்நானகர் தன் சீஷர்களுக்கு அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகிவிட்டது. இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, அந்திரேயா, சீமோன் பேதுரு, யோவான், பிலிப்பு, நாத்தான்வேல் (பர்த்தொலொமேயு) போன்ற உண்மையுள்ள ஆட்கள் அவருடைய சீஷர்களாக ஆனார்கள். ஒருவேளை, யாக்கோபும் (யோவானின் சகோதரர்) அந்தச் சமயத்தில் இயேசுவின் சீஷராக ஆகியிருக்கலாம். நாட்கள் போகப் போக, இன்னும் பலர் கிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.—யோவான் 1:45-47.
இப்போது, இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார். இவர்கள் இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். இயேசு இவர்களுக்கு விசேஷமான பயிற்சியைத் தருவார். இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், இயேசு ஒரு மலைக்குப் போகிறார். ஒருவேளை, கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு மலைக்குப் போயிருக்கலாம். கப்பர்நகூமிலிருந்து கொஞ்சத் தூரத்தில்தான் கலிலேயா கடல் இருக்கிறது. ராத்திரி முழுவதும் இயேசு ஜெபம் செய்கிறார். ஞானத்தையும் ஆசீர்வாதத்தையும் கேட்டு அவர் ஜெபம் செய்திருக்கலாம். அடுத்த நாள், இயேசு தன்னுடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் 12 பேரைத் தன்னுடைய அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு பேரையும் இயேசு தன் அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுக்கிறார். வரி வசூலிக்கிற அலுவலகத்தில் வேலை செய்தபோது இயேசுவின் அழைப்பைப் பெற்ற மத்தேயுவும் ஒரு அப்போஸ்தலராக ஆகிறார். யூதாஸ் (ததேயு என்றும், “யாக்கோபின் மகன்” என்றும் அழைக்கப்படுகிறார்), கெனனீயனாகிய சீமோன், தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதாஸ் இஸ்காரியோத்து ஆகியோரையும் தேர்ந்தெடுக்கிறார்.—மத்தேயு 10:2-4; லூக்கா 6:16.
இவர்கள் இயேசுவோடு பயணம் செய்திருக்கிறார்கள். இயேசு இவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார். இவர்களில் பலர் அவருடைய சொந்தக்காரர்கள். அண்ணன் தம்பிகளான யாக்கோபும் யோவானும் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பின் சகோதரர்தான் அல்பேயு என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால், அல்பேயுவின் மகனான யாக்கோபும் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்தான்.
இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களின் பெயர்களை ஞாபகம் வைத்திருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது! சீமோன் என்ற பெயரில் இரண்டு பேர், யாக்கோபு என்ற பெயரில் இரண்டு பேர், யூதாஸ் என்ற பெயரில் இரண்டு பேர் இருக்கிறார்கள். சீமோனுக்கு (பேதுருவுக்கு) அந்திரேயா என்ற சகோதரர் இருக்கிறார். யாக்கோபுக்கு (செபெதேயுவின் மகன்) யோவான் என்ற சகோதரர் இருக்கிறார். இப்படி, எட்டு அப்போஸ்தலர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம். மற்ற நான்கு பேர்: வரி வசூலிக்கிறவர் (மத்தேயு), பிற்பாடு சந்தேகப்பட்டவர் (தோமா), மரத்தின் கீழ் இருந்தபோது அழைப்பு பெற்றவர் (நாத்தான்வேல்), நாத்தான்வேலின் நண்பர் (பிலிப்பு).
இவர்களில் பதினொரு பேர், இயேசு வளர்ந்த கலிலேயா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். நாத்தான்வேல் கானாவைச் சேர்ந்தவர். பிலிப்பு, பேதுரு, அந்திரேயா ஆகியோர் பெத்சாயிதாவைச் சேர்ந்தவர்கள். பிற்பாடு, பேதுருவும் அந்திரேயாவும் கப்பர்நகூமுக்குப் போய்விடுகிறார்கள். அநேகமாக, மத்தேயு அந்த நகரத்தில் வாழ்ந்திருக்கலாம். யாக்கோபும் யோவானும்கூட கப்பர்நகூமில் அல்லது அதற்குப் பக்கத்தில் வாழ்ந்திருக்கலாம். அந்த நகரத்துக்குப் பக்கத்தில்தான் அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்துவந்தார்கள். ஒருவேளை, இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் மட்டும்தான் யூதேயாவைச் சேர்ந்தவனாக இருந்திருக்கலாம்.