“சகல தேசத்தாருக்கும்” சாட்சிபகருவது
“ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14, NW.
1. மத்தேயு 24:14-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் சொற்கள் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஏன் ஆச்சரியத்தை அளித்திருக்கும்?
மேலே சொல்லப்பட்டுள்ள இயேசுவின் சொற்கள் அவருடைய யூத சீஷர்களுக்கு என்னே ஆச்சரியத்தை அளித்திருக்கும்! பரிசுத்தமாக்கப்பட்ட யூதர்கள் ‘தேசங்களைச் சேர்ந்த மக்களாகிய’ (NW) ‘அசுத்தமான’ புறஜாதியாரிடம் பேசும் எண்ணம்தானே யூதனுக்கு புதுமையாயும் அருவருப்பாயுங்கூட இருந்தது.a ஏன், மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட யூதன் புறஜாதியானுடைய வீட்டிற்குள் பிரவேசிப்பதை நினைத்துக்கூட பார்க்கமாட்டான்! இந்த யூத சீஷர்கள் இயேசுவைக் குறித்தும் அவர் காட்டிய அன்பைக் குறித்தும் அவர் கொடுத்த கட்டளையைக் குறித்தும் இன்னும் வெகு அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. யெகோவாவின் பாரபட்சமின்மையைக் குறித்தும் அவர்கள் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது.—அப்போஸ்தலர் 10:28, 34, 35, 46.
2. (அ) சாட்சிகளின் ஊழியம் எவ்வளவு விரிவானதாக இருந்திருக்கிறது? (ஆ) சாட்சிகளுடைய முன்னேற்றத்திற்கு அடிப்படையாக என்ன மூன்று காரணிகள் உதவியளித்திருக்கின்றன?
2 நவீன நாளைய இஸ்ரேல் உட்பட, தேசத்தாருக்கு யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியைப் பிரசங்கித்திருக்கின்றனர். இப்போது, முன்னொருபோதும் இராத அளவுக்கு பெரும்பான்மையான தேசங்களில் அறிவித்து வருகின்றனர். 1994-ல் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட சாட்சிகள் சுமார் 230 நாடுகளில் பிரசங்கித்து வருகின்றனர். அக்கறை காட்டும் ஆட்களிடம் சுமார் 45 லட்சம் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தி வருகின்றனர். சாட்சிகளின் போதனைகளைப் பற்றியும் நோக்கங்களைப் பற்றியும் அடிக்கடி அறியாதிருப்பதன்பேரில் சார்ந்த உலகளாவிய தப்பபிப்பிராயத்தின் மத்தியிலும் இது செய்யப்பட்டு வருகிறது. பூர்வகால கிறிஸ்தவர்களைக் குறித்து சொல்லப்பட்டதுபோலவே, இவர்களைக் குறித்தும் சொல்லலாம்: “எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கி”றோம். (அப்போஸ்தலர் 28:22) அப்படியானால், அவர்களுடைய வெற்றிகரமான ஊழியத்திற்கு எதை நாம் காரணமாக சொல்லலாம்? அவர்களுடைய முன்னேற்றத்திற்கு குறைந்தபட்சம் மூன்று காரணிகள் உதவியளிக்கின்றன. அவை யெகோவாவின் ஆவியுடைய வழிநடத்துதலைப் பின்பற்றுவது, கிறிஸ்துவின் நடைமுறையான முறைகளைப் பின்பற்றுவது, பலன்தரும் விதமாக தொடர்புகொள்வதற்கு சரியான கருவிகளைப் பயன்படுத்துவதே ஆகும்.
யெகோவாவின் ஆவியும் நற்செய்தியும்
3. நிறைவேற்றப்பட்டதைக் குறித்து நாம் ஏன் பெருமைபாராட்டிக்கொள்ளக்கூடாது?
3 யெகோவாவின் சாட்சிகள் தங்களிடமிருக்கும் விசேஷித்த திறன்களின் காரணமாக வெற்றிபெறுவதாக தங்களைக் குறித்து பெருமைபாராட்டிக்கொள்கிறார்களா? இல்லை, ஏனென்றால், இயேசுவின் சொற்கள் பொருந்துகின்றன: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்.” யெகோவாவின் சாட்சிகள் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக தங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும் கடவுளைச் சேவிக்கக்கூடிய பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதனால் சிலர் மிஷனரிகளாகவோ கிளை அலுவலகங்களிலும் கிறிஸ்தவ பிரசுரங்களை அச்சிடுவதற்கான வசதிகளிலும் விருப்பார்வ ஊழியர்களாகவோ முழுநேர சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர். அத்தகைய கிறிஸ்தவ விருப்பார்வமானது, வேறு சிலரை மதக் கட்டிடங்களில் கட்டுமான வேலையைச் செய்வதற்கும் பயனியர் ஊழியர்களாக முழுநேர பிரசங்கிப்புக்கும் வழிநடத்தியிருக்கிறது, அல்லது உள்ளூர் சபைகளில் நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக பகுதி நேர பிரசங்கிப்பைச் செய்ய வழிநடத்தியிருக்கிறது. நம் கடமையை செய்வதைக் குறித்து, “செய்யவேண்டிய”தைக் குறித்து நாம் யாருமே தற்பெருமைகொள்ளவே முடியாது.—லூக்கா 17:10; 1 கொரிந்தியர் 9:16.
4 நமக்கு கிட்டும் எந்தவொரு வெற்றிக்கும் யெகோவாவின் ஆவியை அல்லது செயல் நடப்பிக்கும் சக்தியை நாம் காரணமாக காட்டலாம். சகரியா தீர்க்கதரிசியின் நாட்களில் பொருத்தமாயிருந்ததுபோலவே இன்றுங்கூட அவ்வாறு சொல்வது பொருத்தமாயிருக்கிறது: “செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இவ்வாறு, சாட்சிகளுடைய பிரசங்க வேலைமீது வரும் உலகளாவிய எதிர்ப்பு மனிதனுடைய முயற்சியினால் மேற்கொள்ளப்படாமல் யெகோவாவின் வழிநடத்துதலினாலும் பாதுகாப்பினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.—சகரியா 4:6.
5. ராஜ்ய செய்தியைப் பிரஸ்தாபிப்பதில் யெகோவா என்ன பாகம் வகிக்கிறார்?
5 இராஜ்ய செய்திக்குப் பிரதிபலிப்பவர்களைப்பற்றி இயேசு சொன்னார்: “எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்.” (யோவான் 6:45, 65) யெகோவாவால் இருதயங்களையும் மனங்களையும் ஆராய முடியும், ஆதலால் ஆட்கள் இன்னும் அவரை அறிந்துகொள்ளாவிட்டாலும் தம்முடைய அன்பிற்கு யார் ஒருவேளை பிரதிபலிப்பார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த ஊழியத்தை வழிநடத்த அவர் தம்முடைய தேவதூதர்களையும் பயன்படுத்துகிறார். எனவேதான் யோவான் தரிசனத்தில் தேவதூதர்களின் ஈடுபாட்டைக் கண்டு எழுதினார்: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்”தான்.—வெளிப்படுத்துதல் 14:6.
ஆவிக்குரிய தேவைக்கான உணர்வுடையோராயிருப்பது
6. ஒரு நபர் நற்செய்திக்குப் பிரதிபலிக்க அடிப்படையில் என்ன மனப்பான்மை அவசியமாயிருக்கிறது?
6 ஒரு நபர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள யெகோவா வாய்ப்பளிப்பதற்கான இன்னொரு காரணத்தை இயேசு சொன்னார்: “ஆவிக்குரியத் தேவையைக்குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள், ஏனென்றால் பரலோகங்களின் ராஜ்யம் அவர்களுக்குரியது.” (மத்தேயு 5:3, NW) சுய-நிறைவு மனப்பான்மையுடைய நபரோ சத்தியத்தை நாடித்தேடாத நபரோ ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையவராக இருக்கமாட்டார். அவனோ அவளோ பொருளாதார, மாம்ச ரீதியிலேயே சிந்திக்கிறார். தன்னிறைவு மனப்பான்மை ஒரு தடங்கலாக ஆகிறது. ஆகவே, நாம் வீடு வீடாய் சென்று சந்திக்கக்கூடிய பெரும்பான்மையான ஆட்கள் செய்தியை வேண்டாமென்று சொன்னால், ஆட்கள் அவ்வாறு பிரதிபலிப்பதற்கான வெவ்வேறுபட்ட அனைத்து காரணங்களையும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.
7. ஏன் அநேகர் சத்தியத்திற்கு பிரதிபலிப்பதில்லை?
7 அநேகர் தாங்கள் வழிவழியாக பின்பற்றி வந்த மதத்தை நன்கு பற்றியிருப்பதன் காரணமாக அதைக்குறித்து கலந்துரையாட விருப்பமில்லாதவர்களாக செவிகொடுக்க மறுக்கின்றனர். வேறு ஆட்கள் தங்களுடைய ஆளுமைக்குப் பொருந்தும் மதத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கின்றனர்; சிலர் இறைநிலை இணைவுப்பான்மை மதத்தை விரும்புகின்றனர், வேறுசிலர் உணர்ச்சிப் பரவசமூட்டும் மதத்திற்கு பிரதிபலிக்கின்றனர், இன்னும் ஒருசிலர் தங்கள் சர்ச்சில் சமூக கிளப்பை நாடித்தேடுகின்றனர். இன்றிருக்கும் அநேகர் கடவுளின் தராதரங்களுக்கு முரணாயிருக்கும் வாழ்க்கை முறையைத் தெரிந்தெடுத்திருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் ஒழுக்கக்கேடான வாழ்க்கையை மேற்கொண்டிருப்பதன் காரணமாக “எனக்கு அதில் அக்கறையில்லை” என்று சொல்லலாம். எனினும், படித்தவர்களாகவும் விஞ்ஞானத்தில் நம்பிக்கை வைப்பவர்களாகவும் உரிமைபாராட்டக்கூடிய ஆட்கள் பைபிளானது மிகவும் எளிமையானதாக இருக்கிறது என்று ஒருபுறம் ஒதுக்கிவைக்கின்றனர்.—1 கொரிந்தியர் 6:9-11; 2 கொரிந்தியர் 4:3, 4.
8. நிராகரிப்பு ஏன் நம்முடைய வைராக்கியத்தைக் குறைத்துப்போட வேண்டாம்? (யோவான் 15:18-20)
8 பெரும்பான்மையர் நிராகரிப்பதானது உயிர் காக்கும் ஊழியத்தில் உள்ள நம்முடைய விசுவாசத்தையும் வைராக்கியத்தையும் குறைத்துப்போட வேண்டுமா? ரோமர்களுக்குப் பவுல் எழுதிய சொற்களிலிருந்து நாம் ஆறுதலடையலாம்: “சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.”—ரோமர் 3:3, 4.
9, 10. அநேக நாடுகளிலிருந்த எதிர்ப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
9 உலகமுழுவதும் உள்ள நாடுகளிலிருந்து வரும் அநேக உதாரணங்கள் நமக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும்; செவிகொடுப்பதே அரிது என்று தோன்றிய நாடுகளுங்கூட காலப்போக்கில் நன்கு செவிகொடுக்கும் நாடுகளாக மாறியிருக்கின்றன. நல்மனமுள்ள ஆட்கள் இருந்தார்கள் என்பதை யெகோவாவும் தேவதூதர்களும் அறிந்திருக்கின்றனர்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஊழியத்தில் விடாது நிலைத்திருக்கவேண்டியதாக இருந்தது. உதாரணமாக, 50 வருஷங்களுக்கு முன்பு கத்தோலிக்க மதம், மேற்கொள்ள முடியாத தடங்கலாயிருப்பதாக தோன்றிய சில நாடுகளைப் பற்றி சிந்திப்போம். அவை அயர்லாந்து, அர்ஜன்டினா, இத்தாலி, கொலம்பியா, பிரேஸில், போர்த்துகல், மெக்ஸிகோ, ஸ்பெய்ன் போன்ற நாடுகளாகும். 1943-ல் ஒருசில சாட்சிகளே இருந்தனர்; உலகம் முழுவதும் 1,26,000 பேர் மாத்திரமே இருந்தனர், இவர்களில் 72,000 பேர் ஐக்கிய மாகாணங்களில் இருந்தனர். சாட்சிகள் எதிர்ப்பட்டுக் கொண்டிருந்த அறியாமையும் தப்பபிப்பிராயமும் தகர்க்கமுடியாத செங்கற்சுவரைபோல் தோன்றியது. எனினும், இன்று பிரசங்கிப்பின் மூலமாக வந்த மிகவும் வெற்றிகரமான ஒருசில பலன்கள் இந்நாடுகளிலேயே இருந்திருக்கின்றன. கம்யூனிஸ நாடுகளாயிருந்த பலவற்றில் இதுவே உண்மையாயிருக்கிறது. 1993-ல், உக்ரேனிலுள்ள கீவில் நடந்த மாநாட்டில் 7,402 பேர் முழுக்காட்டுதல் பெற்றது இதற்கு அத்தாட்சியாக இருக்கிறது.
10 சாட்சிகள் தங்களுடைய அயலகத்தாருக்கு நற்செய்தியைச் சொல்ல என்ன முறைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர்? சிலர் குற்றஞ்சாட்டுவதுபோல, ஆட்களை மதம் மாற வைக்க, பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களைக் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்களா? மற்றவர்கள் வாதிடுவதுபோல, ஏழ்மையானவரையும் கல்வியறிவில்லாதவரையும் மாத்திரம் விஜயம் செய்திருக்கிறார்களா?
நற்செய்தியைப் பரப்புவதற்கு வெற்றிகரமான முறைகள்
11. தம்முடைய ஊழியத்தில் இயேசு என்ன நல்ல முன்மாதிரியை வைத்தார்? (யோவான் 4:6-26-ஐப் பாருங்கள்.)
11 சாட்சிகள் தங்களுடைய சீஷராக்கும் வேலையில் இந்நாள் வரை பின்பற்றும் மாதிரியை இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏற்படுத்தி வைத்தனர். எங்கெல்லாம் மக்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் இயேசு சென்றார். பணக்காரர்கள், ஏழைகள் என்றில்லாமல், வீடுகளுக்கும் பொது இடங்களுக்கும் ஏரியோரப் பகுதிகளுக்கும் மலையோரப் பகுதிகளுக்கும் ஜெப ஆலயங்களுக்குங்கூட அவர் சென்றார்.—மத்தேயு 5:1, 2; 8:14; மாற்கு 1:16; லூக்கா 4:15.
12, 13. (அ) கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எவ்வாறு மாதிரியாக இருந்தார்? (ஆ) பவுல் முன்மாதிரியை எவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றியிருக்கின்றனர்?
12 தன்னுடைய சொந்த ஊழியத்தைக் குறித்து, பவுல் அப்போஸ்தலனால் சரியாகவே சொல்ல முடிந்தது: “நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். . . . நான் கர்த்தரைச் சேவித்தேன். பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம் பண்ணி”னேன்.—அப்போஸ்தலர் 20:18-20.
13 யெகோவாவின் சாட்சிகள் அப்போஸ்தல மாதிரியைப் பின்பற்றி வீடு வீடாய் ஊழியம் செய்வதற்காக உலகெங்கும் நன்கு அறியப்பட்டிருக்கின்றனர். இந்தச் சாட்சிகள் செலவுபிடித்த, மேற்பூச்சான, ஆட்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாத டிவி ஊழியத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்களாக இருப்பதற்கு பதிலாக மக்களிடம் சென்று, பணக்காரர்களையும் ஏழைகளையும் நேரடியாக சந்தித்து பேசுகின்றனர். கடவுளையும் அவருடைய வார்த்தையையும் பற்றி பேச நாடுகின்றனர்.b அவர்கள் பொருளாதார காரியங்களை இலவசமாக கொடுத்து, அரிசி கிறிஸ்தவர்களை உண்டுபண்ண முயற்சி செய்வது கிடையாது. நியாயமாக சிந்திக்கும் மனமுள்ளவர்களிடம், மனிதவர்க்க பிரச்சினைகளுக்கு ஒரே உண்மையான தீர்வானது கடவுளுடைய ராஜ்ய ஆட்சியாகும் என்று எடுத்துக்காட்டுகின்றனர். இந்த ஆட்சி, நம்முடைய பூமியிலுள்ள நிலைமைகளை மேம்பாட்டிற்காக மாற்றிப்போடும்.—ஏசாயா 65:17, 21-25; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4.
14. (அ) அநேக மிஷனரிகளும் பயனியர்களும் எவ்வாறு ஸ்திரமான அடித்தளத்தைப் போட்டிருக்கின்றனர்? (ஆ) ஜப்பானிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
14 முடிந்தளவு அதிகமான நாடுகளில் ஊழியஞ்செய்து முடிப்பதற்கு மிஷனரிகளும் பயனியர்களும் உட்புகமுடியாத அநேக தேசங்களுக்குள் கடைக்கால் போட்டிருக்கின்றனர். அவர்கள் ஆதாரத்தைப் போட்டபின் உள்ளூர் சாட்சிகள் முன்னின்று நடத்தியிருக்கின்றனர். இவ்வாறு, பிரசங்கவேலையைத் தொடர்ந்து செய்வதற்கும் அதை நன்கு ஒழுங்கமைத்து வைப்பதற்கும் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான சாட்சிகள் தேவையாயில்லை. முனைப்பான ஒரு முன்மாதிரி ஜப்பான் ஆகும். 1940-களின் பிற்பகுதியில், முக்கியமாக ஆஸ்திரலேசிய, பிரிட்டிஷ் மிஷனரிகள் அங்கே சென்று, மொழியைக் கற்று போருக்குப் பின்னான சகாப்தத்தில் உள்ளவர்களுடைய ஓரளவு பழங்காலத்திய சூழலுக்கு தங்களை மாற்றியமைத்துக்கொண்டு, வீடு வீடாய் சாட்சிபகர தொடங்கினர். இரண்டாம் உலக போரின்போது ஜப்பானில் சாட்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர். ஆகவே மிஷனரிகள் வந்தபோது சுறுசுறுப்புள்ள சாட்சிகள் சொற்பமானவர்களே இருந்தனர். இன்றோ அவர்கள் 1,87,000-க்கும் மேற்பட்டு 3,000-க்கும் அதிகமான சபைகளாக முன்னேற்றம் செய்திருக்கின்றனர்! அவர்களுக்கு விரைவில் வெற்றி கிடைத்ததன் இரகசியம் என்ன? அந்த இடத்தில் 25-க்கும் மேலான வருஷங்களாக ஊழியம் செய்யும் மிஷனரி ஒருவர் சொன்னார்: “மக்களோடு உரையாடக் கற்றுக்கொள்வது வெகு முக்கியம். அவர்களுடைய மொழியைத் தெரிந்துவைத்ததன் மூலம் எங்களால் அவர்களோடு நெருங்கி உறவாட முடிந்தது, அவர்களைப் புரிந்து, அவர்கள் வாழும் விதத்தைப் பாராட்ட முடிந்தது. ஜப்பானியர்களை நாங்கள் நேசித்தோம் என்பதைக் காட்டவேண்டியதாயிருந்தது. எங்களுடைய கிறிஸ்தவ மதிப்பீடுகளை விட்டுக்கொடாமல், நாங்கள் மனத்தாழ்மையோடு உள்ளூர் சமுதாயத்தின் பாகமாக முயற்சி செய்தோம்.”
கிறிஸ்தவ நடத்தையும் ஒரு சாட்சி
15. சாட்சிகள் எவ்வாறு கிறிஸ்தவ நடத்தையை செயலில் காட்டியிருக்கின்றனர்?
15 என்றபோதிலும், மக்கள் பைபிள் செய்திக்கு மாத்திரம் பிரதிபலிக்கவில்லை. அவர்கள் கிறிஸ்தவத்தைச் செயலிலும் கண்டிருக்கின்றனர். உள்நாட்டுப் போர்கள், இனக் கலவரம், வகுப்புவாத விரோதம் போன்ற அதிக சோதனையான சூழ்நிலைகளிலும் சாட்சிகளுடைய அன்பையும் இணக்கத்தையும் ஒற்றுமையையும் கவனித்திருக்கின்றனர். சாட்சிகள், அனைத்து மோதல்களிலும் கிறிஸ்தவ நடுநிலைமை சம்பந்தமாக தெளிவான நிலைநிற்கையைக் காத்துக்கொண்டு, இயேசுவின் சொற்களை நிறைவேற்றியிருக்கின்றனர்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:34, 35.
16. செயலில் காட்டப்படும் கிறிஸ்தவ அன்பை எந்த அனுபவம் எடுத்துக்காட்டுகிறது?
16 “திரு & திருமதி நல்லவர்” பற்றி உள்ளூர் செய்தித்தாளுக்கு எழுதிய வயோதிப மனிதனின் விஷயத்தில் அயலகத்தார் அன்பு எடுத்துக் காட்டப்பட்டது. தன் மனைவி இறக்கும் தறுவாயில் இருந்தபோது, அயலகத்தார் தன்னிடம் மிகவும் கருணையானவர்களாக இருந்தார்கள் என்று அவர் விளக்கிக் காட்டினார். “அவள் இறந்ததுமுதல் . . . அவர்கள் மிகவும் அருமையானவர்களாக இருந்திருக்கின்றனர். அதுமுதல் அவர்கள் என்னை ‘தத்து எடுத்து’ . . . , எனக்கு எல்லா விதமான வேலைகளையும் செய்து கொடுத்து, 74 வயதான, வேலையிலிருந்து ஓய்வுபெற்றவனுக்குரிய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க உதவியாக இருந்திருக்கின்றனர். இதெல்லாவற்றையும் மிகவும் அபூர்வமான காரியமாக்குகிறது என்னவென்றால் அவர்கள் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். நானோ வெள்ளையர் இனத்தைச் சேர்ந்தவன். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். நானோ கத்தோலிக்க மதத்திலிருந்து விலகியவன்,” என்று அவர் எழுதினார்.
17. எந்தப் போக்கை நாம் தவிர்க்கவேண்டும்?
17 நம்முடைய அன்றாட நடத்தை உட்பட பல்வேறு வழிகளில் சாட்சி கொடுக்கலாம் என்பதை இந்த அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. உண்மையில், நம்முடைய நடத்தை கிறிஸ்துவைப் போலில்லாதிருந்தால், நம் ஊழியம் பயனற்றதாக, பரிசேய ஊழியமாயிருக்கும். இயேசு விவரித்தவர்களைப் போன்று நாம் இருக்க விரும்புவதில்லை: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.”—மத்தேயு 22:37-39; 23:3.
அடிமை வகுப்பு சரியான கருவிகளைக் கொடுக்கிறது
18. நல்மனமுள்ள ஆட்களுக்கு உதவ பைபிள் பிரசுரங்கள் எவ்வாறு நம்மை ஆயத்தஞ்செய்கின்றன?
18 சகல தேசத்தாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி வெளியிட்டிருக்கும் பைபிள் பிரசுரங்கள் கிடைப்பதாகும். உண்மை மனதோடு கேள்வி கேட்கும் ஏறத்தாழ எல்லாரையும் திருப்தி செய்கிற புத்தகங்கள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள், பத்திரிகைகள் ஆகியவை நம்மிடம் இருக்கின்றன. ஒருவேளை நாம் முஸ்லீமையோ இந்துவையோ, புத்தமதத்தினரையோ டாவோ மதத்தினரையோ யூதரையோ சந்தித்தால், அவரோடு உரையாடலைத் தொடங்கி, முடிந்தால் பைபிள் படிப்பாக ஆவதற்கு கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் (Mankind’s Search for God) என்ற புத்தகத்தை அல்லது வெவ்வேறான துண்டுப்பிரதிகளையும் சிறு புத்தகங்களையும் நாம் பயன்படுத்தலாம். பரிணாமவாதி சிருஷ்டிப்பைக் குறித்து கேட்டால், உயிர்—அது எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? (Life—How Did It Get Here? By Evolution or by Creation) என்ற புத்தகத்தைப் பயன்படுத்தலாம். ஓர் இளைஞன் ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ என்று கேட்டால், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டுக் காட்டலாம். மனச்சோர்வு, அயர்ச்சி, கற்பழிப்பு, மணவிலக்கு போன்ற தனிப்பட்ட பிரச்சினைகளால் யாராவது ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட விஷயங்கள் நடைமுறையான விதத்தில் நம்முடைய பத்திரிகைகளில் சிந்திக்கப்பட்டிருக்கின்றன. மெய்யாகவே, ‘ஏற்றவேளையில் போஜனம்’ அளிப்பதாக இயேசு தீர்க்கதரிசனமாக சொன்ன உண்மையுள்ள அடிமை வகுப்பு அதன் வேலையைச் செய்துவருகிறது.—மத்தேயு 24:45-47.
19, 20. அல்பேனியாவில் ராஜ்ய வேலை எவ்வாறு தீவிரமாகியிருக்கிறது?
19 ஆனால் தேசத்தாரைச் சென்றெட்ட இந்தப் பிரசுரங்களை அநேக பாஷைகளில் வெளியிடுவது அவசியமாக இருந்திருக்கிறது. பைபிளையும் வேதவசனம் சார்ந்த பிரசுரங்களையும் 200-க்கும் மேற்பட்ட பாஷைகளில் மொழிபெயர்ப்பது எப்படிச் சாத்தியமாக இருந்திருக்கிறது? உதாரணமாக அல்பேனியாவைக் குறித்து சுருக்கமாக சிந்திக்கலாம்; இந்த உதாரணம், பெரும் கஷ்டங்களின் மத்தியிலும் பல பாஷைகளை உடனடியாக பேசும் நவீன பெந்தெகொஸ்தே இல்லாமலும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு எவ்வாறு நற்செய்தியை முன்னேற்றுவித்திருக்கிறது என்பதை விளக்கிக் காட்டுகிறது.—அப்போஸ்தலர் 2:1-11.
20 ஒருசில வருஷங்களுக்கு முன்புதானே, அல்பேனியா ஒரேவொரு உண்மையான நாத்திக கம்யூனிஸ நாடாக தொடர்ந்து கருதப்பட்டது. நேஷனல் ஜியகிராஃபிக் பத்திரிகை 1980-ல் சொன்னது: “அல்பேனியா [மதத்திற்கு] தடைவிதிக்கிறது, 1967-ல் தன்னைத்தானே ‘உலகிலேயே முதல் நாத்திக நாடாக’ அறிவித்துக்கொண்டது. . . . அல்பேனியாவின் புதிய தலைமுறைக்கு நாத்திகம் மாத்திரமே தெரியும்.” இப்போது கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்திருக்க, தங்களுடைய ஆவிக்குரிய தேவையை உணரும் அல்பேனியர்கள் யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் பிரசங்கிப்புக்குப் பிரதிபலித்து வருகின்றனர். 1992-ல் இத்தாலிய, ஆங்கில மொழியறிவையுடைய இளம் சாட்சிகளடங்கிய ஒரு சிறிய மொழிபெயர்ப்பு தொகுதியானது டிரானாவில் அமைக்கப்பட்டது. இதர நாடுகளிலிருந்து விஜயம் செய்யும் தகுதிவாய்ந்த சகோதரர்கள் லாப்டாப் கம்ப்யூட்டர்களை உபயோகித்து அல்பேனிய பாஷையில் செய்தியைப் பதிவுசெய்ய அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். அவர்கள் துண்டுப்பிரதிகளையும் காவற்கோபுர பத்திரிகையையும் மொழிபெயர்க்க தொடங்கினர். அனுபவம் பெறுகையில், பிற மதிப்புவாய்ந்த பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கின்றனர். அந்தச் சிறிய நாட்டில் (32,62,000 ஜனத்தொகை) தற்போது சுமார் 200 சுறுசுறுப்புள்ள சாட்சிகள் இருக்கின்றனர், 1,984 ஆட்கள் 1994-ல் நடைபெற்ற நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தனர்.
நம் எல்லாருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது
21. எத்தகைய காலப்பகுதியில் நாம் வாழ்ந்துவருகிறோம்?
21 உலக சம்பவங்கள் உச்சக்கட்டத்தை எட்டுகின்றன. குற்றச்செயலும் வன்முறையும், உள்நாட்டுப் போர்களில் உண்டாகும் படுகொலையும் கற்பழிப்பும், நிலவிவரும் வரம்புமீறிய ஒழுக்கமும் அதனாலுண்டாகும் பால்வினை நோய்களும், சட்டப்படியான அதிகாரத்திற்கு அவமதிப்பும் அதிகரிப்பதால் உலகம் அராஜகமாக, கட்டுக்கடங்காமல் போவதாக தோன்றுகிறது. ஆதியாகமத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலங்களுக்கு இணையான காலப்பகுதியில் நாம் இருக்கிறோம்: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.”—ஆதியாகமம் 6:5, 6; மத்தேயு 24:37-39.
22. யெகோவாவின் சாட்சிகள் அனைவருக்குமே என்ன கிறிஸ்தவ பொறுப்பு இருக்கிறது?
22 நோவாவின் நாளில் நடவடிக்கை எடுத்தது போலவே, யெகோவா நடவடிக்கை எடுப்பார். ஆனால் தம்முடைய நீதியாலும் அன்பாலும் சகல தேசத்தாருக்கும் நற்செய்தியையும் எச்சரிப்பு செய்தியையும் முதலில் பிரசங்கிக்குமாறு அவர் விரும்புகிறார். (மாற்கு 13:10) இந்த விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. கடவுளுடைய சமாதானத்தைப் பெற தகுதிவாய்ந்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு அவருடைய சமாதான வழிகளைக் கற்றுக்கொடுப்பதே அந்தப் பொறுப்பாகும். சீக்கிரத்தில், கடவுளுடைய உரிய காலத்தில், பிரசங்க வேலை வெற்றிகரமாக முற்றுப்பெற்றுவிட்டதாக இருக்கும். “பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 10:12, 13; 24:14, NW; 28:19, 20.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நவீனநாளைய சாட்சிகள் தங்களுடைய ஊழியத்தில் என்ன வெற்றியடைந்திருக்கின்றனர்?
◻ கிறிஸ்தவ செய்தியை ஏன் அநேகர் நிராகரிக்கின்றனர்?
◻ சாட்சிகள் எந்த அப்போஸ்தல பிரசங்கிப்பு முறையைப் பயன்படுத்துகின்றனர்?
◻ பலன்தரும் ஊழியத்திற்கு நம்மிடம் என்ன கருவிகள் இருக்கின்றன?
◻ மாற்கு 13:10-ற்கு இணங்க நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும்?
[அடிக்குறிப்புகள்]
a புறஜாதியாரைப் பற்றிய கூடுதலான விஷயங்களுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த வேதாகமங்களின்பேரில் உட்பார்வை 2-ம் தொகுதி, 472-4 பக்கங்களில் “தேசத்தார்” என்ற பொருளைப் பாருங்கள்.
b கிறிஸ்தவ ஊழியத்தின்பேரில் நடைமுறையான ஆலோசனைகளுக்கு, ஆகஸ்ட் 15, 1984 ஆங்கில காவற்கோபுரத்தில் “பலன்தரும் ஊழியர்களாவது எப்படி” என்று 15-ம் பக்கத்திலுள்ள கட்டுரையையும் “அதிக சீஷர்களிடம் வழிநடத்தும் பலன்தரும் ஊழியம்” என்று 21-ம் பக்கத்திலுள்ள கட்டுரையையும் பாருங்கள்.
4. கிறிஸ்தவ ஊழியத்தின்மீது வரும் உலகளாவிய எதிர்ப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது?
[பக்கம் 19-ன் பெட்டி]
நாடு சுறுசுறுப்பாயிருந்த சாட்சிகள் 1943-ல் 1993-ல்
அயர்லாந்து 150? 4,224
அர்ஜன்டினா 374 1,02,043
இத்தாலி இரண்டாம் உலகப் போர்—பதிவில்லை 2,01,440
உருகுவே 22 9,144
கொலம்பியா ?? 60,854
சிலி 72 44,668
பிரான்ஸ் இரண்டாம் உலகப் போர்—பதிவில்லை 1,22,254
பிரேஸில் 430 3,66,297
பிலிப்பைன்ஸ் இரண்டாம் உலகப் போர்—பதிவில்லை 1,16,576
பெரு ஊழியஞ்செய்த பதிவில்லை 45,363
போர்த்துகல் ஊழியஞ்செய்த பதிவில்லை 41,842
போலாந்து இரண்டாம் உலகப் போர்—பதிவில்லை 1,13,551
மெக்ஸிகோ 1,565 3,80,201
வெனிசுவேலா ஊழியஞ்செய்த பதிவில்லை 64,081
ஸ்பெய்ன் ஊழியஞ்செய்த பதிவில்லை 97,595
[பக்கம் 17-ன் படம்]
ஸ்பெய்ன் போன்ற அநேக கத்தோலிக்க நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் அதிகரிக்கின்றனர்
[பக்கம் 18-ன் படங்கள்]
உலகமுழுவதுமுள்ள தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர்