அதிகாரம் 96
பணக்காரத் தலைவனுக்கு இயேசு பதிலளிக்கிறார்
மத்தேயு 19:16-30 மாற்கு 10:17-31 லூக்கா 18:18-30
முடிவில்லாத வாழ்வைப் பற்றி ஒரு பணக்காரன் கேட்கிறான்
பெரேயா வழியாக எருசலேமை நோக்கி இயேசு பயணம் செய்துகொண்டிருக்கிறார். ஒரு பணக்கார இளைஞன் அவரிடம் ஓடிவந்து, அவர் முன்னால் மண்டிபோடுகிறான். அவன் “யூதத் தலைவர்களில் ஒருவன்.” ஒருவேளை, அவன் ஒரு ஜெபக்கூடத்தின் தலைவனாகவோ நியாயசங்கத்தின் உறுப்பினராகவோ இருந்திருக்கலாம். அவன் இயேசுவிடம், “நல்ல போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான்.—லூக்கா 8:41; 18:18; 24:20.
அதற்கு இயேசு அவனிடம், “என்னை ஏன் நல்லவன் என்று சொல்கிறாய்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது” என்று சொல்கிறார். (லூக்கா 18:19) ஒருவேளை, சம்பிரதாயத்துக்காக இயேசுவை “நல்ல போதகரே” என்று அவன் கூப்பிட்டிருக்கலாம். பொதுவாக, ரபீக்கள்தான் இப்படிப்பட்ட பட்டப்பெயர்களைப் பயன்படுத்துவார்கள். இயேசு நன்றாகப் போதிப்பவர் என்பது உண்மைதான். ஆனாலும், “நல்லவர்” என்ற பட்டப்பெயர் கடவுளுக்குத்தான் சொந்தம் என்று இயேசு அவனிடம் சொல்கிறார்.
பிறகு, “முடிவில்லாத வாழ்வைப் பெற நீ விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி” என்று அவனிடம் சொல்கிறார். அதற்கு அவன், “எந்தக் கட்டளைகளை?” என்று கேட்கிறான். கொலை, மணத்துணைக்குத் துரோகம், திருட்டு, பொய் சாட்சி, பெற்றோருக்கு மதிப்பு கொடுப்பது ஆகியவற்றைப் பற்றிப் பத்துக் கட்டளைகள் சொல்வதை இயேசு குறிப்பிடுகிறார். பிறகு, “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்ற முக்கியமான கட்டளையையும் அவனிடம் சொல்கிறார்.—மத்தேயு 19:17-19.
அப்போது அவன், “இவை எல்லாவற்றையும் நான் கடைப்பிடித்து வருகிறேன்; என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?” என்று கேட்கிறான். (மத்தேயு 19:20) இன்னும் பெரியளவில் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்தால், தனக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று அவன் நினைத்திருக்கலாம். அவன் உண்மையிலேயே ரொம்ப ஆர்வமாக இருப்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், ‘இயேசு அன்போடு அவனைப் பார்க்கிறார்.’ (மாற்கு 10:21) ஆனாலும், அவனுக்கு ஒரு தடை இருக்கிறது.
அந்த மனிதன் தன் சொத்துப்பத்துகளை ரொம்ப நேசிக்கிறான். அதனால் இயேசு அவனிடம், “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது; நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா; அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்” என்று சொல்கிறார். அவன் தன்னுடைய பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டால், அவர்களால் அவனுக்கு அதைத் திருப்பித் தர முடியாது. பிறகு, அவன் இயேசுவின் சீஷனாக ஆகிவிடலாம். அவர் சொன்னதைக் கேட்டதும், அவன் எழுந்து சோகமாகத் திரும்பிப் போகிறான். இயேசுவுக்கு அவனைப் பார்த்து பரிதாபமாக இருந்திருக்கலாம். அவனிடம் “நிறைய சொத்துகள்” இருக்கின்றன. அவற்றை இழக்க அவனுக்கு மனம் வராததால், உண்மையான பொக்கிஷம் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. (மாற்கு 10:21, 22) அதனால்தான், “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவது எவ்வளவு கஷ்டம்!” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 18:24.
“சொல்லப்போனால், கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றும் சொல்கிறார். சீஷர்கள் இதையெல்லாம் கேட்டு ரொம்ப ஆச்சரியப்படுகிறார்கள். அதனால், “யாரால் மீட்புப் பெற முடியும்?” என்று கேட்கிறார்கள். யாராலும் மீட்புப் பெற முடியாதா? அது அந்தளவு கஷ்டமா? இயேசு அவர்களை நேராகப் பார்த்து, “மனுஷர்களால் செய்ய முடியாத காரியங்களைக் கடவுளால் செய்ய முடியும்” என்று சொல்கிறார்.—லூக்கா 18:25-27.
அந்தப் பணக்கார இளைஞனைப் போல் இல்லாமல், தாங்கள் வித்தியாசமான முடிவு எடுத்திருப்பதாக பேதுரு சொல்கிறார். “இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்கிறார். அவர்கள் சரியான முடிவு எடுத்திருப்பதால், கடைசியில் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இயேசு சொல்கிறார். “எல்லாம் புதிதாக்கப்படுகிற காலத்தில், மனிதகுமாரன் தன்னுடைய மகிமையான சிம்மாசனத்தில் உட்காரும்போது, என்னைப் பின்பற்றியிருக்கிற நீங்களும் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 19:27, 28.
எதிர்காலத்தில் இந்தப் பூமியில் எல்லாம் புதிதாக்கப்பட்டு, ஏதேன் தோட்டத்தில் இருந்ததைப் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மனதில் வைத்துதான் இயேசு இதைச் சொல்கிறார். பேதுருவும் மற்ற சீஷர்களும் இயேசுவுடன் சேர்ந்து அந்தப் பூஞ்சோலை பூமியை ஆட்சி செய்வார்கள். அவர்கள் செய்கிற எந்தத் தியாகமும் இந்த அருமையான பரிசுக்கு ஈடாகாது.
எல்லா பலன்களும் எதிர்காலத்தில்தான் கிடைக்கும் என்று இயேசு சொல்லவில்லை. சில பலன்களை அவருடைய சீஷர்கள் அப்போதே அனுபவிப்பார்கள். “கடவுளுடைய அரசாங்கத்துக்காக வீட்டையோ மனைவியையோ சகோதரர்களையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ தியாகம் செய்கிறவன் இந்தக் காலத்தில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். வரப்போகும் காலத்தில் முடிவில்லாத வாழ்வையும் நிச்சயம் பெறுவான்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 18:29, 30.
உண்மைதான், அவருடைய சீஷர்கள் எங்கே போனாலும், சகோதர சகோதரிகள் அவர்களை அன்பாகக் கவனித்துக்கொள்வார்கள். குடும்ப அங்கத்தினர்கள் மத்தியில் இருக்கிற அன்பைவிட இது இன்னும் நெருக்கமான பந்தமாக இருக்கும். ஆனால், அந்தப் பணக்கார இளைஞன் இந்த ஆசீர்வாதத்தையும் இழக்கப்போகிறான், கடவுளுடைய பரலோக அரசாங்கத்தில் ஆட்சி செய்கிற வாய்ப்பையும் இழக்கப்போகிறான்.
“ஆனால், முந்தினவர்கள் பலர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் முந்தினவர்களாகவும் ஆவார்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 19:30) இதற்கு என்ன அர்த்தம்?
அந்தப் பணக்கார இளைஞன் ‘முந்தினவர்களில்’ ஒருவனாக இருக்கிறான். ஏனென்றால், அவன் ஒரு யூதத் தலைவன். கடவுளுடைய கட்டளைகளை அவன் கடைப்பிடிப்பதால், அவன் இயேசுவின் சீஷனாகி அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு நிறைய நல்லது செய்திருக்கலாம். ஆனால், அவன் தன் வாழ்க்கையில் சொத்துப்பத்துகளுக்கு முதலிடம் கொடுக்கிறான். அந்தத் தேசத்தில் இருக்கிற சாதாரண மக்களோ, இயேசு சத்தியத்தைப் போதிக்கிறார் என்பதையும் வாழ்வுக்குப் போகிற வழியைக் காட்டுகிறார் என்பதையும் புரிந்துகொள்கிறார்கள். ஒருவிதத்தில் அவர்கள் “பிந்தினவர்களாக” இருந்தார்கள். ஆனால் இப்போது, “முந்தினவர்களாக” ஆகிறார்கள். அவர்கள் பரலோகத்தில் சிம்மாசனங்களில் உட்கார்ந்து, இயேசுவுடன் சேர்ந்து பூஞ்சோலை பூமியை ஆட்சி செய்கிற வாய்ப்பைப் பெறுவார்கள்.