பதினெட்டாம் அதிகாரம்
‘இருதயத்தில் பதித்து ஆழ்ந்து யோசித்தாள்’
1, 2. மரியாளின் பயணத்தை விவரியுங்கள், அந்தப் பயணம் ஏன் அவளுக்கு அசௌகரியமாய் இருந்தது?
பொதி சுமக்கும் கழுதைமீது ஒரே நிலையில் அமர்ந்து வரும் மரியாள் இப்போது சற்று சிரமப்பட்டு நகர்ந்து உட்காருகிறாள். அவள் சவாரி செய்ய ஆரம்பித்து பல மணிநேரம் ஓடிவிட்டது. தொலைதூர பெத்லகேமுக்குச் செல்லும் பாதையில் அந்தக் கழுதைக்கு முன்னால் கால்கடுக்க நடந்து செல்கிறார் யோசேப்பு. மரியாள் தன் வயிற்றுக்குள் இருக்கும் ஜீவன் தன்னைச் செல்லமாக உதைப்பதை மறுபடியும் உணர்கிறாள்.
2 மரியாளுக்குப் பிரசவகாலம் நெருங்கியிருக்கிறது. அதனால்தான், அவள் “நிறைமாதக் கர்ப்பிணி” என பைபிள் கூறுகிறது. (லூக். 2:5) இந்தத் தம்பதியினர் காடுகரைகளைக் கடந்து செல்கிறார்கள்; ஏர் ஓட்டிக்கொண்டிருக்கிற... விதை விதைத்துக்கொண்டிருக்கிற... விவசாயிகள் சிலர், ‘இந்த நிலைமையில் ஏன் இந்தப் பெண் பயணம் செய்கிறாள்’ எனப் புருவம் மேலிட அவர்களை ஏறிட்டுப் பார்த்திருக்கலாம். மரியாள் நாசரேத்தைவிட்டு இவ்வளவு தூரம் பயணம்போக என்ன காரணம்?
3. மரியாளுக்குக் கிடைத்த பொறுப்பு என்ன, அவளைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம்?
3 பல மாதங்களுக்குப் பின்னோக்கிச் செல்லலாம். இந்த இளம் யூதப் பெண்ணுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. மனித சரித்திரத்திலேயே இதுவரை யாருக்கும் கிடைக்காத பொறுப்பு அது. அதுதான் மேசியாவை, தேவ மைந்தனை, பெற்றெடுக்கும் பொறுப்பு! (லூக். 1:35) பிரசவகாலம் நெருங்கிய சமயம் பார்த்து இந்தப் பயணத்தைத் தொடங்க வேண்டியதாகிவிட்டது. இந்தப் பயணத்தில், விசுவாசப் பரீட்சைகள் பலவற்றை மரியாள் சந்திக்கிறாள். விசுவாசத்தை உறுதியாய் வைத்துக்கொள்ள அவளுக்கு எது கைகொடுக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
பெத்லகேமை நோக்கி
4, 5. (அ) யோசேப்பும் மரியாளும் ஏன் பெத்லகேமுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்? (ஆ) அரசனின் ஆணை எந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற உதவியது?
4 இப்படிப் பயணம் போவது யோசேப்பும் மரியாளும் மட்டுமே அல்ல. தேசத்திலுள்ள அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்குப் போய் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டுமென ரோமப் பேரரசனாகிய அகஸ்து அண்மையில்தான் ஆணை பிறப்பித்திருந்தார். இதை அறிந்ததும் யோசேப்பு என்ன செய்தார்? ‘யோசேப்பும்கூட, கலிலேயாவில் உள்ள நாசரேத் ஊரிலிருந்து யூதேயாவில் உள்ள தாவீதின் ஊரான பெத்லகேமுக்குப் பயணம் செய்கிறார்; ஏனென்றால், அவர் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர்’ என்று பதிவு சொல்கிறது.—லூக். 2:1-4.
5 இந்தத் தருணத்தில் அரசன் இப்படி ஆணையிட்டது எதேச்சையாக நடந்த ஒன்றல்ல. பெத்லகேமில் மேசியா பிறப்பார் என ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு தீர்க்கதரிசனம் எழுதப்பட்டிருந்தது. நாசரேத்திலிருந்து வெறும் 11 கிலோமீட்டர் தொலைவில் பெத்லகேம் என்ற ஒரு ஊர் இருந்தது. ஆனால், ‘எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமில்தான்’ மேசியா பிறப்பார் என அந்தத் தீர்க்கதரிசனம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. (மீகா 5:2-ஐ வாசியுங்கள்.) நாசரேத்திலிருந்து சமாரியா வழியாக பெத்லகேமுக்குச் செல்ல... மலைகள் நிறைந்த பாதையில் கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அந்த பெத்லகேமுக்குத்தான் யோசேப்பு போக வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அதுதான் தாவீது ராஜாவின் பூர்வீகம்—யோசேப்பும் மரியாளும் அவருடைய வம்சத்தைச் சேர்ந்தவர்களே.
6, 7. (அ) பெத்லகேமுக்குப் போகும் பயணம் ஏன் மரியாளுக்குச் சவாலாக இருந்திருக்கலாம்? (ஆ) மரியாள் முன்பு எடுத்த தீர்மானங்களும் யோசேப்பின் மனைவியாக எடுத்த தீர்மானங்களும் எப்படி வேறுபட்டன? (அடிக்குறிப்பையும் காண்க.)
6 பெத்லகேமுக்குச் செல்ல யோசேப்பு எடுத்த முடிவுக்கு மரியாள் கட்டுப்பட்டு நடக்கிறாளா? அந்தப் பயணம் கடினமான பயணம் ஆயிற்றே. அது இலையுதிர் காலத்தின் ஆரம்பமாக இருக்கலாம். கோடை விடைகொடுத்துவிட்டதால் இப்போது சாரல் அடிக்கலாம். அதுமட்டுமா? கடல் மட்டத்திலிருந்து 2,500-க்கும் அதிகமான அடி உயரத்தில் பெத்லகேம் அமைந்திருக்கிறது; பல நாட்கள் சிரமப்பட்டு பயணம் செய்தபின் பெத்லகேமுக்குப் போகும் செங்குத்தான மலைப்பாதையில் ஏறிச்செல்வது பெரும்பாடாக இருக்கும்! போதாக்குறைக்கு, மரியாள் நிறைமாதமாக இருப்பதால், ஆங்காங்கே நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். இதனால், வழக்கமாக எடுக்கும் நாட்களைவிட அதிக நாட்கள் எடுக்கலாம். இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய வீட்டில் இருக்கவே ஏங்குவாள். பிரசவ நேரத்தில், உற்றார் உறவினர் அருகில் இருப்பது அவளுக்கு ஒத்தாசையாக இருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ள அவளுக்கு உண்மையிலேயே தைரியம் தேவைப்படுகிறது.
7 இருந்தாலும், ‘மரியாளுடன் பெயர்ப்பதிவு செய்வதற்காக யோசேப்பு போனதாக’ லூக்கா எழுதுகிறார். ‘நிச்சயிக்கப்பட்டபடியே [யோசேப்புக்கு மரியாள்] மணம்செய்து கொடுக்கப்பட்டிருந்தாள்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார். (லூக். 2:4, 5) மரியாள் முன்பு எடுத்த தீர்மானங்களுக்கும் இப்போது யோசேப்பின் மனைவியாக எடுக்கும் தீர்மானங்களுக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. ஆன்மீகப் பாதையில் தன்னை வழிநடத்திச் செல்லும் தலைவனாகத் தன் கணவனைக் கருதுகிறாள்; அவருடைய தீர்மானங்களுக்கு ஆதரவு தந்து, உற்ற துணையாக இருக்கும்படி கடவுள் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுகிறாள்.a இப்படியாக, தன்னுடைய விசுவாசத்திற்குச் சவாலான ஒன்றைக் கீழ்ப்படிதல் என்ற குணத்தால் வெற்றிகரமாகச் சந்திக்கிறாள்.
8. (அ) யோசேப்புடன் சேர்ந்து பெத்லகேமுக்குச் செல்ல மரியாளை வேறு எதுவும் உந்துவித்திருக்கலாம்? (ஆ) விசுவாசமுள்ளோருக்கு மரியாளின் உதாரணம் எப்படி ஓர் ஒளிவிளக்காய்த் திகழ்கிறது?
8 யோசேப்புக்குக் கீழ்ப்படிந்து நடக்க மரியாளை வேறெதுவும் உந்துவித்திருக்கலாம்? பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்ற தீர்க்கதரிசனத்தை அவள் அறிந்திருந்தாளா? அதைப் பற்றி பைபிள் சொல்வதில்லை; என்றாலும், அன்றைய மதத்தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த விஷயம் தெரிந்திருந்தது என்பதால் அவளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. (மத். 2:1-7; யோவா. 7:40-42) அதோடு, வேதவசனங்களை மரியாள் நன்றாகவே அறிந்திருந்தாள். (லூக். 1:46-55) மரியாள் இந்தப் பயணத்துக்கு ஒப்புக்கொண்டது, தன்னுடைய கணவனுக்குக் கீழ்ப்படிவதற்காக இருந்தாலும் சரி... அரசனுடைய ஆணைக்குப் பயந்து நடப்பதற்காக இருந்தாலும் சரி... யெகோவா உரைத்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக இருந்தாலும் சரி... அல்லது இந்த எல்லாக் காரணங்களுக்காக இருந்தாலும் சரி... அவள் ஒரு தலைசிறந்த முன்மாதிரி. மனத்தாழ்மையும் கீழ்ப்படிதலும் உள்ள ஆண்களையும் பெண்களையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார். கீழ்ப்படிதல் என்ற பண்புக்கு மதிப்பே இல்லாத இந்த இருண்ட உலகில் மரியாளின் உதாரணம் விசுவாசமுள்ளோருக்கு ஓர் ஒளிவிளக்காய்த் திகழ்கிறது.
கிறிஸ்துவின் பிறப்பு
9, 10. (அ) பெத்லகேமை நெருங்க நெருங்க யோசேப்பும் மரியாளும் எதைப் பற்றி யோசித்திருக்கலாம்? (ஆ) யோசேப்பும் மரியாளும் எங்கே தங்க வேண்டியதாகிவிட்டது, ஏன்?
9 பெத்லகேமைத் தூரத்திலிருந்து கண்டதும் மரியாள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பாள். அறுவடைக்குக் காத்திருக்கும் ஒலிவமரத் தோப்புகளைக் கடந்து (கடைசியாக அறுவடை செய்யப்பட்ட பயிர்களில் இதுவும் ஒன்று) மலைச்சரிவுகளில் அவர்கள் இருவரும் ஏறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்; அப்போது, இந்தச் சின்னஞ்சிறு ஊரின் சரித்திரம் அவர்கள் மனதில் தெளிந்த நீரோடை போல் ஓடியிருக்கலாம். மீகா தீர்க்கதரிசி சொன்னது போல, இது யூதாவின் பட்டணங்களில் ஒன்றாகக் கருதப்பட முடியாதளவுக்கு அற்பமாக இருந்தது; என்றாலும், ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போவாஸ், நகோமி, தாவீது ஆகியோருடைய தாயகம்.
10 மக்கள் வெள்ளத்தால் அந்த ஊர் நிரம்பி வழிந்ததை மரியாளும் யோசேப்பும் காண்கிறார்கள். அநேகர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய அவர்களுக்கு முன்பாகவே அங்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள். ஆகவே, சத்திரத்தில் தங்க இவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.b அந்த இரவுப்பொழுதைத் தொழுவத்தில் கழிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இதுவரை அனுபவித்திராத ஒரு வலியில் தன் மனைவி துடிப்பதை யோசேப்பு பார்க்கிறார், அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாவதைக் கண்டு அவர் எவ்வளவு தவியாய்த் தவித்திருப்பார். அவளுக்கு இந்த இடத்தில் போய் பிரசவ வேதனை வந்துவிட்டதே!
11. (அ) மரியாளின் நிலையை நினைக்கும்போது ஏன் எல்லாப் பெண்களும் அனுதாபப்படுவார்கள்? (ஆ) எந்த விதங்களில் இயேசு ‘முதல் மகன்’?
11 எந்தப் பெண்ணுமே மரியாளின் நிலையை நினைக்கும்போது அனுதாபப்படுவாள். வழிவழியாக வருகிற பாவத்தின் காரணமாகப் பிரசவத்தின்போது பெண்கள் வேதனைப்படுவார்கள் எனச் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே யெகோவா அறிவித்திருந்தார். (ஆதி. 3:16) இதற்கு மரியாள் விதிவிலக்கு என்று சொல்ல எந்த அத்தாட்சியும் இல்லை. பிரசவத்தின்போது மரியாள் எப்படி வேதனைப்பட்டாள் என்பதையெல்லாம் விவரிக்காமல், “அவள் தன் முதல் மகனைப் பெற்றெடுத்தாள்” என்று மட்டும் லூக்கா சொல்கிறார். (லூக். 2:7) ஆம், அவளுக்கு ‘முதல் மகன்’ பிறக்கிறார். அதன்பின் மரியாளுக்குக் குறைந்தபட்சம் ஏழு பிள்ளைகளாவது பிறந்திருப்பார்கள். (மாற். 6:3) ஆனால், இந்த மகனோ தனிச்சிறப்பு வாய்ந்தவராய் இருப்பார். இவர் மரியாளின் முதல் மகன் மட்டும் அல்ல, யெகோவாவின் “படைப்புகளிலேயே முதல் படைப்பாக,” அவருடைய ஒரே மகனாக, இருக்கிறார்.—கொலோ. 1:15.
12. குழந்தையை மரியாள் எங்கே கிடத்தினாள், கிறிஸ்மஸ் நாடகங்களிலும் ஓவியங்களிலும் குடில்களிலும் சித்தரிக்கப்படுபவை எப்படி நிஜத்திலிருந்து வேறுபடுகின்றன?
12 மரியாள் ‘பிள்ளையைத் துணிகளில் சுற்றி, தீவனத் தொட்டியில் கிடத்தினாள்’ என்ற விவரத்தை பைபிள் தருகிறது; இதை இன்று எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். (லூக். 2:7) உலகெங்கும் கிறிஸ்மஸ் நாடகங்களும், ஓவியங்களும், குடில்களும் இந்தச் சம்பவத்தை உணர்ச்சிப்பூர்வமாக்கி அதற்குக் கற்பனை முலாம் பூசியிருக்கின்றன. ஆனால், நிஜத்தைச் சிந்தித்துப் பாருங்கள்: யோசேப்பும் மரியாளும் ஒரு சாதாரண தொழுவத்தில்தான் தங்கியிருக்கிறார்கள். அங்கிருந்த தீவனத் தொட்டியில்தான் குழந்தையைக் கிடத்தியிருக்கிறார்கள். அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, தொழுவத்தில் சுத்தமான காற்றும் இருக்காது, சுகாதாரமும் இருக்காது. வேறு வழியே இல்லாதபோதுதான், பிள்ளையைப் பெற்றெடுக்க பெற்றோர் இப்படிப்பட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். பொதுவாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததைத்தான் கொடுக்க விரும்புவார்கள். அப்படியிருக்கும்போது, யோசேப்பும் மரியாளும் கடவுளுடைய மகனுக்கு இன்னும் எந்தளவு சிறந்ததைக் கொடுக்க விரும்பியிருப்பார்கள்!
13. (அ) மரியாளும் யோசேப்பும் தங்களிடம் இருப்பதை வைத்து எப்படி அந்தக் குழந்தையை மிகச் சிறந்த விதத்தில் கவனித்துக்கொண்டார்கள்? (ஆ) யோசேப்பையும் மரியாளையும் போலவே எப்படி இன்றைய பெற்றோரும் ஆன்மீகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்?
13 இருந்தாலும், தங்களுடைய நிலைமையை எண்ணி அவர்கள் நொந்துபோய் உட்கார்ந்துவிடவில்லை. தங்களிடம் இருப்பதை வைத்து குழந்தையை மிகவும் நன்றாகக் கவனிக்கிறார்கள். உதாரணமாக, அந்தப் பச்சிளங்குழந்தையை மரியாளே கண்ணும்கருத்துமாய்க் கவனித்துக்கொள்கிறாள்... கதகதப்பாகவும் பத்திரமாகவும் தூங்கவைப்பதற்காக அதைத் துணிகளில் இதமாய்ச் சுற்றுகிறாள்... பின்பு தீவனத் தொட்டியில் மென்மையாய்க் கிடத்துகிறாள். தற்போதைய சூழ்நிலையை எண்ணி எண்ணி துவண்டுவிடாமல், அந்தக் குழந்தையை பார்த்துக்கொள்ள தன்னால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்கிறாள். அதைவிட அந்தக் குழந்தையை ஆன்மீக ரீதியில் வளர்ப்பதே மிக மிக முக்கியம் என்பதை அவளும் யோசேப்பும் அறிந்திருக்கிறார்கள். (உபாகமம் 6:6-8-ஐ வாசியுங்கள்.) இன்று ஆன்மீகப் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கும் இந்த உலகில், புத்தியுள்ள பெற்றோர் மரியாளையும் யோசேப்பையும் பின்பற்றுகிறார்கள்; தங்கள் பிள்ளைகளுக்குக் கடவுளுடைய வார்த்தையை ஊட்டி வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஊக்கமளித்த சந்திப்பு
14, 15. (அ) அந்தக் குழந்தையைப் பார்க்க மேய்ப்பர்கள் ஏன் ஆவலாய் இருந்தார்கள்? (ஆ) தொழுவத்தில் குழந்தையைப் பார்த்தபின் மேய்ப்பர்கள் என்ன செய்தார்கள்?
14 அங்கு நிலவுகிற அமைதியான சூழலில் திடீரென ஒரு பரபரப்பு! பெற்றோரையும் முக்கியமாக அந்தக் குழந்தையையும் பார்ப்பதற்காக மேய்ப்பர்கள் ஆவலோடு தொழுவத்தை நோக்கி ஓடிவருகிறார்கள். அந்த மனிதர்களுடைய உள்ளத்தில் உற்சாகம் ஊற்றுபோல் பொங்கிவழிகிறது, முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்கிறது. மந்தையுடன் மலைச்சரிவுகளில் தங்கியிருந்த அந்த மேய்ப்பர்கள் அவசர அவசரமாக ஓடிவந்திருக்கிறார்கள்.c சில கணம் முன்பு தங்களுக்குக் கிடைத்த அற்புதமான அனுபவத்தை... ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிற அந்தப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்: மலைச்சரிவில் நடு ஜாமத்தில் திடீரென ஒரு தேவதூதன் தோன்றினார், அந்த இடத்தைச் சுற்றிலும் யெகோவாவின் மகிமை பிரகாசமாய் வீசியது. அதுமட்டுமல்ல, பெத்லகேமில் கிறிஸ்து சற்று முன்புதான் பிறந்திருக்கிறார்... அந்தக் குழந்தை துணிகளால் சுற்றப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறது... என்று அந்தத் தேவதூதன் சொன்னார். அப்படிச் சொன்னவுடன் ஒரு ஆச்சரியம் நடந்தது... திரளான தேவதூதர்கள் தோன்றி யெகோவாவைப் புகழ்ந்தார்கள்!—லூக். 2:8-14.
15 தாழ்மையுள்ள இந்த மனிதர்கள் பெத்லகேமை நோக்கி ஓடோடி வந்ததில் ஆச்சரியமேதுமில்லை! தூதன் சொன்னது போலவே அந்தப் பச்சிளங்குழந்தை ஒரு தொழுவத்தில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் சிலிர்த்துப்போயிருப்பார்கள். சந்தோஷமான இந்தச் செய்தியை அவர்கள் தங்களுடைய மனதிலேயே பூட்டிவைத்துக்கொள்ளவில்லை. மாறாக, ‘தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறார்கள். மேய்ப்பர்கள் சொன்ன விஷயங்களைக் கேட்ட எல்லாரும் வியப்படைகிறார்கள்.’ (லூக். 2:17, 18) அந்தக் காலத்தில், மதத் தலைவர்கள் மேய்ப்பர்களைக் கேவலமாய்க் கருதினார்கள். ஆனால், தாழ்மையும் விசுவாசமும் உள்ள இந்த மனிதர்களை யெகோவா உயர்வாய்க் கருதினார். இந்த மேய்ப்பர்களின் வருகை மரியாளின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
தாழ்மையும் விசுவாசமும் உள்ள மேய்ப்பர்களை யெகோவா உயர்வாய்க் கருதினார்
16. மரியாள் ஆழ்ந்து சிந்திக்கும் குணமுடையவள் என்பதை எப்படிக் காட்டினாள், அவளுடைய விசுவாசம் பலமாக இருக்க எது உதவியது?
16 பிரசவத்துக்குப்பின் மரியாள் நிச்சயம் தளர்ந்துபோயிருப்பாள், இருந்தாலும் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்டாள். அதுமட்டுமா, “அந்த விஷயங்களையெல்லாம் மரியாள் தன் இருதயத்தில் பதித்துக்கொண்டு, அவற்றைப் பற்றி ஆழ்ந்து யோசித்தாள்.” (லூக். 2:19) இந்த இளம் பெண் ஆழ்ந்து சிந்திக்கும் குணமுடையவள். மேய்ப்பர்களிடம் தேவதூதன் சொன்ன செய்தி மிக முக்கியமான செய்தி என்பது அவளுக்குத் தெரியும். தன் மகன் யார் என்பதையும் அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் மரியாள் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டுமென யெகோவா விரும்பினார்; அதனால்தான், அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொண்டதோடு விட்டுவிடாமல் தன் இருதயத்தில் ஆழமாய்ப் பதிய வைத்துக்கொண்டாள்; பின்வந்த காலங்களில் அவற்றைக் குறித்து மீண்டும் மீண்டும் அசைபோட்டுப் பார்த்தாள். இறுதி மூச்சுவரை மரியாள் பலமான விசுவாசத்துடன் இருந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.—எபிரெயர் 11:1-ஐ வாசியுங்கள்.
17. சத்தியங்களைப் பொறுத்தவரை, நாம் எப்படி மரியாளின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
17 மரியாளின் முன்மாதிரியை நீங்கள் பின்பற்றுவீர்களா? சத்தியங்கள் எனும் மணிக்கற்களை யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் ஏராளமாய்ப் பதித்திருக்கிறார். பைபிள் சொல்கிற இந்தச் சத்தியங்களுக்கு நாம் செவிகொடுத்தால் மட்டுமே அவற்றிலிருந்து பயனடைய முடியும்; அதற்கு, நாம் பைபிளைத் தவறாமல் வாசிக்க வேண்டும். அதை வெறுமனே ஓர் இலக்கிய படைப்பாகக் கருதி வாசிக்காமல், கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்ட வார்த்தையாகக் கருதி வாசிக்க வேண்டும். (2 தீ. 3:16) பின்பு மரியாளைப் போலவே நாமும் ஆன்மீக விஷயங்களை நம் இருதயத்தில் பதித்துக்கொண்டு அவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தனை செய்ய வேண்டும். பைபிளில் வாசிப்பவற்றைத் தியானித்தால், அதை எப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் பின்பற்றலாம் எனச் சிந்தித்தால், நம் விசுவாசம் வளருவதற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
மனதில் பதிக்க இன்னும் சில விஷயங்கள்
18. (அ) இயேசு குழந்தையாக இருந்தபோது, மரியாளும் யோசேப்பும் எப்படித் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்? (ஆ) யோசேப்பும் மரியாளும் ஆலயத்தில் செலுத்திய பலி அவர்களுடைய பொருளாதார நிலையைப் பற்றி எதைச் சுட்டிக்காட்டியது?
18 திருச்சட்டத்தின்படி, பிள்ளை பிறந்த எட்டாம் நாளில் மரியாளும் யோசேப்பும் அதற்கு விருத்தசேதனம் செய்கிறார்கள்; தேவதூதன் சொன்னபடியே, அந்தக் குழந்தைக்கு இயேசு என்று பெயர் சூட்டுகிறார்கள். (லூக். 1:31) பின்பு 40-வது நாளில், பெத்லகேமிலிருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் தூரத்திலுள்ள எருசலேம் ஆலயத்துக்குப் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்; அங்கு தூய்மை சடங்குக்குரிய பலியைச் செலுத்துகிறார்கள்; ஏழை எளியோருக்காகத் திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த சலுகையைப் பயன்படுத்தி இரண்டு காட்டுப் புறாக்களையோ மாடப்புறாக் குஞ்சுகளையோ செலுத்துகிறார்கள். மற்ற பெற்றோரோ ஒரு காட்டுப் புறாவையும் ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் பலி செலுத்துகிறார்கள்; அவர்களைப் போல் செலுத்த முடியாததை நினைத்து இவர்கள் தர்மசங்கடப்படுகிறார்களா? அப்படியே தர்மசங்கடப்பட்டிருந்தாலும் அதை ஓரங்கட்டிவிட்டு கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். அதனால், ஆலயத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மிகுந்த ஊக்கத்தைப் பெறுகிறார்கள்.—லூக். 2:21-24.
19. (அ) சிமியோன் சொன்ன எந்த வார்த்தைகளை மரியாள் தன் இருதயத்தில் பொக்கிஷமாக வைத்துக்கொண்டாள்? (ஆ) இயேசுவைப் பார்த்தபின் அன்னாள் என்ன செய்தாள்?
19 சிமியோன் என்ற வயதான மனிதர் அவர்களிடம் வந்து சில விஷயங்களைச் சொல்கிறார்; இவற்றையும் மரியாள் தன் இருதயத்தில் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறாள். மேசியாவைப் பார்த்த பின்பே சிமியோன் இறப்பார் என்ற வாக்குறுதி அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; குழந்தை இயேசுவே முன்னறிவிக்கப்பட்ட மீட்பர் என்பதை யெகோவாவின் சக்தி அவருக்கு வெளிப்படுத்தியது. மரியாள் பிற்காலத்தில் ஒருநாள் சகிக்க வேண்டிய வேதனையைக் குறித்தும் முன்கூட்டியே அவளுக்குச் சொல்கிறார். அதாவது, ஒரு பெரிய வாள் அவளுடைய உள்ளத்தை ஊடுருவிச் செல்வதைப் போல் இருக்குமெனச் சொல்கிறார். (லூக். 2:25-35) இந்த வார்த்தைகள் எச்சரிக்கையூட்டுவதாக இருந்தாலும், முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவள் அனுபவிக்கப்போகிற வேதனையைத் தாங்கிக்கொள்ள அவளுக்கு உதவியிருக்கலாம். சிமியோனுக்குப்பின் அன்னாள் என்ற தீர்க்கதரிசினி குழந்தை இயேசுவைப் பார்க்கிறாள்; எருசலேமின் விடுதலைக்காக ஆவலாய்க் காத்துக்கொண்டிருக்கும் எல்லோரிடமும் அவரைக் குறித்துப் பேசுகிறாள்.—லூக்கா 2:36-38-ஐ வாசியுங்கள்.
20. இயேசுவை எருசலேமிலுள்ள ஆலயத்திற்குக் கொண்டுவரத் தீர்மானித்தது ஏன் ஒரு நல்ல காரியம்?
20 யோசேப்பும் மரியாளும் அந்தக் குழந்தையை எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவரத் தீர்மானித்தது எவ்வளவு நல்ல காரியம்! தங்களுடைய மகன் வாழ்நாள் முழுவதும் யெகோவாவின் ஆலயத்திற்குத் தவறாமல் வருவதற்கு இப்போதே அவர்கள் நல்ல அஸ்திவாரம் போடுகிறார்கள். அங்கு இருக்கும்போது தங்களுடைய திராணிக்குத் தக்கதை யெகோவாவுக்குச் செலுத்துகிறார்கள், அறிவுரைகளையும் உற்சாகத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். மரியாள் விசுவாசத்தில் புதுப் பலம் பெற்று ஆலயத்திலிருந்து திரும்புகிறாள்; தியானிப்பதற்கும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் இருதயத்தில் ஆன்மீகக் காரியங்களை நிரப்பிக்கொண்டு வருகிறாள்.
21. மரியாளுடைய விசுவாசத்தைப் போலவே, நம்முடைய விசுவாசமும் நாளுக்கு நாள் தழைத்தோங்க என்ன செய்ய வேண்டும்?
21 இன்றுள்ள பெற்றோர் இந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதைப் பார்ப்பது எவ்வளவு அருமையாக இருக்கிறது! கிறிஸ்தவப் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைத் தவறாமல் கூட்டங்களுக்கு அழைத்து வருகிறார்கள். இவர்கள் தங்களால் இயன்றதைக் கொடுக்கிறார்கள்; சக விசுவாசிகளை உற்சாகமூட்டிப் பேசுகிறார்கள். இதனால் புதுத்தெம்பும் மனமகிழ்ச்சியும் அடைகிறார்கள், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக அநேக நல்ல விஷயங்களை மனதில் நிரப்பிக்கொண்டு வீடு திரும்புகிறார்கள். இவர்களுடன் கூடிவருவது என்னே ஆனந்தம்! அப்படிச் செய்தால், மரியாளுடைய விசுவாசத்தைப் போலவே நம்முடைய விசுவாசமும் நாளுக்கு நாள் தழைத்தோங்கும்.
a இந்தப் பதிவுக்கும், முன்பு அவள் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய பதிவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். முன்பு, எலிசபெத்தைச் சந்திப்பதற்கு “மரியாள் உடனடியாகப் புறப்பட்டு . . . சென்றாள்” என அந்தப் பதிவு சொல்கிறது. (லூக். 1:39) அந்தச் சமயத்தில், அவள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாளே தவிர அவரை மணமுடிக்கவில்லை; அதனால், அவரிடம் கேட்காமலேயே அவள் முடிவெடுத்திருக்கலாம். ஆனால், அவர்களுக்குத் திருமணமான பின்பு இந்தப் பயணத்தைக் குறித்து யோசேப்பே முடிவெடுத்தார், மரியாள் அல்ல.
b அந்தக் காலத்து ஊர்களில், பயணிகளும் வணிகர் கூட்டத்தினரும் தங்குவதற்குச் சத்திரங்கள் இருந்தன.
c மந்தைகளுடன் மேய்ப்பர்கள் வெளியில் தங்கியிருந்தது... இயேசு பிறந்த சமயத்தைப் பற்றி பைபிள் சுட்டிக்காட்டுகிற காலக்கணக்கு உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது; அதாவது, டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறந்திருக்க முடியாது; ஏனென்றால், அந்தச் சமயத்தில் மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளை வீட்டருகே பட்டியில் அடைத்து வைத்திருப்பார்கள்; அதனால் அக்டோபர் மாத ஆரம்பத்தில்தான் அவர் பிறந்திருக்க வேண்டும்.