பைபிள் தீர்க்கதரிசனத்தில் விசுவாசம் வைப்பது உயிரைப் பாதுகாக்கிறது
எருசலேம் ஆலயத்திலிருந்து கடைசி முறையாக இயேசு வெளியே வருகிறார். அப்போது அவருடைய சீஷர்களில் ஒருவர் ஆலயத்தைப் பார்த்து உணர்ச்சிபொங்க இவ்வாறு சொல்கிறார்: “போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும்.” இந்த ஆலயம் யூத மக்கள் பொன்னெனப் போற்றும் மணிமகுடமாய்த் திகழ்கிறது. இருந்தாலும், அவரிடம் இயேசு இவ்வாறு கூறுகிறார்: “இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும்.”—மாற்கு 13:1, 2.
இது உண்மையிலேயே நம்ப முடியாத ஒரு விஷயம்! ஆலயத்தின் சில கற்கள் மிகப் பெரியவையாய் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஆலயத்தைக் குறித்து இயேசு சொன்ன விஷயத்தில் எருசலேமின் அழிவும் உட்படுகிறது; ஒருவேளை, வணக்கத்தின் மையமான ஆலயம் வீற்றிருக்கிற யூதா தேசத்தின் அழிவும் அதில் உட்படலாம். ஆகவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்கிறார்கள்.—மாற்கு 13:3, 4.
“முடிவு உடனே வராது” என இயேசு எச்சரிக்கிறார். முதலில், பல இடங்களில் யுத்தம், பூமியதிர்ச்சி, பஞ்சம், கொள்ளைநோய்கள் உண்டாவதைப் பற்றி சீஷர்கள் கேள்விப்படுவார்கள். அடுத்து நடக்கும் திடுக்கிடும் சம்பவங்கள் யூதா தேசத்தை மாபெரும் துயரத்தில், ஆம் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ ஆழ்த்தும். என்றாலும், கடவுள் குறுக்கிட்டு ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களை,’ அதாவது உண்மையுள்ள கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவார். எப்படி?—மாற்கு 13:7; மத்தேயு 24:7, 21, 22; லூக்கா 21:10, 11.
ரோமுக்கு எதிராக கிளர்ச்சி
இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடுகின்றன. எருசலேமிலுள்ள கிறிஸ்தவர்கள் முடிவை எதிர்நோக்கி இன்னும் காத்திருக்கிறார்கள். யுத்தங்களும், பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் ரோம சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைக்கின்றன. (பக்கம் 9-ல் உள்ள பெட்டியைக் காண்க.) யூதேயாவில் உள்நாட்டு போர்களும் இனக்கலவரங்களும் நடக்கின்றன. இருந்தாலும், கோட்டைச் சுவர்களால் சூழப்பட்ட எருசலேமுக்குள் ஓரளவு அமைதி நிலவுகிறது. மக்கள் எப்போதும்போல் சாப்பிடுவதும் வேலை செய்வதும், கல்யாணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வாழ்வதுமாக இருக்கிறார்கள். பிரமாண்டமான ஆலயம் இருப்பதுதானே நகரத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.
சுமார் பொ.ச. 61-ல் எருசலேமிலுள்ள கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தைப் பெறுகிறார்கள். அவர்களுடைய சகிப்புத்தன்மையை அவர் பாராட்டுகிறார்; அதே சமயத்தில், சபையிலுள்ள சிலர் அவசரவுணர்வு இல்லாதவர்களாய் இருப்பதைக் குறித்து அவர் கவலை தெரிவிக்கிறார். கிறிஸ்தவர்கள் சிலர் ஆன்மீகக் காரியங்களிலிருந்து வழிவிலகிச் செல்பவர்களாகவோ கிறிஸ்தவ முதிர்ச்சி இல்லாதவர்களாகவோ இருக்கிறார்கள். (எபிரெயர் 2:1; 5:11, 12) அவர்களை பவுல் இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். . . . வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது.” (எபிரெயர் 10:35-38) அது உண்மையிலேயே காலத்திற்கேற்ற ஆலோசனை, அல்லவா? ஆனால், கிறிஸ்தவர்கள் விசுவாசமுள்ளவர்களாய் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைக் காண விழிப்புடன் இருப்பார்களா? எருசலேமின் முடிவு அந்தளவு விரைவில் வரவிருந்ததா?
அடுத்த ஐந்து ஆண்டுகளில் எருசலேமின் நிலைமை படிப்படியாக மோசமடைகிறது. கடைசியில் பொ.ச. 66-ல் ஊழல் பேர்வழியான ரோம ஆளுநர் ஃப்ளோரஸ், “வரி நிலுவைத் தொகையாக” 17 தாலந்துகளை வசூலிப்பதற்காக பரிசுத்த ஆலயத்தின் கருவூலத்திலேயே கைவைக்கிறார். கோபாவேசத்தில் கொதித்தெழும் யூதர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். யூத கலகக்காரர்கள், அதாவது ஸெலட்டுகள் கூட்டமாய் எருசலேமுக்கு விரைந்து ரோமப் படை வீரர்களை வெட்டி வீழ்த்துகிறார்கள். அடுத்து, யூதேயாவை ரோமிலிருந்து பிரிந்த தனி நாடென்று துணிவுடன் அறிவிக்கிறார்கள். இப்போது யூதேயாவும் ரோமும் யுத்தக்களத்தில் குதிக்கின்றன!
மூன்று மாதங்களுக்குள்ளாக, சீரியாவைச் சேர்ந்த ரோம ஆளுநர் செஸ்டியஸ் காலஸ் யூதர்களின் கலகத்தை அடக்குவதற்காக 30,000 துருப்புகளுடன் தெற்கு முகமாய் அணிவகுத்து வருகிறார். அவருடைய படைவீரர்கள் கூடாரப் பண்டிகையின்போது எருசலேமை வந்தடைந்து அதன் புறநகர்ப் பகுதிகள் வழியாக விறுவிறுவென ஊடுருவுகிறார்கள். சொற்ப எண்ணிக்கையினரான ஸெலட்டுகள் ஆலயத்தின் கோட்டைக்குள் தஞ்சம் புகுகிறார்கள். சீக்கிரத்திலேயே ரோமப் போர்வீரர்கள் ஆலயத்தின் கோட்டைச் சுவரைச் சேதப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். யூதர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். யூத மதத்தின் புண்ணிய ஸ்தலத்தைப் பாழ்ப்படுத்துவது புறமத போர்வீரர்கள் அல்லவா! இருந்தாலும், ‘பாழாக்குகிற அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்’ என்று இயேசு சொன்னதை நகரத்திலுள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூருகிறார்கள். (மத்தேயு 24:15, 16) இயேசு சொல்லியிருந்த தீர்க்கதரிசனத்தில் விசுவாசம் வைத்து, அதன்படி செயல்பட அவர்கள் தூண்டப்பட்டிருப்பார்களா? அப்படிச் செய்தால்தான் அவர்களுடைய உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால், எப்படி?
திடீரென, வெளிப்படையான எந்தக் காரணமுமின்றி செஸ்டியஸ் காலஸ் தன் துருப்புகளுடன் கடற்கரை நோக்கிப் பின்வாங்கிச் செல்ல, ஸெலட்டுகளோ அவர்களைத் தொடர்ந்துபோய் விரட்டியடிக்கிறார்கள். அற்புதகரமாய், அந்நகரில் உபத்திரவத்தின் காலம் குறைக்கப்படுகிறது! இயேசுவின் தீர்க்கதரிசன எச்சரிப்பில் விசுவாசம் வைக்கிற கிறிஸ்தவர்கள் எருசலேமைவிட்டு பெல்லா என்ற நகரத்திற்கு ஓடிப்போகிறார்கள்; இது யோர்தான் நதியின் அக்கரையிலுள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் சச்சரவற்ற ஒரு நகரமாகும். கிறிஸ்தவர்கள் ஓடிப்போவது தக்க சமயத்திலாகும். ஏனெனில், ஸெலட்டுகள் சீக்கிரத்திலேயே எருசலேமுக்குத் திரும்பிவந்து, அங்கு மீந்திருக்கிற குடிமக்களை தங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபடும்படி வற்புறுத்துகிறார்கள்.a இதற்கிடையே பெல்லாவில் பாதுகாப்பாக இருக்கும் கிறிஸ்தவர்கள், அடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
அராஜகத்தின் பிடியில்
சில மாதங்களுக்குள்ளாகவே, ஒரு புதிய ரோமப்படை களம் இறங்குகிறது. பொ.ச. 67-ன்போது தளபதி வெஸ்பேஸியனும் அவரது மகன் டைட்டஸும் 60,000 துருப்புகளைக் கொண்ட ஒரு மாபெரும் படையை ஒன்றுதிரட்டுகிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இந்தக் கொடூரமான இராணுவம் எருசலேமை நோக்கி முன்னேறிச் செல்கிறது, செல்லும் வழியில் தடைகளையெல்லாம் தகர்த்தெறிகிறது. இதற்கிடையில், எருசலேமுக்குள் இருக்கிற யூத பிரிவினர்களுக்கிடையே காட்டமான போராட்டங்கள் வெடிக்கின்றன. நகரிலுள்ள தானிய சேமிப்பு கிடங்குகள் அழிக்கப்படுகின்றன, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதி தரைமட்டமாக்கப்படுகிறது, 20,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்படுகிறார்கள். வெஸ்பேஸியன் எருசலேமுக்கு முன்னேறிச் செல்வதைச் சற்று தாமதப்படுத்தி, இவ்வாறு அறிவிக்கிறார்: ‘ரோம தளபதியின் வேலையை நான் செய்வதைவிட கடவுள் நன்றாகச் செய்கிறார்; நம் விரோதிகள் அவர்களுடைய கைகளாலேயே ஒருவரையொருவர் அழிக்கிறார்கள்.’
ரோம சக்கரவர்த்தியான நீரோ மரிக்கையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்க ரோமுக்கு வெஸ்பேஸியன் செல்கிறார். அப்போது, யூதர்களின் கிளர்ச்சிக்கு முடிவுகட்டும் பணியை டைட்டஸிடம் அவர் ஒப்படைக்கிறார். பொ.ச. 70-ல் ஏறக்குறைய பஸ்கா பண்டிகையின் சமயத்தில் டைட்டஸ் எருசலேமை வந்தடைகிறார். நகரத்து குடிமக்களையும் அங்கு வந்திருக்கும் யாத்திரிகர்களையும் பிடிக்கிறார். முற்றுகையிட்டுள்ள தலைநகரைச் சுற்றி ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு கூர்மையான கம்புகளால் மதில் எழுப்புவதற்கு யூதேயாவின் கிராமப்புறங்களிலுள்ள மரங்களையெல்லாம் அவருடைய படைவீரர்கள் வெட்டி வீழ்த்துகிறார்கள். இயேசு முன்னறிவித்த விதமாகவே இது சம்பவிக்கிறது: ‘உன் சத்துருக்கள் உன்னைச் சூழ [“கூர்மையான கம்புகளால், NW] மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கிப்போடுவார்கள்.’—லூக்கா 19:43.
சீக்கிரத்திலேயே பஞ்சமும் நகரை வாட்டியெடுக்கிறது. ஆயுதம் ஏந்திய கலகக்காரர்கள் இறந்தவர்களின் வீடுகளையும் இறக்கும் நிலையில் இருப்போரின் வீடுகளையும் கொள்ளையடிக்கிறார்கள். பசிக்கொடுமை தாங்காமல் குறைந்த பட்சம் ஒரு பெண்ணாவது தன் பச்சிளங்குழந்தையை கொன்று சாப்பிடுகிறாள்; இது முன்னறிவிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகும்: “உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், . . . உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.”—உபாகமம் 28:53-57.
முடிவில், ஐந்து மாத முற்றுகைக்குப் பிறகு எருசலேம் வீழ்ச்சியடைகிறது. நகரமும் அதன் மகத்தான ஆலயமும் கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கொளுத்தப்படுகின்றன, அதன் கற்கள் சுக்குநூறாகச் சிதறுகின்றன. (தானியேல் 9:26) மொத்தமாக சுமார் 11,00,000 பேர் உயிரிழக்கிறார்கள், 97,000 பேர் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள்.b (உபாகமம் 28:68) யூதேயாவில் கிட்டத்தட்ட யூத குடிமக்களே இல்லாமல் போகிறார்கள். இது நிஜமாகவே, சரித்திரம் காணாத ஒரு தேசிய பேரழிவாக இருக்கிறது; யூதர்களின் அரசியல், மத, மற்றும் கலாச்சார வாழ்க்கையில் ஒரு திருப்புக்கட்டமாகவும் இருக்கிறது.c
இச்சம்பவங்களெல்லாம் நடக்கையில் பெல்லாவில் இருக்கிற கிறிஸ்தவர்களோ தாங்கள் மீட்படைந்ததற்காக கடவுளுக்கு இதயப்பூர்வமாக நன்றி செலுத்துகிறார்கள். பைபிள் தீர்க்கதரிசனத்தின் மீதுள்ள விசுவாசம் அவர்களுடைய உயிரைப் பாதுகாத்திருக்கிறது!
இச்சம்பவங்களையெல்லாம் நம் மனத்திரைக்குக் கொண்டுவருகையில், இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தின்போது என் உயிர் பாதுகாக்கப்படும் அளவுக்கு எனக்கு விசுவாசம் இருக்கிறதா? “ஆத்துமா ஈடேற [அதாவது உயிரோடு பாதுகாக்கப்பட] விசுவாசிக்கிறவனாய்/ளாய் இருக்கிறேனா”?’—எபிரெயர் 10:39; வெளிப்படுத்துதல் 7:14.
[அடிக்குறிப்புகள்]
a ஸெலட்டுகள் ஏழு நாட்கள் ரோமர்களைப் பின்தொடர்ந்து சென்று விரட்டியடித்த பின்பே எருசலேமுக்குத் திரும்பினார்கள் என சரித்திராசிரியரான ஜொஸிஃபஸ் குறிப்பிடுகிறார்.
b ஒரு மதிப்பீட்டின்படி ரோம சாம்ராஜ்யத்திலிருந்த எல்லா யூதர்களிலும் ஏழில் ஒருபாகத்தினருக்கும் மேலானோர் கொல்லப்பட்டார்கள்.
c யூத பைபிள் அறிஞர் ஆல்ஃப்ரெட் எட்டர்ஷைம் இவ்வாறு எழுதினார்: “இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட [இந்த] உபத்திரவம் அவர்களது சரித்திரத்திலேயே மிகப் பயங்கரமானதாய் இருந்தது; வருங்காலத்திலும்கூட இதற்கொத்த துயரங்கள் சம்பவிக்காது.”
[பக்கம் 9-ன் அட்டவணை]
அடையாளத்தின் அம்சங்கள்—முதல் நூற்றாண்டில் நிறைவேறியவை
போர்கள்:
கால் (பொ.ச. 39-40)
வட ஆப்பிரிக்கா (பொ.ச. 41)
பிரிட்டன் (பொ.ச. 43, 60)
ஆர்மீனியா (பொ.ச. 58-62)
யூதேயாவில் உள்நாட்டுப் போர்களும் இனக்கலவரங்களும் (பொ.ச. 50-66)
பூமியதிர்ச்சிகள்:
ரோம் (பொ.ச. 54)
பாம்ப்பே (பொ.ச. 62)
ஆசியா மைனர் (பொ.ச. 53, 62)
கிரேத்தா (பொ.ச. 62)
பஞ்சங்கள்:
ரோம், கிரீஸ், எகிப்து (சுமார் பொ.ச. 42)
யூதேயா (சுமார் பொ.ச. 46)
கொள்ளை நோய்கள்:
பாபிலோனியா (பொ.ச. 40)
ரோம் (பொ.ச. 60, 65)
பொய்த் தீர்க்கதரிசிகள்:
யூதேயா (சுமார் பொ.ச. 56)
[பக்கம் 10-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பொ.ச. 67-70-ல் பாலஸ்தீனாவில் ரோம படையெடுப்பு
பித்தொலோமாய்
கலிலேயாக் கடல்
பெல்லா
பெரேயா
சமாரியா
எருசலேம்
உப்புக் கடல்
யூதேயா
செசரியா
[படத்திற்கான நன்றி]
வரைபடம் மட்டும்: Based on maps copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[பக்கம் 11-ன் படம்]
‘நம் விரோதிகள் அவர்களுடைய கைகளாலேயே ஒருவரையொருவர் அழிக்கிறார்கள்.’—வெஸ்பேஸியன்
[பக்கம் 11-ன் படங்கள்]
பொ.ச. 70-ல் ரோமப் படைகள் எருசலேமை அழித்தன
[பக்கம் 11-ன் படங்களுக்கான நன்றி]
செதுக்குச் சித்திரம்: Soprintendenza Archeologica di Roma; வெஸ்பேஸியன்: Bildarchiv Preussischer Kulturbesitz/Art Resource, NY