நீதியுள்ள புதிய உலகிற்குள் மீட்பு
“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
1, 2. (அ) நம்முடைய காலத்தில் யெகோவா நடப்பிக்கும் மீட்பு எவ்விதமாக பண்டைய காலங்களின் மீட்புகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும்? (ஆ) என்னவிதமான உலகத்திற்குள் யெகோவா தம்முடைய மக்களைக் கொண்டுவருவார்?
யெகோவா மீட்பின் கடவுளாக இருக்கிறார். பண்டைய காலங்களில், அவர் பல சமயங்களில் தம்முடைய மக்களை மீட்டிருக்கிறார். அந்த மீட்புகள் தற்காலிகமானவையாக இருந்தன, ஏனென்றால் அந்தச் சந்தர்ப்பங்களில் ஒன்றில்கூட அவர் நிரந்தரமாக சாத்தானுடைய முழு உலகிற்கும் எதிராக தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றவில்லை. ஆனால் நம்முடைய நாளில், யெகோவா அவருடைய அனைத்து ஊழியர்களுக்காகவும் மிகவும் மகத்தான ஒரு மீட்பை விரைவில் நடப்பிப்பார். இந்த முறை அவர் உலகம் முழுவதிலுமுள்ள சாத்தானுடைய ஒழுங்குமுறையின் எல்லா தடயத்தையும் அழித்துப்போட்டு தம்முடைய ஊழியர்களை நிரந்தரமான, நீதியுள்ள புதிய உலகிற்குள் கொண்டுசெல்வார்.—2 பேதுரு 2:9; 3:10-13.
2 யெகோவா வாக்களிப்பதாவது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11) ஆனால் எவ்வளவு காலத்துக்கு? “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29; மத்தேயு 5:5) என்றபோதிலும், அது சம்பவிப்பதற்கு முன்பாக, இந்த உலகம் ஒருபோதும் அனுபவித்திராத மிகப்பெரிய உபத்திரவ காலத்தை அனுபவிக்கும்.
“மிகுந்த உபத்திரவம்”
3. இயேசு ‘மிகுந்த உபத்திரவத்தை’ எவ்வாறு விவரித்தார்?
3 1914-ல் இந்த உலகம் அதன் ‘கடைசி நாட்களுக்குள்’ பிரவேசித்தது. (2 தீமோத்தேயு 3:1-5, 13) நாம் இப்பொழுது அந்தக் காலப்பகுதிக்குள் 83 ஆண்டுகளாக இருந்துவந்து, அதன் முடிவுக்கு வெகு சமீபமாயிருக்கிறோம்; அப்பொழுது இயேசு முன்னறிவித்தபடியே பின்வருவது நடந்தேறும்: “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” (மத்தேயு 24:21) ஆம், சுமார் ஐந்து கோடி ஆட்களின் உயிர்களைக் காவுகொண்ட இரண்டாம் உலகப் போரைவிடவும்கூட மோசமானது. என்னே உலகை உலுக்கும் காலம் வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது!
4. கடவுளுடைய நியாயத்தீர்ப்பு ஏன் ‘மகா பாபிலோனின்’மீது வருகிறது?
4 “மிகுந்த உபத்திரவம்” பிரமிப்பூட்டும் விதமாக திடீரென, “ஒரே நாழிகையில்” வரும். (வெளிப்படுத்துதல் 18:10) கடவுளுடைய வார்த்தை “மகா பாபிலோன்” என்றழைக்கும் எல்லா பொய் மதங்களின்மீதும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்போது அது தொடங்கியிருப்பதை குறிக்கும். (வெளிப்படுத்துதல் 17:1-6, 15) பண்டைய பாபிலோனின் மேலோங்கிய அம்சம் பொய் மதமாக இருந்தது. நவீன பாபிலோன் பூர்வ பாபிலோனின் மறுவடிவம் போல இருந்து பொய் மத உலக பேரரசை பிரதிநிதித்துவம் செய்கிறது. அவள் அரசியல் அம்சங்களோடு ஒத்திணங்கிப்போவதன் மூலம் வேசியாக இருந்திருக்கிறாள். அவள் அவர்களுடைய போர்களை ஆதரித்தும், எதிர்க்கும் இரு தரப்பிலுள்ள படைகளையும் ஆசீர்வதித்தும் வந்திருக்கிறாள்; இது ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்து கொள்வதில் விளைவடைந்திருக்கிறது. (மத்தேயு 26:51, 52; 1 யோவான் 4:20, 21) தன்னுடைய மத ஆதரவாளர்களின் அசுத்தமான பழக்கவழக்கங்களை கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டு உண்மை கிறிஸ்தவர்களை அவள் துன்புறுத்தியிருக்கிறாள்.—வெளிப்படுத்துதல் 18:5, 24.
5. “மிகுந்த உபத்திரவம்” எவ்வாறு ஆரம்பமாகிறது?
5 அரசியல் அம்சங்கள் திடீரென ‘மகா பாபிலோனை’ தாக்குகையில் “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பமாகிறது. அவர்கள் “அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16) அதற்குப்பின், அவளுடைய முன்னாள் ஆதரவாளர்கள் “அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 18:9-19) ஆனால் யெகோவாவின் ஊழியர்கள் இதை வெகு காலமாகவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தபடியால் அவர்கள் பின்வருமாறு குரலெழுப்புவார்கள்: “அல்லேலூயா, . . . தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே.”—வெளிப்படுத்துதல் 19:1, 2.
கடவுளுடைய ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள்
6, 7. ‘மிகுந்த உபத்திரவத்தின்’ போது தாக்கப்படுகையில் யெகோவாவின் ஊழியர்கள் ஏன் நம்பிக்கையோடிருக்கலாம்?
6 பொய் மதத்தை அழித்துவிட்ட காரணத்தால், அரசியல் அம்சங்கள் யெகோவாவின் ஊழியர்களிடம் கவனத்தைத் திருப்புகின்றன. தீர்க்கதரிசனத்தில் “மாகோகு தேசத்தானான கோகு”வாகிய சாத்தான் சொல்வதாவது: “நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்.” அவர்கள் எளிதில் இரையாகிவிடுவார்கள் என்பதாக நினைத்துக்கொண்டு, அவன் ‘திரளான சேனையோடு வந்து . . . தேசத்தைக் கார்மேகம்போல் மூடி’க்கொண்டு தாக்குவான். (எசேக்கியேல் 38:2, 10-16) இந்தத் தாக்குதல் தோல்வியடைந்துவிடும் என்பதை யெகோவாவின் மக்கள் அறிவார்கள், ஏனென்றால் அவர்கள் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
7 கடவுளுடைய மக்களை சிவந்த சமுத்திரத்தில் சிக்கவைத்து விட்டதாக பார்வோனும் அவனுடைய சேனைகளும் நினைத்தபோது, யெகோவா அற்புதமாக தம்முடைய மக்களை மீட்டு எகிப்திய சேனைகளை அழித்துவிட்டார். (யாத்திராகமம் 14:26-28) “மிகுந்த உபத்திர”வத்தின்போது, தேசங்கள் யெகோவாவின் மக்களை சிக்கவைத்துவிட்டதாக நினைக்கும்போது, அவர் மறுபடியுமாக அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அற்புதமாக வருகிறார்: ‘அந்நாளிலே . . . என் உக்கிரம் என் நாசியில் ஏறும்; என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய் நான் பேசியே ஆகவேண்டும்.’ (எசேக்கியேல் 38:18, 19, NW) ‘மிகுந்த உபத்திரவத்தின்’ உச்சக்கட்டம் அப்போது உடனடியாக வரும்!
8. பொல்லாதவர்களை யெகோவா அழிப்பதற்கு முன்பாக இயற்கைக்கு அப்பாற்பட்ட என்ன நிகழ்ச்சிகள் சம்பவிக்கும், என்ன விளைவோடு?
8 ஏதோவொரு கட்டத்தில், “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பமானபின், ஆனால் யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்பை இந்த உலகின் மற்ற பாகங்களின்மீது நிறைவேற்றிமுடிப்பதற்கு முன், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் சம்பவிக்கும். அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை கவனியுங்கள். “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய [கிறிஸ்துவின்] அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டுபுலம்புவார்கள்.” (மத்தேயு 24:29, 30) “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; . . . பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—லூக்கா 21:25, 26.
‘உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது’
9. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் சம்பவிக்கும்போது யெகோவாவின் ஊழியர்கள் ஏன் ‘தங்கள் தலைகளை உயர்த்தமுடியும்’?
9 அந்தக் குறிப்பிட்ட சமயத்தில், லூக்கா 21:28-லுள்ள தீர்க்கதரிசனம் பொருத்தமாயிருக்கிறது. இயேசு சொன்னார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.” சம்பவித்துக்கொண்டிருக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் யெகோவாவிடமிருந்து வருவதை அறிவதால் கடவுளுடைய சத்துருக்கள் பயத்தினால் நடுங்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் யெகோவாவின் ஊழியர்கள் களிகூருவார்கள், ஏனென்றால் அவர்களுடைய மீட்பு சமீபமாயிருப்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
10. கடவுளுடைய வார்த்தை ‘மிகுந்த உபத்திரவத்தின்’ உச்சக்கட்டத்தை எவ்வாறு விவரிக்கிறது?
10 அதற்குப்பின் யெகோவா சாத்தானுடைய ஒழுங்குமுறையின்மீது முடிவான அழிவைக் கொண்டுவருகிறார்: “கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே [கோகு] வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன். . . . அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.” (எசேக்கியேல் 38:22, 23) சாத்தானுடைய ஒழுங்குமுறையின் எல்லா தடையங்களும் அழிக்கப்படுகின்றன. கடவுளை அசட்டைசெய்யும் மக்களடங்கிய முழு மனித சமுதாயமும் துடைத்தழிக்கப்படுகிறது. அதுவே ‘மிகுந்த உபத்திரவத்தின்’ அர்மகெதோன் உச்சக்கட்டமாகும்.—எரேமியா 25:31-33; 2 தெசலோனிக்கேயர் 1:6-8; வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11-21.
11. யெகோவாவின் ஊழியர்கள் ஏன் ‘மிகுந்த உபத்திரவத்தி’லிருந்து மீட்கப்படுகிறார்கள்?
11 “மிகுந்த உபத்திரவ”த்திலிருந்து மீட்கப்படுகிறவர்கள் பூமி முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் வணக்கத்தாராக இருப்பார்கள். இவர்களே “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வருகிற ‘திரளான கூட்டமாகிய ஜனங்களை’ உண்டுபண்ணுகிறார்கள். இத்தனை பிரமிப்பூட்டும் விதமாக அவர்கள் ஏன் மீட்டுக்கொள்ளப்படுகிறார்கள்? ஏனென்றால் அவர்கள் யெகோவாவுக்கு ‘இரவும் பகலும் பரிசுத்த சேவை’ செய்துவருகிறார்கள். ஆகவே அவர்கள் இந்த உலகின் முடிவை தப்பிப்பிழைத்து நீதியுள்ள ஒரு புதிய உலகிற்குள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-15, NW) இதன் காரணமாக, அவர்கள் யெகோவாவின் இந்த வாக்குறுதி நிறைவேறுவதைக் கண்கூடாக காண்கிறார்கள்: “நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.”—சங்கீதம் 37:34.
ஒரு புதிய உலகம்
12. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் எதை எதிர்நோக்கியிருக்கலாம்?
12 அது என்னே கிளர்ச்சியூட்டும் சமயமாக இருக்கும்—அக்கிரமத்தின் முடிவும் மனித சரித்திரம் காணாத அதிக மகிமையான ஒரு சகாப்தத்தின் உதயமும்! (வெளிப்படுத்துதல் 20:1-4) பிரகாசமான, கடவுள் உருவாக்கிய சுத்தமான சமூகத்திற்குள், பரதீஸாக மாற்றப்படவிருக்கும் ஒரு புதிய உலக பூமிக்குள் பிரவேசித்திருப்பதற்காக அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்கள் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருப்பர்! (லூக்கா 23:43) மேலும் அவர்கள் இனி இறக்கவேண்டியதே இல்லை! (யோவான் 11:26) ஆம், அந்தச் சமயம் முதற்கொண்டு, யெகோவா உயிரோடிருக்கும் வரையாக வாழும் ஆச்சரியமான, மகத்தான எதிர்பார்ப்பை உடையவர்களாக இருப்பார்கள்!
13. பூமியில் தான் ஆரம்பித்து வைத்த குணப்படுத்தும் வேலையை இயேசு எவ்விதமாக தொடர்ந்து செய்கிறார்?
13 பரலோக அரசராக இருக்கும்படி யெகோவா நியமித்திருக்கும் இயேசு, மீட்கப்பட்டவர்கள் அனுபவித்து மகிழப்போகும் அற்புதமான ஆசீர்வாதங்களை மேற்பார்வை செய்வார். பூமியில் இருக்கும்போது, அவர் பார்வையற்ற கண்களையும் கேளாத செவிகளையும் திறந்து, “சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.” (மத்தேயு 9:35; 15:30, 31) புதிய உலகில், அந்த மாபெரும் குணப்படுத்தும் வேலையை தொடர்ந்து செய்வார், ஆனால் உலகளாவிய அளவில் அதைச் செய்வார். கடவுளுடைய பிரதிநிதியாக, அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) மருத்துவ பணியாட்களுக்கும், வெட்டியான்களுக்கும் இனி ஒருபோதுமே தேவையிராது!—ஏசாயா 25:8; 33:24.
14. ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கும் யெகோவாவின் ஊழியர்களுக்கு என்ன மீட்பு வரும்?
14 மேலுமாக கடந்த காலத்தில் இறந்திருக்கும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களும் மீட்கப்பட்டவர்களாக இருப்பார்கள். புதிய உலகில், அவர்கள் கல்லறையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். யெகோவா உத்தரவாதமளிப்பது: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.’ (அப்போஸ்தலர் 24:15) ‘நீதிமான்கள்’ முந்தி உயிர்த்தெழுப்பப்பட்டு, பரதீஸை விரிவுபடுத்துவதில் பங்குகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்துக்கு முன்பாக இறந்துபோன உண்மையுள்ளவர்கள் இப்பொழுது உயிர்பெற்று வந்திருப்பதால் அவர்களுடைய அனுபவங்களைக் கேட்பது அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிறவர்களுக்கு எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும்!—யோவான் 5:28, 29.
15. புதிய உலகில் அனுபவிக்கப்படவிருக்கும் சில நிலைமைகளை விவரிக்கவும்.
15 அப்பொழுது ஜீவனுள்ள அனைத்தும் யெகோவாவைக் குறித்து சங்கீதக்காரன் சொன்ன காரியத்தை அனுபவிக்கும்: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” (சங்கீதம் 145:16) இனிமேலும் பசியில்லை: பூமி சூழியலுக்குரிய சமநிலையைப் பெற்றுக்கொண்டு ஏராளமான விளைச்சலைக் கொடுக்கும். (சங்கீதம் 72:16) வீடில்லாத மக்கள் இனிமேல் இரார்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்,” அவனவன் “தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” (ஏசாயா 65:21, 22; மீகா 4:4) இனிமேலும் பயமில்லை: போர், வன்முறை அல்லது குற்றச்செயல் ஆகிய எதுவும் இருக்காது. (சங்கீதம் 46:8, 9; நீதிமொழிகள் 2:22) “பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.”—ஏசாயா 14:7.
16. புதிய உலகத்தில் நீதி வியாபித்திருப்பதற்கு காரணம் என்ன?
16 புதிய உலகில் சாத்தானின் கருத்துக்கள் பரப்பப்படுவது நீக்கப்பட்டுவிட்டிருக்கும். அதற்குப் பதிலாக, “பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9; 54:13) ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பெற்றுக்கொள்ளும் ஆரோக்கியமான ஆவிக்குரிய போதனையின் காரணமாக, “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) கட்டியெழுப்பும் எண்ணங்களும் செயல்களும் மனிதவர்க்கத்தினர் மத்தியில் வியாபித்திருக்கும். (பிலிப்பியர் 4:8) குற்றச்செயல், அகங்காரம், பொறாமை ஆகியவற்றிலிருந்து விடுபட்ட உலகளாவிய ஒரு மனித சமுதாயத்தை—அனைவரும் கடவுளுடைய ஆவியின் கனியைப் பிறப்பிக்கும் ஒரு சர்வதேச சகோதரத்துவத்தை—கற்பனை செய்துபாருங்கள். ஆம், இப்பொழுதேகூட இப்படிப்பட்ட குணங்களைத் திரள் கூட்டமான ஜனங்கள் வளர்த்துவருகிறார்கள்.—கலாத்தியர் 5:22, 23.
ஏன் இவ்வளவு காலம்?
17. அக்கிரமத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன் யெகோவா ஏன் இத்தனை காலமாக காத்திருந்திருக்கிறார்?
17 என்றபோதிலும் அக்கிரமத்தை நீக்கிப்போட்டு தம்முடைய மக்களை புதிய உலகிற்குள் மீட்டுக்கொள்வதற்கு யெகோவா ஏன் இத்தனை காலமாக காத்திருந்திருக்கிறார்? என்ன செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருந்தது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். அதிக முக்கியமானது, யெகோவாவின் உன்னத அரசாட்சி, ஆட்சிசெய்வதற்கான அவருடைய உரிமை நியாயநிரூபணம் செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. போதிய அளவான காலத்தை அனுமதிப்பதன் மூலம், அவருடைய அரசாட்சிக்குப் புறம்பான மனித ஆட்சி மிகப் பெரிய தோல்வியில் தான் விளைவடைந்திருக்கிறது என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி அவர் காண்பித்துவிட்டார். (எரேமியா 10:23) ஆகவே இப்பொழுது மனித ஆட்சியை மாற்றி அதற்குப் பதிலாக கிறிஸ்துவின்கீழ் தம்முடைய பரலோக ராஜ்ய ஆட்சியை ஏற்படுத்துவதில் அவர் முழுமையாக நியாயமுள்ளவராக இருக்கிறார்.—தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.
18. ஆபிரகாமின் சந்ததியார் எப்போது கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்?
18 இந்த எல்லா நூற்றாண்டுகளிலும் சம்பவித்திருப்பது ஆபிரகாமின் காலத்தில் சம்பவித்தவற்றுக்கு ஒத்திருக்கிறது. ஆபிரகாமின் சந்ததியார் கானான் தேசத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதாக யெகோவா அவரிடம் சொன்னார்—ஆனால் அவர்கள் நானூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது, “ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை.” (ஆதியாகமம் 12:1-5; 15:13-16) இங்கே ‘எமோரியர்’ (முதன்மை வாய்ந்ததாக இருந்த ஒரு கோத்திரம்) என்ற பதம் முழுமையாக கானான் தேசத்து மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும். ஆகவே யெகோவா தம்முடைய மக்கள் கானானைக் கைப்பற்றும்படி உதவிசெய்வதற்கு முன்பாக சுமார் நான்கு நூற்றாண்டுகள் கடந்து செல்லும். இதற்கிடையில் கானானில் இருந்த தேசங்கள் தங்களுடைய சமுதாயங்களை வளர்த்துக்கொள்ள யெகோவா அனுமதித்தார். என்ன விளைவோடு?
19, 20. கானானியர்கள் என்னவிதமான சமுதாயங்களை வளர்த்துக்கொண்டனர்?
19 ஹென்றி ஹெச். ஹேலி எழுதிய பைபிள் ஹாண்ட்புக், மெகிதோவில் புதைப்பொருள் ஆய்வாளர்கள் பாகாலின் மனைவியான அஸ்தரோத் தேவியின் கோவில் இடிபாடுகளைக் கண்டுபிடித்தனர் என்பதாக குறிப்பிடுகிறது. அவர் எழுதுகிறார்: “இந்தக் கோவிலிலிருந்து சில அடி தூரத்தில் ஒரு கல்லறை இருந்தது, அங்கே இந்தக் கோவிலில் பலியாகச் செலுத்தப்பட்ட சிசுக்களின் எஞ்சிய பாகங்களடங்கிய அநேக ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன . . . பாகால் மற்றும் அஸ்தரோத்தின் தீர்க்கதரிசிகள் சிறு பிள்ளைகளை கொல்லும் அதிகாரமுடையவர்களாக இருந்தனர்.” “அவர்கள் கடைப்பிடித்துவந்த மற்றொரு பயங்கரமான பழக்கத்தை ‘அஸ்திபார பலிகள்’ என்பதாக அவர்கள் அழைத்தனர். ஒரு வீடு கட்டப்படுகையில், ஒரு சிறு பிள்ளை பலியிடப்பட்டு, அதன் உடல் சுவரினுள் வைத்து கட்டப்பட்டது.”
20 ஹேலி குறிப்பிடுவதாவது: “பாகால், அஸ்தரோத் மற்றும் பிற கானானிய தெய்வங்களின் வழிபாடு அதிக ஆடம்பரமான களியாட்டங்களை உட்படுத்தியது; அவர்களுடைய கோவில்கள் கெட்ட நடத்தைக்கு முக்கிய இடங்களாக இருந்தன. . . . கானானியர்கள் ஒழுக்கக்கேடான இன்பங்களை அனுபவித்து . . . அதற்குப் பின்னர் அதே கடவுட்களுக்கு தங்களுடைய முதல் பேறான பிள்ளைகளை கொன்று பலிசெலுத்துவதன் மூலம் வழிபட்டனர். பெரும்பாலும், கானானிய தேசம் தேசிய அளவில் ஒருவிதமான சோதோம் கொமோராவைப் போல ஆகிவிட்டிருந்ததாக தெரிகிறது. . . . இப்படிப்பட்ட அருவருப்பான அசுத்தமும் கொடுமையும் நிறைந்த ஒரு நாகரிகத்துக்கு இனிமேலும் தொடர்ந்திருக்க உரிமை ஏதேனும் இருந்ததா? . . . கானானிய பட்டணங்களின் இடிபாடுகளை தோண்டியெடுக்கும் புதைப்பொருள் ஆய்வாளர்கள் கடவுள் அவற்றை ஏன் இன்னும் சீக்கிரமாகவே அழிக்காமல் விட்டார் என்பதாக ஆச்சரியப்படுகிறார்கள்.”—1 இராஜாக்கள் 21:25, 26-ஐ ஒப்பிடுக.
21. கானானியரின் நாளில் இருந்த நிலைமைக்கும் நம்முடைய நாளில் இருக்கும் நிலைமைக்குமிடையே என்ன ஒப்புமை இருக்கிறது?
21 எமோரியருடைய அக்கிரமம் ‘நிறைவாகிவிட்டது.’ ஆகவே இப்பொழுது யெகோவா அவர்களை அடியோடு அழித்துவிடுவதில் முற்றிலும் நியாயமுள்ளவராக இருந்தார். இன்றும் இதுவே உண்மையாக உள்ளது. இன்று உலகம் வன்முறையும், ஒழுக்கக்கேடும் நிறைந்ததாகவும் கடவுளுடைய சட்டங்களை அலட்சியம் செய்வதாகவும் இருக்கிறது. பண்டைய கானானில் செய்யப்பட்ட சிறு பிள்ளைகளைப் பலிசெலுத்தும் பயங்கரமான பழக்கத்தைக்குறித்து நாம் அதிர்ச்சியடைவது பொருத்தமாக இருக்கையில், கானானில் செய்யப்பட்ட எந்தக் காரியத்தைவிடவும்கூட மிக மோசமானதாக இருக்கும், இந்த உலகின் போர்களில் கோடிக்கணக்கான இளைஞர் பலியாகியிருப்பதைப் பற்றி என்ன? நிச்சயமாகவே, யெகோவா இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவருவதில் இப்பொழுது முற்றிலும் நியாயமுள்ளவராக இருக்கிறார்.
வேறு ஒன்றையும் நிறைவேற்றுகிறது
22. யெகோவாவின் பொறுமையின் மூலமாக நம்முடைய நாளில் என்ன நிறைவேற்றப்பட்டு வருகிறது?
22 இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவின் பொறுமை வேறு ஒன்றையும் நிறைவேற்றுகிறது. ஏற்கெனவே எண்ணிக்கையில் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டவர்களாக இருக்கும் திரள் கூட்டத்தாரைக் கூட்டிச்சேர்ப்பதற்கும் கல்விபுகட்டுவதற்கும் நேரத்தை அவர் அனுமதித்துக்கொண்டிருக்கிறார். யெகோவாவின் வழிநடத்துதலில், அவர்கள் முன்னேறிச் செல்லும் ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். ஆண்களும் பெண்களும் இளைஞரும் பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குப் போதிக்க பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள். தங்களுடைய கூட்டங்களின் மூலமாகவும் பைபிள் பிரசுரங்களின் மூலமாகவும் அவர்கள் கடவுளுடைய அன்புள்ள வழிகளைப்பற்றி கற்றுக்கொள்கிறார்கள். (யோவான் 13:34, 35; கொலோசெயர் 3:14; எபிரெயர் 10:24, 25) கூடுதலாக, “நற்செய்தி” பிரசங்கிக்கப்படுவதற்கு உதவும்பொருட்டு அவர்கள் கட்டுமானப்பணி, எலெக்ட்ரானிக்ஸ், பிரிண்டிங் இன்னும் மற்ற துறைகளிலும் திறமைகளை வளர்த்துவருகிறார்கள். (மத்தேயு 24:14) புதிய உலகத்தில் இப்படிப்பட்ட போதிக்கும் மற்றும் கட்டுமான திறமைகள் ஒருவேளை பரவலாக பயன்படுத்தப்படும்.
23. இந்தச் சமயத்தில் உயிரோடிருப்பது ஏன் ஒரு சிலாக்கியமாக இருக்கிறது?
23 ஆம், ‘மிகுந்த உபத்திரவத்தைக்’ கடந்து நீதியுள்ள புதிய உலகிற்குள் செல்ல இன்று யெகோவா தம்முடைய ஊழியர்களை தயார்செய்து வருகிறார். அப்போது, போராடி மேற்கொள்ள சாத்தானும் அவனுடைய பொல்லாத உலகமும் இருக்காது, வியாதியும் வருத்தமும் மரணமும் இனி இருக்காது. கடவுளுடைய மக்கள் ஒரு பரதீஸை உருவாக்கும் வேலையை மிகுதியான உற்சாகத்தோடும் சந்தோஷத்தோடும் செய்ய ஆரம்பிப்பார்கள்; அங்கே ஒவ்வொரு நாளும், “மனமகிழ்ச்சி”யின் நாளாயிருக்கும். சகாப்தங்களின் இந்த உச்சக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டு, யெகோவாவை அறிந்து அவரை சேவிப்பதற்கும், நாம் வெகு சீக்கிரத்தில் ‘நம்முடைய மீட்பு சமீபமாயிருப்பதால் நிமிர்ந்துபார்த்து நம்முடைய தலைகளை உயர்த்துவோம்’ என்பதை உணர்ந்துகொள்வதற்கும் நாம் எவ்வளவு சிலாக்கியம் பெற்றுள்ளோம்!—லூக்கா 21:28; சங்கீதம் 146:5.
மறுபார்வை கேள்விகள்
◻ “மிகுந்த உபத்திரவம்” என்பது என்ன, அது எவ்விதமாக ஆரம்பிக்கிறது?
◻ யெகோவாவின் ஊழியர்கள் மேல் கொண்டுவரப்படும் கோகுவின் தாக்குதல் ஏன் தோல்வியடையும்?
◻ “மிகுந்த உபத்திரவம்” எவ்வாறு முடிவுக்கு வருகிறது?
◻ புதிய உலகம் என்ன மகத்தான நன்மைகளை அளிக்கும்?
◻ இந்த ஒழுங்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக யெகோவா ஏன் இவ்வளவு காலம் காத்திருந்திருக்கிறார்?
[பக்கம் 16-ன் படம்]
முழு பூமியும் ஒரு பரதீஸாக மாற்றப்படும்