விழித்துக்கொண்டிருப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்!
“இதோ, திருடனைப்போல் வருகிறேன். . . . விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW].”
1. யெகோவாவின் நாள் அருகாமையில் இருப்பதால், நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
யெகோவாவின் பெரிய நாள் அருகாமையில் உள்ளது, அப்படியென்றால் அது யுத்தத்தைக் குறிக்கிறது! தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவான் தவளைக்கொப்பான “அசுத்த ஆவிகள்” புறப்பட்டு எல்லா ‘ராஜாக்களிடமாக’ அல்லது பூமியின் ஆட்சியாளர்களிடமாக செல்வதைப் பார்த்தார். என்ன செய்வதற்காக? ஏன், அவர்களை “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்கு”! யோவான் அதற்குப் பின் சொன்னார்: “எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச்சேர்த்தான்.”—வெளிப்படுத்துதல் 16:13-16.
2. மாகோகின் கோகு யார், அவன் யெகோவாவின் ஜனங்களைத் தாக்கும்போது என்ன சம்பவிக்கும்?
2 சீக்கிரத்தில் யெகோவா பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோனை அழிக்கும்படியாக இந்த ஒழுங்குமுறையின் அரசியல் அம்சத்தைத் தூண்டிடுவார். (வெளிப்படுத்துதல் 17:1-5, 15-17) பின்னர் பூமியின் சுற்றுப்புறத்துக்கு தள்ளப்பட்டிருக்கும் மாகோகின் கோகுவாகிய பிசாசாகிய சாத்தான் சமாதானமாய் வாழ்ந்துகொண்டிருக்கும், பாதுகாப்பற்றவர்களாக தோன்றும் யெகோவாவின் ஜனங்கள்மீது முழுவேகத்துடன் ஒரு தாக்குதலைச் செய்வதற்காக தன்னுடைய சேனைகளை நிறுத்துவான். (எசேக்கியேல் 38:1-12) ஆனால் கடவுள் தம்முடைய ஜனத்தைக் காப்பாற்றுவதற்காக செயல்படுவார். அது “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்” ஆரம்பமாகிவிட்டது என்பதைக் குறித்துக்காட்டுவதாக இருக்கும்.—யோவேல் 2:31; எசேக்கியேல் 38:18-20.
3. எசேக்கியேல் 38:21-23-ல் முன்னுரைக்கப்பட்டுள்ள சம்பவங்களை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
3 ஆம், ஹார்மகெதோன் அல்லது அர்மகெதோன் என்றழைக்கப்படும் உலக நிலைமையை நாம் அடைகையில் யெகோவா தம்முடைய ஜனத்தைக் காப்பாற்றி சாத்தானுடைய அமைப்பில் எஞ்சியிருக்கும் எல்லா கடைசி தடயத்தையும் அழித்திடுவார். எசேக்கியேல் 38:21-23-லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசித்து காட்சியை கற்பனைசெய்ய முயற்சித்துப் பாருங்கள். யெகோவா கனமழையால் வரும் பெருவெள்ளத்தையும், நாசம் விளைவுக்கும் கல்மழையையும், வேகமாக பரவும் அக்கினியையும், கொடிய கொள்ளைநோயையும் கொண்டுவருவதற்கு தம்முடைய வல்லமையைப் பயன்படுத்துகிறார். கோகுவின் கூட்டம் கலங்கடிக்கப்பட்டு ஒருவருக்கு எதிராக ஒருவர் சண்டைபண்ணுகையில் உலகமுழுவதிலும் திகில் பரவியிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள கடவுளின் உயிரோடிருக்கும் எந்த விரோதியும் யெகோவா தம்முடைய ஊழியர்களைக் காப்பாற்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிமூலங்களைப் பயன்படுத்துகையில் அழிக்கப்படுவார். முன்னறிவிக்கப்பட்ட ‘மகா உபத்திரவம்’ முடிவுக்கு வருகையில், சாத்தானுடைய தேவபக்தியற்ற உலகைச் சேர்ந்த எதுவுமே எஞ்சியிருக்காது. (மத்தேயு 24:21, NW) இருந்தபோதிலும், தங்களுடைய மரண வேதனையிலும்கூட தங்களுடைய அழிவுக்கு யார் காரணம் என்பதை பொல்லாதவர்கள் அறிந்துகொள்வர். ஜெயங்கொள்ளும் நம்முடைய கடவுள்தாமே இவ்விதமாகச் சொல்கிறார்: “அப்பொழுது நான் கர்த்தர் [“யெகோவா,” NW] என்று அறிந்துகொள்வார்கள்.” அசாதாரணமான இந்த நிகழ்ச்சிகள் நம்முடைய நாளில், இயேசுவின் வந்திருத்தலின்போது நடைபெறும்.
திருடனைப்போல் வருகிறார்
4. இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையை அழிப்பதற்கு இயேசு என்ன விதமாக வருவார்?
4 மகிமைப்படுத்தப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “இதோ, திருடனைப்போல் வருகிறேன்.” திருடனைப்போல் வருவது என்பது, திடீரென்று, பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத ஒரு சமயமாக இருக்கும். இயேசு பொல்லாத ஒழுங்குமுறையை அழிப்பதற்காக ஒரு திருடனைப்போல் வரும்போது, உண்மையில் விழித்துக்கொண்டிருப்பவர்களை அவர் காப்பாற்றுவார். அவர் யோவானிடம் சொன்னார்: “தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW].” (வெளிப்படுத்துதல் 16:15) அந்த வார்த்தைகளின் பொருள் என்ன? நாம் எவ்வாறு ஆவிக்குரியப் பிரகாரமாய் விழித்துக்கொண்டிருக்கலாம்?
5. இயேசு பூமியில் இருந்தபோது ஆலயப்பணிக்கு என்ன ஏற்பாடு இருந்தது?
5 பொதுவாக ஒரு காவலாளன், தன் பணியில் இருக்கையில் தூங்கிவிட்டால் அவன் வஸ்திரங்கள் கழற்றப்பட்டு அவன் நிர்வாணமாக்கப்பட மாட்டான். ஆனால் இயேசு பூமியில் இருந்தபோது, எருசலேம் ஆலயத்தில் ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் வகுப்புகள் சேவித்துக்கொண்டிருந்தபோது, அவ்வாறு செய்யப்பட்டது. பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டில், தாவீது ராஜா இஸ்ரவேலரின் மத்தியிலிருந்த நூற்றுக்கணக்கான ஆசாரியர்களையும் ஆயிரக்கணக்கான லேவிய உதவியாளர்களையும் 24 பிரிவுகளாக ஒழுங்குபடுத்தி அமைத்தார். (1 நாளாகமம் 24:1-18) ஓராயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட வேலையாட்கள் அடங்கிய ஒவ்வொரு பிரிவும் ஆலய ஊழியத்தின் அம்சங்களை சுற்றுமுறைப்படி கையாண்டார்கள், ஒரு சமயத்தில் ஒரு முழு வாரத்துக்கு என, வருடத்துக்கு குறைந்தபட்சம் இருமுறை அதைச் செய்தனர். ஆனால் கூடார பண்டிகையின்போது, எல்லா 24 பிரிவுகளும் பணியில் இருந்தனர். பஸ்கா பண்டிகைகளின் போதும்கூட கூடுதலான உதவி தேவைப்பட்டது.
6. “விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் சந்தோஷமுள்ளவன்,” என்பதாக இயேசு சொன்னபோது அவர் எதை மனதில்கொண்டு பேசியிருக்கலாம்?
6 இயேசு “விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் சந்தோஷமுள்ளவன்,” என்பதாகச் சொன்னபோது ஆலயத்திலுள்ள காவல் பணியில் உட்பட்டிருந்த ஒரு செயல்முறையை அவர் மனதில்கொண்டு பேசியிருக்கலாம். யூதர்களின் மிஷ்னா சொல்லுகிறது: “ஆலயத்தில் மூன்று இடங்களில் ஆசாரியர்கள் காவல் காத்தனர்: அபடீனாஸ் அறையில், அக்கினிஜூவாலை அறையில், கணப்பறையில்; லேவியர்கள் இருபத்தொரு இடங்களில் காவல் காத்தனர்: ஆலய குன்றின் ஐந்து வாயில்களில் ஐந்து பேர், உள்ளே அதன் நான்கு மூலைகளில் நான்கு பேர், ஆலயத்தின் ஐந்து பிரகார வாயில்களில் ஐந்து பேர், வெளியே அதன் நான்கு மூலைகளில் நான்கு பேர், பலிசெலுத்தும் அறையில் ஒருவர், திரையின் அறையில் ஒருவர், [மகா பரிசுத்த ஸ்தலத்தின் பின்பக்க மதிலுக்கு வெளியே] இரக்க ஆசனத்துக்கு பின்னால் ஒருவர். ஆலய குன்றின் தலைவர் விளக்குகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு காவலாளன் இருக்கும் இடத்துக்கும் செல்வார், அப்பொழுது, எந்தக் காவலாளியாவது எழுந்து நின்று ‘ஆலய குன்றின் தலைவரே, உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக!’ என்பதாகச் சொல்லாவிட்டால், அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகிவிடும், அப்பொழுது அவனைத் தடியால் அடித்து அவனுடைய உடுப்பை எரிப்பதற்கு அவருக்கு உரிமை இருந்தது.”—தி மிஷ்னா, மிட்டோத் (“அளவுகள்”), 1, பாராக்கள் 1-2, ஹெர்பெர்ட் டான்பி மொழிபெயர்த்தது.
7. ஆலயத்தில் காவல் பணியில் இருக்கையில் ஆசாரியர்களும் லேவியர்களும் விழித்திருப்பது ஏன் அவசியமாக இருந்தது?
7 சேவைப் பிரிவிலிருந்த அநேக லேவியர்களும் ஆசாரியர்களும் காவல் காப்பதற்கும் ஆலய பிரகாரங்களுக்குள் அசுத்தமான எவரும் பிரவேசித்துவிடாதபடி தடுப்பதற்கும் இரவு முழுவதுமாக விழித்துக்கொண்டிருந்தார்கள். “ஆலய குன்றின் தலைவர்” அல்லது “ஆலய சேனைத்தலைவர்” இரவு காவலின் சமயத்தில் எல்லா 24 இடங்களுக்கும் சென்று பார்ப்பதால், ஒவ்வொரு காவலாளியும் தன்னுடைய பணியில் இருக்கையில் பிடிபடாமல் இருப்பதற்காக தன்னுடைய ஸ்தானத்தில் விழித்துக்கொண்டிருக்கவேண்டும்.—அப்போஸ்தலர் 4:1.
8. கிறிஸ்தவனின் அடையாள அர்த்தமுள்ள வஸ்திரங்கள் யாவை?
8 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய உடன் ஊழியரும் ஆவிக்குரியபிரகாரமாய் விழித்திக்கொண்டிருந்து அடையாள அர்த்தமுள்ள தங்களுடைய வஸ்திரங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இவை யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தில் நாம் ஊழியத்திற்காக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வெளிப்படையான அத்தாட்சிகளாக உள்ளன. இதற்கு அடையாளமாக, நம்முடைய கடமைகளைச் செய்து ராஜ்ய அறிவிப்பாளர்களாக நம்முடைய சிலாக்கியங்களை நிறைவேற்றுவதற்கு நமக்கு உதவிசெய்வதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி அல்லது செயல்நடப்பிக்கும் சக்தி நமக்கு இருக்கிறது. கடவுளுடைய ஊழியர்களாக நம்முடைய நியமிப்பில் நாம் அசட்டையாயிருப்பது, மிகப் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் சேனைத்தலைவராகிய இயேசு கிறிஸ்துவால் பிடிக்கப்படும் அபாயத்தில் நம்மை வைக்கும். அந்தச் சமயத்தில் நாம் ஆவிக்குரிய விதமாக தூங்கிக்கொண்டிருந்தால், அடையாள கருத்தில் நாம் நிர்வாணமாக்கப்பட்டு நம்முடைய அடையாள அர்த்தமுள்ள வஸ்திரங்கள் எரிக்கப்பட்டுபோம். ஆகவே நாம் எவ்வாறு ஆவிக்குரிய விதமாக விழிப்பாய் இருக்கலாம்?
நாம் எவ்வாறு விழிப்பாய் இருக்கலாம்
9. பைபிளை கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியோடு படிப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?
9 கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியோடு வேதவாக்கியங்களை ஊக்கமாக படித்தல் ஆவிக்குரியவிதமாக விழித்திருப்பதை ஊக்குவிக்கும் மருந்தாகும். இப்படிப்பட்ட ஒரு படிப்பு ஊழியத்துக்கு நம்மை ஆயத்தப்படுத்தும், நெருக்கடிகளை எதிர்ப்பட நமக்கு உதவிசெய்யும், நித்திய மகிழ்ச்சிக்கான வழியை நமக்கு காண்பிக்கும். (நீதிமொழிகள் 8:34, 35; யாக்கோபு 1:5-8) நம்முடைய படிப்பு முழுமையாகவும் படிப்படியாய் முன்னேறுவதாகவும் இருக்கவேண்டும். (எபிரெயர் 5:14–6:3) ஒழுங்காக நல்ல உணவைச் சாப்பிடுவது நம்மை விழிப்பாயும் சுறுசுறுப்பாயும் வைத்துக்கொள்ள நமக்கு உதவிசெய்யக்கூடும். ஊட்டச்சத்துக் குறைவுக்கு அடையாளமாக இருக்கக்கூடிய தூக்க மயக்கத்தை அது தடைசெய்யலாம். நாம் ஆவிக்குரிய ஊட்டச்சத்துக் குறைவுள்ளவர்களாயும் தூக்க மயக்கத்திலிருப்பவர்களாகவும் இருக்க நமக்கு எந்தக் காரணமுமில்லை, ஏனென்றால் கடவுள் அபிஷேகம் செய்யப்பட்ட ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாக ஏராளமான ஆவிக்குரிய உணவுக்காக ஏற்பாடு செய்துவருகிறார். (மத்தேயு 24:45-47, NW) தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பின் மூலமாக தவறாமல் ஆவிக்குரிய உணவை உட்கொண்டுவருவது விழித்திருப்பதற்கும் “விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிரு”ப்பதற்கும் ஒரு வழியாக இருக்கிறது.—தீத்து 1:14.
10. கிறிஸ்தவ கூட்டங்கள், வட்டார மாநாடுகள் மற்றும் மாவட்ட மாநாடுகள் ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பதற்கு எவ்வாறு நமக்கு உதவிசெய்கின்றன?
10 கிறிஸ்தவ கூட்டங்கள், வட்டார மாநாடுகள் மற்றும் மாவட்ட மாநாடுகள் ஆவிக்குரிய பிரகாரமாய் விழித்திருப்பதற்கு நமக்கு உதவிசெய்கின்றன. ‘அன்புக்கும் நற்கிரியைக்கும் ஒருவரையொருவர் தூண்டுவதற்கு’ ஊக்குவிப்பையும் வாய்ப்புகளையும் அவை அளிக்கின்றன. “நாளானது சமீபித்துவருகிறதை” காணும்போது விசேஷமாக நாம் ஒழுங்காக கூடிவரவேண்டும். அந்த நாள் இப்பொழுது உண்மையில் சமீபமாயிருக்கிறது. அது ‘யெகோவாவின் நாள்,’ அதில் அவர் தம்முடைய அரசுரிமையை மெய்ப்பித்துக் காட்டப்போகிறார். அந்த நாள் நமக்கு உண்மையில் முக்கியமானதாக இருந்தால்—அது முக்கியமானதாகவே இருக்கவேண்டும்—‘சபைகூடிவருதலை நாம் விட்டுவிடமாட்டோம்.’—எபிரெயர் 10:24, 25; 2 பேதுரு 3:10, NW.
11. ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பதற்கு கிறிஸ்தவ ஊழியம் இன்றியமையாதது என்று ஏன் சொல்லப்படலாம்?
11 முழு இருதயத்தோடு கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வது ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பதற்கு இன்றியமையாததாகும். நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் தவறாமல், வைராக்கியமுள்ள ஒரு பங்கைக் கொண்டிருப்பது நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. நம்முடைய ஊழியம் கடவுளுடைய வார்த்தை, அவருடைய ராஜ்யம், அவருடைய நோக்கங்களைப் பற்றி மக்களிடம் பேசுவதற்கு நமக்கு அநேக வாய்ப்புகளை அளிக்கிறது. வீட்டுக்கு வீடு சென்று சாட்சிகொடுப்பது, மறுசந்திப்புகளைச் செய்வது, நித்திய ஜீவனைக்கு வழிநடத்துகிற அறிவு போன்ற பிரசுரங்களிலிருந்து வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவது திருப்தியளிப்பதாக உள்ளது. பூர்வ எபேசுவிலிருந்த மூப்பர்கள் பவுல் தங்களுக்கு ‘வெளியரங்கமாகவும் வீடுகள்தோறும்’ கற்பித்திருந்தார் என்பதற்கு சாட்சி சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். (அப்போஸ்தலர் 20:20, 21) யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகள் சிலருக்கு ஓரளவு தங்களுடைய ஊழியத்துக்கு தடையாக இருக்கும் கவலைக்குரிய உடல் நலப் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான், ஆனால் அவர்கள் யெகோவாவையும் அவருடைய ராஜரீகத்தையும் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்கு வழிகளைக் கண்டுபிடித்து அவ்விதமாகச் செய்வதன் மூலம் அதிகமான சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.—சங்கீதம் 145:10-14.
12, 13. என்ன காரணங்களுக்காக உணவிலும் பானத்திலும் அளவுக்கு அதிகமான ஈடுபாட்டை நாம் தவிர்க்க வேண்டும்?
12 அளவுக்கு அதிகமான ஈடுபாட்டை தவிர்ப்பது ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பதற்கு நமக்கு உதவிசெய்யும். தம்முடைய வந்திருத்தலைப்பற்றி பேசும்போது இயேசு தம்முடைய அப்போஸ்தலரை இவ்விதமாக துரிதப்படுத்தினார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.” (லூக்கா 21:7, 34, 35) பெருந்தீனியும் குடிவெறியும் பைபிள் நியமங்களுக்கு பொருத்தமில்லாதவை. (உபாகமம் 21:18-21) நீதிமொழிகள் 23:20, 21 சொல்கிறது: “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.”—நீதிமொழிகள் 28:7-ஐ ஒப்பிடுக.
13 பெருந்திண்டியும் குடிவெறியும் அந்த நிலையை இன்னும் எட்டவில்லை என்றாலும்கூட, அது ஒரு நபரை மந்தமுள்ளவராகவும், சோம்பேறியாகவும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் அசட்டை மனப்பான்மை உள்ளவராகவும்கூட ஆக்கிவிடக்கூடும். இயல்பாகவே, குடும்ப வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றை உட்படுத்தும் கவலைகள் இருக்கத்தான் செய்யும். என்றபோதிலும், ராஜ்ய அக்கறைகளை வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்து நம்முடைய பரம தந்தை நமக்கு தேவையானதை அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்போமானால் நாம் சந்தோஷமாக இருப்போம். (மத்தேயு 6:25-34) மற்றபடி, “அந்த நாள்” நம்மீது “ஒரு கண்ணியை”ப்போல வரும், திடீரென நம்மைப் பிடித்துக்கொள்ளும் ஒரு சிக்கவைக்கும் பொறியைப் போல அல்லது கவர்ந்திழுத்து பின்னர் சந்தேகங்கொள்ளாத விலங்குகளை அபகரித்துக்கொள்ளும் இரை வைக்கப்பட்ட பொறியை போல இருக்கலாம். “முடிவுகால”த்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை முழுமையாக அறிந்தவர்களாக நாம் விழித்திருந்தோமானால் அது சம்பவிக்காது.—தானியேல் 12:4.
14. நாம் ஏன் ஊக்கமாக ஜெபத்தில் ஈடுபடவேண்டும்?
14 ஊக்கமான ஜெபம் ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பதற்கு மற்றொரு உதவியாகும். இயேசு தம்முடைய மிகப் பெரிய தீர்க்கதரிசனத்தில் இவ்வாறு துரிதப்படுத்தினார்: “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.” (லூக்கா 21:36) ஆம், எப்பொழுதும் யெகோவாவின் பக்கமாக இருந்து, மனுஷகுமாரனாகிய இயேசு இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அழிப்பதற்காக வருகையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலைநிற்கையை நாம் அனுபவித்துமகிழும் பொருட்டு ஜெபம் செய்வோமாக. நம்முடைய சொந்த நன்மைக்காகவும் நம்முடைய ஜெபத்தில் நாம் உட்படுத்தும் உடன் விசுவாசிகளின் நன்மைக்காகவும், ‘ஜெபத்தில் விழித்திருப்பது’ அவசியமாகும்.—கொலோசெயர் 4:2; எபேசியர் 6:18-20.
நேரம் கடந்தோடுகிறது
15. நீதியின் பிரசங்கிகளாக நம்முடைய ஊழியத்தின் மூலமாக நாம் எதை நிறைவேற்றுகிறோம்?
15 யெகோவாவின் பெரிய நாளுக்காக நாம் காத்திருக்கையில், அவருடைய சேவையில் நம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்ய விரும்புவதைக் குறித்து சந்தேகமில்லை. இதைக் குறித்து நாம் ஊக்கமாக அவரிடமாக ஜெபிப்போமானால், “பெரிதும் அநுகூலமுமான கதவு” நமக்குத் திறக்கப்படலாம். (1 கொரிந்தியர் 16:8, 9) கடவுளுடைய நியமிக்கப்பட்ட நேரத்தில், இயேசு நியாயத்தீர்ப்பைச் செய்து நித்திய ஜீவனுக்குப் பாத்திரராக இருக்கும் நீதியுள்ள ‘செம்மறியாடுகளை’ நித்திய அழிவுக்கு பாத்திரமாக இருக்கும் ‘வெள்ளாடுகளிலிருந்து’ பிரித்திடுவார். (யோவான் 5:22) செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பது நாம் அல்ல. ஆனால் நீதியின் பிரசங்கிகளாக நம்முடைய ஊழியம், கடவுளைச் சேவிக்கும் ஒரு வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை மக்களுக்கு அளித்து, இவ்விதமாக இயேசு ‘மகிமைப்பொருந்தினவராய் வரும்’போது ஜீவனுக்காக பிரிக்கப்படும் நம்பிக்கையைக் கொண்டிருக்கச் செய்கிறது. இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் குறுகிய காலம், ‘நித்திய ஜீவனுக்காக நியமிக்கப்பட்டவர்களை’ நாம் தேடும்போது மனமுவந்து வேலை செய்வதற்கான அவசியத்தை இன்னும் தீவிரமாக்குகிறது.—மத்தேயு 25:31-46; அப்போஸ்தலர் 13:48.
16. நாம் ஏன் வைராக்கியமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களாக இருக்கவேண்டும்?
16 நோவாவின் நாளின் உலகத்துக்கு காலம் முடிந்துவிட்டது, மேலும் இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கும் விரைவில் நேரம் முடிந்துவிடும். ஆகவே நாம் வைராக்கியமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களாக இருப்போமாக. நம்முடைய பிரசங்க வேலை வெற்றியடைந்துகொண்டு வருகிறது, ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் கடவுளுக்கு தங்களுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் யெகோவாவின் ஆசீர்வதிக்கப்பட்ட அமைப்பின் பாகமாக—“அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடு”களுமாக—ஆகி வருகிறார்கள். (சங்கீதம் 100:3) ‘யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள்’ (NW) வருவதற்கு முன்பாக இத்தனை அநேகம் பேருக்கு நம்பிக்கையைக் கொண்டுவரும் ராஜ்ய பிரசங்க வேலையில் பங்குகொள்வது என்னே ஒரு சந்தோஷம்!
17, 18. (அ) நாம் பிரசங்கித்துக்கொண்டிருக்கையில், சிலரிடமிருந்து என்ன பிரதிபலிப்பை நாம் எதிர்பார்க்க வேண்டும்? (ஆ) பரியாசக்காரர்களுக்கு என்ன நேரிடுவது நிச்சயம்?
17 நோவாவைப் போல, நமக்கும் கடவுளுடைய ஆதரவும் பாதுகாப்பும் இருக்கிறது. ஆம், மக்களும், மாம்ச உடலெடுத்து வந்த தூதர்களும், நெபிலிம்களும் நோவாவின் செய்தியைக் கேட்டு பரிகாசம் செய்திருக்க வேண்டும், ஆனால் அது அவரை அதைச் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தவில்லை. இன்று, நாம் “கடைசிநாட்களில்” இருக்கிறோம் என்பதற்குண்டான ஏராளமான அத்தாட்சியை சுட்டிக் காண்பிக்கையில் சிலர் பரிகாசம் செய்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-5) இப்படிப்பட்ட பரிகாசம் கிறிஸ்துவின் வந்திருத்தலின் சம்பந்தமான பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக உள்ளது, ஏனென்றால் பேதுரு எழுதினார்: ‘கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் [“வந்திருக்கிறார்,” NW] என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.’—2 பேதுரு 1:16; 3:3, 4.
18 தற்காலத்திய பரியாசக்காரர் இவ்விதமாக நினைக்கலாம்: ‘படைப்பு முதற்கொண்டு எதுவும் மாறிவிடவில்லை. மக்கள் புசிப்பதும், குடிப்பதும், திருமணம் செய்துகொள்வதும், குடும்பங்களை பராமரிப்பதுமாக வாழ்க்கை தொடருகிறது. இயேசு வந்திருந்தாலும், என் நாளில் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றமாட்டார்.’ அவர்கள் எவ்வளவு தவறாக இருக்கிறார்கள்! இதற்கிடையில், அவர்கள் வேறு காரணங்களால் இறந்துவிடாமல் போனால், இந்தப் பொல்லாத சந்ததியின் பாகமாக இருக்கும் அவர்களுக்கு யெகோவாவின் பயங்கரமான நாள் நிச்சயமாகவே அழிவைக் கொண்டுவரும். நோவாவின் நாளில் ஜலப்பிரளயத்தின்போது வந்த அழிவு பொல்லாத சந்ததிக்கு முடிவைக் கொண்டுவந்தது போலவே இது இருக்கும்.—மத்தேயு 24:34.
நாம் நிச்சயமாகவே விழித்திருக்க வேண்டும்!
19. சீஷராக்கும் நம்முடைய வேலைகளை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
19 நாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தால், தகாத சாக்குப்போக்குகளுடன் ஒருபோதும் உறங்க சென்றுவிடாதிருப்போமாக. இது விழித்திருந்து, தெய்வீக தீர்க்கதரிசனத்தில் விசுவாசத்தைக் காண்பித்து, “சகல ஜாதிகளையும் சீஷரா”க்கும்படியான நம்முடைய வேலையைச் செய்வதற்குரிய ஒரு சமயமாக இருக்கிறது. (மத்தேயு 28:19, 20) இந்த ஒழுங்குமுறை அதன் இறுதி முடிவை எதிர்ப்படுகையில், இயேசு கிறிஸ்துவின் தலைமையின்கீழ் யெகோவா தேவனை சேவித்துக்கொண்டு முடிவு வருவதற்கு முன்பாக ‘ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை’ பிரசங்கிக்கும் உலகளாவிய பிரசங்க வேலையில் பங்குகொள்வதைக் காட்டிலும் பெரிய சிலாக்கியம் நமக்கு வேறு எதுவும் இருக்கமுடியாது.—மத்தேயு 24:14, NW; மாற்கு 13:10.
20. காலேபும் யோசுவாவும் என்ன முன்மாதிரியை வைத்தனர், அவர்களுடைய போக்கு நமக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது?
20 யெகோவாவின் மக்களில் சிலர் அவரை பல பத்தாண்டுகளாக, ஒருவேளை வாழ்நாள் முழுவதும் சேவித்துக்கொண்டு வருகிறார்கள். மேலும் நாம் அதிக அண்மையில்தானே உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும்கூட ‘யெகோவாவை முழுமையாக பின்பற்றின’ இஸ்ரவேலனான காலேபைப் போல நாம் இருப்போமாக. (உபாகமம் 1:34-36, NW) அவரும் யோசுவாவும், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டதற்குப்பின் சீக்கிரத்தில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு மிகவும் தயாராக இருந்தனர். இருந்தபோதிலும், வயதுவந்த இஸ்ரவேலர் பொதுவாக, விசுவாசத்தில் குறைவுபட்டதால், வனாந்தரத்தில் 40 வருடங்களைக் கழிக்கவேண்டியவர்களாக இருந்தனர், அங்கே அவர்கள் இறந்துபோனார்கள். காலேபும் யோசுவாவும் அந்தச் சமயம் முழுவதிலுமாக அவர்களோடு கஷ்டங்களைச் சகித்திருந்தனர், ஆனால் கடைசியில் இந்த இரு மனிதரும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தனர். (எண்ணாகமம் 14:30-34; யோசுவா 14:6-15) நாம் ‘யெகோவாவை முழுமையாக பின்பற்றி’ ஆவிக்குரிய விதமாக விழித்திருந்தால், கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகிற்குள் பிரவேசிக்கும் சந்தோஷம் நமக்கிருக்கும்.
21. ஆவிக்குரிய விதமாக நாம் விழித்திருந்தால் நம்முடைய அனுபவம் என்னவாக இருக்கும்?
21 நாம் முடிவின் காலத்தில் வாழ்ந்துவருகிறோம் என்பதையும் யெகோவாவின் பெரிய நாள் அருகாமையில் இருப்பதையும் அத்தாட்சி தெளிவாக நிரூபிக்கிறது. தூங்கி வழிவதற்கும் கடவுளுடைய சித்தத்தை செய்வதில் அசட்டையாய் இருப்பதற்கும் இது சமயமல்ல. நாம் ஆவிக்குரிய விதமாக விழித்திருந்து, கிறிஸ்தவ ஊழியர்களாகவும் யெகோவாவின் பணிவிடைக்காரர்களாகவும் நம்முடைய அடையாள வஸ்திரங்களை காத்துக்கொள்வோமானால் மாத்திரமே நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். ‘விழித்திருப்பதும், விசுவாசத்திலே நிலைத்திருப்பதும், புருஷராயிருப்பதும், திடன் கொள்ளுவதும்’ நம்முடைய தீர்மானமாய் இருப்பதாக. (1 கொரிந்தியர் 16:13) யெகோவாவின் ஊழியர்களாக நாம் ஒவ்வொருவரும் உறுதியுள்ளவர்களாயும் தைரியமுள்ளவர்களாயும் இருப்போமாக. அப்பொழுது நாம் யெகோவாவின் பெரிய நாள் திடீரென வரும்பொழுது, விழித்திருக்கும் சந்தோஷமுள்ளவர்களின் அணியில் உண்மையுடன் சேவித்துக்கொண்டிருப்போரின் மத்தியில் இருப்போம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ அடையாள அர்த்தமுள்ள நம்முடைய வஸ்திரங்கள் எவை என்பதை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள், நாம் எவ்வாறு அவற்றைக் காத்துக்கொள்ளலாம்?
◻ ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பதற்குரிய சில வழிகள் யாவை?
◻ பரியாசக்காரரை நாம் ஏன் எதிர்பார்க்கவேண்டும், அவர்களை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
◻ இந்தக் கடைசி நாட்களில் சீஷராக்கும் நம்முடைய வேலையை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
ஆவிக்குரிய விதமாக விழித்திருந்து உங்களுடைய அடையாள அர்த்தமுள்ள வஸ்திரங்களைக் காத்துக்கொள்ள நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்களா?
[பக்கம் 15-ன் படம்]
கிறிஸ்தவர்கள் விழித்துக்கொண்டிருப்பதற்கும், தங்களுடைய கடமைகளைச் செய்வதற்கும் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவி அவர்களுக்கு உண்டு