அவர் தன்னுடைய இருதயத்தின் விருப்பத்தை அடையப்பெற்றார்
பூமி முழுவதன்மீதும் மேசியானிய ராஜ்யம் ஆட்சி செய்வதைப் பார்ப்பது உங்களுடைய இருதயத்தின் விருப்பமாக இருக்கிறதா? அப்படியானால், அந்தப் பரலோக ராஜ்யத்தின்கீழ் வாக்களிக்கப்பட்ட பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக ஆவலுடன் ஜெபியுங்கள். எனவே பொறுமையுள்ளவர்களாய் இருங்கள்; “விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.”—நீதிமொழிகள் 13:12; யாக்கோபு 5:7, 8.
ஏறக்குறைய 2,000 வருடங்களுக்குமுன், “நீதியும் தேவபக்தியும் உள்ள” மனிதனாகிய சிமியோன் எருசலேமில் வாழ்ந்து வந்தார். அவர் மேசியானிய தீர்க்கதரிசனங்களில் விசுவாசம் வைத்திருந்தார்; பொறுமையுடன், “இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிற”வராக இருந்தார்.—லூக்கா 2:25.
மேசியானிய தீர்க்கதரிசனங்கள் நம்பிக்கை அளிக்கின்றன
முதல் மேசியானிய தீர்க்கதரிசனத்திற்கு—பாவமுள்ள, மரிக்கும் மனிதவர்க்கத்திற்கு நம்பிக்கை அளித்த ஒன்றிற்கு—யெகோவா பொறுப்புள்ளவராய் இருந்தார். கடவுள் தம்முடைய “ஸ்திரீ” அல்லது சர்வலோக அமைப்பின் வித்து வருவதை முன்னறிவித்தார்.—ஆதியாகமம் 3:15.
அந்த நபர் ஆபிரகாமின் வித்தாக அடையாளம் காணப்பட்டார்; யாக்கோபு அவருடைய வருகையை முன்னறிவித்தார். (ஆதியாகமம் 22:17, 18; 49:10) மேசியாவின் ராஜ்ய மகிமைகள் சங்கீதங்களில் போற்றப்பட்டன. (சங்கீதம் 72:1-20) வித்து ஒரு கன்னியிலிருந்து பிறப்பதாக ஏசாயா முன்னுரைத்தார்; அந்தப் பிறப்பு பெத்லகேமில் சம்பவிக்கும் என்று மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார். (ஏசாயா 7:14; மீகா 5:2) மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பலவற்றில் இவை ஒருசில மட்டுமே.
இன்னும் மேசியா வரவில்லை!
கடந்த காலத்தை எண்ணிப்பாருங்கள்; பொ.ச. முதல் நூற்றாண்டு நெருங்கி வருவதாக கற்பனை செய்யுங்கள். கடவுளுடைய முதல் மேசியானிய தீர்க்கதரிசனம் இப்போது 4,000 வருடங்கள் சென்றதாக இருக்கிறது. யூதர்கள் எருசலேமின் அழிவை, தங்கள் தாய்நாடு பாழாக்கப்பட்டதை, பாபிலோனில் 70 வருடங்கள் நாடுகடத்தப்பட்டதை, புறஜாதி ஆட்சியாளருக்கு இன்னும் 500 வருடங்கள் கீழ்ப்பட்டிருப்பதை அனுபவித்திருந்தனர். இன்னும் மேசியா வரவில்லை!
கடவுள் பயமுள்ள யூதர்கள் மேசியாவின் வருகைக்காக எவ்வளவு ஆவலாகக் காத்திருந்தனர்! அவரிடமிருந்து வருகிற ஆசீர்வாதங்கள் அவர்களுக்கும் எல்லா தேசங்களுக்கும் பெருகும்.
பயபக்தியுள்ள ஒரு மனிதன்
மேசியாவின் வருகைக்காகக் காத்துக்கொண்டும் ஜெபித்துக்கொண்டும் இருந்த பயபக்தியுள்ள யூதர்களில் ஒருவர், யெகோவாவுக்கு உண்மையுடன் இருந்த வயதான ஊழியராகிய சிமியோன் ஆவார்; அவர் யூதேயாவின் தலைநகரில் வாழ்ந்துவந்தார். சிமியோனுக்கு விசேஷித்த ஏதோவொன்று நடந்திருந்தது.
கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை சிமியோனில் வைத்திருந்து, அவருக்கு வெகுமானமாய் ஒரு வெளிப்படுத்துதலைக் கொடுத்திருக்கிறார். மேசியாவாக இருக்கப்போகிறவரைக் காணும் வரை சிமியோன் மரணமடையமாட்டார். ஆனால் நாட்களும் மாதங்களும் கடந்துசெல்கின்றன. சிமியோனுக்கும் வயதாகிறது; அவர் இன்னும் அதிக நாட்கள் வாழும்படி எதிர்பார்க்க முடியாது. அவரிடமான கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறுமா?
ஒரு நாள் (பொ.ச.மு. 2-ல்), பெத்லகேமிலிருந்து ஓர் இளம் தம்பதி ஒரு குழந்தையுடன் ஆலயத்திற்கு வருகின்றனர். நெடுங்காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் அதுவே என்று பரிசுத்த ஆவி சிமியோனுக்கு வெளிப்படுத்துகிறது. அவர் ஆலயத்திற்குப் போகிறார்; அங்கு அவர் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டிருந்தவரைக் காண்பார். அவருடைய வயதான உடல் அனுமதித்த அளவிற்கு வேகமாகச் சென்று, யோசேப்பையும் மரியாளையும் அந்தக் குழந்தையையும் பார்க்கிறார்.
என்னே சந்தோஷத்தில் சிமியோன் அந்தக் குழந்தை இயேசுவை தன் கைகளில் ஏந்துகிறார்! இவர்தான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா—“யெகோவாவுடைய கிறிஸ்து.” (NW) இயேசு தம்முடைய பூமிக்குரிய வேலை திட்டத்தை நிறைவேற்றுவதைக் காணலாம் என்று சிமியோன் அப்படிப்பட்ட முதிர்ந்த வயதில் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், அவரை ஒரு குழந்தையாகக் காண்பது அருமையான காரியமாக இருக்கிறது. மேசியானிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட ஆரம்பிக்கின்றன. சிமியோன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்! இப்போது அவர் உயிர்த்தெழுதல் வரையாக மரணத்தில் நித்திரையாய் இருப்பதற்கு திருப்தியாய் இருப்பார்.—லூக்கா 2:25-28.
சிமியோனின் தீர்க்கதரிசன வார்த்தைகள்
சிமியோன் யெகோவாவுக்குத் துதியாக தன் குரலை எழுப்புகையில், இவ்வாறு சொல்வதை நாம் கேட்கிறோம்: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்கு [இருள் அகற்றும், தமிழ்க் கத்தோலிக்க பைபிள்] ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.” இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பும், அவருடைய தாய் மரியாளும் இந்த வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தனர்.—லூக்கா 2:29-33.
யோசேப்பையும் மரியாளையும் ஆசீர்வதிக்கையில் சிமியோனின் முகத்தோற்றம் பிரகாசமாக இருக்கிறது; தெளிவாகவே, அந்தப் பிள்ளையிடமாக தங்களுடைய உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கு யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கும்படி அவர்களை அவர் வாழ்த்தியிருக்கவேண்டும். பின்னர் அந்த வயதானவரின் முகம் கருத்தார்ந்ததாக மாறியது. தன்னுடைய குறிப்புகளை மரியாளிடம் மட்டும் கூறுபவராய், அவர் தொடர்ந்து சொல்கிறார்: “இதோ அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்.”—லூக்கா 2:34, 35.
மரியாளிடம் சிமியோனின் கூற்று
மரியாள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். சிமியோன் எதை அர்த்தப்படுத்தினார்? சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, ஏற்கெனவே இருந்த தங்களுடைய விழுந்துபோன நிலையிலிருந்து உயர்த்தப்படுவார்கள். இருந்தாலும், மற்றவர்கள் அவரை நிராகரித்து, அவரில் இடறலடைந்து, விழுந்துபோவார்கள். முன்னுரைக்கப்பட்டபடி, இயேசு அநேக யூதர்களுக்கு ஓர் இடறல்கல்லாக நிரூபித்தார். (ஏசாயா 8:14; 28:16) இஸ்ரவேலரில் தனிநபர்கள் முதலில் அவநம்பிக்கையில் விழுந்து, பின்னர் இயேசுவை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையில் எழும்புவார்கள் என்று சிமியோனின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவரிடமான பிரதிபலிப்புகள் வித்தியாசப்பட்ட தனிநபர்களைப் பொறுத்து வேறுபட்டதாய் இருக்கும்; அநேகருடைய இருதயங்களிலுள்ள சிந்தைகளை வெளிப்படச்செய்து, அவர்களிடமான கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நன்மைக்கு அல்லது தீமைக்கு வழிநடத்தும். அவிசுவாசிகளுக்கு, அவர் ஓர் அடையாளமாக, அல்லது வெறுப்பிற்குரிய ஒன்றாக இருப்பார். அவரில் விசுவாசம் வைப்பதன்மூலம், மற்றவர்கள் தங்களுடைய மீறுதல்களிலும் பாவங்களிலும் மரித்திருப்பதிலிருந்து எழுப்பப்பட்டு, கடவுளோடு ஒரு நீதியான நிலைநிற்கையை அனுபவிப்பார்கள். மேசியாவிடமாக மக்களுடைய நடத்தைகள், அவர்களுடைய இருதயங்களில் என்ன இருந்தது என்பதைக் காட்டும்.
“உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்,” என்ற சிமியோனின் வார்த்தைகளைக் குறித்து என்ன? ஒரு நிஜமான பட்டயம் மரியாளை உருவிப்போனதாக எந்த வேதப்பூர்வ குறிப்பும் இல்லை. இருந்தாலும், பெரும்பான்மையோரால் இயேசு நிராகரிக்கப்பட்டது அவர்களை கவலைகொள்ளச் செய்யும். மேலும் இயேசு ஒரு கழுமரத்தில் அறையப்பட்டதைப் பார்ப்பது மரியாளுக்கு எவ்வளவு வேதனையூட்டுவதாய் இருந்தது! இது ஒரு பட்டயம் தன்னை உருவிப்போவதைப்போல் இருந்தது.
மேசியானிய தீர்க்கதரிசனங்களைச் சிமியோன் பொருத்துகிறார்
மேசியானிய தீர்க்கதரிசனங்களை இயேசுவிடம் பொருத்தும்படி கடவுளுடைய பரிசுத்த ஆவி சிமியோனைத் தூண்டியது. சிமியோன் சமாதானத்தோடு, அல்லது மன அமைதியோடு இந்த வாழ்க்கையை விட்டுச்செல்லலாம், ‘ஏனென்றால், புறஜாதிகளுக்கு இருள் அகற்றும் ஒளியாகவும், தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவன் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின இரட்சணியத்தை அவருடைய கண்கள் கண்டன.’ (லூக்கா 2:30-32) இது ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு எவ்வளவு நன்றாகப் பொருந்தியது!
அந்தத் தீர்க்கதரிசி முன்னுரைத்தார்: “கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும்.” “நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை [மேசியாவை] ஜாதிகளுக்கு ஒளியாகவும் [நான், NW (யெகோவா)] வைப்பேன்.” (ஏசாயா 40:5; 42:7; 49:6; 52:10) கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களும் நடந்தேறும் உண்மைகளும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே ஜாதிகளின் உண்மையான ஒளி என்றும், ஆவிக்குரிய இருளின் மறைப்பை அகற்றி மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருபவர் என்றும் அப்போதிருந்து உறுதிப்படுத்தியிருக்கின்றன.
வயதான சிமியோனைப்பற்றி கடவுளுடைய வார்த்தை மேலுமாக எதையும் சொல்கிறதில்லை. சந்தேகமின்றி, பரலோக வாழ்க்கைக்கான வழியை கிறிஸ்து திறந்து வைத்ததற்கு முன்னர் அவர் மரித்திருக்கவேண்டும். அப்படியானால், கூடிய சீக்கிரத்தில் சிமியோன் பூமியில் வாழும்படி உயிர்த்தெழுப்பப்படுவார். அவரும்—நீங்களும்—கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின்கீழ் என்னே சந்தோஷத்தை அனுபவிக்கலாம்!