பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ளவற்றைக் கூட்டிச்சேர்த்தல்
‘பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்பது . . . அவருடைய தயவுள்ள சித்தம்.’—எபேசியர் 1:9, 10.
1. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் யெகோவாவின் ‘தயவுள்ள சித்தம்’ என்ன?
சர்வலோக சமாதானம்! இதுவே ‘சமாதானத்தின் தேவனாகிய’ யெகோவாவின் மகிமையான நோக்கம். (எபிரெயர் 13:20) ஆம், ‘பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் [‘மீண்டும்,’ NW] கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்பது’ தம்முடைய ‘தயவுள்ள சித்தம்’ என எழுதும்படி அப்போஸ்தலன் பவுலை அவர் ஏவினார். (எபேசியர் 1:9, 10) ‘மீண்டும் கூட்டப்பட வேண்டும்’ என இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வினைச்சொல் எதை அர்த்தப்படுத்துகிறது? பைபிள் அறிஞர் ஜே. பி. லைட்ஃபுட் இவ்வாறு சொல்கிறார்: “சர்வலோகமும் ஒத்திசைவாக இருப்பதை இந்தச் சொற்றொடர் குறிக்கிறது; எதிரும் புதிருமான அம்சங்கள் இனியும் அங்கு இருக்காது; சர்வலோகத்திலுள்ள அனைத்துமே கிறிஸ்துவை மையமாகக் கொண்டு அவரில் ஐக்கியப்பட்டிருக்கும். பாவம், மரணம், துன்பம், தோல்வி, துயரம் ஆகிய அனைத்தும் ஒழிக்கப்பட்டிருக்கும்.”
‘பரலோகத்திலிருக்கிறவை’
2. கூட்டிச்சேர்க்கப்பட வேண்டிய ‘பரலோகத்திலிருக்கிறவை’ யாவர்?
2 உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் அருமையான நம்பிக்கையைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சுருக்கமாக எழுதினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) ‘புதிய வானங்கள்’ என்பது புதிய அரசாங்கத்தை, அதாவது மேசியானிய ராஜ்யத்தைக் குறிக்கிறது. எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டிருந்த ‘பரலோகத்திலிருக்கிறவை,’ ‘கிறிஸ்துவுக்குள்ளே’ கூட்டப்படும். கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆளப்போகும் சிறு தொகுதியான மனிதர்களே ‘பரலோகத்திலிருக்கிறவை’ ஆவர். (1 பேதுரு 1:3-5) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களான இந்த 1,44,000 பேர் பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வதற்காக ‘பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்’ ஆவர், அதாவது “மனுஷரிலிருந்து . . . மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்” ஆவர்.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:3, 4; 2 கொரிந்தியர் 1:21; எபேசியர் 1:12; 3:3.
3. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பூமியில் இருக்கும்போதே ‘பரலோகங்களில் உட்கார்ந்திருப்பதாக’ எவ்வாறு சொல்லப்படலாம்?
3 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் மறுபடியும் பிறந்து யெகோவாவின் ஆவிக்குரிய குமாரர்களாக ஆகிறார்கள். (யோவான் 1:12, 13; 3:5-7) அவர்களை யெகோவா தமது ‘புத்திரர்களாக,’ அதாவது குமாரர்களாகத் தத்தெடுப்பதால், அவர்கள் இயேசுவின் சகோதரர்களாகவும் ஆகிறார்கள். (ரோமர் 8:15; எபேசியர் 1:6) இதனால் அவர்கள் பூமியில் இருக்கும்போதே ‘கிறிஸ்து இயேசுவுக்குள் அவரோடேகூட எழுப்பப்பட்டு, உன்னதங்களிலே [“பரலோகங்களிலே,” NW] அவரோடேகூட உட்கார’ வைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. (எபேசியர் 1:3; 2:7) அவர்கள் இப்படிப்பட்ட உயர்வான ஆவிக்குரிய நிலையைப் பெறுவதற்கான காரணம்: ‘வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்பட்டிருக்கிறார்கள். . . . அது [‘பரலோகத்தில் அவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிற’] சுதந்தரத்தின் அச்சாரம்.’ (எபேசியர் 1:13, 14; கொலோசெயர் 1:4) ஆக, இவர்களே ‘பரலோகத்திலிருக்கிறவை’; யெகோவா முன்தீர்மானித்த எண்ணிக்கை நிறைவு பெறும்படி அவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டியிருந்தது.
கூட்டிச்சேர்த்தல் ஆரம்பமாகிறது
4. ‘பரலோகத்திலிருக்கிறவை’ கூட்டிச்சேர்க்கப்படுவது எப்போது, எவ்வாறு ஆரம்பமானது?
4 யெகோவாவின் ‘நிர்வாகத்திற்கு’ இசைவாக, அதாவது காரியங்களை நிர்வகிக்கும் விதத்திற்கு இசைவாக, “காலங்கள் நிறைவேறும்போது” “பரலோகத்திலிருக்கிறவை” கூட்டிச்சேர்க்கப்படுவது ஆரம்பிக்க இருந்தது. (எபேசியர் 1:9) நியமிக்கப்பட்ட அந்தக் காலம் பொ.ச. 33, பெந்தெகொஸ்தே அன்று ஆரம்பமானது. அந்நாளில் அப்போஸ்தலர் மீதும், ஆண்களும் பெண்களும் அடங்கிய சீஷர்களின் ஒரு தொகுதி மீதும் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. (அப்போஸ்தலர் 1:13-15; 2:1-4) புதிய உடன்படிக்கை செயல்பட ஆரம்பித்ததற்கு அது அத்தாட்சியாக இருந்தது; அதோடு, கிறிஸ்தவ சபையும் ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ ஆவிக்குரிய இஸ்ரவேலர் அடங்கிய புதிய தேசமும் பிறந்ததற்குக்கூட அது அத்தாட்சியாக இருந்தது.—கலாத்தியர் 6:16; எபிரெயர் 9:15; 12:23, 24.
5. மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருக்குப் பதிலாக ஒரு புதிய ‘தேசத்தை’ யெகோவா ஏன் உருவாக்கினார்?
5 மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரோடு செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கை, பரலோகத்தில் என்றென்றும் சேவை செய்யப்போகிற ‘ஆசாரிய ராஜ்யத்தையும் பரிசுத்த ஜாதியையும்’ உருவாக்கவில்லை. (யாத்திராகமம் 19:5, 6) யூத மதத் தலைவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 21:43) அந்த ஜனங்கள், அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலர், புதிய உடன்படிக்கைக்குள் வருகிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களே. இவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் [அதாவது, தேசமாயும்], அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9, 10) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் யெகோவாவின் உடன்படிக்கைக்குள் இல்லாமல் போனார்கள். (எபிரெயர் 8:7-13) இயேசு முன்னறிவித்தபடி, மேசியானிய ராஜ்யத்தின் பாகமாயிருக்கும் சிலாக்கியம் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு ஆவிக்குரிய இஸ்ரவேலரான 1,44,000 பேரிடம் கொடுக்கப்பட்டது.—வெளிப்படுத்துதல் 7:4-8.
ராஜ்ய உடன்படிக்கைக்குள்
6, 7. ஆவியால் பிறப்பிக்கப்பட்ட சகோதரர்களுடன் இயேசு என்ன விசேஷ உடன்படிக்கை செய்தார், அது அவர்களுக்கு எதைக் குறிக்கிறது?
6 இயேசு, தமது மரண நினைவு ஆசரிப்பைத் துவக்கிவைத்த இரவில் உண்மையுள்ள தம் அப்போஸ்தலரிடம் இவ்வாறு சொன்னார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்.” (லூக்கா 22:28-30) இயேசு இங்கே, ஆவியால் பிறப்பிக்கப்பட்ட தமது சகோதரர்களாகிய 1,44,000 பேருடன் செய்த விசேஷ உடன்படிக்கையைப் பற்றி குறிப்பிட்டார்; அவர்கள் ‘மரணபரியந்தம் உண்மையாயிருந்து,’ ‘ஜெயங்கொண்டோராக’ நிரூபிப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 2:10; 3:21.
7 அந்தச் சிறு தொகுதியினர், மாம்சமும் இரத்தமும் உடைய மனிதர்களாக பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை அறவே துறந்துவிடுகிறார்கள். அவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்வார்கள், சிங்காசனங்களில் அமர்ந்து மனிதர்களை நியாயந்தீர்ப்பார்கள். (வெளிப்படுத்துதல் 20:4, 6) இப்போது, அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்துகிற மற்ற வசனங்களை நாம் பார்க்கலாம்; ‘வேறே ஆடுகளாக’ இருப்பவர்கள் நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் ஏன் பங்குகொள்வதில்லை என்பதை அவ்வசனங்கள் காட்டுகின்றன.—யோவான் 10:16.
8. அப்பத்தைப் புசிக்கையில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்? (பக்கம் 23-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
8 அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்துவைப் போலவே பாடுபட்டு, அவரைப் போலவே மரிக்கவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான பவுல், ‘கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்கும்,’ “அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும்” எப்படிப்பட்ட தியாகமும் செய்யத் தயாராக இருந்ததாய் குறிப்பிட்டார். ஆம், ‘அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாவதற்கு’ தயாராக இருந்தார். (பிலிப்பியர் 3:8-10) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் அநேகர் தங்கள் சரீரங்களில் ‘இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை’ சகித்திருக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 4:10, பொது மொழிபெயர்ப்பு.
9. நினைவு ஆசரிப்பு அப்பம் எந்த உடலைக் குறிக்கிறது?
9 இயேசு இராப்போஜனத்தை ஆரம்பித்து வைத்தபோது, “இது என்னுடைய உடலைக் குறிக்கிறது” என்றார். (மாற்கு 14:22, NW) சீக்கிரத்தில் அடிக்கப்பட்டு இரத்தக் கறை படியவிருந்த தன் உடலைத்தான் இயேசு குறிப்பிட்டார். புளிப்பில்லாத அப்பம், அந்த உடலுக்குப் பொருத்தமான அடையாளச் சின்னமாக இருந்தது. எப்படி? எப்படியெனில், பாவத்தை அல்லது பொல்லாப்பைக் குறிக்க புளித்தமாவு என்ற வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்படுகிறது. (மத்தேயு 16:4, 11, 12; 1 கொரிந்தியர் 5:6-8) இயேசு பரிபூரணராக இருந்தார், அவரது மனித உடலில் பாவமே இருக்கவில்லை. அந்தப் பரிபூரண உடலை அவர் கிருபாதார பலியாக அளிக்கவிருந்தார். (எபிரெயர் 7:26; 1 யோவான் 2:2) அவர் அவ்வாறு செய்வது உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்கும்—பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கும் சரி, பரதீஸ் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் சரி—பயனளிக்க இருந்தது.—யோவான் 6:51.
10. திராட்சரசத்தில் பங்குகொள்கிறவர்கள் எவ்விதத்தில் ‘கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறார்கள்’?
10 நினைவு ஆசரிப்பின்போது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பருகும் திராட்சரசத்தைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? [‘கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா!,’ பொ.மொ.]” (1 கொரிந்தியர் 10:16) அந்தத் திராட்சரசத்தில் பங்குகொள்கிறவர்கள் எவ்விதத்தில் ‘கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறார்கள்’? மீட்கும்பலியைக் கொடுப்பதில் நிச்சயம் அவர்கள் பங்குகொள்வதில்லை, ஏனென்றால் அவர்களுக்குத்தானே முதலாவது மீட்பு தேவைப்படுகிறது. கிறிஸ்துவின் இரத்தத்தினுடைய மீட்கும் வல்லமையில் விசுவாசம் வைப்பதன் மூலம் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரலோக வாழ்க்கையைப் பெறுவதற்கு நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறார்கள். (ரோமர் 5:8, 9; தீத்து 3:4-7) கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலம், கிறிஸ்துவின் உடன் அரசர்களான 1,44,000 பேர் ‘பரிசுத்தமாக்கப்பட்டு,’ அதாவது தனித்து வைக்கப்பட்டு, பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ‘பரிசுத்தவான்களாக’ ஆகிறார்கள். (எபிரெயர் 10:29; தானியேல் 7:18, 27; எபேசியர் 2:19) ஆம், கிறிஸ்து, தாம் சிந்திய இரத்தத்தின் மூலம் ‘சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து [அதாவது, தேசங்களிலுமிருந்து] . . . நபர்களை தேவனுக்கென்று மீட்டுக்கொண்டு, தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார். அவர்கள் பூமியிலே அரசாளுவார்கள்.’—வெளிப்படுத்துதல் 5:9, 10.
11. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் நினைவு ஆசரிப்பு திராட்சரசத்தைப் பருகும்போது எதைக் காண்பிக்கிறார்கள்?
11 இயேசு தமது மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது உண்மையுள்ள தம் அப்போஸ்தலரிடம் திராட்சரச பாத்திரத்தைக் கொடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது [“இரத்தத்தைக் குறிக்கிறது,” NW]” என்றார். (மத்தேயு 26:27, 28) கடவுளுக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையிலான நியாயப்பிரமாண உடன்படிக்கையை காளை, வெள்ளாட்டுக்கடா ஆகியவற்றின் இரத்தம் செல்லுபடியாக்கியது போலவே, பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தொடங்கி ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு யெகோவா செய்த புதிய உடன்படிக்கையை இயேசுவின் இரத்தம் செல்லுபடியாக்கியது. (யாத்திராகமம் 24:5-8; லூக்கா 22:20; எபிரெயர் 9:14, 15) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், ‘உடன்படிக்கைக்குரிய இரத்தத்தை’ அடையாளப்படுத்துகிற திராட்சரசத்தை பருகும்போது, தாங்கள் புதிய உடன்படிக்கைக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதையும் அதன் நன்மைகளைப் பெற்று வருவதையும் காண்பிக்கிறார்கள்.
12. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
12 அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு இன்னொன்றும் நினைவுபடுத்தப்படுகிறது. இயேசு தமது உண்மையுள்ள சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.” (மாற்கு 10:38, 39) கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் “மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம்” பெறுவதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு குறிப்பிட்டார். (ரோமர் 6:3) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் சுய தியாக வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களது மரணமும் தியாகத்திற்குரியது; ஏனென்றால் பூமியில் நித்தியமாக வாழும் நம்பிக்கையை அவர்கள் அறவே துறக்கிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் உண்மையுள்ளவர்களாக மரித்து, பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ‘ஆளுகை செய்வதற்காக’ ஆவி சிருஷ்டிகளாய் உயிர்த்தெழுப்பப்படுகையில் கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக அவர்கள் ஞானஸ்நானம் பெறுவது நிறைவடைகிறது.—2 தீமோத்தேயு 2:10-12; ரோமர் 6:5; 1 கொரிந்தியர் 15:42-44, 50.
சின்னங்களில் பங்குகொள்ளுதல்
13. பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்கள் நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் ஏன் பங்குகொள்வதில்லை, ஆனால் நினைவு ஆசரிப்பில் ஏன் கலந்துகொள்கிறார்கள்?
13 நினைவு ஆசரிப்பின்போது அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்வது மேற்கூறப்பட்ட எல்லாவற்றையும் உட்படுத்துகிறது என்பதால், பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்கள் அவற்றில் பங்குகொள்வது நிச்சயமாகவே பொருத்தமாக இருக்காது. பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்கள், தாங்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் பாகமான அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்கள் அல்ல என்பதை உணருகிறார்கள்; அதோடு, இயேசு கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப்போகிறவர்களோடு யெகோவா செய்த புதிய உடன்படிக்கையின் கீழ் தாங்கள் இல்லை என்பதையும் உணருகிறார்கள். அந்தப் ‘பாத்திரம்’ புதிய உடன்படிக்கையைக் குறிப்பதால் அந்தப் புதிய உடன்படிக்கையில் உள்ளவர்கள் மட்டுமே அடையாளச் சின்னங்களில் பங்குகொள்ள முடியும். ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமியில் பரிபூரணராக என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் இயேசுவின் மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெறுவதும் இல்லை, அவருடன் பரலோகத்தில் ஆட்சிசெய்ய தேர்ந்தெடுக்கப்படுவதும் இல்லை. அவர்கள் அந்தச் சின்னங்களில் பங்குகொண்டால் தங்களுக்குப் பொருந்தவே பொருந்தாத ஒன்றைச் செய்பவர்களாய் இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் அச்சின்னங்களில் பங்குகொள்வதில்லை; ஆனால், மதிப்புமரியாதையோடு நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்கிறார்கள். யெகோவா தமது குமாரன் மூலம் தங்களுக்குச் செய்துள்ள அனைத்திற்காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்; கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் தங்களுக்கு அவர் பாவ மன்னிப்பு வழங்குவதற்காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
14. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்வது அவர்களை எவ்வாறு ஆன்மீக ரீதியில் பலப்படுத்துகிறது?
14 பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய அழைக்கப்பட்டிருக்கும் சிறு தொகுதியான கிறிஸ்தவர்களுக்கு இறுதி முத்திரை போடப்படும் சமயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தியாகம் செய்யப்போகும் தங்கள் பூமிக்குரிய வாழ்வின் முடிவுவரை, நினைவு ஆசரிப்புச் சின்னங்களில் பங்குகொள்கிறார்கள், இதன் மூலம் ஆன்மீக ரீதியில் பலப்படுத்தப்படுகிறார்கள். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாக தங்கள் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட்டிருப்பதாய் அவர்கள் உணருகிறார்கள். அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்வது, மரணம்வரை உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க வேண்டிய பொறுப்பை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது.—2 பேதுரு 1:10, 11.
‘பூலோகத்திலிருக்கிறவைகளை’ கூட்டிச்சேர்த்தல்
15. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பக்கமாக யார் கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்?
15 1930-களின் மத்திபம் முதற்கொண்டு, எண்ணிக்கையில் அதிகரித்துவரும் ‘வேறே ஆடுகள்’ அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய பக்கமாகத் திரண்டு வந்திருக்கிறார்கள்; ‘சிறுமந்தையின்’ பாகமல்லாத இவர்கள், பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள். (யோவான் 10:16; லூக்கா 12:32; சகரியா 8:23) இவர்கள், கிறிஸ்துவின் சகோதரர்களுடைய உண்மையுள்ள தோழர்களாக இருக்கிறார்கள்; ‘ராஜ்யத்தின் சுவிசேஷத்தை’ சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிப்பதில் அவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறார்கள். (மத்தேயு 24:14; 25:40) இவ்வாறு செய்வதன் மூலம், கிறிஸ்துவால் சாதகமாக நியாயந்தீர்க்கப்படும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்; தேசங்களை அவர் நியாயந்தீர்க்க வரும்போது அவர்களைச் செம்மறியாடுகளாக நியாயந்தீர்த்து தம்முடைய ‘வலது பக்கத்தில்’ நிறுத்துவார், அதாவது அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நிறுத்துவார். (மத்தேயு 25:33-36, 46) கிறிஸ்து சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கும் இவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைக்கும் ‘திரள் கூட்டத்தாராக’ இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9-14.
16. ‘பூலோகத்திலிருக்கிறவை’ யாரையெல்லாம் உட்படுத்தும், ‘தேவனுடைய பிள்ளைகளாக’ ஆகும் வாய்ப்பை இவர்கள் அனைவரும் எவ்வாறு பெறுவார்கள்?
16 1,44,000 பேர் இறுதியாக முத்திரையிடப்படுகையில், பூமியிலுள்ள சாத்தானுடைய பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராக அழிவின் ‘காற்றுகள்’ அவிழ்த்துவிடப்படும். (வெளிப்படுத்துதல் 7:1-4) கிறிஸ்துவும் அவருடன் சேர்ந்து ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவை செய்வோரும் ஆயிரம் வருடங்களுக்கு அரசாளுகையில், எண்ணற்றவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு திரள்கூட்டத்தினரோடு சேர்ந்துகொள்வார்கள். (வெளிப்படுத்துதல் 20:12, 13) இவர்கள், மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்துவின் நிரந்தர குடிமக்களாக பூமியில் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆயிரவருட ஆட்சியின் முடிவில், ‘பூலோகத்திலிருக்கிறவையாகிய’ இவர்கள் அனைவரும் இறுதியான ஒரு பரீட்சையைச் சந்திப்பார்கள். அதில் உண்மையுள்ளவர்களாக நிரூபிப்பவர்கள் ‘தேவனுடைய [பூமிக்குரிய] பிள்ளைகளாக’ தத்தெடுக்கப்படுவார்கள்.—எபேசியர் 1:9; ரோமர் 8:20; வெளிப்படுத்துதல் 20:7, 8.
17. யெகோவாவின் நோக்கம் எவ்வாறு நிறைவேறும்?
17 அப்போது, யெகோவா தமது எல்லையற்ற ஞானத்தால் காரியங்களை நிர்வகித்து, ‘பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே [மீண்டும்] கூட்டப்பட’ வேண்டுமென்ற தமது நோக்கத்தை நிறைவேற்றியிருப்பார். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் அனைவரும் சர்வலோக சமாதானம் என்ற நிலைக்குக் கூட்டிச்சேர்க்கப்பட்டிருப்பார்கள்; மகா நோக்கமுள்ளவரான யெகோவாவின் நீதியுள்ள பேரரசாட்சிக்கு அவர்கள் சந்தோஷமாக கீழ்ப்பட்டிருப்பார்கள்.
18. நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்வதால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் சரி, அவர்களுடைய தோழர்களும் சரி, எவ்வாறு பயன் அடைவார்கள்?
18 அபிஷேகம் செய்யப்பட்ட சிறிய எண்ணிக்கையானோரும் அவர்களுடைய தோழர்களான வேறே ஆடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோரும் ஏப்ரல் 12, 2006 அன்று ஒன்றுகூடிவருவது எந்தளவு விசுவாசத்தைப் பலப்படுத்தும்! “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என இயேசு கட்டளையிட்ட விதமாகவே அவரது மரணத்தை அவர்கள் நினைவுகூருவார்கள். (லூக்கா 22:19) அந்த ஆசரிப்பில் கலந்துகொள்ளும் அனைவரும், யெகோவா தமது அன்பு மகனான இயேசு கிறிஸ்துவின் மூலம் தங்களுக்காகச் செய்துள்ள தியாகத்தை நினைவுகூர வேண்டும்.
மறுபார்வை
• பரலோகத்திலிருக்கிறவை, பூலோகத்திலிருக்கிறவை சம்பந்தமாக யெகோவாவின் நோக்கம் என்ன?
• ‘பரலோகத்திலிருக்கிறவை’ யாவர், அவர்கள் எவ்வாறு கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்?
• ‘பூலோகத்திலிருக்கிறவை’ யாவர், அவர்களுடைய நம்பிக்கை என்ன?
[பக்கம் 23-ன் பெட்டி]
‘கிறிஸ்துவின் உடல்’
பவுல், 1 கொரிந்தியர் 10:16, 17-ல் (பொ.மொ.), கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு அப்பம் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி பேசியபோது, ‘உடல்’ என்ற வார்த்தையை விசேஷ அர்த்தத்தில் குறிப்பிட்டார். “அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்” என்றார். அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் நினைவு ஆசரிப்பு அப்பத்தில் பங்குகொள்ளும்போது, அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் தொகுதியோடு தாங்கள் ஐக்கியப்பட்டிருப்பதை அறிவிக்கிறார்கள்; அந்தத் தொகுதி கிறிஸ்துவை தலையாகக் கொண்ட உடலைப் போல் இருக்கிறது.—மத்தேயு 23:10; 1 கொரிந்தியர் 12:12, 13, 18.
[பக்கம் 23-ன் படங்கள்]
அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே ஏன் அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்கிறார்கள்?
[பக்கம் 25-ன் படம்]
யெகோவாவின் நிர்வாகத்தின் மூலம், பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லா சிருஷ்டிகளும் ஐக்கியப்படுவார்கள்