படிப்பு 15
உங்கள் கேட்போரின் இருதயத்தைச் சென்றெட்டுதல்
1 அப்போஸ்தலன் பவுல், தான் எவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்திருந்தாரோ அவர்களுக்காக, ‘அவர்களுடைய இருதயத்தின் கண்கள் அறிவொளியூட்டப்பட வேண்டும்’ என்பதற்காக யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபித்துவந்தார். (எபே. 1: 16-19) இங்கே அவர் அறிவொளியூட்டப்படுவதாக மனதை அல்ல, ஆனால் இருதயத்தையே பற்றி பேசினார் என்பதை கவனியுங்கள். அவர் என்ன அர்த்தப்படுத்தினார்? பலன்தரத்தக்க பேச்சாளர்களாகவும் போதகர்களாகவும் இருப்பதற்கு நாம் இந்தக் காரியத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
2 பவுலின் மூலமாக, யெகோவாவின் ஆவி இருதயங்களின் பெரிய மதிப்பீட்டாளரின் மற்ற உண்மைத்தவறா ஊழியர்கள் மூலமாக பேசியிருந்ததையே வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. (நீதி. 21:2) உதாரணமாக தன்னுடைய ராஜரீக வாரிசுக்கு வயதான அரசனாகிய தாவீது இந்த நல்ல புத்திமதியைக் கொடுத்தார்: “என் குமார[னே], . . . நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.” (1 நா. 28:9) இருதயத்திலிருந்து வரும் உண்மை வணக்கமே படைப்பாளருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.
3 பெரிய தாவீதாகிய இயேசு கிறிஸ்து, இவ்விதமாக போதிக்கையில், அதேபோன்ற ஞானமுள்ள புத்திமதியைக் கொடுத்தார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” (மாற். 12: 28-30) கடவுளைப் பிரியப்படுத்தும் விஷயத்தில், சிருஷ்டியின் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பது பிரதான முக்கியத்துவமுள்ளதாகும். இதை நாம் மதித்துணரும்போது, நீதிமொழிகள் 4: 23-லுள்ள வார்த்தைகள் அதிகமான வலிமையோடு நம் மனதில் பதிகின்றன: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”
4 கேட்போர் ஒவ்வொருவரின் இருதயத்தையும் சென்றெட்டி மனதில் பதிய வைக்கும் இந்தக் காரியம் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்துப் போதிக்கும் அனைவருக்கும் அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்குப் போதிக்கையில் கிறிஸ்தவப் பெற்றோருக்கும், நற்செய்திக்குச் செவிசாய்ப்பவர்களிடம் வீட்டு பைபிள் படிப்பை நடத்தும் ஒவ்வொரு ஊழியருக்கும் இது அக்கறைக்குரியதாக இருக்கிறது. இது மேடையிலிருந்து போதிக்கும் சகோதரர்கள் கவனமாக சிந்திப்பதற்குத் தகுதியுள்ளதாயிருக்கிறது. இப்படிப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் சத்தியத்தின் மிகவும் விலைமதிப்புள்ள செய்தியை மற்றவர்களின் மனங்களுக்குத் தெரிவிக்க நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் நாம் இன்னும் அதிகத்தைச் செய்ய முயல வேண்டும். நாம் இருதயங்களைச் சென்றெட்ட விரும்புகிறோம். ‘பெரிய பரலோக தந்தைக்குத் தங்களுடைய இருதயத்தைத் தர’ நாம் மற்றவர்களைத் தூண்ட விரும்புகிறோம்.—நீதி. 23: 26.
5 மனதிற்கும் இருதயத்திற்குமிடையே வேறுபாட்டைக் கண்டறிதல். நற்செய்தியின் ஒரு திறமையுள்ள போதகர் கேட்போரின் மனங்களுக்கு அறிவைப் பகிர்ந்தளிக்கலாம். விரைவில் மாணாக்கர் அல்லது கேட்போர் போதனையைத் திரும்பக்கூறவும் தானே விளக்கவும் முடிகிறவராக இருக்கிறார். அவர் அதை கிரகித்துக்கொண்டிருக்கிறார், அது அவர் மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. ஆனால் அதைக் குறித்து அவர் என்ன செய்யப்போகிறார்? அவர் அறிவை எடுத்துக்கொள்வதில் மாத்திரமே அக்கறையுள்ளவராக இருக்கிறாரா அல்லது அறிவு அவரைச் செயல்படத் தூண்டப்போகிறதா? என்ற கேள்விகள் எழும்புகின்றன.
6 இங்குதானே இருதயம் உள்ளே வருகிறது, ஏனென்றால் பைபிளில் இது செயல்தூண்டுதலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. கடவுளின் உண்மை வணக்கத்தான் ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளரோடு சேர்ந்து இவ்விதமாகச் சொல்ல முடியும்: “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.” (சங். 119:11) ஒரு நபர் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய மிகச் சிறந்த அறிவை தன் மனதிற்குள் எடுத்துக்கொண்டு, பைபிளின் மிக நேர்த்தியான நியமங்களைக் கிரகித்துக்கொண்டு, என்றாலும் அந்த நியமங்களையும் அந்த அறிவையும் தன்னுடைய சொந்த வாழ்க்கைப் போக்கில் பொருத்திப் பிரயோகிப்பதற்கு அதைத் தன் இருதயத்தில் கொண்டில்லாமல் இருக்கலாம். அநேக ஆட்கள் கடவுளுடைய வார்த்தையின் புத்துயிரளிக்கும் சத்தியங்களைக் கேட்டிருக்கின்றனர், ஆனால் தங்கள் வாழ்க்கையில் அவற்றைப் பொருத்திப் பிரயோகிப்பது அல்லது மற்றவர்களுக்கு அதே வாய்ப்பை அளிப்பது என்பதற்கு வரும்போது—இப்படிப்பட்ட உயிர்-காக்கும் வேலைக்கு அவர்களுக்கு விருப்பமேயிருப்பதில்லை.
7 மனது அவசியமாகவே தகவலை வாங்கிக்கொண்டு ஜீரணிக்க வேண்டும். இது அறிவாற்றலின் இருப்பிடமாக, அறிவுச் செயலாக்க மையமாக இருக்கிறது. இது தகவலை ஒன்றுகூட்டி பகுத்தறிவு மற்றும் நியாயத்தின் செயல்முறைகளினால் ஒருசில முடிவுகளுக்கு வருகிறது. இது வியப்பூட்டும் ஏதோவொரு வகையில் இருதயத்தோடு நேரடியாக தொடர்புடையதாய் இருப்பதாக வேதாகமம் காட்டுகிறது. இருதயத்துக்கு இன்றியமையாத ஒரு பங்குண்டு, ஏனென்றால் பாசங்களும் செயல்தூண்டுதலும் அதோடு சம்பந்தப்பட்டதாயிருக்கின்றன. ஒருவருடைய முழு வாழ்க்கைப் போக்கிலும் இருதயத்தின் வழிநடத்துதல் பார்ப்பவர்களுக்கு வெளிப்படையாகிறது. ஒரு நபர் உள்ளுக்குள் உண்மையில் என்னவாக இருக்கிறார் என்பதை அவர்கள் இறுதியில் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் யெகோவா ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தை’ எல்லா சமயங்களிலும் அறிந்தவராக இருக்கிறார்.—1 பே. 3: 3, 4.
8 சில சமயங்களில் இருதயம் நியாயமான பகுத்தறிவைக்காட்டிலும் உணர்ச்சிக்கு அல்லது ஆசைக்கு சாதகமாயிருந்து அதை மேன்மைப்படுத்தும் தூண்டுதலை அளித்து மனதின் முடிவுகளை ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. யெகோவாவின் பார்வையில் எது சரி என்பதை ஒரு நபர் தன் மனதைக்கொண்டு அறிந்திருப்பது மாத்திரமல்லாமல், அந்தப் போக்கைப் பின்தொடர அவர் தன் இருதயத்தில் ஆசையைக் கொண்டிருத்தல் வேண்டும். விருப்பப்படியான போக்குகளுக்கிடையே தெரிவுசெய்து, அவற்றில் ஒன்றின்மீது அதன் எண்ணத்தை நிலைநிறுத்துவதற்கு இருதயத்திற்கிருக்கும் இந்தத் திறமை, ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்பற்றி ‘திட்டமிடுவதாகவும்,’ ‘அவனுடைய வழிகளை யோசிப்பதாகவும் [மனதை ஊன்ற வைப்பதாகவும்]’ பைபிள் ஏன் பேசுகிறது என்பதை விளக்குகிறது. (நீதி. 19:21; 16:9) மற்றபடி செய்வதற்கு சூழ்நிலைகள் ஏறக்குறைய கட்டாயப்படுத்தினாலொழிய, தங்கள் இருதயங்களுக்குக் கவர்ச்சியாயிருக்கும் போக்கையே ஆட்கள் பின்பற்றுவர். ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய காரியங்களுக்கு வருகையில் இது விசேஷமாக உண்மையாயிருக்கிறது.— மத். 5: 28.
9 இருதயங்களைச் சென்றெட்டுதல். அப்படியென்றால் ஒரு கிறிஸ்தவ போதகர் எவ்விதமாக ஆட்களின் இருதயங்களைச் சென்றெட்டுவது? ஒரு வழியானது கற்றுக்கொண்ட காரியங்களின்பேரில் போற்றுதலோடு சிந்தனைச் செய்ய கற்றுக்கொள்பவர்களை உற்சாகப்படுத்துவதாகும். இயேசுவின் மாம்சப்பிரகாரமான தாயாகிய மரியாளைப்பற்றி எவ்விதமாக “இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்” என்று விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (லூக். 2:51) பதிவு ‘தன் ஞாபகத்திலே’ என்று சொல்லவில்லை. அதுவும்கூட உட்பட்டிருந்தாலும் அவ்விதமாகச் சொல்லவில்லை. அது பாசம் மற்றும் செயல்தூண்டுதலின் இருப்பிடமாக இருக்கும் அவளுடைய இருதயத்திலே இருந்தது, ஆகவே பின்னால் அவள் ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவளானாள். சத்தியத்தைத் தங்கள் இருதயங்களில் பெற்றுக்கொள்ள இன்று மாணாக்கர்களுக்கு உதவிசெய்ய முக்கிய குறிப்புகளைத் திருப்தியளிக்கும் வகையில் விரிவுபடுத்த போதிய நேரமெடுத்துக்கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக பொருளைச் சிந்திக்க முயற்சிசெய்ய வேண்டாம்.
10 சிந்திக்கப்படும் பைபிள் சத்தியங்கள் உண்மையில் மாணாக்கரின் இருதயங்களில் வேர்கொள்கின்றனவா என்பதைத் தீர்மானிப்பதில் கேள்விகள் மிகவும் பிரயோஜனமாயிருக்கின்றன. புதிய சத்தியங்களைக் கலந்தாலோசித்தப் பின்னர், ஒருவேளை “இதைக்குறித்து இப்பொழுது நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? இதையேதான் நீங்கள் நம்புகிறீர்களா?” என்பதாக கேட்க விரும்பலாம். மாணாக்கர் பேச்சுக்களைக் கொடுக்கையில் அதைச் செய்ய பழகிக்கொள்ளுங்கள். ஒரு நபரின் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தீர்மானிப்பதன் மூலமாக மட்டுமே யெகோவாவின் சேவையில் முன்னேற நாம் அவருக்கு உதவிசெய்ய முடியும்.
11 கடவுளுடைய வார்த்தையை அவர்களுடைய இருதயத்தில் பதிய வைக்க, நீங்கள் போதிக்கும் மாணாக்கர்கள் யெகோவாவோடு தங்களுடைய சொந்த உறவின் அடிப்படையில் சிந்திப்பதற்கு உதவப்படுவது அவசியமாகும். ஊழியப் பள்ளியில் நியமிப்புகளுக்குக் கவனம் செலுத்தும்போது இந்தத் திறமையை வளர்ப்பதற்கு வேலைசெய்வதைவிட உங்களுக்கு வேறு என்ன மேம்பட்ட இடமிருக்கிறது? யெகோவாவிடமிருக்கும் அன்புக்காகவும், நம்மிடமாக அவருடைய அன்புக்காகவும் தங்கள் முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கையாயிருக்கும்படி நீங்கள் போதிக்கும் ஆட்களை உற்சாகப்படுத்துங்கள். சரியான வரிசையில் அமைக்கப்பட்ட கேள்விகளின் மூலமாக, அவர்கள் பைபிளில் கற்றுக்கொள்ளும் காரியங்கள், “மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ள” நம்முடைய அன்புள்ள படைப்பாளராகிய யெகோவாவிடமிருந்தே வருகின்றன என்ற உண்மைக்கு அவர்களுடைய கவனத்தை நீங்கள் திருப்பலாம். (யாக். 5:11) வாராவாரம், ஒரு படிப்பை நடத்திக்கொண்டிருந்தால், நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கிற அதிசயமான சத்தியங்களில் காணமுடிகிறபடி யெகோவாவின் அன்பையும் ஞானத்தையும் அழுத்திக் காண்பியுங்கள். மாணாக்கர்களை, அவர்களுடைய சொந்த வாழ்க்கை எவ்விதமாக பாதிக்கப்படுகிறது, முன்னாலிருக்கும் நாட்களில் எவ்விதமாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் காண உற்சாகப்படுத்துங்கள். பைபிள் நியமங்கள் அவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்டவையாக ஆகும்படிக்கு அவற்றை அடிக்கடி அவர்களோடு மறுபார்வை செய்யுங்கள். எந்த விஷயத்திலும் தீர்மானத்தை செய்யுமுன் பரலோக தந்தையின் விருப்பத்தை எப்பொழுதும் நிச்சயப்படுத்திக்கொள்ள நாடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும்” அவர் கொடுக்கிறதால் நம்முடைய வாழ்க்கையும் நமக்கிருக்கும் அனைத்துக் காரியங்களும் கடவுளுக்கே உரியது என்பதையும் அவருடைய வணக்கம், அவருடைய சேவை நம்முடைய இருதயத்திலும் நம்முடைய மனதிலும் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதையும் உணர படிப்படியாக நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்துகொண்டிருப்பீர்கள்.—அப். 17: 25.
12 நாம் என்ன செய்கிறோம் என்பது மட்டுமல்லாமல், அதைச் செய்வதில் நம்முடைய நோக்கம் கடவுளுக்கு முக்கியத்துவமுடையது என்ற குறிப்பை அவ்வப்போது கொண்டு வாருங்கள். தம்முடைய விருப்பத்தைச் செய்வதில் நாம் மகிழ்ச்சியைக் காண வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீதிமொழிகள் புத்தகத்திலுள்ள தகப்பனைப் போலவே, நம்முடைய பரலோக தகப்பன் இவ்விதமாக நம்மை அழைக்கிறார்: “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.”—நீதி. 4: 20-22.
13 ஆகவே நீங்கள் கற்பிக்கிறவர்கள், காரியங்களைச் செய்வதற்கான அவர்களுடைய உள்நோக்கங்களை கூர்ந்து ஆராயவும் தங்களைத் தாங்களே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவும் உற்சாகப்படுத்தப்படலாம்: இதை அல்லது அதை செய்ய நான் ஏன் விரும்புகிறேன்? குறிப்பிட்ட இந்தச் செயல்நடவடிக்கையைத் தெரிந்தெடுக்க என்னைத் தூண்டுவது என்ன? என் மனது என்ன சொல்கிறது என்பது எனக்குத் தெரியும், ஆனால் என் இருதயத்தில் உண்மையில் இருப்பது என்ன? கடவுளைப் பிரியப்படுத்தவா அல்லது என்னுடைய சொந்த ஆசைகளைத் திருப்திசெய்துகொள்ளவா நான் நாடுகிறேன்? என்னுடைய நியாயவிவாதம் உண்மையில் நேர்மையாக இருக்கிறதா? அல்லது பொய்யான நியாயவிவாதத்தின் மூலமாக என்னையே ஏமாற்றிக்கொள்ள நான் முயலுகிறேனா?
14 விழிப்பாயிராதவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் அபாயங்களையும் தந்திரங்களையும் பற்றியும் மாணாக்கர்கள் எச்சரிக்கப்படலாம். உதாரணமாக ஒரு நபர் ஒருவேளை தன்னில்தானே மிகவும் நியாயமாக இருக்கும் ஏதோ ஓர் இலக்கின்மீது தன் இருதயத்தை ஊன்ற வைத்திருக்கலாம், ஆனால் அது யெகோவாவுக்குச் செலுத்தும் ஒருவருடைய வணக்கத்தோடு அல்லது சேவையோடு ஓரளவு குறுக்கிடுவதாக இருக்கலாம். ஏவப்பட்டெழுதப்பட்ட நீதிமொழி குறிப்பாக இப்படிச் சொல்கிறது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.”—நீதி. 28: 26.
15 கடைசியாக, கர்த்தராகிய இயேசுவில் நமக்கிருக்கும் பரிபூரண முன்மாதிரியை மாணாக்கர்கள் முன்னால் வைப்பது நல்லது. அவர் தம்முடைய பரலோக தகப்பனுக்குப் பற்றுமாறாதவராக இருந்தார். அவர் ‘நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்ததினால் யெகோவா மற்றெல்லாரைப் பார்க்கிலும் அவரை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.’ (சங். 45:7) அவர் எவ்விதமாக அந்தச் சரியான இருதய நிலையைக் காத்துக்கொண்டார்? கடவுளை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, கடவுளைப் பிரியப்படுத்தவும்கூட அவர் படித்தார். அவர் எப்போதும் தம்முடைய தகப்பனின் விருப்பத்தை மனதில் கொண்டிருந்தார். இயேசு தவறாமல் ஜெபத்தில் தம்முடைய தகப்பனின் உதவியை நாடினார். தம்முடைய ஜெபங்களின் மூலமாக அவர் உண்மையில் கடவுளிடம் ‘தம்மைப் பரீட்சித்து, தம்மைச் சோதித்துப்பார்த்து தம் உள்ளிந்திரியங்களையும், தம் இருதயத்தையும் புடமிட்டுப்பார்க்கும்படியாக’ கேட்டுக்கொண்டிருந்தார். (சங். 26:2) அவர் வெறுமனே தம்முடைய சொந்த நியாயவிவாதத்தின்மீது அல்லது தம் சொந்த இருதய தூண்டுதல்கள்மீது சார்ந்திருக்க விரும்பவில்லை. முன்னறிவிக்கப்பட்டிருந்த அவருடைய பலிக்குரிய மரணம் நெருங்கியபோது, “பிதாவே, . . . என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே” என்பது அவருடைய ஜெபசிந்தையோடுகூடிய தீர்மானமாக இருந்தது.—மாற். 14: 36.
16 மாணாக்கர்களுக்கு முன்பாக நிறுத்துவதற்கு அது ஒரு நேர்த்தியான முன்மாதிரியாக இருக்கிறதல்லவா? அவர்களும்கூட ஜெபத்தின் மூலமாக தங்களுடைய வாழ்க்கையில் கடவுளுடைய வழிகாட்டுதலை நாடுவதற்கு உதவப்படலாம்—கடவுள் அங்கீகரிக்கும் போக்கைப் பின்பற்றுவதற்கு ஞானத்திற்காக ஊக்கமான இருதயப்பூர்வமான ஜெபம். இயேசுவின் சில ஜெபங்களை அவர்களுக்கு வாசித்துக் காண்பியுங்கள். இயேசு பூமிக்கு வந்தபோது அவருடைய குமாரனாக கடவுளிடம் ஜெபித்தார். தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு எவ்வாறு ஜெபிப்பது என்பதைக் கற்றுக்கொடுப்பவராக இயேசு மாதிரி ஜெபத்தை இவ்வாறு ஆரம்பித்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.” (மத். 6:9) ஆகவே ஜெபிப்பவர் ஒரு தகப்பனை அணுகும் மகனைப் போல இருக்க வேண்டும். ஒருவேளை நம்முடைய ஜெபங்கள்தாமே வேறு எதைக்காட்டிலும் யெகோவாவோடு என்ன வகையான ஓர் உறவு நமக்கிருக்கிறது என்பதைக் காண்பிக்கின்றன. அந்த உறவு ஒருவருடைய முழு இருதயத்தோடு மதிக்கவும் நேசிக்கவும்படும் ஒரு தகப்பனோடுள்ள ஒரு மகனின் அல்லது மகளினுடையதைப் போன்று அனலான, நம்பகமான நெருக்கமான ஒன்றாக இருக்கிறதா? அல்லது ஓர் அயல்வீட்டாரோடு அல்லது மட்டான அளவில் ஒரு நல்ல நண்பனோடுள்ளதைப் போன்ற வெறும் பேச்சுப்பழக்கமாக மட்டுமே இருக்கிறதா? நீங்கள் பேசும் அல்லது நீங்கள் படிப்பு நடத்திக்கொண்டிருப்பவர்களிடம் ஜெபத்தைக் குறித்து எவ்விதமாக உணருகின்றனர் மற்றும் அவர்கள் என்ன காரியங்களுக்காக ஜெபிக்கின்றனர் என்பதாக ஜெபத்தைப்பற்றி கலந்துபேசுவதன் மூலம் இருதயத்தைச் சென்றெட்ட முயற்சிசெய்யுங்கள்.—நீதி. 15: 8, 29.
17 இருதயங்களின்மீது கடவுள் வைக்கும் முக்கியத்துவத்தை முன்னிட்டுப்பார்க்கையில், நாமும்கூட அவருடைய வார்த்தையைப் போதிக்கையில் இருதயத்துக்கு ஊன்றிய கவனம் செலுத்துவது அவசியமாகும். ஒரு பொதுப் பேச்சையோ, ஒரு மாணாக்கர் பேச்சையோ கொடுத்துக்கொண்டிருந்தாலும் அல்லது ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்தாலும்சரி, அதிக அளவான பொருளைச் சிந்திப்பதை உங்கள் முக்கிய குறிக்கோளாக்கிக்கொள்ள வேண்டாம். யெகோவாவிடம் நெருங்கிவருவதற்கும், அவருடைய வார்த்தையை அவர்களுடைய இருதயத்தில் உறுதியாக பதிய வைத்துக்கொள்வதற்கும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
[கேள்விகள்]
1-4. ஊழியர்களாக நமக்கு இருதயம் ஏன் முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது?
5, 6. மற்றவர்களுடைய மனங்களுக்கு அறிவை வெறுமனே கொண்டுசெல்வதைக் காட்டிலும் நாம் ஏன் அதிகத்தைச் செய்ய முயற்சிசெய்ய வேண்டும்?
7, 8. மனதுக்கும் இருதயத்துக்குமிடையே உள்ள வேறுபாட்டை காண்பிக்கவும்.
9, 10. ஒரு மாணாக்கரின் இருதயத்தைச் சென்றெட்ட எது நமக்கு உதவிசெய்யும்?
11. யெகோவாவோடு ஒருவருடைய உறவின் முக்கியத்துவத்தை நாம் எவ்வாறு ஒரு மாணாக்கருக்கு அழுத்திக்காட்டலாம்?
12-14. உள்நோக்கத்தைப்பற்றி மாணாக்கர்கள் என்ன கற்றுக்கொள்வது அவசியமாக இருக்கிறது, ஒரு நபர் எவ்விதமாக தன்னுடைய உள்நோக்கங்களை கூர்ந்து ஆராயலாம்?
15-17. இயேசுவின் முன்மாதிரி மற்றும் ஜெபத்தைப்பற்றிய கலந்தாலோசிப்புகள் எவ்விதமாக இருதயத்துக்குப் பயனுள்ளதாக இருக்கலாம்?