நேரங்களும் காலங்களும் யெகோவாவின் கையில்
“என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல.”—அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 1:7, பொ.மொ.
1. காலத்தைப் பற்றிய கேள்விகளை இயேசுவின் அப்போஸ்தலர் கேட்டபோது அவர் எவ்வாறு பதிலளித்தார்?
இன்று கிறிஸ்தவமண்டலத்திலும் உலகெங்கிலும் ‘செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் [மக்கள்] பெருமூச்சுவிட்டழுகிறார்கள்.’ எப்போதுதான் இந்தத் துன்மார்க்க ஒழுங்குமுறை ஒழிந்து கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகம் வரும் என்று அவர்களால் எப்படி கேட்காமல் இருக்க முடியும்? (எசேக்கியேல் 9:4; 2 பேதுரு 3:13) இயேசுவின் மரணத்திற்கு சற்று முன்பும் அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பும், அப்போஸ்தலர் அவரிடம் காலத்தைப் பற்றிய கேள்விகளைக் கேட்டனர். (மத்தேயு 24:3; அப்போஸ்தலர் 1:6) ஆனால் இயேசு, தேதிகளை கணக்கிட்டு தெரிந்துகொள்வதற்கான வழியை அவர்களுக்குச் சொல்லவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், பல அம்சங்களைக்கொண்ட ஒரு கூட்டு அடையாளத்தை அவர்களுக்கு கொடுத்தார்; மற்றொரு சந்தர்ப்பத்தில், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” என்று சொல்லிவிட்டார்.—திருத்தூதர் பணிகள் 1:7, பொ.மொ.
2. கடைசி காலத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கான பிதாவின் நேரம் இயேசுவுக்கு எல்லா சமயத்திலும் தெரியாது என்று ஏன் சொல்லலாம்?
2 இயேசு, யெகோவாவின் ஒரேபேறான குமாரன்; என்றபோதிலும், சம்பவங்களுக்கான பிதாவின் கால-அட்டவணை எல்லா சமயத்திலும் அவருக்கே தெரியாது. கடைசி நாட்களைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கையில், இயேசு இவ்வாறு தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.” (மாற்கு 13:32) இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் சரியான நேரத்தை பிதா வெளிப்படுத்துவதற்காக இயேசு பொறுமையுடன் காத்திருக்க மனமுள்ளவராய் இருந்தார்.a
3. கடவுளுடைய நோக்கத்தின் சம்பந்தமான கேள்விகளுக்கு இயேசு அளித்த பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3 கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றமாக காரியங்கள் எப்பொழுது நடைபெறும் என்று அப்போஸ்தலர் கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதிலளித்த முறையிலிருந்து இரண்டு காரியங்களை தெரிந்துகொள்ளலாம். முதலாவது, யெகோவா ஒரு கால-அட்டவணையை வைத்திருக்கிறார்; இரண்டாவது, அதை அவர் மாத்திரமே தீர்மானிக்கிறார். அவருடைய நேரங்களையோ காலங்களையோ பற்றி முன்னதாகவே துல்லியமான தகவல் கிடைக்குமென அவருடைய ஊழியர்கள் எதிர்பார்க்க முடியாது.
யெகோவாவின் நேரங்களும் காலங்களும்
4. அப்போஸ்தலர் 1:7-ல், ‘நேரங்கள்’ மற்றும் ‘காலங்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகளின் அர்த்தமென்ன?
4 ‘நேரங்கள்’ மற்றும் ‘காலங்கள்’ என்பதன் அர்த்தம் என்ன? அப்போஸ்தலர் 1:7-ல் (பொ.மொ.) பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளில் காலத்தைப் பற்றிய இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. ‘நேரங்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை, “(நீண்ட அல்லது குறுகிய) நேரப்பகுதி (duration) என்ற கருத்தில் நேரத்தை” குறிக்கிறது. ‘காலங்கள்’ என்பது தீர்மானிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட காலத்தை, குறிப்பிட்ட ஒரு பருவத்தை, அல்லது காலப்பகுதியை குறிப்பதற்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வார்த்தை; இது சில அம்சங்களால் அடையாளப்படுத்தி காண்பிக்கப்படுகிறது. இந்த இரண்டு மூல வார்த்தைகளின் சம்பந்தமாக, டபிள்யூ. ஈ. வைன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அப்போஸ்தலர் 1:7-ல், நேரங்களையும் (குரோனோஸ்), அதாவது நேரங்களின் அளவையும், காலங்களையும் (கெய்ரோஸ்), அதாவது சில சம்பவங்களால் அடையாளப்படுத்தி காண்பிக்கப்படும் காலப்பகுதிகளையும், ‘பிதாவானவர் தம்முடைய அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறார்.’”
5. ஒழுக்கங்கெட்ட உலகை அழிப்பதற்கான தம்முடைய நோக்கத்தை யெகோவா எப்பொழுது நோவாவிடம் தெரிவித்தார், நோவா செய்த இரட்டை வேலை என்ன?
5 ஜலப்பிரளயத்திற்கு முன்பு, மனிதர்களும் மனிதர்களாக உருவெடுத்த கலகத்தனமிக்க தூதர்களும் உண்டாக்கிய ஒழுக்கங்கெட்ட உலகிற்கு கடவுள் 120 வருடம் கெடுவைத்தார். (ஆதியாகமம் 6:1-3) அந்தச் சமயத்தில் தேவபக்திமிக்க நோவாவுக்கு 480 வயது. (ஆதியாகமம் 7:6) அப்பொழுது அவருக்கு குழந்தையில்லை; அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் வரைக்கும்கூட குழந்தையில்லாமல் இருந்தார். (ஆதியாகமம் 5:32) நெடுநாட்களுக்குப் பிறகு, நோவாவின் குமாரர்கள் பெரியவர்களாகி கல்யாணம் முடித்த பிற்பாடே, பூமியிலிருந்து அக்கிரமத்தை துடைத்தழிப்பதற்கான தம்முடைய நோக்கத்தை நோவாவுக்கு கடவுள் தெரிவித்தார். (ஆதியாகமம் 6:9-13, 18) நோவாவுக்கு இரட்டை வேலை இருந்தது; ஒன்று பேழையைக் கட்டுதல், மற்றொன்று ஜனங்களுக்குப் பிரசங்கித்தல். அப்பொழுதும்கூட, யெகோவா அவரிடம் தம்முடைய கால-அட்டவணையை வெளிப்படுத்தவில்லை.—ஆதியாகமம் 6:14; 2 பேதுரு 2:5.
6. (அ) நேரத்தைப் பற்றிய விஷயங்களை கடவுளுடைய கையில் விட்டுவிட்டதை நோவா எவ்வாறு காண்பித்தார்? (ஆ) நோவாவின் முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
6 பல ஆண்டுகளாக—ஒருவேளை அரை நூற்றாண்டாக—“தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் [நோவா] செய்து முடித்தான்.” நோவாவுக்கு சரியான தேதி தெரியாதபோதிலும், ‘விசுவாசத்தோடே’ அந்த வேலையைச் செய்தார். (ஆதியாகமம் 6:22; எபிரெயர் 11:7) ஜலப்பிரளயம் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரைக்கும் சரியான நேரத்தை யெகோவா அவருக்கு தெரியப்படுத்தவில்லை. (ஆதியாகமம் 7:1-5) யெகோவாமீது நோவா வைத்திருந்த முழு நம்பிக்கையும் விசுவாசமுமே நேரத்தைப் பற்றிய விஷயங்களை அவருடைய கையிலேயே விட்டுவிடுவதற்கு உதவின. ஜலப்பிரளயத்தில் யெகோவா அவரை பாதுகாத்து, பேழையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பூமிக்குள் வரும்படி செய்ததற்காக நோவா எவ்வளவு நன்றியுள்ளவராக இருந்திருக்க வேண்டும்! அவருடைய மீட்பில் இப்படிப்பட்ட நம்பிக்கையை வைத்து, நாமும் கடவுளில் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமல்லவா?
7, 8. (அ) தேசங்களும் உலக வல்லரசுகளும் எவ்வாறு தோன்றின? (ஆ) எந்த அர்த்தத்தில் யெகோவா, ‘முன் தீர்மானிக்கப்பட்ட நேரங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்தார்’?
7 ஜலப்பிரளயத்திற்குப் பின்பு, நோவாவின் சந்ததியாரில் பெரும்பாலானோர் யெகோவாவின் மெய் வணக்கத்தை விட்டுவிட்டனர். ஒரே இடத்தில் வாழ்வதை லட்சியமாக வைத்து, ஒரு நகரத்தையும் பொய் வணக்கத்திற்காக ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே நேரம் என்பதை யெகோவா தீர்மானித்தார். அவர்களுடைய மொழியை குழப்பி, “அவ்விடத்திலிருந்து [பாபேலிலிருந்து] பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.” (ஆதியாகமம் 11:4, 8, 9) மொழிவாரியாக பிரிந்துபோன தொகுதிகள் பிற்பாடு தேசங்களாக வளர்ந்தன; அவற்றில் சில மற்ற தேசங்களை கைப்பற்றி அந்தப் பகுதிகளுக்கு வல்லரசுகளாய் மாறின, மேலும் உலக வல்லரசுகளாகவும் உருவெடுத்தன.—ஆதியாகமம் 10:32.
8 யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இசைவாக, சிலசமயங்களில் தேசிய எல்லைகளைக் குறித்தார். எந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு தேசம் உள்ளூரில் அல்லது உலகளவில் வல்லரசாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதையும் தீர்மானித்தார். (ஆதியாகமம் 15:13, 14, 18-21; யாத்திராகமம் 23:31; உபாகமம் 2:17-22; தானியேல் 8:5-7, 20, 21) அத்தேனேயில் இருந்த கிரேக்க அறிவுஜீவிகளிடம் அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது, யெகோவாவின் இந்த நேரங்களையும் காலங்களையும் குறிப்பிட்டார்: ‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் . . . மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் [“நேரங்களையும்,” NW] அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.’—அப்போஸ்தலர் 17:24, 26.
9. ராஜாக்களைக் குறித்ததில் யெகோவா எவ்வாறு ‘நேரங்களையும்’ ‘காலங்களையும்’ மாற்றியிருக்கிறார்?
9 தேசங்களில் ஏற்படும் எல்லா அரசியல் வெற்றிகளுக்கும் மாற்றங்களுக்கும் யெகோவாவே பொறுப்பு என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆனால், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தாம் விரும்பும் சமயத்தில் அவரால் குறுக்கிட முடியும். எனவே, பாபிலோனிய உலக வல்லரசு வீழ்ந்து, அதனிடத்தை மேதிய-பெர்சியா எடுத்துக்கொள்வதைக் காணவிருந்த தீர்க்கதரிசியாகிய தானியேல் இவ்வாறு சொன்னார்: “அவர் [நேரங்களையும்] காலங்களையும் . . . மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.”—தானியேல் 2:21; ஏசாயா 44:24–45:7.
‘நிறைவேறுங்காலம் சமீபித்து வந்தது’
10, 11. (அ) ஆபிரகாமின் சந்ததியாரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் சமயத்தை எவ்வளவு காலத்திற்கு முன்பு யெகோவா குறித்திருந்தார்? (ஆ) தாங்கள் விடுவிக்கப்படும் காலத்தை இஸ்ரவேலர்கள் துல்லியமாக அறியவில்லை என்பதை எது தெரிவிக்கிறது?
10 நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே, எகிப்திய உலக வல்லரசை தாழ்த்தி, அடிமைத்தனத்திலிருந்து ஆபிரகாமின் சந்ததியை விடுவிக்கும் துல்லியமான ஆண்டை யெகோவா குறித்துவிட்டார். ஆபிரகாமுக்கு தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்துகையில், கடவுள் இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும் அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.” (ஆதியாகமம் 15:13, 14) இஸ்ரவேலின் சரித்திரத்தைப் பற்றி நியாயசங்கத்திற்கு முன்பு ஸ்தேவான் சுருக்கமாக குறிப்பிடுகையில், இந்த 400-வருட காலப்பகுதியைக் குறித்து சொன்னதாவது: “ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது, யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.”—அப்போஸ்தலர் 7:6, 17, 18.
11 இஸ்ரவேலரை இந்தப் புதிய பார்வோன் அடிமைத்தனத்திற்குள் கொண்டுவந்தான். அப்பொழுது மோசே இன்னும் ஆதியாகம புத்தகத்தை எழுத ஆரம்பிக்கவில்லை. என்றபோதிலும் ஆபிரகாமுக்கு யெகோவா தந்த வாக்குறுதி வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ கடத்தப்பட்டிருக்கலாம். அப்படியிருந்தபோதிலும், இஸ்ரவேலர்கள் தங்களிடம் இருந்த இத்தகவலை வைத்து, எகிப்தின் ஒடுக்குதலிலிருந்து மீட்கப்படும் சரியான தேதியை கணக்குப்போடவில்லை என தெரிகிறது. அவர்களை எப்பொழுது விடுவிப்பார் என்பதை கடவுள் அறிந்திருந்தார், ஆனால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த அந்த இஸ்ரவேலருக்கு அவர் அதை அறிவிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.”—யாத்திராகமம் 2:23-25.
12. யெகோவாவின் நேரத்திற்கு முன்பே மோசே செயல்பட்டார் என்பதை ஸ்தேவான் எவ்வாறு தெரிவித்தார்?
12 இஸ்ரவேலர் மீட்கப்படும் சரியான காலத்தைப் பற்றி அறியாமலிருந்ததை ஸ்தேவானின் வார்த்தைகளிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். மோசேயைப் பற்றி பேசுகையில், அவர் சொன்னார்: ‘அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணை நின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.’ (அப்போஸ்தலர் 7:23-25) கடவுளுடைய குறித்த நேரத்திற்கு 40 வருடங்களுக்கு முன்பே மோசே செயல்பட்டார். ‘தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவதற்கு’ முன்பு மற்றொரு 40 வருடங்கள் மோசே காத்திருக்க வேண்டியிருந்ததை ஸ்தேவான் சுட்டிக்காட்டினார்.—அப்போஸ்தலர் 7:30-36.
13. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பிருந்த சூழ்நிலைக்கு எவ்வாறு நம்முடைய சூழ்நிலைமை ஒத்திருக்கிறது?
13 ‘வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்திருந்தபோதிலும்கூட,’ துல்லியமான வருடம் கடவுளால் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, மோசேயும் இஸ்ரவேலர் அனைவரும் விசுவாசத்தை காண்பிக்க வேண்டியிருந்தது. யெகோவாவின் குறிக்கப்பட்ட காலம் எப்பொழுது வருமென்று முன்னதாகவே கணக்குப்போட முடியாமல் அதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையிலிருந்து நாம் விடுவிக்கப்படும் காலம் நெருங்கிவருகிறது என்பதை நாமும் உறுதியாக நம்புகிறோம். நாம் “கடைசிநாட்களில்” வாழ்கிறோம் என்பதையும் அறிந்திருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) ஆகையால், நாமும் விசுவாசத்தோடு யெகோவாவின் மகா நாளுக்கான உரிய சமயத்திற்காக காத்திருக்க மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டுமல்லவா? (2 பேதுரு 3:11-13) அப்படியானால், மோசேயையும் இஸ்ரவேலரையும் போல, யெகோவாவுக்கு துதியுண்டாக மீட்பின் மகிமையான பாடலை நாம் ஊக்கத்தோடு பாடலாம்.—யாத்திராகமம் 15:1-19.
“காலம் நிறைவேறினபோது”
14, 15. தம்முடைய குமாரன் பூமிக்கு வருவதற்கு நேரத்தை கடவுள் குறித்திருந்தார் என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்கிறோம், தீர்க்கதரிசிகளும், தேவதூதர்களும்கூட, எதற்காக உற்று கவனித்து வந்தார்கள்?
14 யெகோவா தம்முடைய ஒரேபேறான குமாரன் மேசியாவாக பூமிக்கு வரும் காலத்தை குறித்திருந்தார். பவுல் இவ்வாறு எழுதினார்: “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.” (கலாத்தியர் 4:5) வித்துவை—அதாவது, ‘மக்களின் கீழ்ப்படிதலுக்குரிய ஷீலோவை’—அனுப்புவதாக சொன்ன கடவுளுடைய வாக்குறுதியின் நிறைவேற்றமாக இது இருந்தது.—ஆதியாகமம் 3:15; 49:10, NW.
15 கடவுளுடைய தீர்க்கதரிசிகள்—தேவதூதர்களும்கூட—மேசியா தோன்றி, பாவ மனிதவர்க்கத்திற்கு இரட்சிப்பு சாத்தியமாகும் ‘காலத்தை’ உற்று கவனித்து வந்தார்கள். ‘இந்த இரட்சிப்பைக் குறித்தே’ பேதுரு இவ்வாறு சொன்னார்: “உங்களுக்கு உண்டான கிருபையைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்; தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். . . . இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.”—1 பேதுரு 1:1-5, 10-12.
16, 17. (அ) முதல் நூற்றாண்டு யூதர்கள் மேசியாவை எதிர்பார்த்திருப்பதற்கு எந்தத் தீர்க்கதரிசனத்தின் மூலம் யெகோவா உதவிசெய்தார்? (ஆ) மேசியாவை பற்றிய யூதர்களின் எதிர்பார்ப்பை எவ்வாறு தானியேல் தீர்க்கதரிசனம் பாதித்தது?
16 உறுதியான விசுவாசமுடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் மூலம், ‘எழுபது வாரங்களை’ உட்படுத்தும் ஒரு தீர்க்கதரிசனத்தை யெகோவா கொடுத்திருந்தார். வாக்குப்பண்ணப்பட்ட மேசியா வரும் காலம் நெருங்கிவருவதை முதல் நூற்றாண்டு யூதர்கள் அறிந்துகொள்வதற்கு அந்தத் தீர்க்கதரிசனம் உதவும். அத்தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிட்டது: “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்.” (தானியேல் 9:24, 25) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ‘வாரங்கள்,’ வருட வாரங்களைக் குறிக்கின்றன என்பதை யூத, கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் அறிஞர்கள் பொதுவாக ஒத்துக்கொள்கின்றனர். தானியேல் 9:25-ல் சொல்லப்பட்டுள்ள 69 ‘வாரங்கள்’ (483 வருடங்கள்) பொ.ச.மு. 455-ல் ஆரம்பமாயின; அப்போது பெர்சிய ராஜாவாகிய அர்தசஷ்டா, ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்ட’ நெகேமியாவுக்கு அதிகாரம் கொடுத்தார். (நெகேமியா 2:1-8) அவை 483 வருடங்களுக்குப் பிற்பாடு, அதாவது பொ.ச. 29-ல் முடிவடைந்தன; அப்போது இயேசு முழுக்காட்டப்பட்டு, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார்; இவ்வாறு மேசியாவாக, அல்லது கிறிஸ்துவாக ஆனார்.—மத்தேயு 3:13-17.
17 483 வருடங்கள் எப்பொழுது ஆரம்பமாயின என்பதை முதல் நூற்றாண்டு யூதர்கள் துல்லியமாக அறிந்திருந்தார்களா என்பது தெரியாது. ஆனால் முழுக்காட்டுபவனாகிய யோவான் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது, “யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிரு[ந்தார்கள்].” (லூக்கா 3:15) பைபிள் அறிஞர்கள் சிலர் இந்த எதிர்பார்ப்பை தானியேல் தீர்க்கதரிசனத்துடன் இணைக்கிறார்கள். இந்த வசனத்தின் பேரில் குறிப்பு சொல்கையில், மேத்யூ ஹென்றி இவ்வாறு எழுதினார்: “யோவானுடைய ஊழியத்தாலும் முழுக்காட்டுதலாலும், மக்கள் மேசியாவைக் குறித்து சிந்தித்தனர், அவர் விரைவில் தோன்றப்போகிறார் என்றும் நம்பினர் . . . என்பது இங்கே நமக்கு சொல்லப்படுகிறது. . . . தானியேலின் எழுபது வாரங்கள் இப்பொழுது முடிவடைந்துகொண்டிருந்தன.” விகூரூ, பாக்வெஸ், பிராஸாக் என்பவர்களால் எழுதப்பட்ட பிரெஞ்சு மானுவல் பிப்ளிக் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தானியேலால் குறிக்கப்பட்ட எழுபது வார வருடங்கள் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தன என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள்; தேவனுடைய ராஜ்யம் சமீபித்துவிட்டதை முழுக்காட்டுபவனாகிய யோவான் அறிவிப்பதைக் கேட்டு யாரும் ஆச்சரியப்படவில்லை.” அந்நாளில் இருந்த “பிரபல காலக்கணக்கின்படி, சுமார் பொ.ச. முதல் நூற்றாண்டின் இரண்டாவது காற்பகுதியில் மேசியாவை எதிர்பார்த்தனர்” என யூத அறிஞர் அப்பா ஹிலேல் சில்வர் எழுதினார்.
சம்பவங்களே முக்கியம்—காலத்தை கணக்கிடுவது அல்ல
18. மேசியா தோன்றும் காலத்தை யூதர்கள் எதிர்பார்ப்பதற்கு தானியேல் தீர்க்கதரிசனம் உதவியபோதிலும், இயேசுவின் மேசியானியத்துவத்திற்கு மிகவும் நம்பத்தக்க அத்தாட்சியாய் சேவித்தவை எவை?
18 எப்போது மேசியா தோன்றுவார் என்பதைப் பற்றிய பொதுவான எண்ணத்தை யூத மக்கள் வைத்திருப்பதற்கு காலக்கணக்கு அவர்களுக்கு உதவியபோதிலும், இயேசுவின் மேசியானியத்துவத்தை நம்புவதற்கு அது அநேகருக்கு உதவி செய்யவில்லை என்பதையே அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இயேசு தாம் மரிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு சீஷர்களிடம் இவ்வாறு கேட்டார்: “ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்.” அதற்கு அவர்கள் பதிலளித்தனர்: “சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள்.” (லூக்கா 9:18, 19) தம்மை மேசியாவென நிரூபிப்பதற்கு இயேசு எப்பொழுதாவது தானியேல் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டினார் என்பதற்கு நமக்கு எந்தப் பதிவும் இல்லை. ஆனால் ஒருசமயத்தில் அவர் சொன்னார்: “யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.” (யோவான் 5:36) வெளிப்படுத்தப்பட்ட எந்த காலக்கணக்கும் அல்ல, இயேசுவின் பிரசங்கமும் அவருடைய அற்புதங்களும் அவருடைய மரணத்தின்போது நடந்த சம்பவங்களுமே (அற்புதமாக இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது, பூகம்பம்) அவர் கடவுளால் அனுப்பப்பட்ட மேசியா என நிரூபித்தன.—மத்தேயு 27:45, 51, 54; யோவான் 7:31; அப்போஸ்தலர் 2:22.
19. (அ) எருசலேமின் அழிவு அருகில் இருந்ததை கிறிஸ்தவர்கள் எவ்வாறு அறிந்துகொள்வார்கள்? (ஆ) எருசலேமிலிருந்து தப்பியோடிய ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு ஏன் இன்னும் அதிக விசுவாசம் தேவைப்பட்டது?
19 அதைப்போலவே, இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, யூத காரிய ஒழுங்குமுறையின் முடிவை கணக்கிடுவதற்கு ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு எந்தவொரு மையப்புள்ளியும் கொடுக்கப்படவில்லை. அடையாளப்பூர்வ வாரங்களைப் பற்றிய தானியேல் தீர்க்கதரிசனம் அந்த ஒழுங்குமுறையின் அழிவை குறிப்பிட்டது உண்மைதான். (தானியேல் 9:26ஆ, 27ஆ) ஆனால் இது ‘எழுபது வாரங்களின்’ முடிவில் நடைபெறும் (பொ.ச.மு. 455–பொ.ச. 36). வேறுவார்த்தையில் சொல்லப்போனால், பொ.ச. 36-ல் முதன்முதலில் புறஜாதிகள் இயேசுவின் சீஷர்களானார்கள்; அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பற்றி தானியேல் 9-ம் அதிகாரம் கிறிஸ்தவர்களுக்கு எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை. யூத ஒழுங்குமுறை சீக்கிரத்தில் முடிவடையும் என்பதை காலக்கணக்கு அல்ல, சம்பவங்கள் அவர்களுக்கு சுட்டிக்காட்டும். இயேசு முன்னறிவித்த அந்தச் சம்பவங்கள், ரோம படைகள் எருசலேமை தாக்கிவிட்டு பின்வாங்கிப்போன ஆண்டாகிய பொ.ச. 66-லிருந்து உச்சக்கட்டத்தை அடையத் தொடங்கின. இது, எருசலேமிலும் யூதேயாவிலும் வாழ்ந்துவந்த விழிப்புள்ள கிறிஸ்தவர்கள் ‘மலைகளுக்கு ஓடிப்போக’ வாய்ப்பளித்தது. (லூக்கா 21:20-22) வழிகாட்டுவதற்கு எந்தவொரு காலக்கணக்கும் இல்லாததால், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எருசலேமின் அழிவு எப்பொழுது வரும் என்பதை அறியாமல் இருந்தார்கள். தங்களுடைய வீடுகளையும் பண்ணைகளையும் பட்டறைகளையும் விட்டுவிட்டு, பொ.ச. 70-ல் ரோம சேனை திரும்பிவந்து யூத ஒழுங்குமுறையை பூண்டோடு அழிக்கும் வரைக்கும் சுமார் நான்கு ஆண்டுகள் எருசலேமுக்கு வெளியில் தங்குவதற்கு அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட விசுவாசம் தேவைப்பட்டது!—லூக்கா 19:41-44.
20. (அ) நோவா, மோசே, யூதேயாவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஆகியோருடைய உதாரணத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்? (ஆ) பின்வரும் கட்டுரையில் நாம் என்ன சிந்திப்போம்?
20 நோவா, மோசே, யூதேயாவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஆகியோரைப் போல, நாம் இன்று நம்பிக்கையோடு யெகோவாவின் கையில் நேரங்களையும் காலங்களையும் விட்டுவிடலாம். நாம் முடிவின் காலத்தில் வாழ்கிறோம், நம்முடைய மீட்பு சமீபித்து வருகிறது என்ற நம்பிக்கை, வெறுமனே காலக்கணக்கின்மீது சார்ந்தில்லை; ஆனால் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாக நடந்த உண்மை வாழ்க்கைச் சம்பவங்களின்மீது சார்ந்திருக்கிறது. மேலும், நாம் கிறிஸ்துவினுடைய வந்திருத்தலின் காலப்பகுதியில் வாழ்கிறபோதிலும், விசுவாசத்தோடும் தொடர்ந்து விழிப்போடும் இருக்க வேண்டியதன் அவசியத்திலிருந்து விடுபட்டில்லை. பைபிளில் முன்னறிவிக்கப்பட்டுள்ள கிளர்ச்சியூட்டும் சம்பவங்களை ஆவலுடன் எதிர்பார்த்து வாழவேண்டும். இதுவே பின்வரும் கட்டுரையின் பொருள்.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1996, பக்கங்கள் 30-1-ஐ காண்க.
மறுபார்வை
◻ யெகோவாவின் நேரங்களையும் காலங்களையும் பற்றி இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம் என்ன சொன்னார்?
◻ ஜலப்பிரளயம் எப்போது வரும் என்பதை நோவா எவ்வளவு காலத்திற்கு முன்பு அறிந்துகொண்டார்?
◻ மோசேயும் இஸ்ரவேலரும் எகிப்திலிருந்து விடுவிக்கப்படும் சமயத்தை துல்லியமாக அறிந்திருக்கவில்லை என்பதை எது சுட்டிக்காட்டுகிறது?
◻ யெகோவாவின் நேரங்களையும் காலங்களையும் உட்படுத்தும் பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
[பக்கம் 11-ன் படம்]
நோவாவின் விசுவாசம், நேரத்தைப் பற்றிய விஷயங்களை யெகோவாவின் கையில் விட்டுவிட உதவியது