மரியாள் (இயேசுவின் தாய்)
சொற்பொருள் விளக்கம்: கடவுள் தெரிந்துகொண்ட மிக உயர்வாய்த் தயவுபெற்றப் பெண், இயேசுவைப் பெற்றவள். பைபிளில் வேறு ஐந்து மரியாள்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இந்த மரியாள் அரசன் தாவீதின் சந்ததியாள், யூதாக் கோத்திரத்தாள், ஏலியின் மகள். வேத எழுத்துக்கள் அவளை நமக்கு முதன்முதல் அறிமுகப்படுத்துகையில், அவள் யோசேப்புக்கு நிச்சயம்செய்யப்பட்டிருக்கிறாள், யோசேப்பும் யூதா கோத்திரத்தான் தாவீதின் சந்ததியான்.
மரியாளைப்பற்றி பைபிள் விவரப்பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
(1) கடவுள் தம்முடைய செய்தி கொண்டுசெல்வோரின்மூலம் சொல்வது முதன்முதலில் நமக்கு மனக்குழப்பத்தைக் கொடுத்தாலும் அல்லது நடக்கமுடியாதக் காரியமாகத் தோன்றினாலும் செவிகொடுத்துக் கேட்க மனமுள்ளோராய் இருப்பதில் ஒரு பாடத்தைக் கற்கிறோம்.—லூக்கா 1:26-37.
(2) கடவுளுடைய சித்தமென ஒருவர் கற்பதற்குப் பொருந்த நடப்பதற்கு, கடவுளில் முழுமையாய் நம்பிக்கைவைத்து, தைரியங்கொள்ளுதல். (லூக்கா 1:38-ஐப் பாருங்கள். உபாகமம் 22:23, 24-ல் காட்டியிருக்கிறபடி, கர்ப்பந்தரித்திருப்பவளாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மணமாகாத ஒரு யூதப் பெண்ணுக்கு வினைமையான விளைவுகள் உண்டாகக்கூடும்.)
(3) வாழ்க்கையில் ஒருவரின் தரநிலை என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல் அந்த ஆளைப் பயன்படுத்தக் கடவுள் மனங்கொண்டிருப்பது.—லூக்கா 2:22-24-ஐ லேவியராகமம் 12:1-8 உடன் ஒத்துப்பாருங்கள்.
(4) ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்தல். (லூக்கா 2:41; அப்போஸ்தலர் 1:14-ஐ பாருங்கள். ஆண்டுதோறும் பஸ்கா சமயத்தில் எருசலேமுக்குச் செல்லும் அந்த நீண்டப் பிரயாணத்தில் யூத மனைவிமார் தங்கள் கணவர்களோடு சேர்ந்து செல்லவேண்டுமெனக் கட்டளையிடப்படவில்லை, ஆனால் மரியாள் அவ்வாறு செய்தாள்.)
(5) ஒழுக்கச் சம்பந்தமான சுத்தத்தை மதித்தல்.—லூக்கா 1:34.
(6) தன் பிள்ளைகளுக்குக் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதில் தளரா ஊக்கத்துடனிருத்தல். (இது 12 வயதில் இயேசு செய்துகொண்டிருந்ததில் பிரதிபலித்தது. லூக்கா 2:42, 46-49-ஐ பாருங்கள்.)
இயேசுவைப் பெற்றபோது மரியாள் உண்மையில் கன்னியாக இருந்தாளா?
லூக்கா 1:26-31-ல் (JB) “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக,” என்ற செய்தியைக் காபிரியேல் தூதன் மரியாள் என்ற பெயர்கொண்ட “ஒரு கன்னிகை”க்கே கொண்டுசென்றானென அறிவிக்கிறது. இதைக் கேட்டபோது, 34-ம் வசனத்தில், “மரியாள் தேவதூதனிடம், ‘இது எவ்வாறு நடக்கமுடியும், நான் கன்னிகையாயிருக்கிறேனே [“புருஷனை அறியேனே,” தமிழ் UV; “ஆணுடன் நான் பாலுறவு கொள்கிறதில்லையே,” NW]’ என்றாள்.” மத்தேயு 1:22-25-ல் மேலும் சொல்லப்பட்டிருப்பதாவது: “தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்ற அர்த்தமாம். யோசப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”
இது பகுத்தறிவுக்கு ஒத்திருக்கிறதா? மனித இனப்பெருக்கு உறுப்புகளைத் திட்டமிட்டு அமைத்த சிருஷ்டிகருக்கு, இயற்கைக்கு மீறிய வழிவகையால் மரியாளின் கர்ப்பத்தில் ஒரு முட்டையணு கருத்தரிக்கும்படி செய்விப்பது நிச்சயமாகவே, முடியாதக் காரியமாயில்லை. யெகோவா, அற்புதமாய்த் தம்முடைய முதற்பேறான பரலோகக் குமாரனின் உயிர்ச்சக்தியையும் தனிப்பண்பியல்பு மாதிரியையும் மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். மரியாளின் கருப்பையில் அந்தப் பிள்ளையின் வளர்ச்சியைக் கடவுளுடைய சொந்தச் செயல்நடப்பிக்கும் சக்தியாகிய அவருடைய பரிசுத்த ஆவி பாதுகாத்தது, இவ்வாறு பிறந்தது பரிபூரண மனிதனாயிருந்தது.—லூக்கா 1:35; யோவன் 17:5.
மரியாள் எப்பொழுதும் கன்னியாகவே இருந்தாளா?
மத். 13:53-56, கத்.பை.: “யேசுநாதர் இந்த உவமைகளையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, சம்பவித்ததேதெனில், அவர் அவ்விடம் விட்டு, தம்முடைய சுயதேசத்துக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே போதித்துக்கொண்டுவந்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு சொன்னதாவது: இந்த ஞானமும் அற்புத செய்கைகளும் இவருக்கு வந்ததெப்படி? இவர் தச்சனுடைய குமாரனல்லவோ? இவருடைய தாயார் மரியம்மாளல்லவோ? யாக்கோப்பும், யோசப்பும், சீமோனும், யூதாவும் இவருடைய சகோதரரல்லவோ [கிரேக்கில், அடெல்ஃபோய்]? இவருடைய சகோதரிகள் [அடெல்ஃபாய்] யாவரும் நமது நடுவிலிருக்கிறார்களல்லவோ? அப்படியிருக்க, இவருக்கு இவையெல்லாம் எங்கேயிருந்து உண்டாயிற்று?” (இந்த வசனத்தை ஆதாரமாய்க்கொண்டு, நீங்கள் என்ன முடிவுசெய்வீர்கள்? இயேசு மரியாளின் ஒரே பிள்ளையென்றா அல்லது அவளுக்கு மற்றக் குமாரரும் குமாரத்திகளுங்கூட இருந்தார்கள் என்றா?)
மத்தேயு 13:55, 56-ல் பயன்படுத்தியுள்ள அடெல்ஃபோய் மற்றும் அடெல்ஃபாய் என்ற கிரேக்கச் சொற்களைக் குறித்து நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967, புத். IX, பக். 337) பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: இவை “இந்தச் சுவிசேஷகனுடைய காலத்தின் கிரேக்கு பேசும் உலகத்தில், இரத்த உறவான உடன்பிறந்த சகோதரரும் சகோதரிகளும் என்று பொருள்கொண்டது, அவனுடைய கிரேக்க வாசகரால் இயல்பாய் இந்தக் கருத்திலேயே ஏற்கப்படும். 4-ம் நூற்றாண்டின் முடிவின்போது (சுமார் 380) ஹெல்விடியஸ் இப்பொழுது இழக்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், மரியாளைப் பெரிய குடும்பங்களுக்குத் தாய்களாயிருப்போருக்கு மாதிரியாக்கும்படி அவளுக்கு இயேசுவைத் தவிர மற்றப் பிள்ளைகளும் இருந்தார்களென்பதைக் குறித்துக் காட்ட இந்த உண்மையை அறிவுறுத்தினான். புனித ஜெரோம், மரியாளின் நிலையான கன்னிமையில் வைத்துள்ள சர்ச்சின் பாரம்பரிய விசுவாசத்தால் தூண்டப்பட்டு, ஹெல்விடியஸுக்கு எதிராக ஒரு துண்டுப்பிரதியை எழுதினான் (கி.பி. 383) அதில் அவன் ஒரு விளக்கத்தைத் தோற்றுவித்தான் . . . அது இன்னும் கத்தோலிக்க அறிஞர்களுக்குள் நடப்பில் இருந்துவருகிறது.”
மாற்கு 3:31-35, கத்.பை.: “அத்தருணத்திலே அவருடைய தாயாரும் சகோதரரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைத்துவரும்படி அவரிடத்தில் ஆளனுப்பினார்கள். அப்பொழுது ஜனக்கூட்டம் அவரைச் சுற்றி உட்கார்ந்திருக்க, அவர்கள் அவரை நோக்கி: இதோ உம்முடைய தாயாரும் சகோதரரும் வெளியே நின்று, உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவரோ அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் தாயாரும் என் சகோதரரும் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே; ஏனெனில் சர்வேசுரனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவன் எவனோ, அவனே என் சகோதரனும் என் சகோதரியும் தாயுமாயிருக்கிறான் என்று திருவுளம்பற்றினார்.” (இங்கே இயேசுவின் மாம்சப்படியான சகோதரருக்கும் அவருடைய ஆவிக்குரிய சகோதரரான அவருடைய சீஷருக்குமிடையே தெளிவான வேறுபாடு செய்யப்பட்டது. இயேசுவின் தாயைக் குறிப்பிட்டது அது சொல்வதிலிருந்து வேறு ஏதோ பொருள்கொள்வதாக ஒருவரும் விவாதிக்கிறதில்லை. அப்படியானால், அவருடைய சகோதரர்கள் என்பது அவருடைய மாம்சப்பிரகாரமான சகோதரரையல்ல, ஒருவேளை பெற்றோரின் உடன்பிறந்தார் பிள்ளைகளான சகோதரரைக் குறிக்கலாமென விவாதிப்பது பொருத்தமாயிருக்கிறதா? சகோதரரையல்லாமல் உறவினரைக் கருதுகையில், வேறுபட்ட கிரேக்கச் சொல் [சிக்கினான்] லூக்கா 21:16-ல் பயன்படுத்தியிருக்கிறது.)
மரியாள் கடவுளின் தாயா?
வரவிருந்த அற்புதமான பிறப்பைப்பற்றி தேவதூதன் மரியாளுக்குச் செய்தியறிவித்தபோது அவளுடைய குமாரன் கடவுளாயிருப்பானென சொல்லவில்லை. அவன் சொன்னதாவது: “இதோ உமது உதரத்தில் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்; அவருக்கு யேசு என்னும் நாமஞ் சூட்டுவீர். அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய சுதன் என்னப்படுவார்; . . . உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவ சுதன் என்னப்படுவார்.”—லூக்கா 1:31-35, கத்.பை.; தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.
எபி. 2:14, 17, கத்.பை.: “ஆகையால், பிள்ளைகள் மாம்சமும், இரத்தமும் உடையவர்களாயிருப்பதால், அவரும் [இயேசுவும்] அவர்களைப்போலவே மாம்சத்துக்கும் இரத்தத்துக்கும் பங்காளியானார். . . . சகலத்திலும் தம்முடைய சகோதரர்களுக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது.” (அவர் கடவுள்-மனிதனாக இருந்திருந்தால், “சகலத்திலும் தம்முடைய சகோதரர்களுக்கு ஒப்பாக” இருந்திருப்பாரா?)
நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா சொல்வதாவது: “இரண்டு நிலைமைகள் நிறைவேற்றப்பட்டால் மரியாள் உண்மையில் தெய்வத்தாயாக இருக்கிறாள்: அவள் உண்மையில் இயேசுவின் தாயாக இருப்பதும் இயேசு உண்மையில் தெய்வமாக இருப்பதும்.” (1967, புத். X, பக். 21) மரியாள் இயேசுவின் தாய் என்று பைபிளில் சொல்லியிருக்கிறது, ஆனால் இயேசு கடவுளா? பைபிள் எழுதி முடித்து வெகு காலத்துக்குப் பின் 4-ம் நூற்றாண்டில், சர்ச் திரித்துவத்தைப் பற்றிய அதன் கூற்றை முறைப்படுத்தியது. (நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா, 1967, புத். XIV, பக். 295; பக்கம் 405-ல் “திரித்துவம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.) அந்தச் சமயத்தில் நைஸீன் விசுவாசப்பிரமாணத்தில் சர்ச் இயேசு கிறிஸ்துவைக் “கடவுளே” என பேசியது. அதன்பின், பொ.ச. 431-ல் எபேசுவின் ஆலோசனைசபையில், மரியாள் தியோடோகாஸ் ஆக இருப்பதாய்ச் சர்ச் அறிவித்தது, இதன் பொருள் “தெய்வத்தைப் பெற்றவள்” அல்லது “தெய்வத்தின் தாய்,” என்பதாகும். எனினும், அந்தச் சொற்றொடரோ எண்ணமோ பைபிளின் எந்த மொழிபெயர்ப்பின் மூலவாக்கியத்திலும் காணப்படுகிறதில்லை. (பக்கங்கள் 212-216-ல், “இயேசு கிறிஸ்து” என்பதன்கீழ்ப் பாருங்கள்.)
மரியாளைத்தானே அவள் தாய் கர்ப்பந்தரித்தபோது முதல் பாவத்திலிருந்து விடுதலையானவளாகக் கருத்தரித்தாளா?
நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967, புத். VII, பக். 378-381) இந்த நம்பிக்கையின் தொடக்கத்தைக் குறித்துப் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “ . . . இந்தப் பாவமற்றக் கருத்தரிப்பு வேத எழுத்துக்களில் விளக்கமாய்க் கற்பிக்கப்படுகிறதில்லை . . . மிகப் பூர்வ சர்ச் பிதாக்கள் மரியாளைப் பரிசுத்தமானவளாகக் கருதினர் ஆனால் முற்றிலும் பாவமற்றவளாக அல்ல. . . . இந்த நம்பிக்கை விசுவாசத்தின் காரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டதன் ஒரு திட்டவட்டமான தேதியைக் கொடுக்க முடியாது, ஆனால் 8-ம் அல்லது 9-ம் நூற்றாண்டுக்குள் அது பொதுவாய் ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. . . . [1854-ல் போப் பயஸ் IX இந்தக் கோட்பாட்டைத் தொகுத்துரைத்தார்] ‘இது மகா திருவார்ந்த கன்னி மரியாள் கருத்தரிக்கப்பட்ட அந்த முதல் நொடியிலிருந்தே அந்த மூலப் பாவத்தின் எல்லாக் கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டாள் என்று வலியுறுத்துகிறது.’” இந்த நம்பிக்கையை வாட்டிகன் II (1962-1965) உறுதிசெய்தது.—வாட்டிகன் II-ன் பத்திரங்கள் (நியு யார்க், 1966), W. M. அபட், S.J., பக். 88.
பைபிளில்தானே பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “இவ்வண்ணமாக ஒரே மனிதனாலே [ஆதாமால்] பாவமும், பாவத்தினாலே மரணமும், இவ்வுலகத்தில் எப்படிப் பிரவேசித்ததோ, அப்படியே அந்த ஒரு மனிதனாலே சகலரும் பாவிகளானபடியினாலே, சாவும் சகல மனிதருக்குள்ளும் பாய்ந்தது.” (உரோமர் 5:12, கத்.பை.; தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) இது மரியாளையும் உட்படுத்துகிறதா? இயேசு பிறந்து 40 நாட்களுக்குப் பின், மரியாள், மோசயின் நியாயப்பிரமாணக் கட்டளையின்படி, தீட்டிலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கு, எருசலேமிலிருந்த ஆலயத்தில் பாவநிவாரண பலியைச் செலுத்தினாளென பைபிளில் அறிவித்திருக்கிறது. அவளும் ஆதாமிலிருந்து பாவத்தையும் அபூரணத்தையும் சுதந்தரித்திருந்தாள்.—லூக்கா 2:22-24; லேவி. 12:1-8.
மரியாள் தன் மாம்ச உடலுடன் பரலோகத்துக்கு ஏறிச் சென்றாளா?
இந்தக் கோட்பாட்டைக் கத்தோலிக்க விசுவாசத்தின் அதிகாரப்பூர்வக் கட்டுரையாக்கின போப் பயஸ் XII 1950-ல் செய்த பொது-அறிவிப்பின் பேரில் குறிப்புக்கூறி, நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967, புத். I, பக். 972) சொல்வதாவது: “இந்த விண்ணேற்புக்கு பைபிளில் தெளிவான குறிப்பு எதுவுமில்லை, எனினும் வேத எழுத்துக்களே இந்தச் சத்தியத்தின் முடிவான ஆதாரமென, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக் கட்டளையில் போப் வற்புறுத்துகிறார்.”
பைபிளில்தானே பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “மாம்சமும், இரத்தமும், சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிக்கவுமாட்டாது.” (1 கொரி. 15:50, கத்.பை.) “தேவன் ஆவியாயிருக்கிறார்,” என்று இயேசு சொன்னார். இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டபோது அவர் மறுபடியும் ஆவியானார், இப்பொழுது “உயிர்ப்பிக்கிற ஆவி”யாக இருக்கிறார். தேவதூதர்களும் ஆவிகளே. (யோவான் 4:24; 1 கொரி. 15:45; எபி. 1:13, 14) அதைக் காத்துப் பேணுவதற்கு பூமியில் மாம்சப்பிரகாரமான சூழ்நிலைமைகள் தேவைப்படுகிற உடலில் எவராவது பரலோக வாழ்க்கையை அடைவாரென்று சொல்வதற்கு வேதப்பூர்வமான ஆதாரம் எங்கேயுள்ளது? (பக்கங்கள் 334-336-ல், “உயிர்த்தெழுதல்” என்பதன்கீழ்ப் பாருங்கள்.)
கடவுளிடம் பரிந்துபேசுபவளென மரியாளை நோக்கி ஜெபங்களைச் செலுத்துவது சரியா?
இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “நீங்கள் இவ்வாறு பிரார்த்திப்பீர்களாக: பரமண்டலங்களிலேயிருக்கிற எங்கள் பிதாவே, . . . ” அவர் மேலும் சொன்னதாவது: “வழியும், சத்தியமும், ஜீவனும் நானே, என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை. . . . என் நாமத்தினாலே நீங்கள் ஏதேனும் என்னைக் கேட்பீர்களாகில் நான் அதைச் செய்தருளுவேன்.”—மத். 6:9; யோவன் 14:6, 14, கத்.பை.; தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.
பெண்மையின் அனுபவங்களில் பங்குகொண்ட ஒருவர்மூலம் ஜெபங்கள் செலுத்தப்பட்டால் எந்த அளவில் அவை புரிந்துகொண்டு இரக்கத்துடன் ஏற்கப்படுமோ அந்த அளவான முறையில் இயேசு கிறிஸ்துவின்மூலம் பிதாவிடம் செலுத்தப்படும் ஜெபங்கள் ஏற்கப்படுமா? பிதாவைக் குறித்து, பைபிளில் நமக்குப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நமது உருவம் இன்னதென்று அவருக்குத் தெரியும்; நாம் மண்ணே என்று நினைவுகூருகிறார்.” அவர் “உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்.” (சங். 103:13, 14; யாத். 34:6, தி.மொ.) கிறிஸ்துவைக் குறித்துப் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: “நமக்கு உள்ள குருப்பிரசாதியானவர் நம்முடைய பலவீனங்களில் நமக்கு இரங்கமாட்டாதவர் அல்ல. ஆனால் பாவம் நீங்கலாக மற்ற எவ்விதத்திலும் அவர் நமக்கு ஒத்தவராய்ப் பரிசோதிக்கப்பட்டவராமே. ஆதலால் நாம் இரக்கம் பெறும்படிக்கும், அவசிய சமயத்துக்குக் கிருபையைக் கண்டடையும்படிக்கும் அவருடைய கிருபைச் சிம்மாசனத்தை நம்பிக்கையோடு அண்டிப்போவோமாக.”—எபி. 4:15, 16, கத்.பை.
மரியாளின் சிலைகளை வணங்குவது பைபிள் கிறிஸ்தவத்துக்கு ஒத்திசைவாய் இருக்கிறதா?
இந்தப் பழக்கத்தை வாட்டிகன் II (1962-1965) திட்டவட்டமாய் ஊக்கமூட்டியது. “இந்த மதக் கோட்பாட்டு முறையை, முக்கியமாய் இந்தத் திருவார்ந்த கன்னியின் பொதுவழிபாட்டு முறையைத் தாராளமாய் ஆதரித்து வளர்க்கவேண்டுமென இந்த மகா திரு குருமார் பேரவை . . . சர்ச்சின் புத்திரர் யாவருக்கும் அறிவுறுத்துகிறது. அவளிடம் பக்திக்குரிய பயிற்சிகளையும் ஆசாரங்களையும் நூற்றாண்டுகளின் போக்கில் சர்ச்சின் போதக அதிகாரத்தால் சிபாரிசு செய்யப்பட்ட மதிப்புடையவையாய் வைத்துப் பாராட்டவேண்டுமெனவும், கிறிஸ்துவின், திருவார்ந்த கன்னியின், மற்றும் பரிசுத்தவான்களின் சிலைகளுக்கு வணக்கஞ்செலுத்துவதைக் குறித்துப் பூர்வ காலங்களில் கொடுக்கப்பட்ட கட்டளைகளையும் மதப்பற்றார்வத்துடன் கைக்கொள்ள வேண்டுமெனவும் இது கட்டளையிடுகிறது.”—வாட்டிகன் II-ன் பத்திரங்கள், பக். 94, 95.
பைபிளின் விடையைக் காண, பக்கங்கள் 183-187-ல் “சிலைகள்” என்பதன்கீழ்ப் பாருங்கள்.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் மரியாள் முக்கியமாய்க் கனப்படுத்தப்பட்டாளா?
அப்போஸ்தலனாகிய பேதுரு தேவாவியால் ஏவப்பட்ட தன் எழுத்துக்களில் அவளைக் குறிப்பிடவேயில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் தேவாவியால் ஏவப்பட்ட தன்னுடைய நிருபங்களில் அவளுடைய பெயரைப் பயன்படுத்தவில்லை ஆனால் அவளைக் குறித்து “ஸ்திரீ” என்று மாத்திரமே பேசினான்.—கலா. 4:5, கத்.பை.
தன் தாயைக் குறிப்பிடுகையில் இயேசுதாமே என்ன முன்மாதிரியை வைத்தார்?
அருளப்பர் [யோவான்] 2:3, 4, கத்.பை.: “அப்பொழுது [கானாவில் ஒரு கலியாண விருந்தில்] திராட்ச ரசம் அவர்களுக்குக் குறைவாய்ப் போனதினாலே, யேசுநாதருடைய தாயார் அவரை நோக்கி: அவர்களுக்கு ரசமில்லை என்றாள். அதற்கு யேசுநாதர்: ஸ்திரீயே எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்குத் திருவுளம்பற்றினார்.” (இயேசு சிறு பிள்ளையாயிருந்தபோது தன் தாய்க்கும் தன் வளர்ப்புத் தந்தைக்கும் கீழ்ப்படிந்திருந்தார். ஆனால் இப்பொழுது அவர் வளர்ந்து வயதடைந்துவிட்டதால் மரியாளின் கட்டளையை அன்பாக ஆனால் உறுதியாக மறுத்தார். அவள் மனத்தாழ்மையாய் அந்தத் திருத்தத்தை ஏற்றாள்.)
லூக்கா 11:27, 28, கத்.பை.: “அவர் [இயேசு] இவைகளை வசனிக்கையில் சம்பவித்ததேதெனில், ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி: உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றாள். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக் கேட்டு, அதை அனுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம்பற்றினார்.” (தன் தாய்க்குத் தனிப்பட்ட கனம் செலுத்துவது தகுந்ததாயிருந்தால் அவ்வாறு செய்ய இயேசுவுக்கு இது நிச்சயமாகவே சிறந்த வாய்ப்பாயிருந்திருக்கும். அவர் அவ்வாறு செய்யவில்லை.)
மரியாளை வணங்குவதன் சரித்திரப்பூர்வ தொடக்கங்கள் யாவை?
கத்தோலிக்கக் குரு ஆன்ட்ரு கிரீலே சொல்வதாவது: “மேற்கத்திய உலகத்தின் சரித்திரத்தில் மரியாள் மிக அதிக வல்லமைவாய்ந்த மதச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறாள் . . . மரியாளின் சின்னம் கிறிஸ்தவத்தைத் தாய்த் தெய்வதைகளைக்கொண்ட பூர்வ மதங்களோடு நேரடியாய் இணைக்கிறது.”—போப்புகளை உண்டாக்குவது 1978 (அ.ஐ.மா., 1979), பக். 227.
மரியாள் தெய்வத்தாய் என்ற போதகம் உறுதிசெய்யப்பட்ட இடம் கவனிப்புக்குரியதாயிருக்கிறது. “431-ல் தியோடோக்கோஸின் நெடுமாடக்கோயில் மண்டபத்தில் எபேசு ஆலோசனை சபை கூடினது. நகரத்தின் மற்ற எல்லாவிடத்தைப் பார்க்கிலும் அந்த இடமே அர்டமிஸ், அல்லது ரோமர் அவளை அழைத்தபடி டயானாவுக்கு வணக்க வழிபாடு செலுத்தும் இழிமுறக்குப் பேர்போனது, அங்கேயே அவளுடைய சிலை வானத்திலிருந்து விழுந்ததாகச் சொல்லப்பட்டது, கி.மு. 330 முதற்கொண்டு மாக்னா மாட்டருக்கு அர்ப்பணஞ்செய்யப்பட்ட அந்தப் பெரிய கோயிலின் நிழலின்கீழ், பாரம்பரியத்தின்படி, மரியாளின் தற்காலிக உறைவிடம் அடங்கியிருந்தது, இங்கே ‘தெய்வத்தைப் பெற்றவள்’ என்ற பட்டப்பெயரைக் கடைப்பிடிப்பது மிக எளிதே.”—தாய் தெய்வத்தின் வழிபாட்டு முறை (நியு யார்க், 1959), E. O. ஜேம்ஸ், பக். 207.
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘கன்னி மரியாளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘இயேசு கிறிஸ்துவின் தாய் கன்னியாயிருந்தாளென பரிசுத்த வேத எழுத்துக்கள் தெளிவாய்க் கூறுகின்றன, நாங்கள் அதை நம்புகிறோம். கடவுளே அவருடைய தகப்பன். பிறந்த பிள்ளை, தேவதூதன் மரியாளுக்குச் சொன்னபடி, உண்மையில் கடவுளுடைய குமாரன். (லூக்கா 1:35)’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘இயேசு அம்முறையில் பிறக்கவேண்டியது ஏன் அவ்வளவு முக்கியமென நீங்கள் எப்பொழுதாவது வியந்து சிந்தித்திருக்கிறீர்களா? . . . பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலைசெய்யக்கூடிய பொருத்தமான மீட்பின் கிரயத்தை அம்முறையிலேயே அளிக்கமுடியும்.—1 தீமோ. 2:5, 6; தேவைப்பட்டால் யோவன் 3:16.’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘ஆம், நம்பிக்கையுண்டு. அவளைப் பற்றிப் பரிசுத்த வேத எழுத்துக்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாங்கள் நம்புகிறோம், கன்னியாயிருக்கையில் அவள் இயேசுவைப் பெற்றாளெனவே அவை திட்டவட்டமாய்ச் சொல்கின்றன. மரியாளைப்பற்றியும் அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைப்பற்றியும் அவை நமக்குச் சொல்லும் இருதயத்தைக் கவரும் மற்றக் காரியங்களையும் நான் காண்கிறேன். (பக்கங்கள் 254, 255-ல் உள்ளக் குறிப்புகளையும் பயன்படுத்துங்கள்.)’
‘நீங்கள் கன்னி மரியாளை நம்புவதில்லை’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘ஒரு கன்னியே கடவுளுடைய குமாரனைப் பெற்றாளென்று நம்பாத ஆட்கள் இருக்கின்றனரென்பதை நான் உணருகிறேன். ஆனால் நாங்கள் அதை உண்மையில் நம்புகிறோம். (நம்முடைய புத்தகங்கள் ஒன்றில் இந்தக் காரியத்தை விவாதிக்கும் பகுதிக்குத் திறந்து வீட்டுக்காரருக்குக் காட்டுங்கள்.)’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘ஆனால் நாம் இரட்சிப்படைய வேண்டுமெனில் இன்னுமதிகமான ஏதாவது தேவைப்படுகிறதா? . . . இயேசு ஜெபத்தில் தம்முடைய பிதாவிடம் சொன்னதைக் கவனியுங்கள். (யோவான் 17:3)’