அதிகாரம் 28
இயேசுவின் சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?
மத்தேயு 9:14-17 மாற்கு 2:18-22 லூக்கா 5:33-39
விரதம் இருப்பதைப் பற்றி யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள்
கி.பி. 30-ஆம் வருஷம் நடந்த பஸ்கா பண்டிகையில் இயேசு கலந்துகொண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். பண்டிகை முடிந்து கொஞ்ச நாட்களிலேயே யோவான் ஸ்நானகர் சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடைய சீஷர்கள் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் யோவான் சிறையில் தள்ளப்பட்ட பிறகு, அவருடைய எல்லா சீஷர்களும் இயேசுவைப் பின்பற்றவில்லை.
இப்போது, கி.பி. 31-ஆம் வருஷத்தின் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகப்போகிறது. யோவானின் சீஷர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் தவறாமல் விரதம் இருக்கிறோம்; ஆனால், உங்களுடைய சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?” என்று கேட்கிறார்கள். (மத்தேயு 9:14) விரதம் இருப்பதைப் பரிசேயர்கள் மத சடங்காக செய்துவருகிறார்கள். இந்த விஷயத்தை இயேசு பிற்பாடு சொன்ன உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். தன்னை நீதிமானாக நினைத்துக்கொண்ட ஒரு பரிசேயன், ‘கடவுளே, இவர்களைப் போல நான் இல்லாததற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நான் வாரத்தில் இரண்டு தடவை விரதம் இருக்கிறேன்’ என்று ஜெபம் செய்ததாக இயேசு அதில் சொன்னார். (லூக்கா 18:11, 12) யோவானின் சீஷர்களும் சம்பிரதாயமாக விரதம் இருந்திருக்கலாம். அல்லது யோவான் சிறையில் இருப்பதால், அந்தத் துக்கத்தில் அவர்கள் விரதம் இருந்திருக்கலாம். அதனால், இயேசுவின் சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை என்று அவர்கள் யோசிக்கிறார்கள். ஒருவேளை, யோவான் சிறையில் இருப்பதால் தங்களோடு சேர்ந்து இயேசுவின் சீஷர்களும் துக்கப்பட்டு விரதம் இருப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.
இயேசு அவர்களிடம், “மணமகன் தங்களோடு இருக்கும்வரை அவருடைய நண்பர்கள் துக்கப்பட வேண்டிய அவசியம் இல்லைதானே? ஆனால், மணமகன் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் வரும், அப்போது அவர்கள் துக்கப்பட்டு விரதம் இருப்பார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 9:15.
யோவான்கூட இயேசுவை மணமகன் என்று சொல்லியிருக்கிறார். (யோவான் 3:28, 29) இயேசு உயிரோடு இருக்கும்வரை அவருடைய சீஷர்கள் விரதம் இருக்கவில்லை. அவர் இறந்த பிறகு அவர்கள் துக்கப்படுவார்கள். சாப்பிட இஷ்டம் இல்லாமல் வேதனையோடு இருப்பார்கள். ஆனால், அவர் உயிரோடு எழுந்த பிறகு அவர்களுடைய துக்கமெல்லாம் பறந்துவிடும்! அதற்குப் பிறகு, அவர்கள் துக்கப்பட்டு விரதம் இருக்க வேண்டியிருக்காது.
பிறகு, இயேசு அவர்களிடம் இரண்டு உதாரணங்களைச் சொல்கிறார். “புதிய துணியைப் பழைய உடையில் வைத்து யாருமே ஒட்டுப்போட மாட்டார்கள். ஏனென்றால், புதிய துணி சுருங்கும்போது, பழைய உடையின் கிழிசல் இன்னும் பெரிதாகிவிடும். அதேபோல், பழைய தோல் பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்; அப்படி ஊற்றி வைத்தால், அந்தப் பைகள் வெடித்துவிடும்; அப்போது திராட்சமதுவும் கொட்டிவிடும், பைகளும் நாசமாகிவிடும். அதனால்தான், புதிய திராட்சமதுவைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைப்பார்கள்; அப்போது இரண்டுமே வீணாகாமல் இருக்கும்” என்கிறார். (மத்தேயு 9:16, 17) இதற்கு என்ன அர்த்தம்?
சம்பிரதாயமாக விரதம் இருப்பது போன்ற பழைய யூத மத பழக்கவழக்கங்களை இயேசுவின் சீஷர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது; இந்த விஷயத்தை யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு இந்த உதாரணங்களைச் சொல்கிறார். பழைய, நைந்துபோன வழிபாட்டு முறையில் ஒட்டுப்போட்டு, அதை இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்க வைப்பதற்காக இயேசு வரவில்லை. சீக்கிரத்திலேயே, அந்த வழிபாட்டு முறை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித்தள்ளப்படும். மனித பாரம்பரியங்களைக் கொண்ட யூத மதத்தைப் பின்பற்றும்படி இயேசு சொல்லவில்லை. பழைய உடையில் புதிய துணியை வைத்து ஒட்டுப்போடவோ, விறைப்பாக இருக்கிற பழைய தோல் பையில் புதிய திராட்சமதுவை ஊற்றிவைக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை.