இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
யார் உண்மையில் சந்தோஷ முள்ளவர்கள்?
எல்லாரும் சந்தோஷமாக இருக்க விரும்புகின்றனர். இதை உணர்ந்தவராக இயேசு மலைப்பிரசங்கத்தைத் தொடங்குகையில் யார் உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள் என்பதை விவரிக்கிறார். இது உடனடியாக அங்கிருந்த பெருங்கூட்டத்தினரின் கவனத்தைக் கவரக்கூடியதாக இருந்தது என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இருந்தபோதிலும், அவருடைய துவக்க வார்த்தைகள் முரண்பாடாக இருப்பதாக பலர் நினைக்கலாம்.
தன்னுடைய சீஷர்களை நோக்கி இயேசு இப்படியாக சொல்லத் துவங்குகிறார்: “தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். ஜனங்கள் உங்களைப் பகைக்கும்போது நீங்கள் பாக்கியவான்கள் . . . அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.”
இயேசுவின் துவக்க உரையைப் பற்றிய லூக்காவின் பதிவு இதுவாக இருக்கிறது. ஆனால் சாந்தகுணமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள் அனைவரும் பாக்கியவான்கள் என்று இயேசு கூறியதும் மத்தேயுவின் பதிவில் காணப்படுகிறது. இவர்களெல்லாம் சந்தோஷமுள்ளவர்கள் என்று இயேசு கூறுவதற்குக் காரணம் இவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்பவர்களாக, இரக்கத்தைப் பெறக்கூடியவர்களாக, கடவுளைக் காணக்கூடியவர்களாக, கடவுளுடைய குமாரர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இங்கு இயேசு சந்தோஷமுள்ளவர்கள் என்று குறிப்பிடும்போது வெறுமென கேலிசெய்யும் போது ஒருவர் உல்லாசமாக அல்லது களிப்பாக இருப்பதைக் குறிப்பிடவில்லை. உண்மையான சந்தோஷம் ஆழமானது, திருப்தியான மனநிலையைக் கொண்டிருக்கும், வாழ்க்கையில் போதுமென்ற மனநிலையையும், நிறைவேற்றத்தையும் கொண்டிருக்கும்.
ஆவிக்குரிய தேவைகளை உணர்ந்து, பாவமான நிலையைக் குறித்து வருந்தி, மேலும் கடவுளைத் தெரிந்து கொண்டு அவரை வணங்கக்கூடிய ஆட்களே உண்மையில் சந்தோஷமுள்ள ஆட்கள் என்று இயேசு காண்பித்தார். அவர்கள் வெறுக்கப்பட்டாலோ அல்லது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் துன்புறுத்தப்பட்டாலோ சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பிரியப்படுத்துகிறார்கள் என்றும் அதற்கான பரிசாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அறிந்திருக்கிறார்கள்.
இருந்த போதிலும், இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்ட அநேக ஆட்களைப் போலவே இன்றும் கூட சில ஆட்கள் செழுமையாக இருப்பதும், இன்பங்களை அனுபவிப்பதுமே ஒரு ஆளை சந்தோஷமுள்ளவனாக்கும் என்று நம்புகின்றனர். இயேசு இதை அறிந்திருந்தார். கேட்டுக் கொண்டிருந்த அநேக ஆட்கள் ஆச்சரியப்படும் வகையில் வித்தியாசமான காரியத்தை அவர் கூறுகிறார்:
“ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது. திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள். எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.”
இயேசு எதை அர்த்தப்படுத்துகிறார்? ஐசுவரியத்தைக் கொண்டிருத்தல், சிரித்துக்கொண்டு இன்பங்களைத் தொடருதல், மற்றும் மனிதரின் கைகொட்டுதலோடுகூடிய பாராட்டுதலை அனுபவித்தல் ஆகிய இவையெல்லம் விரும்புகிறவர்களுக்கு ஐயோ என்று ஏன் சொல்லப்படுகிறது? ஏனென்றால் இதை ஒரு மனிதன் கொண்டிருந்து பூரிப்படையும்போது, கடவுளுக்குச் சேவை செய்வதால் வரும் உண்மையான சந்தோஷம் அவனுடைய வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கும். அதே சமயத்தில், வெறுமென தரித்திரராக, பசியாக, அழக்கூடிய நிலைதானே ஒரு மனிதனை சந்தோஷமுள்ளவனாக்கும் என்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை. இருந்தபோதிலும், எப்பொழுதுமே, இப்படிப்பட்ட தீமைகளை அனுபவிக்கும் ஆட்கள் தானே இயேசுவின் போதனைகளுக்கு செவி சாய்ப்பவர்களாகவும் அதன் மூலம் உண்மையான சந்தோஷத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
அடுத்து தன்னுடைய சீஷர்களைக்குறித்து இயேசு கூறுகிறார்: “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.” உண்மையாகவே அவர்கள் சொல்லர்த்தமாக உப்பாக இருக்கிறார்கள் என்று அவர் அர்த்தப்படுத்தவில்லை. மாறாக உப்பு கெடாமல் பாதுகாக்கும் பொருளாக இருக்கிறது. யெகோவாவின் ஆலயத்தில் பலிபீடத்திற்கு அருகில் உப்பைக் குவித்து வைத்திருப்பார்கள், பலி செலுத்தும் ஆசாரியன் பலிகளின் மீது இந்த உப்பை போடக்கூடியவனாக இருப்பான்.
ஜனங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் செல்வாக்கை இயேசுவின் சீஷர்கள் அவர்கள் மேல் கொண்டிருப்பதானது அவர்கள் “பூமிக்கு உப்பாயிருப்பதை” அர்த்தப்படுத்துகிறது. நிச்சயமாகவே அவர்கள் சொல்லக்கூடிய செய்திக்குச் சரியாக பிரதிபலிப்பவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதாக இருக்கும்! இது இப்படிப்பட்ட ஆட்களின் வாழ்க்கையில் நிலையான தன்மை, விசுவாசம், உண்மைத் தன்மை போன்ற குணாதிசயங்களைக் கொண்டுவரும் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான அழிவிலிருந்து பாதுகாக்கக்கூடியதாக இருக்கும்.
“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று சீஷர்களிடம் இயேசு கூறுகிறார். விளக்கை கூடைக்கு அடியில் வைக்கமாட்டார்கள், மாறாக விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். எனவே இயேசு கூறுகிறார்: “உங்கள் வெளிச்சம் மனிதர் முன் பிரகாசிக்கக்கடவது.” இயேசுவின் சீஷர்கள் தங்களுடைய வெளியரங்கமான சாட்சி கொடுக்கும் வேலையின் மூலமும் மற்றும் வேதாகம நியமங்களுக்கிசைவான நடத்தைப் போக்கை உடைய ஒளி தரும் முன்மாதிரிகளாக செயல்படுவதன் மூலமும் இதைச் செய்கிறார்கள். லூக்கா 6:20-26; மத்தேயு 5:3-16.
◆ யார் உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள், ஏன்?
◆ யாருக்கு ஐயோ, ஏன்?
◆ எவ்வாறு இயேசுவின் சீஷர்கள் “பூமிக்கு உப்பாகவும்” “உலகத்திற்கு வெளிச்சமாகவும்” இருக்க முடியும்? (w86 10⁄1)