-
கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
13 கடவுளுடைய நீதியில் கலந்திருக்கும் இரக்கத்தன்மையை நாம் புரிந்துகொண்டால், நமக்கு உண்மையிலேயே சம்பந்தமில்லாத காரியங்களில் அல்லது முக்கியத்துவம் இல்லாத காரியங்களில் மற்றவர்களை அவசரப்பட்டு நியாயந்தீர்க்க மாட்டோம். “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்” என இயேசு மலைப்பிரசங்கத்தில் எச்சரித்தார். (மத்தேயு 7:1) “மற்றவர்களைக் கண்டனம் செய்வதை நிறுத்துங்கள், அப்போது நீங்களும் கண்டனம் செய்யப்பட மாட்டீர்கள்” என இயேசு தொடர்ந்து கூறியதாக லூக்காவின் பதிவு காட்டுகிறது.a (லூக்கா 6:37) பாவமுள்ள மனிதர்கள் நியாயந்தீர்க்கும் மனப்போக்கு உள்ளவர்கள் என்று அறிந்திருந்ததை இயேசு காட்டினார். அவருக்கு செவிகொடுத்தவர்களில் எவருக்கேனும் மற்றவர்களை கொடூரமாக நியாயந்தீர்க்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டொழிக்க வேண்டியிருந்தது.
14. என்ன காரணங்களால் நாம் மற்றவர்களை ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்த’ வேண்டும்?
14 நாம் ஏன் மற்றவர்களை ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்த’ வேண்டும்? ஒன்று, நம் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது. “சட்டத்தைக் கொடுப்பவராகவும் நீதிபதியாகவும் இருப்பவர் ஒருவர்தான்,” அதாவது யெகோவாவே என சீஷனாகிய யாக்கோபு நமக்கு நினைவுபடுத்துகிறார். ஆகவே “மற்றவர்களை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?” என யாக்கோபு குறிப்பாக கேட்கிறார். (யாக்கோபு 4:12; ரோமர் 14:1-4) அதோடு, பாவத்தன்மையினால் நாம் எளிதில் தவறான முடிவுகளுக்கு வரலாம். தப்பெண்ணம், அநியாயமாக நடத்தப்பட்டுவிட்ட உணர்வு, பொறாமை, சுயநீதி போன்ற அநேக மனப்பான்மைகளும் உள்நோக்கங்களும் சக மனிதர்களை நாம் காணும் விதத்தை உருக்குலைக்கலாம். நமக்கு மற்ற பல வரம்புகளும் உண்டு; இவற்றைக் குறித்து சிந்திப்பது, மற்றவர்களிடம் அவசரப்பட்டு குறைகாணாதபடி நம்மை தடுக்கும். நம்மால் இதயங்களில் உள்ளவற்றை அறிய முடியாது; மற்றவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகள் அனைத்தையும்கூட நம்மால் அறிய முடியாது. அப்படியிருக்க, சக விசுவாசிகளின் உள்நோக்கங்களை தவறென தீர்க்க அல்லது கடவுளின் சேவையில் அவர்கள் எடுக்கும் முயற்சிகளை குறைகூற நாம் யார்? நம் சகோதர சகோதரிகளின் தவறுகளையே பார்த்துக்கொண்டிராமல் யெகோவாவைப் போல் அவர்களது நல்ல குணங்களை காண்பது எவ்வளவு மேலானது!
15. கடவுளுடைய வணக்கத்தாரிடையே எப்படிப்பட்ட பேச்சிற்கும் நடத்தைக்கும் இடமில்லை, ஏன்?
15 நம் குடும்ப அங்கத்தினர்களை நியாயந்தீர்ப்பதை பற்றி என்ன சொல்லலாம்? வருத்தகரமாக இன்றைய உலகில் சமாதானம் நிலவ வேண்டிய இடமாகிய வீட்டில்தான் மிகக் கொடூரமான நியாயத்தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. கொடுமைக்கார கணவர்கள், மனைவிகள், அல்லது பெற்றோர்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு சரமாரியான திட்டை அல்லது அடி உதையை “தண்டனையாக” வழங்குவதைக் குறித்து கேள்விப்படுவது இன்று சர்வசாதாரணம். ஆனால் கடவுளுடைய வணக்கத்தாரிடையே தூஷண வார்த்தைகளுக்கும் குத்தலான பேச்சிற்கும் கொடுமைக்கும் இடமே இல்லை. (எபேசியர் 4:29, 31; 5:33; 6:4) ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்’ என்றும் ‘கண்டனம் செய்வதை நிறுத்துங்கள்’ என்றும் இயேசு கொடுத்த அறிவுரை குடும்பத்திற்கும் பொருந்தும். நீதியைக் கடைப்பிடிப்பதில், யெகோவா நம்மை நடத்துவதுபோல் நாம் மற்றவர்களை நடத்துவது உட்பட்டிருக்கிறது என்பதை நினைவுகூருங்கள். நம் கடவுள் நம்மை ஒருபோதும் கொடுமையாக அல்லது கொடூரமாக நடத்துவதில்லை. மாறாக, தம்மை நேசிப்பவர்கள்மீது அவர் “கனிவான பாசத்தைக்” காட்டுகிறார். (யாக்கோபு 5:11) நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!
-
-
கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
a “நியாயந்தீர்க்காதீர்கள்” என்றும் “கண்டனம் செய்யாதீர்கள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பதங்கள், ‘குற்றவாளிகளென்று தீர்க்க ஆரம்பிக்காதீர்கள்,’ ‘கண்டனம் செய்ய ஆரம்பிக்காதீர்கள்’ என்பதைத்தான் அர்த்தப்படுத்தும். ஆனால் மூல மொழியிலோ பைபிள் எழுத்தாளர்கள் ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்’ என்றும் ‘கண்டனம் செய்வதை நிறுத்துங்கள்’ என்றும் தொடர் நிகழ்காலத்தில் குறிப்பிட்டார்கள். ஆகவே அந்த செயல்கள் அப்போது நடந்துகொண்டு இருந்தன, ஆனால் அவற்றை நிறுத்த வேண்டியிருந்தது.
-