இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
இரக்கத்தில் ஒரு பாடம்
இயேசு சமீபத்தில் ஒரு விதவையின் மகனை உயிர்த்தெழுப்பியிருந்த நாயீன் என்னும் ஊரில் அல்லது ஒருவேளை அருகிலுள்ள ஒரு பட்டணத்தில்தானே இன்னும் இருக்கிறார். சீமோன் என்ற பெயர் கொண்ட ஒரு பரிசேயன் இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க கிரியைகளைச் செய்து வருகிறவரை அருகில் பார்க்க விரும்புகிறான். ஆகவே அவன் இயேசுவை தன்னுடன் போஜனம் பண்ணும்படியாக அழைக்கிறான்.
அந்தச் சமயத்தில் அங்கு கூடியிருப்பவர்களுக்கு ஊழியஞ்செய்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக கருதி, இயேசு ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுவதற்கான அழைப்புகளை ஏற்றுக் கொண்டது போலவே இதையும் ஏற்றுக் கொள்கிறார். என்றாலும் சீமோனுடைய வீட்டுக்குள் அவர் பிரவேசிக்கையில், பொதுவாக விருந்தினர்களுக்குக் காண்பிக்கப்படும் கனிவான கவனிப்பு இயேசுவுக்கு அங்கு காட்டப்படவில்லை.
பாதரட்சைகள் அணிந்திருந்த பாதங்கள், புழுதிப் படிந்த கலிலேய சாலைகளில் பிரயாணப்பட்டு வந்ததன் காரணமாக உஷ்ணமாகி அழுக்காகிவிடுகின்றன. விருந்தினரின் பாதங்களை குளிர்ந்த நீரினால் கழுவுதல் பழக்கமான உபசரிப்புச் செயலாக இருக்கிறது. ஆனால் இயேசு அங்கு வந்து சேரும்போது அவருடைய பாதங்கள் கழுவப்படவோ அல்லது பொதுவான சமுதாய ஆசார முறையாக மகிழ்ந்து வரவேற்பதற்கு அடையாளமான முத்தத்தை அவர் பெற்றுக் கொள்ளவோ இல்லை. வழக்கமான உபசார எண்ணெய் அவருடைய முடிக்கு அளிக்கப்படவில்லை.
போஜனம் பண்ணுகையில், விருந்தினர் மேசையில் சாய்ந்துக் கொண்டிருக்கும்போது அழைக்கப்படாத ஒரு ஸ்திரீ மெதுவாக அறைக்குள் பிரவேசிக்கிறாள். அவள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை வாழ்பவளாக நகரத்தில் பேர்போனவளாக இருக்கிறாள். ‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற அனைவரையும் இளைப்பாறுதலுக்காக தம்மிடம் வருமாறு’ இயேசு கொடுத்த அழைப்பு உட்பட அவருடைய போதகங்களை அவள் கேட்டிருக்க வேண்டும். அவள் பார்த்தவற்றாலும் கேட்டவற்றாலும் வெகுவாக தூண்டப்பட்டவளாக, இப்பொழுது இயேசுவை அவள் தேடிக் கண்டுபிடித்து விட்டாள்.
அந்த ஸ்திரீ மேசை அருகே இயேசுவுக்குப் பின்னாக வந்து அவருடைய பாதத்தண்டையில் முழங்கால் படியிடுகிறாள். அவளுடைய கண்ணீர் அவருடைய பாதங்களை நனைக்க, அவள் அவைகளை தன் தலைமயிரினால் துடைக்கிறாள். அவள் தன்னுடைய ஜாடியிலிருந்து பரிமளத்தைலத்தையும்கூட எடுத்து அவள் அவருடைய பாதங்களை மென்மையாக முத்தமிட்டு அவைகளின் மேல் தைலத்தை ஊற்றுகிறாள். சீமோன் வெறுப்போடு இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். “இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே” என்று அவன் யோசிக்கிறான்.
அவனுடைய யோசனையை உணர்ந்தவராய் இயேசு சொல்கிறார்: “சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும்.”
“போதகரே, சொல்லும்!” என்று பதிலளிக்கிறான் அவன்.
“ஒருவனிடத்தில் இரண்டு பேர் கடன்பட்டிருந்தார்கள்” என்பதாக இயேசு ஆரம்பிக்கிறார். “ஒருவன் ஐந்நூறு வெள்ளிக் காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல்” என்கிறார்.
“எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன்” என்று மேலோட்டமாகப் பார்க்கையில் பொருத்தமற்றதாக தோன்றிய கேள்விக்கு அக்கறையில்லாமல் பதிலளிக்கிறான்.
“சரியாய் நிதானித்தாய்” என்று இயேசு சொல்கிறார். பின்னர் ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி அவர் சொல்கிறார்: “இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல் என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமள தைலம் பூசினாள்.”
இவ்விதமாக அந்த ஸ்திரீ தன்னுடைய கடந்த கால ஒழுக்கங் கெட்ட நடத்தையிலிருந்து இருதயப் பூர்வமாக மனந்திரும்பியதற்கு அத்தாட்சியைக் கொடுத்தாள். ஆகவே இயேசு இவ்விதமாக முடிக்கிறார்: “ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன், இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது. இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்.”
இயேசு எந்தவகையிலும் ஒழுக்கமற்ற வாழ்க்கையை பொறுத்துக் கொள்ளவோ அல்லது கவனியாமல்விடவோ இல்லை. மாறாக, வாழ்க்கையில் தவறுகளைச் செய்துவிட்டு ஆனால் பின்னர் இவைகளுக்காக வருந்துவதைக் காண்பித்து உதவிக்காக கிறிஸ்துவினிடமாக வருகிறவர்களுக்கு அவருடைய இரக்கமான புரிந்துகொள்ளுதலையே இச்சம்பவம் காண்பிக்கிறது. மெய்யான இளைப்பாறுதலை அந்த ஸ்திரீக்கு அளிப்பவராய் இயேசு சொல்வதாவது: “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது. . . . உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ.” லூக்கா 7:36–50; மத்தேயு 11:28–30.
◆ விருந்துக்கு அழைத்தவனாகிய சீமோனால் இயேசு எவ்விதமாக வரவேற்கப்படுகிறார்?
◆ இயேசுவைத் தேடுவது யார்? ஏன்?
◆ இயேசு என்ன உவமையைக் கொடுக்கிறார்? அதை அவர் எவ்விதமாகப் பொருத்துகிறார்? (w87 2⁄1)