கடவுளைப் பிரியப்படுத்துகிற கொடுத்தல்
நெருங்கிய நண்பர்கள் பலருடன் சேர்ந்து இயேசுவும் அவருடைய சீடர்களும் பெத்தானியாவில் சுவைமிகு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்; அந்தக் கூட்டத்தில் மரியாளும் மார்த்தாளும் சமீபத்தில் உயிர்த்தெழுப்பப்பட்ட லாசருவும் இருந்தனர். சுமார் கால் கிலோ எடையுடைய விலையுயர்ந்த தைலத்தை இயேசுவின் பாதத்தில் மரியாள் பூசினாள்; அதைக் கண்டு யூதாஸ் காரியோத்து கோபமடைந்து, “இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு [சுமார் ஒரு வருட சம்பளத்துக்குச் சமம்] விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன” என்று ஆட்சேபணை தெரிவித்தான். உடனே மற்றவர்களும் இவனுடன் சேர்ந்து முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.—யோவான் 12:1-6; மாற்கு 14:3-5.
ஆனால் இயேசு இவ்வாறு பதிலளித்தார்: ‘அவளை விடுங்கள்; . . . ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள், நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.’ (மாற்கு 14:6-9, பொது மொழிபெயர்ப்பு) அருட்கொடைகள் வழங்குவது நல்ல பண்பு மட்டுமல்ல, பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்யும் பண்பாகவும் இருக்கிறது என யூத மதத் தலைவர்கள் கற்பித்தனர். ஆனால், கடவுளைப் பிரியப்படுத்துகிற கொடுத்தல் என்பது ஏழை எளியோருக்கு தர்மம் செய்வதோடு மட்டுமே நின்றுவிடாது என்பதை இயேசு தெளிவாக்கினார்.
ஆரம்ப கால கிறிஸ்தவ சபையில் நன்கொடை அளிக்கப்பட்ட விதத்தை சிறிது கண்ணோட்டமிட்டு, நாம் எவ்வாறு அக்கறை காட்டலாம், கொடுப்பதன் மூலம் கடவுளையும் பிரியப்படுத்தலாம் என்பதற்கு சில நடைமுறையான வழிகளை ஆராயலாம். மிகச் சிறந்த பலனைத் தரும் ஒருவித ஒப்பற்ற கொடுத்தல் எது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
‘தர்மம் செய்யுங்கள்’
‘தர்மம் செய்யும்படி’ இயேசு பல சந்தர்ப்பங்களில் தமது சீடர்களை உற்சாகப்படுத்தினார். (லூக்கா 12:33, பொ.மொ.) ஆனாலும், கடவுளுக்குப் புகழ் சேர்ப்பதற்குப் பதிலாக கொடுப்பவருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் பகட்டாக கொடுப்பதைக் குறித்து இயேசு எச்சரித்தார். “நீ தர்மஞ் செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” என்றார். (மத்தேயு 6:1-4) ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இந்தப் புத்திமதிக்கு செவிசாய்த்து, அக்காலத்து மதப் பிரமுகர்களைப் போல பகட்டாக தானதர்மம் செய்யாமல், கஷ்டப்படுகிறவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் சேவை செய்தார்கள் அல்லது நன்கொடைகள் வழங்கினார்கள்.
உதாரணமாக, மகதலேனா மரியாளும், யோவன்னாளும், சூசன்னாளும், இன்னும் சிலரும், ‘தங்கள் ஆஸ்திகளை’ உபயோகித்து ஆரவாரமின்றி இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் ஊழியம் செய்தனர் என லூக்கா 8:1-3-ல் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவும் அப்போஸ்தலர்களும் வறியவர்களாக இல்லாதபோதிலும், தங்களுடைய முயற்சிகளை முழுமையாக ஊழியத்திற்கே அர்ப்பணிப்பதற்காக தங்களுடைய தொழிலை விட்டுவிட்டிருந்தார்கள். (மத்தேயு 4:18-22; லூக்கா 5:27, 28) இவ்வாறாக, கடவுள் தந்த வேலையை செய்து முடிக்க அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தப் பெண்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். அவர்களுடைய தானதர்ம செயல்களைப் பற்றி வருங்கால சந்ததியார் அனைவரும் வாசிப்பதற்காக அவற்றை பைபிளில் பதிவு செய்து வைப்பதன் மூலம் கடவுள் அவர்களை அங்கீகரித்தார்.—நீதிமொழிகள் 19:17; எபிரெயர் 6:10.
‘நற்கிரியைகளையும் தர்மங்களையும் மிகுதியாய்ச் செய்துவந்த’ இரக்கமுள்ள மற்றொரு பெண்மணி தொற்காள். கடற்கரை பட்டணமாகிய யோப்பாவில் வாழ்ந்து கொண்டு ஏழை விதவைகளுக்கு ஆடைகள் தயாரித்துக் கொடுத்தாள். துணிமணிகளுக்குரிய எல்லா செலவையும் பார்த்துக்கொண்டாளா அல்லது தன்னுடைய உழைப்பை மட்டும் தந்தாளா என்பது நமக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும், அவளுடைய நல்ல செயல் மற்றவர்களையும் கடவுளையும் பிரியப்படுத்தியது; கடவுள் அவளுடைய நற்செயலுக்குப் பலனளித்தார்.—அப்போஸ்தலர் 9:36-41.
சரியான உள்நோக்கமே முக்கியம்
கொடுப்பதற்கு இவர்களைத் தூண்டியது எது? உதவிக்காக கெஞ்சி மன்றாடியவர்களைப் பார்த்து வெறுமனே இரக்கப்பட்டதால் அவர்கள் கொடுக்கவில்லை. வறுமையிலோ துன்பத்திலோ வியாதியிலோ அல்லது வேறெதாவது கஷ்டங்களிலோ அவதியுறுகிறவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உதவ தங்களால் இயன்றதை செய்ய வேண்டுமென்ற தார்மீக கடமையை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். (நீதிமொழிகள் 3:27, 28; யாக்கோபு 2:15, 16) இதுவே கடவுளை பிரியப்படுத்துகிற கொடுத்தல். இது முக்கியமாக கடவுள் மீதுள்ள ஆழ்ந்த அன்பினாலும், அவருடைய இரக்கம் மற்றும் தாராள குணத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆசையாலும் தூண்டப்படுகிறது.—மத்தேயு 5:44, 45; யாக்கோபு 1:17.
பின்வருமாறு கேட்டபோது கொடுத்தலின் இன்றியமையாத அம்சத்தை அப்போஸ்தலன் யோவான் சிறப்பித்துக் காட்டினார்: “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?” (1 யோவான் 3:17) பதில் தெளிவாக இருக்கிறது. கடவுள் மீதுள்ள அன்பு தர்மம் செய்வதற்கு மக்களைத் தூண்டுகிறது. தம்மைப் போலவே தாராள குணத்தைக் காட்டுகிறவர்களை கடவுள் உயர்வாக மதித்து பலனளிக்கிறார். (நீதிமொழிகள் 22:9; 2 கொரிந்தியர் 9:6-11) இன்று இத்தகைய தாராள குணத்தை நாம் பார்க்கிறோமா? யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையில் சமீபத்தில் நடந்ததை கவனியுங்கள்.
வயதான கிறிஸ்தவ பெண்மணியின் வீட்டில் நிறைய ரிப்பேர் வேலைகள் செய்ய வேண்டியிருந்தது. சொந்தபந்தம் யாருமின்றி அவர் தனியாக வாழ்ந்து வந்தார். பல வருடங்களாகவே, அவருடைய வீட்டில் கிறிஸ்தவ கூட்டங்கள் நடைபெற்று வந்தன; அவருடைய அழைப்புக்கு இணங்கி வீட்டிற்கு வருவோருக்கு அடிக்கடி விருந்து கொடுப்பதும் அவரது வழக்கம். (அப்போஸ்தலர் 16:14, 15, 40) அவருடைய கஷ்டத்தைக் கண்டு, அவருக்கு உதவி செய்ய சபை அங்கத்தினர்கள் திரண்டு வந்தனர். சிலர் நன்கொடைகள் வழங்கினர், வேறு சிலரோ தங்களுடைய உடல் உழைப்பை தந்தனர். சில வாரயிறுதி நாட்களில், புதிய கூரை அமைத்தனர், புதிய குளியலறையையும் கட்டினர்; முதல் தளம் முழுவதையும் காரை பூசி பெயிண்ட் அடித்தனர், சமையலறையில் புது ஷெல்ஃப்களும் அமைத்தனர். இது அந்தப் பெண்மணியின் தேவையைப் பூர்த்தி செய்தது மட்டுமின்றி, சபையார் மேலும் நெருங்கி வருவதற்கும் உதவியது; இது உண்மையான கிறிஸ்தவ கொடுத்தலுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது, அக்கம்பக்கத்தாருடைய மனதையும் கவர்ந்தது.
தனிப்பட்ட விதமாக பிறருக்கு உதவ பல்வேறு வழிகள் இருக்கின்றன. தகப்பனில்லாத பையனுடன் அல்லது பிள்ளையுடன் நேரம் செலவழிக்க நம்மால் முடியுமா? நமக்குத் தெரிந்த வயதான விதவைக்காக கடைக்குப் போய்வரவோ அல்லது உடைகளைத் தைத்துக் கொடுக்கவோ முடியுமா? அதிக பண வசதியில்லாத ஒருவருக்கு ஒருவேளை உணவு சமைத்துக் கொடுக்க முடியுமா அல்லது அவருடைய செலவுகளுக்கு சிறு தொகை கொடுத்து உதவ முடியுமா? உதவி செய்வதற்கு நாம் பெரும் செல்வந்தர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.” (2 கொரிந்தியர் 8:12) ஆனால் தனிப்பட்ட விதத்தில் நேரடியாக கொடுக்கும் இத்தகைய கொடுத்தலை மட்டுமே கடவுள் ஆசீர்வதிக்கிறாரா? இல்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட நிவாரண உதவியைப் பற்றியென்ன?
சிலசமயங்களில் தனிப்பட்ட முயற்சிகள் போதாது. சொல்லப்போனால், ஏழைகளுக்கு கொடுப்பதற்காக இயேசுவும் அப்போஸ்தலர்களும் பொது நிதி ஒன்றை வைத்திருந்தார்கள்; ஊழியத்தில் சந்தித்த ஆர்வமான ஆட்களின் நன்கொடைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். (யோவான் 12:6; 13:29) இது போலவே, முதல் நூற்றாண்டு சபைகளும் தேவை எழுந்தபோது ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியில் பெரிய அளவில் நிவாரண உதவி அளிப்பதற்கு நன்கொடைகள் பெற்றுக்கொண்டன.—அப்போஸ்தலர் 2:44, 45; 6:1-3; 1 தீமோத்தேயு 5:9, 10.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை சுமார் பொ.ச. 55-ல் உருவானது. யூதேயாவிலிருந்த சபைகள் வறுமையில் வீழ்ந்துவிட்டன. ஒருவேளை சமீபத்தில் ஏற்பட்டிருந்த பெரும் பஞ்சத்தின் காரணமாக இத்தகைய நிலைமை உருவாகியிருக்கலாம். (அப்போஸ்தலர் 11:27-30) எப்பொழுதும் ஏழைகள் மீது அக்கறை காட்டிய அப்போஸ்தலன் பவுல், தூரத்தில் மக்கெதோனியா வரையிருந்த சபைகளின் உதவியை நாடினார். அவர் தனிப்பட்ட விதமாக நிதியை திரட்டுவதற்கு ஏற்பாடு செய்து, அதை பகிர்ந்தளிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற மனிதரை பயன்படுத்தினார். (1 கொரிந்தியர் 16:1-4; கலாத்தியர் 2:10) இந்த வேலையில் ஈடுபட்ட இவரோ மற்றவர்களோ தங்களுடைய சேவைக்காக சம்பளம் வாங்கவில்லை.—2 கொரிந்தியர் 8:20, 21.
பேரழிவுகள் தாக்கும்போது உதவிக்கரம் நீட்டுவதற்கு இன்றைய யெகோவாவின் சாட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். உதாரணமாக, 2001-ம் ஆண்டு கோடையில், அ.ஐ.மா.-வில் டெக்ஸஸிலுள்ள ஹெளஸ்டனில் கடும் புயல் வீசியதால் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாட்சிகளுடைய 723 வீடுகள் சேதமடைந்தன, அவற்றில் பெரும்பாலானவை மிக மோசமான நிலையில் இருந்தன. தனிப்பட்டவர்களுடைய தேவைகளை மதிப்பிட்டு நிவாரண நிதிகளை பகிர்ந்தளிப்பதற்குத் தகுதிவாய்ந்த கிறிஸ்தவ மூப்பர்கள் அடங்கிய இடருதவி நிவாரணக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது; இவ்வாறு, உள்ளூர் சாட்சிகள் அந்த சூழ்நிலைமையை சமாளிப்பதற்கும் தங்களுடைய வீடுகளை பழுதுபார்ப்பதற்கும் தேவையான உதவியை பெற்றனர். அண்டை சபைகளிலிருந்து வந்த தொண்டர்கள் எல்லா வேலைகளையும் மனப்பூர்வமாக செய்தனர். கிடைத்த உதவிக்கு ஒரு சாட்சி மிகவும் நன்றியுள்ளவராக இருந்ததால், வீட்டை பழுது பார்ப்பதற்காக இன்ஷூரன்ஸ் கம்பெனியிலிருந்து தனக்கு பணம் கிடைத்தபோது, தேவையிலிருந்த மற்றவர்களுக்கு உதவலாம் என்று எண்ணி அதை உடனடியாக நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட அறக்கொடை சம்பந்தமாக, நாம் விவேகமாய் நடந்துகொள்ள வேண்டும். நம்மிடம் பலர் வந்து நிதியுதவி கேட்கையில் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நாம் மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். சில தர்ம ஸ்தாபனங்களில், நிர்வாக வேலைகளுக்காக அல்லது நிதி திரட்டும் விளம்பரங்களுக்காக டாம்பீகமாக செலவுகள் செய்யப்படுகின்றன; அதனால் வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு சிறு தொகையே குறிப்பிட்ட நோக்கத்திற்குப் போய்ச் சேருகிறது. நீதிமொழிகள் 14:15 இவ்வாறு சொல்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” ஆகவே உண்மைகளை கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பது ஞானமான செயல்.
மிகுந்த பயன்தரும் கொடுத்தல்
அறக்கொடையைவிட அதிக பலன்தரும் ஒரு வகையான கொடுத்தல் இருக்கிறது. செல்வச் சீமானாக விளங்கிய இளம் அதிபர் ஒருவர் நித்திய ஜீவனைப் பெற தான் என்ன செய்ய வேண்டுமென இயேசுவிடம் கேட்டபோது அவர் அதை மறைமுகமாய் குறிப்பிட்டார். “உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். (மத்தேயு 19:16-22) வெறுமனே, ‘தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது ஜீவன் கிடைக்கும்’ என்று இயேசு சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, “என்னைப் பின்பற்றி வா” என்று கூறினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், தர்ம செயல்களெல்லாம் பாராட்டுக்குரியவை, பயனுள்ளவைதான் என்றாலும், ஒரு கிறிஸ்தவ சீஷன் அதைவிட அதிகத்தை செய்ய வேண்டும்.
மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவி செய்வதே இயேசுவின் முக்கிய அக்கறையாக இருந்தது. தமது மரணத்திற்கு சற்று முன்னர் பிலாத்துவிடம் அவர் இவ்வாறு கூறினார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37) ஏழைகளுக்கு உதவி செய்வது, வியாதியஸ்தரை குணப்படுத்துவது, பசியால் வாடியவர்களுக்கு உணவளிப்பது போன்றவற்றில் இயேசு முன்நின்று செயல்பட்ட போதிலும், பிரசங்கிப்பதற்கே தமது சீடர்களை முக்கியமாக பயிற்றுவித்தார். (மத்தேயு 10:7, 8) சொல்லப்போனால், அவர்களுக்கு கடைசியாக அறிவுரைகள் தந்தபோது, ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்ற கட்டளையையும் கொடுத்தார்.—மத்தேயு 28:19, 20.
பிரசங்கம் செய்வது உலகத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவிடாதுதான். இருந்தாலும், எல்லா வகையான மக்களுக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பது கடவுளை மகிமைப்படுத்துகிறது; ஏனென்றால் பிரசங்கிப்பது கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறது, கடவுளுடைய செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள் நித்திய நன்மைகளைப் பெற வழியையும் திறக்கிறது. (யோவான் 17:3; 1 தீமோத்தேயு 2:3, 4) அடுத்த தடவை யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்திக்கும்போது ஏன் அவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்கக் கூடாது? அவர்கள் உங்களுக்கு ஆன்மீக அன்பளிப்பை கொண்டு வருகிறார்கள். உங்களுக்குக் கொடுப்பதற்கு இதுவே மிகச் சிறந்த வழி என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
[பக்கம் 6-ன் படங்கள்]
நாம் கரிசனையுள்ளவர்கள் என்பதை காட்ட அநேக வழிகள் உள்ளன
[பக்கம் 7-ன் படம்]
நற்செய்தியை அறிவிப்பது கடவுளை பிரியப்படுத்துகிறது, நித்திய நன்மைகளுக்கும் வழியை திறக்கிறது