‘என் உபதேசத்தில் நிலைத்திருங்கள்’
“நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” —யோவான் 8:31.
1. (அ) இயேசு பரலோகத்திற்குத் திரும்பிப் போனபோது இப்பூமியில் எதை விட்டுச் சென்றார்? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்திக்க உள்ளோம்?
கிறிஸ்தவத்தை ஸ்தாபித்த இயேசு கிறிஸ்து பரலோகத்திற்குத் திரும்பிப் போனபோது, புத்தகங்களையோ நினைவுச் சின்னங்களையோ செல்வங்களையோ இப்பூமியில் விட்டுச் செல்லவில்லை. ஆனால் சீஷர்களை விட்டுச்சென்றார்; சீஷர்களாவதற்கு தேவைப்படும் கட்டளைகளையும் கொடுத்துச் சென்றார். சீஷராக விரும்புகிறவர்களுக்குத் தேவைப்படும் மூன்று முக்கிய காரியங்களை யோவான் சுவிசேஷத்தில் இயேசு குறிப்பிட்டதை நாம் காண்கிறோம். இந்தத் தேவைகள் யாவை? அவற்றைப் பூர்த்தி செய்ய நாம் என்ன செய்யலாம்? நாம் தனிப்பட்டவர்களாக இன்று கிறிஸ்துவின் சீஷர்களாவதற்கு தகுதி பெற்றிருப்பதை எப்படி உறுதிசெய்து கொள்ளலாம்?a
2. யோவான் சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, ஒரு சீஷனாக இருப்பதற்கு தேவைப்படும் முக்கியமான காரியம் என்ன?
2 இயேசு தாம் மரிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு எருசலேமுக்குச் சென்றார். அங்கே ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படும் கூடாரப் பண்டிகைக்கு வந்திருந்த திரளான ஜனங்களுக்குப் பிரசங்கித்தார். இதனால் பண்டிகை முடிவதற்குள் பாதியிலேயே ‘ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்தார்கள்.’ ஆனாலும், இயேசு தொடர்ந்து பிரசங்கித்தார். ஆகவே பண்டிகையின் கடைசி நாளன்று மறுபடியும் “அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.” (யோவான் 7:10, 14, 31, 37; 8:30) அந்தச் சமயத்தில், இயேசு புதிய விசுவாசிகளைப் பார்த்து, சீஷராக இருப்பதற்கு தேவைப்படும் ஒரு முக்கியமான காரியத்தை அவர்களுக்குச் சொன்னார். இதை அப்போஸ்தலன் யோவான் பதிவு செய்திருக்கிறார்: ‘நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்.’—யோவான் 8:31.
3. ஒருவர் இயேசுவின் ‘உபதேசத்தில் நிலைத்திருக்க’ எந்த குணம் தேவை?
3 இந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் புதிய விசுவாசிகளுக்கு போதிய விசுவாசம் இல்லை என இயேசு குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய உண்மையுள்ள சீஷர்களாகும் வாய்ப்பு அவர்களுக்குமுன் இருந்தது என்றே சுட்டிக்காட்டினார். ஆனால் அதற்காக அவருடைய உபதேசத்தில் அவர்கள் நிலைத்திருக்கவும் சகித்திருக்கவும் வேண்டியிருந்தது. அவருடைய உபதேசத்தை அவர்கள் ஏற்றிருந்தார்கள், ஆனால் இப்போது அதில் தொடர்ந்து நிலைத்திருப்பது அவசியம். (யோவான் 4:34; எபிரெயர் 3:14) ஆம், தமது சீஷர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான ஒரு குணம் சகிப்புத்தன்மை என்று இயேசு கருதியதால்தான் கடைசியாக அப்போஸ்தலர்களிடம் பேசுகையில், இருமுறை பின்வருமாறு அவர்களை உந்துவித்தார். யோவான் சுவிசேஷத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது: “[“தொடர்ந்து,” NW] என்னைப் பின்பற்றிவா.” (யோவான் 21:19, 22) ஆரம்ப கால கிறிஸ்தவர்களில் பலர் இதையே செய்தார்கள். (2 யோவான் 4) சகித்திருக்க அவர்களுக்கு எது உதவியது?
4. ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு சகித்திருக்க எது உதவியது?
4 சுமார் எழுபது ஆண்டுகளாக கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷனாக இருந்த அப்போஸ்தலன் யோவான் முக்கியமான ஒரு காரியத்தைச் சுட்டிக்காட்டினார். உண்மையுள்ள கிறிஸ்தவர்களிடம் ‘நீங்கள் பலவான்களாயிருக்கிறீர்கள், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறது, நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்தீர்கள்’ என்று கூறி பாராட்டினார். அந்தக் கிறிஸ்தவ சீஷர்கள் சகித்திருந்தார்கள், கடவுளுடைய வார்த்தையில் நிலைத்திருந்தார்கள். அதற்குக் காரணம், தேவனுடைய வசனம் அவர்களில் நிலைத்திருந்ததுதான். அவர்கள் அதை இருதயப்பூர்வமாய் போற்றினார்கள். (1 யோவான் 2:14, 24) அதேவிதமாகவே இன்று ‘முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதற்கு’ தேவனுடைய வார்த்தை நம்மில் நிலைத்திருக்கிறதா என்பதை நாம் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டும். (மத்தேயு 24:13) அதை நாம் எப்படி செய்யலாம்? இயேசு சொன்ன ஒரு உவமை இதற்கு பதிலளிக்கிறது.
‘வசனத்தைக் கேட்டு’
5. (அ) இயேசு சொன்ன உவமைகள் ஒன்றில் எந்த வகையான நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன? (ஆ) இயேசுவின் உவமையிலுள்ள விதையும் நிலமும் எவற்றை சித்தரித்துக் காட்டுகின்றன?
5 விதைக்கிறவனைப் பற்றிய ஒரு உவமையை இயேசு சொன்னார்; அது மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (மத்தேயு 13:1-9, 18-23; மாற்கு 4:1-9, 14-20; லூக்கா 8:4-8, 11-15) ஒரே மாதிரியான விதை பலதரப்பட்ட நிலங்களில் விழுந்தபின், ஒவ்வொன்றும் வித்தியாசமான விளைவுகளைத் தருவதே இந்த உவமையின் முக்கிய அம்சம் என்பதை இந்தப் பதிவுகளை வாசிக்கையில் நீங்கள் கவனிப்பீர்கள். முதல் வகை நிலம் கடினமாகவும், இரண்டாவது வகை ஆழம் குறைந்ததாகவும் மூன்றாவது வகை முட்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. நான்காவது வகை நிலமோ மற்ற மூன்றைப் போல் இல்லாமல், ‘நல்ல நிலமாக’ உள்ளது. இயேசு இதற்கு கொடுத்த விளக்கத்தின்படி, விதை என்பது கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ராஜ்ய செய்தி; நிலம் என்பது வித்தியாசமான மனநிலைகளைக் கொண்ட மக்கள். பலவிதமான நிலங்களைக் குறிக்கும் மக்களுக்கிடையே சில பொதுவான அம்சங்கள் இருந்தாலும், நல்ல நிலத்தால் சித்தரித்துக் காட்டப்படும் ஆட்களிடம் மட்டுமே மற்றவர்களிடமில்லாத ஒரு சிறந்த அம்சம் காணப்படுகிறது.
6. (அ) இயேசுவின் உவமையில் நான்காவது வகை நிலம் எவ்வாறு மற்ற மூன்றிலிருந்து வித்தியாசமாக உள்ளது, அது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) கிறிஸ்துவின் சீஷர்களாக சகித்திருப்பதற்கு எது மிகவும் அவசியம்?
6 நான்கு வித்தியாசமான சந்தர்ப்பங்களிலும் மக்கள் ‘வசனத்தைக் கேட்கிறார்கள்’ என்று லூக்கா 8:12-15-லுள்ள பதிவு காட்டுகிறது. ஆனால் ‘உண்மையான நல்ல இருதயமுள்ளவர்கள்’ ‘வசனத்தைக் கேட்பதோடு’ நின்றுவிடுவதில்லை. அதை “இருதயத்திலே பதிய வைத்து பொறுமையுடனே பலன் தருகிறார்கள்.” நல்ல நிலம் மென்மையாகவும் ஆழமாகவும் இருப்பதால் விதையின் வேர் ஆழமாக கீழே செல்ல முடிகிறது. இதன் விளைவாக, விதை முளைத்து கனி கொடுக்கிறது. (லூக்கா 8:8) அதேவிதமாகவே, நல்ல இருதயமுள்ளவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்கிறார்கள், போற்றுகிறார்கள், கிரகித்துக் கொள்கிறார்கள். (ரோமர் 10:10; 2 தீமோத்தேயு 2:7) ஆம், தேவனுடைய வார்த்தை அவர்களுக்குள் நிலைத்திருக்கிறது. இதனால் அவர்கள் சகிப்புத் தன்மையோடிருந்து கனி கொடுக்கிறார்கள். ஆகவே கிறிஸ்துவின் சீஷர்களாக சகித்திருப்பதற்கு கடவுளுடைய வார்த்தையை ஆழமாக, இருதயப்பூர்வமாக போற்றுவது மிகவும் அவசியம். (1 தீமோத்தேயு 4:15) ஆனால் கடவுளுடைய வார்த்தைக்கு இப்படிப்பட்ட இருதயப்பூர்வமான போற்றுதலை நாம் எவ்வாறு வளர்க்கலாம்?
இருதய நிலையும் அர்த்தமுள்ள தியானமும்
7. ஒரு நல்ல இருதயத்தோடு எந்தச் செயல் சம்பந்தப்படுத்தப்படுகிறது?
7 பைபிள் திரும்பத் திரும்ப எந்த செயலை ஒரு நல்ல இருதயத்தோடு சம்பந்தப்படுத்துகிறது என்பதை கவனியுங்கள். ‘நீதிமானின் மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும் [“தியானிக்கும்,” NW].’ (நீதிமொழிகள் 15:28) ‘கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.’ (சங்கீதம் 19:14) “என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.”—சங்கீதம் 49:3.
8. (அ) பைபிளை வாசிக்கையில் எதை தவிர்க்க வேண்டும், ஆனால் எதை செய்ய வேண்டும்? (ஆ) கடவுளுடைய வார்த்தையை ஜெபசிந்தையுடன் தியானிப்பதால் என்ன நன்மைகளைப் பெறலாம்? (‘சத்தியத்தில் உறுதிப்பட்டிருத்தல்’ பெட்டியை சேர்த்துக்கொள்ளவும்.)
8 இந்த பைபிள் எழுத்தாளர்களைப் போலவே நாமும் கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய செயல்களையும் போற்றுதலோடு ஜெபசிந்தையுடன் தியானிப்பது அவசியம். பைபிளையோ பைபிள் பிரசுரங்களையோ வாசிக்கையில், சுற்றுலா பயணிகளைப் போல இருக்கக் கூடாது; அவர்கள் அவசர அவசரமாக ஒவ்வொரு இடமாக சுற்றுவார்கள், ஆனால் பார்க்கும் காட்சிகளையெல்லாம் ரசிக்காமல் வெறுமென படமெடுத்துக் கொண்டிருப்பார்கள். நாம் இப்படி செய்யாமல், பைபிளைப் படிக்கும்போது, நிறுத்தி நிதானமாக அனுபவித்து வாசிக்க வேண்டும், அதாவது அந்தக் காட்சியை அனுபவித்து ரசிக்க வேண்டும்.b வாசித்ததை நாம் அமைதியாக சிந்திக்கையில், கடவுளுடைய வார்த்தை நம்முடைய இருதயத்தில் வேலை செய்யத் தொடங்கும். அது நம் உணர்வுகளைத் தொட்டு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது. நம்முடைய அந்தரங்கமான எண்ணங்களை ஜெபத்தில் கடவுளோடு பகிர்ந்துகொள்ளவும் நம்மைத் தூண்டுகிறது. இதன் விளைவாக யெகோவாவோடு நம்முடைய பந்தம் பலப்படுகிறது, கடவுள் மீது நமக்குள்ள அன்பு, மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து இயேசுவை பின்பற்றிவர நம்மை தூண்டுகிறது. (மத்தேயு 10:22) நாம் கடைசிவரை உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க விரும்பினால், கடவுள் சொல்வதை தியானிப்பது மிக மிக அவசியம்.—லூக்கா 21:19.
9. ராஜ்ய விதையை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு இருப்பதை நாம் எவ்வாறு உறுதிசெய்து கொள்ளலாம்?
9 கடவுளுடைய வார்த்தையாகிய விதையை வளராமல் தடுக்கும் இடையூறுகளைப் பற்றியும் இயேசுவின் உவமை காட்டுகிறது. ஆகவே, உண்மையுள்ள சீஷர்களாக நிலைத்திருப்பதற்கு, (1) உவமையில் சொல்லப்பட்டுள்ள வளமற்ற நிலத்தில் இருக்கும் இடையூறுகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். (2) அவற்றை சரிசெய்ய அல்லது தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான், ராஜ்ய விதையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எப்பொழுதுமே நமக்கு இருக்கும். அதோடு, தொடர்ந்து கனி கொடுப்பதையும் நாம் உறுதிசெய்து கொள்ளலாம்.
“வழியருகே”—கவனம் திசைமாறுகிறது
10. இயேசுவின் உவமையிலுள்ள முதல் வகை நிலத்தை விவரித்து, அதன் பொருளை விளக்கவும்.
10 முதலில் விதைக்கப்பட்ட விதை, “வழியருகே” விழுந்து ‘மிதிபடுகிறது.’ (லூக்கா 8:5) வயல்வெளிக்குப் போகும் வழியருகே ஆள் நடமாட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதால் அங்கே மண் இறுகி இருக்கும். (மாற்கு 2:23) அதேவிதமாகவே, இந்த உலக வேலைகளுக்காக எப்போதும் தங்கள் நேரத்தையும் சக்தியையும் மட்டுக்கு மீறி செலவழிப்பவர்கள் மிதிபட்டு இறுகிப் போகிறார்கள், ஆகவே, இவர்களால் கடவுளுடைய வார்த்தைக்கு இருதயப்பூர்வமான போற்றுதலை வளர்க்க முடியாமல் போகிறது. வசனத்தைக் கேட்கிறார்கள், ஆனால் அதைப் பற்றி ஆழ்ந்து தியானிப்பதில்லை. அதனால் அவர்களின் இருதயம் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருப்பதில்லை. அதன்மீது ஒரு பற்றுதலை வளர்த்துக் கொள்வதற்கு முன்பே, “அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான்.” (லூக்கா 8:12) இதைத் தவிர்க்க முடியுமா?
11. நம்முடைய இருதயம் கடினமான நிலத்தைப் போல் ஆவதை எப்படி தவிர்க்கலாம்?
11 நம் இருதயம் வழியருகே உள்ள பலன் கொடுக்காத நிலத்தைப் போல் கடினமாக இருப்பதை நம்மால் பல வழிகளில் தவிர்க்க முடியும். மிதிபட்டுக் கொண்டே இருக்கும் கடினமான நிலத்தை உழுது, அவ்வழியில் நடமாடும் போக்குவரத்தை வேறு வழியில் திருப்பிவிட்டால், அதை மிருதுவாகவும் விளைநிலமாகவும் மாற்ற முடியும். அதேவிதமாகவே, கடவுளுடைய வார்த்தையைப் படித்து தியானம் செய்வதற்கு நேரமெடுத்துக் கொண்டால், இருதயம் மென்மையான, விளைநிலம் போல ஆகிவிடும். வாழ்க்கையின் தினசரி அலுவல்களில் அளவுக்கு அதிகமாக மூழ்கிவிடாதிருப்பதே முக்கியம். (லூக்கா 12:13-15) அதற்குப் பதிலாக, வாழ்க்கையில் ‘அதிமுக்கியமான காரியங்களுக்கு’ கவனம் செலுத்த நேரமெடுத்துக் கொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.—பிலிப்பியர் 1:9-11, NW.
“கற்பாறையின் மேல்”—பயப்படுதல்
12. இயேசுவின் உவமையில் இரண்டாவது வகை நிலத்தில் முளை உலர்ந்து போவதற்கு உண்மையான காரணம் என்ன?
12 இரண்டாவது வகை நிலத்தில் விதை விழும்போது, முதல் வகை நிலத்தில் இருந்தது போல மேற்பரப்பிலேயே அது இருந்துவிடுவதில்லை. அது வேர்கொண்டு முளைக்கிறது. ஆனால் சூரியன் உதயமாகும்போது முளை சூரிய வெப்பத்தில் தீய்ந்து உலர்ந்து போகிறது. என்றாலும், இதில் முக்கியமான ஒரு விவரத்தை கவனியுங்கள். முளை உலர்ந்து போவதற்கு உண்மையான காரணம் சூரிய வெப்பம் இல்லை. ஏனென்றால் நல்ல நிலத்தில் வளரும் செடியின்மீதும் சூரிய வெளிச்சம் படுகிறது, ஆனால் அது உலர்ந்து போவதில்லை, மாறாக, செழித்து வளரவே செய்கிறது. அப்படியானால் ஏன் இந்த வித்தியாசம்? “மண் ஆழமாயிராததினாலே” “ஈரமில்லாததினால்” இந்த முளை உலர்ந்து போயிற்று என்று இயேசு விளக்கினார். (மத்தேயு 13:5, 6; லூக்கா 8:6) மேற்பரப்பு மண்ணுக்கு கீழேயிருக்கும் “கற்பாறை” அந்த விதை ஆழமாக வேர்விட்டு தண்ணீரை உறிஞ்சுவதற்கும் உறுதியாக நிற்பதற்கும் தடை செய்கிறது. மண் ஆழமில்லாததால் முளையும் உலர்ந்து போகிறது.
13. எவ்வகை ஆட்கள் ஆழமில்லாத நிலத்தைப் போல இருக்கிறார்கள், அவர்கள் அப்படி நடந்துகொள்வதற்கு ஆழமான காரணம் என்ன?
13 உவமையின் இந்தப் பகுதி, ‘சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொண்டு’ “கொஞ்சக் காலமாத்திரம்” இயேசுவை வைராக்கியமாக பின்பற்றும் ஆட்களைக் குறிக்கிறது. (லூக்கா 8:13) சூரிய வெப்பமாகிய “உபத்திரவமும் துன்பமும்” உண்டானவுடனே அவர்கள் மிகவும் பயந்துபோய், தங்கள் சந்தோஷத்தையும் பெலத்தையும் இழந்து, கிறிஸ்துவை பின்பற்றுவதை நிறுத்திவிடுகிறார்கள். (மத்தேயு 13:21) அவர்கள் பயத்துக்கு நிஜமான காரணம் எதிர்ப்பு அல்ல. ஏனென்றால், கிறிஸ்துவின் லட்சக்கணக்கான சீஷர்கள் பல்வேறு உபத்திரவங்களை சகித்துக்கொண்டு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 2:4; 7:5) சிலர் பயந்துபோய் சத்தியத்திலிருந்து விலகிவிடுவதற்கு உண்மையான காரணம், கற்பாறை போன்ற அவர்களுடைய கல் நெஞ்சமே. அது ஆவிக்குரிய காரியங்களை ஆழ்ந்து தியானிக்க அவர்களை விடுவதில்லை. இதன் காரணமாக யெகோவாவிடமும் அவருடைய வார்த்தையிடமும் அவர்களுக்கு இருக்கும் போற்றுதல் ஆழமின்றி பலமில்லாமல் போவதால் அவர்களால் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போகிறது. இந்தப் பின்விளைவுகளை ஒருவர் எவ்வாறு தவிர்க்கலாம்?
14. தன் இருதயம் ஆழமில்லாத நிலத்தைப் போல ஆகிவிடுவதைத் தவிர்க்க ஒருவர் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
14 பாறையைப் போன்ற இடையூறுகளை, அதாவது ஆழமாக பதிந்துவிட்ட கசப்புணர்ச்சி, சுயநலம் அல்லது கற்பாறை போல மறைந்திருக்கும் உணர்ச்சிகள், இவையெல்லாம் இருதயத்தில் குடிகொண்டுவிடாதபடி ஒருவர் நிச்சயப்படுத்திக் கொள்வது அவசியம். இதுபோன்ற தடைகள் ஏற்கெனவே அவருக்கு இருந்தால், கடவுளுடைய வார்த்தையின் வல்லமையால் அவற்றை தகர்த்தெறிந்துவிடலாம். (எரேமியா 23:29; எபேசியர் 4:22; எபிரெயர் 4:12) அதன்பிறகு, அந்த நபர் ஜெபசிந்தையுடன் தியானம் செய்தால் அவர் உள்ளத்திலே வசனம் ஆழமாக ஊன்றிவிடும். (யாக்கோபு 1:21) இதுவே, சோர்வுறும் சமயங்களை சமாளிக்கவும், சோதனைகள் மத்தியில் விசுவாசமாக நிலைத்திருக்க தைரியத்தையும் கொடுக்கும்.
“முள்ளுள்ள இடங்களில்”—இருதயத்தில் பிளவுபடுதல்
15. (அ) இயேசு குறிப்பிட்ட அந்த மூன்றாவது வகை நிலத்துக்கு நாம் ஏன் விசேஷ கவனம் செலுத்த வேண்டும்? (ஆ) காலப்போக்கில் மூன்றாவது வகை நிலத்தில் என்ன நேரிடுகிறது, ஏன்?
15 முள்ளுள்ள இடங்களாக இருக்கும் மூன்றாவது வகை நிலம், சில வழிகளில் நல்ல நிலத்தைப் போலவே இருப்பதால் அதற்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும். நல்ல நிலத்தைப் போலவே, முள்ளுள்ள நிலமும் விதை வேர்விட்டு முளைப்பதை அனுமதிக்கிறது. ஆரம்பத்தில், இந்த இரண்டு நிலங்களிலும் வளரும் புதிய செடியின் வளர்ச்சியில் எந்த வித்தியாசமுமில்லை. ஆனால் காலப்போக்கில், செடியை நெருக்கிப்போடும் ஒரு நிலைமை உருவாகிறது. நல்ல நிலத்தைப் போல் இல்லாமல், இந்த நிலத்தில் முட்கள் அதிகமாக வளர்ந்துவிடுகிறது. இளம் செடி இந்த நிலத்திலிருந்து முளைத்து வெளியே வரும்போது ‘அதோடு கூட வளரும் முட்களோடு’ போட்டி போட வேண்டியுள்ளது. கொஞ்ச காலத்துக்கு, இரண்டு பயிர்களும் ஊட்டச்சத்தையும் வெளிச்சத்தையும் இடத்தையும் பெற போராடுகின்றன, ஆனால் கடைசியாக அந்த முட்கள் செடியை விஞ்சி அதை ‘நெருக்கிப்போட்டு’ விடுகின்றன.—லூக்கா 8:7.
16. (அ) எப்படிப்பட்ட நபர்கள் முள்ளுள்ள நிலத்தைப் போல இருக்கிறார்கள்? (ஆ) மூன்று சுவிசேஷ பதிவுகளின்படி, முட்கள் எதைக் குறிக்கின்றன?—அடிக்குறிப்பைக் காண்க.
16 எந்த மாதிரியான நபர்கள் முள்ளுள்ள நிலத்தைப் போல இருக்கிறார்கள்? இயேசு இவ்வாறு விளக்கம் தருகிறார்: “வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்.” (லூக்கா 8:14) விதைக்கிறவனுடைய விதையும் முட்களும் ஒரே சமயத்தில் வளருவது போலவே, சில ஆட்கள் தேவனுடைய வசனத்துக்கும் ‘பிரபஞ்சத்திற்குரிய சிற்றின்பங்களுக்கும்’ ஒரே சமயத்தில் இடமளிக்க முயற்சி செய்கிறார்கள். கடவுளுடைய வசனத்தின் சத்தியம் அவர்களுடைய இருதயங்களில் விதைக்கப்படுகிறது, ஆனால் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் மற்ற காரியங்கள் அதற்கு போட்டியாக வந்துவிடுகின்றன. அவர்களுடைய அடையாளப்பூர்வ இருதயம் பிளவுபடுகிறது. (லூக்கா 9:57-62) இதனால் கடவுளுடைய வார்த்தையை ஜெபசிந்தையோடு படிப்பதற்கும் அர்த்தமுள்ள வகையில் சிந்திப்பதற்கும் போதுமான அளவு நேரம் கொடுக்காதபடி தடை செய்கிறது. கடவுளுடைய வசனத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள தவறிவிடுகிறார்கள், அதனால் சகித்திருப்பதற்கு தேவையான இருதயப்பூர்வமான போற்றுதல் இல்லாமல் போய்விடுகிறது. படிப்படியாக, ஆவிக்குரிய காரியங்களைவிட உலக காரியங்கள் மேலோங்கி வளர்ந்துவிடுவதால் முழுவதுமாக ‘நெருக்குண்டு போகிறார்கள்.’c முழு இருதயத்தோடு யெகோவாவில் அன்புகூராதிருப்பவர்களுக்கு என்னே ஒரு சோக முடிவு!—மத்தேயு 6:24; 22:37.
17. இயேசுவின் உவமையில் சித்தரிக்கப்பட்டுள்ள அடையாள முட்களால் நெருக்கப்படாதபடிக்கு வாழ்க்கையில் நாம் என்ன தெரிவுகளை செய்ய வேண்டும்?
17 பொருளாதார காரியங்களுக்கு மேலாக ஆவிக்குரிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் இவ்வுலகத்தின் வேதனைகளாலும் இன்பங்களாலும் நெருக்கப்படுவதைத் தவிர்க்கலாம். (மத்தேயு 6:31-33; லூக்கா 21:34-36) பைபிள் வாசிப்பதையும் வாசிப்பதைக் குறித்து சிந்திப்பதையும் நாம் ஒருபோதும் அசட்டை செய்துவிடக் கூடாது. நம்முடைய வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்துக்கொண்டால், கவனத்தை ஒருமுகப்படுத்தி, ஜெபசிந்தையுடன் தியானம் செய்வதற்கு நமக்கு அதிக நேரம் கிடைக்கும். (1 தீமோத்தேயு 6:6-8) கனி கொடுக்கும் செடிக்கு அதிகமான ஊட்டச்சத்தும் வெளிச்சமும் இடமும் கிடைப்பதற்கு முட்களை நிலத்திலிருந்து வேரோடு பிடுங்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாவின் ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறார்கள். 26 வயதுடைய சான்ட்ரா இப்படி சொல்கிறாள்: “சத்தியத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களை நான் எண்ணிப் பார்க்கும்போது, இதற்குச் சமமாக எதையுமே இந்த உலகம் தர முடியாது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன்!”—சங்கீதம் 84:11.
18. நாம் எவ்வாறு கடவுளுடைய வசனத்தில் நிலைத்திருந்து கிறிஸ்தவர்களாக சகித்திருக்கலாம்?
18 அப்படியென்றால் இளைஞரும் முதியோருமாக நாம் அனைவருமே கடவுளுடைய வார்த்தை நம்மில் நிலைத்திருக்கும் வரையில், நாம் கடவுளுடைய வார்த்தையில் நிலைத்திருந்து கிறிஸ்துவின் சீஷர்களாக சகித்திருப்போம். ஆகவே, நம்முடைய அடையாளப்பூர்வ இருதயமாகிய நிலம் கடினமாகவோ ஆழமில்லாமலோ அல்லது நெருக்கப்படாமலோ இல்லாமல், மென்மையாகவும் ஆழமாகவும் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வோமாக. அப்படி செய்தால், கடவுளுடைய வசனத்தை முழுமையாக உட்கிரகித்து “பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிரு”ப்போம்.—லூக்கா 8:15.
[அடிக்குறிப்புகள்]
a இம்மூன்று தேவைகளில் முதலாவதை இந்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம். அடுத்த இரண்டும் பின்வரும் கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படும்.
b உதாரணமாக, நீங்கள் வாசித்து முடித்த பைபிளின் ஒரு பகுதியை ஜெபசிந்தையுடன் தியானிப்பதற்கு உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது யெகோவாவின் ஒரு குணத்தை அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட குணங்களை வெளிப்படுத்துகிறதா? பைபிளின் பொருளோடு இது எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது? இதை என் வாழ்க்கையில் நான் எவ்வாறு பின்பற்றலாம் அல்லது மற்றவர்களுக்கு உதவ இதை எவ்வாறு பயன்படுத்தலாம்?’
c மூன்று சுவிசேஷங்களிலும் உள்ள இயேசுவின் உவமையைப் பற்றிய பதிவுகளில், விதையை நெருக்கிப்போடுவது என்பது இந்த உலகத்தின் வேதனைகளையும் சுகபோகங்களையும் குறிக்கிறது; அவை, “உலகக் கவலைகளும்,” “ஐசுவரியத்தின் மயக்கமும்” ‘மற்ற இச்சைகளும்’ ‘சிற்றின்பங்களும்’ ஆகும்.—மாற்கு 4:18; மத்தேயு 13:22; லூக்கா 8:14; எரேமியா 4:3, 4.
உங்கள் பதில்கள் என்ன?
• நாம் ஏன் ‘இயேசுவின் உபதேசத்தில் நிலைத்திருக்க’ வேண்டும்?
• கடவுளுடைய வசனம் நம் இருதயத்தில் நிலைத்திருக்க நாம் என்ன செய்யலாம்?
• இயேசு குறிப்பிட்ட நான்கு வித்தியாசமான நிலங்கள் என்னென்ன வகையான ஆட்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன?
• கடவுளுடைய வசனத்தை சிந்திப்பதற்கு நாம் எவ்வாறு நேரத்தைக் கண்டடையலாம்?
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
‘சத்தியத்தில் உறுதிப்பட்டிருத்தல்’
நீண்ட காலமாக கிறிஸ்துவின் சீஷர்களாக இருந்து வந்திருக்கும் அநேகர் தாங்கள் ‘சத்தியத்தில் உறுதிப்பட்டிருப்பதை’ தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். (2 பேதுரு 1:12) சகித்திருக்க அவர்களுக்கு எது உதவி செய்கிறது? அவர்களுடைய குறிப்புகள் சிலவற்றை கவனியுங்கள்.
“ஒவ்வொரு நாள் முடிவிலும் பைபிளை வாசித்து ஜெபம் செய்கிறேன். அதற்குப்பின் நான் வாசித்து முடித்ததைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்.”—ஜீன், 1939-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“இத்தனை உன்னதமானவராக இருக்கும் யெகோவா நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை எண்ணிப் பார்ப்பது எனக்கு பாதுகாப்பான உணர்வையும் உண்மையுடன் நிலைத்திருப்பதற்குத் தேவையான பலத்தையும் தருகிறது.”—பெட்ரீஷியா, 1946-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“நல்ல பைபிள் படிப்பு பழக்கங்களைக் கடைப்பிடித்து வருவதாலும், ‘கடவுளுடைய ஆழமான காரியங்களில்’ முழுமையாக ஊன்றியிருப்பதாலும் என்னால் தொடர்ந்து யெகோவாவை சேவிக்க முடிகிறது.”—1 கொரிந்தியர் 2:10; ஆனா, 1939-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“என் இருதயத்தையும் உள்நோக்கங்களையும் ஆராயும் நோக்கத்தோடுதான் நான் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசிக்கிறேன்.”—செல்டா, 1943-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“காலார நடந்து கொண்டே யெகோவாவோடு ஜெபம் செய்கையில் நான் உண்மையில் எவ்வாறு உணருகிறேன் என்பதை அவரிடம் தெரியப்படுத்தும் சமயங்களே எனக்கு ரொம்பப் பிடித்த சமயங்கள்.”—ரால்ஃப், 1947-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“தினவசனத்தையும் பைபிளையும் வாசித்துத்தான் என் நாளை ஆரம்பிக்கிறேன். இதனால் அந்த நாள் முழுவதும் யோசிப்பதற்கு எனக்கு புதிய விஷயங்கள் கிடைக்கின்றன.”—மேரி, 1935-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“ஒரு பைபிள் புத்தகத்தை வசனம் வசனமாக விளக்கும் புத்தகங்கள் நிஜமாக எனக்கு ஒரு டானிக்கைப் போல உள்ளன.”—டேனியேல், 1946-ல் முழுக்காட்டப்பட்டவர்.
கடவுளுடைய வார்த்தையை ஜெபசிந்தையுடன் படித்து அதைப் பற்றி யோசித்துப் பார்க்க எப்போது நீங்கள் நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள்?—தானியேல் 6:10ஆ; மாற்கு 1:35; அப்போஸ்தலர் 10:9.
[பக்கம் 13-ன் படம்]
ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் தருவதன் மூலம் நாம் ‘பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாய்’ இருப்போம்