இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
இயேசுவின் உவமைகளிலிருந்து நன்மையடைதல்
கடலோரத்திலே ஜனக்கூட்டத்தோடு இயேசு பேசியதைக் கேட்டுவிட்டு அவரிடம் வந்த அவருடைய சீஷர்கள் அவருடைய புதிய போதனா முறையைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆம், அவர் உவமைகளைப் பயன்படுத்துவதைக் கேட்டிருக்கிறார்கள், ஆனால் முன்னொருபோதும் இத்தனை விரிவாக அவர் அதைச் செய்தது கிடையாது. ஆகவே இதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்: “ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்?”
அவர் இதைச் செய்வதற்கு ஒரு காரணம் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக இருந்தது: “என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வ காலத்து மறை பொருள்களை வெளிப்படுத்துவேன்.” ஆனால் இதற்கு இதைக் காட்டிலும் அதிகமிருக்கிறது. அவர் உவமைகளைப் பயன்படுத்துவது மக்களின் இருதய நிலையை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்யும் நோக்கத்தைச் சேவிக்கிறது.
உண்மையில் அநேக ஆட்கள், திறமைவாய்ந்த கதை கூறுபவராயும் அற்புதத்தை நடப்பிக்கிறவராயும் இருப்பதற்காக மாத்திரமே இயேசுவில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆண்டவராக சேவிக்கப்படவும் தன்னலமில்லாமல் பின்பற்றப்படவும் வேண்டியவராக அவரில் அக்கறையுள்ளவர்களாக இல்லை. காரியங்களின் பேரில் தங்களுடைய நோக்கிலாவது அல்லது தங்களுடைய வாழ்க்கை வழியிலாவது அவர்கள் இடையில் குறுக்கிடப்படுவதை விரும்புவதில்லை. அந்த அளவுக்குச் செய்தி ஊடுருவிச் செல்வதை அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே இயேசு சொல்கிறார்:
“அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது. அதாவது, . . . இந்த ஜனங்கள் இருதயத்தில் உணர்ந்து மனந்திரும்பாமலும்” இருக்கிறார்கள்.
இயேசு தொடர்ந்து “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும் அவைகள் பாக்கியமுள்ளவைகள் (சந்தோஷமுள்ளவைகள், NW). அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்கிறார்.
ஆம், 12 அப்போஸ்தலர்களுக்கும் அவர்களோடு இருந்தவர்களுக்கும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் இருதயங்கள் இருந்தன. ஆகவே இயேசு சொல்வதாவது: “தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.” புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கிருந்த ஆசையின் காரணமாக, இயேசு விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கத்தைத் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுக்கிறார்.
“விதை தேவனுடைய வசனம்,” என்று இயேசு சொல்லுகிறார். நிலம் இருதயமாக இருக்கிறது. வழியருகே கடினமான மேற்பரப்பின் மீது விதைக்கப்பட்ட விதையைக் குறித்து அவர் விவரிப்பதாவது: “அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான்.”
மறுபட்சத்தில், கீழே கற்பாறையான நிலத்தின் மீது விதைக்கப்பட்ட விதை, வசனத்தை சந்தோஷத்தோடே ஏற்றுக் கொள்ளும் மக்களின் இருதயங்களைக் குறிக்கிறது. என்றபோதிலும், இப்படிப்பட்ட இருதயங்களில் வார்த்தை வேர் கொள்ள முடியாததன் காரணமாக சோதனையான காலம் அல்லது துன்புறுத்தல் வருகையில் இவர்கள் விழுந்து போகிறார்கள்.
முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகள், இது வசனத்தைக் கேட்கிறவர்களாயிருப்பவர்களை குறிக்கிறது என்பதாக இயேசு தொடர்ந்து சொல்கிறார். ஆனால் இவர்களோ இந்த வாழ்க்கையின் கவலைகளாலும், ஐசுவரியங்களினாலும், சிற்றின்பங்களாலும் கவர்ந்திழுக்கப்பட, அவை முற்றிலும் நெருக்கப்பட்டு போய் எதையும் பரிபூரணத்துக்குக் கொண்டு வருவதில்லை.
கடைசியாக, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையோ நேர்த்தியான நல் இருதயத்தோடே வசனத்தைக் கேட்ட பிறகு அதைக் காத்துக் கொண்டு சகிப்புத்தன்மையுடன் பலன் தருகிறவர்கள் என்பதாக இயேசு தொடர்ந்து சொல்லுகிறார்.
இயேசுவின் போதகங்களின் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்காக அவரை நாடி வந்த அந்தச் சீஷர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! தம்முடைய உவமைகள் மற்றவர்களுக்குச் சத்தியத்தைத் தெரிவிப்பதற்காகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதாக இயேசு கருதுகிறார். “விளக்கைத் தண்டின் மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும் கட்டிலின் கீழாகிலும் வைக்கிறதற்குக் கொண்டு வருவார்களா?” என்பதாக அவர் கேட்கிறார். இல்லை, “அதை விளக்குத் தண்டின் மேல் வைப்பான்.” இதன் காரணமாக இயேசு மேலுமாகச் சொல்கிறார்: “ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள்.” மத்தேயு 13:10–23, 34–36; மாற்கு 4:10–25, 33, 34; லூக்கா 8:9–18; சங்கீதம் 78:2; ஏசாயா 6:9, 10.
◆ இயேசு ஏன் உவமைகளில் பேசினார்?
◆ இயேசுவின் சீஷர்கள் எவ்விதமாக ஜனக்கூட்டத்திலிருந்து தங்களை வித்தியாசமானவர்களாகக் காண்பித்தார்கள்?
◆ விதைக்கிறவனைப் பற்றிய உவமைக்கு இயேசு என்ன விளக்கத்தைக் கொடுத்தார்? (w87 4⁄1)