‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’
‘நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுத்து என் சீஷர்களென்று உங்களைக் காட்டுங்கள்.’ —யோவான் 15:8, Nw.
1. (அ) சீஷராவதற்கு என்ன தேவையென்று இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் குறிப்பிட்டார்? (ஆ) என்ன கேள்வியை நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
இயேசுவின் மரணத்துக்கு முந்தின நாள் மாலைப்பொழுது அது. இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம் மனம்விட்டு பேசி அவர்களை உற்சாகப்படுத்த அதிக நேரத்தை செலவிட்டிருந்தார். அப்போது நேரம் நள்ளிரவை கடந்துவிட்டது, ஆனால் இயேசுவுக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களிடமாக இருந்த அன்பு, தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கத் தூண்டுகிறது. அப்போது நடைபெற்ற உரையாடலில், அவருடைய சீஷர்களாக நிலைத்திருக்க அவர்கள் செய்ய வேண்டிய இன்னொரு காரியத்தைக் குறித்து அவர் நினைப்பூட்டினார். அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுத்து என் சீஷர்களென்று உங்களைக் காட்டுகையில் என் பிதா மகிமைப்படுகிறார்.” (யோவான் 15:8, NW) சீஷராயிருக்கும் நாம் இந்தத் தேவையை இன்று பூர்த்தி செய்கிறோமா? ‘மிகுந்த கனிகளைக் கொடுப்பது’ என்றால் என்ன? அதை கண்டுபிடிக்க, அந்த மாலைப்பொழுதில் நடந்த உரையாடலை நாம் திரும்பக் கேட்கலாம்.
2. இயேசு தம்முடைய மரணத்துக்கு முந்தின மாலைப்பொழுதில் கனியைப் பற்றிய என்ன உவமையைக் கூறினார்?
2 கனி கொடுக்கும்படி இயேசு கூறின அறிவுரை, தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு அவர் சொன்ன ஒரு உவமையின் பாகமாகும். அவர் இவ்வாறு சொன்னார்: ‘நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார்; கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனி கொடுக்க மாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். . . . நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுத்து என் சீஷர்களென்று உங்களைக் காட்டுகையில் என் பிதா மகிமைப்படுகிறார். பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். . . . நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.’—யோவான் 15:1-10; NW.
3. கனி கொடுப்பவராக இருப்பதற்கு இயேசுவை பின்பற்றுவோர் என்ன செய்ய வேண்டும்?
3 இந்த உவமையில் யெகோவா திராட்சத் தோட்டக்காரர், இயேசு திராட்சச்செடி, அவர் பேசிக் கொண்டிருந்த அப்போஸ்தலர்கள் கிளைகள். அப்போஸ்தலர்கள் இயேசுவோடு ‘நிலைத்திருக்க’ முயலும் வரையில் கனிகளைக் கொடுப்பார்கள். மிக முக்கியமான இந்த ஒற்றுமையை காத்துக்கொள்வதில் இவர்கள் எவ்வாறு வெற்றிபெறலாம் என்பதை இயேசு அடுத்து விளக்கினார்: “நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.” பிற்பாடு, இதே போன்ற வார்த்தைகளை அப்போஸ்தலன் யோவான் உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்: “அவருடைய [கிறிஸ்துவின்] கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்.”a (1 யோவான் 2:24; 3:24) ஆகவே, கிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவரில் நிலைத்திருக்கிறார்கள், அந்த ஐக்கியம்தான் கனி கொடுக்க அவர்களுக்கு உதவுகிறது. நாம் என்ன வகையான கனிகளைக் கொடுக்க வேண்டும்?
வளருவதற்கு வாய்ப்பு
4. கனி கொடாதிருக்கும் கொடியை யெகோவா ‘அறுத்துப் போடுகிறார்’ என்ற உண்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
4 இந்த உவமையில், ஒரு கொடி கனி கொடாதிருக்கும்போது அதை யெகோவா “அறுத்துப் போடுகிறார்” அல்லது வெட்டிப் போடுகிறார். இது நமக்கு என்ன சொல்கிறது? எல்லா சீஷர்களும் கனி கொடுக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லாமல், அவர்கள் அனைவராலும் எந்த சூழலிலும் எந்த குறைபாடுகள் இருந்தாலும் கனி கொடுக்க முடியும் என்றே சொல்கிறது. ஆகவே, கிறிஸ்தவ சீஷர் ஒருவர் தன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு காரியத்தை நிறைவேற்றத் தவறுகையில் அவரை ‘அறுத்துப் போடுவதோ’ அல்லது தகுதியிழக்கச் செய்வதோ யெகோவாவின் அன்புள்ள வழிகளுக்கு முரணானது.—சங்கீதம் 103:14; கொலோசெயர் 3:24; 1 யோவான் 5:3.
5. (அ)கனி கொடுக்கிறவர்களாக இருப்பதில் நாம் முன்னேற முடியும் என்பதை இயேசுவின் உவமை எவ்வாறு காட்டுகிறது? (ஆ) நாம் என்ன இரண்டு வகையான கனிகளைப் பற்றி சிந்திப்போம்?
5 நம்முடைய சூழ்நிலைகளில் நாம் சீஷர்களாக செய்ய வேண்டிய வேலைகளில் முன்னேற வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்பதையும் திராட்சச்செடி பற்றிய இயேசுவின் உவமை காட்டுகிறது. இயேசு இதை எவ்வாறு கூறுகிறார் என்பதை கவனியுங்கள்: “என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார்.” (யோவான் 15:2) உவமையின் கடைசி பகுதியில் இயேசு தம்மைப் பின்பற்றுவோரை “மிகுந்த கனிகளைக்” கொடுக்கும்படி ஊக்கப்படுத்தினார். (வசனம் 8) இது எதைக் குறிக்கிறது? சீஷர்களாக நாம் ஒருபோதும் சுயதிருப்தியடைந்து சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட முடியாது. (வெளிப்படுத்துதல் 3:14, 15, 19) அதற்குப் பதிலாக, கனி கொடுப்பதில் முன்னேறுவதற்கு வழிகளை நாம் ஆராய வேண்டும். நாம் என்னவிதமான கனிகளை அபரிமிதமாக பிறப்பிக்க முயற்சி செய்ய வேண்டும்? இரண்டு வகைகள் (1) “ஆவியின் கனி” (2) ராஜ்ய கனி.—கலாத்தியர் 5:22, 23; மத்தேயு 24:14.
கிறிஸ்தவ குணங்களின் கனிகள்
6. முதலில் சொல்லப்பட்ட ஆவியின் கனியின் முக்கியத்துவத்தை இயேசு கிறிஸ்து எவ்வாறு அழுத்திக் காட்டினார்?
6 “ஆவியின் கனி”களில் முதலில் இடம் பெறுவது அன்பு. கடவுளுடைய பரிசுத்த ஆவி கிறிஸ்தவர்கள் மத்தியில் அன்பை உருவாக்குகிறது, ஏனென்றால் கனி கொடுக்கிற திராட்சச்செடியின் உவமையை சொல்வதற்கு சற்று முன்பு இயேசு கொடுத்த கட்டளைக்கு அப்போஸ்தலர்கள் கீழ்ப்படிகிறார்கள். அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவான் 13:34) சொல்லப்போனால், பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவில் நடத்திய உரையாடல் முழுவதிலும் அவர் அன்பு என்ற குணத்தைக் காட்டுவதன் அவசியத்தை அப்போஸ்தலர்களுக்கு திரும்பத் திரும்ப நினைப்பூட்டினார்.—யோவான் 14:15, 21, 23, 24; 15:12, 13, 17.
7. கனி கொடுப்பது கிறிஸ்துவைப் போன்ற குணாதிசயங்களை வெளிக்காட்டுவதோடு சம்பந்தப்பட்டிருப்பதை அப்போஸ்தலன் பேதுரு எவ்வாறு காட்டினார்?
7 அந்த இரவில் பேதுரு அங்கிருந்தார். ஆகவே கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அதன் சம்பந்தப்பட்ட குணங்களையும் உண்மை சீஷர்கள் தங்கள் மத்தியில் காண்பிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். எனவே அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னடக்கம், சகோதர சிநேகம், அன்பு ஆகிய குணங்களை வளர்க்கும்படி கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். அப்படிச் செய்தால் நாம் ‘வீணரும் [“செயலற்றவர்களும்,” NW] கனியற்றவர்களுமாய்’ இருப்பதை தவிர்க்க முடியும் என்றும் அவர் சொன்னார். (2 பேதுரு 1:5-8) நம்முடைய சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் ஆவியின் கனிகளை வெளிப்படுத்துவது நமக்கு சாத்தியமே. ஆகவே, அன்பு, தயவு, சாந்தம் மற்றும் கிறிஸ்துவின் மற்ற பண்புகளையும் முழு அளவில் காண்பிக்க முயலுவோமாக, ஏனென்றால் “இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” அல்லது இவற்றுக்கு வரம்பு இல்லை. (கலாத்தியர் 5:23) ஆம், நாம் ‘மிகுந்த கனிகளைக்’ கொடுப்போமாக.
ராஜ்ய கனிகளைக் கொடுத்தல்
8. (அ) ஆவியின் கனிக்கும் ராஜ்ய கனிக்கும் என்ன தொடர்பு உள்ளது? (ஆ) என்ன கேள்வியை சிந்திப்பது தகுதியானது?
8 கண்ணைப் பறிக்கும் நிறத்தில் சாறுள்ள கனி அதன் மரத்திற்கு அழகு சேர்க்கிறது. ஆனால், இப்படிப்பட்ட கனிகள் வெறுமனே அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், விதைகள் மூலமாக அச்செடியை பெருக செய்வதற்கும் உதவுகின்றன. அதேவிதமாக, ஆவியின் கனி நம்முடைய கிறிஸ்தவ ஆளுமைக்கு அழகு சேர்ப்பதோடு நின்றுவிடுவதில்லை. அன்பு, விசுவாசம் போன்ற குணங்கள் வேத வசனத்தில் விதை போலுள்ள ராஜ்ய செய்தியை பரப்புவதற்கும் நம்மை உந்துவிக்கின்றன. இன்றியமையாத இந்தத் தொடர்பை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு வலியுறுத்துகிறார் என்பதை கவனியுங்கள். அவர் இவ்வாறு சொல்கிறார்: “விசுவாசிக்கிறபடியால் [ஆவியின் கனியின் பாகமான விசுவாசம் இருப்பதால்] பேசுகிறோம்.” (2 கொரிந்தியர் 4:13) இவ்விதமாக நாம் ‘உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை எப்போதும் தேவனுக்கு செலுத்துகிறோம்’ என்று பவுல் மேலுமாக விளக்குகிறார். இது நாம் கொடுக்க வேண்டிய இரண்டாவது விதமான கனி. (எபிரெயர் 13:15) அதிக கனி கொடுக்கிறவர்களாய் இருப்பதற்கு, அதாவது தேவ ராஜ்ய அறிவிப்பாளர்களாக ‘மிகுந்த கனிகளைக்’ கொடுப்பதற்கு நம் வாழ்க்கையில் இடமிருக்கிறதா?
9. கனிகளைப் பிறப்பிப்பதும் சீஷரை உண்டுபண்ணுவதும் ஒன்றா? விளக்கவும்.
9 இதற்கு சரியாக பதிலளிக்க ராஜ்ய கனி என்றால் என்ன என்பதை நாம் முதலாவதாக புரிந்துகொள்வது அவசியம். கனி கொடுப்பது என்பது சீஷர்களை உண்டுபண்ணுவது என்ற முடிவுக்கு வருவது சரியாக இருக்குமா? (மத்தேயு 28:19) முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் வணக்கத்தாராக ஆவதற்கு நாம் உதவி செய்யும் நபர்கள்தான் நாம் கொடுக்கும் கனியா? இல்லை, அப்படியிருந்தால் குறைந்த பலன்களே கிடைக்கும் பிராந்தியங்களில் பல வருடங்களாக உண்மையுடன் ராஜ்ய செய்தியை அறிவித்து வந்திருக்கும் அருமையான சாட்சிகள் அனைவருக்கும் இது மிகவும் சோர்வூட்டுவதாக இருக்கும். ஆம், நாம் கொடுக்கும் ராஜ்ய கனி, புதிய சீஷர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக மட்டுமே இருந்தால், கடினமாக உழைக்கும் அந்தச் சாட்சிகள் இயேசுவின் உவமையிலுள்ள கனி கொடுக்காத கொடிகளைப் போல இருப்பார்களே! நிச்சயமாகவே அது அப்படி அர்த்தப்படுத்துவதில்லை. அப்படியென்றால், நம்முடைய ஊழியத்தின் முக்கியமான ராஜ்ய கனி எது?
ராஜ்ய விதையை பரப்புவதன் மூலம் கனிகொடுத்தல்
10. ராஜ்ய கனி எது, எது அல்ல என்பதை விதைப்பவரையும் வித்தியாசமான நிலங்களையும் பற்றிய இயேசுவின் உவமை எவ்வாறு காட்டுகிறது?
10 விதைக்கிறவனையும் வித்தியாசமான நிலங்களையும் பற்றிய இயேசுவின் உவமை இதற்கு பதிலளிக்கிறது. அதிக பலன் கிடைக்காத பிராந்தியங்களில் சாட்சி கொடுப்பவர்களுக்கு உற்சாகமூட்டும் பதிலை இது அளிக்கிறது. விதை என்பது கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ராஜ்ய செய்தியையும், நிலம் என்பது மனிதனின் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தையும் குறிக்கிறது என்று இயேசு சொன்னார். சில விதைகள் “நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது.” (லூக்கா 8:8) என்ன பலன் அல்லது கனி? ஆம், ஒரு கோதுமை செடியின் தண்டு முளைவிட்டு முதிர்ச்சி அடையும்போது அது கனி கொடுக்கிறது, அதாவது சிறிய கோதுமைத் தண்டுகளை கனியாக கொடுப்பதற்கு பதிலாக, புதிய விதையைத்தான் கொடுக்கிறது. அதே விதமாகவே ஒரு கிறிஸ்தவன் கனி கொடுப்பது, புதிய சீஷர்களைக் குறிப்பதற்கு பதிலாக, புதிய ராஜ்ய விதையைத்தான் குறிக்கிறது.
11. ராஜ்ய கனியை எவ்வாறு விளக்கலாம்?
11 ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் கனி என்பது புதிய சீஷர்களும் அல்ல, சிறந்த கிறிஸ்தவ குணங்களும் அல்ல. விதைக்கப்படும் விதை ராஜ்யத்தின் வசனமாக இருப்பதால், கனி என்பது அந்த விதையைப் பன்மடங்கு ஆக்குவதாக இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் கனி கொடுப்பது என்பது ராஜ்யத்தைப் பற்றி பேசுவதைக் குறிக்கிறது. (மத்தேயு 24:14) நம்முடைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பது என்ற ராஜ்ய கனியைக் கொடுப்பது கூடிய காரியமா? ஆம், கூடிய காரியமே! ஏன் என்பதை இயேசு அதே உவமையில் விளக்குகிறார்.
கடவுளுடைய மகிமைக்காக நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை கொடுத்தல்
12. ராஜ்ய கனியைக் கொடுப்பது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் சாத்தியமா? விளக்கவும்.
12 “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ” “நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 13:23) ஒரு வயலில் விதைக்கப்பட்ட தானியத்தின் விளைச்சல் சூழ்நிலைகளைப் பொறுத்து வித்தியாசமாக இருக்கலாம். அதேவிதமாகவே, நற்செய்தியை அறிவிப்பதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பது நம்முடைய சூழ்நிலைகளைப் பொறுத்து வித்தியாசப்படலாம். இயேசுவும் இதைப் புரிந்துகொண்டிருந்ததைக் காட்டினார். சிலருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கலாம், மற்றவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் அதிக சக்தியும் இருக்கலாம். இதன் காரணமாக, நம்மால் செய்ய முடிந்தது, மற்றவர்கள் செய்வதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால் அது நம்மாலான மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது யெகோவா அதில் சந்தோஷப்படுகிறார். (கலாத்தியர் 6:4) முதுமையின் காரணமாக அல்லது பலவீனமாக்கும் நோயின் காரணமாக பிரசங்க வேலையில் நம்முடைய பங்கு குறைவாக இருந்தாலும்கூட கருணை உள்ளம் படைத்த நம்முடைய தந்தை யெகோவா ‘மிகுந்த கனிகளைக் கொடுக்கிறவராகவே’ நம்மைக் கருதுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஏன்? ஏனென்றால், நமக்கு ‘உண்டாயிருப்பதை எல்லாம்’ கொடுத்துவிடுகிறோம். அது நம் முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையாக இருக்கிறது.b—மாற்கு 12:43, 44; லூக்கா 10:27.
13. (அ) ‘தொடர்ந்து’ ராஜ்ய கனியை கொடுப்பதற்கு முக்கிய காரணம் என்ன? (ஆ) அதிக பலன் கிடைக்காத பிராந்தியங்களில் கனிகொடுக்க எது நமக்கு உதவும்? (பக்கம் 21-ல் உள்ள பெட்டியை காண்க.)
13 எந்த அளவுக்கு நம்மால் ராஜ்ய கனியைக் கொடுக்க முடிந்தாலும், நாம் ஏன் அதைச் செய்கிறோம் என்பதை மறக்காமல் இருந்தால், ‘தொடர்ந்து கனி கொடுத்துக்கொண்டிருக்க’ தூண்டப்படுவோம். (யோவான் 15:16) இதை செய்வதற்கு இயேசு முக்கியமான காரணத்தைக் கொடுத்தார்: ‘நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதால் என் பிதா மகிமைப்படுகிறார்.’ (யோவான் 15:8, NW) ஆம், நாம் செய்யும் பிரசங்க வேலை எல்லா மனிதருக்கும் முன்பு யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துகிறது. (சங்கீதம் 109:30) சுமார் 75 வயதுள்ள ஆனர் என்ற விசுவாசமுள்ள ஒரு சாட்சி இவ்வாறு கூறுகிறார்: “குறைவான பலன் கிடைக்கும் பிராந்தியங்களிலும் மகா உன்னதமானவரை பிரதிநிதித்துவம் செய்வது மிகப் பெரிய பாக்கியம்.” 1974 முதல் வைராக்கியமான சாட்சியாக இருந்துவரும் க்ளாடியோவிடம், அவருடைய பிராந்தியத்தில் வெகு சிலரே செவிகொடுத்து கேட்டாலும், ஏன் தொடர்ந்து பிரசங்கிக்கிறார் என கேட்டபோது யோவான் 4:34-ஐ அவர் குறிப்பிட்டார். அதில் இயேசுவின் வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” க்ளாடியோ மேலும் இவ்வாறு சொன்னார்: “இயேசுவைப் போலவே நான் ராஜ்ய அறிவிப்பாளராக என் வேலையை ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல் அதை செய்து முடிக்கவும் விரும்புகிறேன்.” (யோவான் 17:4) உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளும் இதை ஒத்துக்கொள்கிறார்கள்.—“‘பொறுமையோடு கனி கொடுப்பது’ எவ்வாறு” என்ற பெட்டியை 21-ம் பக்கத்தில் காண்க.
பிரசங்கிக்கவும் போதிக்கவும்
14. முழுக்காட்டுபவராகிய யோவானும் இயேசுவும் செய்த வேலையில் என்ன இரண்டு நோக்கங்கள் இருந்தன? (ஆ) இன்று கிறிஸ்தவர்களின் வேலையை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
14 சுவிசேஷ பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் ராஜ்ய அறிவிப்பாளர் முழுக்காட்டுபவராகிய யோவான். (மத்தேயு 3:1, 2; லூக்கா 3:18) அவருடைய முக்கிய நோக்கம் ‘சாட்சி கொடுப்பதாக’ இருந்தது, ‘அவர் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி’ ஆழமான விசுவாசத்தோடு அதை செய்தார். (யோவான் 1:6, 7) ஆம், யோவான் பிரசங்கித்ததன் விளைவாக அவர்களில் சிலர் கிறிஸ்துவின் சீஷர்கள் ஆனார்கள். (யோவான் 1:35-37) ஆகவே யோவான் ஒரு பிரசங்கியாகவும் சீஷராக்குபவராகவும் இருந்தார். இயேசுவும்கூட ஒரு பிரசங்கியாகவும் போதகராகவும் இருந்தார். (மத்தேயு 4:23; 11:1) ஆகவேதான், இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு, ராஜ்ய செய்தியை வெறுமென பிரசங்கிக்கும்படியல்ல, ஆனால் அதை ஏற்றுக்கொள்கிறவர்கள் சீஷர்களாவதற்கு உதவும்படியும் கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) எனவே இன்று நம்முடைய வேலையில் பிரசங்கிப்பது, போதிப்பது ஆகிய இரண்டும் உட்பட்டுள்ளது.
15. பொ.ச. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பிரசங்கிப்புக்கும் இன்று செய்யப்பட்டுவரும் பிரசங்கிப்புக்கும் கிடைக்கும் பிரதிபலிப்புகளில் என்ன ஒற்றுமை காணப்படுகிறது?
15 பொ.ச. முதல் நூற்றாண்டில் பவுல் பிரசங்கிப்பதையும் போதிப்பதையும் கேட்ட “சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.” (அப்போஸ்தலர் 28:24) இன்றும் அப்படித்தான் இருக்கிறது. பெரும்பாலான ராஜ்ய விதை பலன் கொடுக்காத நிலத்தில் விழுந்து கொண்டிருப்பது வருத்தமான விஷயம். அப்படியிருந்தாலும், இயேசு முன்னுரைத்த விதமாகவே சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து வேர்பிடித்து முளைக்கின்றன. வருடத்தில் ஒவ்வொரு வாரமும், சராசரியாக 5,000-க்கும் மேற்பட்ட ஆட்கள் கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களாக ஆகிவருகின்றனர்! பெரும்பாலோர் விசுவாசிக்காவிட்டாலும், இந்தப் புதிய சீஷர்கள் ‘சொல்லப்படுகிறவற்றை விசுவாசிக்கிறார்கள்.’ ராஜ்ய செய்தியை அவர்களுடைய இருதயங்கள் ஏற்றுக்கொள்வதற்கு எது உதவுகிறது? அநேக சமயங்களில் சாட்சிகள் காட்டும் தனிப்பட்ட அக்கறையே, அதாவது அடையாள அர்த்தத்தில் புதிதாக விதைத்த விதைக்கு நீரூற்றியதால்தான் குறிப்பிடத்தக்க இப்பயன் கிடைக்கிறது. (1 கொரிந்தியர் 3:6) இரண்டே உதாரணங்களை மாத்திரம் கவனியுங்கள்.
தனிப்பட்ட அக்கறை பயன் தருகிறது
16, 17. நம் ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களிடம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டுவது ஏன் முக்கியம்?
16 பெல்ஜியத்தில் காரலின் என்ற ஓர் இளம் பெண் வயதான ஓர் அம்மாவை சந்தித்தாள். அவர்கள் ராஜ்ய செய்தியில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அந்த அம்மா கையில் கட்டுப் போட்டிருந்தார்கள், ஆகவே காரலினும் அவளுடன் சென்றிருந்த சாட்சியும் அவருக்கு உதவ முன்வந்தார்கள், ஆனால் அந்தப் பெண் இவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தார். இரண்டு நாட்கள் கழித்து இதே சாட்சிகள் அவரை மறுபடியும் சந்தித்து நலம் விசாரித்தார்கள். “இதுவே மாற்றத்தை ஏற்படுத்தியது” என்று காரலின் சொன்னாள். “அவரை ஒரு மனுஷியாக மதித்து உண்மையில் அக்கறை காட்டியது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் எங்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார், ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.”
17 ஐக்கிய மாகாணங்களில் சான்டி என்ற ஒரு சாட்சியும் அவள் பிரசங்கிக்கும் ஆட்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறாள். உள்ளூர் செய்தித்தாளில் பிறப்புகளைப் பற்றிய அறிவிப்புகளை கவனித்து, என்னுடைய பைபிள் கதை புத்தகம்c என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவர்களைப் போய் சந்திக்கிறாள். அந்த சமயத்தில் தாய் பொதுவாக வீட்டில் இருப்பாள், தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் பெருமையோடு தன் குழந்தையைக் காட்டுவாள், அச்சமயத்தில் அவளோடு பேச முடிகிறது. “வாசிப்பதன் மூலம் சிசுவோடு ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி நான் பெற்றோரிடம் பேசுவேன்” என்று சான்டி விவரிக்கிறாள். “அதற்குப்பின் இன்றைய உலகில் ஒரு பிள்ளையை வளர்ப்பதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசுவேன்.” சமீபத்தில், இதுபோன்று அவள் செய்த சந்திப்புகளின் காரணமாக ஒரு தாயும் அவருடைய ஆறு பிள்ளைகளும் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தார்கள். முன்வந்து உதவுவதும், தனிப்பட்ட அக்கறையைக் காட்டுவதும் இதுபோன்ற சந்தோஷமான அனுபவங்களை நம் ஊழியத்திலும் பெறுவதற்கு வழிநடத்தும்.
18. (அ) ‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’ என்ற கட்டளையின்படி செய்வது நம் அனைவருக்கும் ஏன் சாத்தியம்? (ஆ) யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள என்ன மூன்று தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் தீர்மானமாயிருக்கிறீர்கள்?
18 ‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’ என்ற தேவையை நம்மாலும் பூர்த்தி செய்ய முடியும் என்பதை நினைக்கையில் அது எவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது! நாம் இளைஞரோ முதியவரோ, நல்ல ஆரோக்கியமுள்ளவரோ ஆரோக்கியமில்லாதவரோ, நல்ல பலன்கள் கிடைக்கும் பிராந்தியத்திலோ அல்லது பலன் கிடைக்காத பிராந்தியத்திலோ எங்கு பிரசங்கிக்கிறவராக இருந்தாலும் சரி, நம் எல்லாராலும் மிகுந்த கனிகளைக் கொடுக்க முடிகிறது. எவ்வாறு? முழுமையான அளவில் ஆவியின் கனியை வெளிக்காட்டுவதன் மூலமும் நம்மால் முடிந்த அளவு திறமையோடு கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தியை பரப்புவதன் மூலமும் அதை செய்ய முடிகிறது. அதே சமயத்தில், ‘இயேசுவின் உபதேசத்தில் நிலைத்திருக்கவும்’ ‘ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்கவும்’ நாம் பிரயாசப்படுகிறோம். ஆம், யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீஷருக்குரிய இந்த மூன்று முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்து நாம் ‘மெய்யாகவே கிறிஸ்துவின் சீஷர்கள்’ என்பதை நிரூபிக்கிறோம்.—யோவான் 8:31; 13:35.
[அடிக்குறிப்புகள்]
a உவமையில் திராட்சச்செடியின் கிளைகள் இயேசுவின் அப்போஸ்தலர்களையும் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் ஓர் இடத்தை சுதந்தரிக்கப்போகிற கிறிஸ்தவர்களையுமே குறித்தாலும், இன்று கிறிஸ்துவை பின்பற்றும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் உண்மைகள் இந்த உவமையில் காணப்படுகின்றன.—யோவான் 3:16; 10:16.
b முதிர் வயது அல்லது வியாதியின் காரணமாக வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாதவர்கள் கடிதங்கள் மூலம் அல்லது அனுமதி இருக்கும் இடங்களில் தொலைபேசி மூலம் அல்லது தங்களைப் பார்க்க வருகிறவர்களுடன் பேசுவதன் மூலம் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளலாம்.
c யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
மறுபார்வைக்கு சில கேள்விகள்
• நாம் அதிகமாக பிறப்பிக்க வேண்டிய கனிகள் யாவை?
• ‘மிகுந்த கனிகளைக் கொடுப்பது’ என்ற இலக்கு ஏன் நமக்கு சாத்தியம்?
• சீஷராயிருப்பதற்கு யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள என்ன மூன்று முக்கியமான தேவைகளை நாம் சிந்தித்தோம்?
[பக்கம் 21-ன் பெட்டி/படம்]
‘பொறுமையோடு கனி கொடுப்பது’ எவ்வாறு
பலன்கள் அந்தளவுக்கு கிடைக்காத பிராந்தியங்களில் ராஜ்ய செய்தியை உண்மையுடன் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருப்பதற்கு உங்களுக்கு எது உதவுகிறது? இந்தக் கேள்விக்கு இதோ சில பயனுள்ள பதில்கள்.
“பிராந்தியத்தில் என்ன பிரதிபலிப்பு இருந்தாலும், இயேசுவின் முழு ஆதரவு நமக்கிருப்பதை அறிந்திருப்பதே, நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் தொடர ஊக்கமளிக்கிறது.”—ஹேரி, வயது 72; 1946-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“2 கொரிந்தியர் 2:17-லுள்ள (பொ.மொ.) வேதவசனம் எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கிறது. ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது, ‘கடவுளுடைய முன்னிலையில், கிறிஸ்துவுடன் இணைந்து’ செய்கிறோம் என்று அது சொல்கிறது. ஊழியம் செய்கையில், என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள் என்னோடு இருக்கிறார்கள்.”—க்ளாடியோ, வயது 43; 1974-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“மறைக்காமல் சொன்னால், என்னைப் பொறுத்தவரை பிரசங்க வேலை என்பது கஷ்டம்தான். ஆனால், ‘என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்’ என சங்கீதம் 18:29-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நான் அனுபவத்தில் பார்க்கிறேன்.”—கெரட், வயது 79; 1955-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“ஊழியத்தில் ஒரு வசனத்தையாவது வாசித்துக் காண்பிக்க முடிந்தால்கூட யாரோ ஒருவர் தன் இருதயத்தை ஆராய்வதற்கு பைபிளைப் பயன்படுத்தின பரம திருப்தி எனக்கு.”—எலனர், வயது 26; 1989-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“நான் வித்தியாசமான அறிமுகங்களை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறேன். என்னுடைய மீதி வாழ்நாளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு எக்கச்சக்கமான அறிமுகங்கள் இருக்கின்றன.”—பால், வயது 79; 1940-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“மக்கள் காதுகொடுத்துக் கேளாதபோது அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன். சிநேகபான்மையான பாணியில் அணுக முயற்சி செய்கிறேன், மக்களுடன் சம்பாஷணை முறையில் அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள முயலுகிறேன்.”—டேனியேல், வயது 75; 1946-ல் முழுக்காட்டப்பட்டவர்.
“புதிதாக முழுக்காட்டுதல் எடுத்த சிலரை சந்தித்தபோது அவர்கள் சொன்னார்கள், சாட்சிகளாவதற்கு என்னுடைய பிரசங்க வேலையும் ஒரு காரணம் என்று. எனக்கே தெரியாமல், பிற்பாடு வேறு யாரோ அவர்களோடு பைபிளைப் படித்து முன்னேற்றம் செய்ய அவர்களுக்கு உதவியிருக்கிறார்கள். நம்முடைய ஊழியம் ஒரு கூட்டு முயற்சி என்பதை அறிவது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.”—ஜோன், வயது 66; 1954-ல் முழுக்காட்டப்பட்டவர்.
‘பொறுமையோடு கனிகொடுக்க’ உங்களுக்கு எது உதவுகிறது?—லூக்கா 8:15.
[பக்கம் 20-ன் படங்கள்]
ஆவியின் கனியை வெளிப்படுத்துவதன் மூலமும் ராஜ்ய செய்தியை அறிவிப்பதன் மூலமும் நாம் கனி கொடுக்கிறோம்
[பக்கம் 23-ன் படம்]
‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’ என்று இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?