அதிகாரம் 45
பேய்களைவிட இயேசு சக்தியுள்ளவர்
மத்தேயு 8:28-34 மாற்கு 5:1-20 லூக்கா 8:26-39
பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார்
குலைநடுங்க வைத்த புயல்காற்றிலிருந்து தப்பித்து கரைக்கு வருகிறபோது, சீஷர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. முரட்டுத்தனமான இரண்டு பேர்... அதுவும், பேய் பிடித்திருக்கிற இரண்டு பேர்... இயேசுவை நோக்கி ஓடி வருகிறார்கள். கரைக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு கல்லறையிலிருந்து அவர்கள் வருகிறார்கள். அந்த இரண்டு பேரில் ஒருவனைப் பற்றித்தான் மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவேளை, இன்னொருவனைவிட அவன் ரொம்ப மூர்க்கமாக இருந்திருக்கலாம்; ரொம்பக் காலமாகப் பேய்களின் பிடியில் இருந்திருக்கலாம்.
பாவம்! துணிமணி எதுவும் போட்டுக்கொள்ளாமல் அவன் திரிகிறான். ராத்திரி பகலாக ‘அவன் அந்தக் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சல் போட்டுக்கொண்டும், கற்களால் தன்னையே கீறிக்கொண்டும்’ இருக்கிறான். (மாற்கு 5:5) அவன் பயங்கர முரடனாக இருப்பதால், அந்தப் பக்கம் நடந்து போகக்கூட மக்கள் பயப்படுகிறார்கள். அவனைக் கட்டிப்போட சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவன் சங்கிலிகளை முறித்துவிடுகிறான், காலில் போடுகிற விலங்குகளை உடைத்துபோடுகிறான். அவனை அடக்க யாராலும் முடிவதில்லை.
அவன் வந்து இயேசுவின் காலில் விழுகிறான். அப்போது அவனைப் பிடித்திருக்கிற பேய்கள், “இயேசுவே, உன்னதமான கடவுளின் மகனே, உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் என்னைப் பாடுபடுத்த மாட்டீர்கள் என்று கடவுள்மேல் ஆணையிட்டுச் சொல்லுங்கள்!” என்று அவனைக் கத்த வைக்கின்றன. உடனே இயேசு அவனிடம், “பேயே, இந்த மனுஷனைவிட்டு வெளியே போ!” என்று கட்டளையிடுகிறார். இதன் மூலம், பேய்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதை இயேசு காட்டுகிறார்.—மாற்கு 5:7, 8.
நிறைய பேய்கள் அவனைப் பிடித்திருக்கின்றன. இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்கிறார்; அதற்கு அவன், “என் பெயர் லேகியோன். ஏனென்றால், நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம்” என்று சொல்கிறான். (மாற்கு 5:9) ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டதுதான் ஒரு ரோம லேகியோன். இதிலிருந்து, எக்கச்சக்கமான பேய்கள் இந்த மனிதனை ஆட்டிப்படைக்கின்றன என்பது தெரிகிறது. அவன் கஷ்டப்படுவது அந்தப் பேய்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. அந்தப் பேய்கள் இயேசுவிடம், “எங்களை அதலபாதாளத்துக்குப் போகச் சொல்லிக் கட்டளையிடாதீர்கள்” என்று கெஞ்சுகின்றன. அவற்றுக்கும் அவற்றின் தலைவனான சாத்தானுக்கும் வரப்போகிற கதி அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருக்கிறது.—லூக்கா 8:31.
அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 2,000 பன்றிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. திருச்சட்டத்தின்படி அவை அசுத்தமான விலங்குகள். யூதர்கள் அவற்றை வைத்திருக்கவே கூடாது. இப்போது அந்தப் பேய்கள், “அந்தப் பன்றிகளுக்குள் எங்களை அனுப்பிவிடுங்கள், அவற்றுக்குள் நாங்கள் புகுந்துகொள்கிறோம்” என்று இயேசுவிடம் கேட்கின்றன. (மாற்கு 5:12) அவரும் அதற்கு அனுமதி கொடுக்கிறார். உடனே, அவை அந்தப் பன்றிகளுக்குள் புகுந்துகொள்கின்றன. அப்போது, 2,000 பன்றிகளும் திமுதிமுவென்று ஓடி மலை உச்சியிலிருந்து கடலுக்குள் குதித்து மூழ்குகின்றன.
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் அந்த நகரத்திலும் நாட்டுப்புறத்திலும் இருக்கிறவர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள். என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக மக்கள் அங்கே வருகிறார்கள். பேய் பிடித்திருந்த மனிதன் இப்போது புத்தி தெளிந்து உட்கார்ந்திருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அவன் இப்போது உடைகளைப் போட்டுக்கொண்டு இயேசுவின் காலடியில் உட்கார்ந்திருக்கிறான்.
இந்த விஷயத்தைக் கேள்விப்படுகிறவர்களும் சரி, அந்த மனிதனைப் பார்க்கிறவர்களும் சரி, பீதியடைகிறார்கள். இயேசு இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ என்று நினைத்துப் பயப்படுகிறார்கள். அதனால், தங்கள் பகுதியிலிருந்து போய்விடும்படி அவரிடம் கெஞ்சுகிறார்கள். அவர் படகில் ஏறியபோது, பேய் பிடித்திருந்த அந்த மனிதனும் அவர் கூடவே வருவதாகச் சொல்லிக் கெஞ்சுகிறான். ஆனால் இயேசு அவனிடம், “நீ உன் வீட்டுக்குப் போய், யெகோவா உனக்காகச் செய்த எல்லாவற்றைப் பற்றியும், அவர் உனக்குக் காட்டிய இரக்கத்தைப் பற்றியும் உன் சொந்தக்காரர்களிடம் சொல்” என்கிறார்.—மாற்கு 5:19.
பொதுவாக, இயேசு யாரையாவது குணப்படுத்தினால் அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்வார். ஏனென்றால், தன்னைப் பற்றிய பரபரப்பான செய்திகளைக் கேட்டு மக்கள் தன்மேல் விசுவாசம் வைப்பதை அவர் விரும்பவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது. முன்பு பேய் பிடித்திருந்த அந்த மனிதன் இயேசுவின் சக்திக்கு உயிருள்ள சாட்சியாக இருக்கிறான். இயேசுவினால் நேரில் சந்திக்க முடியாத ஆட்களுக்கு அவனால் சாட்சி கொடுக்க முடியும். பன்றிகள் செத்துப்போனதால் இயேசுவைப் பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். அதனால், அந்த மனிதன் அங்கிருந்து போய் தெக்கப்போலி முழுவதும் இயேசு தனக்குச் செய்த உதவியைப் பற்றிச் சொல்கிறான்.