பாடம் 30
உங்கள் உயிருக்கு உயிரானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்!
மரணத்தில் ஒருவரை இழப்பது கொடுமையானது! பைபிள் சொல்வதுபோல் மரணம் ஒரு எதிரிதான்! (1 கொரிந்தியர் 15:26) நாம் 27-வது பாடத்தில் பார்த்தபடி, மரணத்தை யெகோவா ஒழித்துவிடுவார். ஏற்கெனவே இறந்துபோன கோடிக்கணக்கான ஆட்களுக்கு என்ன நடக்கும்? அவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவந்து என்றென்றும் வாழ வைக்கப்போவதாக யெகோவா வாக்குத் தந்திருக்கிறார்! இது நிஜமாகவே நடக்குமா? அவர்கள் பரலோகத்தில் வாழ்வார்களா, பூமியிலா? பார்க்கலாம்.
1. யெகோவா என்ன செய்ய ஆசைப்படுகிறார்?
இறந்தவர்களை உயிரோடு எழுப்ப யெகோவா ஆசையாகக் காத்திருக்கிறார். யோபு, தான் இறந்துபோனாலும் தன்னைக் கடவுள் மறக்க மாட்டார் என்று நம்பினார். அதனால் கடவுளிடம், “நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் [கல்லறையிலிருந்து] பதில் சொல்வேன்” என்று சொன்னார்.—யோபு 14:13-15-ஐ வாசியுங்கள்.
2. இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வர முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?
இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, இறந்தவர்களை உயிரோடு கொண்டுவரும் சக்தியைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார். இறந்துபோன 12 வயது சிறுமியையும் ஒரு விதவையின் மகனையும் அவர் உயிரோடு கொண்டுவந்தார். (மாற்கு 5:41, 42; லூக்கா 7:12-15) தன் நண்பரான லாசருவையும் அவர் உயிரோடு எழுப்பினார், அதுவும் லாசரு இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு! அவர் கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, கல்லறையைப் பார்த்து, “லாசருவே, வெளியே வா!” என்று சத்தமாகக் கூப்பிட்டதும், ‘இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார்’! (யோவான் 11:43, 44) லாசருவின் நண்பர்களும் குடும்பத்தாரும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!
3. இறந்த உங்கள் அன்பானவர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?
இறந்தவர்கள் “உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) இறந்தவர்கள் சிலரை இயேசு இந்தப் பூமியில் உயிரோடு கொண்டுவந்தார். அவர்கள் பரலோகத்துக்குப் போயிருந்ததாக அவர் சொல்லவில்லை. (யோவான் 3:13) பூமியில் திரும்பவும் உயிரோடு வந்ததற்காக அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். அதேபோல், சீக்கிரத்தில் கோடிக்கணக்கானவர்களை இயேசு பூஞ்சோலை பூமியில் உயிரோடு கொண்டுவந்து என்றென்றும் சந்தோஷமாக வாழவைப்பார். “நினைவுக் கல்லறைகளில் [அதாவது, கடவுளுடைய நினைவில்] இருக்கிற எல்லாரும்” உயிரோடு வருவார்கள் என்று அவர் சொன்னார்; மனிதர்கள் மறந்திருந்தாலும் கடவுள் அவர்களை மறக்க மாட்டார்.—யோவான் 5:28, 29.
ஆராய்ந்து பார்க்கலாம்!
இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் சக்தி இயேசுவுக்கு இருக்கிறது என்றும், அவர் கண்டிப்பாக அவர்களை உயிரோடு கொண்டுவருவார் என்றும் நாம் ஏன் நம்பலாம்? இது உங்களுக்கு எப்படி ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும்? பார்க்கலாம்.
4. இறந்தவர்களை இயேசு உயிரோடு எழுப்பிக் காட்டியிருக்கிறார்
இயேசு தன் நண்பரான லாசருவின் விஷயத்தில் என்ன செய்தார் என்று விவரமாகப் பார்க்கலாம். யோவான் 11:14, 38-44-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
லாசரு உண்மையிலேயே இறந்துபோயிருந்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?—வசனம் 39-ஐப் பாருங்கள்.
லாசரு ஒருவேளை பரலோகத்துக்குப் போயிருந்தால், இயேசு அவரை மறுபடியும் பூமிக்குக் கொண்டுவந்திருப்பாரா?
5. கோடிக்கணக்கான மக்கள் உயிரோடு வருவார்கள்!
சங்கீதம் 37:29-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மறுபடியும் உயிரோடு வரப்போகும் கோடிக்கணக்கான மக்கள் எங்கே வாழப்போகிறார்கள்?
யெகோவாவை வணங்காத நிறைய பேரையும் இயேசு உயிரோடு எழுப்புவார். அப்போஸ்தலர் 24:15-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யாரை மறுபடியும் உயிரோடு பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?
தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளையை அப்பாவால் எப்படி சுலபமாக எழுப்ப முடியுமோ அதேபோல் இறந்துபோனவர்களை இயேசுவால் சுலபமாக எழுப்ப முடியும்
6. உங்களுக்கு ஆறுதல் தரும் நம்பிக்கை
யவீருவின் மகளை இயேசு உயிரோடு கொண்டுவந்த சம்பவம், துக்கத்தில் இருந்த நிறைய பேருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அந்த நிஜ சம்பவத்தைப் பற்றி லூக்கா 8:40-42, 49-56-ல் படித்துப் பாருங்கள்.
யவீருவின் மகளை உயிரோடு எழுப்புவதற்கு முன்பு இயேசு யவீருவிடம், “பயப்படாதே, விசுவாசம் வை” என்று சொன்னார். (வசனம் 50-ஐப் பாருங்கள்.) இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்ற நம்பிக்கை பின்வரும் சூழ்நிலைகளில் உங்களுக்கு எப்படி உதவும்?
அன்பானவரைப் பறிகொடுக்கும்போது
உங்கள் உயிர் ஆபத்தில் இருக்கும்போது
வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
உயிர்த்தெழுதல் நம்பிக்கை எப்படி ஃபெலிசிட்டியின் அப்பா அம்மாவுக்கு ஆறுதல் தந்திருக்கிறது?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “இறந்தவங்க உயிரோட வர்றதெல்லாம் நம்பற மாதிரியே இல்ல!”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இறந்தவர்கள் கண்டிப்பாக உயிரோடு வருவார்கள் என்று காட்டுவதற்கு எந்த வசனத்தைப் பயன்படுத்துவீர்கள்?
சுருக்கம்
இறந்துபோன கோடிக்கணக்கான மக்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள். அவர்கள் மறுபடியும் வாழ வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார். அவர்களை உயிர்த்தெழுப்பும் சக்தியை இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறார்.
ஞாபகம் வருகிறதா?
இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவாவும் இயேசுவும் காத்திருக்கிறார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?
மறுபடியும் உயிரோடு வரப்போகும் கோடிக்கணக்கான ஆட்கள் பரலோகத்தில் வாழ்வார்களா பூமியில் வாழ்வார்களா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
இறந்துபோன உங்களுடைய அன்பானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்?
அலசிப் பாருங்கள்
துக்கத்தைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பைபிள் சொல்லும் ஆலோசனைகள் துக்கத்தில் இருப்பவருக்கு உண்மையிலேயே உதவுமா?
பாசமானவர்களைப் பறிகொடுத்த துக்கத்தைப் பிள்ளைகள் எப்படிச் சமாளிக்கலாம்?
யாராவது பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்களா? யாரைக் கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டுவர மாட்டார்?