மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
“உங்கள் எல்லாருக்குள்ளும் யார் தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்.”—லூக். 9:48.
1, 2. இயேசு தம் அப்போஸ்தலர்களுக்கு என்ன அறிவுரை வழங்கினார், ஏன்?
வருடம் கி.பி. 32. இயேசு கலிலேயா மாகாணத்தில் இருந்தார்; அப்போது, அப்போஸ்தலர்கள் மத்தியில் ஒரு பிரச்சினை தலைதூக்கியது. தங்களுக்குள் யார் மிக உயர்ந்தவர் என்று வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றி லூக்கா இவ்வாறு எழுதினார்: “தங்களில் யார் மிக உயர்ந்தவராக இருப்பார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. அவர்களுடைய யோசனைகளை இயேசு அறிந்து, ஒரு சிறுபிள்ளையைக் கொண்டுவந்து தம் பக்கத்தில் நிறுத்தி, ‘இந்தச் சிறுபிள்ளையை என் பெயரை முன்னிட்டு ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான். உங்கள் எல்லாருக்குள்ளும் யார் தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்’ என்று அவர்களிடம் சொன்னார்.” (லூக். 9:46-48) இவ்வாறு, மனத்தாழ்மை காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பொறுமையாக, ஆனால் உறுதியாக, இயேசு தம் அப்போஸ்தலர்களுக்குப் புரிய வைத்தார்.
2 ஒருவர் தன்னைச் சிறியவராக நடத்திக்கொள்ள வேண்டுமென்ற இயேசுவின் அறிவுரை முதல் நூற்றாண்டு யூதர்களுடைய மனப்பான்மைக்கு இசைவாக இருந்ததா? இல்லை. அதற்கு நேரெதிராகத்தான் இருந்தது. அன்று நிலவிய மனப்பான்மையைப் பற்றி புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) இவ்வாறு விளக்குகிறது: ‘எதற்கெடுத்தாலும் “நான் உயர்ந்தவனா, நீ உயர்ந்தவனா?” என்ற கேள்விதான் மக்களிடையே எழுந்தது. ஒவ்வொருவருக்கும் தங்களுடைய சுயகௌரவம்தான் பெரிதாக இருந்தது; அதற்குத்தான் அவர்கள் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.’ அப்படிப்பட்ட மனப்பான்மை தம்முடைய அப்போஸ்தலர்களிடம் இருக்கக் கூடாது என்றே இயேசு அறிவுறுத்தினார்.
3. (அ) ‘சிறியவன்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை எதைக் குறிக்கிறது, அப்படி நடப்பது நமக்கு ஏன் சவாலாக இருக்கலாம்? (ஆ) சிறியவராக நடத்திக்கொள்வது சம்பந்தமாக என்ன கேள்விகள் எழுகின்றன?
3 ‘சிறியவன்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, தன்னடக்கம் காட்டுகிற, மனத்தாழ்மையாய் நடக்கிற, பணிவோடு செயல்படுகிற, எந்தச் செல்வாக்கும் இல்லாத சாதாரண நபரைக் குறிக்கிறது. இயேசு தம்முடைய அப்போஸ்தலர்கள் சிறுபிள்ளைகளைப் போல் மனத்தாழ்மையாகவும் தன்னடக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கற்பித்தார். முதல் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட அந்த அறிவுரை இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறது. நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்வது சில சந்தர்ப்பங்களில் நமக்குச் சவாலாக இருக்கலாம். பெருமை என்ற குணம் புகழைத் தேடி ஓட நம்மைத் தூண்டலாம். போட்டாபோட்டி நிறைந்த இந்த உலகம், நம்மையும்கூட தற்பெருமை பிடித்தவர்களாக, சண்டைக்கு நிற்கிறவர்களாக, மோசடி செய்கிறவர்களாக ஆக்கிவிடலாம். அப்படியானால், சிறியவர்களாக நம்மை நடத்திக்கொள்ள எது நமக்கு உதவும்? ‘தன்னைச் சிறியவராக நடத்திக்கொள்கிற ஒருவர் உயர்ந்தவராக’ இருப்பது எப்படி? வாழ்க்கையில் எந்தெந்த அம்சங்களில் மனத்தாழ்மை காட்ட நாம் கடும் முயற்சியெடுக்க வேண்டும்?
‘ஆ! கடவுளுடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை!’
4, 5. மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
4 மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு வழி... நம்மைவிட யெகோவா எந்தளவு உயர்ந்தவர் என்பதை ஆழ்ந்து சிந்திப்பதாகும். உண்மையைச் சொன்னால், “அவரது அறிவை ஆராய்ந்தறிய முடியாது.” (ஏசா. 40:28, NW) யெகோவாவுடைய மகத்துவத்தின் சில அம்சங்களைக் குறிப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நியாயத்தீர்ப்புகள் ஆராய்ந்தறிய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!” (ரோ. 11:33) பவுல் அந்த வார்த்தைகளை எழுதி ஏறக்குறைய 2,000 வருடங்கள் உருண்டோடிவிட்டன; பல்வேறு துறைகளில் மனித அறிவு சிகரத்தை எட்டியிருக்கிற இந்தச் சமயத்தில்கூட அந்த வார்த்தைகள் உண்மையாய் இருக்கின்றன. நாம் எவ்வளவுதான் கற்றிருந்தாலும்... யெகோவாவை, அவருடைய செயல்களை, அவருடைய வழிகளைப் பற்றிக் கற்றிருப்பது கையளவுதான், கல்லாதது கடலளவு! இதை எண்ணிப் பார்ப்பது நம்மை ஒரு தூசுபோல் உணரச் செய்கிறது!
5 கடவுளுடைய வழிகளை ஆராய்ந்தறிய முடியாது என்பதைப் புரிந்துகொண்டது, தன்னைச் சிறியவராகக் கருத லியோa என்பவருக்கு உதவியது. இளைஞனாக இருந்தபோது விஞ்ஞானத்திடம் அவருக்கு ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டது. வான மண்டலத்தைப் பற்றிய விஷயங்களைக் கரைத்துக் குடிக்கும் ஆசையில், அவர் வான்-இயற்பியல் கல்வி பயின்றார். ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்; “இந்த முழு பிரபஞ்சத்தையும் பற்றிப் புரிந்துகொள்வதற்கு இன்றைய விஞ்ஞான கோட்பாடுகள் மட்டுமே போதாது என்பதை என் படிப்பு எனக்கு உணர்த்தியது. அதனால், அந்தக் கல்வியை நிறுத்திவிட்டு, சட்டக் கல்லூரியில் கால்வைத்தேன்” என்கிறார் அவர். நாளாவட்டத்தில், லியோ அரசாங்க வக்கீல் ஆனார், பிற்பாடு நீதிபதி ஆனார். சில காலம் கழித்து, அவரும் அவரது மனைவியும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தார்கள், சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள், ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்வளவு பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தும் தன்னைச் சிறியவராகக் கருத லியோவுக்கு எது உதவியது? எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரே பதிலளிக்கிறார்: “யெகோவாவையும் இந்தப் பிரபஞ்சத்தையும் பற்றி எவ்வளவுதான் கற்றிருந்தாலும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது என்று புரிந்துகொண்டது உதவியது.”
6, 7. (அ) மனத்தாழ்மை காட்டுவதில் யெகோவா எப்படி நிகரற்ற மாதேவனாக இருக்கிறார்? (ஆ) யெகோவாவின் மனத்தாழ்மையால் ஒருவர் ‘உயர்ந்தவராக’ ஆவது எதை அர்த்தப்படுத்துகிறது?
6 மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள உதவுகிற இன்னொரு வழி... யெகோவாதாமே மனத்தாழ்மை காட்டுகிறார் என்பதை நினைவில் வைப்பதாகும். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: ‘நாம் கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம்’! (1 கொ. 3:9) நிகரற்ற மாதேவனான யெகோவா, அவருடைய வார்த்தையான பைபிளைப் பயன்படுத்தி பிரசங்க வேலை செய்கிற வாய்ப்பை நமக்குக் கொடுத்து நம்மைக் கௌரவிக்கிறார். நாம் நடுகிற, நீர் பாய்ச்சுகிற விதைகளை அவர்தான் வளரச் செய்கிறாரென்றாலும், அவருடன் சேர்ந்து வேலை செய்ய நம்மை நியமித்திருக்கிறார். (1 கொ. 3:6, 7) மனத்தாழ்மையின் மலைப்பூட்டும் எப்பேர்ப்பட்ட முன்மாதிரி! அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்ள உள்ளம் தூண்டப்பட வேண்டும்.
7 மனத்தாழ்மைக்கு மகுடமாய் விளங்கும் யெகோவாவின் முன்மாதிரி தாவீதின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், “உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் [“மனத்தாழ்மை,” NW] என்னைப் பெரியவனாக்கும்” என்று அவர் பாடினார். (2 சா. 22:36) இஸ்ரவேலில் தன்னைப் பெரியவனாக, உயர்ந்தவனாக ஆக்கியது யெகோவாவின் மனத்தாழ்மையே, அதாவது தன்மீது யெகோவா மனத்தாழ்மையோடு கவனம்செலுத்தி உதவியதே, என்பதை அவர் ஒப்புக்கொண்டார். (சங். 113:5-7) நம்முடைய விஷயத்திலும் அது உண்மைதானே? குணங்கள், திறமைகள், பொறுப்புகள் என ‘அனைத்தும் நாம் யெகோவாவிடமிருந்து பெற்றுக்கொண்டதுதானே?’ (1 கொ. 4:7) எனவே, தன்னைச் சிறியவராக நடத்திக்கொள்கிற ஒருவர் ‘உயர்ந்தவராக’ இருக்கிறார் என்பது, அவர் யெகோவாவின் சேவையில் அதிக பிரயோஜனமுள்ளவராக ஆவதை அர்த்தப்படுத்துகிறது. (லூக். 9:48) எவ்விதத்தில் என்று பார்ப்போம்.
‘தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறவன் உயர்ந்தவன்’
8. கடவுளுடைய அமைப்பில் உள்ளவர்களுக்கு மனத்தாழ்மை ஏன் அவசியம்?
8 கடவுளுடைய அமைப்பில் சந்தோஷமாக இருப்பதற்கும் சபைக் காரியங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும் மனத்தாழ்மை அவசியம். உதாரணமாக, பெட்ரா என்ற பெண்ணை எடுத்துக்கொள்வோம். இவள் சத்தியத்தில் வளர்க்கப்பட்டவள். தன் இஷ்டப்படி நடக்க விரும்பியதால் சபைக்குப் போவதையே நிறுத்திக்கொண்டாள். ஆண்டுகள் உருண்டோடின. திரும்பவும் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தாள். இப்போது யெகோவாவின் அமைப்பில் சந்தோஷமாக இருக்கிறாள், சபைக் காரியங்களுக்கு ஆர்வத்துடன் ஆதரவு அளிக்கிறாள். மாற்றத்துக்குக் காரணம்? அவளே சொல்கிறாள்: “இரண்டு முக்கியமான குணங்களை நான் புரிந்துகொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டியிருந்தது—ஒன்று மனத்தாழ்மை, மற்றொன்று தன்னடக்கம்.”
9. மனத்தாழ்மையுள்ள ஒரு நபர் யெகோவா அளிக்கும் ஆன்மீக உணவை எப்படிக் கருதுவார், அந்த ஆன்மீக உணவினால் அவர் எப்படிப் பயனடைவார்?
9 மனத்தாழ்மையுள்ள ஒரு நபர் யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளுக்கும், முக்கியமாக ஆன்மீக உணவிற்கு, மிகவும் நன்றியுள்ளவராக இருப்பார். அந்த நபர் பைபிளை ஊக்கமாகப் படிப்பார், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஆசை ஆசையாக வாசிப்பார். யெகோவாவின் உண்மை ஊழியர்கள் பலரைப் போலவே, புதிய பிரசுரம் ஒவ்வொன்றையும் படித்துவிட்டே அலமாரியில் வைப்பார். நாமும் அவ்வாறே நன்றியுணர்வோடு, மனத்தாழ்மையோடு பைபிள் பிரசுரங்களை வாசித்து, ஆராய்ந்து படித்தால், ஆன்மீக முன்னேற்றம் செய்வோம்; அதோடு, யெகோவாவினால் நன்கு பயன்படுத்தப்படுகிறவர்களாகவும் ஆவோம்.—எபி. 5:13, 14.
10. சபையில் நாம் எவ்வாறு நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்ளலாம்?
10 தன்னைச் சிறியவராக நடத்திக்கொள்கிற ஒருவர் யெகோவாவின் சேவையில் மற்றொரு வழியிலும் ‘உயர்ந்தவராக’ ஆகிறார். ஒவ்வொரு சபையிலும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலில் நியமிக்கப்பட்ட சகோதரர்கள் மூப்பர்களாகச் சேவை செய்கிறார்கள். சபைக் கூட்டங்கள், வெளி ஊழியம், மேய்ப்புச் சந்திப்புகள் எனப் பல ஆன்மீகக் காரியங்களுக்கு ஏற்பாடுகள் செய்கிறார்கள். இந்த ஏற்பாடுகளையெல்லாம் நாம் மனத்தாழ்மையாகவும் மனப்பூர்வமாகவும் ஆதரித்தால், சபையின் சந்தோஷத்திற்கும் சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் பங்களிப்போம். (எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.) நீங்கள் ஒரு மூப்பராகவோ உதவி ஊழியராகவோ சேவை செய்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவா ஒப்படைத்துள்ள இந்தப் பாக்கியத்திற்காக நன்றியுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் மனத்தாழ்மை காட்டுகிறீர்களா?
11, 12. எந்த மனப்பான்மை காட்டுவதால் ஒரு நபர் யெகோவாவின் அமைப்பில் அதிக பயனுள்ளவராக ஆகிறார், ஏன் அப்படிச் சொல்லலாம்?
11 தன்னைச் சிறியவராக நடத்திக்கொள்கிற நபர் மனத்தாழ்மை காட்டுவதால் நல்லவராகவும் யெகோவாவின் அமைப்பில் அதிக பயனுள்ளவராகவும் ஆகிறார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களின் மனப்பான்மை அவருடைய சீடர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்ததால்தான், அவர்கள் தங்களைச் சிறியவர்களாக நடத்திக்கொள்ள வேண்டுமென்று அவர் நினைப்பூட்டினார். “தங்களில் யார் மிக உயர்ந்தவராக இருப்பார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது” என லூக்கா 9:46 சொல்கிறது. நாமும்கூட நம் சக வணக்கத்தாரைவிட அல்லது உலக மக்களைவிட ஏதோவொரு விதத்தில் உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொள்கிறோமா? திரும்பிய பக்கமெல்லாம் திமிர்பிடித்தவர்களும், தன்னலவாதிகளுமே இருக்கிறார்கள். எனவே, மனத்தாழ்மை காட்டுவதன் மூலம் அவர்களுடைய மனப்பான்மை நம்மீது தொற்றிக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி மனத்தாழ்மை காட்டினோமென்றால்... யெகோவாவின் சித்தத்திற்கு முதலிடம் தந்தோமென்றால்... நம் சகோதர சகோதரிகளுக்கு நல்ல நண்பர்களாக, உற்சாக ஊற்றுகளாக இருப்போம்.
12 நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரையை நாம் புரிந்துகொள்ளும்போது, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் மனத்தாழ்மை காட்டத் தூண்டப்படுவோம். அவற்றில் மூன்று அம்சங்களைப் பற்றி இப்போது சிந்திப்போம்.
சிறியவராக நடத்திக்கொள்ள கடும் முயற்சியெடுங்கள்
13, 14. மனத்தாழ்மையுள்ள ஒருவர் தன் மணத்துணையிடம் எப்படி நடந்துகொள்வார், அப்படி நடக்கும்போது திருமண வாழ்வு எப்படியிருக்கும்?
13 மணவாழ்வில். இன்றைய உலகில் அநேகர் தங்கள் சொந்த உரிமைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், மற்றவர்களுடைய உரிமைகளைக் குறித்து துளிகூடக் கவலைப்படுவதில்லை. ஆனால், மனத்தாழ்மையுள்ள நபர் பவுலின் அறிவுரைப்படி ‘சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களையும் ஒருவரையொருவர் பலப்படுத்துகிற காரியங்களையும் நாடிச்செல்லுவார்.’ (ரோ. 14:19) எனவே, மனத்தாழ்மையுள்ள ஒருவர் எல்லோரிடமும், குறிப்பாக தன் மணத்துணையிடம், சமாதானமாய் நடந்துகொள்வார்.
14 உதாரணத்திற்கு, பொழுதுபோக்கு விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இதில் கணவனுக்குப் பிடித்தது மனைவிக்குப் பிடிக்காமல் இருக்கலாம், மனைவிக்குப் பிடித்தது கணவனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஓய்வுநேரத்தில், கணவன் புத்தகமும் கையுமாக வீட்டிலேயே இருக்க விரும்பலாம், மனைவியோ வெளியே போய் சாப்பிட, அல்லது நண்பர்களோடு பொழுதைக் கழிக்க விரும்பலாம். இப்படியொரு சூழ்நிலையில், கணவன் மனத்தாழ்மையோடு தன்னுடைய விருப்புவெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அந்த மனைவி அவருக்கு இன்னுமதிகமாக மதிப்புமரியாதை காட்டத் தூண்டப்படுவாள். அதேபோல், ஒரு மனைவி தன்னுடைய விருப்பத்தை விட்டுக்கொடுத்து கணவனின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, கணவன் அவளை இன்னுமதிகமாக நேசித்து மனதாரப் பாராட்டத் தூண்டப்படுவார். இப்படி, இருவருமே மனத்தாழ்மை காட்ட முந்திக்கொள்ளும்போது திருமண வாழ்வு தேனாய்த் தித்திக்கும்.—பிலிப்பியர் 2:1-4-ஐ வாசியுங்கள்.
15, 16. மீகா 7:7-ன்படி நாம் எந்தக் குணத்தைக் காட்ட வேண்டும், அந்தக் குணம் சபையில் நமக்கு எப்படி உதவும்?
15 சபையில். இவ்வுலகிலுள்ள அநேகர் தாங்கள் ஆசைப்படுவதை உடனடியாக அடைய வேண்டுமெனத் துடிக்கிறார்கள். பொறுமையாய் இருப்பது அவர்களுக்கு வெறுப்பாக இருக்கிறது, காத்திருப்பது கசப்பாக இருக்கிறது. நாமோ மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவுக்காகப் பொறுமையாய்க் காத்திருப்போம். (மீகா 7:7-ஐ வாசியுங்கள்.) அப்படி மனத்தாழ்மையோடு காத்திருந்தோமானால் பாதுகாப்பு, சமாதானம், திருப்தி, ஆசீர்வாதமெல்லாம் நம்முடையதாகும். எனவே, நாமும் மீகாவைப் போலவே பொறுமையோடு யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டும்.
16 யெகோவாவுக்காகக் காத்திருந்தால் தாவீதைப் போலவே நீங்களும் ஆறுதலடைவீர்கள். (சங். 42:5) ஒருவேளை சபைக்கு அதிக உதவியாய் இருக்க வேண்டுமென்பதற்காக ஒரு மூப்பராகச் சேவை செய்ய நீங்கள் விரும்பலாம். (1 தீ. 3:1-7) ஆனால், ஒரு மூப்பராவதற்கு நீங்கள் முதலாவது தகுதிபெற வேண்டும்; அதற்குத் தேவையான குணங்களை வளர்த்துக்கொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ஆனால், அந்தப் பொறுப்பைப் பெற மற்றவர்களைவிட நீங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறதா? தன்னைச் சிறியவராக நடத்திக்கொள்ளும் ஒருவர், சபைப் பொறுப்புகளைப் பெற பொறுமையோடு காத்திருப்பார், யெகோவாவுக்குத் தொடர்ந்து சந்தோஷமாகச் சேவை செய்வார், எந்த நியமிப்பிலும் மகிழ்ச்சி காண்பார்.
17, 18. (அ) மன்னிப்பதும், மன்னிப்புக் கேட்பதும் என்ன நன்மைகளைத் தரும்? (ஆ) நீதிமொழிகள் 6:1-5-ல் என்ன அறிவுரை உள்ளது?
17 பிறரிடம் பழகுவதில். ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்வதுதான் அநேகருக்கு உலக மகா கஷ்டம். ஆனால், கடவுளுடைய ஊழியர்கள் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்பதன் மூலம் மனத்தாழ்மை காட்டுகிறார்கள். மற்றவர்களையும் மன்னிக்கத் தயாராய் இருக்கிறார்கள். பெருமை... உறவுகளை முறிக்கும், மன்னிப்போ... உறவுகளை இணைக்கும்; சபையில் சமாதானத்தைச் செழித்தோங்கச் செய்யும்.
18 தவறு செய்யும் சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல, வேறுபல சந்தர்ப்பங்களிலும் நாம் மனத்தாழ்மையோடு மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கலாம். உதாரணத்திற்கு, ஏதோவொன்று செய்வதாக ஒரு நபரிடம் வாக்குக் கொடுத்திருப்போம், ஆனால் நியாயமான காரணத்திற்காக அதை நம்மால் செய்ய முடியாமல் போயிருக்கும். அதற்கு முழுக்க முழுக்க நாம் காரணமாக இல்லாவிட்டாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாததற்காக மன்னிப்புக் கேட்க மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 6:1-5-ஐ வாசியுங்கள்.
19. நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்ள வேண்டுமென்ற பைபிள் அறிவுரைக்காக நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்?
19 நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்ள வேண்டுமென்ற பைபிள் அறிவுரைக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அப்படி மனத்தாழ்மையோடு நடப்பது சிலசமயம் நமக்குச் சவாலாக இருக்கலாம்; நம்மைவிட எவ்வளவோ உயர்ந்தவரான யெகோவாவே மனத்தாழ்மை காட்டுகிறாரென்பதை அச்சமயங்களில் நாம் நினைவில் வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் மனத்தாழ்மை காட்டத் தூண்டப்படுவோம், யெகோவாவின் சேவையில் அதிக பிரயோஜனமுள்ளவர்களாக ஆவோம். எனவே, நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சிறியவர்களாக நடத்திக்கொள்ள எல்லா முயற்சியும் எடுப்போமாக!
a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.