வயதான பெற்றோர்களிடமாக தேவபக்தியாய் நடந்துகொள்ளுதல்
“இவர்கள் [பிள்ளைகள் அல்லது பேரன் பேத்திகள்] முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக் கொள்ளக்கடவர்கள், அது நன்மையும் தேவனுக்கு முன்பாகக் பிரியமுமாயிருக்கிறது.”—1 தீமோத்தேயு 5:4.
ஒரு குழந்தையாக நீங்கள் பாலூட்டப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்தீர்கள். பெரியவர்களான போது நீங்கள் அவர்களுடைய ஆலோசனையையும் ஆதரவையும் நாடினீர்கள். ஆனால் இப்பொழுதோ அவர்கள் வயதானவர்களாகிவிட்டதால் அவர்களுக்கு யாருடைய ஆதாரவாவது தேவைப்படுகிறது. பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு சொல்லுகிறான்: “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால் இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபத்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும் அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”—1 தீமோத்தேயு 5:4, 8.
2 இன்றுள்ள ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வயதான பெற்றோர்களைப் பராமரித்து வருகிறார்கள். இதை அவர்கள் “தயவான செயல்” அல்லது “கடமை” என்று அல்ல, அனால் “தேவ பக்தி”யின் காரணத்தால், அதாவது கடவுளுக்குப் பக்தி காண்பிக்கும் ஆட்களாக அப்படிச் செய்து வருகிறார்கள். தேவையிலிருக்கும் பெற்றோரை கைவிட்டுவிடுவது ‘[கிறிஸ்தவ] விசுவாசத்தை மறுதலிப்பதாக’ இருக்கும் என்பதை அவர்கள் மதித்துணருகிறார்கள்.—தீத்து 1:16-ஐ ஒப்பிடவும்.
அவர்களைக் கவனிக்கும் ‘பாரத்தைச் சுமப்பீர்களாக’
3 வயது சென்ற பெற்றோரைக் கவனிப்பதானது மேற்கத்திய நாடுகளில் ஒரு பெரும் சவாலாகிவிட்டிருக்கிறது. குடும்பங்கள் சிதருண்டு காணப்படுகின்றன. விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டை மீறிவிட்டது. வீட்டுப் பெண்களில் பலர் உலகப்பிரகாரமான ஒரு வேலையிலிருக்கிறார்கள். எனவே முதுமை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் பெற்றோரைக் கவனிப்பது ஒரு பெரிய பொறுப்பாக இருக்கிறது. அதிலும் கவனிப்பவர்கள் தாமே இளவயதினராக இல்லாதபோது அது கடினமான ஒரு பொறுப்பாக இருக்கக்கூடும். தன்னுடைய பெற்றோரைக் கவனிக்கப் போராடுகிறவளாய் ஒரு சகோதரி பின்வருமாறு சொல்லுகிறாள்: “உதவி தேவைப்படும் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் கொண்டிருக்கும் நாங்கள் தாமே 50-களில் இருக்கிறோம்.”
4 இந்தப் பொறுப்பைப் “பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது” பகிர்ந்து கொள்ளலாம் என்று பவுல் குறிப்பிட்டான். (1 தீமோத்தேயு 5:4) சில சமயங்களில் பிள்ளைகளில் சிலர் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனமற்றவர்களாயிருக்கின்றனர். (கலாத்தியர் 6:5-ஐ ஒப்பிடவும்) “என்னுடைய சகோதரி இந்த நிலையில் கைகழுவிவிட்டாள்,” என்று ஒரு மூப்பர் முறையிடுகிறார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு போக்கு யெகோவா தேவனுக்குப் பிரியமாயிருக்குமா? இயேசு ஒருமுறை பரிசேயரிடம் என்ன சொன்னார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: “‘உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக,’ என்று மோசே சொல்லியிருக்கிறாரே . . . நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் (கடவுளுக்கு அற்பணித்த காணிக்கையாகக்) கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல் நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்.”—மாற்கு 7:10-13.
5 ஒரு யூதன் உதவியற்ற நிலையிலுள்ள தன்னுடைய பெற்றோரைக் கவனிக்க அல்லது உதவிசெய்ய மனமற்றவனாயிருந்தால், அவன் தன்னுடைய உடைமைகளைக் “கொர்பான்” என்னும் காணிக்கையாக—ஆலய உபயோகத்திற்காக ஒதுக்கப்படும் ஒரு காணிக்கையாக அறிக்கை செய்துவிட வேண்டியதுதான். (லேவியராகமம் 27:1-24) என்றபோதிலும் இப்படிப்பட்ட ஒரு காணிக்கையைக் கொடுக்க வேண்டிய உடனடியான நிபந்தனையின் கீழ் அவன் இல்லை. இவ்வாறாக, தன்னுடைய உடைமைகளை நிரந்தரமாக வைத்துக் கொள்ளவும் (பயன்படுத்தவும்) கூடும். ஆனால் அவனுடைய பெற்றோருக்கு நிதி உதவி தேவைப்பட்டால், தான் வைத்திருக்கும் எல்லாமே “கொர்பான்” என்னும் காணிக்கை என்று பக்திமான் போன்று அறிக்கை செய்து தன்னுடைய கடமையிலிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடும். இந்த ஏமாற்றுதலை இயேசு கண்டனம் செய்தார்.
6 தன்னுடைய கடமையிலிருந்து விலகிக்கொள்வதற்கு சாக்குப் போக்குகளைப் பயன்படுத்தும் ஒரு கிறிஸ்தவன் கடவுளை ஏமாற்ற முடியாது. (எரேமியா 17:9, 10) பொருளாதாரப் பிரச்னைகள், உடல் நலக்குறைவு, அல்லது இதுபோன்ற சூழ்நிலைகள் ஒருவர் தன் பெற்றோருக்கு எவ்வளவு செய்ய முடியும் என்பதை மட்டுப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் சிலர் உடைமைகளையும், நேரத்தையும், தங்கள் செளகரியத்தையும் பெற்றோரின் நலனைவிட அதிகமாக மதிப்பிடக்கூடும். கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கித்தபோதிலும் நம்முடைய பெற்றோரிடமாக செயலில் காண்பிக்காததன் மூலம் அதை “அவமாக்கிப்போடுவது” எந்தளவுக்கு மாய்மாலத்தனமாக இருக்கும்!
குடும்ப ஒத்துழைப்பு
7 வயதான பெற்றோரை உட்படுத்தும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படுமானால், ஒரு குடும்ப மாநாட்டைக் கூட்டுவது நல்லது என்று சில நிபுணர்கள் சிபாரிசு செய்கின்றனர். குடும்பத்தில் ஒருவர் பேரளவான உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கலாம். ஆனால் அமைதலாகவும், சாதனை மனப்பான்மையுடனும் ‘கலந்து ஆலோசித்தால்,’ இது சம்பந்தப்பட்ட வேலை பளுவைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளைக் குடும்பங்கள் கண்டுபிடித்து அவற்றை செயல்படுத்த முடியும். வெகு தூரத்தில் வசிக்கும் குடும்ப அங்கத்தினர் பொருள் சம்பந்தமான உதவியை அளிப்பதும் அடிக்கடி அவர்களைப் பார்த்துச் செல்வதும் அவர்களுக்குக் கூடிய காரியமாயிருக்கலாம். மற்றவர்கள் சில இடைக்கால வேலைகளைச் செய்யவும் போக்குவரத்துக்குரிய அம்சத்தைப் பார்த்துக்கொள்ளவுங்கூடும். ஏன், பெற்றோரை இடைவிடாமல் சந்திப்பதற்கு ஒப்புக்கொள்வதும் கூட மிகச் சிறந்த உதவியாக இருக்கக்கூடும். தன்னுடைய 80-களிலிருக்கும் ஒரு சகோதரி, தன் பிள்ளைகளின் சந்திப்புகள் குறித்து சொல்கிறாள்: “அவை சத்துள்ள மருந்துபோல இருக்கிறது!”
8 குடும்ப அங்கத்தினரில் ஒருவர் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருப்பாரானால் அப்படிப்பட்ட குடும்பங்கள் இக்கட்டான ஒரு நிலையை எதிர்ப்படக்கூடும். இப்படிப்பட்ட உத்தரவாதங்களிலிருந்து முழுநேர ஊழியர்கள் தங்களை விலக்கிக் கொள்வதில்லை; தங்களுடைய பெற்றோரைக் கவனிப்பதற்காக அநேக பெற்றோர்கள் அளவு கடந்த முயற்சிகளை எடுத்திருக்கின்றனர். வட்டார கண்காணி ஒருவர் சொல்லுகிறார்: “எங்களுடைய பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சரீரப்பிரகாரமாகவும் உணர்ச்சி சம்பந்தமாகவும் பெரும் அழுத்தமாக இருக்கக்கூடும் என்பதை நாங்கள் நினைத்துப் பார்த்ததில்லை, விசேஷமாக அந்தக் கவனிப்போடுகூட முழுநேர ஊழியத்தின் தகுதிகளை நிறைவேற்றுவதற்கு முயலும்போது அப்படி இருக்கிறது. ஆம், எங்களுடைய சகிப்புத்தன்மையின் எல்லைக்கு அது எங்களைக் கொண்டு வந்துவிட்டிருக்கிறது, ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையின்’ தேவையை நாங்கள் உணர்ந்ததுண்டு.” (2 கொரிந்தியர் 4:7) இப்படிப்பட்டவர்களையும் யெகோவா தொடர்ந்து காத்துவருவாராக.
9 என்றபோதிலும், சில சமயங்களில், எல்லா வழிவகைகளையும் சிந்தித்த பின்பும் ஒரு குடும்ப அங்கத்தினர் முழுநேர ஊழியத்தை விட்டுவிட வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லாமலிருக்கலாம். அப்படிப்பட்ட நிலையிலுள்ள நபர் தன்னுடைய ஊழிய சிலாக்கியங்களை விட்டுவிடுவது குறித்து துயர் கலந்த உணர்ச்சிகளைக் கொண்டிருக்கக்கூடும். ‘வயதான என்னுடைய தாயைக் கவனித்துக் கொள்வது எங்களுடைய கிறிஸ்தவ கடமை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,’ என்கிறார் ஒரு கிறிஸ்தவ மிஷனரி. ‘ஆனால் அது சில சமயங்களில் அபூர்வச் செயலாகத் தென்படக்கூடும்’ என்றாலும் ‘வீட்டில் தேவபக்தியை நடைமுறைப்படுத்துவது தேவனுக்கு முன்பாகப் பிரியமாயிருக்கிறது’ என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (1 தீமோத்தேயு 5:4) அதே சமயத்தில், “உங்கள் கிரியையையும் நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) அநேக ஆண்டுகளாக முழுநேர ஊழியத்தைச் செய்து வந்த ஒரு தம்பதியர் அதை விட்டுவிட நேர்ந்தபோது அவர்கள் சொன்னதாவது: “அதை நோக்கியபடி நாங்கள் முழுநேர ஊழியத்தில் இருந்தது எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு இப்பொழுது முக்கியமாக இருப்பது எங்களுடைய பெற்றோரைக் கவனிப்பது.”
10 ‘உனக்குத்தான் ஒரு வேலையோ அல்லது குடும்பப் பாரமோ கிடையாதே. எனவே நீ ஏன் அப்பாவையும் அம்மாவையும் கவனித்துக் கொள்ளக்கூடாது?’ என்று உறவினர்கள் விவாதித்ததனால் சிலர் அவசரப்பட்டு முழு நேர ஊழியத்தை விட்டுவிட்டிருக்கிறார்கள். என்றபோதிலும், இன்று செய்யப்பட்டுவரும் வேலைகளில் பிரசங்கவேலை மிக அவசரமான வேலை அல்லவா? (மத்தேயு 24:14; 28:19, 20) எனவே முழுநேர ஊழியத்தில் இருப்பவர்கள் ஒரு முக்கியமான வேலையைச் செய்து வருகிறார்கள். (1 தீமோத்தேயு 4:16) சில சூழ்நிலைமைகளின் கீழ், கடவுளுடைய ஊழியம் குடும்ப விவகாரங்களைவிட முக்கியமான முதலிடத்தைக் கொண்டிருக்கும் என்று இயேசு குறிப்பிட்டார்.
11 உதாரணமாக, “முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்,” என்று சொல்லி தம்மைப் பின்பற்றுவதற்கான இயேசுவின் அழைப்புக்கு ஒருவன் மறுப்பு தெரிவித்தான். அதற்கு இயேசு கொடுத்த பதில்: “[ஆவிக்குரிய பிரகாரமாய்] மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி.” (லூக்கா 9:59, 60) மரித்தவர்களை மரணமடைந்த அதே நாளில் அடக்கம் பண்ணுவது யூதர்களின் முறைமையாதலால், அந்த மனிதனின் தகப்பன் அன்று மரித்திருக்க முடியாது. எனவே அவன் தன்னுடைய வயதுசென்ற தகப்பன் மரிக்கும் வரை வெறுமென அவரோடிருக்க விரும்பினான். என்றபோதிலும், இந்தக் கவனிப்பைக் கொடுப்பதற்கு அங்கு மற்ற உறவினர்கள் இருந்ததால் அவனை “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி” என்று இயேசு உற்சாகப்படுத்தினார்.
12 இதுபோல, சில குடும்பங்களில் எல்லா அங்கத்தினர்களும் ஒத்துழைக்கும்போது, முழுநேர ஊழியத்தில் இருப்பவருங்கூட ஊழியத்தை விட்டுவிடாமலேயே பெற்றோரைக் கவனிக்கும் உத்தரவாதத்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடிந்திருக்கிறது. உதாரணமாக, சில முழுநேர ஊழியர்கள் தங்கள் பெற்றோருக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறைகளின்போதும் உதவி செய்கின்றனர். அக்கறைத் தூண்டுவதாயிருக்கும் காரியம் என்னவெனில், சில வயதான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் முழுநேர ஊழியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியிருக்கின்றனர். தங்களுடைய பாகத்தில் ஓரளவுத் தியாகத்தை உட்படுத்தியபோதிலும் அப்படிச் செய்திருக்கின்றனர். ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைப்பவர்களை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதிக்கிறார்.—மத்தேயு 6:33
பெற்றோர் உங்களோடிருக்க வரும்போது “ஞானமும்” “விவேகமும்”
13 இயேசு விதவையாயிருந்த தம்முடைய தாய் விசுவாச குடும்பத்தாருடன் இருப்பதற்கு ஏற்பாடு செய்தார். (யோவான் 19:25-27) அதுபோல அநேக சாட்சிகள் தங்களுடைய பெற்றோர் தங்களோடிருக்கும்படியாக அவர்களை அழைத்திருக்கிறார்கள்—இதன் பலனாக அவர்கள் சந்தோஷமான சமயங்களையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்திருக்கின்றனர். என்றபோதும், ஒத்துப்போகாத வாழ்க்கைப் பாணிகள், தனிவசதிக் குறைவு, நாள்தோறும் கவனிப்பதால் ஏற்படும் அலுப்பு மற்றும் அழுத்தம் ஆகிய காரியங்கள் பெற்றோரைத் தங்களோடு வைத்துக்கொள்வதை சலிப்புள்ள காரியமாக்குகிறது. “அம்மாவைக் கவனிப்பது சில வேளைகளில் அழுத்தத்தைக் கூட்டியிருக்கிறது,” என்கிறாள் ஆன், இவளுடைய மாமியார் முதுமையால் ஏற்படும் மனக்கோளாறினால் அவதியுறுகிறார்கள். “சில சமயங்களில் நான் பொறுமையை இழந்து விடுகிறேன், தயவற்றவிதத்திலும் பேசிவிடுகிறேன்—அதுதானே என்னை உறுத்துகிறது.”
14 சாலொமோன் சொன்னான்: “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு விவேகத்தினாலே நிலை நிறுத்தப்படும்.” (நீதிமொழிகள் 24:3) உதாரணமாக ஆன், தன்னுடைய மாமியாரின் பிரச்னையைப் புரிந்து கையாள முற்பட்டிருக்கிறாள், “அவளுக்கு ஒரு பலவீனம் இருக்கிறது. அவள் வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்வதில்லை என்பது எனக்குத் தெரியும்.” இருந்தாலும், “நாம் எல்லோரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம். ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனாயிருக்கிறான்.” (யாக்கோபு 3:2) ஆனால் சச்சரவுகள் ஏற்படும்போது, கோபம் அல்லது எரிச்சல் வளருவதைக் கட்டுப்படுத்துவதில் ஞானத்தை வெளிப்படுத்துங்கள். (எபேசியர் 4:31, 32) காரியங்களைக் குடும்பமாகச் சேர்ந்து பேசுங்கள், ஒத்துப்போவதற்கும் சிறுசிறு மாற்றங்களைச் செய்து கொள்வதற்குமான வழிகளை நாடுங்கள்.
15 திறம்பட்ட விதத்தில் பேச்சுத் தொடர்பைக் கொண்டிருப்பதற்கு விவேகமும் உதவுகிறது. (நீதிமொழிகள் 20:5) புதிய வீட்டில் தங்களை வசதியாக வைத்துக் கொள்வதில் பெற்றோர் சிரமப்படலாம். அல்லது சரியாக நிதானிக்கத் தவறுவதால் ஒத்துழைக்காமலிருக்கலாம். சில சூழ்நிலைமைகளின்கீழ் சற்று உறுதியுடன் பேசுவதைத் தவிர வேறு வழி இருக்காது. (ஆதியாகமம் 43:6-11) “அப்படிச் செய்யக்கூடாது என்று என் அம்மாவிடம் நான் சொல்லாமலிருந்தால், அவள் தன்னுடைய எல்லா பணத்தையும் செலவழித்துவிடுவாள்,” என்று ஒரு சகோதரி சொல்லுகிறாள். என்றாலும், சில சமயங்களில் ஒரு மூப்பர், தன்னுடைய தாய்க்குத் தன்பேரிலுள்ள பாசத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். “அநேக சமயங்களில் நியாயங்களை எடுத்துக் காட்டுவது வெற்றிபெறவில்லையென்றால், நான், ‘அம்மா இதைத் தயவுசெய்து எனக்காக செய்து விடுகிறீர்களா?’ என்று சொல்லிவிடுவேன். அவளும் அதற்கு இசைந்துவிடுகிறாள்.
16 பெரும்பகுதியான பாரத்தை மனைவி தானே தாங்கவேண்டியதாயிருப்பதால், விவேகமுள்ள ஒரு கணவன் அவள் உணாச்சியிலும், சரீரத்திலும் ஆவியிலும் சோர்வடைந்துவிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும். நீதிமொழிகள் 24:10 சொல்லுகிறது: “ஆபத்துக் காலத்திலே நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.” தன்னுடைய மனைவியின் உற்சாகத்தை மீண்டும் புதுப்பித்திட ஒரு கணவன் என்ன செய்யலாம்? “என் கணவன் வீட்டிற்கு வந்து, என் தோளைச் சுற்றி தன் கைகளைப் போட்டுக்கொண்டு தான் என்னைத் தான் அதிகமாகப் போற்றுதவதாகக் கூறுவார். அவர் இல்லாமல் நான் இவ்வளவு செய்திருக்க முடியாது!” என்று ஒரு சகோதரி சொல்லுகிறாள். (எபேசியர் 5:25, 28, 29) அவன் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து பைபிளைப் படிக்கலாம், ஒழுங்காக ஜெபம் செய்யலாம். ஆம், இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலுங்கூட குடும்பம் “கட்டப்படலாம்.”
மருத்துவ விடுதி கவனிப்பு
17 முதுமையடைவதன் பேரில் ஆராய்ச்சி நிபுணராகிய ஒருவர் பின்வருமாறு சொல்லுகிறார்: “[பெற்றோரை] வீட்டில் வைப்பதற்கு அவர்களைக் கவனிக்கும் திறமையுள்ள ஆட்களும் இல்லை, பணமும் இல்லை என்ற ஒரு கட்டம் வந்துவிடுகிறது.” கணவர் ஒருவர் சொல்லுகிறார்: “என்னுடைய தாயாருக்கு 24 மணிநேர கவனிப்பைக் கொடுப்பதில் என் மனைவியின் உடல் நலம் மோசமடைந்துவிட்டது. வேறு வழி இல்லாமல் அம்மாவை மருத்துவ விடுதியில் சேர்த்தோம். ஆனால் இப்படிச் செய்வது எங்கள் இருதயத்துக்கு வேதனையாயிருந்தது.”
18 இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மருத்துவ விடுதி கவனிப்புதான் மிகச் சிறந்ததாயிருக்கக்கூடும். என்றபோதிலும், இப்படிப்பட்ட இடத்தில் சேர்க்கப்படும் முதியோர், கைவிடப்பட்டதாக நினைத்து மனங்கலங்குகின்றனர், வருத்தப்படுகின்றனர். “நாங்கள் ஏன் இதைச் செய்யவேண்டியதாக இருக்கிறது என்பதை அம்மாவிடம் மிக கவனமாக விளக்கினோம்,” என்று ஒரு சகோதரி சொல்லுகிறாள். இவளை நாம் கிரேட்டா என்று அழைப்போம். “அவள் இப்பொழுது அந்தச் சூழ்நிலைக்கேற்ப தன்னை அமைத்துக்கொள்ளக் கற்றுக் கொண்டாள், மற்றும் அந்த இடத்தைத் தன் வீடாக நோக்குகிறாள்.” இந்த மாற்றங்களுக்குத் தாங்கள் ஒத்துப்போக பெற்றோரை இடைவிடாமல் சந்திப்பதுங்கூட அவர்கள் பேரில் உங்களுக்கு இருக்கும் அன்பின் உண்மையான தன்மையை நிரூபிக்கிறது. (2 கொரிந்தியர் 8:8-ஐ ஒப்பிடவும்) தூரம் பிரச்னையாக இருந்தால், தொலைப்பேசி மற்றும் கடிதங்கள் முலமாகவும், அவ்வப்போது அவர்களைச் சந்திக்கச் செல்வதன் மூலமாகவும் அவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள். (2 யோவான் 12-ஐ ஒப்பிடவும்) உலகப் பிரகாரமான ஆட்கள் மத்தியில் வாழ்வதுங்கூட அதன் குறைகளை உடையதாயிருக்கிறது. ‘அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாய்” இருங்கள். (மத்தேயு 5:3) “வாசிப்பதற்கு வேண்டியதை அம்மாவுக்கு அளிக்கிறோம், மற்றும் முடிந்தளவுக்கு அவர்களுடன் ஆவிக்குரிய காரியங்களைக் கலந்து பேசுகிறோம்,” என்கிறாள் கிரேட்டா.
19 ஐக்கிய மாகாணங்களிலுள்ள 406 மருத்துவ விடுதிகளை ஆய்வு செய்து அதன் பேரிலான சில முடிவுகளை தி உவால் ஸ்டிரீட் ஜர்னல் அறிக்கை செய்தது. அதன்படி, “ஐந்தில் ஒரு பகுதி விடுதிகள் வசிப்பதற்கு ஆபத்தானவையாயிருந்தது, பாதிதான் குறைந்த பட்ச தராதரத்தைப் பூர்த்தி செய்தது.” இப்படிப்பட்ட அறிக்கைகள் சர்வசாதாரணமானவை என்பதைக் குறிப்பிடுவது வருத்தத்திற்குரியது. எனவே மருத்துவ விடுதி கவனிப்பு அவசியமாயிருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் விடுதியைக் குறித்து கவனமாயிருங்கள். அப்படிப்பட்ட ஒரு விடுதி, சுத்தமாகவும், நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தகுதிபெற்ற ஆட்களை உடையதாகவும், வீட்டு சூழ்நிலையை அளிப்பதாகவும், போதுமான உணவு அளிப்பதாகவும் இருக்கின்றனவா என்பதைக் காண தனிப்பட்ட விதத்தில் விஜயம் செய்து நேரில் பாருங்கள். உங்கள் பெற்றோருக்குக் கொடுக்கப்படும் கவனிப்பைக் கூடுமானவரை நீங்கள் நெருங்க கவனித்து வாருங்கள். அவர்கள் சார்பில் பேசுகிறவர்களாயிருங்கள். உலகப்பிரகாரமான கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் சம்பந்தமாக எழக்கூடிய சங்கடமான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். உங்களுடைய சூழ்நிலைமைக்கேற்ப உங்கள் பெற்றோருக்கு மிகச் சிறந்த கவனிப்பை அளிப்பதன் மூலம், உங்களை வேதனைப்படுத்தக்கூடிய குற்ற உணர்வுகளிலிருந்தும் மன உறுத்தங்களிலிருந்தும் நீங்கள் விலகியிருக்கலாம்.—2 கொரிந்தியர் 1:12-ஐ ஒப்பிடவும்.
சந்தோஷமாய்க் கொடுக்கிறவர்கள், சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்
20 தன்னுடைய பெற்றோரைக் கவனித்து வருவது “கஷ்டமாக இருக்கிறது,” என்கிறாள் ஒரு கிறிஸ்தவ பெண். “நான் அவர்களுக்காக சமைக்க வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும், அழுகையை சமாளிக்க வேண்டும், பேர்வைகளை மாற்ற வேண்டும்.” “ஆனால் நாங்கள் அவர்களுக்காக எதைச் செய்தாலும் அதைச் சந்தோஷமாக—மகிழ்ச்சியோடு செய்தோம்,” என்கிறார் அவளுடைய கணவர். “அவர்களைக் கவனிப்பதில் பின்வாங்குகிறோம் என்று அவர்கள் நினைத்துவிடாதபடிக்கு எங்களாலானவற்றையெல்லாம் செய்தோம்.” (2 கொரிந்தியர் 9:7) பெரியவர்கள் சாதாரணமாக உதவியை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்புவதில்லை. எனவே நீங்கள் காண்பிக்கும் மனநிலை இக்கட்டான ஒன்று.
21 அதே சமயத்தில் பெற்றோர் வெளிப்படுத்தும் மனப்பான்மையும் முக்கியமானது. ஒரு சகோதரி சொல்லுகிறாள்: “நான் எவ்வளவு செய்தாலும், அதில் அவர்களுக்குத் திருப்தி இருப்பதில்லை.” எனவே பெற்றோர்களே, நியாயமற்றவர்களாக இருப்பதை அல்லது அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதைத் தவிருங்கள். பைபிள் இதைத்தானே சொல்லுகிறது: “பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டும்.” (2 கொரிந்தியர் 12:14) சில பெற்றோர் தங்ளுடைய சொத்துக்களை அழித்துவிட்டு தங்களுடைய பிள்ளைகளுக்கு அனாவசியமாக பாரமாகிவிடுகிறார்கள். என்றபோதிலும் நீதிமொழிகள் 13:22 சொல்லுகிறது: “நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப் போகிறான்.” கூடுமானவரை பெற்றோர் மூப்புக் காலத்திற்காக பணத்தை ஒதுக்கி வைப்பதற்கும் தங்களைக் கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைப்பதற்கும் முன்னதாகவே திட்டமிடலாம்.—நீதமொழிகள் 21:5.
22 பெற்றோரைக் கவனிப்பது “பதில் நன்மை செய்வதாகும்” என்று பவுல் பொருத்தமாகச் சொன்னான். (1 தீமோத்தேயு 5:4) ஒரு சகோதரர் சொல்லுகிறார்: “அம்மா என்னை 20 வருடங்களாகக் கவனித்து வந்தார்கள். அதற்கு ஈடாக நான் என்ன செய்திருக்கிறேன்?” கடவுளால் அபரிமிதமாக பலனளிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தவர்களாய், வயதான பெற்றோர்களையுடைய எல்லா கிறிஸ்தவர்களும் அதுபோல் ‘வீட்டில் தேவ பக்தியை அப்பியாசிக்கிறவர்களாக’ இருக்கக்கடவர்கள். தங்களுடைய பெற்றோரைக் கனப்படுத்துவோருக்குக் கடவுள் பின்வருமாறு வாக்களிக்கிறார்: ‘பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருக்கும்.”—எபேசியர் 6:3. (w87 6/1)
நினைவிற்கொள்ள வேண்டிய குறிப்புகள்
◻ இயேசுவின் நாளில் எப்படிச் சிலர் தங்களுடைய பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்தனர்?
◻ வயதான பெற்றோர்களை யார் கவனிக்க வேண்டும்? ஏன்?
◻ பெற்றோர் உங்களோடிருக்க வரும்போது குடும்பங்கள் என்ன பிரச்னைகளை எதிர்படக்கூடும்? அவை எப்படி மேற்கொள்ளப்படலாம்?
◻ மருத்துவ விடுதி கவனிப்பு ஏன் அவசியப்படலாம்? அதற்குத் தங்களை அமைத்துக்கொள்ள அவர்கள் எப்படி உதவப்படலாம்.
[கேள்விகள்]
1, 2. (எ) வயதாகும் பெற்றோரைக் கவனிக்கும் உத்தரவாதம் யாருடையது என்று பைபிள் சொல்லுகிறது? (பி) ஒரு கிறிஸ்தவன் இந்தக் கடமையில் தவறுவது ஏன் வினைமையான ஒரு காரியம்?
3. தன்னுடைய பெற்றோரைக் கவனிப்பது ஏன் ஒரு சவாலாக இருக்கக்கூடும்?
4, 5. (எ) கவனிக்கும் பாரத்தை யாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று பைபிள் காண்பிக்கிறது? (பி) இயேசுவின் நாளில் எப்படிச் சிலர் தங்களுடைய பெற்றோரைக் கவனிக்கும் உத்தரவாதத்தைத் தட்டிக்கழித்தனர்?
6. பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதை இன்று சிலர் எப்படித் தட்டிக்கழிக்கக்கூடும்? இது கடவுளுக்குப் பிரியமானதா?
7. வயதான ஒரு பெற்றோரைக் கவனிக்கும் காரியத்தில் குடும்பங்கள் எப்படி ஒத்துழைக்கலாம்?
8. (எ) தங்களுடைய பெற்றோரைக் கவனிக்கும் உத்தரவாதத்திலிருந்து முழுநேர ஊழியத்திலிருக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கு விலக்கு உண்டா?
9. பெற்றோரைக் கவனிப்பதற்கு வேறு வழி இல்லாமல் முழு நேர ஊழியத்தை விட்டுவிட்டிருக்கும் ஆட்களுக்கு என்ன உற்சாகத்தை அளிக்கலாம்?
10. (எ) ஏன் சிலர் அவசரப்பட்டு முழுநேர ஊழியத்தை விட்டுவிட்டிருக்கக்கூடும்? (பி) முழுநேர ஊழியத்தை குடும்பங்கள் எப்படி நோக்க வேண்டும்?
11, 12. (எ) “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்” என்று இயேசு ஏன் அந்த மனிதனிடம் சொன்னார்? (பி) குடும்ப அங்கத்தினரில் ஒருவர் முழுநேர ஊழியத்தில் இருக்கும்போது சில குடும்பங்கள் என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன?
13. பெற்றோர் தங்களோடு வந்து இருப்பதற்கு அழைக்கப்படும்போது, என்ன பிரச்னைகள் எழும்பக்கூடும்?
14, 15. இந்தச் சூழ்நிலைகளில் ஒரு குடும்பத்தைக் ‘கட்டுவதற்கு’ “ஞானமும்” “விவேகமும்” எப்படி உதவக்கூடும்?
16. அன்பான கணவன் தன்னுடைய மனைவியிடமாக ஏன் “விவேகமாய்” நடந்துகொள்வான்? இதை அவன் எப்படிச் செய்யலாம்?
17, 18, (எ) சில குடும்பங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வற்புறுத்தப்பட்டிருக்கின்றன? (பி) இப்படிப்பட்ட விஷயங்களில், தங்களுடைய பெற்றோர் ஒத்துப்போக வளர்ந்த பிள்ளைகள் அவர்களுக்கு எப்படி உதவலாம்?
19. (எ) மருத்துவ விடுதி கவனிப்பைக் கொடுப்பதற்கு முன்பு மருத்துவ விடுதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து என்ன காரியத்தைக் கவனிக்க வேண்டும்? (பி) தன்னுடைய பெற்றோரைக் கவனிக்கும் காரியத்தில் தன்னாலானவற்றையெல்லாம் செய்யும் ஒரு கிறிஸ்தவனுக்கு அது எப்படிப் பலனளிக்கிறது?
20. பிள்ளைகள் ஏன் சந்தோஷமாய்க் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்?
21. (எ) பெற்றோர் எப்படிச் சந்தோஷமாகப் பெறுகிறவர்களாயிருக்க வேண்டும்? (பி) பெற்றோர் தங்களுடைய முதுமைக் காலத்துக்காக முன்னதாகவே திட்டமிடுவது ஏன் ஞானமானது?
22. தன்னுடைய வயதாகும் பெற்றோரைக் கவனிப்பதற்குத் தான் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை ஒருவர் எப்படிக் கருத வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
பெற்றோரைக் கவனிக்கும் காரியம் எப்படிப் பகிர்ந்து கொள்ளப்படலாம் என்பதைக் கலந்தாலோசிக்க ஒரு குடும்ப மாநாட்டைக் கூட்டலாம்
[பக்கம் 20-ன் படம்]
மருத்துவ விடுதி கவனிப்பு அவசியப்படும்போது, முதியோரின் உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய நலத்திற்காக அவர்களை இடைவிடாமல் சந்தித்து வருவது அதிக அவசியம்