கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெறுதல்
‘முழுக்காட்டுதல் பெற எனக்கு என்ன தடை?’—அப்போஸ்தலர் 8:36, NW.
1, 2. எத்தியோப்பிய அதிகாரியிடம் பிலிப்பு எப்படிப் பேச்சுக்கொடுத்தார், அந்த அதிகாரிக்கு ஆன்மீக சிந்தை இருந்ததை எது காண்பிக்கிறது?
இயேசு மரித்து ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஓர் அரசாங்க அதிகாரி எருசலேமிலிருந்து காசாவிற்கு தெற்கு நோக்கி ரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். களைப்பூட்டும் அந்தப் பயணத்தை இன்னும் ஏறக்குறைய 1,500 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் தொடர வேண்டியிருந்தது. தேவபக்திமிக்க இந்த அதிகாரி, யெகோவாவை வணங்குவதற்காக எத்தியோப்பியாவிலிருந்து எருசலேம்வரைக்கும் வெகு தூரம் பயணம் செய்திருந்தார். அங்கிருந்து திரும்பிப் பயணித்தபோது, நேரத்தை வீணாக்காமல் கடவுளுடைய வார்த்தையை வாசித்துக்கொண்டே வந்தார்—எப்பேர்ப்பட்ட விசுவாசம்! அவருடைய உண்மை மனதைக் கவனித்த யெகோவா, ஒரு தேவதூதன் மூலம் சீஷனான பிலிப்புவை அவரிடம் பிரசங்கிக்கும்படி அனுப்பினார்.—அப்போஸ்தலர் 8:26-28.
2 அந்த எத்தியோப்பிய அதிகாரியிடம் பேச்சுக்கொடுப்பது பிலிப்புவுக்கு எளிதாக இருந்தது, ஏனென்றால், அக்காலத்து வழக்கப்படி அந்த அதிகாரி சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தார். அதனால், ஏசாயாவின் சுருளிலிருந்து அவர் வாசித்துக்கொண்டிருந்ததை பிலிப்புவால் கேட்க முடிந்தது. பிலிப்பு கேட்ட பின்வரும் எளிய கேள்வி அவருடைய ஆர்வத்தைக் கிளறியது: “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” இப்படிக் கேட்ட பிறகு ஏசாயா 53:7, 8-ஐ அவர் விளக்கினார். அதன்பின், ‘இயேசுவைக் குறித்து அவருக்குப் பிரசங்கித்தார்.’—அப்போஸ்தலர் 8:29-35.
3, 4. (அ) எத்தியோப்பிய அதிகாரிக்கு பிலிப்பு ஏன் உடனடியாக முழுக்காட்டுதல் கொடுத்தார்? (ஆ) என்ன கேள்விகளை இப்போது நாம் சிந்திப்போம்?
3 கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் பங்கைப் பற்றியும், கிறிஸ்துவின் முழுக்காட்டப்பட்ட சீஷனாக ஆவதன் அவசியத்தைப் பற்றியும் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே அந்த எத்தியோப்பிய அதிகாரி புரிந்துகொண்டார். பிறகு, தண்ணீரிருந்த ஓர் இடத்தைப் பார்த்ததும், ‘முழுக்காட்டுதல் பெற எனக்கு என்ன தடை?’ என்று பிலிப்புவிடம் கேட்டார். இதுபோன்ற சம்பவங்கள் அசாதாரணமாக நிகழ்பவைதான். யூத மதத்திற்கு மாறியிருந்த விசுவாசமிக்க அந்த அதிகாரி ஏற்கெனவே கடவுளை வணங்கி வந்தவர்தான். அதுமட்டுமல்ல, இன்னொரு சந்தர்ப்பத்தில் முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்ளலாம் என அவர் நினைத்திருந்தால் அதற்காக ஒருவேளை அவர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும். மிக முக்கியமாக, தன்னிடமிருந்து கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவர் புரிந்திருந்தார், அவற்றையெல்லாம் மனப்பூர்வமாய்ச் செய்ய விருப்பமுள்ளவராகவும் இருந்தார். எனவே, அவர் கேட்டுக்கொண்டபடியே பிலிப்பு சந்தோஷமாக அவருக்கு முழுக்காட்டுதல் கொடுத்தார்; முழுக்காட்டப்பட்ட பிறகு அந்த எத்தியோப்பிய அதிகாரி ‘சந்தோஷத்தோடு தன் வழியே போனார்.’ தன் சொந்த நாட்டுக்குத் திரும்பியதும் நற்செய்தியை அவர் உற்சாகமாகப் பிரசங்கித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.—அப்போஸ்தலர் 8:29-40; NW.
4 ஒப்புக்கொடுத்தல், முழுக்காட்டுதல் ஆகிய படிகளை நாம் அவசர அவசரமாகவோ அலட்சியமாகவோ எடுக்கக் கூடாதென்றாலும், சிலசமயத்தில் கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைக் கேட்ட கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே ஆட்கள் முழுக்காட்டப்பட்டார்கள் என்பதை எத்தியோப்பிய அதிகாரியின் உதாரணம் காண்பிக்கிறது.a எனவே, பின்வரும் கேள்விகளைச் சிந்திப்பது தகுந்ததாக இருக்கும்: முழுக்காட்டுதல் பெறுவதற்கு ஒருவர் எப்படித் தயாராக வேண்டும்? வயதுக்கு எந்தளவு கவனம்செலுத்த வேண்டும்? முழுக்காட்டப்படுவதற்கு முன் ஒரு நபரிடம் ஆன்மீக ரீதியில் என்ன முன்னேற்றம் காணப்பட வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, தம்முடைய ஊழியர்கள் இந்தப் படியை எடுக்க வேண்டுமென யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?
பயபக்தியான ஒப்பந்தம்
5, 6. (அ) யெகோவாவின் அன்பிற்கு அவருடைய ஜனங்கள் கடந்த காலத்தில் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) முழுக்காட்டப்பட்டதும் நம்மால் கடவுளோடு எப்படிப்பட்ட நெருங்கிய உறவை அனுபவிக்க முடியும்?
5 எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்த பிறகு, அவர்களை யெகோவா தமது ‘விசேஷ சொத்தாக’ ஏற்றுக்கொள்வதற்கும், நேசித்துப் பாதுகாப்பதற்கும், ‘ஒரு பரிசுத்த தேசமாக’ ஏற்படுத்துவதற்கும் முன்வந்தார். ஆனால், அவர்கள் அத்தகைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள கடவுளுடைய அன்பிற்குத் தெளிவான, திட்டவட்டமான விதத்தில் பிரதிபலிக்க வேண்டியிருந்தது. அதற்காக, ‘யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்’ என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள், பிறகு அவரோடு ஓர் உடன்படிக்கைக்குள் வந்தார்கள். (யாத்திராகமம் 19:4-9; NW) முதல் நூற்றாண்டில், இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சகல தேசத்தாரையும் சீஷராக்குங்கள் என்று கட்டளையிட்டார்; அவருடைய போதனைகளை மனதார ஏற்றுக்கொண்டவர்கள் முழுக்காட்டப்பட்டார்கள். கடவுளோடு நல்லுறவை அனுபவிப்பதற்கு, முழுக்காட்டப்படுவதோடு, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதும் அவசியமாய் இருந்தது.—மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 2:38, 41.
6 யெகோவாவைச் சேவிப்பதாகப் பயபக்தியுடன் ஒப்பந்தம் செய்து, அதற்கிசைய நடக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதை மேற்கண்ட பைபிள் பதிவுகள் காண்பிக்கின்றன. ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் கிறிஸ்தவர்கள் எடுக்க வேண்டிய முக்கியமான படிகளாகும், அவை யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெற வழிவகுக்கின்றன. அவருடைய தராதரங்களுக்கு இசைய நடப்பதற்கும் அவருடைய வழிநடத்துதலை நாடுவதற்கும் நாம் தீர்மானமாய் இருக்கிறோம். (சங்கீதம் 48:14) அதன் விளைவாக, யெகோவா அடையாள அர்த்தத்தில் நம்முடைய கையைப் பிடித்து, நாம் நடக்க வேண்டிய வழியில் நம்மை நடத்துகிறார்.—சங்கீதம் 73:23; ஏசாயா 30:21; 41:10, 13.
7. ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் ஏன் நம்முடைய சொந்தத் தீர்மானமாக இருக்க வேண்டும்?
7 யெகோவா மீதுள்ள அன்பும் அவருக்குச் சேவை செய்வதற்கான ஆவலுமே இந்தப் படிகளை எடுப்பதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும். ‘நீங்கள் போதுமான அளவுக்குப் படித்துத் தெரிந்துகொண்டுவிட்டீர்கள், அதனால் சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் எடுத்துவிடுங்கள்’ என்று யாராவது சொல்கிறார்கள் என்பதற்காகவோ, நண்பர்களெல்லாம் முழுக்காட்டுதல் எடுத்துவருகிறார்கள் என்பதற்காகவோ மட்டும் ஒருவர் முழுக்காட்டுதல் பெறத் தீர்மானிக்கக் கூடாது. ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெறும்படி ஒருவரை அவருடைய பெற்றோரும் முதிர்ச்சிவாய்ந்த மற்ற கிறிஸ்தவர்களும் ஒருவேளை ஊக்கப்படுத்தலாம், அது இயல்புதான். பெந்தெகொஸ்தே தினத்தன்று கூடிவந்தவர்களைப் பார்த்து அப்போஸ்தலன் பேதுரு “முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்ளுங்கள்” என ஊக்கப்படுத்தினார். (அப்போஸ்தலர் 2:38, NW) என்றபோதிலும், ஒப்புக்கொடுத்தல் என்பது நம் சொந்த விஷயம், நமக்காக வேறு யாருமே ஒப்புக்கொடுக்க முடியாது. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கான தீர்மானம் முழுக்கமுழுக்க நம்முடைய சொந்தத் தீர்மானமாகவே இருக்க வேண்டும்.—சங்கீதம் 40:8.
முழுக்காட்டுதல் பெற போதியளவு தயாராதல்
8, 9. (அ) குழந்தை ஞானஸ்நானம் என்பது ஏன் வேதப்பூர்வமற்றது? (ஆ) முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன் இளைஞர்கள் ஆன்மீக ரீதியில் என்ன முன்னேற்றம் செய்திருக்க வேண்டும்?
8 பிள்ளைகளால் நன்கு சிந்தித்துத் தங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க முடியுமா? முழுக்காட்டுதல் பெறுவதற்கான எந்த வயதுவரம்பும் பைபிளில் கொடுக்கப்படவில்லை. என்றாலும், நிச்சயமாகவே கைக்குழந்தைகளால் விசுவாசிகளாய் ஆக முடியாது, விசுவாசத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்க முடியாது, கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கவும் முடியாது. (அப்போஸ்தலர் 8:12) கிறிஸ்தவ மதமும் சர்ச்சின் பொதுச் சரித்திரமும் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் அகஸ்டஸ் நேயான்டர் என்ற சரித்திராசிரியர் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “ஆரம்பத்தில் பெரியவர்களுக்கு மட்டும்தான் முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்டது, ஏனென்றால் முழுக்காட்டுதலும் விசுவாசமும் மிக நெருக்கமாய்ப் பிணைந்துள்ளது என்றே அவர்கள் பொதுவாக நம்பினார்கள்.”
9 இளைஞர்களின் விஷயத்தில், சிலர் இளம்பிராயத்திலேயே ஆன்மீகச் சிந்தையை ஓரளவு வளர்த்துக்கொள்கிறார்கள், வேறுசிலர் அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், முழுக்காட்டப்படும் முன் ஓர் இளைஞர் யெகோவாவுடன் தனிப்பட்ட விதத்தில் நல்லுறவு வைத்திருக்க வேண்டும், பைபிளின் அடிப்படை விஷயங்களைப் பற்றித் திருத்தமாக அறிந்திருக்க வேண்டும், அதோடு ஒப்புக்கொடுத்தலில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது எனத் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்; ஆம், பெரியவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதேதான் இளைஞர்களிடமும் எதிர்பார்க்கப்படுகிறது.
10. ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் முன் ஒருவர் என்ன படிகளை எடுக்க வேண்டும்?
10 இயேசு, தாம் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் புதியவர்களுக்குப் போதிக்கும்படி தம் சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 28:20) ஆகவே, புதியவர்கள் முதலாவது சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வது அவசியம்; அப்போது, யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசத்தை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள். (ரோமர் 10:17; 1 தீமோத்தேயு 2:4; எபிரெயர் 11:6) அதன்பின், பைபிளிலுள்ள சத்தியம் அவர்களுடைய இருதயத்தைத் தொடும்போது, மனந்திரும்பி, தங்கள் முன்னாள் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள தூண்டப்படுவார்கள். (அப்போஸ்தலர் 3:19, 20) கடைசியில், இயேசுவின் கட்டளைப்படியே, யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற விரும்புகிறார்கள்.
11. முழுக்காட்டுதலுக்கு முன் தவறாமல் நாம் பிரசங்க வேலையில் பங்குகொள்வது ஏன் முக்கியம்?
11 முழுக்காட்டுதலுக்கு முன் எடுக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான படி, ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதாகும். இந்தக் கடைசி நாட்களில் யெகோவா தமது ஜனங்களுக்குக் கொடுத்திருக்கும் தலையாய வேலை அது. (மத்தேயு 24:14) முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி காணலாம். அந்த ஊழிய வேலையில் கலந்துகொள்வது, முழுக்காட்டுதலுக்குப் பிறகும்கூட தவறாமலும், ஆர்வத்துடனும் அதில் பங்குகொள்வதற்கு அவர்களைத் தயாராக்குகிறது.—ரோமர் 10:9, 10, 14, 15.
முழுக்காட்டுதல் பெறுவதிலிருந்து ஏதோவொன்று உங்களைத் தடுக்கிறதா?
12. சிலர் ஏன் முழுக்காட்டுதல் பெறாமலேயே இருந்துவிடுகிறார்கள்?
12 முழுக்காட்டுதலுக்குப்பின் வருகிற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதன் காரணமாக, சிலர் முழுக்காட்டுதல் பெறாமலேயே இருந்துவிடுகிறார்கள். யெகோவாவின் தராதரங்களுக்கு இசைய நடப்பதற்கு, தங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் உணருகிறார்கள். அல்லது முழுக்காட்டுதலுக்குப் பிறகு கடவுள் எதிர்பார்க்கிற விதத்தில் தங்களால் நடந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ எனப் பயப்படுகிறார்கள். “என்றாவது ஒருநாள் நான் தவறுசெய்து, சபையிலிருந்து நீக்கப்பட்டுவிடுவேன்” எனச் சிலர் நியாயப்படுத்திக்கூடப் பேசலாம்.
13. இயேசுவின் நாளில், சிலர் ஏன் அவருடைய சீஷர்களாய் ஆகாமலேயே இருந்துவிட்டார்கள்?
13 இயேசுவின் நாளில், சிலர் சொந்த நாட்டங்களையும் குடும்ப பந்தங்களையும் காரணங்காட்டி, இயேசுவின் சீஷர்களாய் ஆகாமல் இருந்துவிட்டார்கள். இயேசு எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றப்போவதாக ஒரு வேதபாரகன் அறிவித்தான். ஆனால் பல சந்தர்ப்பங்களில், படுத்து உறங்குவதற்குக்கூட தமக்கு இடமில்லாதிருந்ததை இயேசு அப்போது குறிப்பிட்டார். பிறகு, தாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த வேறொருவனைப் பார்த்து தம்மைப் பின்பற்றி வரும்படி அழைத்தார், அதற்கு, முதலாவது தன் தகப்பனை “அடக்கம்பண்ண” வேண்டுமென்று அவன் பதில் அளித்தான். இயேசுவின் சீஷனாகவும் இருந்துகொண்டு, அந்தக் குடும்பப் பொறுப்பையும் கவனிப்பதற்குப் பதிலாக, வீட்டிலேயே தங்கி, தன் தகப்பன் சாகும்வரை காத்திருப்பது நல்லது என அவன் நினைத்தான்போலும். கடைசியில், மூன்றாவது நபர், இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன் தன் சொந்தக் குடும்பத்தாரிடம் “விடைபெற்று வர” வேண்டுமென்று சாக்குச் சொன்னான். அப்படிக் காலம்தாழ்த்துவது வேறு காரியங்களை ‘பின்னிட்டுப்பார்ப்பது’ போல் இருக்கிறதென இயேசு விளக்கினார். ஆக, காலம்தாழ்த்த விரும்புகிறவர்கள், தங்கள் கிறிஸ்தவக் கடமைகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பதற்காக புதுப்புது சாக்குப்போக்குகளை எப்போதும் கண்டுபிடித்துவிடுவார்கள்.—லூக்கா 9:57-62; பொது மொழிபெயர்ப்பு.
14. (அ) மனுஷரைப் பிடிக்கிறவர்களாய் ஆவதற்கு இயேசு அழைத்தபோது பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொள்ள நாம் ஏன் தயங்கக் கூடாது?
14 பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரின் உதாரணங்களோ அதற்கு நேர்மாறானவை. மனுஷரைப் பிடிக்கிறவர்களாய் ஆவதற்காக தம்மைப் பின்பற்றி வருமாறு அவர்களை இயேசு அழைத்தபோது, “உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்” என பைபிள் சொல்கிறது. (மத்தேயு 4:19-22) உடனுக்குடன் அவர்கள் அப்படித் தீர்மானம் எடுத்ததன் மூலம், பிற்பாடு அவர்களிடம் இயேசு சொன்ன ஒன்றை தனிப்பட்ட விதத்தில் அனுபவித்தார்கள்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:29, 30) முழுக்காட்டுதல் என்பது பொறுப்புகள் எனும் நுகத்தை நம்மீது வைத்தாலும், அந்த நுகம் மெதுவானதாகவும் இலகுவானதாகவும் மிகுந்த இளைப்பாறுதல் தருவதாகவும் இருக்குமென்று இயேசு உறுதி அளித்தார்.
15. கடவுளுடைய ஆதரவு நமக்கு நிச்சயம் கிடைக்குமென்பதை மோசே, எரேமியா ஆகியோரின் உதாரணங்கள் எப்படிக் காட்டுகின்றன?
15 ‘பொறுப்புகளைக் கையாளுவதற்குரிய தகுதியெல்லாம் எனக்கில்லை’ என நினைப்பது இயல்புதான். மோசேயும் சரி, எரேமியாவும் சரி, இருவருமே யெகோவா கொடுத்த வேலையைச் செய்வதற்குத் தங்களுக்குத் திறமை இல்லை என்றே ஆரம்பத்தில் நினைத்தார்கள். (யாத்திராகமம் 3:11; எரேமியா 1:6) ஆனால், அவர்களுக்குக் கடவுள் எவ்வாறு உறுதி அளித்தார்? “நான் உன்னோடே இருப்பேன்” என மோசேயிடம் அவர் கூறினார். “உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று எரேமியாவுக்கு வாக்குக் கொடுத்தார். (யாத்திராகமம் 3:12; எரேமியா 1:8) எனவே, கடவுளுடைய ஆதரவு நமக்கு நிச்சயம் கிடைக்கும் என நாமும்கூட நம்பிக்கையோடு இருக்கலாம். நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக நம்மால் வாழ முடியுமா என்ற சந்தேகங்கள் நம் மனதில் கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்தால், அவற்றை நீக்கிப்போட கடவுள் மீதுள்ள அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் நமக்கு உதவும். “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” என்று எழுதினார் அப்போஸ்தலன் யோவான். (1 யோவான் 4:18) தன்னந்தனியாக நடப்பது ஒரு சிறுவனுக்குப் பயமாக இருக்கலாம், ஆனால் தன் அப்பாவுடன் கையோடு கைசேர்த்து நடக்கும்போது அவன் நம்பிக்கையோடு இருக்கிறான். அதுபோலவே, முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கை வைத்து, அவருடன் நடந்தோமானால் அவர் ‘நம் பாதைகளைச் செவ்வைப்படுத்துவதாக’ வாக்குறுதி அளிக்கிறார்.—நீதிமொழிகள் 3:5, 6.
கண்ணியமான தருணம்
16. முழுக்காட்டுதலின்போது, தண்ணீரில் ஒருவரை ஏன் முழுமையாக அமிழ்த்தியெடுக்க வேண்டும்?
16 பொதுவாக, கிறிஸ்தவ முழுக்காட்டுதலின் முக்கியத்துவத்தை விளக்கும் பைபிள் பேச்சு ஒன்று முழுக்காட்டுதலுக்கு முன் கொடுக்கப்படுகிறது. பேச்சின் முடிவில், முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்கள் இரண்டு கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் தங்களுடைய விசுவாசத்தை யாவரறிய அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ரோமர் 10:10, பக்கம் 22-லுள்ள பெட்டியைக் காண்க.) அதன்பின், இயேசுவுடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவர்கள் தண்ணீரில் அமிழ்த்தியெடுக்கப்படுகிறார்கள். இயேசு முழுக்காட்டப்பட்ட பிறகு, ‘ஜலத்திலிருந்து கரையேறினார்’ என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 3:16; மாற்கு 1:10) அப்படியானால், இயேசுவை முழுக்காட்டுபவனாகிய யோவான் தண்ணீரில் முற்றிலும் அமிழ்த்தியெடுத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.b தண்ணீரில் முற்றிலும் அமிழ்த்தியெடுப்பது, நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்திருக்கிற மாபெரும் மாற்றத்திற்கு மிகப் பொருத்தமான அடையாளமாக இருக்கிறது; ஆம், நம்முடைய முன்னாள் வாழ்க்கை முறைக்கு மரித்து, கடவுளுடைய சேவையில் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதை அது அடையாளப்படுத்துகிறது.
17. முழுக்காட்டுதல் பெறுகிறவர்களும் சரி, பார்வையாளர்களும் சரி, முழுக்காட்டுதல் நிகழ்ச்சிக்கு எப்படிக் கண்ணியத்தைச் சேர்க்கலாம்?
17 முழுக்காட்டுதல் என்பது மிக முக்கியமான தருணமாகும், மகிழ்ச்சியான தருணமும்கூட. யோர்தான் நதியில் இயேசுவை யோவான் முழுக்காட்டிய சந்தர்ப்பத்தில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தார் என பைபிள் குறிப்பிடுகிறது. (லூக்கா 3:21, 22) இந்த உதாரணத்திற்கு இசைய, இன்று முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்கள் முழுக்காட்டுதலின்போது மிகக் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் அடக்கமாக உடை உடுத்தும்படி பைபிள் நம்மை ஊக்குவிப்பதால், நம்முடைய முழுக்காட்டுதல் தினத்தன்று அந்த ஆலோசனைக்கு இன்னும் நாம் எந்தளவுக்குச் செவிகொடுக்க வேண்டும்! (1 தீமோத்தேயு 2:9, 10) பார்வையாளர்கள்கூட, முழுக்காட்டுதல் பேச்சைக் கவனமாகக் கேட்பதன் மூலமும், முழுக்காட்டுதல் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது முறையாக நடந்துகொள்வதன் மூலமும் அந்நிகழ்ச்சிக்கு தக்க மரியாதை காண்பிக்கலாம்.—1 கொரிந்தியர் 14:40.
முழுக்காட்டப்பட்ட சீஷர்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்கள்
18, 19. முழுக்காட்டுதல் பெற்ற பிறகு நமக்கு என்ன சிலாக்கியங்களும் ஆசீர்வாதங்களும் கிடைக்கின்றன?
18 கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட பிறகு, நாம் ஒரு விசேஷ குடும்பத்தின் பாகமாக ஆகிறோம். முதலாவது, யெகோவா நம்முடைய தந்தையாக, நண்பராக ஆகிறார். முழுக்காட்டுதலுக்கு முன் அவரிடமிருந்து நாம் விலகியிருந்தோம்; இப்போது அவருடன் ஒப்புரவாகியிருக்கிறோம். (2 கொரிந்தியர் 5:19; கொலோசெயர் 1:20) கிறிஸ்துவுடைய பலியின் மூலம் நாம் கடவுளிடம் நெருங்கிச் சென்றிருக்கிறோம், அவரும் நம்மிடம் நெருங்கி வந்திருக்கிறார். (யாக்கோபு 4:8) தமது பெயரை உபயோகிப்பவர்களும் அதைத் தரித்திருப்பவர்களும் பேசுவதையெல்லாம் யெகோவா கவனித்துக் கேட்கிறார் என்றும், தம்முடைய ஞாபகப் புஸ்தகத்திலே அவர்களுடைய பெயரைச் சேர்த்துக்கொள்கிறார் என்றும் மல்கியா தீர்க்கதரிசி விளக்குகிறார். கடவுள் இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் . . . ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன் [அதாவது, அவர்களுக்குக் கருணை காட்டுவேன்].”—மல்கியா 3:16-18.
19 முழுக்காட்டுதலுக்குப் பிறகு, உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாகவும் நாம் ஆகிறோம். கிறிஸ்துவின் சீஷர்கள் செய்திருந்த தியாகங்களுக்கெல்லாம் பிரதிபலனாக அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்குமென்று அப்போஸ்தலன் பேதுரு கேட்டபோது, இயேசு இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: ‘என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.’ (மத்தேயு 19:29) பல ஆண்டுகளுக்குப் பிறகு, “உலகத்திலுள்ள” ‘முழு சகோதர கூட்டுறவு’ பற்றி பேதுரு எழுதினார். தனிப்பட்ட விதத்தில் அவர் அன்பான சகோதரத்துவத்தின் ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்திருந்தார், நாமும்கூட அதை அனுபவிக்கலாம்.—1 பேதுரு 2:17, 5:9; NW.
20. முழுக்காட்டுதல் நமக்கு என்ன அருமையான நம்பிக்கையை அளிக்கிறது?
20 அதுமட்டுமல்ல, தம்மைப் பின்பற்றுபவர்கள் ‘நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்’ என்று இயேசு குறிப்பிட்டார். நிச்சயமாகவே, ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்வதற்குரிய, அதாவது ‘உண்மையான வாழ்வை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்குரிய’ நம்பிக்கையை அளிக்கின்றன. (1 தீமோத்தேயு 6:19, NW) நம் எதிர்காலத்திற்கும், நம் குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கும் அதைவிடச் சிறந்த அஸ்திவாரத்தை நம்மால் அமைக்க முடியுமா என்ன? அருமையான இந்த நம்பிக்கை ‘நம் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடக்க’ நமக்குக் கண்டிப்பாக உதவும்.—மீகா 4:5.
[அடிக்குறிப்புகள்]
a அதேபோல், பெந்தெகொஸ்தே தினத்தன்று பேதுருவின் சொற்பொழிவைக் கேட்ட யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் என மொத்தம் மூவாயிரம் பேர் உடனடியாக முழுக்காட்டப்பட்டார்கள். அந்த எத்தியோப்பிய அதிகாரியைப் போலவே, அவர்களுக்கும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள அடிப்படைப் போதனைகளும் நியமங்களும் ஏற்கெனவே தெரிந்திருந்தது.—அப்போஸ்தலர் 2:37-41.
b பாப்டிஸ்மா (பாப்டிஸம், அதாவது முழுக்காட்டுதல்) என்ற கிரேக்க வார்த்தை “தண்ணீரில் முழுமையாக அமிழ்த்தப்பட்டு, பிறகு வெளியே வருவதை” அர்த்தப்படுத்துகிறது என வைன்ஸ் எக்ஸ்பொஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியு டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் சொல்கிறது.
உங்களால் விளக்க முடியுமா?
• யெகோவாவின் அன்பிற்கு நாம் எப்படி, ஏன் பிரதிபலிக்க வேண்டும்?
• முழுக்காட்டுதலுக்கு முன் ஒருவர் ஆன்மீக ரீதியில் என்ன முன்னேற்றங்களைச் செய்ய வேண்டும்?
• தவறுசெய்துவிடுவோம் என்ற பயத்தாலோ, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதாலோ நாம் ஏன் முழுக்காட்டுதல் பெறுவதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கக் கூடாது?
• இயேசு கிறிஸ்துவின் முழுக்காட்டப்பட்ட சீஷர்கள் என்னென்ன விசேஷ ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்?
[பக்கம் 26-ன் படம்]
‘முழுக்காட்டுதல் பெற எனக்கு என்ன தடை?’
[பக்கம் 29-ன் படங்கள்]
முழுக்காட்டுதல் என்பது மிக முக்கியமான தருணம், மகிழ்ச்சியான தருணமும்கூட