உலகை ஆளுபவன் அம்பலமாகிறான்
“இந்த உலகத்தை ஆளுகிறவன் வீழ்த்தப்படுவான்.” ‘இந்த உலகத்தை ஆளுகிறவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை.’ ‘இந்த உலகத்தை ஆளுகிறவன் நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.’ இதெல்லாம் பல சந்தர்ப்பங்களில், மக்களிடம் இயேசு சொன்ன வாசகங்கள். (யோவான் 12:31; 14:30; 16:11) அவர் யாரைப் பற்றிச் சொன்னார்?
‘உலகத்தை ஆளுகிறவனை’ பற்றி இயேசு சொன்ன விஷயங்களிலிருந்து, அவர் கண்டிப்பாகத் தம் தகப்பனாகிய யெகோவா தேவனைப் பற்றிச் சொல்லவில்லை என்பது தெரிகிறது. அப்படியென்றால், “இந்த உலகத்தை ஆளுகிறவன்” யார்? அவன் எப்படி “வீழ்த்தப்படுவான்”, எப்படி ‘நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்?’
“உலகத்தை ஆளுகிறவன்” தன்னை வெளிப்படுத்துகிறான்
ஒரு தாதா தனக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றித் தம்பட்டம் அடிக்கத் துடிப்பான்; அதுபோல சாத்தானும், கடவுளுடைய மகனான இயேசுவைச் சோதித்தபோது தன் அதிகாரத்தைப் பற்றி மார்தட்டிக்கொண்டான். இந்த உலகத்தின் “எல்லா ராஜ்யங்களையும்” இயேசுவுக்குக் காண்பித்துவிட்டு, அவரிடம் “இவை எல்லாவற்றின் மீதுள்ள அதிகாரத்தையும் இவற்றின் மகத்துவங்களையும் நான் உமக்குத் தருவேன்; ஏனென்றால், இந்த அதிகாரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; எனக்கு இஷ்டமானவனுக்கு இதைத் தருவேன். ஒரேவொரு முறை நீர் என்னை வணங்கினால் இதெல்லாம் உம்முடையதாகும்” என்று சொன்னான்.—லூக்கா 4:5-7.
சிலர் சொல்வதுபோல் ஒருவரிடம் இருக்கும் தீய குணம்தான் பிசாசு என்றால், இயேசுவுக்கு வந்த சோதனையை அவர்கள் எப்படி விளக்குவார்கள்? இயேசுவைச் சோதித்தது அவருக்குள்ளேயே இருந்த ஒரு தீய குணமா? அல்லது அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு அவருக்குள் ஏற்பட்ட மனக்குழப்பமா? அப்படியென்றால், “அவரிடம் பாவம் என்பதே இல்லை” என்று எப்படிச் சொல்ல முடியும்? (1 யோவான் 3:5) பிசாசுக்கு இந்த உலகத்தின்மீது அதிகாரம் இருப்பதை இயேசு மறுக்கவில்லை. இந்த “உலகத்தை ஆளுகிறவன்” என்றே அவனை அழைத்தார். ‘கொலைகாரன்,’ ‘பொய்யன்’ என்றும்கூட சொன்னார்.—யோவான் 14:30; 8:44.
பிசாசுக்கு எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதைப் பற்றி அவன் இயேசுவைச் சோதித்து 60 வருடங்கள் கழித்து, அப்போஸ்தலன் யோவான் கிறிஸ்தவர்களுக்குச் சொன்னார். “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்றார். பிசாசு இந்த ‘உலகம் முழுவதையும் மோசம்போக்குகிறான்’ என்றும் சொன்னார். (1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9) ஆம், பார்க்க முடியாத ஒரு கெட்ட தூதன்தான் ‘இந்த உலகத்தை ஆளுகிறான்’ என்று பைபிள் மிகத் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அவன் மட்டும்தான் ஆட்சி செய்கிறானா?
அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறான்
விசுவாசத்திற்காகக் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய போராட்டத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது அவர்களுடைய பயங்கரமான எதிரிகளைத் தெளிவாக அம்பலப்படுத்தினார். அப்படியானால், கிறிஸ்தவர்களுக்கு யாரோடு போராட்டம்? “மனிதர்களோடு அல்ல, நிர்வாகங்களோடும், அதிகாரங்களோடும், இந்த இருண்ட உலகத்தின் தலைவர்களோடும், பரலோகத்திலுள்ள பொல்லாத தூதர் கூட்டத்தோடும் நாம் மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 6:12) எனவே, “மனிதர்களோடு அல்ல,” மனித சக்திக்கும் மீறிய “பொல்லாத தூதர் கூட்டத்தோடு” கிறிஸ்தவர்கள் போராட வேண்டும்.
“பொல்லாத தூதர் கூட்டத்தோடு” என்ற சொற்றொடர் தீய குணத்தைக் குறிப்பதில்லை, பார்க்க முடியாத கெட்ட தூதர்களையே குறிக்கிறது. இந்தப் பொல்லாத தூதர்களுக்குத்தான் பிசாசு தன் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்திருக்கிறான். இவர்களும் பிசாசைப் போலவே கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்து ‘தங்களுக்கு ஏற்ற குடியிருப்பை விட்டுவிட்டு’ வந்தவர்கள்.—யூதா 6.
‘இந்த இருண்ட உலகத்தின் தலைவர்கள்’ பூர்வ காலத்திலிருந்தே தங்கள் அதிகாரத்தை எப்படிச் செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை தானியேல் தீர்க்கதரிசன புத்தகம் வெட்டவெளிச்சமாக்குகிறது. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் கி.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பியபோது அவர்கள் நிலைமையை நினைத்து தானியேல் வருத்தப்பட்டார், அவர்களுக்காக மூன்று வாரங்கள் ஜெபம் செய்தார். அவருக்கு ஆறுதல் சொல்வதற்காகக் கடவுள் அனுப்பிய ஒரு தேவதூதன் தாமதமாக வந்தார். “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்” என்று அதற்கான காரணத்தை அவரே தானியேலிடம் விளக்கினார்.—தானியேல் 10:2, 13.
இந்தத் தேவதூதன் குறிப்பிட்ட “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி” யார்? அது பெர்சிய ராஜாவான கோரேசாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், தானியேலுக்கும் அவரது மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்றே கோரேசு ஆசைப்பட்டார். அதோடு, அந்த ‘பெர்சிய அதிபதி’ ஒரு சாதாரண மனித ராஜாவாக இருந்திருந்தால், அவரோடு போராட அந்தத் தேவதூதனுக்கு மூன்று வாரங்கள் எடுத்திருக்காது. ஏனென்றால், ஒரு தேவதூதனால் ஒரே இரவில் 1,85,000 போர் வீரர்களைச் சாகடிக்க முடியும். (ஏசாயா 37:36) எனவே, இந்தத் தேவதூதனை எதிர்த்த “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி” பிசாசின் கையாளாகத்தான், அதாவது ஒரு பொல்லாத தூதனாகத்தான், இருந்திருக்க வேண்டும். பிசாசு அவனுக்கு பெர்சிய சாம்ராஜ்யத்தின்மேல் அதிகாரம் அளித்திருந்தான். பிற்பாடு அதே பதிவில், “பெர்சியாவின் பிரபுவோடே,” அதாவது அதிபதியோடே, திரும்பவும் யுத்தம்பண்ண வேண்டியிருக்கும் என்று அந்தத் தேவதூதன் சொன்னார். அதன் பின்பு, ‘கிரேக்கு தேசத்தின் அதிபதியாக’ இருக்கும் மற்றொரு பொல்லாத தேவதூதனோடும் யுத்தம்பண்ண வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.—தானியேல் 10:20.
இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? நம் கண்களால் பார்க்க முடியாத உலக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய தலைவனாகிய பிசாசு உலகத்தை ஆட்சி செய்வதற்கான தன் அதிகாரத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளித்திருக்கிறான். அப்படியானால், இன்றுவரை இவர்களுடைய லட்சியம் என்ன?
கொடூர முகத்தைக் காட்டுகிறான்
பிரதான தூதனாகிய மிகாவேல், அதாவது இயேசு, பிசாசையும் அவனைச் சேர்ந்த தூதர்களையும் தோற்கடித்து பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளுவதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விளக்குகிறார். அதனால் வருகிற பயங்கரமான விளைவுகளையும் விளக்குகிறார். “பூமிக்கு . . . ஐயோ, கேடு! ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறதென்று அறிந்து மிகுந்த கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்” என அதில் நாம் வாசிக்கிறோம்.—வெளிப்படுத்துதல் 12:9, 12.
தனக்கிருக்கும் மிகுந்த கோபத்தை பிசாசு எப்படிக் காட்டிவருகிறான்? ‘ஆட்சிசெய் அல்லது அழித்துவிடு’ என்பதே தாதாக்களின் கொள்கை. பிசாசும் இதையே தாரக மந்திரமாகப் பயன்படுத்துகிறான். அதனால், அவனும் அவனைச் சேர்ந்த தூதர்களும் இந்த உலகத்தைப் பூண்டோடு அழிக்க கங்கணம்கட்டிக்கொண்டு அலைகிறார்கள். தனக்கு இன்னும் கொஞ்ச காலமே இருக்கிறது என்று பிசாசுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால், மனித சமுதாயத்தின் ஒரு முக்கிய சக்தியைத் தன் கைக்குள் வைத்திருக்கிறான்—அதுதான் உலக வர்த்தகம். இதை வைத்து, பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற வெறியை மக்கள் மனதில் ஊட்டுகிறான். அதன் விளைவாக இயற்கை வளங்கள் துடைத்தழிக்கப்படுகின்றன... உலகளவில் சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுகிறது... மனிதகுலம் தப்பிப்பிழைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது!—வெளிப்படுத்துதல் 11:18; 18:11-17.
மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே அரசியல் மற்றும் மதத்தின்மீதுகூட பிசாசின் அதிகாரப்பிடி இருந்திருக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகம் ஒட்டுமொத்த அரசியலையும் ஒரு மூர்க்க மிருகமாகச் சித்தரிக்கிறது. பிசாசு அந்த மிருகத்திற்கு “மிகுந்த அதிகாரத்தை” கொடுத்திருக்கிறான். அதோடு, அரசியலுக்கும் மதத்திற்கும் இடையே இருக்கும் வெட்கக்கேடான உறவு, கடவுளுடைய பார்வையில் விபச்சாரத்திற்குச் சமம் என்று அந்தப் புத்தகம் விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 13:2; 17:1, 2) அட்டூழியங்கள், அடிமைத்தனம், போர், இனக்கலவரங்கள் காரணமாகக் கடந்த நூற்றாண்டுகளில் உயிரிழந்தவர்கள் எத்தனை எத்தனை! மனித சரித்திரத்தின் பக்கங்களை இரத்தக் கறையாக்கியிருக்கும் இதுபோன்ற கொடூர செயல்களுக்குக் காரணம் சாதாரண மனிதர்களா? அல்லது இந்த அட்டூழியங்களுக்குப் பின்னால் இருப்பது பார்க்க முடியாத பொல்லாத தூதர் கூட்டமா?
திரைமறைவில் இருந்துகொண்டு மனித ஆட்சியாளர்களையும் உலக வல்லரசுகளையும் ஆட்டிப்படைக்கும் பிசாசின் முகமூடியை பைபிள் கிழித்துக்காட்டுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அந்த ஆட்சியாளனின் சுபாவத்தை... ‘ஆட்சிசெய் அல்லது அழித்துவிடு’ என்ற அவனது கொள்கையை... மனித சமுதாயம் பிரதிபலிக்கிறது. ஆனால், இன்னும் எவ்வளவு காலம் பிசாசின் ஆட்சியில் மனிதகுலம் அல்லல்பட வேண்டியிருக்கும்?
பிசாசின் மரண ஓலம் விரைவில்
முதல் நூற்றாண்டில் இயேசு செய்த செயல்கள், பிசாசுக்கும் பொல்லாத தூதர்களுக்கும் சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டதைக் காட்டியது. மனிதர்களைப் பிடித்திருந்த பேய்களை, அதாவது பார்க்க முடியாத பொல்லாத தூதர்களை, துரத்தியதைப் பற்றி இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து சொன்னபோது, “சாத்தான் பரலோகத்திலிருந்து மின்னல் வேகத்தில் விழுந்துவிட்டதை நான் பார்க்கிறேன்” என்று சொன்னார். (லூக்கா 10:18) இந்த வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன? இயேசு பரலோகத்திற்குப் போனபிறகு, பிரதான தூதனாகிய மிகாவேலாக இந்த உலக ஆட்சியாளனோடு போரிட்டு வெற்றிபெறப்போவதை நினைத்து சந்தோஷப்பட்டார் என்பதையே காட்டுகின்றன. (வெளிப்படுத்துதல் 12:7-9) பைபிள் தீர்க்கதரிசனங்களை நன்றாக அலசிப் பார்த்தால், 1914-ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர், இயேசுவுக்கு இந்த வெற்றி கிடைத்ததாகத் தெரிகிறது.a
அந்தச் சமயத்திலிருந்து, தனக்கு மரண அடி எந்த நேரத்திலும் விழலாம் என்பது பிசாசுக்குத் தெரியும். ‘இந்த உலகம் முழுவதும் அவனுடைய கைக்குள்’ இருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் அவனுடைய தந்திரங்களில் சிக்கிவிடவில்லை, அவனுடைய கைக்குள் அகப்படவில்லை. ஏனென்றால், அவனையும் அவனுடைய தந்திரங்களையும் பைபிள் அவர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. (2 கொரிந்தியர் 2:11) “சமாதானத்தை அருளும் கடவுள் விரைவில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப்போடுவார்” என்று பவுல் சொன்ன வார்த்தைகளைப் படிக்கும்போது அவர்கள் முகம் நம்பிக்கையில் பிரகாசிக்கிறது.b—ரோமர் 16:20.
பிசாசின் மரண ஓலம் அதிவிரைவில் கேட்கப்போகிறது! நம் அன்பான அரசர் கிறிஸ்து ஆட்சி செய்யும்போது, நீதியுள்ள மனிதர்கள் இந்தப் பூமியை அழகிய பூஞ்சோலையாக மாற்றுவார்கள். வன்முறை... பகைமை... பெருமை... எல்லாமே சுவடு தெரியாமல் போய்விடும். ‘முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதில்லை’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 65:17) திரைமறைவில் இருந்துகொண்டு, உலகத்தையும் அதின் அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆட்சியாளனிடமிருந்து எல்லாரும் விடுபடும்போது சந்தோஷம் வானைத் தொட்டுவிடும்! (w11-E 09/01)
[அடிக்குறிப்புகள்]
a இந்த வருடத்தைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தின் பிற்சேர்க்கையில், பக்கங்கள் 215-218-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b பவுலின் வார்த்தைகள், ஆதியாகமம் 3:15-ல் உள்ள முதல் பைபிள் தீர்க்கதரிசனத்தை ஞாபகப்படுத்துகின்றன. அது பிசாசின் அழிவைப் பற்றி சுட்டிக்காட்டுகிறது. இங்கே பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தைக்கு, “நொறுக்குவது, சிதறச் செய்வது, உடைத்து தூள் தூளாக்குவது” என்ற அர்த்தங்கள் உள்ளன.—வைன்ஸ் கம்ப்ளீட் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷனரி ஆஃப் ஓல்ட் அன்ட் நியூ டெஸ்ட்மென்ட் வேர்ட்ஸ்.
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
நம் அன்பான அரசர் கிறிஸ்து ஆட்சி செய்யும்போது, நீதியுள்ள மனிதர்கள் இந்தப் பூமியை அழகிய பூஞ்சோலையாக மாற்றுவார்கள்