அதிகாரம் 4
இயேசு கிறிஸ்து தேவனை அறியும் அறிவின் திறவுகோல்
நீங்கள் கதவருகே நின்று உங்கள் திறவுகோல்களை வைத்து தடுமாறிக்கொண்டிருக்கிறீர்கள். குளிராகவும் இருட்டாகவும் இருக்கிறது, நீங்கள் உள்ளேபோய்விட ஆவலாயிருக்கிறீர்கள்—ஆனால் திறவுகோல் பலனளிக்கவில்லை. அது சரியான திறவுகோல் போலவே தோன்றுகிறது, இருப்பினும் பூட்டு சிறிதும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறது. எவ்வளவு ஏமாற்றம்! நீங்கள் மறுபடியுமாக உங்கள் திறவுகோல்களைப் பார்க்கிறீர்கள். சரியானதை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்களா? எவராவது திறவுகோலை சேதப்படுத்திவிட்டாரா?
2 இந்த உலகின் மதசம்பந்தமான குழப்பம் தேவனை அறியும் அறிவின் சம்பந்தமாக என்ன செய்திருக்கிறது என்பதற்கு இது பொருத்தமான ஒரு உதாரணமாகும். உண்மையில், அநேகர் நாம் புரிந்துகொள்ளும்படியாக திறக்கும் இயேசு கிறிஸ்து என்னும் திறவுகோலை கையாடி கெடுத்துவிட்டிருக்கிறார்கள். சிலர் திறவுகோலை நீக்கிவிட்டு, ஒட்டுமொத்தமாக இயேசுவை புறக்கணித்து விட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அவரை சர்வ வல்லமையுள்ள கடவுளாக வணங்கி இயேசுவின் பங்கை திரித்துவிட்டிருக்கின்றனர். எப்படியிருந்தாலும், முக்கியமான இந்த நபராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒரு திருத்தமான புரிந்துகொள்ளுதல் இல்லாமல் தேவனை அறியும் அறிவு நமக்கு இரகசியமாகவே இருக்கிறது.
3 இயேசு இவ்வாறு சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) இவ்விதமாகச் சொன்னபோது, இயேசு பெருமையடித்துக்கொண்டில்லை. வேதாகமம் திரும்பத் திரும்ப கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவுக்கான தேவையை வலியுறுத்துகிறது. (எபேசியர் 4:11; கொலோசெயர் 2:2; 2 பேதுரு 1:8; 2:20) “தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் [இயேசு கிறிஸ்துவைக்] குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்,” என்று அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 10:43) அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “அவருக்குள் [இயேசுவுக்குள்] ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” (கொலோசெயர் 2:3) இயேசுவினாலே யெகோவாவின் வாக்குறுதிகளெல்லாம் நிறைவேறுகின்றன என்றும்கூட பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 1:20) ஆகவே தேவனை அறியும் அறிவுக்கு இயேசு கிறிஸ்துவே உண்மையான திறவுகோலாக இருக்கிறார். இயேசுவைப் பற்றிய நம்முடைய அறிவு அவருடைய உள்ளார்ந்த இயல்பைக் குறித்தும் கடவளுடைய ஏற்பாட்டில் அவருடைய பங்கைக் குறித்தும் எந்தவிதமான திரிக்கப்பட்ட கருத்துக்களிலிருந்தும் விடுபட்டதாக இருக்கவேண்டும். ஆனால் இயேசுவைப் பின்பற்றுவோர் கடவுளுடைய நோக்கங்களில் அவரை இன்றியமையாதவராக ஏன் கருதுகின்றனர்?
வாக்குப்பண்ணப்பட்ட மேசியா
4 உண்மையுள்ள மனிதனாகிய ஆபேலின் நாட்கள் முதற்கொண்டு, யெகோவா தேவன் தாமே முன்னறிவித்திருந்த வித்துக்காக கடவுளுடைய ஊழியர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தனர். (ஆதியாகமம் 3:15; 4:1-8; எபிரெயர் 11:4) “அபிஷேகம் பெற்றவர்” என்று பொருள்படும் மேசியாவாக, வித்து கடவுளுடைய நோக்கத்தை சேவிப்பார் என்பதாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அவர் ‘பாவங்களைத் தொலைத்துவிடுவார்,’ மேலும் அவருடைய ராஜ்யத்தின் மகிமைப்பிரதாபங்கள் சங்கீதங்களில் முன்னுரைக்கப்பட்டிருந்தன. (தானியேல் 9:24-26; சங்கீதம் 72:1-20) யார் மேசியாவாக நிரூபிப்பார்?
5 நசரேயனாகிய இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அந்திரேயா என்ற பெயர்கொண்ட ஒரு இளம் யூதன் கிளர்ச்சியூட்டப்பட்டவராக உணர்ந்ததை கற்பனை செய்துபாருங்கள். அந்திரேயா தன்னுடைய சகோதரன் சீமோன் பேதுருவிடம் ஓடிவந்து அவரிடம் சொன்னார்: “மேசியாவைக் கண்டோம்.” (யோவான் 1:41) இயேசுவின் சீஷர்கள் அவரே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை உறுதியாக நம்பினர். (மத்தேயு 16:16) இயேசுவே முன்னறிவிக்கப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்து என்ற அவர்களுடைய நம்பிக்கைக்காக தங்கள் உயிர்களையும் உண்மை கிறிஸ்தவர்கள் பணயம் வைக்க மனமுள்ளவர்களாயிருந்தனர். அவர்களுக்கு என்ன அத்தாட்சி இருந்திருக்கிறது? மூன்று விதமான அத்தாட்சிகளை நாம் சிந்திப்போமாக.
இயேசுவே மேசியா என்பதற்கு அத்தாட்சி
6 இயேசுவின் வம்சாவளி வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அவரை அடையாளம் கண்டுகொள்வதற்கு முதல் ஆதாரமாக இருக்கிறது. யெகோவா தம்முடைய ஊழியக்காரனாகிய ஆபிரகாமிடம் வாக்குப்பண்ணப்பட்ட வித்து அவருடைய குடும்பத்திலிருந்து வருவார் என்பதாக வாக்களித்திருந்தார். ஆபிரகாமின் மகன் ஈசாக்கு, ஈசாக்கின் மகன் யாக்கோபு, யாக்கோபின் மகன் யூதா ஆகிய ஒவ்வொருவரும் இதே போன்ற ஒரு வாக்கைப் பெற்றனர். (ஆதியாகமம் 22:18; 26:2-5; 28:12-15; 49:10) பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தாவீது ராஜாவுக்கு அவருடைய வம்ச பரம்பரையில் இவர் வருவார் என்பதாக சொல்லப்பட்டபோது மேசியாவின் பரம்பரை இன்னும் அருகாமையில் வந்துவிட்டிருந்தது. (சங்கீதம் 132:11; ஏசாயா 11:1, 10) மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிசேஷ பதிவுகள் இயேசு அந்தக் குடும்ப வம்சத்தில் வந்தார் என்பதை உறுதிசெய்கின்றன. (மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38) இயேசுவுக்கு விரோத மனப்பான்மையுள்ள அநேக சத்துருக்கள் இருந்தபோதிலும், நன்கு அறியப்பட்டிருந்த அவருடைய வம்சாவளியைக் குறித்து எவரும் விவாதிக்கவில்லை. (மத்தேயு 21:9, 15) அப்படியென்றால், தெளிவாக அவருடைய வம்சாவளி மறுக்கமுடியாத ஒன்றாகும். என்றபோதிலும், ரோமர்கள் பொ.ச. 70-ல் எருசலேமை கொள்ளையடித்தபோது யூதர்களுடைய குடும்ப பதிவுகள் அழிக்கப்பட்டன. பிற்காலங்களில், வேறு எவரும் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதாக ஒருபோதும் உரிமைபாராட்ட முடியாது.
7 நிறைவேறிமுடிந்த தீர்க்கதரிசனம் இரண்டாவது அத்தாட்சியாகும். மேசியாவின் வாழ்க்கைப் போக்கின் பல்வேறு அம்சங்களை அநேக எபிரெய வேதாகம தீர்க்கதரிசனங்கள் விவரிக்கின்றன. பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில், மீகா தீர்க்கதரிசி இந்த மகா பெரிய அரசர் மிகவும் சிறியதாக இருந்த பெத்லகேம் பட்டணத்தில் பிறப்பார் என்பதாக முன்னறிவித்தார். இஸ்ரவேலின் இரண்டு பட்டணங்கள் பெத்லகேம் என்ற பெயரால் அழைக்கப்பட்டன, ஆனால் இந்தத் தீர்க்கதரிசனம் அது எதுவாக இருக்கும் என்பதைக் குறிப்பாய் சொன்னது: தாவீது ராஜா பிறந்த எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம். (மீகா 5:2) இயேசுவின் பெற்றோராகிய யோசேப்பும் மரியாளும் நாசரேத்தில், பெத்லகேமுக்கு வடக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்தனர். என்றபோதிலும், மரியாள் கர்ப்பமாக இருந்தபோது, ரோம அதிபதியான அகுஸ்து இராயன் எல்லா மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களில் குடிமதிப்பெழுதிக்கொள்ளும்படி உத்தரவிட்டார்.a ஆகவே யோசேப்பு கருவுற்றிருந்த தன் மனைவியை பெத்லகேமுக்கு அழைத்துச் செல்லவேண்டியதாயிற்று, அங்கே இயேசு பிறந்தார்.—லூக்கா 2:1-7.
8 எருசலேமைப் புதுப்பிக்கவும் திரும்ப எடுத்துக்கட்டவும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டதற்கு 69 ‘வாரங்களுக்குப்’ பின் “பிரபுவாகிய மேசியா” தோன்றுவார் என்பதாக தானியேல் தீர்க்கதரிசி பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் முன்னுரைத்தார். (தானியேல் 9:24, 25) இந்த “வாரங்கள்” ஒவ்வொன்றும் ஏழு வருடங்கள் நீண்டவையாக இருந்தன.b பைபிள் மற்றும் உலகியல் வரலாற்றின்படி, எருசலேமைத் திரும்பக் கட்டுவதற்கான ஆணை பொ.ச.மு. 455-ல் பிறப்பிக்கப்பட்டது. (நெகேமியா 2:1-8) ஆகவே மேசியா பொ.ச.மு. 455-க்குப் பின் 483 ஆண்டுகளுக்குப் பிறகு (69 தடவைகள் 7) தோன்ற வேண்டியவராக இருந்தார். இது நம்மை பொ.ச. 29-க்கு, யெகோவா இயேசுவை பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்த ஆண்டுக்கே கொண்டுவந்து விடுகிறது. இயேசு இப்படியாக “கிறிஸ்து” (“அபிஷேகம் பெற்றவர்” என்பது பொருள்) அல்லது மேசியாவாக ஆனார்.—லூக்கா 3:15, 16, 21, 22.
9 நிச்சயமாகவே, எல்லாருமே இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை, வேதாகமம் இதை முன்னுரைத்திருந்தது. சங்கீதம் 2:2-ல் தாவீது ராஜா இவ்வாறு முன்னுரைக்கும்படியாக தேவ ஆவியால் ஏவப்பட்டார்: “கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி”னார்கள். யெகோவாவின் அபிஷேகம்செய்யப்பட்டவரை அல்லது மேசியாவை தாக்கும்பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட தேசங்களின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்துகொள்வார்கள் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டது. இதுவே சம்பவிக்கவும் செய்தது. யூத மதத்தலைவர்கள், ஏரோது ராஜா, மற்றும் ரோம அதிபதியாகிய பொந்தியு பிலாத்து ஆகிய அனைவருமே இயேசுவை மரணத்துக்குட்படுத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர். முற்காலங்களில் விரோதிகளாக இருந்த ஏரோதும் பிலாத்துவும் அப்போது முதற்கொண்டு உற்ற நண்பர்களானார்கள். (மத்தேயு 27:1, 2; லூக்கா 23:10-12; அப்போஸ்தலர் 4:25-28) இயேசுவே மேசியா என்பதற்குரிய கூடுதலான நிரூபணத்துக்கு, “குறிப்பிடத்தக்க ஒருசில மேசியானிய தீர்க்கதரிசனங்கள்,” என்ற தலைப்புடைய உடன்வரும் அட்டவணையைத் தயவுசெய்து காண்க.
10 யெகோவா தேவனின் நற்சாட்சி இயேசுவின் மேசியானியத்துவத்தை ஆதரிக்கும் மூன்றாவது அத்தாட்சியாகும். இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை மனிதர்கள் அறிந்துகொள்ளச் செய்வதற்கு யெகோவா தேவதூதர்களை அனுப்பினார். (லூக்கா 2:10-14) உண்மையில், இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின்போது, யெகோவாதாமே பரலோகத்திலிருந்து பேசி இயேசுவை தாம் அங்கீகரிப்பதை வெளிப்படுத்தியிருந்தார். (மத்தேயு 3:16, 17; 17:1-5; NW) யெகோவா தேவன் அற்புதங்களை நடப்பிப்பதற்கு இயேசுவுக்கு வல்லமையைக் கொடுத்தார். இயேசுவே மேசியா என்பதற்கு இந்த அற்புதங்கள் ஒவ்வொன்றும் கூடுதலான தெய்வீக சான்றாக இருந்தன, ஏனென்றால் கடவுள் ஒரு வஞ்சகனுக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமையை ஒருபோதும் கொடுக்கமாட்டார். சுவிசேஷ பதிவுகள் ஏவப்பட்டு எழுதப்படுவதற்கும்கூட யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை உபயோகித்தார், ஆகவே இயேசுவின் மேசியானியத்துவத்தின் அத்தாட்சி வரலாற்றில் மிகப் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டும் விநியோகிக்கப்பட்டுமிருக்கும் புத்தகமாகிய பைபிளின் ஒரு பாகமாக ஆனது.—யோவான் 4:25, 26.
11 அத்தாட்சியின் இந்த எல்லா பகுதிகளிலும் இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அடையாளம் காட்டும் நூற்றுக்கணக்கான உண்மைகளும் அடங்கும். அப்படியென்றால், உண்மைக் கிறிஸ்தவர்கள் சரியாகவே அவரை ‘தீர்க்கதரிசிகளெல்லாராலும் சாட்சி கொடுக்கப்பட்டவராகவும்,’ தேவனை அறியும் அறிவின் திறவுகோலாகவும் கருதுகின்றனர். (அப்போஸ்தலர் 10:43) ஆனால் இயேசு கிறிஸ்துவே மேசியாவாக இருந்தார் என்ற உண்மையைக் காட்டிலும் அவரைக் குறித்து கற்றுக்கொள்ள இன்னும் அதிகம் இருக்கிறது. அவர் எங்கிருந்து வந்தார்? அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்?
மனிதனாவதற்கு முன்பாக இயேசுவின் வாழ்க்கை
12 இயேசுவின் வாழ்க்கை மூன்று கட்டங்களாக பிரிக்கப்படலாம். முதல் கட்டம் அவர் பூமியில் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே ஆரம்பமானது. மீகா 5:2 மேசியாவின் ஆரம்பம் “அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது,” என்று சொன்னது. மேலும் இயேசு தெளிவாகவே தாம் “உயர்விலிருந்துண்டானவன்,” அதாவது பரலோகத்திலிருந்து வந்தவர் என்பதாகச் சொன்னார். (யோவான் 8:23; 16:28) பூமிக்கு வருவதற்கு முன்பு எவ்வளவு காலமாக அவர் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார்?
13 இயேசு கடவுளுடைய ‘ஒரேபேறான குமாரன்’ என்பதாக அழைக்கப்பட்டார், ஏனென்றால் யெகோவா அவரை நேரடியாக படைத்தார். (யோவான் 3:16) ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவராக,’ இயேசுவை கடவுள் மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்குப் பயன்படுத்தினார். (கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14) யோவான் 1:1 “வார்த்தை” (மனிதனாவதற்கு முன்பாக இருந்த வாழ்க்கையில் இயேசு) “ஆதியிலே” தேவனோடிருந்தார் என்று சொல்கிறது. ஆகவே ‘வானமும் பூமியும்,’ படைக்கப்பட்டபோது வார்த்தை யெகோவாவோடு இருந்தார். கடவுள் இவ்வாறு சொன்னபோது அதை வார்த்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தார்: ‘நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக.’ (ஆதியாகமம் 1:1, 26) அதேவிதமாகவே, நீதிமொழிகள் 8:22-31-ல் (NW) ஞானமாக உருவகப்படுத்தப்பட்டு யெகோவாவின் பக்கத்தில் இருந்து எல்லா காரியங்களையும் உண்டுபண்ணுவதில் வேலைசெய்து கொண்டிருப்பவராக வருணிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய நேசமுள்ள ‘கைதேர்ந்த வேலையாளாக’ இந்த வார்த்தை இருந்திருக்க வேண்டும். யெகோவா அவரை படைத்தப்பிறகு ஒரு மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன்பாக பரலோகத்தில் வார்த்தை கடவுளோடு கணக்கிடமுடியாத யுகங்களை செலவிட்டிருக்கிறார்.
14 ஆகவே கொலோசெயர் 1:15 இயேசுவை, ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்’ என்பதாக அழைப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! சொல்லப்படாத வருடங்களாக கொண்டிருந்த நெருக்கமான கூட்டுறவின் மூலமாக, கீழ்ப்படிதலுள்ள மகன் அவருடைய தந்தையாகிய யெகோவாவைப் போலவே ஆனார். ஜீவனைக் கொடுக்கும் தேவனை அறியும் அறிவுக்கு இயேசு ஏன் திறவுகோலாக இருக்கிறார் என்பதற்கு இது மற்றொரு காரணமாகும். பூமியில் இருக்கையில் இயேசு செய்த அனைத்தும் யெகோவா என்ன செய்திருப்பாரோ அவ்விதமாகவே இருந்தது. ஆகவே, இயேசுவைப் பற்றி அறிய வருவது, யெகோவாவைப் பற்றிய அறிவை அதிகரித்துக்கொள்வதையும்கூட அர்த்தப்படுத்துகிறது. (யோவான் 8:28; 14:8-10) அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாய் இருப்பது தெளிவாக இருக்கிறது.
பூமியில் இயேசுவின் வாழ்க்கை
15 இயேசுவின் வாழ்க்கையின் இரண்டாவது கட்டம் இங்கே பூமியில் வாழ்ந்ததாகும். கடவுள் பரலோகத்திலிருந்து அவருடைய உயிரை மரியாள் என்ற பெயருள்ள ஒரு உண்மையுள்ள யூத கன்னிகையின் கருப்பைக்கு மாற்றியபோது அவர் மனமுவந்து தம்மைக் கீழ்ப்படுத்தினார். யெகோவாவின் வல்லமையுள்ள பரிசுத்த ஆவி அல்லது செயல் நடப்பிக்கும் சக்தி, மரியாள் மீது ‘நிழலிட்டது,’ அவர்கள் கர்ப்பமாகி கடைசியில் பரிபூரணமான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். (லூக்கா 1:34, 35) பரிபூரணமான ஊற்றுமூலத்திலிருந்து அவருடைய உயிர் வந்த காரணத்தால் இயேசு எந்த அபூரணத்தையும் சுதந்தரித்துக் கொள்ளவில்லை. தச்சனாகிய யோசேப்பின் வளர்ப்பு மகனாகவும் பல பிள்ளைகளையுடைய குடும்பத்தில் முதல் மகனாகவும் மிகச் சாதாரணமான ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டார்.—ஏசாயா 7:14; மத்தேயு 1:22, 23; மாற்கு 6:3.
16 யெகோவா தேவனிடமாக இயேசுவின் ஆழ்ந்த பக்தி அவர் 12 வயதாயிருக்கையில் ஏற்கெனவே தெளிவாக காணப்பட்டது. (லூக்கா 2:41-49) பெரியவராக வளர்ந்து, 30 வயதாயிருக்கையில் ஊழியத்தில் இறங்கியப் பிறகு, இயேசு தம்முடைய உடன் மானிடர்களிடமாகவும்கூட ஆழமான அன்பைக் காட்டினார். கடவுளுடைய பரிசுத்த ஆவி அற்புதங்களை நடப்பிப்பதற்கு அவருக்கு வல்லமையை அளித்தபோது, அவர் கருணையோடு வியாதிப்பட்டவர்கள், சப்பாணிகள், ஊனர், குருடர், செவிடர், குஷ்டரோகிகள் ஆகியோரை குணப்படுத்தினார். (மத்தேயு 8:2-4; 15:30) இயேசு பசியாயிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்தார். (மத்தேயு 15:35-38) அவருடைய நண்பர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாயிருந்த பலத்த சுழல்காற்றை அவர் அடக்கினார். (மாற்கு 4:37-39) உண்மையில், அவர் மரித்தோரைக்கூட உயிர்த்தெழுப்பினார். (யோவான் 11:43, 44) இந்த அற்புதங்கள் வரலாற்றின் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட உண்மைகளாகும். இயேசுவின் விரோதிகள்கூட அவர் ‘அநேக அற்புதங்களைச் செய்கிறதை’ ஒப்புக்கொண்டனர்.—யோவான் 11:47, 48.
17 இயேசு தம்முடைய சொந்த ஊர் முழுவதிலும் பயணித்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ஜனங்களுக்குக் கற்பித்தார். (மத்தேயு 4:17) அவர் பொறுமைக்கும் நியாயத்தன்மைக்கும்கூட உன்னதமான ஒரு முன்மாதிரியை வைத்தார். அவருடைய சீஷர்கள் அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தபோதுகூட, அவர் அனுதாபத்துடன் இவ்விதமாகச் சொன்னார்: “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.” (மாற்கு 14:37, 38) இருப்பினும், சத்தியத்தை வெறுத்து உதவியற்றவர்களை ஒடுக்கினவர்களிடம் தைரியமுள்ளவராயும் ஒளிவுமறைவில்லாதவராயும் இருந்தார். (மத்தேயு 23:27-33) எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் பரிபூரணமாக தம் தகப்பனுடைய அன்பின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அபூரணமான மனிதவர்க்கம் எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கையைக் கொண்டிருக்கும் பொருட்டு அவர் மரிக்கவும் மனமுள்ளவராக இருந்தார். அப்படியென்றால், இயேசுவை தேவனை அறியும் அறிவுக்குத் திறவுகோல் என்று நன்றாகவே குறிப்பிடுவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆம், அவர் உயிருள்ள திறவுகோலாக இருக்கிறார்! ஆனால் ஏன் உயிருள்ள ஒரு திறவுகோல் என்பதாக நாம் சொல்லுகிறோம்? இது அவருடைய வாழ்க்கையின் மூன்றாவது கட்டத்துக்கு நம்மைக் கொண்டுவந்து விடுகிறது.
இன்று இயேசு
18 இயேசுவின் மரணத்தைப் பற்றி பைபிள் அறிவிப்பு செய்தபோதிலும், இப்பொழுது அவர் உயிருள்ளவராக இருக்கிறார்! உண்மையில், பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கானோர் அவர் உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார் என்பதை நேரில் கண்ட சாட்சிகளாக இருந்தனர். (1 கொரிந்தியர் 15:3-8) தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தபடியே, அதற்குப் பின் அவர் தம்முடைய தந்தையின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து பரலோகத்தில் ராஜரீக வல்லமையைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்தார். (சங்கீதம் 110:1; எபிரெயர் 10:12, 13) ஆகவே இயேசுவை இன்று நாம் எவ்வாறு கற்பனை செய்ய வேண்டும்? மாட்டுத்தொழுவத்தில் உதவியற்ற ஒரு குழந்தையாக அவரைப் பற்றி நாம் யோசிக்க வேண்டுமா? அல்லது மரணத்துக்கு உட்படுத்தப்படும் வேதனையிலிருக்கும் ஒரு மனிதனாக அவரைக் கற்பனை செய்யவேண்டுமா? இல்லை. அவர் வல்லமையுள்ள, ஆளுகை செய்யும் ராஜா! இப்பொழுது வெகு சீக்கிரத்தில், குழப்பத்திலிருக்கும் நம்முடைய பூமியின்மீது அவருடைய அரசாட்சியை அவர் வெளிப்படுத்துவார்.
19 வெளிப்படுத்துதல் 19:11-15-ல், ராஜாவாகிய இயேசு கிறிஸ்து பொல்லாதவர்களை அழிப்பதற்காக மிகுந்த வல்லமையோடுகூட வருவதாக தெளிவாக வருணிக்கப்படுகிறார். இன்று இலட்சக்கணக்கானோரைத் தொல்லைபடுத்தும் துன்பத்தை முடிவுக்குக்கொண்டுவர இந்த அன்புள்ள பரலோக அரசர் எவ்வளவு ஆவலாக இருக்கவேண்டும்! பூமியிலிருக்கும்போது தாம் வைத்த பரிபூரண முன்மாதிரியைப் பின்பற்ற முயற்சிசெய்கிறவர்களுக்கு உதவிசெய்யவும் அவர் அதே அளவு ஆவலாக இருக்கிறார். (1 பேதுரு 2:21) அவர்கள் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக என்றுமாக வாழ்வதற்காக, அடிக்கடி அர்மகெதோன் என்று அழைக்கப்படும், வேகமாக வந்துகொண்டிருக்கும் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்த”த்தின் ஊடாக அவர்களைப் பாதுகாக்க அவர் விரும்புகிறார்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 16:14, 16.
20 முன்னுரைக்கப்பட்ட இயேசுவின் ஆயிரமாண்டு கால சமாதானமான ஆட்சியின்போது, அவர் எல்லா மனிதவர்க்கத்தின் சார்பாகவும் அற்புதங்களை நடப்பிப்பார். (ஏசாயா 9:6, 7; 11:1-10; வெளிப்படுத்துதல் 20:6) இயேசு எல்லா நோய்களையும் குணமாக்கி மரணத்தை முடிவுக்குக் கொண்டுவருவார். பூமியில் என்றுமாக வாழும் சந்தர்ப்பத்தை அவர்களும்கூட கொண்டிருக்கும் பொருட்டு அவர் கோடிக்கணக்கானோரை உயிர்த்தெழுப்புவார். (யோவான் 5:28, 29) பின்னால் வரும் ஒரு அதிகாரத்தில் அவருடைய மேசியானிய ராஜ்யத்தைப் பற்றி நீங்கள் அதிகத்தைக் கற்றுக்கொள்ளும்போது நிச்சயமாகவே கிளர்ச்சியடைவீர்கள். இதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்: ராஜ்ய ஆட்சியின்கீழ் நம்முடைய வாழ்க்கை எத்தனை அதிசயமாக இருக்கும் என்பதை நம்மால் கற்பனைசெய்துகூட பார்க்கமுடியாது. இயேசு கிறிஸ்துவோடு நன்கு பழக்கப்பட்டவராவது எத்தனை முக்கியமானது! ஆம், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற தேவனை அறியும் அறிவுக்கு உயிருள்ள திறவுகோலாக இருக்கும் இயேசுவை நாம் ஒருபோதும் மறவாதிருப்பது அத்தியாவசியமாகும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் குடிமதிப்பு வரி வசூலிப்பதற்கு ரோம பேரரசுக்கு அதிக உதவியாக இருந்தது. ஆகவே, அகுஸ்து ‘ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளப்’ போகிற ஒரு அரசரைப் பற்றிய தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு தன்னை அறியாமலே உதவிசெய்தான். அதே தீர்க்கதரிசனம் இந்த ஆட்சியாளனின் வாரிசுவின் நாட்களில் ‘உடன்படிக்கையின் தலைவன்’ அல்லது மேசியா ‘முறிக்கப்படுவார்,’ என்பதாக முன்னுரைத்தது. இயேசு அகுஸ்துவின் வாரிசாகிய திபேரியுவின் ஆட்சி காலத்தில் கொல்லப்பட்டார்.—தானியேல் 11:20-22.
b பண்டைய யூதர்கள் பொதுவாக வார வருடங்கள் கணக்கில் யோசித்தனர். உதாரணமாக, ஒவ்வொரு ஏழாவது நாளும் ஓய்வுநாளாக இருந்தது போலவே, ஒவ்வொரு ஏழாவது வருடமும் ஒரு ஓய்வு வருடமாக இருந்தது.—யாத்திராகமம் 20:8-11; 23:10, 11.
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
இயேசுவின் வம்சாவளி எவ்விதமாக அவரே மேசியா என்பதை ஆதரிக்கிறது?
இயேசுவில் நிறைவேற்றமடைந்த மேசியானிய தீர்க்கதரிசனங்கள் சில யாவை?
இயேசுவே தம்முடைய அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பதை கடவுள் எவ்விதமாக நேரடியாக காண்பித்தார்?
தேவனை அறியும் அறிவுக்கு ஏன் இயேசு உயிருள்ள திறவுகோலாக இருக்கிறார்?
[கேள்விகள்]
1, 2. உலகின் மதங்கள் எவ்விதமாக தேவனை அறியும் அறிவின் திறவுகோலை கையாடி கெடுத்துவிட்டிருக்கின்றன?
3. தேவனை அறியும் அறிவுக்கு இயேசு திறவுகோல் என்று ஏன் அழைக்கப்படலாம்?
4, 5. என்ன நம்பிக்கைகள் இயேசுவை மையமாகக் கொண்டிருந்தன, இயேசுவின் சீஷர்கள் அவரை எவ்விதமாக கருதினர்?
6. (அ) எந்த வம்சாவளி வாக்குப்பண்ணப்பட்ட வித்துவைப் பிறப்பிக்க வேண்டியதாயிருந்தது, இயேசு அந்தக் குடும்ப பரம்பரையில் வந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) பொ.ச. 70-க்குப் பின் வாழ்ந்துகொண்டிருக்கும் எவரும் ஏன் மேசியாவாக உரிமைபாராட்ட முடியாது?
7. (அ) இயேசுவே மேசியாவாக இருந்தார் என்பதற்கு இரண்டாவது அத்தாட்சி என்ன? (ஆ) இயேசுவின் சம்பந்தமாக மீகா 5:2 எவ்வாறு நிறைவேறியது?
8. (அ) எப்போது மற்றும் என்ன சம்பவத்தோடு 69 “வாரங்கள்” ஆரம்பமாயின? (ஆ) 69 “வாரங்கள்” எவ்வளவு நீண்டவையாக இருந்தன, அவை முடிவுக்கு வந்தபோது என்ன சம்பவித்தது?
9. (அ) சங்கீதம் 2:2 எவ்விதமாக நிறைவேறியது? (ஆ) இயேசுவில் நிறைவேறிய மற்ற சில தீர்க்கதரிசனங்கள் யாவை? (அட்டவணையைக் காண்க.)
10. இயேசுவே தம்முடைய வாக்குப்பண்ணப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பதை யெகோவா என்ன விதங்களில் உறுதிசெய்தார்?
11. இயேசுவே மேசியாவாக இருந்தார் என்பதற்கு எவ்வளவு அத்தாட்சி இருக்கிறது?
12, 13. (அ) இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பாக பரலோகத்தில் வாழ்ந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) “வார்த்தை” என்பது யார், மனிதனாவதற்கு முன்பு அவர் என்ன செய்தார்?
14. இயேசு ஏன், ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்’ என்று அழைக்கப்படுகிறார்?
15. இயேசு ஒரு பரிபூரண குழந்தையாக பிறந்தது எப்படி?
16, 17. (அ) அற்புதங்களை நடப்பிக்க இயேசு எங்கிருந்து வல்லமையைப் பெற்றார், அவற்றில் சில யாவை? (ஆ) இயேசு காண்பித்த சில பண்புகள் யாவை?
18. இயேசு கிறிஸ்துவை இன்று நாம் எவ்வாறு கற்பனை செய்ய வேண்டும்?
19. சமீப எதிர்காலத்தில் இயேசு என்ன நடவடிக்கை எடுப்பார்?
20. இயேசு தம்முடைய ஆயிர வருட ஆட்சியின்போது மனிதவர்க்கத்துக்காக என்ன செய்வார்?
[பக்கம் 37-ன் வரைப்படம்]
குறிப்பிடத்தக்க ஒருசில மேசியானிய தீர்க்கதரிசனங்கள்
தீர்க்கதரிசனம் சம்பவம் நிறைவேற்றம்
அவருடைய ஆரம்பகால வாழ்க்கை
ஏசாயா 7:14 கன்னியினிடத்தில் பிறக்கிறார் மத்தேயு1:18-23
எரேமியா 31:15 அவருடைய பிறப்புக்குப்பின்
குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் மத்தேயு 2:16-18
அவருடைய ஊழியம்
ஏசாயா 61:1, 2 கடவுளிடமிருந்து அவர் பெறும் நியமனம் லூக்கா 4:18-21
ஏசாயா 9:1, 2 ஊழியம், மக்கள் ஒரு பெரிய மத்தேயு 4:13-16
வெளிச்சத்தைக் காணும்படிச் செய்கிறது
சங்கீதம் 69:9 யெகோவாவின் வீட்டைக் குறித்த வைராக்கியம் யோவான் 2:13-17
ஏசாயா 53:1 விசுவாசிக்கப்படுவதில்லை யோவான் 12:37,38
சகரியா 9:9; கழுதைக் குட்டியின்மேல் எருசலேமுக்குள் மத்தேயு 21:1-9
சங்கீதம் 118:26 பிரவேசம்; ராஜாவாகவும் யெகோவாவின்
பெயரில் வருபவராகவும்
வரவேற்கப்படுதல்
அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதும் மரணமும்
சங்கீதம் 41:9; 109:8 ஒரு அப்போஸ்தலன் அப்போஸ்தலர்1:15-20
உண்மையற்றவனாக இருக்கிறான்;
இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறான், பின்னால்
வேறு ஒருவர் அவனுக்குப் பதிலாக
வைக்கப்படுகிறார்
சகரியா 11:12 30 வெள்ளிக்காசுகளுக்கு மத்தேயு 26:14,15
காட்டிக்கொடுக்கப்படுகிறார்
சங்கீதம் 27:12 அவருக்கு எதிராக பொய் சாட்சிகள் மத்தேயு 26:59-61
பயன்படுத்தப்படுகின்றனர்
சங்கீதம் 22:18 அவருடைய வஸ்திரங்கள்மேல் யோவான் 19:23, 24
சீட்டுப்போடப்படுகிறது
ஏசாயா 53:12 பாவிகளில் ஒருவராக கருதப்பட்டார் மத்தேயு 27:38
சங்கீதம் 22:7, 8 மரிக்கையில் பரியாசம் பண்ணப்படுகிறார் மாற்கு 15:29-32
சங்கீதம் 69:21 காடி கொடுக்கப்படுகிறார் மாற்கு 15:23,36
ஏசாயா 53:5; குத்தப்படுகிறார் யோவான் 19:34, 37
ஏசாயா 53:9 ஐசுவரியவான்களோடு அடக்கம் பண்ணப்படுகிறார் மத்தேயு 27:57-60
சங்கீதம் 16:8-11, அழிவிற்கு முன்பு அப்போஸ்தலர் 2:25-32;
உயிர்த்தெழுப்பப்படுவார் 13:34-37 NW அடிக்குறிப்பு
[பக்கம் 35-ன் படம்]
வியாதிப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்குரிய வல்லமையை இயேசுவுக்குக் கடவுள் கொடுத்தார்