யெகோவாவின் ஆவி அவருடைய மக்களை வழிநடத்துகிறது
“உமது நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக.” —சங்கீதம் 143:10, திருத்திய மொழிபெயர்ப்பு.
1, 2. யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியர்களுக்கு எது துயரத்தைத் தருவதாக இருக்கக்கூடும்?
‘நான் மிகவும் சோர்வுற்றிருக்கிறேன்! ஆறுதலை நான் எங்கே கண்டடைய முடியும்? கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டாரா?’ நீங்கள் எப்போதாவது அவ்வாறு உணர்ந்ததுண்டா? அவ்வாறு உணர்ந்ததுண்டானால், நீங்கள் தனித்தவராய் இல்லை. யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியர்கள் செழித்தோங்கும் ஆவிக்குரிய பரதீஸில் வசித்தாலும், சிலவேளைகளில் அவர்களும் மனிதவர்க்கத்திற்குப் பொதுவாயுள்ள சோர்வுதரும் பிரச்னைகள், துன்பங்கள் மற்றும் சோதனைகளை எதிர்ப்படுகின்றனர்.—1 கொரிந்தியர் 10:13.
2 ஒருவேளை ஏதோவொரு நீடித்திருக்கும் துன்பம் அல்லது பெரும் அழுத்தத்திற்கான காரணம் உங்களை நெருக்கித்தாக்கலாம். ஓர் அன்பானவரின் மரணத்தைக் குறித்து நீங்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கலாம்; மேலும் தனிமையாக உணரக்கூடும். அல்லது ஓர் அருமையான நண்பரின் நோய் காரணமாக உங்கள் இருதயம் கவலையுற்றிருக்கலாம். அத்தகைய சூழ்நிலைகள் உங்கள் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் எடுத்துப்போட்டு, உங்கள் விசுவாசத்தைக்கூட அச்சுறுத்திக்கொண்டிருக்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கடவுளிடம் அவருடைய ஆவிக்காகக் கேளுங்கள்
3. சமாதானம் மற்றும் சந்தோஷம் போன்ற பண்புகளை ஏதாவதொன்று உங்களிடத்திலிருந்து எடுத்துப்போட்டால், எதைச் செய்வது ஞானமானதாக இருக்கும்?
3 உங்களுடைய சமாதானம், சந்தோஷம் அல்லது மற்ற ஏதாவது தெய்வீகப் பண்பை, ஏதோவொன்று எடுத்துப்போடுகிறதென்றால், கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காக அல்லது செயல்நடப்பிக்கும் சக்திக்காக ஜெபிப்பது ஞானமானதாக இருக்கும். ஏன்? ஏனென்றால் பிரச்னைகள், துன்பங்கள் மற்றும் சோதனைகளை எதிர்ப்பட ஒரு கிறிஸ்தவனுக்கு உதவக்கூடிய நல்ல கனிகளை யெகோவாவின் ஆவி கொடுக்கிறது. “மாம்சத்தின் கிரியைக”ளுக்கு எதிராக எச்சரித்தபின் அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”—கலாத்தியர் 5:19-23.
4. ஏதோவொரு துன்பம் அல்லது சோதனையை எதிர்ப்பட்டால், ஒருவருடைய ஜெபங்களில் குறிப்பாக இருப்பது ஏன் பொருத்தமானதாக இருக்கும்?
4 நீங்கள் எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கும் வகையான துன்பம் காரணமாக, உங்கள் சாந்தத்தை அல்லது சாந்த தன்மையை இழந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக நீங்கள் உணரக்கூடும். அப்படியானால், குறிப்பாக ஆவியின் கனியாகிய சாந்தத்திற்காக யெகோவா தேவனிடம் ஜெபியுங்கள். நீங்கள் ஏதாவது ஒரு சோதனையை எதிர்ப்பட்டால், விசேஷமாக இச்சையடக்கம் என்ற கனி தேவைப்படுகிறது. சந்தேகமின்றி, சோதனையை எதிர்ப்பதற்கு, சாத்தானிடத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு, மற்றும் சோதனையைச் சகிப்பதற்கு தேவையான ஞானத்திற்காகவும் தெய்வீக உதவிக்காக ஜெபிப்பதும்கூட பொருத்தமானதாக இருக்கும்.—மத்தேயு 6:13; யாக்கோபு 1:5, 6.
5. ஆவியின் எந்தக் கனிக்காக ஜெபிப்பது என்று உங்களுக்குத் தெரியாத அளவிற்கு சூழ்நிலைகள் அவ்வளவு துயர்தருவதாய் இருந்தால், என்ன செய்யப்படலாம்?
5 இருப்பினும், சில வேளைகளில், சூழ்நிலைகள் அவ்வளவு கவலைக்குரியதாகவும் குழப்புவதாகவும் இருப்பதால், ஆவியின் எந்தக் கனி உங்களுக்குத் தேவை எனத் தெரியாமல் இருக்கலாம். உண்மையில், சந்தோஷம், சமாதானம், சாந்தம் இன்னும் மற்ற தெய்வீகக் குணங்கள் எல்லாம் ஆபத்திற்குள்ளாக்கப்படலாம். அப்போது என்ன? பரிசுத்த ஆவிக்காகத்தானே கடவுளிடம் கேட்டு, உங்களுடைய விஷயத்தில் தேவைப்படும் கனிகளை அது உங்களில் செழித்தோங்கச் செய்ய ஏன் அனுமதிக்கக்கூடாது? தேவையான கனிகள், அன்பு அல்லது சந்தோஷம் அல்லது சமாதானம் அல்லது ஆவியின் கனிகளின் ஒரு கூட்டுச்சேர்வாக இருக்கக்கூடும். ஆவியின் இயக்கத்திற்கு இணங்கிச்செல்ல கடவுள் உங்களுக்கு உதவிசெய்வதற்காகவும் ஜெபியுங்கள், ஏனென்றால் அவர் தம்முடைய மக்களை வழிநடத்துவதற்கு அதையே பயன்படுத்துகிறார்.
யெகோவா உதவிசெய்ய மனமுள்ளவராய் இருக்கிறார்
6. இடைவிடாமல் ஜெபம் பண்ணுவதன் அவசியத்தை, அவரைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு எவ்வாறு அழுத்திக் காண்பித்தார்?
6 இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் ஜெபத்தைப்பற்றிய போதனையைக் கேட்டபோது, அதன் பாகமாக அவர் கடவுளுடைய ஆவிக்காக ஜெபிக்கவும் தூண்டினார். அவர்களை இடைவிடாமல் ஜெபிப்பதற்குத் தூண்டும்வண்ணம் அமைக்கப்பட்ட ஓர் உதாரணத்தை இயேசு முதலில் பயன்படுத்தினார். அவர் சொன்னார்: “உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைப்பதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்திரமாக: என்னைத் தொந்தரவுசெய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 11:5-8.
7. லூக்கா 11:11-13-லுள்ள இயேசுவின் வார்த்தைகளின் சாராம்சம் என்ன, மேலும் கடவுள் மற்றும் அவருடைய ஆவியைக்குறித்து அவை என்ன உறுதியளிக்கின்றன?
7 யெகோவா அவருடைய ஒவ்வொரு உண்மையுள்ள ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியருக்கும் உதவிசெய்ய மனமுள்ளவராய் இருக்கிறார்; அவர்களுடைய வேண்டுதல்களுக்கு அவர் செவிகொடுக்கிறார். ஆனால் அத்தகைய ஒருவர் இயேசு தூண்டியவிதமாகவே, ‘தொடர்ந்து கேட்டார்’ என்றால், இது இருதயப்பூர்வமான விருப்பத்தைக் குறிக்கிறது; விசுவாசத்தின் ஒரு வெளிக்காட்டாகவும் இருக்கிறது. (லூக்கா 11:9, 10) கிறிஸ்து தொடர்ந்தார்: “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.” (லூக்கா 11:11-13) ஒரு பூமிக்குரிய தகப்பன், சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் காரணமாக ஓரளவு பொல்லாதவராய் இருந்தாலும், தன்னுடைய பிள்ளைக்கு நல்ல காரியங்களைக் கொடுக்கையில், நிச்சயமாகவே, நம்முடைய பரலோக தகப்பன், மனத்தாழ்மையுடன் கேட்கும் தம்முடைய உண்மைத்தவறாத ஊழியரில் எவருக்கும் தம்முடைய பரிசுத்த ஆவியைத் தொடர்ந்து கொடுப்பார்.
8. சங்கீதம் 143:10 எவ்வாறு தாவீது, இயேசு மற்றும் கடவுளுடைய நவீன நாளைய ஊழியர்களுக்குப் பொருந்துகிறது?
8 கடவுளுடைய ஆவியிலிருந்து நாம் பயனடைய வேண்டுமானால், தாவீதைப் போலவே அதன் வழிநடத்துதலைப் பின்தொடர மனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அவர் ஜெபித்தார்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் கடவுள்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவதாக.” (சங்கீதம் 143:10, தி.மொ.) இஸ்ரவேல் அரசனாகிய சவுலால் விலக்கி வைக்கப்பட்டிருந்த தாவீது, தன்னுடைய வழி நேர்மையானதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கடவுளுடைய ஆவி தன்னை வழிநடத்தும்படி விரும்பினார். உரிய காலத்தில், அபியத்தார் கடவுளுடைய சித்தத்தைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்படுகிற ஆசாரியனின் ஏபோத்துடன் வந்தார். யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு எந்த வழியில் செல்லவேண்டும் என்பதாகக் கடவுளுடைய ஆசாரிய பிரதிநிதியாக, அபியத்தார் தாவீதுக்கு உபதேசித்தார். (1 சாமுவேல் 22:17–23:12; 30:6-8) தாவீதைப்போலவே இயேசு யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்பட்டார்; ஒரு வகுப்பாக, கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகம்செய்யப்பட்டோரைக்குறித்தும் இதுவே உண்மையாக இருந்திருக்கிறது. மனித சமுதாயத்திற்கு முன்பாக, 1918-19-ல் அவர்கள் ஓர் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர்; அவர்களுடைய மத எதிரிகள் அவர்களை அழித்துவிடலாம் என்று நினைத்தனர். அவர்களுடைய செயலற்ற நிலையிலிருந்து வெளிவரும்படி அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் ஜெபித்தனர்; கடவுள் 1919-ல் அவர்களுடைய ஜெபங்களுக்கு பதிலளித்து, அவர்களை விடுவித்து, மறுபடியும் அவருடைய சேவையில் சுறுசுறுப்பாக இருக்கும்படி செய்தார். (சங்கீதம் 143:7-9) நிச்சயமாகவே, இந்நாள்வரையாக செய்வதைப்போலவே, கடவுளுடைய ஆவி அன்றும் அவருடைய மக்களுக்கு உதவிசெய்து வழிநடத்தி வந்தது.
ஆவி எவ்வாறு உதவி செய்கிறது
9. (எ) பரிசுத்த ஆவி எவ்வாறு ஒரு ‘சகாயராக’ சேவிக்கிறது? (பி) பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
9 இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியை ஒரு ‘சகாயர்’ என்றழைத்தார். எடுத்துக்காட்டாக, தம்மைப் பின்பற்றியவர்களிடம் அவர் சொன்னார்: “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை [சகாயரை, தி.மொ.] அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள்.” மற்ற காரியங்களோடுகூட அந்தச் ‘சகாயர்’ ஒரு போதகராகவும் இருப்பார், ஏனென்றால் இயேசு வாக்களித்தார்: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே [சகாயரே, தி.மொ.] எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” ஆவி கிறிஸ்துவைக்குறித்தும் சாட்சி கொடுக்கிறது; மேலும் அவர் தம்முடைய சீஷர்களுக்கு உறுதியளித்தார்: “நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் [சகாயரானவர், தி.மொ.] உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.”—யோவான் 14:16, 17, 26; 15:26; 16:7.a
10. பரிசுத்த ஆவி என்ன வழிகளில் ஒரு சகாயராக நிரூபித்திருக்கிறது?
10 பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று, இயேசு அவரைப் பின்பற்றியவர்கள்மேல் வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியை பரலோகத்திலிருந்து ஊற்றினார். (அப்போஸ்தலர் 1:4, 5; 2:1-11) ஒரு சகாயராக, அந்த ஆவி அவர்களுக்கு கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும்குறித்து கூடுதலான புரிந்துகொள்ளுதலைக் கொடுத்து, அவருடைய தீர்க்கதரிசன வார்த்தையையும் அவர்களுக்குத் திறந்து வைத்தது. (1 கொரிந்தியர் 2:10-16; கொலோசெயர் 1:9, 10; எபிரெயர் 9:8-10) பூமியிலெங்கும் இயேசுவின் சீஷர்கள் சாட்சிகளாக இருக்கும்படியும் அந்தச் சகாயர் அதிகாரமளித்தார். (லூக்கா 24:49; அப்போஸ்தலர் 1:8; எபேசியர் 3:5, 6) இன்று, “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாகக் கடவுள் செய்திருக்கும் ஆவிக்குரிய ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டால், ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவன் அறிவில் வளருவதற்குப் பரிசுத்த ஆவி உதவி செய்யக்கூடும். (மத்தேயு 24:45-47) யெகோவாவின் ஊழியரில் ஒருவராக சாட்சி பகருவதற்குத் தேவையான தைரியத்தையும் பெலத்தையும் கொடுப்பதன்மூலம் கடவுளுடைய ஆவி உதவி செய்யலாம். (மத்தேயு 10:19, 20; அப்போஸ்தலர் 4:29-31) எனினும், பரிசுத்த ஆவி மற்ற வழிகளிலும் கடவுளுடைய மக்களுக்கு உதவி செய்கிறது.
“வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு”
11. ஒரு துன்பம் உங்களை ஆட்கொள்ளுவதாகத் தோன்றினால், ஒரு கிறிஸ்தவன் என்ன செய்யவேண்டும்?
11 ஒரு கிறிஸ்தவன் தன்னை நெருக்கித்தாக்கும் ஒரு துன்பத்தால் ஆட்கொள்ளப்படுவதாகத் தோன்றினால், அவன் என்ன செய்யவேண்டும்? ஏன், பரிசுத்த ஆவிக்காக ஜெபித்து, அது செயல்நடப்பிக்கும்படி அனுமதியுங்கள்! “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்,” என்று பவுல் கூறினார்.—ரோமர் 8:26, 27.
12, 13. (எ) குறிப்பாக துயர்மிக்க சூழ்நிலைமைகளில் செய்யப்படும் ஜெபங்களுக்கு எவ்வாறு ரோமர் 8:26, 27 பொருந்துகிறது? (பி) ஆசியா மாகாணத்தில் மிகுந்த அழுத்தத்தின்கீழ் இருந்தபோது, பவுலும் அவருடைய கூட்டாளிகளும் என்ன செய்தனர்?
12 கடவுளுடைய ஆவி வேண்டுதல் செய்யக்கூடிய பரிசுத்தவான்கள், ஒரு பரலோக நம்பிக்கையை உடைய இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம்செய்யப்பட்டோர். ஆனால் நீங்கள் பரலோக அழைப்பைக் கொண்டிருந்தாலும் சரி, ஒரு பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் சரி, ஒரு கிறிஸ்தவனாக நீங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியைப் பெறலாம். சில வேளைகளில், ஒரு குறிப்பான ஜெபத்திற்கு யெகோவா நேரடியான பதிலைக் கொடுக்கிறார். எனினும், சில நேரங்களில், உங்களுடைய உணர்ச்சிகளை வார்த்தைகளில் போடமுடியாத அளவிற்கு நீங்கள் கவலையுற்றிருக்கலாம்; அப்போது பேசமுடியாத பெருமூச்சுகளோடுமட்டும்தான் யெகோவாவிடம் மன்றாட முடியலாம். உண்மையில், உங்களுக்குச் சிறந்தது எது என்பதை அறியாதிருப்பதால், பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கவில்லையென்றால் தவறான காரியத்தைக்கூட கேட்கக்கூடும். கடவுளுடைய சித்தம் நடக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதைக் கடவுள் அறிந்திருக்கிறார்; மேலும் உண்மையாக உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். மேலுமாக, தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக பல ஜெபங்கள் அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்படும்படி வைத்திருக்கிறார்; இவை இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாளுகின்றன. (2 தீமோத்தேயு 3:16, 17; 2 பேதுரு 1:21) ஆகவே, அத்தகைய ஆவியால் ஏவப்பட்ட ஜெபங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட உணர்ச்சிகளை, கடவுளுடைய ஊழியரில் ஒருவராக நீங்களும் சொல்ல விரும்புகிறீர்கள் என்பதாக ஏற்று, அவற்றிற்கு உங்கள் சார்பாக அவரால் பதிலளிக்க முடியும்.
13 ஆசியா மாகாணத்தில் உபத்திரவத்தை அனுபவிக்கையில், என்ன ஜெபிப்பது என்று பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் அறியாதிருந்திருக்கக்கூடும். ‘அவர்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் உண்டாயிருந்ததால், மரணம் வருமென்று தங்களுக்குள்ளே நிச்சயத்திருந்தார்கள்.’ ஆனால் அவர்கள் மற்றவர்களை ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டு, மரித்தோரை எழுப்புகிற தேவனை நம்பினார்கள், அவரும் அவர்களை விடுவித்தார். (2 கொரிந்தியர் 1:8-11) யெகோவா தேவன் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்டு அவற்றின்பேரில் செயல்படுகிறார் என்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
14. ஒரு துன்பம் சில காலத்திற்குத் தொடருவதற்கு யெகோவா அனுமதித்தால், என்ன நன்மையில் விளைவடையக்கூடும்?
14 கடவுளுடைய மக்கள் ஓர் அமைப்பாக, அடிக்கடி துன்பங்களால் தாக்கப்படுகின்றனர். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, முதல் உலக யுத்தத்தின் போது அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். தங்களுடைய நிலைநிற்கையைப்பற்றி ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதல் அப்போது அவர்களுக்கு இல்லாததால், அவர்கள் சரியாக எதற்காக ஜெபிக்கவேண்டும் என்று அறியாதிருந்தபோதிலும், யெகோவாவுடைய வார்த்தை தீர்க்கதரிசன ஜெபங்களைக் கொண்டிருந்தது; அவர்கள் சார்பாக அவற்றிற்கு அவர் பதிலளித்தார். (சங்கீதம் 69, 102, 126; ஏசாயா, அதிகாரம் 12) ஆனால் ஒரு துன்பம் சில காலம் தொடரும்படி யெகோவா அனுமதித்தால் என்ன செய்வது? இது ஒரு சாட்சியில் பலனடையலாம்; ஒருவரை சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தூண்டக்கூடும்; ஜெபிப்பதன்மூலம் அல்லது துன்பப்படும் உடன் விசுவாசிகளுக்காக உதவி செய்வதன்மூலம் சகோதர அன்பைக் காண்பிப்பதற்கான வாய்ப்பை ஒரு கிறிஸ்தவனுக்கு அளிக்கிறது. (யோவான் 13:34, 35; 2 கொரிந்தியர் 1:11) யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியின்மூலமாக தமது மக்களை வழிநடத்துகிறார், அவர்களுக்குச் சிறந்ததைச் செய்கிறார், மற்றும் அவருடைய பரிசுத்த பெயருக்கு கனத்தையும் மகிமையையும் கொண்டுவரும்விதத்தில் எப்போதும் காரியங்களைச் செயல்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.—யாத்திராகமம் 9:16; மத்தேயு 6:9.
ஆவியை ஒருபோதும் துக்கப்படுத்தாதீர்கள்
15. தங்களுடைய சார்பாக என்ன செய்யும்படியாக கிறிஸ்தவர்கள் யெகோவாவின் ஆவியைச் சார்ந்திருக்கலாம்?
15 ஆக, நீங்கள் ஒரு யெகோவாவின் ஊழியராக இருந்தால், துன்பங்களின்போதும் மற்ற சமயங்களிலும் பரிசுத்த ஆவிக்காக ஜெபியுங்கள். பின்பு அதன் வழிநடத்தலை பின்பற்றுவதில் நிச்சயமாயிருங்கள், ஏனென்றால் பவுல் எழுதினார்: “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” (எபேசியர் 4:30) கடவுளுடைய ஆவி ஒரு முத்திரையாக இருந்தது, இருக்கிறது; அல்லது உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ‘வரவிருந்தகாரியங்களுக்கான ஓர் அச்சாரமாக’ இருக்கிறது—அதாவது சாவாமையுள்ள பரலோக வாழ்க்கை. (2 கொரிந்தியர் 1:22; ரோமர் 8:15; 1 கொரிந்தியர் 15:50-57; வெளிப்படுத்துதல் 2:10) அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் பூமிக்குரிய நம்பிக்கையை உடையவர்களும் தங்களுடைய சார்பாக யெகோவாவின் ஆவி அதிகத்தைச் செய்யும்படியாக அதை சார்ந்திருக்கலாம். ஓர் உண்மையான வாழ்க்கைப் போக்கில் அவர்களை நடத்தி, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறாமல் இருப்பதற்கு, அவருடைய பரிசுத்த ஆவியை இழப்பதற்கு மற்றும் நித்திய ஜீவனை அடையாமல் இருப்பதற்கு வழிநடத்தும் பாவமான காரியங்களைத் தவிர்ப்பதற்கு அது உதவிசெய்யக்கூடும்.—கலாத்தியர் 5:19-21.
16, 17. ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு ஆவியைத் துக்கப்படுத்தக்கூடும்?
16 ஒரு கிறிஸ்தவன், தெரிந்தோ தெரியாமலோ எப்படி ஆவியைத் துக்கப்படுத்தக்கூடும்? ஒற்றுமையை வளர்ப்பதற்கும், சபையில் பொறுப்புள்ளவர்களை நியமிப்பதற்கும் யெகோவா தம்முடைய ஆவியைப் பயன்படுத்துகிறார். ஆகவே, சபையின் அங்கத்தினர் ஒருவர், நியமிக்கப்பட்ட மூப்பர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தல், பழிதூற்றும் வீண்பேச்சைப் பரப்புதல் போன்ற காரியங்களைச் செய்தால், சமாதானம் மற்றும் ஒற்றுமைக்கான கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதல்களை அவர் பின்பற்றாதவராக இருப்பார். ஒரு பொதுவான முறையில், அவர் ஆவியைத் துக்கப்படுத்துவார்.—1 கொரிந்தியர் 1:10; 3:1-4, 16, 17; 1 தெசலோனிக்கேயர் 5:12, 13; யூதா 16.
17 எபேசுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, பொய், தொடர்ந்து நிலைத்திருக்கும் கோபம், திருடுதல், தகுதியற்ற பேச்சு, வேசித்தனத்திற்கான கெட்ட அவா, அவமானமான நடத்தை மற்றும் கீழ்த்தரமான கேலி பேச்சுகள் ஆகியவற்றிற்கு எதிராக பவுல் எச்சரித்தார். அத்தகைய காரியங்களுக்கு தான் இழுத்துச்செல்லப்பட ஒரு கிறிஸ்தவன் அனுமதித்தால், கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட அறிவுரைக்கு எதிராக அவன் சென்றுகொண்டிருப்பான். (எபேசியர் 4:17-29; 5:1-5) ஆம், அவ்வாறாக அவன் ஓரளவிற்கு கடவுளுடைய ஆவியைத் துக்கப்படுத்துவான்.
18. கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையின் அறிவுரையை அசட்டைசெய்யத் துவங்கும் எந்தக் கிறிஸ்தவனுக்கும் என்ன சம்பவிக்கலாம்?
18 உண்மையில், யெகோவாவின் ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையின் அறிவுரையை அசட்டை செய்யத் துவங்கும் எந்தக் கிறிஸ்தவனும், வேண்டுமென்றே செய்யும் பாவத்திலும் தெய்வீக ஆதரவை இழப்பதிலும் விளைவடையக்கூடிய மனநிலைகளை அல்லது தனித்தன்மைகளை வளர்க்க ஆரம்பிக்கக்கூடும். அப்போது அவன் பாவத்தைச் செய்யாமல் இருந்தாலும், அதற்கான திசையில் சென்றுகொண்டிருக்கக்கூடும். ஆவியின் வழிநடத்துதலுக்கு மாறாகச் சென்றுகொண்டிருக்கும் அத்தகைய கிறிஸ்தவன் அதைத் துக்கப்படுத்துவான். அவ்வாறாக, பரிசுத்த ஆவியின் ஊற்றுமூலராகிய யெகோவாவை எதிர்த்து, துக்கப்படுத்திக்கொண்டும் இருப்பான். கடவுளை நேசிக்கும் எவரும் அதை ஒருபோதும் செய்ய விரும்பமாட்டார்கள்!
பரிசுத்த ஆவிக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள்
19. ஏன் குறிப்பாக இன்று யெகோவாவின் மக்களுக்கு அவருடைய ஆவி தேவைப்படுகிறது?
19 நீங்கள் யெகோவாவின் ஊழியக்காரராக இருந்தால், தொடர்ந்து அவருடைய பரிசுத்த ஆவிக்காக ஜெபியுங்கள். குறிப்பாக இந்தக் “கடைசி நாட்களில்,” கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில், கிறிஸ்தவர்களுக்கு கடவுளுடைய ஆவியின் உதவி தேவைப்படுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5) பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டு, இப்போது பூமியின் அருகாமையில் இருக்கும் பிசாசும் அவனுடைய பேய்களும், யெகோவாவின் அமைப்பிற்கு எதிராக கடுங்கோபத்துடன் இருக்கின்றனர். எனவே, கடவுளுடைய மக்களுக்கு, அவர்களை வழிநடத்த அல்லது வழிகாட்ட, கஷ்டங்களை மற்றும் துன்புறுத்தல்களைச் சகிக்க உதவும்படியாக, முன்பு எப்போதும் இருந்ததைவிட இப்போது அவருடைய பரிசுத்த ஆவி தேவைப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 12:7-12.
20, 21. யெகோவாவின் வார்த்தை, ஆவி மற்றும் அமைப்பின் வழிநடத்துதலை ஏன் பின்பற்றவேண்டும்?
20 யெகோவா தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாகக் கொடுக்கும் உதவிக்காக எப்போதும் போற்றுதலைக் காண்பியுங்கள். அவருடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் வழிநடத்துதலைப் பின்பற்றுங்கள். கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிற பூமிக்குரிய அமைப்புடன் முழுமையாக ஒத்துழையுங்கள். பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதற்குச் சமானமாயுள்ள ஒரு வேதப்பூர்வமற்ற வழிக்கு திசைதிருப்பப்பட உங்களை ஒருபோதும் அனுமதிக்காதேயுங்கள்; ஏனென்றால் இது கடைசியில் அந்த ஆவி உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடப்படுவதற்கும் அவ்வாறாக ஆவிக்குரிய சேதத்திற்கும் வழிநடத்தும்.—சங்கீதம் 51:11.
21 யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்படுவதே அவரைப் பிரியப்படுத்துவதற்கும் ஒரு சமாதானமான, சந்தோஷமான வாழ்க்கையைக் கொண்டிருப்பதற்கும் ஒரே வழியாகும். பரிசுத்த ஆவியை ஒரு ‘சகாயர்’ அல்லது ‘தேற்றரவாளன்’ என்பதாக இயேசு அழைத்தார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். (யோவான் 14:16) அதன்மூலமாக, கடவுள் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலளித்து, உபத்திரவங்களை எதிர்ப்படுவதற்குத் திடப்படுத்துகிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) யெகோவாவின் மக்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அந்த ஆவி அதிகாரமளிக்கிறது; ஒரு நல்ல சாட்சி கொடுப்பதற்குத் தேவையான வேதப்பூர்வ குறிப்புகளை ஞாபகத்திற்குக் கொண்டுவருவதற்கும் உதவிசெய்கிறது. (லூக்கா 12:11, 12; யோவான் 14:25, 26; அப்போஸ்தலர் 1:4-8; 5:32) ஜெபம் மற்றும் ஆவியின் வழிநடத்துதலின்வழியாக, பரலோக ஞானத்துடன் கிறிஸ்தவர்கள் விசுவாச பரீட்சைகளை எதிர்ப்படலாம். ஆகவே, வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைமைகளிலும், அவர்கள் கடவுளுடைய ஆவிக்காகத் தொடர்ந்து ஜெபிக்கிறார்கள். அதன் பயனாக, யெகோவாவின் ஆவி அவருடைய மக்களை வழிநடத்துகிறது. (w92 9/15)
[அடிக்குறிப்புகள்]
a ஒரு ‘சகாயர்’ என்பதாக ஆளுருவப்படுத்தினாலும், பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல, ஏனென்றால் ஒரு கிரேக்க அஃறிணை சுட்டுப்பெயர் (“அது” என்று மொழிபெயர்க்கப்படுவது) ஆவியைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. ஞானம் ஆளுருவப்படுத்தப்படுகையில் எபிரெய பெண்பால் சுட்டுப்பெயர்கள் இதேவிதமாக பயன்படுத்தப்படுகின்றன. (நீதிமொழிகள் 1:20-33; 8:1-36) மேலுமாக, பரிசுத்த ஆவி ‘பொழிந்தருளப்பட்டது’; இது ஓர் ஆளென்றால் முடியாத காரியமாக இருக்கிறது.—அப்போஸ்தலர் 2:33.
உங்களுடைய பதில்கள் என்ன?
◻ ஏன் யெகோவாவின் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும்?
◻ பரிசுத்த ஆவி எவ்வாறு ஒரு சகாயராக இருக்கிறது?
◻ ஆவியைத் துக்கப்படுத்துவது எதை அர்த்தப்படுத்தும், அவ்வாறு செய்வதை எவ்விதமாகத் தவிர்க்கலாம்?
◻ பரிசுத்த ஆவிக்காக ஏன் தொடர்ந்து ஜெபித்து அதன் வழிநடத்துதலைப் பின்பற்றவேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
ஓர் அன்பான தகப்பன் தன்னுடைய மகனுக்கு நல்ல காரியங்களைக் கொடுப்பதுபோல, பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கும் அவருடைய ஊழியர்களுக்கு யெகோவா அதைக் கொடுக்கிறார்
[பக்கம் 17-ன் படம்]
ஜெபம் செய்யும் கிறிஸ்தவர்களுக்காக கடவுளுடைய ஆவி எவ்வாறு வேண்டுதல் செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?