எல்லா மனிதவர்க்கத்திற்கும் நற்செய்தி!
“பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்தான்.” (வெளிப்படுத்துதல் 14:6) கடவுளுடைய ஆவியின் ஏவுதலின் கீழ் தீர்க்கதரிசனமாய் தான் கண்ட தரிசனத்தை வயது சென்ற அப்போஸ்தலனாகிய யோவான் அந்த வார்த்தைகளினால் விவரித்தார், இது நம் நாளில் நிறைவேற்றப்படும் ஒரு தரிசனம். குற்றச் செயல், தூய்மைக்கேடு, பயங்கரவாதம், யுத்தம், பரவலாகக் காணப்படும் பொருளாதார அநிச்சயம் அதிகரிக்கும் இந்தச் சகாப்தத்தில் நற்செய்தி இருக்கிறது என்பதை அறிவது எவ்வளவு துயர் தீர்ப்பதாய் இருக்கிறது! ஆனால் ஒரு தூதனைக் கொண்டு அறிவிக்க வேண்டிய அளவுக்கு என்ன செய்தி அவ்வளவு நன்றாக இருக்கக்கூடும்? ஒவ்வொரு தேசத்திற்கும், கோத்திரத்திற்கும், பாஷைக்காரருக்கும், ஜனத்திற்கும் அறிவிக்க வேண்டிய அளவுக்கு என்ன செய்தி அவ்வளவு சந்தோஷமானதாக இருக்கக்கூடும்?
ஒரு தூதன் தனிப்பட்ட விதமாக நற்செய்தி அறிவித்த மற்றொரு சமயத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால் நாம் அதற்கு பதில் அளிக்கலாம். பொ.ச.மு முதல் நூற்றாண்டு முடிவடையும் சமயத்தில் இது நடந்தது. யோவான் தன் தரிசனத்தைக் காண்பதற்கு ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு, பெத்லகேமுக்கு அருகில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு வயல் வெளியில் இருந்தார்கள். ஒரு தூதன் இயேசுவின் பிறப்பை அறிவிக்க தோன்றினார்: “இதோ! எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.”—லூக்கா 2:10, 11.
இயேசுவின் பிறப்பு உண்மையிலேயே “மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”யாக இருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட கிறிஸ்துவாகவும் இரட்சகராகவும் அவர் வளர்ந்தார், நேர்மையான இருதயமுள்ள விசுவாசிகள் வாழ்வதற்கென தன் பரிபூரண மானிட ஜீவனை தந்தவராகவும் அவர் இருந்தார். அதற்கும் மேலாக, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராகவும், “சமாதானப் பிரபுவாக”வும் ஆக இருந்தார், அவருடைய ஆட்சியின் கீழ் நீதியும், சமாதானமும் இறுதியாக மனிதவர்க்கத்திற்கு வரும். (ஏசாயா 9:6; லூக்கா 1:33) அவருடைய பிறப்பு உண்மையில் ஒரு தூதனால் அறிவிக்கத்தக்க தகுதிவாய்ந்த நற்செய்தியாக இருந்தது!
இயேசு அரசராக இருக்கிறார்
இயேசு அவருக்கான கடவுளுடைய நோக்கங்கள் அநேகத்தை முதல் நூற்றாண்டில் நிறைவேற்றினார், ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக அப்பொழுது சிங்காசனத்தில் அமர்த்தப்படவில்லை. இந்தப் பத்திரிகை அடிக்கடி சுட்டிக் காட்டினபடி, இது 1914-ம் ஆண்டுவரை நடைபெறவில்லை. தீர்க்கதரிசன நிறைவேற்றம் தெளிவாக காண்பிக்கிறபடி, அந்த வருடத்தில் கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 12:10, 12) 1914-ல் முதல் உலக யுத்தம் மூண்டது என்ற மிகவும் மோசமான செய்தி இருந்தபோதிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் பிறப்பு, செய்தியில் மிகச் சிறந்ததாக இருந்தது. அதன் காரணமாகத்தான் இயேசு நம் நாளுக்கான தீர்க்கதரிசனம் உரைத்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.”—மத்தேயு 24:14.
இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டதா? அதற்கு பதில் ஆம்! மேலும் யோவானின் தீர்க்கதரிசன காட்சியும் நிறைவேற்றப்பட்டுள்ளது. உண்மையில், யோவான் கண்ட காணக்கூடாத தூதன் நம் கண்ணுக்குத் தென்படுவதில்லை. ஆனால், அந்தத் தூதனின் நற்செய்தியை “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” அறிவிக்கும் யெகோவாவின் சாட்சிகள் நன்றாக கண்ணுக்குத் தென்படுகின்றனர். 212 தேசங்களிலும், கடற்தீவுகளிலும் அவர்களுடைய குரல்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் திரளான ஜனங்கள் செவிகொடுக்கின்றனர். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தி உண்மையில் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை இவர்களின் அனுபவங்கள் சில காட்டும். (w90 1/1)