வருடமெல்லாம் சமாதானம் சாத்தியமா?
“பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள். பூமியில் தேவனைப் பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்.”—லூக்கா 2:14, ஈஸி டு ரீட் வர்ஷன்.
இந்த வார்த்தைகள் கோடிக்கணக்கான மக்களுக்குத் தெரிந்தவையே. இரவில் தங்களுடைய மந்தைகளைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் தேவதூதர்கள் கூறிய வாழ்த்துச் செய்தியே இது. இவ்வாறு இயேசுவின் பிறப்பை அவர்கள் அறிவித்தார்கள். இயேசு பிறந்ததாக சர்ச்சுகள் சொல்லிக்கொள்ளும் அந்தச் சமயத்தில், பெயர்க் கிறிஸ்தவர்களாய் இருக்கிற அநேகர், நல்லவர்களாக வாழ பெரும் முயற்சி எடுக்கிறார்கள். தேவதூதர்கள் அறிவித்த அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தோஷம், சமாதானம், நட்பு ஆகிய பண்புகளை கிறிஸ்மஸ் பண்டிகையின்போது வெளிக்காட்ட அவர்கள் அதிக பிரயாசப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட நல்ல பண்புகள், கிறிஸ்மஸை மதப் பண்டிகையாகக் கொண்டாடாத மக்களையும்கூட கவர்ந்திழுக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின்போது காண்பிக்கப்படும் இந்த நல்ல பண்புகளை அவர்களும் வரவேற்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகையில் மக்கள் சற்று ஓய்வெடுக்க முடிகிறது; தங்கள் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து நேரம் செலவிட முடிகிறது; அல்லது வெறுமனே சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடிகிறது. ஆனாலும், நேர்மை உள்ளம்படைத்த அநேகர் கிறிஸ்மஸ் பண்டிகையை இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதற்கான சமயமாகவே கருதுகிறார்கள்.
கிறிஸ்மஸ் பண்டிகையை அவர்கள் எப்படிக் கருதினாலும் சரி, அந்தச் சமயத்தில் காண்பிக்கப்படும் எல்லா நல்ல பண்புகளும் அந்தப் பண்டிகை முடிந்த பிறகு மறைந்துவிடுவதாக அநேகர் எந்தத் தயக்கமுமின்றி ஒத்துக்கொள்கிறார்கள். சீக்கிரத்திலேயே மக்கள் தங்களது பழைய குணங்களை வெளிக்காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். “கிறிஸ்மஸ் மனோபாவம்” (ஆங்கிலம்) என்ற தலைப்பில் ‘த ராயல் பேங்க் ஆஃப் கனடா மன்த்லி லெட்டர்’ வெளியிட்ட கட்டுரை இவ்வாறு கூறியது: “கிறிஸ்தவர்களாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் அநேகர் வருடாவருடம் சில வாரங்களுக்கு மாத்திரமே கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்குத் தகுந்தவாறு நடந்துகொள்கிறார்கள்; சக மனிதர்களிடம் சமாதானமாக இருக்கிறார்கள். ஆனால், புது வருடம் பிறந்து கொஞ்ச நாட்களுக்குள் பழையபடி தங்களுடைய சுயநல வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார்கள், மற்றவர்களின் பரிதாபமான நிலையைப் பார்த்து கொஞ்சமும் ஈவிரக்கம் காட்டுவதில்லை.” கிறிஸ்மஸ் மனோபாவத்தை மக்கள் “வருடமுழுதும்” கடைப்பிடிப்பதில்லை என்பதே “வருத்தமான விஷயம்” என்று அந்தக் கடிதம் மேலுமாக கூறுகிறது.
இந்தக் கருத்துகளை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, முக்கியமான கேள்விகள் எழுகின்றன. மனிதர்கள் எப்போதுமே தாராள குணமுள்ளவர்களாகவும் ஒருவரையொருவர் புரிந்து நடந்துகொள்பவர்களாகவும் இருக்கும் காலம் என்றாவது வருமா? இயேசு பிறந்த இரவன்று தேவதூதர்கள் அறிவித்த அந்த வாழ்த்துச் செய்தி நிறைவேறும் என்பதற்கு ஏதேனும் ஆதாரப்பூர்வ நம்பிக்கை இருக்கிறதா? அல்லது, உண்மையான சமாதானம் என்பது வெறும் கனவுதானா?