உங்களுடைய குடும்பத்தில் கடவுள் முதலிடத்தை வகிக்கிறாரா?
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக.” —மாற்கு 12:29, 30.
1. நாம் யெகோவாவை நேசிப்பது எவ்வளவு முக்கியமானது?
“கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது?” என்று வேதபாரகரில் ஒருவன் இயேசுவைக் கேட்டான். தன்னுடைய சொந்தக் கருத்தை கொடுப்பதற்கு பதிலாக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து உபாகமம் 6:4, 5-ல் உள்ளதை எடுத்துக் கூறுவதன் மூலம் இயேசு அவனுடைய கேள்விக்கு பதிலளித்தார். அவர் சொன்ன பதில்: “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.”—மாற்கு 12:28-30.
2. (அ) இயேசு என்ன எதிர்ப்பை எதிர்ப்பட வேண்டியவராய் இருந்தார்? (ஆ) எது சில சமயங்களில் யெகோவாவைப் பிரியப்படுத்துவதை கடினமானதாக ஆக்கிவிடக்கூடும்?
2 முதல் கற்பனை—அதிமுக்கியமான ஒன்று—என்று இயேசு அழைத்ததை கீழ்ப்படிவதற்கு யெகோவாவுக்குப் பிரியமானவற்றை நாம் எப்போதும் செய்வது தேவைப்படுகிறது. இயேசு அதை செய்தார், ஒரு சமயம் அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவின் அந்தப்போக்குக்கு மறுப்பு தெரிவித்தபோதிலும், மற்றொரு சமயம் அவருடைய சொந்த உறவினர்களே எதிர்த்தபோதிலும் அவ்வாறு செய்தார். (மத்தேயு 16:21-23; மாற்கு 3:21; யோவான் 8:29) அதேபோன்ற சூழ்நிலையில் நீங்கள் உங்களைக் கண்டால் அப்போது என்ன? உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நீங்கள் பைபிள் படிப்பதையும் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்வதையும் நிறுத்திவிடும்படி விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கடவுளைப் பிரியப்படுத்தும் காரியங்களை செய்வதன் மூலம் நீங்கள் கடவுளை முதலாவது வைப்பீர்களா? கடவுளை சேவிப்பதற்கென்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளை உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஒருவேளை எதிர்த்தாலும்கூட, கடவுள் உங்களுக்கு முதலாவதாக வருகிறாரா?
குடும்ப எதிர்ப்பு என்னும் கண்ணி
3. (அ) இயேசுவின் போதனைகள் குடும்பத்துக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தலாம்? (ஆ) யாரிடம் குடும்ப அங்கத்தினர்களுக்கு மிகுதியான அன்பு இருக்கிறது என்பதை அவர்கள் எவ்வாறு காண்பிக்கலாம்?
3 குடும்பத்திலுள்ள ஒரு அங்கத்தினர் இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்ளும்போது, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அவரை எதிர்ப்பதால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை இயேசு அலட்சியப்படுத்தவில்லை. “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே,” என்று இயேசு சொன்னார். இருப்பினும், அந்த வருத்தமுண்டாக்கும் விளைவு ஏற்பட்டபோதிலும், யார் முதலாவதாக வரவேண்டும் என்பதை இயேசு காண்பித்தார்: “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” (மத்தேயு 10:34-37) கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் யெகோவா தேவனை நம்முடைய வாழ்க்கையில் முதலாவதாக வைக்கிறோம், இயேசு ‘[கடவுளுடைய] தன்மையின் சொரூபமாயிருக்கிறார்.’—எபிரெயர் 1:3; யோவான் 14:9.
4. (அ) இயேசுவைப் பின்பற்றுகிறவராய் இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து இயேசு என்ன சொன்னார்? (ஆ) எந்தக் கருத்தில் கிறிஸ்தவர்கள் குடும்ப அங்கத்தினர்களை வெறுக்க வேண்டும்?
4 தம்மை உண்மையாய் பின்பற்றுவதில் உண்மையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை மற்றொரு சமயம் கலந்து பேசிக்கொண்டிருந்தபோது இயேசு சொன்னார்: “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” (லூக்கா 14:26) தம்மைப் பின்பற்றுகிறவர்கள் சொல்லர்த்தமாகவே தங்கள் குடும்ப அங்கத்தினர்களை வெறுக்க வேண்டும் என்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை என்பது தெளிவாயிருக்கிறது, ஏனென்றால் தங்கள் சத்துருக்களையும்கூட நேசிக்க வேண்டும் என்று அவர் ஜனங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். (மத்தேயு 5:44) மாறாக, தம்மைப் பின்பற்றுகிறவர்கள், கடவுளை நேசிப்பதைக் காட்டிலும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை குறைவாக நேசிக்க வேண்டும் என்று இயேசு இங்கே அர்த்தப்படுத்தினார். (மத்தேயு 6:24-ஐ ஒப்பிடுக.) அந்த புரிந்துகொள்ளுதலுக்கு இசைவாக, யாக்கோபு லேயாளை ‘வெறுத்து’ ராகேலை நேசித்தார் என்று பைபிள் சொல்கிறது, அவளுடைய சகோதரியாகிய ராகேலை நேசித்த அளவுக்கு அவர் லேயாளை நேசிக்கவில்லை என்பதை அது அர்த்தப்படுத்தியது. (ஆதியாகமம் 29:30-32) நம்முடைய சொந்த “ஆத்துமாவை” அல்லது ஜீவனைக்கூட நாம் வெறுக்க வேண்டும் அல்லது யெகோவாவைவிட குறைவாக நேசிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்!
5. குடும்ப ஏற்பாட்டை சாத்தான் எவ்வாறு தந்திரமாய் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறான்?
5 யெகோவா படைப்பாளராகவும் உயிரளிப்பவராகவும் இருப்பதனால் தம்முடைய ஊழியர்கள் அனைவரிடமிருந்து முழு பக்தியையும் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவராய் இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 4:11) “நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய பிதாவை நோக்கி முழுங்கால்படியிடுகிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 3:14, 15) குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் இயல்பாகவே பாசம் கொண்டிருக்கும் விதத்தில் யெகோவா குடும்ப ஏற்பாட்டை மகத்தான விதத்தில் படைத்தார். (1 இராஜாக்கள் 3:25, 26; 1 தெசலோனிக்கேயர் 2:7) இருப்பினும், பிசாசாகிய சாத்தான் இயல்பாக இருக்கும் இந்த குடும்ப பாசத்தை, அன்பாக நேசிப்பவர்களை பிரியப்படுத்த விரும்பும் ஒரு ஆவலை, தந்திரமாக சுயநலத்துக்காக பயன்படுத்துகிறான். அவன் குடும்ப எதிர்ப்பை தீவிரமாக்குகிறான், அதை எதிர்ப்படுகையில் பைபிள் சத்தியத்துக்காக உறுதியாக நிலைநிற்பதை அநேகர் ஒரு சவாலாகக் காண்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 12:9, 12.
அந்த சவாலை வெற்றிகரமாக சமாளித்தல்
6, 7. (அ) பைபிள் படிப்பு மற்றும் கிறிஸ்தவக் கூட்டுறவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறித்து குடும்ப அங்கத்தினர்கள் போற்றுவதற்கு எவ்வாறு உதவப்படலாம்? (ஆ) நாம் உண்மையிலேயே நம்முடைய குடும்ப அங்கத்தினர்களை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காட்டலாம்?
6 கடவுளைப் பிரியப்படுத்துவதா அல்லது ஒரு குடும்ப அங்கத்தினரைப் பிரியப்படுத்துவதா என்பதன் பேரில் நீங்கள் தெரிவு செய்யும்படி வற்புறுத்தப்பட்டால் என்ன செய்வீர்கள்? நாம் அவருடைய வார்த்தையைப் படித்து அதன் நியமங்களைப் பொருத்துவது குடும்பத்தில் சச்சரவுகளை ஏற்படுத்துமானால் நாம் அவ்வாறு செய்யும்படி கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை என்று நீங்கள் நியாயம் பேசுவீர்களா? ஆனால் அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அதற்காக நீங்கள் அதை விட்டுக்கொடுத்து விட்டு உங்களுடைய பைபிள் படிப்பையோ அல்லது யெகோவாவின் சாட்சிகளோடு உங்களுடைய கூட்டுறவையோ நிறுத்திக்கொண்டுவிட்டால், பைபிளின் திருத்தமான அறிவு, ஜீவன் அல்லது மரணம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை நமக்கு அருமையானவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?—யோவான் 17:3; 2 தெசலோனிக்கேயர் 1:6-8.
7 நாம் இந்தவிதத்தில் அந்த சூழ்நிலையை விளக்கலாம்: ஒருவேளை ஒரு குடும்ப அங்கத்தினர் மதுபானம் அருந்துவதற்கு அளவுக்கு மீறி ஆசை கொண்டிருக்கலாம். அவருடைய குடிப்பழக்கத்தை அசட்டை செய்வதோ அல்லது அதைப் பொறுத்துக்கொள்வதோ அவருக்கு மெய்யான பயனை அளிக்குமா? அவருடைய பிரச்சினையைக் குறித்து எதுவும் செய்யாமல் விட்டுக்கொடுப்பதன் மூலம் சமாதானத்தை பாதுகாத்துக்கொள்வது மேலானதாக இருக்குமா? இல்லை, அவருடைய கோபம் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றை பொருட்படுத்தாது எதிர்த்து நிற்க வேண்டியிருந்தாலும் அவர் தன்னுடைய குடிப்பழக்கத்தை மேற்கொள்வதற்கு அவருக்கு உதவிசெய்ய முயற்சிசெய்வது சிறந்தது என்பதை அநேகமாக நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். (நீதிமொழிகள் 29:25) அதேவிதமாக, உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் உண்மையிலேயே நேசித்தீர்கள் என்றால், பைபிள் படிப்பதை நீங்கள் நிறுத்துவதற்கென்று அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் விட்டுக்கொடுத்துவிட மாட்டீர்கள். (அப்போஸ்தலர் 5:29) ஒரு உறுதியான நிலைநிற்கை எடுப்பதன் மூலம் மட்டுமே, கிறிஸ்துவினுடைய போதனைகளுக்கு ஏற்ப வாழ்வது நம்முடைய ஜீவனையே குறிக்கிறது என்பதை அவர்கள் மதித்துணர நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்ய முடியும்.
8. இயேசு கடவுளுடைய சித்தத்தை உண்மைத்தன்மையோடு செய்தார் என்ற உண்மையிலிருந்து நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
8 கடவுளை முதலாவது வைப்பது சில சமயங்களில் அதிக கடினமாக இருக்கலாம். ஆனால் சாத்தான் கடவுளுடைய சித்தத்தை செய்வதை இயேசுவுக்கும் கடினமானதாக ஆக்கினான் என்பதை நினைவில் வையுங்கள். இருந்தபோதிலும் இயேசு ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை; அவர் நமக்காக கழுமரத்தின் வாதனையையும்கூட சகித்தார். ‘இயேசு கிறிஸ்து நம்முடைய இரட்சகர்,’ என்று பைபிள் சொல்கிறது. ‘அவர் நமக்காக மரித்தார்.’ (தீத்து 3:6; 1 தெசலோனிக்கேயர் 5:10) இயேசு எதிர்ப்புக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் குறித்து நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் அல்லவா? அவர் பலிக்குரிய மரணத்தை சகித்ததன் காரணமாக, அவர் சிந்திய இரத்தத்தின் பேரில் விசுவாசம் வைப்பதன் மூலம், நீதி வாசமாயிருக்கும் சமாதானமான ஒரு புதிய உலகில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் எதிர்பார்ப்பை நாம் கொண்டிருக்கிறோம்.—யோவான் 3:16, 36; வெளிப்படுத்துதல் 21:3, 4.
கிடைக்கக்கூடிய ஒரு செழுமையான வெகுமதி
9. (அ) மற்றவர்களை இரட்சிப்பதில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பங்குகொள்ளலாம்? (ஆ) தீமோத்தேயுவின் குடும்ப சூழ்நிலை என்னவாக இருந்தது?
9 அன்பாக நேசிக்கும் உறவினர்கள் உட்பட, மற்றவர்களை இரட்சிப்பதில் நீங்களும்கூட ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவை இவ்வாறு ஊக்குவித்தார்: “இவைகளில் [நீ கற்றுக்கொண்டவைகளில்] நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.” (1 தீமோத்தேயு 4:16) தீமோத்தேயு ஒரு பிளவுபட்ட குடும்பத்தில் வாழ்ந்து வந்தார், அவருடைய கிரேக்க தகப்பன் அவிசுவாசியாக இருந்தார். (அப்போஸ்தலர் 16:1; 2 தீமோத்தேயு 1:5; 3:14) தீமோத்தேயுவின் தகப்பன் விசுவாசியாக ஆனாரா என்பது நமக்குத் தெரியாவிட்டாலும்கூட, அவருடைய மனைவியாகிய ஐனிக்கேயாளுடைய விசுவாசமுள்ள நடத்தையும் தீமோத்தேயுவின் நடத்தையும் அவர் விசுவாசியாக ஆகியிருக்கலாம் என்ற சாத்தியத்தை வெகுவாக அதிகரித்தது.
10. தங்கள் அவிசுவாசியான துணைவர்களின் சார்பாக கிறிஸ்தவர்கள் என்ன செய்யலாம்?
10 பைபிள் சத்தியத்தை உறுதியாய் கடைப்பிடிக்கும் கணவர்களும் மனைவிகளும், தங்கள் கிறிஸ்தவரல்லாத துணைவர்கள் விசுவாசிகளாக ஆகும்படி உதவி செய்வதன் மூலம் அவர்களை இரட்சிப்பதற்கு உதவியளிக்கக்கூடும் என்பதை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளி விடாதிருக்கக்கடவள். மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?” (1 கொரிந்தியர் 7:12, 13, 16) மனைவிகள் எவ்வாறு தங்கள் கணவர்களை இரட்சிக்கக்கூடும் என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு வலியுறுத்தினார்: “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.”—1 பேதுரு 3:1, 2.
11, 12. (அ) ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் என்ன வெகுமதியைப் பெற்றுக்கொண்டனர், அதைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் என்ன செய்தனர்? (ஆ) உண்மைத்தன்மையோடு சகித்திருந்ததன் காரணமாக பலனைப் பெற்றுக்கொண்ட ஒரு குடும்ப அங்கத்தினரின் அனுபவத்தைக் கூறுங்கள்.
11 சாட்சிகளாயிருக்கும் தங்கள் உறவினரின் கிறிஸ்தவ வேலைகளை பல மாதங்களாகவும் பல வருடங்களாகவும்கூட எதிர்த்துக்கொண்டிருந்த அநேக ஆயிரக்கணக்கான ஆட்கள் சமீப ஆண்டுகளில் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கின்றனர். இது உறுதியாய் நிலைநின்ற கிறிஸ்தவர்களுக்கு என்னே ஒரு வெகுமதி! முன்னாள் எதிராளிகளுக்கு என்னே ஒரு ஆசீர்வாதம்! உணர்ச்சிபொங்கும் குரலில் 74-வயது கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் கூறினார்: “நான் என் மனைவியையும் பிள்ளைகளையும் எதிர்த்த ஆண்டுகளின்போது அவர்கள் சத்தியத்தை உறுதியாய்க் கடைப்பிடித்ததற்காக நான் அடிக்கடி அவர்களுக்கு நன்றி சொல்லுகிறேன்.” அவருடைய மனைவி அவரிடம் பைபிளைப் பற்றி பேசவும்கூட கூடாது என்று மூன்று வருடங்கள் பிடிவாதமாய் மறுத்ததாக அவர் சொன்னார். “ஆனால் நான் செவிகொடுத்துக் கேட்க விருப்பமாயிருக்கும் ஒரு சமயத்தை அவள் தெரிந்தெடுத்து என் பாதங்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டிருக்கும்போது சாட்சி கொடுக்க ஆரம்பிப்பாள். நான் எதிர்த்ததன் காரணமாக அவள் விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்!” என்று அவர் சொன்னார்.
12 தன் குடும்பத்தை எதிர்த்த மற்றொரு கணவன் எழுதினார்: ‘நான் என் மனைவியின் அதிமோசமான விரோதியாக இருந்தேன், ஏனென்றால் அவள் சத்தியத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு, நான் அவளை மிரட்டுவேன், நாங்கள் ஒவ்வொரு நாளும் சண்டை போடுவோம்; அதாவது, நான் தான் எப்போதும் சண்டையை ஆரம்பிப்பேன். ஆனால் எல்லாம் வீணாய்ப் போனது; என் மனைவி பைபிளை உறுதியாய்க் கடைப்பிடித்து வந்தாள். என் மனைவிக்கு விரோதமாகவும் என் பிள்ளைக்கு விரோதமாகவும் சத்தியத்துக்கு விரோதமாகவும் நான் போட்ட மூர்க்கத்தனமான சண்டைகள் பன்னிரண்டு வருடங்கள் நீடித்தன. என் மனைவிக்கும் பிள்ளைக்கும் நான் பிசாசின் அவதாரமாக இருந்தேன்.’ இறுதியில் அந்த மனிதர் தன் வாழ்க்கையை அலசிப்பார்க்க ஆரம்பித்தார். ‘நான் எவ்வளவு வெறுப்பூட்டுபவனாய் இருந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்,’ என்று அவர் விளக்கினார். ‘நான் பைபிளை வாசித்தேன், அதன் போதனைகளுக்காக நன்றி சொல்கிறேன், இப்போது முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருக்கிறேன்.’ ஆம், அவருடைய எதிர்ப்பை 12 வருடங்களாக உண்மைத்தன்மையோடு சகித்து வந்ததன் மூலம் ‘தன் கணவனை இரட்சிக்க உதவிய’ மனைவிக்குக் கிடைத்த மகத்தான வெகுமதியை சிந்தித்துப் பாருங்கள்!
இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்
13. (அ) இயேசுவின் வாழ்க்கைப் போக்கிலிருந்து கணவர்களும் மனைவிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்ன? (ஆ) கடவுளுடைய சித்தத்திற்கு தங்களைக் கீழ்ப்படுத்துவதைக் கடினமானதாய்க் காணும் ஆட்கள் எவ்வாறு இயேசுவின் உதாரணத்திலிருந்து பயனடையலாம்?
13 இயேசுவினுடைய வாழ்க்கைப் போக்கிலிருந்து கணவர்களும் மனைவிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதே. ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்,’ என்று இயேசு சொன்னார். ‘எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறேன்.’ (யோவான் 5:30; 8:29) இயேசு ஒரு சமயம் கடவுளுடைய சித்தத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை விருப்பமற்றதாக உணர்ந்தபோதிலும்கூட அதற்குக் கீழ்ப்படிந்தார். “உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்,” என்று ஜெபித்தார். ஆனால் அவர் உடனடியாக இதையும் சேர்த்துக்கொண்டார்: “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” (லூக்கா 22:42) கடவுள் தம்முடைய சித்தத்தை மாற்றிக்கொள்ளும்படி இயேசு கடவுளைக் கேட்கவில்லை; அவருக்கென்று கடவுளுடைய சித்தம் என்னவாக இருந்ததோ அதற்கு கீழ்ப்படிதலோடு தம்மை ஒப்புவிப்பதன் மூலம் அவர் உண்மையிலேயே கடவுளை நேசித்தார் என்பதைக் காண்பித்தார். (1 யோவான் 5:3) இயேசு செய்ததுபோல கடவுளுடைய சித்தத்தை எப்போதும் முதலில் வைப்பது, விவாகமின்றி இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மட்டுமல்லாமல், மணவாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கு இன்றியமையாததாய் இருக்கிறது. இது ஏன் அவ்விதம் இருக்கிறது என்பதை கவனியுங்கள்.
14. சில கிறிஸ்தவர்கள் எவ்வாறு தவறானவிதத்தில் நியாயம்காட்டிப் பேசுகின்றனர்?
14 முன்பு கவனித்தபடி, விசுவாசிகள் கடவுளை முதலாவது வைக்கும்போது, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் இல்லாத துணைவர்களோடு தங்கியிருக்க விரும்புகின்றனர், பெரும்பாலும் அவர்கள் இரட்சிப்புக்குத் தகுதிபெற அவர்களுக்கு உதவிசெய்யும் நிலையில் இருக்கின்றனர். இரு துணைவர்களுமே விசுவாசிகளாய் இருந்தாலும்கூட, அவர்களுடைய விவாகம் குறைவில்லாமல் முழுநலம் வாய்ந்ததாய் இல்லாமல் இருக்கலாம். பாவமுள்ள மனச்சாய்வுகளின் காரணமாக, கணவர்களும் மனைவிகளும் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்பான எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. (ரோமர் 7:19, 20; 1 கொரிந்தியர் 7:28) சிலர் மணவிலக்கு செய்வதற்கு வேதப்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டில்லாதபோதிலும் ஒரு வித்தியாசமான துணைவரை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு செல்கின்றனர். (மத்தேயு 19:9; எபிரெயர் 13:4) இதுதான் அவர்களுக்கு சிறந்தது என்றும் கணவர்களும் மனைவிகளும் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் என்ற கடவுளுடைய சித்தம் அதிக கடினமானது என்றும் அவர்கள் விவாதிக்கின்றனர். (மல்கியா 2:16; மத்தேயு 19:5, 6) கேள்விக்கிடமின்றி, இது கடவுளுடைய சிந்தனைகளை சிந்திப்பதற்குப் பதிலாக மனிதனுடைய சிந்தனைகளை சிந்திப்பதற்கு மற்றொரு உதாரணம் ஆகும்.
15. கடவுளை முதலாவதாக வைப்பது ஏன் பாதுகாப்பானது?
15 கடவுளை முதலாவதாக வைப்பது என்னே ஒரு பாதுகாப்பு! அவ்வாறு செய்யும் விவாகமான தம்பதிகள் ஒன்றாக பிணைந்திருக்க முயலுவர். கடவுளுடைய வார்த்தையின் புத்திமதியைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வர். அவருடைய சித்தத்தை புறக்கணிப்பதால் ஏற்படும் எல்லாவிதமான மனத்துயரங்களையும் இவ்வாறு அவர்கள் தவிர்க்கின்றனர். (சங்கீதம் 19:7-11) மணவிலக்கு செய்துகொள்ளும் தருவாயில் இருக்கையில் பைபிளின் புத்திமதியைப் பின்பற்ற தீர்மானித்த ஒரு இளம் தம்பதி இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். அந்த மனைவி தன் விவாகத்தில் கொண்டிருந்த மகிழ்ச்சியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து இவ்வாறு சொன்னாள்: “இத்தனை வருடங்களாக என் கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்திருக்க முடியுமா என்ற சாத்தியத்தை சிந்தித்துப் பார்த்தால் நான் உட்கார்ந்து அழத்தான் வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான உறவுக்குள் எங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்த அவருடைய புத்திமதி மற்றும் வழிநடத்துதலுக்காக நான் யெகோவா தேவனிடம் ஜெபித்து அவருக்கு நன்றி சொல்லுகிறேன்.”
கணவர்களே, மனைவிகளே —கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!
16. கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்?
16 கடவுளை எப்போதும் முதலாவதாக வைத்த இயேசு, கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் ஒரு மகத்தான முன்மாதிரியை வைத்தார், அதை அவர்கள் கவனத்துடன் பின்பற்றினால் அவர்களுக்கு நலமாயிருக்கும். கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் மீது இயேசு பிரயோகிக்கும் மென்மையான தலைமை வகிப்பை பின்பற்றும்படி கணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். (எபேசியர் 5:23) கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதில் இயேசுவின் குற்றமற்ற முன்மாதிரியிலிருந்து கிறிஸ்தவ மனைவிகள் கற்றுக்கொள்ளலாம்.—1 கொரிந்தியர் 11:3.
17, 18. என்ன வழிகளில் இயேசு கணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார்?
17 பைபிள் கட்டளையிடுகிறது: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25) இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்கள் அடங்கியிருந்த சபைக்கு தம்முடைய அன்பைக் காண்பித்த ஒரு முக்கியமான விதம், அவர்களுடைய நெருங்கிய நண்பராய் இருப்பதன் மூலமே. “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்,” என்று இயேசு சொன்னார். (யோவான் 15:15) இயேசு தம்முடைய சீஷர்களோடு பேசி செலவழித்த எல்லா நேரத்தையும்—அவர் அவர்களோடு கொண்டிருந்த பற்பல கலந்துரையாடல்களையும்—அவர்கள் பேரில் அவர் வைத்திருந்த நம்பிக்கையையும்கூட சிந்தித்துப் பாருங்கள்! அது கணவர்களுக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாய் இருக்கிறது அல்லவா?
18 இயேசு தம்முடைய சீஷர்கள் மீது மெய்யான அக்கறை எடுத்துக்கொண்டார், அவர்கள் பேரில் மெய்யான பிரியத்தைக் கொண்டிருந்தார். (யோவான் 13:1) அவருடைய போதனைகள் அவர்களுக்கு தெளிவற்றதாய் இருந்தபோது, விஷயங்களைத் தெளிவாக்குவதற்கு அவர் பொறுமையோடு தனிமையில் நேரம் எடுத்துக்கொண்டார். (மத்தேயு 13:36-43) கணவர்களே, உங்களுடைய மனைவியின் ஆவிக்குரிய நலன் அதே அளவுக்கு உங்களுக்கு முக்கியமானதாய் இருக்கிறதா? நீங்களும் உங்கள் மனைவியும் மனதிலும் இருதயத்திலும் பைபிள் சத்தியங்களைத் தெளிவாக வைத்திருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் அவளோடு நேரம் செலவிடுகிறீர்களா? இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களோடுகூட ஊழியத்துக்குச் சென்றார், ஒருவேளை அவர்களில் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவிதமாக பயிற்றுவித்திருப்பார். நீங்கள் உங்கள் மனைவியோடு சேர்ந்து ஊழியம் செய்கிறீர்களா, வீட்டுக்கு வீடு சந்திப்புகளிலும் பைபிள் படிப்புகள் நடத்துவதிலும் பங்குகொள்கிறீர்களா?
19. தம்முடைய அப்போஸ்தலர்கள் திரும்பத்திரும்ப வெளிக்காட்டிய பெலவீனங்களைக் கையாண்ட விதத்தின் மூலம் இயேசு எவ்வாறு கணவர்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்தார்?
19 தம்முடைய அப்போஸ்தலர்களின் அபூரணங்களைக் கையாளுவதில் விசேஷமாக கணவர்களுக்கு இயேசு மதிப்புவாய்ந்த உதாரணத்தை வைத்தார். தம்முடைய அப்போஸ்தலர்களோடு கொண்டிருந்த கடைசி போஜனத்தின்போது, போட்டி மனப்பான்மை திரும்ப ஏற்படுவதை அவர் கண்டுபிடித்தார். அவர் அவர்களைக் கடுமையாய் கடிந்துகொண்டாரா? இல்லை, ஆனால் அவர் மனத்தாழ்மையோடு அவர்கள் ஒவ்வொருவருடைய கால்களையும் கழுவினார். (மாற்கு 9:33-37; 10:35-45; யோவான் 13:2-17) நீங்கள் உங்கள் மனைவியிடம் அப்படிப்பட்ட பொறுமையைக் காண்பிக்கிறீர்களா? திரும்பத் திரும்ப ஏற்படும் ஒரு பலவீனத்தைக் குறித்து குறைகூறாமல், நீங்கள் பொறுமையோடு அவளுக்கு உதவிசெய்ய முயற்சி எடுத்து, உங்களுடைய முன்மாதிரியின் மூலம் அவளுடைய இருதயத்தை எட்டுகிறீர்களா? அப்போஸ்தலர்கள் இறுதியில் செய்ததுபோல அப்படிப்பட்ட அன்பான இரக்க உணர்ச்சிகளுக்கு மனைவிகள் பெரும்பாலும் பிரதிபலிக்கும் சாத்தியம் உள்ளது.
20. எதை கிறிஸ்தவ மனைவிகள் ஒருபோதும் மறக்கக்கூடாது, அவர்களுக்கு முன்மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளது யார்?
20 மனைவிகளும்கூட இயேசுவை கவனத்தில் வைக்க வேண்டும், ‘கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்’ என்பதை அவர் ஒருபோதும் மறந்துவிடவில்லை. அவர் எப்போதும் தம் பரலோக தகப்பனுக்குக் கீழ்ப்பட்டிருந்தார். அதே போல், ‘ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறார்’ என்பதை மனைவிகள் மறந்துவிடக்கூடாது, ஆம் அவர்களுடைய கணவர் அவர்களுக்குத் தலைவர். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:23) பூர்வ காலத்திலிருந்த ‘பரிசுத்த ஸ்திரீகளின்’ உதாரணத்தை, விசேஷமாக சாராளின் உதாரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவ மனைவிகளை ஊக்குவித்தார், ஏனென்றால் ‘அவள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்.’—’1 பேதுரு 3:5, 6.
21. ஏன் ஆபிரகாம் மற்றும் சாராளின் விவாகம் வெற்றிகரமானதாய் இருந்தது, ஆனால் லோத்து மற்றும் அவருடைய மனைவியினுடையது தோல்வியுற்றது?
21 சாராள் ஒரு செல்வச் செழிப்பான பட்டணத்தில் சௌகரியமான வீட்டை விட்டு ஒரு அந்நிய நாட்டிலே கூடாரங்களில் வாழ்வதற்காகச் சென்றார்கள். ஏன்? அந்த வாழ்க்கை முறையை அவர்கள் விரும்பினதன் காரணமாகவா? அநேகமாய் அப்படி இருந்திருக்காது. அவர்களுடைய கணவன் அவர்களை போகும்படி சொன்னதன் காரணமாகவா? இது ஒரு காரணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆபிரகாமுடைய தெய்வீக பண்புகளுக்காக சாராள் அவரை நேசித்து அவருக்கு மரியாதை காண்பித்தார்கள். (ஆதியாகமம் 18:12) ஆனால் அவர்கள் தன் கணவனோடுகூடச் சென்றதற்கு முக்கியமான காரணம், யெகோவாவின் பேரில் அவர்களுக்கிருந்த அன்பும் கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்ற வேண்டும் என்ற இருதயப்பூர்வமான விருப்பமுமே. (ஆதியாகமம் 12:1) அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் பெருமகிழ்ச்சி கண்டார்கள். மறுபட்சத்தில், லோத்தின் மனைவி கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குத் தயங்கினாள், தன் சொந்த ஊராகிய சோதோமிலே விட்டுவந்த காரியங்களை அதிக வாஞ்சையோடே பின்னிட்டுப் பார்த்தாள். (ஆதியாகமம் 19:15, 25, 26; லூக்கா 17:32) அந்த விவாகத்துக்கு என்னே ஒரு வருந்தத்தக்க முடிவு—இவையனைத்தும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதன் காரணமாக ஏற்பட்ட விளைவு!
22. (அ) என்ன சுய-பரிசோதனையை குடும்ப அங்கத்தினர்கள் ஞானமாக செய்வர்? (ஆ) நம்முடைய அடுத்த படிப்பில் நாம் எதைப் பற்றி சிந்திப்போம்?
22 ஆகையால், ‘எங்களுடைய குடும்பத்தில் கடவுள் முதலிடத்தை வகிக்கிறாரா?’ என்று ஒரு கணவனாக அல்லது ஒரு மனைவியாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது இன்றியமையாதது. கடவுள் எனக்கு அளித்துள்ள குடும்பப் பங்கை நிறைவேற்ற நான் உண்மையிலேயே முயற்சி எடுக்கிறேனா? நான் என் துணைவரை நேசித்து அவர் யெகோவாவோடு ஒரு நல்ல உறவைப் பெற அல்லது காத்துக்கொள்ள உதவும்படி நான் உண்மையான முயற்சி எடுக்கிறேனா?’ பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைகளும்கூட இருக்கின்றனர். பெற்றோரின் பங்கையும், அவர்கள் இருவரும் அவர்களுடைய பிள்ளைகளும் கடவுளை முதலாவது வைக்க வேண்டிய தேவையையும் பற்றி நாம் அடுத்து சிந்திப்போம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பெரும்பாலான குடும்பங்களுக்கு இயேசுவின் போதனைகள் என்ன விளைவுகளைக் கொண்டுவரலாம்?
◻ உறுதியாய் நிலைத்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் என்ன வெகுமதியைப் பெற்றுக்கொண்டனர்?
◻ ஒழுக்கக்கேட்டையும் மணவிலக்கையும் தவிர்ப்பதற்கு துணைவர்களுக்கு எது உதவும்?
◻ இயேசுவின் உதாரணத்திலிருந்து கணவர்கள் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
◻ ஒரு மகிழ்ச்சியான விவாகத்திற்கு மனைவிகள் எவ்வாறு உடனுதவி அளிக்கலாம்?
சாராள் தன்னுடைய விவாகம் வெற்றிபெறுவதற்கு எவ்வாறு உடனுதவி அளித்தார்கள்